நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 மே, 2011

புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் மே தின விழா


அழைப்பிதழ்

புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் இன்று(28.05.2011) காரிக்கிழமை மாலை ஆறுமணி முதல் மே தின விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

தேசிய விருதாளர் செ.ஆதவன் அனைவரையும் வரவேற்க, தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து அவர்கள் தலைமை தாங்குகின்றார். பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் நோக்கவுரையாற்ற எழுச்சித் தமிழிசையைப் புலவர் வி.திருவேங்கடம் குழுவினர் வழங்குகின்றனர்.

பாட்டரங்கில் செ.செல்வக்குமாரி, ந.இராமமூர்த்தி, கலா விசு, ஆறு. செல்வன் பாடல் படிக்கின்றனர்.

பாராட்டரங்கில் அண்மையில் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற முனைவர் கேசவ. பழனிவேலு, முனைவர் மு.இளங்கோவன் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

கடலூர் வழக்கறிஞர் வீ.அழகரசன் அவர்கள் சிறப்புரையாற்றுகின்றார்.

நல்லாசிரியர் வைத்தி கத்தூரி அவர்கள் நன்றியுரையாற்றுகின்றார்.

புதன், 18 மே, 2011

ஆர்க்காடு தமிழ் இணையம் அறிமுகம் இனிதே நிறைவு!


புரவலர் ஏ.சி.சுந்தரேசன் தலைமையுரை

வேலூர் மாவட்டம் ஆர்க்காடு நகரில் உள்ள தேவிநகர்,பாரதிதாசன் தெருவில் அமைந்துள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணி - ஆர்க்காடு வட்டாரக்கிளை ஏற்பாட்டில் தமிழ் இணைய அறிமுகம் இன்று(18.05.2011) காலை பத்துமணியளவில் தொடங்கியது. இயக்கப் புரவலர் திரு.ஏ.சி. சுந்தரேசன் அவர்கள் தலைமை தாங்கினார். செயலாளர் திரு.எம்.ஆர். கோவிந்தராசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் கலந்துகொண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குத் தமிழ் இணையத்தின் பல்வேறு கூறுகளை விளக்கினார். ஆசிரியர்களுக்குப் பயன்படும் இணையவழிக்கல்வி,நூலகங்கள்,தமிழ்த்தட்டச்சு, மின்னிதழ்கள் பற்றிய அறிமுகம் இன்றைய வகுப்பில் அமைந்தது.ஆர்க்காடு, சோளிங்கர்,வாலாசா, காட்டுப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள்,இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் கு.வ.மகேந்திரன் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


ஆர்வமுடன் பங்கேற்ற ஆசிரியப்பெருமக்கள்


மு.இளங்கோவன் உரை

செவ்வாய், 17 மே, 2011

ஆர்க்காட்டில் தமிழ் இணையம் அறிமுகம்

வேலூர் மாவட்டம் ஆர்க்காட்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் ஆர்க்காடு கிளையின் சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் இணையம் அறிமுக வகுப்பு நடைபெறுகின்றது.

ஆர்க்காடு,சோளிங்கர்,இராணிப்பேட்டை,வாலாசா,வேலூர்,ஆரணி பகுதிகளில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணையத்தை அறிமுகம் செய்து தமிழ் ஆசிரியர்களுக்குத் தமிழ்த்தட்டச்சு, வலைப்பூ உருவாக்கம், இணைய நூலகங்கள், இணையவழித் தமிழ்க்கல்வி உள்ளிட்ட செய்திகளை எடுத்துரைக்க உள்ளார்.

இடம்: ஆர்க்காடு

நாள்: 18.05.2011

நேரம்: காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை

தொடர்புக்கு: கு.வ.மகேந்திரன் பேசி: + 8973038567

புதன், 11 மே, 2011

தில்லித் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் இணையம் குறித்த கலந்துரையாடல்


தில்லித் தமிழ்ச்சங்கம்

தில்லித் தமிழ்ச்சங்கம்அறுபதாண்டுகளுக்கும் மேலாக இந்தியத் தலைநகரில் சீரிய தமிழ்ப்பணியைச் செய்து வருகின்றது. பேராசிரியர் சாலை இளந்திரையன் உள்ளிட்ட அறிஞர்கள் வழியாகத் தில்லித் தமிழ்ச்சங்கம் பற்றி முன்பு அறிந்துள்ளேன். நான் குடியரசுத்தலைவர் விருதுபெறச் செல்லும்பொழுது அந்தச் சங்கத்தில் தமிழன்பர்களைச் சந்தித்துத் தமிழ் இணையம் பற்றி உரையாடுவதற்குரிய ஒரு வாய்ப்பு அமைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். என் விருப்பத்தை வடக்கு வாசல் ஆசிரியர் திரு. பென்னேசுவரன் அவர்களிடம் தெரிவித்தேன்.அவர் தில்லித் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களிடம் பேசி அதற்குரிய ஒரு வாய்ப்பை உருவாக்கினார்கள். தொலைபேசி,மின்னஞ்சல் வழியாக நிகழ்ச்சி உறுதிசெய்யப்பெற்றது.

