நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 3 ஜனவரி, 2014

கருங்காலி /Karuṅkāli/ black·leg


கருங்காலி /Karukāli/ 

கருங்காலி என்ற சொல்லை அறிந்திருந்தாலும் அத்தகு மாந்தர்களைக் கண்டிருந்தாலும் அதற்கான மூலச்சொல்லை இதுநாள் வரை அறியாது இருந்தேன். கருங்காலி என்ற சொல் இரு பொருளில் பயன்படுத்தப்படுகின்றது என்பதை இன்று அறிந்தேன்..

கருங்காலி என்பது black·leg என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தொழிலாளி, முதலாளி குறித்த சொற்கள் ஆளப்பட்ட சூழலில் உழைக்கும் தொழிலாளப் பிரிவில் இருந்துகொண்டு முதலாளிக்கு உளவு சொல்பவனைக் கருங்காலி என்று குறிப்பிடும் போக்கு 1889-1890 கால கட்ட அளவில் மேனாட்டில் பயன்பாட்டில் இருந்துள்ளது. அதற்கு முன்பு black-leg என்ற சொல்லுக்குத் திருடன் என்று பொருள் இருந்துள்ளது.

black-leg என்பதைத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள் கருங்காலி(கரிய காலினன்) என்று மொழிபெயர்த்து ஒலித்ததால் அது கருங்காலி என்று இதுவரை தமிழில் அழைக்கப்பட்ட மரத்தை நோக்கி நம்மை நினைக்கவைத்துவிட்டது. தமிழகத்தில் தொழிலாளர் இயக்கம் வலுப்பெற்ற காலத்தில் கருங்காலி என்ற சொல் தமிழகத்தில் தொழிலாளர் துரோகியைக் குறிக்கத் தொடங்கியிருக்க வேண்டும்.black-leg என்ற சொல் தரும் பொருளும் கருங்காலி என்ற மரத்தின் பொருளும் வேறு வேறு என்று நினைவிற்கொள்ள வேண்டும்.

கருங்காலி என்ற மரத்திற்குத் தாவரவியல் பெயர்  - Diospyros ebenum என்பதாகும்கருங்காலி என்பது உறுதியால் பெருமைபெறுகின்றது. கரிய காழினை உடையது என்பதால் கருங்காழி என்று நிலவிப் பின் கருங்காலியானதா என்று நினைக்க வேண்டியுள்ளது. காழ் என்பது ஈண்டு உறுதியைக் குறிக்கும். புறக்காழ் உடையது புல் எனவும் அகக்காழ் உடையது மரம் எனவும் தொல்காப்பியம் குறிப்பிடும். வைரம் பாய்ந்து பிற மரங்கள் காணப்படும். இக்கருங்காலி வைரமாகவே(உறுதி) இருப்பதால் கருங்காலி என்றுபெயர்பெற்றது போலும். தமிழிலிருந்து இச்சொல் பிறமொழிக்குச் சென்றிருக்க வாய்ப்பு உண்டு. வேர்ச்சொல்லாய்வறிஞர்கள் இதுகுறித்து விளக்கினால் உண்மை புலனாகும்.

கருங்காலி குறித்துத் தமிழில் பல பழமொழிகள் உள்ளன.
1. முட்டாளோடாடிய நட்பு கருங்காலிக் கட்டை ஊடாடிய கால்.
2. கருங்காலிக் கட்டைக்கு வாய் நாணாக் கோடாலி இளவாழைத் தண்டுக்கு வாய் நாணுமா?
என்பன அவை.

பெருவாகை நொச்சி பெருங்குமிழே புங்கு
கருங்காலி நாயுருவி காயா - மருதுமகிழ்
கையாந்த கரையுடன் காட்டா மணக்காகும்
மெய்யார் துறவி தனக்கு”. என்பது ஒரு பழம்பாடல்.

கருங்காலி என்ற பெயரில் அணைக்கட்டு(வேலூர் மாவட்டம்), பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) அருகில் ஊர்ப்பெயர் உள்ளது. கருங்காலிப்பட்டு, வட கருங்காலிப்பாடி என்ற பெயரிலும் ஊர்ப்பெயர்கள் உள்ளதைத் திரு. பஞ்சவர்ணம் குறிப்பிடுவார். கருங்காலி என்ற ஊர்ப்பெயர் மகாராட்டிர மாநிலத்திலும் உள்ளது.

கருங்காலி மரங்களைக் கருங்காலியால் செய்த காம்புகளைக் கொண்ட கோடரிகளே வெட்டுவதால், கருங்காலி இரண்டகத்தின் (துரோகத்தின்) சின்னமானது போலும். “குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்புஎன்பதும் இங்கு எண்ணிப்பார்க்கத்தக்கது

கருங்காலி மரத்தை இதுநாள்வரை நான் பார்க்கவில்லை. நேற்று(02.01.2014) ஐயா இரா. பஞ்சவர்ணம் அவர்களின் ஊரான பண்ணுருட்டியில் கருங்காலி மரத்தைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. இது உறுதியான மரம் என்ற பொதுச்செய்தி மட்டும் எனக்குத் தெரியும். கருங்காலியில் உலக்கை செய்வார்கள் என்றும், கருங்காலியில் கோடரிக்காம்பு செய்வார்கள் எனவும் கோயில் கோபுரங்களில் இதனை நட்டுக் கலசத்தை அமைப்பார்கள் என்றும் அறிந்துள்ளேன். இரண்டகம் செய்வோரை (துரோகிகளை)க் கருங்காலி என்று அழைப்பது ஏன்? என்று வினவிப்பார்த்தபொழுது மேற்கண்ட விளக்கங்கள் கிடைத்தன.

உரையாடலில் பங்கேற்ற பேராசிரியர் .இலெ.தங்கப்பா, மொழிபெயர்ப்பு அறிஞர் பாலசுப்பிரமணியம் ஐயா, பொறிஞர் கோமகன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி.

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கருங்காலி என்ற வார்த்தையின் பொருள் அறிந்தேன் நன்றி ஐயா