நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

பொதிகை தொலைக்காட்சியில் திருவதிகைத் திருக்கோயில்…




பொதிகை தொலைக்காட்சியில் திருவதிகைத் திருக்கோயில் ( கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி அருகில் உள்ளது) பற்றிய நிகழ்ச்சி 26. 04. 2014 ( சனிக்கிழமை) இந்திய நேரம் பகல் 2 மணி முதல் 2.30 வரை ஒளிபரப்பாக உள்ளது. புதுவைக் களஞ்சியம் என்ற சிறப்பு நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பாகின்றது. உலகின் அனைத்துப் பகுதியிலிருந்தும் இதனைப் பார்த்து மகிழலாம். இணையத்திலும் இதனை நேரலையாகப் பார்க்க இயலும்.

இணையத்தின் வழியாகப் பார்க்க: 





இந்த நிகழ்ச்சியில் நாட்டியம் தொடர்புடைய 108 கரணங்களை நினைவுகூரவும், அப்பர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசரின் அருள் வாழ்வை நினைவுகூரவும் எனக்கு வாய்ப்பு அமைந்தது. நண்பர்கள் பலர் இதில் பங்கேற்றுள்ளனர். யார்? யார் என்பதைத் தாங்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

திங்கள், 21 ஏப்ரல், 2014

சிதம்பரம் நடராசர் கோயிலில் 108 கரணச் சிற்பங்கள்





   தில்லையம்பலத்திற்குப் பலமுறை சென்றிருந்தாலும் முன்பெல்லாம் பார்க்காத பார்வை இப்பொழுது கிடைத்தது. நடராசர் கோயிலின் அமைப்பும் கல்சிற்பங்களின் நேர்த்தியும் தமிழர்களின் கட்டடக்கலை, பொறியியல் துறை சார்ந்த அறிவுக்குச் சான்றுகளாக நூற்றாண்டைக் கடந்து நின்றுகொண்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முகம் கொடுத்தும், பல்வேறு படையெடுப்புகளுக்கு ஈடுகொடுத்தும் நிற்கும் இந்த அரிய கருவூலத்தின் அழகினை நாள்முழுவதும் நின்றும், இருந்தும் கண்டு மகிழவேண்டும்.

   நேற்று நான் பருந்துப் பார்வையாக அனைத்தையும் பார்த்துவிட்டுக் கீழை வாயிலில் நிலைகொண்டு, அங்கிருந்த கரணச் சிற்பங்களைப் பார்த்தேன். 108 கரணக் காட்சிகள் சிற்பியால் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சிற்பிக்கு நாட்டிய அறிவும், சிற்ப அறிவும் நிறைந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் இவை போன்ற சிற்பங்களைச் செதுக்கமுடியும்.

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வரிசையில் அடுக்கிய சிற்பங்களாக இக் கரணச் சிற்பக் காட்சிகள் உள்ளன. சிதம்பரம் கோயிலில் கீழைக்கோபுரத்தின் கிழக்குப்பகுதியில் தெற்குச் சுவரிலும் வடக்குச் சுவரிலும்  நான்கு வரிசையாக வரிசைக்கு 8 சிற்பங்கள் என்ற வகையில் 32 + 32 = 64 சிற்பங்கள் உள்ளன. மேற்குச் சுவரில் தெற்குப் பகுதியில் 3 X 8 = 24 சிற்பங்களும், வடக்குப் பகுதியில் 8+5+7(?) = 20 ஆக 24 + 20(?) = 44  சிற்பங்களும் உள்ளன.


மேற்குப் பகுதியில் வடபுறச்சுவரில் உள்ள சிற்பங்களுடன் கூடுதல் சிற்பங்களும் முறைமாற்றி வைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் உள்ளன. ஒவ்வொரு சிற்பங்களின் மேலே கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றை முறையாக யாரேனும் ஆவணப்படுத்தியுள்ளனரா என்று இனிதான் பார்க்க வேண்டும். இல்லையென்றால் இனி ஆவணப்படுத்த வேண்டும். 

