நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

புதுவைச்சிவம்(23.10.1908-31.08.1989) அவர்களின் நாடகப் பங்களிப்புகள்

புதுவைச்சிவம் அவர்கள் பாவேந்தரின் மாணவராகவும் நண்பராகவும் விளங்கியவர். இருவரின் கொள்கைகளும் ஒத்த தன்மையில் விளங்கியதால் இயக்கப்பணிகளிலும் இலக்கியப்பணிகளிலும் இணைந்து செயல்பட்டுள்ளனர்.புதுவை முத்தியால்பேட்டை இராசகோபால் செட்டியார் இல்லப் புதுமனைவிழாவிற்குப் பெரியார் வருகைபுரிந்தார். புதுவைச்சிவம் நேரடியாகப் பெரியாரிடம் அறிமுகமானார்.

பெரியாரின் புதுச்சேரி வருகை சமய உணர்வாளர்களை எதிராகச் செயல்படத்தூண்டியது. இதனால் புதுவையில் வைதீகமாநாடு(1927) என்னும்பெயரில் பெரியார்கொள்கைக்கு மறுப்புகூறும் மாநாடு ஒன்று புதுச்சேரியில் நடைபெற்றது.திரு.வி.க அவர்களும் கலந்துகொண்டு மேடையில் இருந்தார்.சுப்புரத்தினவாத்தியார்(பாரதிதாசன்) மேடையில் பேசுபவர்களின் பேச்சை மறுத்துப் பேச கால்மணிநேரம் தமக்கு ஒதுக்குமாறு கேட்க, வாய்ப்புமறுக்கப்பட்டது. அப்பொழுது பாவேந்தரைச் சூழ்ந்திருந்த தோழர்களுள் புதுவைச் சிவமும் ஒருவர்.அன்றிலிருந்து பாவேந்தருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பைப் பெற்றவர் புதுவைச்சிவம்.

பாவேந்தர் அவர்களின் தொடர்பு புதுவைச்சிவம் அவர்களுக்கு 1928 ஆம் ஆண்டளவில் வலிமையாக அமைகிறது.சற்றொப்ப இருபதாம் வயதில் இளைஞர் பருவத்தில் பாவேந்தருடன் இணைந்து பணிபுரியத் தொடங்கியிதிலிருந்து பாவேந்தரின் இலக்கிய ஆளுமை சிவத்திற்குப் புரியத்தொடங்கியது.அவர்போல் சமூகத்திற்குப் பயன்படும் படைப்புகளை உரைநடையாகப் பாட்டாக நாடகமாக அமைத்து எழுதத் தொடங்குகிறார்.அக்கால கட்டத்தில் பாவேந்தர் மிகச்சிறந்த பாவலராக மலர்ந்துவிட்டார்.அவரின் புகழ்பெற்ற பாடல்கள் வெளிவரத்தொடங்கிவிட்டன.

தமிழகத்தில் தந்தை பெரியாரின் கொள்கை சுடர்விட்டு ஒளிவிடத்தொடங்கியதும் அக்கொள்கை புதுவையில் பாவேந்தர் வழியாக அன்று இளைஞர்களாக இருந்து புதுவைச்சிவம் உள்ளிட்டவர்களைப் பற்றிக்கொண்டது.இளம் அகவையில் பாவேந்தரின் புதுவை முரசு இதழுக்கு புதுவைச்சிவம் ஆசிரியர் பொறுப்பு வகிக்கிறார்.ஆசிரியர் பணியில் இருந்த பாவேந்தர் தம் மாணவர்களின் ஒத்துழைப்புடன் புதுவை முரசு இதழை எதிர்ப்புகளுக்கும் இன்னல்களுக்கும் இடையில் நடத்துகிறார்.மத குருமார்களின் எதிர்ப்புக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆட்படும் இதழாகப் புதுவை முரசு விளங்கியது.புதுவை முரசு இதழில் வெளியிடும் கருத்துகள் யாவும் சீர்திருத்தம்,மதவாதிகளின் அழுக்கு வாழ்க்கை இவற்றைப் படம் பிடிப்பனவாக இருந்தன.1930-32 இல் வெளிவந்த புதுவை முரசில் புதுவைச்சிவம் எழுதிய "பாதிரியாரின் காமவெறி" என்ற கட்டுரை ஆத்திகர்களின் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளானது.இது பற்றிய செய்திகளைக் குடிஅரசு ஏட்டிலும் 15.05.1932 காணலாம்.