திட்டமிட்டபடி 05.05.2011 மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி நடத்த எண்ணியிருந்தோம். ஆனால் குடியரசுத்தலைவர் மாளிகையில் எனக்குரிய கடமைகளை முடித்துத் திரும்ப மணி ஆறு முப்பது ஆனது. ஏழுமணியளவில் தில்லித் தமிழ்ச்சங்கம் அடைந்தோம். இதன் இடையே தில்லிப் பாராளுமன்றத்தின் மொழிபெயர்ப்பாளர் திரு.கிருட்டினசாமி சான் சுந்தர் அவர்கள் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து என்னை அழைத்துச்சென்றார்கள்.

தமிழ்ச்சங்கத்தில் வடக்குவாசல் ஆசிரியர் திரு.பென்னேசுவரன், திரு.கிருட்டினமூர்த்தி (தலைவர்), திரு. சக்திபெருமாள் உள்ளிட்ட அன்பர்கள் இருந்தனர். திரு.பென்னேசுவரன் அவர்கள் தலைமையில் கலந்துரையாடல் தொடங்கியது.முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்திருந்தனர். வலைப்பதிவர் கயல்விழி உள்ளிட்டவர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோ.இராசகோபால் அவர்கள் வருகை தந்திருந்தார். புலவர் இரா.விசுவநாதன் உள்ளிட்ட தமிழார்வலர்களும் கலந்துகொண்டனர்.

என் கல்வியார்வம், தமிழார்வம், தமிழ் இணையத்துறையில் என் முயற்சி, ஊர்தோறும் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவதன் நோக்கம்,தமிழ் இணையம் வளர்ந்துள்ள வரலாறு, தமிழ் இணையத்துக்கு உழைத்தவர்கள்,பங்களித்தவர்கள் பற்றி எடுத்துரைத்தேன். இணையத்தைப் பயன்படுத்தித் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய பணிகளை நினைவுகூர்ந்தேன்.இணையம் சார்ந்த பல செய்திகளைப் பரிமாறினேன்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அன்பர்கள் பலரும் பல வகையான வினாக்களை எழுப்பிக் கலந்துரையாடலைச் சுவையானதாக மாற்றினர். இணையம் தொடர்பான விரிவான ஒரு பயிலரங்கை நடத்த வேண்டும் என்று செயலாளர் சக்தி பெருமாள், தலைவர் கிருட்டினமூர்த்தி, வடக்குவாசல் ஆசிரியர் பென்னேசுவரன் ஆகியோர் குறிப்பிட்டனர். தில்லியில் நடக்கும் நிகழ்வுகளை நாம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தில்லியில் பல வலைப்பதிவர்களை உருவாக்குவது காலத்தில் தேவையாகும். அதற்குரிய முயற்சிகளில் தில்லி வாழும் தமிழ் அன்பர்கள் முயற்சி செய்ய வேண்டுகின்றேன்.


திருவள்ளுவர் சிலையுடன் காட்சிதரும் தமிழ்ச்சங்கம்(சான்சுந்தர்,மு.இ)

கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கும் தில்லித் தமிழன்பர்கள்


மு.இ உரையாடல்


சான்சுந்தர் அவர்கள் கருத்துரை வழங்குதல்


மு.இ, பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் சான்சுந்தர்


மு.இ. கலந்துரையாடல்

வெள்ளி, 6 மே, 2011

குடியரசுத்தலைவரின் செம்மொழி விருது - படங்கள்


ந்தியக் குடியரசுத்தலைவர்

மாண்புயர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களிடம்
முனைவர் மு.இளங்கோவன்
செம்மொழி இளம் அறிஞர் விருது பெறுதல்(நாள்: 06.05.2011)


புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் புதுதில்லியில் இன்று(06.05.2011) காலை 11 .30 மணிக்கு நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களிடம் செம்மொழி இளம் அறிஞர் விருது பெறறார். முனைவர் மு.இளங்கோவன் தமிழின் பழந்தமிழ் இலக்கிய,இலக்கணங்களில் ஆய்வுசெய்துள்ளமையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பள்ளது.

மு.இளங்கோவன் மலைபடுகடாம் என்ற நூலில் புகழப்படும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நன்னன் என்ற அரசனின் கோட்டையைக் கண்டுபிடித்துத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்தவர். தமிழ் ஆய்வுகளை இணையதளத்திற்கு எடுத்துச்சென்றவர். வாய்மொழிப்பாடல்கள், இலக்கியம் அன்றும் இன்றும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர். இவற்றைக் கவனத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகின்றது. விருதுத்தொகை ஒரு இலட்சமும், பாராட்டுப்பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது. விருதுபெற்றதும் இன்று மாலையில் தில்லித் தமிழ்ச்சங்கத்தில் முனைவர் மு.இளங்கோவன் உள்ளிட்ட விருதுபெற்ற அறிஞர்களுக்கு நடைபெறும் பாராட்டுவிழாவிலும் இவர் கலந்துகொள்கின்றார்.