பரதமுனிவர் வழியாகத்தான் இக்கரணங்கள் வந்துள்ளன என்று வேதங்களைச் சான்றுகாட்டி ஆங்கிலத்தில் பல கட்டுரைகளும், நூல்களும் வந்துவிட்டன. தமிழர்கள் வழக்கம்போல் என்ன நடக்கின்றது என்ற விழிப்புணர்வு இல்லாமல் ஆய்வுத்துறைகளுக்கு மூடுவிழா நடத்திவருகின்றனர். கல்வெட்டு அறிவும், கட்டடக்கலையறிவும் நிரம்பப்பெற்றவர்கள், சிற்ப நூல் வல்லுநர்களுடன் சென்றால் புதிய செய்திகளைப் பெறமுடியும். நடராசர் கோயிலின் உள்ளே உள்ள வேலைப்பாடுகள் அமைந்த தூண்களையும், மண்டபங்களையும் கண்டால் பழங்காலத்தில் இருந்த சிற்பிகளின், கோயிற்கலை வல்லுநர்களின் மிகப்பெரிய பொறியியல் அறிவை வியக்காமல் இருக்கமுடியாது. அத்தகு பேரறிவுபெற்ற சிற்பிகள் தமிழ்க்குடியினர் என்பதை மனங்கொண்டால் அத்தகு சிற்ப இலக்கண நூல்கள் தமிழர்களிடம் இருந்தது என்று உளம்கொண்டால் கரணங்கள் வேதத்திலிருந்துதான் தமிழுக்கு வந்தது என்றோ, நாட்டியம் பரதமுனிவர் தந்தது என்றோ எழுதுவதற்குத் தயங்குவார்கள். கரணம் குறித்த முறையான ஆய்வுகளைப் பலதுறை அறிவுடன் மேற்கொள்ளும்பொழுது உண்மை புலனாகும்.

கராத்தே வல்லுநர் சிதம்பரம் திரு. இளங்கோவன் ஐயா அவர்களுடன் இக்கரணங்களைக் காணச் சென்றிருந்தேன். கராத்தே அடவுமுறைகளும் பரதநாட்டிய அடவுமுறைகளும் பல இடங்களில் ஒத்துள்ளன என்ற கருத்தை முன்வைத்தார். தமிழர் நாட்டியத்திலிருந்து கராத்தே வளர்க்கப்பட்டதா அல்லது தமிழர்களின் போர்முறையிலிருந்து நாட்டியம் உள்ளிட்டவை தோற்றம் பெற்றனவா என ஆர்வலர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
















புதன், 16 ஏப்ரல், 2014

அமெரிக்காவில் தமிழ் இசை விழா



அமெரிக்காவில் தமிழிசை முழங்கிய தமிழ்த்தளிர்கள்

அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்தில் உள்ள டல்லாசு (Dallas) நகரில் இயங்கிவரும் அவ்வை தமிழ் மையம் தமிழ் இசை விழாவினைக்  கடந்த சனிக்கிழமை, (ஏப்ரல் 12 ஆம் நாள்) பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை லிபர்டி உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடத்தியது.

அவ்வை தமிழ் மையம் என்பது முற்றிலும் தன்னார்வலர்களால் (volunteers) உருவாக்கப்பட்ட, லாப நோக்கமற்ற, தமிழ்க் கல்விக்கான தொண்டு நிறுவனமாகும். (non-profit organization). அவ்வை தமிழ் மையமானது தமிழ் மொழி கற்கும் குழந்தைகளுக்கு இரண்டாம் மொழிக் கற்றலுக்கான மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெறுதல் (accreditation) என்ற தொலை நோக்குத் திட்டத்துடனும், அமெரிக்க சூழ்நிலைக்கேற்ற எளிமையான முறையில் பொதுப் பாடத்திட்டத்துடன் ( common structure syllabus) கூடிய தமிழ்க் கல்வியை அளித்தல் என்ற உடனடித் திட்டத்துடனும் டல்லாசு நகரில் நடத்தப்படுகின்றது. இந்த மையம் தமிழ்க் கல்விப்பணியை மட்டும் செய்வதுடன் அமையாமல் தமிழிசைப் பணியையும் செய்வதை அண்மையில் அமெரிக்காவில் டல்லாசு நகரில் நடத்திய தமிழிசை விழா நமக்கு எடுத்துரைக்கின்றது.

போட்டிகள் ஏதும் இல்லாமல், குழந்தைகளின் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு மேடையாக இவ்விழா நடத்தப்பட்டது. 5 வயது முதல் 17 வயதுவரை உள்ள குழந்தைகள், இளையோர்கள் கிட்டத்தட்ட 120 பேர் கலந்து கொண்டு குழுவாகவும், தனியாகவும் மொத்தம் 47 தமிழிசைப் பாடல்களைப் பாடினர். பங்கேற்ற குழந்தைகள், பெற்றோர்கள், இசை ஆசிரியர்கள், தமிழ் இசை, பாடல் ஆர்வலர்கள், நண்பர்கள் என சற்றொப்ப 400 பேர்களுடன் அரங்கம் நிரம்பியது.

பகல் 2 மணி அளவில் அவ்வை தமிழ் மையத்தின் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுடன் சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாட நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. அவ்வைத் தமிழ் மையத்தின் தலைவர் விவேக் வாசுதேவன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்க்கல்வியோடு தமிழின் தொன்மையான கலைகளையும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்றும், அதற்காகவே இவ்விழா நடத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

வரவேற்புரைக்குப் பிறகு, பாவேந்தரின் தமிழுக்கு அமுதென்று பேர்என்ற பாடலுடன் தமிழிசைப் பாடல்கள் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழிசை விழாவிற்கு மிகப்பொருத்தமான முதல் பாடலாக இது அமைந்ததால், அரங்கத்தில் அனைவரும் ஆர்வம் கொண்டு, அடுத்தடுத்த பாடல்களைக் கேட்பதற்குத் தயாரானார்கள்.

தொடர்ந்து, டல்லாசு நகரில் உள்ள பல்வேறு இசைப்பள்ளிகளிலிருந்தும், இசைக்குழுக்களிலிருந்தும், தனியாகவும் பதிவு செய்திருந்து வந்திருந்த குழந்தைகள் கலந்து கொண்டு 4 மணி நேரம் இடைவிடாத இசை மழையைப் பொழிந்தனர். பல்வேறு ராகங்களில் அமைந்த பக்திப் பாடல்கள், சங்க இலக்கியப்பாடல்கள், இசை அறிஞர்களின் பாடல்கள், பாரதியார், பாரதிதாசன், வேதாத்ரி மகரிசி பாடல்கள் எனப் பல பிரிவுகளிலிருந்தும் பாடல்களைப் பாடிய விதம் கேட்போர் மனதைக் கவர்ந்த வண்ணம் இருந்தது. தேவாரம், திருவாசகப் பாடல்களோடு கோசுபல் தேவாலய இசைக்குழுவைச் சேர்ந்த சிறுவன் பாடிய கிறித்தவக் கீர்த்தனைப் பாடல் இசைக்கும், மொழிக்கும் எவ்வித தடைகளும் இருக்க முடியாது என எடுத்துக்காட்டியது.

”தமிழே இனிமை. மழலைத் தமிழ் அதனினும் இனிமை. பாடல் இனிமையானது. குழந்தைகள் பாடும் தமிழ்ப்பாட்டு அதனினும் இனிமையானது” என அரங்கில் பாடிய குழந்தைகள் அனைவரும் உணர்த்தினர்.

கலந்து கொண்ட இசைப்பள்ளிகள் / குழுக்கள்:
ப்ரணவம் இசைப்பள்ளி
திவ்யத்வானி இசைப்பள்ளி,
வீணா இசைப்பள்ளி
நாகலட்சுமி இசைப்பள்ளி
வட அமெரிக்கத் திருமுறைக் கழகம்
கோசுபல் தேவாலயம்