புதுவைச் சிவம் 1933 இல் பாவேந்தருடன் இணைந்து தொடங்கிய அறிவியக்கம் என்ற அமைப்பு பிரான்சு நாட்டில் தலைமையகத்தைக் கொண்டிருந்தது. பகுத்தறிவு ஊட்டுதல்,மதங்களைக் கண்டித்தல் முதலியன இதன் செயற்பாடுகளாகும்.இத்தகு அமைப்பு கட்டி சமூகப்போராட்டங்களில் ஈடுபடும் வல்லமை சிவத்திற்கு இளம் அகவையிலேயே அமைந்துள்ளது.

கவிதைகளும்,உரைநடையும் சமூக சீர்திருத்த எண்ணங்களை வெளிப்படுத்தும் வடிவாக இருந்ததுபோல் அந்நாளில் நாடகமும் மிகச்சிறந்த வடிவமாக இருந்தது.திரைப்படம் அதிகம் வெளிவராத சூழலில் நாடக முயற்சிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்துள்ளது.பக்தி நாடகங்கள் சமூகத்தில் மேம்பட்டு இருந்த காலகட்டத்தில் சமூகச்சீர்திருத்த நாடகங்களும் மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டன.

கலை இலக்கிய வளர்ச்சியை முன்னிலைப்படுத்திச் சிவம் பாவேந்தருடன் இணைந்து இலக்கியமன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.இலக்கியமன்றத்தின் தலையாயப் பணிகளுள் நாடகம் தயாரிப்பதும் ஒன்றாகும்.நாடகப்பயிற்சியினை உறுப்பினர்களுக்கு வழங்கி நாடகங்களை அரங்கேற்றுவது இம்மன்றத்தில் நடந்தது.ஒவ்வொரு நாளும் பாவேந்தர் இல்லத்தில் நாடக ஒத்திகை நடக்கும்.இதனைப் பயன்படுத்தி நாடகம் எழுதுவதில் நல்ல ஆற்றலை புதுவைச்சிவம் பெற்றார்.இவ்வகையில் பல நாடகங்களை இயற்றியுள்ளார். புதுவைச்சிவம் எழுதியுள்ள நாடகங்கள் மேடையில் பலமுறை நடிக்கப்பெற்றுள்ளன.சில நாடகப்படிகள் காலந்தோறும் செம்மை செய்யப்பட்டுள்ளதையும் அறியமுடிகிறது.எழுதி நடிக்கப்பெற்று,சில ஆண்டுகள் கழித்து அச்சான விவரங்களையும் அவரின் முன்னுரை வழி அறியமுடிகின்றது.நம் காலத்தில் வாழ்ந்த அறிஞர் ஒருவரின் படைப்புகளைக்கூட நம்மால் துல்லியாமாக வெளியிட இயலாத நிலையில் நம் வாழ்க்கைமுறை அமைந்துவிட்டது.


நாடக வடிவத்தைப் பயன்படுத்திப் புதுவைச்சிவம் மிகச்சிறந்த சமூக மேம்பாட்டுக் கருத்துகளை முன்வைத்துள்ளார். பகுத்தறிவு, பெண்கல்வி, விதவை மறுமணம், போலிச்சாமியார்களின் இழிசெயல்கள்,சாதி மறுப்பு,குடியரசு ஆட்சியின் மேன்மை, பக்திமான்களின் போலி கௌரவம்,வருணாசிர ஒழிப்பு ,காதல் திருமணங்கள் ஆதரிப்பு,சீர்திருத்த திருமணங்கள் வருகை இவற்றை ஆதரித்து நாடகங்களை எழுதியுள்ளார்.புதுவைச்சிவம் அவர்களின் நாடகங்களில் மிகச்சிறந்த மொழிநடையும் கற்பனையும் காணப்படுகின்றன.பாத்திரப்படைப்புகளும் பாத்திரங்களுக்குப் பெயரிடும் முறையும் நம்மை வியப்படையச் செய்கின்றன.

