நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 26 நவம்பர், 2010

வள்ளிமலை சமணர்குகை

வேலூர் மாவட்டம் பல வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கிக்கொண்டு அமைதியாக வளர்ந்து வருகின்றது.இங்குச் சங்க காலத்துச் சான்றுகள் பல உள்ளன. அதுபோல் இடைக்காலச் சோழர் காலத்து வரலாற்றுத் தடங்களும் உள்ளன.

நான் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் பணியாற்றியபொழுது(1999-2005) காரி, ஞாயிறு விடுமுறைகளில் ஏதாவது ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊருக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். என்னுடன் என் மாணவர்கள் பலரும் வருகை தந்து அந்த ஊரின் சிறப்புகளை எடுத்துரைப்பார்கள். அவ்வகையில் பெருமாள்குப்பம் என்னும் ஊரிலிருந்து வந்து கல்வி பயின்ற திரு.பழனி(தந்தையார் பெயர் திரு.சுப்பிரமணி) என்னும் மாணவர் வள்ளிமலையின் சிறப்புகளைச் சொல்லி இந்த ஊருக்குத் தாங்கள் வரவேண்டும் என்று ஒரு விருப்பத்தை முன்மொழிந்தார்.

ஆர்க்காட்டிலிருந்து பொன்னை என்னும் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறி, வள்ளிமலையின் மலையடிவாரத்தில் இறங்கினோம். கீழே இருந்த புகழ்பெற்ற கோயில் ஒன்றைப் பார்த்தவாறு மலையின் படிக்கட்டுகளில் ஏறி இடையில் இருந்த பால காட்சிகளைப் பார்வையிட்டபடி மேலே சென்றோம்.

இடையில் முக்கியமான சமணர் குகை ஒன்று உள்ளது.அரிய சிற்பங்கள் பல உள்ளன. தமிழ்நாட்டு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பராமரிப்பில் இந்தக் குகை உள்ளது.

சமணத் துறவிக்கான இந்தத் தாழ்ந்த குகையில் பல முக்கிய கங்க, பாண அரசர்களின் சிலைகளும், சமணப் படுக்கைகளும், கல்வெட்டுக் குறிப்புகளும் உள்ளன. இதை வசதியாகக் குடைவித்த அரசன் கங்கராஜமல்லன்(கி.பி.816-843) ஆவான். இவன் கங்க சிவமாறன்(கி.பி.679-725) கொள்பேரனும் ஸ்ரீ புருஷன்(725-788) பேரனும், ரணவிக்கிரம மகனுமாவான் என இங்குள்ள ஒரு கல்வெட்டு குறிக்கிறது. பாண அரசனொருவரின் மதகுருவான பவநந்தியின் சிஷ்யையான தேவசேனையின் பதுமையை இங்குக் காணலாம். இதையும் மற்றொரு பதுமையையும் இங்குச் செய்வித்தவர் சமணகுரு ஆர்யநந்தியாவார்.

இந்தக் குகையில் நன்கு ஓய்வெடுக்கவும், உட்கார்ந்து உணவு உண்ணவும் இயலும். தூய்மையாகக் காட்சி தரும் இதனைப் பார்வையிட்டு மகிழும்பொழுது சில்லென்ற காற்று உங்கள் உள்ளம் வருடும்.

குகையின் மேலே வள்ளிமலை ஆசிரமம் உள்ளது. இங்குள்ள துறவியர் தவத்திரு. சாது பாலானந்தா அவர்கள் ஆவார். இவரைச் சென்னையில் 1998 அளவில் ஆசியவியல் நிறுவனத்தில்நடந்த ஒரு கந்தமுருகன் தொடர்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கில் முன்பே சந்தித்தேன். அப்பொழுது அவர் உரை கேட்டுப் பின்னாளில் அவரை அவரின் தங்குமிடம் சென்று கண்டு மகிழவேண்டும் என்று ஒரு வேட்கை எழுந்தது. காரணம் அவரின் திருப்புகழ்ப் புலமை என்னை அவரை நாட வைத்தது. திருப்புகழை நன்கு பாடினார். நம்மைப் போல் வயிற்றுப்பாட்டுக்குத் திருப்புகழை அடிகளார் கற்றாரில்லை. உணர்ந்துபாடும் ஆற்றலும், பழுத்த புலமையும் உடையவர்.

பல ஆண்டுகளுக்கு முன் நினைத்த ஒரு நினைவு எப்படியோ இந்த முறை பாலானந்தா அவர்களைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கியது. அடிகளாரிடம் முன்பு சென்னையில் சந்தித்த சந்திப்பை எடுத்துரைத்ததும் மகிழ்ந்தார். அவர் ஒரு பொறியாளர். தம் மகிழ்வுந்தைத் தாமே இயக்கியபடி சென்னை போன்ற இடங்களுக்கு வந்துபோகும் வீரத்துறவியாக அவர் எனக்குத் தென்பட்டார். மலைக்கு வரும் நம் போன்றவர்களுக்கு உணவை வழங்குவதும் அடிகளாருக்கு மகிழ்ச்சியான செயலாகும். இருப்பதைப் பகிர்ந்து உண்ணலாம்.

அங்குள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். அங்கு ஒரு சுனை உள்ளது. அதன் இயற்கையழகை நம் மக்கள் கெடுத்து வருகின்றர். அங்குள்ள பாறைகள், மரங்கள் ஒருநாள் தங்கிச்செல்ல வேண்டும் என்ற உந்துதலைத் தரும். தவத்திரு சாது பாலானந்தா அவர்களுடன் பழகியபிறகு திருப்புகழ் விழாவின்பொழுது அழைப்பு அனுப்புவார்கள். நானும் நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் சென்று வருவதுண்டு. புதுச்சேரிக்கு வந்த பிறகு தவத்திரு. சாது பாலானந்தா அடிகளாரின் தொடர்பு இல்லாமல் போனது. திருப்புகழை நினைக்கும் பொழுதெல்லாம் நம் அடிகளாரையும் நினைப்பது உண்டு. சாது பாலானந்தா அவர்களை இங்கிருந்தே வணங்கி மகிழ்கின்றேன்.

அதுபோல் என் மாணவர் பழனி அவர்கள் இப்பொழுது பெங்களூரில் கணிப்பொறிப் பொறியாளராக இருப்பதாகப் பழைய மாணவர்கள் சிலர் சொல்வார்கள். பழனி எளிய குடும்பச்சூழல் உடையவர் என்றாலும் உயர்பண்பு வாய்த்தவர். என்மேல் அளவுக்கு அதிகமான பாசமும் அன்பும் கொண்டவர். அவர் தந்தையார் கல்லூரிக்கு வரும்பொழுதெல்லாம் என்னைக் கண்டு மகிழ்வார். கல்லூரியின் விடுதிக் காப்பாளராகவும் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்ததால் ஒவ்வொரு மாணவரின் அசைவும் குடும்பப் பின்புலமும் அறிவேன். அடிகளார், வள்ளிமலையை நினைக்கும்பொழுதெல்லாம் இயல்பாகப் பழனியும் என் உள்ளத்தில் நுழைந்துவிடுவார்.

கருத்துகள் இல்லை: