நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

மொழிபெயர்ப்பு நூல்கள் அறிமுக விழா




 பேராசிரியர் சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள் மொழிபெயர்த்த அப்பாவின் துப்பாக்கிப் புதினமும், எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் மொழிபெயர்த்த குற்றவிசாரணை புதினமும்  இன்று (28.02.2014) வெள்ளி மாலை  ஆறு மணிக்குப் புதுச்சேரி வணிக அவையில்அறிமுகம் செய்து, மதிப்பீடு செய்யும் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் க. பஞ்சாங்கம், பா. செயப்பிரகாசம், கவிஞர் சுகுமாரன், காலச்சுவடு கண்ணன், நெய்தல் கிருஷ்ணன், சீனு. தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள இரண்டு நூல்களையும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை (பெட்னா) நடத்தும் குறும்படப் போட்டி





உலகத் தமிழ் உறவுகளே!

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான “பெட்னா” ஆண்டுவிழாவினை அமெரிக்க மாநிலம் ஒன்றில் மிகச்சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடிவருகின்றது. அமெரிக்காவில் வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஒரே குடும்பமாகக் கூடிக் கொண்டாடும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்வாகக் குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் தமிழர்களின் வாழ்க்கையை, பண்பாட்டை, அடையாளத்தை வெளிக்கொணரும் குறும்படங்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட உள்ளன. குறும்பட ஆர்வலர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களைப் பெறலாம். இந்தச் செய்தியை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

பெட்னா - குறும்படப் போட்டி - நெறிமுறைகள்:

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை - பெட்னா - முதல் முறையாக தமிழ்க் குறும்படப் போட்டியினை அறிவித்துள்ளது.

தமிழர் வாழ்வியலை / சமூகச் சூழலைப் பேசுகின்ற சிறந்த 10 குறும் படங்களை உலகம் முழுவதிலும் இருந்து தெரிவு செய்து விருது மற்றும் 3 குறும்படங்களுக்குப் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத்துறையின்யரிய படைப்பாளி ஒருவரைத் தலைவராகக் கொண்டு இயங்கும் நடுவர் குழு மூலம் இந்தப் படங்கள் தேர்வு செய்யப்படும்.

இந்தப் போட்டி மூலம் ஆர்வமும், திறமையும், ஆற்றலும் உள்ள இளைஞர்களைத் தேர்வு செய்து தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தவும், விருது பெறுகின்ற சிறந்த குறும்படங்களை அமெரிக்காவின் அனைத்துத் தமிழ்ச் சங்கங்களுக்கும் பரிந்துரைக்கவும் பெட்னா குழு முடிவு செய்துள்ளது.

குறும்படங்கள் தெரிவு செய்யப்படுவதற்கான நெறிமுறைகள்:

தமிழ் மொழி , தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்ந்தவையாகப் படைப்புகள் இருக்கவேண்டும்.

இணையங்களில் ஏற்கெனவே வெளியான குறும்படங்கள் என்றால், அதுகுறித்த குறிப்பை / சுட்டியை (டிவிடியுடன்) கட்டாயம் தர வேண்டும்.

ஏற்கெனவே பங்கேற்ற விழாக்கள், பெற்ற விருதுகள் பற்றியும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

பெட்னாவின் குறும்படப் போட்டிக்கென்று உருவாக்கப்பட்ட குறும்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஏற்கனவே வெளியீடு செய்யப்படாத படங்களாக இருந்தால் வரவேற்கப்படும்.

• 2013, 2014 ஆம் வருடங்களில் எடுக்கப்பட்ட படங்கள் மட்டும் போட்டியில் பங்குபெறலாம்.

குறும்படங்கள் 15 - 20 நிமையங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.

சட்டச் சிக்கல்கள் ஏதும் வந்தால் அதற்குப் பெட்னாவோ அல்லது நடுவர்களோ பொறுப்பாக மாட்டார்கள்.

குறும்படங்களை அனுப்ப நிறைவுநாள்:

உங்கள் குறும்படங்களை 25.05.2014- நாளுக்கு முன்னதாகப் பதிவுசெய்து / அனுப்பவேண்டும்.

எங்கள் பார்வைக்கான DVD (with region 0) அல்லது Blue Ray படிகள் இரண்டு தங்களின் சொந்த செலவில் அனுப்பி வைக்கவேண்டும். இவை அமெரிக்காவில் உள்ள மின்னணுக் கருவிகளில் பார்க்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும்.

தெரிவு செய்யப்பட்ட திரைப்படங்கள் குறித்த விவரம் எங்கள் இணையத்தளத்திலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் ஊடகங்களின் மூலமும் அறிவிக்கப்படும்.

குறும்படங்கள் - சில வழிகாட்டுதல்கள்

தமிழ் மொழியையும், தமிழர்களுடைய கலை, பண்பாட்டையும் அடையாளப் படுத்துவதாக இருக்கும் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழ்ச் சமூகத்தை மேம்படுத்தும் சிந்தனைகளைத் தூண்டும் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழ் இலக்கியங்கள், தமிழர் வரலாறு சார்ந்த படங்களுக்கு முதன்மை அளிக்கப்படும் .

ஆங்கிலத்தில் துணைத்தலைப்பு இருத்தல்ன்று.

தமிழ் மொழி – பண்பாட்டை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் குறும்படங்கள் இருந்தாலும் நலம்.

எங்கள் தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்படும் படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நடுவர்களின் முடிவே இறுதி.

போட்டிக்கு அனுப்பப்பட்ட எந்தப் படத்தின் காணொளிவட்டுகளை (டிவிடியையும்) திருப்பி அனுப்ப இயலாது. அதே நேரம் அவற்றைப் பெட்னா தனிப்பட்ட முறையில் பயன்படுத்தாது.

உங்களுடைய குறும்படப் படிகள் மீண்டும் தேவைப்படின் அதை அனுப்புவதற்கான செலவினை ஏற்று வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம்.

பரிசு விவரம்:

தேர்வு செய்யப்பட்ட குறும்படங்களில் முதல் இடம் பிடிக்கும் இரு படங்களுக்கு 500 அமெரிக்க டாலர்கள் பரிசளிக்கப்படும்.

இரண்டாவது இடத்துக்கு மூன்று படங்கள் தேர்வு செய்யப்பட்டு முறையே 200 டாலர்கள் வழங்கப்படும்.

மூன்றாவது பரிசுக்கு 5 படங்கள் தேர்வு செய்யப்படும். பரிசு முறையே 100 டாலர்கள்.

இந்தப் படங்கள் வரும் சூலை மாதம் அமெரிக்காவின் செயின்ட் லூயிசில் நடைபெறவிருக்கும் பெட்னா தமிழ் விழாவில் திரையிடப்படும்.

விழாவில் நேரில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் சொந்த செலவில் வரலாம்.

போட்டிக்கான நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.

மேலதிக விவரங்களுக்கு: http://www.fetna2014.com/ என்ற முகவரியில் உள்ள பெட்னா இணையதளத்தைப் பார்வையிடுங்கள்

குறும்படக் குறுவட்டுகள் அனுப்ப வேண்டிய முகவரி:

Thulir Software Technologies,
No.368, Padmavathy Street,  Srinivasa Nagar,
Madipakkam, Chennai 600091.  Tamilnadu, INDIA




FeTNA plans to select ten short films which are based on Tamil society and culture, out of which three will be given awards or cash prizes. All ten films will be screened during the 27th FeTNA Convention in Saint Louis, Missouri, USA.

The short films to be screened will be selected by a panel of judges headed by a well-known movie-maker.

This contest has been organized by FeTNA to encourage enthusiastic and talented young film makers. We hope that the experience of participating in this contest will help pave the way for aspiring movie makers to venture into feature film projects.