புதுவைச்சிவம் எழுதிய நாடகங்களை நம் ஆய்வு வசதிக்காக மேடைநாடகங்கள், குறுநாடகங்கள், காப்பிய நாடகங்கள்,செய்யுள் நாடகங்கள் என்று வகைப்படுத்திக்கொள்ளலாம். இவரின் நாடகங்களுக்கு உரிய பாடல்களை இவரே எழுதியுள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.அக்காலத்தில் வெளிவந்த திரைப்படங்களின் பாடல்கள்,புகழ்பெற்ற பாடல்களின் மெட்டுகள் என்ற அடிப்படையில் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.1935 இல் தொடங்கப்பட்ட இவரின் நாடக முயற்சி 1950 வரை உச்சநிலையில் இருந்துள்ளது.அதன் பிறகு நாடகத்தின் இடத்தைத் திரைப்படங்கள் பிடிக்கத் தொடங்கியதால் இவரின் நாடக முயற்சி அருகியிருக்கவேண்டும்.சிதைந்த வாழ்வு என்ற நாடக நூலுக்குச் சிவம் அவர்கள் எழுதிய முன்னுரையை(1951) நோக்கும்பொழுது அவர் நாடகத்துறையில் ஏன் கவனம் செலுத்தினார் என்பது விளங்கும்.

"ஒரு கொள்கையை மக்களிடையே பரவச் செய்வதற்கு எழுத்தும் பேச்சும் எவ்வளவு அவசியமோ,அவ்வளவு அவசிந்தான் நாடகமும் பாட்டும்.வீண் காலப்போக்கிற்காக ஏற்பட்டதல்ல.மக்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துவதற்குத் தொன்றுதொட்டுக் கையாண்டு வந்த முறையில்,நாடகமே தலை சிறந்ததாகும்.பேச்சாலும் எழுத்தாலும் கூறப்படும் கருத்துகளை நடித்துக்காட்டுவதன் மூல்ம் ஏற்படும் உணர்ச்சி,அப் பேச்சால்-எழுத்தால் ஏற்படும் உணர்ச்சியைவிட எவ்வகையிலும் குறைந்ததல்ல"என்கிறார்.

புதுவைச்சிவம் நாடகங்கள்

புதுவைச்சிவம் நாடகங்களில் சமூக நிகழ்வுகள் எதிரொலிக்கின்றன.கல்வியறிவில்லா சமூகத்தில் உள்ள மக்களிடம் காணப்படும் பகுத்தறிவின்மை மூடப்பழக்கவழக்கம் இவற்றைக் குறிப்பிடுவதுடன் சமூக முன்னேற்றத்திற்கான கருத்துகளையும் இவர் நாடகங்கள் முன்வைக்கின்றன.

சிவம் அவர்களின் நாடகங்களுள் மூன்று நாடகங்களை முன்வைத்து இக்கட்டுரை அமைகிறது.அவை 1.ரஞ்சித-சுந்தரா அல்லது ரகசியச் சுரங்கம்(1935),2.அமுதவல்லி அல்லது அடிமையின் வீழ்ச்சி(1937),3. கோகிலராணி(1939).