குடியரசுத்தலைவரிடம் செம்மொழி விருது பெற்ற தமிழகத்து அறிஞர்கள்(நாள்: 06.05.2011)


இந்தியக் குடியரசுத்தலைவர் மாண்புயர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களிடம் முனைவர் மு.இளங்கோவன் செம்மொழி இளம் அறிஞர் விருது பெறுதல்(நாள்: 06.05.2011)



இந்தியக் குடியரசுத்தலைவர் மாண்புயர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களிடம் முனைவர் மு.இளங்கோவன் செம்மொழி இளம் அறிஞர் விருது பெறுதல்(நாள்: 06.05.2011)

புதன், 4 மே, 2011

இந்தியத் தலைநகரில் செம்மொழி விருதுபெறும் அறிஞர்கள்


புது தில்லி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் வாயிலில் பெருங்கவிக்கோ, ஆண்டவர், பேராசிரியர் அடிகளாசிரியர்,முனைவர் மு.இளங்கோவன்

தமிழ்மொழியை இந்திய அரசு செம்மொழி என்று அறிவித்துள்ளது(2004). இதன் பயனாகச் செம்மொழித் தமிழாய்வுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் செம்மொழி இலக்கியங்களில் ஆய்வு செய்த அறிஞர்களுக்குச் சிறப்பு செய்யும் நோக்கில் பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் தொல்காப்பியர் விருது பெறப் பேராசிரியர் அடிகளாசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

செம்மொழி இளம் அறிஞர் விருதுக்கு (2005-2006, 2006-2007, 2007-2008) இளம் அறிஞர்கள் பதினைந்துபேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு விருது வழங்கும் விழா வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குப் புதுதில்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகின்றது. விருது பெறுவதற்குரிய தமிழறிஞர்கள் அனைவரும் சென்னையிலிருந்து இன்று புதுதில்லிக்கு வானூர்தி வழியாக அழைத்துச்செல்லப்பட்டனர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.இராமசாமி, ஆய்வறிஞர் கு.சிவமணி உள்ளிட்ட அதிகாரிகள் தமிழறிஞர்களை அழைத்துச் சென்றனர்.

பேராசிரியர் நன்னன், பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன் உள்ளிட்ட தமிழறிஞர்களும் உடன் சென்றுள்ளனர். இவர்களுடன் செம்மொழி இளம் அறிஞர் விருது பெறும் அறவேந்தன், மணிகண்டன், மு.இளங்கோவன், அரங்க.பாரி, செல்வராசு, ஆண்டவர், கலைவாணி, சந்திரா, பழனிவேலு, மணவழகன் உள்ளிட்ட பேராசிரியர்களும் சென்றுள்ளனர்.





தமிழறிஞர்கள் நன்னன், கு.சிவமணி, க.இராமசாமி, பெருங்கவிக்கோ, மு.இளங்கோவன், ஆண்டவர், பழனிவேலு


விருதுபெறும் அறிஞர்கள் பேராசிரியர் க.இராமசாமி அவர்களுடன்

ஞாயிறு, 1 மே, 2011

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறக்கட்டளைப் பொழிவு

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் புதுச்சேரித் தனித்தமிழ்க்கழகம் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளது. ஆண்டுதோறும் பாவாணர் நினைவைப்போற்றும் அறக்கட்டளைப் பொழிவைத் தனித்தமிழ் அறிஞர்களைக் கொண்டு நிகழ்த்துவது அறக்கட்டளையின் நோக்கமாகும்.

இன்று(01.05.2011) காலை பத்தரை மணியளவில் புதுச்சேரித் தமிழ்ச்சங்கக் கட்டடத்தில் தேவநேயப்பாவாணர் அறக்கட்டளைப் பொழிவு தொடங்கியது. முனைவர் த. பரசுராமன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். திரு. பெ. தமிழ்நாவன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.

விழுப்புரம் அறிஞர் அ.தெ.தமிழநம்பி அவர்கள் பாவாணரின் மடல்கள் என்ற தலைப்பில் அரியதோர் உரை நிகழ்த்தினார். கழக இலக்கியச்செம்மல் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் தொகுத்த பாவாணர் மடல்கள் இரண்டு தொகுகளில் இடம்பெற்ற பாவாணர் மடல்களின் அடிப்படையில் சிறப்புரையாளர் பொழிவை அமைத்தார். பாவாணரின் கொள்கை,மொழிப்பற்று, வறுமை வாழ்வு, நூல் கற்ற நிலை ,கழக ஆட்சியர் வ.சுப்பையா அவர்களுடன் கொண்டிருந்த தொடர்புகள் யாவும் சிறப்பாக நினைவுகூரப்பட்டன.

முனைவர் க.இரவிசங்கர் நன்றியுரையாற்றினார்.

புதுச்சேரியைச் சேர்ந்த தமிழார்வலர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நானும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாவாணர் நினைவை மாந்தி வந்தேன்.