FeTNA will also recommend the screening of the selected short films to all Tamil Sangams in North America .

Rules and Regulations:

1. The duration of the short films entered for the contest must be within 15 to 20 minutes.
2. The expenses involved in submission is the responsibility of the contestant. The films need to be submitted on a DVD format (with region 0) or Blue Ray format (two copies of DVD or Blue Ray) which could be played on any consumer models in the US. If the short film is already on the internet, then the URL link must be provided along with the DVD.

Postal Address:

Thulir Software Technologies,
No.368, Padmavathy Street,
Srinivasa Nagar,
Madipakkam, Chennai 600091.
Tamilnadu, INDIA

3. If the entry has already participated in other film festivals or competitions, the list of such competitons/festivals must be attached along with the list of prizes/awards won.

4. Only films produced in the year 2013 or 2014 are eligible for the competition. .

5. All the responsibilities of copyright rests with the producer or the director or the person who submits the film as the case may be and FeTNA has no stake in it.

6. In case of any litigation FeTNA nor the members of the Jury will be held responsible.

7. The short films entered for the contest must engage with themes that address Tamil culture -- any of the topics related to heritage, literature, language, art, traditions, social issues specific to the community or the diaspora, conflicts between tradition and modernity, acculturation and alienation, inter communal/racial/religious marriage etc. These topics are only suggestions; the subject could be Tamil in any broad sense—the only requirement is the film must address the theme in a substantial way.

8. Entries which are made especially for the FeTNA competition will be given preference.

9. Entries which are not yet released are very welcome.

Due Date:

All the short films for the competition must be registered with FeTNA and received by 25th of May, 2014.
The list of selected films will be announced on FeTNA’s website and sent to popular media sites for maximum publicity.

Short Films – Some Guidelines:

It will be preferable to have English subtitles.
Movies can also be in English portraying Tamil language, culture or society.
The jury’s decision is final and binding.
FeTNA cannot return the DVD’s (or equivalent) unless the sender pays for the postage. However FeTNA will not use them in any way other than what has been disclosed above.
Some selected films may be shown as special screenings though may not be part of the competiton.

Details of awards / prizes:

First prize (two movies will be selected) - $500/each.
Second Prize(three movies will be selected) - $200/each
Third Prize (Five movies will be selected) - $100/each
Special mention (Five movies will be selected)

All the above movies will be screened during the FeTNA Convention during July 4-5 2014 in Saint Louis, Missouri, USA

Application Fee for the short film contest: None

Do you want to participate in the FeTNA Convention?

If you are the person submitting the short film, you need to travel to Saint Louis at your own expense.

For Additional Information:

http://www.fetna2014.com/


திங்கள், 24 பிப்ரவரி, 2014

தமிழியச் சிந்தனையாளர் கு.ம.கி. மறைவு


திரு. கு.ம.கி அவர்கள்

குடந்தையில் வாழ்ந்த முதுபெரும் திராவிட இயக்கச் சிந்தனையாளரும், குடந்தை நகர வரலாறு அறிந்தவரும், அண்மைக்காலமாகத் தமிழ்த்தேசியச் சிந்தனையுடன் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றியவருமான திரு. கு.ம.கி. ஐயா அவர்கள் இன்று(24.02.2014) நள்ளிரவு 2.30 மணிக்கு மாரடைப்பால் குடைந்தையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

15.02.2014 சனிக்கிழமை அன்று குடந்தைக்குக் களப்பணிக்குச் சென்றபொழுது பேராசிரியர் சிவக்குமார் அவர்கள் கு.ம.கி. ஐயாவை நான் தங்கியிருந்த அறைக்கு அழைத்துவந்தார்கள். திராவிட இயக்கம் குறித்த தொடக்க வரலாறுகளை நினைவூட்டிய கு. ம. கி. ஐயாவை அடுத்தச் சுற்றில் குடந்தை வரும்பொழுது பேசச் செய்து அவர் பேச்சைப் பதிந்துவைக்க நினைத்து உரையாடினேன். அந்தோ! இன்று காலை பொறியாளர் இராச.கோமகன் அவர்கள் தொடர்புகொண்டு ஐயா கு.ம.கி. அவர்களின் மறைவை நினைவூட்டினார்கள்.