ரஞ்சித சுந்தரா என்ற நாடகத்தில் திராவிட இயக்கக் கருத்துகள் பேசப்பட்டுள்ளன.விதவை மறுமணம்,பெண்கல்வி,காதல் திருமணத்தின் சிறப்பு,சாதி மறுப்பு,சாமியார்களின் போலித்துறவு,குழந்தைமணம்,தமிழகத்தில் துளிர்விட்ட சீர்திருத்த அமைப்புகள் பற்றிய பல செய்திகளை இந்த நாடகம் முன்வைக்கிறது.அக்காலத்தில் புதுவை சார்ந்த பகுதிகளில் தெருக்கூத்தும்,பாரத,இராமாயணக்கதைகளும் பரவிக் கொண்டிருந்தது.புகழ்பெற்ற பல கூத்துகலைஞர்கள் புதுச்சேரிப் பகுதியில் வாழ்ந்துள்ளனர்.அவர்களின் போக்கில் சென்றிருந்தால் புதுவைச்சிவம் ஒரு புகழ்பெற்ற கலைஞராக விளங்கியிருக்கக்கூடும்.ஆனால் அவர்களின் நாடகம் யாவும் அறியாமையில் மூழ்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மேலும் அறியாமையைத் தந்துகொண்டிருக்க அவரின் நாடகம் பகுத்தறிவு பரப்பும் பணியில் செம்மாந்து நடந்துகொண்டிருந்தது.

ரகசியச்சுரங்கம் என்ற நாடகத்தில் மாணிக்கச் செட்டி என்பவனுக்கு இருமகள்.முதல் மகள் இளமையில் திருமணம் செய்துகொடுக்கப்பட்டு விதவையானவள்.அவள் பெயர் சௌந்தரம்.விதவை என்றாலும் ஆண் துணைக்கு ஏங்கும் பருவம் கொண்டவள்.அவள் சிங்காரம் என்ற வேறு சாதி ஆடவனோடு பழகுவதை அறிந்த அவள் தந்தை மாணிக்க செட்டி அவளை ஒரு மடத்தில் உள்ள சாமியாரிடம் அடைக்கலமாக அளிக்கிறான்.அந்தச் சாமியார் போலிச்சாமியார் ஆவான்.பல பெண்களின் வாழ்வைச் சீரழித்த அந்தச் சாமியார் சௌந்தரத்தின் வாழ்வையும் பாழாக்குகிறான்.சாமியாரால் கருவுற்றாள் சௌந்தரம்.சௌந்தரம் உயிருடன் இருந்தால் தமக்கு ஆபத்து என அறிந்த மடச்சாமியார் மாணிக்கச் செட்டியிடம் சொல்லி அவளுக்குப் பாலில் நஞ்சு கலந்துகொடுத்து கொல்லும்படி சொல்கிறான்.இந்தச் சூழ்ச்சியை அறிந்த சௌந்தரம் தன் தங்கையினுக்கு மடல் ஒன்று எழுதிவைத்துவிட்டு இறந்துவிடுகிறாள்.

கல்லூரியில் படிக்கும் தங்கையின் பெயர் ரஞ்சிதம்.இவள் சுந்தரம் என்ற தன்னுடன் பயிலும் மாணவனை விரும்புகிறாள்.இருவரும் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துகொள்ள நினைக்கின்றனர்.சுந்தரம் தாழ்ந்த சாதியில் பிறந்தவன் என்பதால் மாணிக்கம் செட்டி அந்தத் திருமணத்திற்கு உடன்படவில்லை.மாணிக்கம் செட்டியின் மைத்துனனுக்கு ரஞ்சிதத்தை இரண்டாம் தாரமாக மணம் முடிக்க நினைக்கின்றனர்.தன் அக்கா மடாதிபதியால் சீரழிக்கப்பட்டுள்ளாள் என்ற விவரம் ஒரு மடல் வழியாகத் தெரிகிறது.மடாதிபதியைப் பழிவாங்க நினைக்கிறாள்.மடாதிபதி ரஞ்சித்ததையும் சிறையெடுத்துச் செல்கிறான்.மாணிக்கம் செட்டியின் வீட்டிலிருந்த நகைகளையும் திருடிச் செல்கின்றான்.திருட்டுப்பழியைச் சுந்தரத்தின் மேல் போட்டு அவனைச் சிறையில் அடைக்கிறான்.மடச்சாமியார் பல பெண்களுடன் வாழ்ந்தவன்.சரோஜா என்ற தாசிக்கு மாணிக்கச்செட்டி வீட்டில் களவாடிய நகைகளைப்பூட்டி அழகு பார்த்தான்.மடாதிபதியால்தான் சுந்தரம் சிறைக்கு செல்ல நேர்ந்தது என்பதை உணர்ந்த சுந்தரத்தின் நண்பன் ஊமைச்சாமியாராக நடித்துப் போலிச்சாமியாரின் ஏமாற்றுகளை அறிந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ரஞ்சிதத்தை மீட்பதுடன் தன் நண்பன் சுந்தரம் சிறையிலிருந்து விடுதலை பெற உதவுகின்றான்.