தமிழிசை விழாவில் பாடப்பட்ட பாடல்கள் :
தமிழுக்கு அமுதென்று பேர் - பாரதிதாசன்
கிருஷ்ணா, கிருஷ்ணா
ராம நாமம் சொல்வதே
ஜெய் ஜெய் விட்டால ஹரி
மதன மோகன சுந்தரா
ஒளி படைத்த கண்ணினாய்
ஆயர்பாடி மாளிமையில்
விஷமக்கார கண்ணா
பச்சை மயில் வாகனனே
வேலவா
காக்கைச் சிறகினிலே
மூலாதார மூர்த்தி
தீராத விளையாட்டுப் பிள்ளை
நடனம் ஆடினார்
நீயே துணை மீனலோச்சினி
வந்ததுவும் போனதுவும்
மாடு மேய்க்கும் கண்ணே நீ
விளையாட இது நேரமா
தமிழே
வெள்ளை நிறத்திலொரு பூனை
தொட்டு தொட்டு பேச வரான் - பெரியசாமி தூரன்
பிச்சைப் பாத்திரம்
வேலவா, வேலவா வேல்முருகா
எல்லாம் வல்ல தெய்வம் - வேதாத்ரி மகரிசி
சரஸ்வதி தயைநிதி
சபாபதிக்கு
யமுனை ஆற்றிலே
அச்சம் அச்சம் இல்லை
என்ன தவம் செய்தனை
கைத்தல நிறைகனி
தொள்ளாயிரம்
நமச்சிவாய
குனித்த புருவமும்
இடரினும் தளரினும்
முத்தைத்தரு
மந்திரமாவது
மாதர் பிறை
நாதவிந்து
சர்வ லோகாதிப நமஸ்காரம்
சர்வ ஸ்ருஷ்திக்கும் எஜமான் நீரே
தேவி நீயே துணை
உலகமெலாம் பருவமழை

தமிழைசைப் பாடல்களின் வரிசையில் இறுதிப்பாடலாக, வேதாத்ரி மகரிசி அவர்களின் உலகமெலாம் பருவ மழை பெய்யட்டும்என்கிற உலக நல வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது.

விழாவின் நிறைவு நிகழ்வாக, தமிழ் இசை விழாவில் பங்கேற்றுப் பாடல்களைப் பாடிய அனைத்துக் குழந்தைகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்ட. பரிசுக் கோப்பைகளை டல்லாசு தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் திரு. இளங்கோவன் சிங்காரவேலு, டல்லாசு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருமதி. கலை நாயகம், பிளானோ தமிழ்ப்பள்ளி நிறுவுநர் திரு. வேலுராமன், அவ்வை தமிழ் மையத்தின் மூத்த தமிழ் ஆசிரியர் திருமதி. சாந்தா இராகவேந்திரன் ஆகியோர் வழங்கினர்.

பரிசு வாங்கிய குழந்தைகளின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியும், ஆரவாரமும் பெற்றோர்களையும், இசை ஆசிரியர்களையும், விழாவிற்காக உழைத்த அனைத்துத் தன்னார்வலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இறுதியாக, அமைப்பின் செயலாளர் திரு. மோகன் தண்டபானி நன்றியுரை ஆற்றினார்.

    விழாவின் அனைத்து நிகழ்வுகளையும் அவ்வை தமிழ் மையத்தின் மழலை நிலை ஆசிரியை திருமதி. அனிதா சங்கர் மற்றும் தன்னார்வலர் திருமதி. உமா விவேக் ஆகியோர் தொகுத்து நெறியாள்கை செய்து வழங்கினர்.

அவ்வை தமிழ் மையத்தின் துணைத்தலைவர் சௌந்தர் செயபால் இவ்விழா பற்றிக் கூறுகையில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு நிகழ்வான தமிழ் விழாவில் கடந்த 5 ஆண்டுகளாக நடத்துப்பட்டு வரும் தமிழிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளின் ஆர்வமும், அவர்கள் தேர்ந்தெடுத்துப் பாடிய தமிழைசைப் பாடல்களும் இது போன்ற ஒரு தமிழிசை நிகழ்ச்சியை டல்லாசு நகரில் நடத்தத் தூண்டுகோலாக இருந்தது என்று தெரிவித்தார். இது போன்று விழாக்கள் ஒவ்வொரு வருடமும் டல்லாசு நகரில் நடத்தப்பட வேண்டும் எனத் தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகம் ஆகியவற்றின் முன்னாள் தலைவர் திரு. அரசு செல்லையா அவர்கள், “மொழியின் ஒரு கூறாகவே இசையைக்கொண்டது நம் தமிழ். அவ்வை தமிழ் மையம்தரமான தமிழ்க்கல்வியினை வழங்கிவருவது தமிழ் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தருவது. மேலும், “தமிழிசை விழாநடத்தி இசைத்தமிழையும் வளர்ப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. விழா சிறப்பாக நடக்கப்பாடுபடும் அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்எனத் தாம் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.









விழாவிற்கான இணையதளம்: http://avvaitamil.org/tamil-music-festival.html