கு.ம.கி. அவர்களின் இயற்பெயர் கிருட்டினமூர்த்தி ஆகும். இவருக்கு அகவை 70 ஆகும். இவர்தம் தந்தையார் பெயர் மருதமுத்து ஆகும். இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு மகளுமாக அமைந்த குடும்பத்தில் தமிழ் வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர்களின் தமிழ்ப்பற்றை அறிந்த கண்ணியம் இதழாசிரியர் திரு.ஆ.கோ. குலோத்துங்கன் அவர்கள் கண்ணியச் செம்மல் விருதளித்துப் பாராட்டியுள்ளார். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான நிதி உதவியைத் தமிழக அரசு வழங்கி வருகின்றது. பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தவர். அன்னாரைப் பிரிந்து வருந்தும் குடும்பத்தினருக்கும், தமிழியச் சிந்தனையாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்!

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

குடந்தை ப.சுந்தரேசனாரின் சுவடுகளைத் தேடி…


திரு. வைத்தியலிங்கம் அவர்கள் ( குடந்தை ப. சுந்தரேசனாரைப் புரந்த பெருமக்களுள் ஒருவர்)

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வின்பொருட்டு செய்திகள் திரட்ட நேற்று (22.02.2014) சென்றுவர நேர்ந்தது. தாவரத் தகவல் தொகுப்பாளர் இரா. பஞ்சவர்ணம் ஐயா அவர்களும் அவர்களின் உறவினர் திரு. இராஇளங்கோவன் அவர்களும் உடன் வர நானும் சென்றேன். முதலில் தில்லைக்கோயிலின் தமிழ்வழிபாடு குறித்த வரலாற்றுச் செய்திகளை அறிய சிதம்பரத்திலுள்ள தமிழ் ஆர்வலர்கள் பலரைக் கண்டு உரையாடி உண்மை வரலாறு அறிந்தேன்
சிதம்பரம் நகர மன்றத்தின் முன்னாள் தலைவர் வி.எம்.எசு.சந்திரபாண்டியன் அவர்கள்

சிதம்பரம் நகரமன்றத்தின் முன்னாள் தலைவர் திரு. வி.எம். எசு. சந்திரபாண்டியன் அவர்கள் சிதம்பரம் வரலாறு குறித்த பல செய்திகளை ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டார். தமக்குள்ள பல்வேறு அரசியல் பணிகளுக்கு இடையே பல்வேறு நூல்களைக் காட்டியும் ஆவணங்களைக் காட்டியும் எங்களிடம் வி.எம்.எசு. அவர்கள் உரையாடியமை எங்களுக்குப் பெரு மகிழ்வாக இருந்தது. அவர்தம் இல்லத்தில் அரிய நூலகம் ஒன்று உள்ளமையும் அதில் உள்ள நூல்கள் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதையும் நினைத்து என் நூலகத்தின் பரிதாப நிலையை மனதில் நிறுத்திப்பார்த்தேன். அதியமானின் உலைக்கூடம்போல் என் நூலக நூல்கள் சிதறிக்கிடப்பதை நம் இல்லம் வருவோர் அடிக்கடி குறிப்பிட்டுச் சரிசெய்யச்சொல்வார்கள். 

தில்லை அம்பலத்தில் தமிழ் முழங்க மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் அவர்கள் செய்த முயற்சியும், பிச்சாவரம் குறுநில மன்னர்களின் பொறுப்பில் சிதம்பரம் கோயில் இருந்தமையையும் அறிஞர்கள் சிலர் எடுத்துக்கூறினர். சோழப்பேரரசர் காலம் முதல் சிதம்பரத்தில் அமைந்த இறைவழிபாடு குறித்த பல்வேறு செய்திகள் கிடைத்தன.

அடுத்ததாகச் சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்வேதம் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த திரு வைத்திலிங்கம் ஐயா அவர்களை மாநாட்டுக்கூடம் சென்று அழைத்துக்கொண்டேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் அரங்க. பாரி அவர்களைச் சந்திக்கும்பொருட்டுத் தமிழ்த்துறைக்குச் சென்றோம். அங்கு அமர்ந்தபடி குடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய செய்திகளை என் காணொளிக் கருவியில் பதிந்துகொண்டேன். சற்றொப்ப 45 நிமிடங்கள் குடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய நினைவுகளைத் திரு. வைத்தியலிங்கம் அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் தேவாரத்தைப் பயிற்றுவிக்கும் விரிவுரையாளராகக் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் மூன்றாண்டுகள் பணிபுரிந்தமை இங்கு நினைவிற்கொள்ள வேண்டிய செய்தியாகும்.


 பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனாரின் தமிழிசைப் பணி, தமிழ் இலக்கிய ஈடுபாடு, பிறமொழி படிக்க நேர்ந்தமைக்கான காரணங்கள், அவரின் இயல்புகள், வாழ்க்கை முறை, குடும்பம், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற அவரின் விரிவுரை, தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் அவர்களைப் போற்றி மதித்தமை, ஐயா அவர்களின் இறுதிக்கால வாழ்க்கை என்று பல செய்திகளைப் பெற முடிந்தது. பெரும் புதையல் அகழ்ந்து பெற்ற மகிழ்ச்சி கிடைத்தது. ஒத்துழைப்பு நல்கிய அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு மீண்டோம்.

திரு.இரா.பஞ்சவர்ணம் ஐயா, திரு. வைத்தியலிங்கம் ஐயா, மு.இ, முனைவர் அரங்க.பாரி அவர்கள்


திரு.இரா.பஞ்சவர்ணம் ஐயா, திரு. வைத்தியலிங்கம் ஐயா, இரா.இளங்கோவன், முனைவர் அரங்க.பாரி அவர்கள்

புதன், 19 பிப்ரவரி, 2014

கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் தொடக்க விழா!


தமிழ் உறவுடையீர்! வணக்கம்.

அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தித் தமிழரின் பெருமையைக் கடல்கடந்த நாடுகளிலும் பரப்பியவன் மாமன்னன் இராசேந்திர சோழன் ஆவான். அவனின் தலைநகரமான கங்கைகொண்டசோழபுரம் சற்றொப்ப முந்நூறாண்டுகளுக்கு மேல் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குத் தலைநகரமாக ஒப்புயர்வற்று விளங்கிப் புகழொளி வீசியதைத் தாங்கள் அறிவீர்கள்! இம்மாநகரில் கருவூர்த் தேவர், ஒட்டக்கூத்தர், செயங்கொண்டார், சேக்கிழார், கம்பர் உள்ளிட்ட புலவர் பெருமக்கள் வாழ்ந்து தமிழ் வளர்த்தமையை வரலாற்றின் பக்கங்களில் படிக்கின்றோம்.