திரைப்பட முறையில் நடக்கும் நாடகம் பல திருப்பங்களையும் புதிர்களையும் கொண்டுள்ளன.மடத்துச்சாமியார் பேசும்பொழுது சுயமரியாதைக்கார்ரர்களை இகழ்ந்து பேசுவது போலவும் வருணாசிரம நெறிகளுக்கு எதிராக இவர்கள் கலகம் விளைவிப்பதாகவும் சாமியார்கள் பேசிக்கொள்வதாக காட்சியில் அமைத்து அக்கால நிலைகளை நமக்கு எடுத்துரைக்கிறார்.அக்ரகார நடையை பொறுத்தமான இடங்களில் சிவம் படைத்துள்ளார்.பாத்திரத்தை அவர்களின் மொழிநடையில் படைத்துக்காட்டுவதில் வல்லவராகச் சிவம் விளங்கியுள்ளார்.சுயமரியாதைக்காரர்கள் பெருத்துவிட்டதால் திதி,திவசம்,கலியாணம்,கருமாதி,எழவு,அர்ச்சனை எதுவும் கிடைக்காமல் பார்ப்பனர்கள் தொல்லைப்படுவதாக அவர்களின் புலம்பலில் இருந்து அறியலாம்.

சுயமரியாதைக்கார இளைஞர்கள் சோசியம் பார்க்கவென ஐயர்களை அழைத்துச்சென்று இறந்தவர்களின் சோசியத்தைப் பார்க்கச்செய்து அவர்கள் சொல்லும் பரிகாரங்கள் எதிர்காலப்பலன்கள் நினைத்துச் சிரிப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது.திராவிட இயக்க உணர்வு தமிழகத்தில் தழைத்திருந்த தன்மையை இக்குறிப்புகள் காட்டுகின்றன.

மடாதிபதி ரஞ்சிதத்திடம பேசும்பொழுது அவன் சாதியுணர்வு மிக்கவனாகப் படைக்கப்பட்டுள்ளான்.சுயமரியாதைக்காரர்களின் அகம்பாவத்தை அடக்குவதற்கு யான் ஒருவன் இருக்கின்றேன் என்று செருக்குடன் பேசுவதிலிருந்து அக்கால வருணாசிரமவாதிகள் சுயமரியாதைக்காரர்கள் மேல் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சி புலப்படுகிறது.நாத்திக கருத்துகளைப் பரப்புவது அக்காலத்தில் கொடிய குற்றமாக கருதப்பட்டது.இதனை நீதி மன்றத்தில் ஒரு வழக்கறிஞர் கூற்றால் அறியலாம்." நீதிபதி அவர்களே! ... சுந்தரன் கௌரவமற்றவன்.இந்த ஊரில் நாஸ்திகத்தைப் பரப்ப முயற்சித்துக்கொண்டிருப்பவன். ஆகையால் இச் சுந்தரம் இது போன்ற காரியங்களைச் செய்வான் என்பதற்கு வேறு சாட்சியம் வேண்டுமோ?"(பக்.71-72)

பிறமொழிச் சொற்களை மிகுதியாகக் கலந்து எழுதுவதுதான் சிறந்த நடை எனக்கருத்தப்பட்ட அக்காலத்தில் அழகிய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி சிவம் தம் நாடகங்களை உணர்வோட்டமாக எழுதியுள்ளார்.உரையாடல் பாத்திரத்தின் வசனங்கள் யாவும் சிறப்பாக உள்ளன.