அண்மையில் வாழ்ந்து மறைந்த தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் தாயார் கங்கைகொண்டசோழபுரத்தில் பிறந்தவர் என்பதும், கங்கைகொண்ட சோழபுரக் கோயில்  வரலாறு பற்றி உ.வே.சா. அவர்கள் தம் தன்வரலாற்று நூலில்  எழுதியுள்ளார் என்பதும் இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கது. இத்தகு பெருமைக்குரிய ஊரைச் சார்ந்து அமைந்திருக்கும் ஒவ்வொரு ஊரும் ஒரு வரலாற்றைச் சுமந்து நிற்கின்றது. எடுத்துக்காட்டாக மாளிகைமேடு, உள்கோட்டை, இடைக்கட்டு, கடாரங்கொண்டான், கொக்கரணை, யுத்தப்பள்ளம், சுண்ணாம்புக்குழி, பள்ளிவிடை, பரணம், ஆயுதக்களம், குருகாவலப்பர்கோயில், மெய்க்காவல் புத்தூர், வீரசோழபுரம், கொல்லாபுரம், கடம்பூர், உலகளந்தசோழன்வெளி, மீன்சுருட்டி, வானதிரையன் குப்பம், வானவன்நல்லூர், வாணதிரையன் பட்டினம், விக்கிரமங்கலம், தென்கச்சிப்பெருமாள் நத்தம், நாயகனைப்பிரியாள், வானவன்மாதேவி, சோழன்மாதேவி என உள்ள ஊர்களின் பெயர்கள் ஒவ்வொன்றும் வரலாற்றைச் சுமந்து நிற்கின்றன

இந்தப் பகுதியில் பிறந்த பெருமக்களுள் பலர் தமிழாராய்ச்சித்துறை, அரசியல் துறை, ஆட்சித்துறை, மருத்துவத்துறை, பொறியியல்துறை, சட்டத்துறை, திரைத்துறைகளில் பேரும் புகழும் பெற்றவர்களாக விளங்கி வருகின்றனர். இப்பகுதியில் பிறந்த பலர் அயல்நாடுகளில் பல்வேறு பணிகளில் சிறப்புற்று விளங்கிப் பிறந்த ஊருக்குப் பெருமைசேர்த்து வருகின்றனர். இப்பகுதியில் பிறந்த பலரும் தமிழ்ப் பற்றுடையவர்களாகவும், தமிழார்வம் கொண்டவர்களாகவும் விளங்கி வருகின்றனர்.

இத்தகு தமிழார்வம் கொண்டவர்கள் இணைந்து கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் என்னும் பெயரில்  தமிழ்ச்சங்கத்தினைத் தொடங்கியுள்ளோம். தமிழ் அறிஞர்களை அழைத்து இச்சங்கத்தின் வழியாகக் கங்கைகொண்டசோழபுரம் பகுதியில் தொடர்ந்து தமிழ் இலக்கியக் கூட்டங்கள் நடைபெறவும், தமிழ்ச்சொற்பொழிவுகள் நிகழவும் திட்டமிட்டுள்ளோம். மாணவர்களுக்குத் தாய்மொழியில் ஈடுபாடு ஏற்படுவதற்கு உரிய பல்வேறு செயல்திட்டங்கள் உள்ளன. இவ்வமைப்பு அரசின் பதிவுபெற்ற அமைப்பாகும். இஃது அரசியல், கட்சி, சாதி, சமய வேறுபாடு இல்லாமல் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அமைப்பாகும். தமிழ்க்கலைகளையும், கலைஞர்களையும் பாராட்டி ஊக்குவிப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளது

கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் அமைப்பின் தொடக்க விழா எதிர்வரும் 2014, மார்ச்சுத் திங்கள் 29 ஆம் நாள் காரி(சனி)க்கிழமை கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற உள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்திலும், அருகில் உள்ள ஊர்களிலும் வாழும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் ஒன்றிணைந்து தம் பிறந்த ஊரில் எடுக்க உள்ள இந்த விழாவில் தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழறிஞர்கள், அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், சட்டத்துறை, நீதித்துறை சார்ந்தவர்கள், ஊர்ப்பெருமக்கள் கலந்துகொண்டு உரையாற்றவும், உரைகேட்கவும் உள்ளனர். அனைவரின் ஒத்துழைப்பையும், வழிகாட்டலையும் கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் எதிர்நோக்கியுள்ளது. தமிழ்ச் சங்கத்தின் தொடக்கவிழா சிறப்பாக நடைபெறப் பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுப் பணிகள் சிறப்பாக நடந்துவருகின்றன. பொறியாளர் இராச. கோமகன் அவர்களின் தலைமையில் ஒரு வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முதன்மை வாய்ந்த நிகழ்ச்சிக்குத் தமிழார்வளர்களை அன்புடன் அழைத்து மகிழ்கின்றோம்!

சித்தாந்த இரத்தினம்பழமலைகிருட்டினமூர்த்தி(குவைத்து)(தலைவர்)
முனைவர் மு.இளங்கோவன் (செயலாளர்)
திரு. கா. செந்தில் (பொருளாளர்)
கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம்

அலுவலகம்:

கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம்,
தமிழ் மாளிகை, கீழைச் சம்போடை
கங்கைகொண்டசோழபுரம் (அஞ்சல்), 
உடையார்பாளையம் (வட்டம்), 
அரியலூர் மாவட்டம்- 612 901. தமிழ்நாடு

செல்பேசி: + 94420 29053 / 73739 72333 / 99439 53653 /


மின்னஞ்சல்:  muelangovan@gmail.com

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்


சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேட்டை நாணயக்காரத் தெருவில் பெருமைக்குரிய அறிவுத் திருக்கோயிலாக விளங்குவது சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம் ஆகும். கும்பகோணத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து அறப்பணிகள் செய்த கோபு சிவகுருநாதன் செட்டியார் பி.. பி.எல் (1865-1926) அவர்கள் நினைவாக நிறுவப்பெற்றுள்ள இந்த நூல் நிலையம் 1954 இல் நிறுவப்பெற்றது. தனிக்கட்டடத்தில் இயங்க வேண்டி முனைவர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களால் 21.05.1958 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டடம் உருப்பெற்று 09.11.1959 இல் சர். பி. டி. இராசன், பார் அட் லா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. தமிழ்நூல்களுக்காக அமைந்த இந்த நூலகத்தில் இன்று நாற்பதாயிரம் நூல்கள் உள்ளன.

இந்த நூலகத்திற்கு அறக்கட்டளையாக மயிலாடுதுறை வட்டம் சென்னியநல்லூர் வல்லம் என்னும் சிற்றூரில் 03.05.1962 இல் 24-46 ஏக்கர் நிலம் எழுதிவைக்கப்பட்டது. நில உடைமைச்சட்டம் 58/ 1961 இன் படி தமிழக அரசு 17-88 ஏக்கர் நிலத்தை எடுத்துகொண்டு இழப்பீடாக 1977 இல் பத்திரங்களை வழங்கியுள்ளது. இப்பொழுது ஐந்து ஏக்கர் நிலத்தின் வருவாயில் நூலகம் பாதுகாக்கப்படுகின்றது.

இந்த நூலகத்தில் உள்ள நூல்கள் பல தொகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டு  முதல் தொகுதி 1954 இலும் அடுத்த இருதொகுதிகளாக 1971 இலும் புத்தகப்பட்டியல் அச்சிடப்பட்டுள்ளன. இந்த நூலகத்திற்குப் பல பெரியோர்கள் நூல்களை அன்பளிப்பாகத் தந்துள்ளனர்.
இந்த நூலகத்திற்கு வியாழக்கிழமைதோறும் விடுமுறை. பிற விடுமுறை நாள்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

காலை 9 மணி முதல் பகல் பகல் 12 மணிவரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நூலகம் திறந்திருக்கும்.
இந்த நூலகத்தைப் பயன்படுத்த எந்த வகையான கட்டணமும் இல்லை.

இந்த நூலகத்தில் உள்ள நூல்கள்  கீழ்வரும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  • புராணம்
  • தலபுராணம்
  • சாத்திரமும் தோத்திரமும்
  • திருமுறை
  • சமயம்
  • சங்க நூல்கள்
  • பிரபந்தங்கள்
  • அந்தாதி
  • உலா
  • கலம்பகம்
  • குறவஞ்சி
  • கோவை
  • சதகம்
  • தூது
  • பரணி
  • பிள்ளைத்தமிழ்
  • மாலை
  • வெண்பா
  • இதிகாசம்
  • கீதை
  • வைணவம்
  • நீதிநூல்கள்
  • இசை
  • புதுமைக்கவி
  • மொழிபெயர்ப்பு
  • கட்டுரைகள்
  • அகராதி
  • நிகண்டு
  • இலக்கணம்
  • கல்வெட்டு
  • வாழ்க்கை வரலாறு
  • தமிழக வரலாறு
  • உலக வரலாறு
  • அரசியல்
  • உளவியல்
  • யாத்திரை
  • அறிவியல்
  • உடற்பயிற்சி
  • மருத்துவம்
  • சோதிடம்
  • மாந்திரீகம்
  • கைத்தொழில்
  • நாவல்கள்
  • கணிதம்
  • நாடகம்
  • இசுலாம்
  • கிறித்தவம்
  • பலவகை நூல்கள்
  • பத்திரிகைகள்


நூலகம் உள்பகுதி



 நூல்களின் பாதுகாப்பு
பொறியாளர் கோமகன், திரு. கோடிலிங்கம்
முனைவர் மு.இ, திரு. கோடிலிங்கம்
தமிழ் நூல்களைப் பார்வையிடும் பொறியாளர் கோமகன்

குறிப்பு: இக்கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாளுவோர் எடுத்த இடம் குறிப்பிட மகிழ்வேன்.

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்கோலசு அவர்களின் கணவர் திரு சரவணன் அவர்கள் மறைவு


திரு. சரவணன் என்ற சரவணக்குமார் 

 செர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்கோலசு அவர்களின் கணவர் திரு. சரவணன் என்ற சரவணக்குமார் அவர்கள் புதுவை மாநிலம் வில்லியனூர் அடுத்த கோர்க்காட்டில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று(16.02.2014) இயற்கை எய்தினார். இன்று மாலை 4 மணியளவில் அவர்தம் நல்லுடல் கோர்க்காடு இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம்  செய்யப்பட்டது.

 இத் துன்பச்செய்தியறிந்து பன்னாட்டு ஆய்வாளர்கள், அறிஞர்கள், திரு.சரவணன் அவர்களின் உறவினர்கள், கோர்க்காட்டு மக்கள், நண்பர்கள், கோர்க்காடு வருகை தந்து உடலுக்கு வணக்கம் செலுத்தினர்.

 திரு.சரவணன் அவர்களையும் அம்மா உல்ரிக் அவர்களையும் பலவாண்டுகளுக்கு முன்பு அவர்களின் கோர்க்காடு இல்லத்தில் சந்தித்து அளவளாவியுள்ளேன். இருவரும் பழகுதற்கு இனிய பண்பாளர்கள். மதுரையைச் சேர்ந்த திரு.சரவணன் அவர்களும் செர்மனியைச் சேர்ந்த உல்ரிக் அம்மா அவர்களும் தமிழாராய்ச்சிக்காகக் கோர்க்காட்டில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஊரில் பல இளைஞர்களைத் தத்தெடுத்துத் தங்கள் குழந்தைகள் போல் வளர்த்துள்ளனர். ஊரே திரண்டு திரு. சரவணன் அவர்களுக்கு உரிய இறுதிக் கடமைகளைப் பொறுப்புடன் செய்தனர். அம்மாவுக்கு ஆறுதல் கூறினர். ஒரு தமிழ்ப்பெண்ணாக இருந்து அம்மா அவர்கள் அனைத்துச் சடங்குகளையும் செய்தமை எங்கள் அனைவரையும் கண்ணீர்க்கடலில் ஆழ்த்தின. கணவரை இழந்து வருந்தும் முனைவர் உல்ரிக் நிக்கோலசு அம்மா அவர்களின் துயரத்தில் பங்கெடுப்போம்!


இறுதி வணக்கத்தில் மு.இ.


இறுதி வணக்கத்தில் மு.இ, உல்ரிக் அம்மா, உறவினர்கள்,