அமுதவல்லி அல்லது அடிமையின் வீழ்ச்சி(1937) என்ற நாடகம் முடியரசு வீழ்த்திக் குடியரசு சமைக்கும் ஓர் அறிய முயற்சிதான்.அரச குடும்பம் சார்ந்த கதையாக இது விளங்குகிறது.பாவேந்தரின் புரட்சிக்கவி(1937) போலும் இது ஒரு உரைநடைப் புரட்சிப் படைப்பேயாகும். குறுநில மன்னரின் மகன் குணசேகரன்.இவன் காதலி அமுதவல்லி.அமுதவல்லி தையற்காரனின் மகள்.இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.ஆனால் குறுநில மன்னர் தன் மகன் குணசேகரன் மிதுனபுரி குறுநில மன்னரின் மகள் இன்பவல்லியை மணக்க விரும்புகிறார்.குறுநில மன்னருக்கு மணியக்காரர் கணக்குப்பிள்ளை ஆகியோர் மக்களை வருத்தி வரி வாங்குன்றனர்.இவர்களுக்கு ஒத்தாசையாகச் சாத்திரி ஒருவரும் இணைந்துகொள்கிறார்.மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் அவர்களை வருத்தி வரி வாங்குவது குறுநில மன்னன் மகன் குணசேகரனுக்கும் விருப்பம் இல்லைதான்.

சாத்திரி குறுநில மன்னரிடம் இருந்து சூழ்ச்சியாகக் குணசேகரனைப் பிரித்து,மிதுனபுரிக்கு அனுப்பினால் இன்ப வல்லிக்கும் குணசேகரனுக்கும் இடையில் பழக்கம் ஏற்படும் என்று கூற அதன்படி குணசேகரன் மிதுனபுரி செல்கிறான்.இன்பவல்லியின் ஆசைக்கு இணங்காத குணசேகரன் அமுதவல்லி நினைவுடன் இருக்கிறான்.ஆனால் முகமூடி அணிந்து குறுநில மன்னர் அமுதவல்லியை இரவில் அரண்மனைக்குத் தூக்கிவந்து அவளை கொல்ல நினைக்கிறார்.பிறகு அவளை அடைய நினைக்கிறார்.அந்த நேரத்தில் முகமூடி அணிந்த வேறொருவன் வந்து அமுதவல்லியை மீட்டுச் செல்கிறான்.அமுதவல்லி உயிருடன் இருக்கும் வரை குணசேகரன் இன்பவல்லி திருமணம் நடக்காது என உணர்ந்த சமீன்தார் அமுதவல்லியின் தந்தையை மருட்டி உடன் அவளுக்குத் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யச் சொல்கிறான்.

இந்தச் சிக்கல் உணர்ந்த குணசேகரனின் நண்பன் வீரசேகரன் உள்ளிட்டவர்களின் முயற்சியால் திடுமென அமுதவல்லிக்கு வேறொருவனுடன் திருமணம் நடக்கிறது.அவ்வாறு திருமணம் செய்து கொள்பவன் வேங்கையூர் வியாபாரி ஆவான்.இந்த நிலையில் குறுநில மன்னரின் கொடிய ஆட்சி பொறுக்காத மக்கள் நாளைக்குப் போருக்கு ஆயத்தமாவதை ஒரு கடிதம் வழி அறிந்த குறுநில மன்னர் தாய் தன் மகன் குணசேகரன் தன்னுடன் இருக்க விரும்புகிறனர்.மக்களைக் கண்டு அவர்களுக்கு உரிமையுடன் கூடிய ஆட்சி கிடைக்கும் எனத் தெரிவத்ததும் மக்கள் மகிழ்ந்து குணசேகரனைக் குறுநில மன்னராக ஏற்றுக்கொண்டனர்.

இந்த நாடகத்தில் சீர்திருத்தச்சங்கம், உள்ளிட்ட அக்காலத்தில் இருந்த பகுத்தறிவு இயக்கப்பரவல் குறித்த தகவல்கள் பதிவாகியுள்ளன.மேலும் சாத்திரி போன்றவர்களின் உரையாடல் வழியாக பார்ப்பன பழைமைவாதிகள் தங்கள் ஆச்சர அனுபோகங்களை நிலைநாட்ட எத்தகு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதைக்காட்டும் ஆவணமாகவும் இந்த நாடகத்தைக் கருதலாம்.

"போச்சு! வைதீகம் போச்சு!மதம் போச்சு! சாஸ்திரம் போச்சு! பழக்க வழக்கம் எல்லாம் போச்சு!" என்று புலம்பும்பொழுது குறுநில மன்னன் "ஆமாம் நீங்களே சாராயம் குடித்தால்"என்று வினவுவது சாத்திரியாரின் போலி வாழ்க்கையை அறியமுடிகிறது.மேலும் சாஸ்திரியார்,
"இவ்வளவு தூரம் உங்கள் மகன் கெட்டுவிட்டதற்கு காரணம் என்ன தெரியுமா? தெற்குவீதியில் சீர்திருத்தச்சங்கம் என ஒன்று ஆரம்பித்து இருக்கிறார்கள்.அதுதான்!அப்பப்பா!அந்த சங்கத்தை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தினார்கள்.சாதி இல்லை என்கிறார்கள்.மதம் வேண்டாம் என்கிறார்கள்!பிரம்மா முகத்தில் பிறந்த எங்கள் பிராமணர் குலத்தையும் அல்லவா தூஷிக்கின்றார்கள்.இப்படிப்பட்ட சங்கத்திற்குத்தான் குணசேகரன் ஆதரவளித்து வருகின்றான்.(பக்.101)என்று தன் குலவழகத்திற்கு ஆபத்து விளைவிப்பவனாக குணசேகரனை உணர்ந்து சாத்திரியார் வாய்ப்பு வரும்பொழுதெல்லாம் அவனை நயவஞ்சகமாக அழிக்கப்பார்க்கின்றார்.

கோகிலராணி(1939) நாடகம் புதுவைச்சிவத்தின் படைப்புகளுள் புகழ்பெற்றது ஆகும்.1947 இல் இது அச்சில் வெளிவந்துள்ளது.தமிழகம்,புதுவை மட்டுமன்றி மலேசியா ஈப்போவிலும் இலங்கையிலும் அரங்கேறியுள்ளது.ஆரியச்சூழ்ச்சியை அடித்து நொறுக்கும் படைப்பாக இது உள்ளது.அரசியல் தெளிவும் கல்வி அறிவும் குறைந்த காலச்சசூழலில் இந்த நாடகம் சிவப்பிரகாசத்தால் மிகச்சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளமையை நினைக்கும் பொழுது இவரின் படைப்பாளுமை வெளிப்படுகிது. கொள்கை வழிப்பட்ட படைப்புகளை வழங்கிய இவர்தம் மன உறுதியைப் போற்றாமல் இருக்கமுடியாது.

சோழமண்டல அரசன் இளையராணியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பொழுது அவனுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. அமைச்சனின் சூழ்ச்சியாலும் அரசகுருவின் விருப்பின்படியும் அக்குழந்தை நாட்டில் இருந்தால் அரசாட்சி வீழும் அரசனுக்குப் பலவகையிலான துன்பங்கள் வரும் என்று பொய்ப் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.பிறந்த குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து வெள்ளாற்றில் விட்டுவிடுகின்றனர்.அக்குழந்தை தவப்பெண் ஒருத்தியின் பாதுகாப்பில் வளர்கிறான். வில்வித்தைகளில் வல்லவனாகிறான்.அவன்பெயர் வீரவர்மன் என்பதாகும். மலைநாட்டரசன் மகள் பூங்கொடியை அவன் விரும்புகிறான்.

சோழநாட்டுப்படைத்தளபதியாக இருப்பவன் சேனாபதி என்பவன்.அரசனுக்கு மிகச்சிறந்த பாதுகாவலனாக விளங்குபவன்.அவன் அரசனுடன் இருக்கும்வரை இந்த ராச்சியத்தைக் கைப்பற்ற முடியாது என அமைச்சன் சூழ்ச்சி செய்து அவன்மேல் குற்றம் சுமத்தி அவனைச்சிறையில் அடைத்துவிடுகிறான்.அவன் கையைத் துணிக்கவேண்டும் என்று தண்டனை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்கப்படுகிறது.ஆனால் அவன் அந்த தண்டனையிலிருந்து தப்புகிறான்.ஒருநாள் திடுமென சேத்தூர் சிற்றரசனின் துணையுடன் மந்திரி அரசனை சிறையில் அடைக்கிறான்.அப்பொழுது தவப்பெண் ஆலோசனையின்படி அரண்மனையில் புகுந்த கறுப்புடை அணிந்த படைமறவர்கள் மந்திரி உள்ளிட்டவர்களைச் சிறையில் அடைத்து அரசன் முதலியவர்களைச் சிறையிலிருந்து காப்பாற்றுகின்றனர்.

பின்னர்தான் அரசனுக்கு அமைச்சன்,பிரம்மகுரு இவர்களின் சூழ்ச்சி விளங்குகிறது.தான் ஏமாற்றப்பட்டமையை அரசன் உணர்கின்றான்.அதுபோல் அமைச்சன் முதலியோரின் சூழ்ச்சியால் முதல் மனைவியைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்ததும் தெரியவருகிறது.அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுத் துன்பவாழ்க்கை வாழ்ந்தவள்தான் பின்னாளில் தவப்பெண் வேடம் தரித்து தன் மகன் வீரவர்மனைக் காப்பாற்றியவள் என்று அரசன் உணர்கிறான்.அவள்தான் கோகிலராணி எனவும் அறிகிறான்.

கோகிலராணி அரண்மனையில் இருந்து வெளியேறியதற்கும் அமைச்சர், பிரம்மகுரு உள்ளிட்டவர்களே காரணம் என்பது நாடகத்தின் இறுதிப்பகுதியில் புதிராக விடுவிக்கப்படுகின்றது.கோகிலராணி பூப்பெய்திய காலம் சரியில்லை என்று கதை கட்டி,அதனால்தான் அவளுக்கு நான்காண்டுகளாகக் குழந்தை இல்லை எனக் கூறி அவள் இருந்தால் அரசன் உயிருக்கு ஆபத்து எனக்குறிப்பிட்டு அவள் வெளியேற்றப்பட்டாள் என்பது கதையின் புதிர்ப்பகுதியாக உள்ளது.கதை இயல்பாகவும் புதிர்கள் நிறைந்ததாகவும் புனையப்பட்டுள்ளது.கறுப்புடை மறவர்கள் திராவிடர்கழக இளைஞர்களைக் குறுப்பாக உணர்த்துவது ஆகும்.


ஆரியர்கள் நாள்,கோள்,விண்மீன்,இராகுகாலம்,எமகண்டம் ,தோழஷம் இவற்றைச் சொல்லித் தமிழ் மக்ககளிடம் அறியாமையைப் புகுத்தி உழைக்காமல் நயவஞ்சனையில் வாழ்பவர்கள் என்ற விவரம் இ ந்த நாடகத்தில் காட்டப்பட்டுள்ளது.பிரம்மகுரு என்ற பாத்திரமும்,மந்திரியும் கயமைக்குணம் கொண்ட ஆரியர்கள் என்ற அளவில் மிகச்சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உழைக்கும் மக்களை அவர்களின் சாதிப்பிரிவு காட்டியும் உழைப்பது அவர்களின் தலையெழுத்து எனவும் மக்களை நம்பச்சொய்து விதி,முன்னோர் வழி எப் பொய்க்காரணம் காட்டுவது நினைத்து சமூக மறுமலர்ச்சிக்கு இந்த நாடகத்தைச் சிவம் படைத்துள்ளார்.துணிச்சலும்.கொள்கை வழிப்பட்ட படைப்புணர்வும் கொண்டவர் புதுவைச்சிவம் என்பது அவர் நாடகத்தால் தெரியவருகின்றது.

17.07.2009 புதுவையில் சாகித்திய அகாதெமி சார்பில் நடைபெற்ற புதுவைச்சிவம் நூற்றாண்டு நிறைவுக் கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரை.

கருத்துகள் இல்லை: