நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 22 அக்டோபர், 2008

தமிழ்க்கடல் புலவர் இரா.இளங்குமரனார்


புலவர் இரா.இளங்குமரனார்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் தமிழ்க்கடல் இரா. இளங்குமரனார் குறிப்பிடத் தகுந்தவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராக விளங்கியவர். பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல முகங்களைப் பெற்றுத் தமிழுக்கு ஆக்கமான பல பணிகளைச் செய்துள்ளார். இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும் இலக்கண வரலாறு,தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம்,பாவாணர் வரலாறு, குண்டலகேசி, யாப்பருங்கலம்,புறத்திரட்டு,திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைபாடினியம், தேவநேயம் உள்ளிட்ட நூல்கள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு என்றும் நின்று அரண் சேர்க்கும்.திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட திரு. இளங்குமரனார் வாழும் வள்ளுவராகவே விளங்குபவர்.

திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்த நாள்போக எஞ்சியநாளெல்லாம் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் வரும் இவர்தம் தமிழ் வாழ்வை எளியேன் பலவாண்டு களாக உற்றுநோக்கி உவந்து வருபவன்.

யான் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் முதுகலைத் தமிழிலக்கியம் படித்து நிறைவுற்ற பிறகு ஓர் உறுதி மேற்கொண்டிருந்தேன்.முதுகலை பயின்ற பிறகு தமிழில் கற்கத் தகுவன நிறைய உள்ளன எனும் அறிவுத்தெளிவு பெற்றனன்.முதுகலை நிறைவுற்றதும் அறிஞர் யாரிடத்திலேனும் குருகுல முறையில் தமிழ் ஆராய நினைத்திருந்தேன். எங்கள் அன்பிற்குரிய பேராசிரியர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி அவர்களிடத்தில் அத்தகு தமிழ் வாழ்வை அமைக்கவும் அது அமையவில்லை எனில் அறிஞர் இரா.இளங்குமரனாரிடத்துத் தங்கி அடிப்பணி செய்து தமிழ் கற்கவும் நினைத்திருந்தேன்.

ஆனால் அவையெல்லாம் தகுதிகளாக இவ்வுலகியல் மாந்தர் நினையார் என நினைத்துக் கல்விக்கூடங்களில் படிக்கும்படி நேர்ந்தது.என்றாலும் இரண்டு அறிஞர்களிடமும் நெருங்கிப் பழகுவதை மேம்படுத்திக்கொண்டே வந்தேன். தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளியில் இரு முறை அறிஞர் இளங்குமரனாரைப் பார்த்திருந்தேன். எனினும் புதுவைப் பல்கலையில் படித்தபொழுது என் கெழுதகை நண்பர் அ.சந்திரசேகரனார் இல்லத்தில் நடைபெற்ற எளிய நிகழ்வு ஒன்றில் தான் இரா.இளங்குமரன் அவர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது.பின்னர் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த காலத்தில் திருச்சிராப் பள்ளியின் அருகில் தவச்சாலை உருவானதால் அங்கிருந்த மிகச்சிறந்த தமிழ் நூலகத்தை முழுமையாக்கப் பயன்படுத்தும் பேறு பெற்றேன்.ஐயா அவர்கள் தொட்டுப் பயன்படுத்திய
அத்தனை நூல்களையும் பார்த்தும்,படித்தும் பயன்கொண்டேன்.

செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, தமிழ்ப்பொழில், குறளியம் உள்ளிட்ட இதழ்களையும் பாவாணர் குறித்த நூல்கள் திருக்குறள் சார்ந்த பல நூல்கள், இலக்கணம், இலக்கியம் சார்ந்த பல நூல்களைப் பயன்படுத்தினேன். பாவேந்தரின் குயில் இதழ்கள் கற்று உவந்தேன்.என் ஆய்வு உருப்பெற உதவிய நூலகங்களில் பாவாணர் ஆராய்ச்சி நூலகம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.(அந்த நாளில் அங்கு நூலகராகப் பணி புரிந்த திரு.செந்தமிழாதன் என்னும் தென்மொழி அன்பரைக் குறிப்பிடுதல் பொருத்தம்.அவர் அருகிருந்த இலமனூர் ஊரினர்.அவர் ஐயா மேல் மிகுந்த மதிப்புக் கொண்டவர்.குயில் இதழ் தொகுப்பு உள்ளிட்ட நூல்கள் சிலவற்றை அவர் நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியதாக அறிந்தேன்.காரி,ஞாயிறு கிழமைகளில் என் வருகைக்காகக் காத்திருப்பார். தூயதமிழ் மாந்தியும் பெருஞ்சித்திரக் கடலுள் மூழ்கியபடியும்காவிரியாற்றில் இருவரும் கரையேறுவோம்.எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.அவருக்கு நம் ஐயா அவர்கள் இயன்ற வகைகளில் உதவி வந்தார்.அவர் இல்லத்திற்கு நான் ஒருமுறை சென்றுள்ளேன்.அன்பு ததும்பும் நெஞ்சினர்.)

ஐயா இரா.இளங்கமரனார் அவர்கள் பல நாள் என்னிடம் திறவியை வழங்கி நூலகத்தைப் பயன்படுத்தும்படி சொல்வார்கள். சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தபொழுது (1997-98) தமிழியல் ஆவணம் என்னும் திட்டப் பணிக்குத் தரவுகள் திரட்ட பாவாணர் நூலகத்தில் கிழமைக் கணக்கில் தங்கிப்படித்த பட்டறிவும் உண்டு.நூலகத்தைப் பயன்படுத்தியதோடு, ஐயா அவர்கள் ஊரில் இருந்தால் தமிழ் பற்றி உரையாடி மகிழ்வதும் உண்டு.தம் அயலூர்ச் செலவுகள் பற்றிக் குறிப்பிடுவதும் உண்டு.

ஐயா இரா.இளங்குமரனாரின் கையெழுத்தில் யான் மயங்கிக்கிடப்பேன். அடித்தல் திருத்தல் இல்லாமல் நிரல்பட இருக்கும்.அவர் எழுதி அடித்துத் திருத்தியதை யான் பார்த்ததில்லை. இரவில் கூட அறிவு உணர்வு எழுச்சியுற்றால் இருட்டில் தம் தலைமாட்டில் உள்ள கரிக்கோலால் தாளில் எழுதும் பழக்கம் உடையவர்.காலையில் வெளிச்சத்தில் எடுத்துப் பார்த்தால் அவை மிகச் செப்பாமான எழுத்துகளாக இருக்கும்.உள்ளத்தில் தெளிவு இருப்பதால் வெளிப்பாடும் தெளிவாக இருக்கும்.

எழுதுவதும் படிப்பதும் இவர்தம் இயல்பு.மிகச்சிறந்த நினைவாற்றல் உடையவர்.திருக்குறள் புலமைக்கு ஒப்புமை காட்ட முடியாது.இலக்கணத்தில் நுண்தேர்ச்சி.மருத்துவ அறிவு பெற்றவர்.சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார். தமிழ் மொழி, இன. நாட்டுப் பற்றில் முதன்மையானவர். தமிழீழ விடுதலையில் மிகுந்த நம்பிக்கை உடையவர்.உலக வரலாறுகள் கற்றவர்.

பாவாணர்,திரு.வி.க.வாழ்வியலை மிக உயர்வாக மதிப்பவர். மூத்த அறிவுடையோர் கேண்மையுடையவர். தமிழ்மான உணர்வும் தன்மான உணர்வும் நிரம்பப் பெற்றவர். மதியாதார், தலைவாசல் மிதியாதவர்.எளிய நிலையில் இருப்பவரிடத்தும் உள்ளன்புடன் பழகுவார். தமிழ் இலக்கியங்களைக் குறைத்து மதித்தவரையும், தமிழ்மொழியை இழித்தவரையும் பொங்கியெழுந்து சீறிப்பாய்ந்து எதிர்க்கும் மான மற வேங்கை.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாக இருந்தபொழுது யான் பதிப்பித்த விடுதலைப்போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் தன் வரலாறு என்னும் நூலுக்கு ஐயா அவர்கள் வரைந்த அணிந்துரை என்னை அறிஞர் உலகின் முன் மிகச்சிறப்பாக நிறுத்தியது. என்னை ஐயா அவர்கள் எந்த அளவில் தமிழுக்கு உழைப்பேன் என நம்பி எழுதினார்களோ அதற்கு ஒரு எள் மூக்களவும் குறைவில்லாமல் அவர்களின் நம்பிக்கை பொய்க்காதவனாக வளர்ந்து வருகிறேன்.அவர்தம் தமிழ் வாழ்க்கையைப் பதிந்து வைப்பதில் மகிழ்கிறேன்.


இலக்கியச்செம்மல் இரா.இளங்குமரனார் அவர்களின் தமிழ் வாழ்க்கை

இரா.இளங்குமரானார் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1930 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முப்பதாம் நாள் பிறந்தவர்.தந்தையார் படிக்கராமர்,தாய் வாழவந்தம்மையார். தந்தையாரிடம் இருந்த தமிழறிவு கணக்கு அறிவு மகனாரிடத்து நின்று நிலவியது. தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தம்மை ஆயத்தம் செய்து கொண்டு தம் பச்சிளம் பருவத்திலேயே 08.04.1946 இல் ஆசிரியர் பணிமேற்கொண்டார்.

பின்னர் தனியே தமிழ் கற்றுச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகப் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றிபெற்றார்(1951). பள்ளிப்பருவத்தில் சொற்பொழிவாற்றும் திறன் பெற்றிருந்த இரா.இளங்குமரனார் தம் பதினான்காம் அகவை முதல் பாடலியற்றும் திறன்பெற்றிருந்தார். இப்பயிற்சி பின்னாளில் குண்டலகேசி என்னும் காவியம் உருவாக வழிவகுத்தது. இக்காவியம் 1958 ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது.

மதுரை பாரதி புத்தக நிலையத்தின் வாயிலாகப் பல நூல்கள் வெளிவரத் தொடங்கின.பல ஆண்டுகளாகத் தமிழாசிரியர் பணிபுரிந்தாலும் இவர் விரும்பிச்செய்வது நூலாக்கப் பணிகளேயாகும்.பல்வேறு அமைப்புகளில் இணைந்தும் பணிபுரிந்துள்ளார். தமிழ்க்காப்புக் கழகச்செயலாளர், மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச்செயலாளர்,தேர்வுக்குழு அமைப்பாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துத் திறம்படப் பணிபுரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில காலம் அறிஞர் தமிழண்ணல் முயற்சியால் விருந்து பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

அறிஞர் இரா.இளங்குமரனார் அவர்களின் நூல்கள் யாவும் இதுபொழுது தமிழ்மண் இளவழகனார் அவர்கள் வழியாக மறுபதிப்பும் செம்பதிப்புமாக வெளிவந்துள்ளன.அயல்நாடுகள் பலசென்று தமிழ்ப்பொழிவு ஆற்றிய பெருமைக்கு உரியவர்.தமிழக அரசு இவர்தம் தமிழ்ப்பணியை மதித்துப் பல சிறப்புப் பரிசில்கள்,விருதுகளை வழங்கியுள்ளது. முனைவர் மு.தமிழ்க்குடிமகன், முனைவர் கா.காளிமுத்து உள்ளிட்ட அரசியல் சார்புற்ற தமிழ் அறிஞர்கள் இரா.இளங்குமரனாரைப் போற்றி மதித்தவர்கள். தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பவர்.

இவர் தம் தவச்சாலைக்கு அயலகத் தமிழர்கள் உறவினர்கள் போல் வந்து தங்கிச்செல்லும் வண்ணம் விருந்து மாளிகையாகவும் அதனைப் பராமரித்து வருகிறார்.

(இவர்தம் தமிழ் வாழ்வை மீண்டும் நினைவு கூர்வேன்.முழுமைப்படுத்தி வெளியிடுவேன்.)

4 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

தமிழ்ப்பற்றுள்ள ஒவ்வொரு தமிழரும்
கட்டாயம் பார்த்து,தெரிந்து,உணர்ந்து
இன்பமும் பெருமையும் அடைய வேண்டிய திருக்குறள் குடிலும்,
அங்குறையும் இன்றைய வள்ளுவராம்
அய்யா இளங்குமரானாரின் அன்பை
அனுபவிப்பதும் தங்கள் பேறாகக் கருத வேண்டும்.

Unknown சொன்னது…

நன்றி அய்யா,
அய்யாவைப் பற்றிய பதிவிற்கு நன்றி, அவரின் வாழ்க்கை தமிழர்களுக்கு பாடமாக அமையும், அதே போன்று தனியே ஒரு பதிவில் திருவள்ளுவர் தவச்சாலைப் பற்றியும் அதன் பணிகளைப்பற்றியும் விரிவாக இடவேண்டுகிறேன்.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

வணக்கம் ஐயா.

தமிழ்க் கடல், செந்தமிழ் அந்தணர் புலவர் ஐயா மதுரை இளங்குமரனார் அவர்களைப் பற்றிய பதிவைக் கண்டதில் பேருவகை அடைந்தேன்.

தமிழ்மறையாம் திருக்குறள் முழுவதும் தமிழாலே செய்யப்பட்டது; அதில் பிறமொழிக் கலப்பு துளியும் கிடையாது என்று நிறுவி தமிழ்மொழிக்கு மகுடம் சூட்டிய பேரறிஞர் புலவர் ஐயா அவர்கள்.

கடந்த 2007 நவம்பர் திங்களில் மலேசியாவுக்கு வந்திருந்த புலவர் ஐயாவுடன் நேரடியாகக் கலந்துரையாடும் மிகப்பெரிய பேற்றினை அடியேன் பெற்றேன். அதனை வாழ்நாள் பேறாகவே கருதுகிறேன்.

புலவர் ஐயா அவர்கள் எங்கள் பாரிட் புந்தார் என்னும் ஊரில் எழுச்சிப் பேருரையும் நிகழ்த்தினார்.

அதுமட்டுமின்றி, எங்கள் தமிழாசான், தமிழியல் ஆய்வறிஞர் இர.திருச்செல்வம் அவர்கள் அரும்பாடுபட்டு அணியப்படுத்தி எங்கள் தமிழியல் ஆய்வுக் களம் என்னும் தமிழியக்கம் வெளியீடு செய்த 'தனித்தமிழ் நாள்காட்டி 2008'ஐ புலவர் ஐயா தன்னுடைய திருக்கரத்தால் வெளியிட்டார்கள்.

உலகிலேயே இப்படியொரு நாள்காட்டியை உருவாக்கிய எங்களின் இயக்கத்திற்கும், ஐயா.இர.திருச்செல்வனாருக்கும் மற்றுள்ள தமிழ்ப் பற்றாளர்கள் அனைவருக்கும் இதுவொரு மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்தது.

அப்போது, நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழன்பர்கள் பெரும்பாலோர் புலவர் ஐயா அவர்களின் திருவடி வணங்கி நல்லாசி பெற்ற காட்சி பலரையும் நெகிழ வைத்தது.

இத்தனை அகவையிலும் புலவர் ஐயா அவர்கள் மூன்றாவது மாடியில் செயல்படும் எங்கள் இயக்கத்தின் பணிமனைக் கட்டடத்தில் மிக உற்சாகத்தோடு மேலேறி வந்ததைக் கண்டு நாங்கள் அனைவரும் வியந்து போனோம்.

அந்த வியப்பு அடங்கும் முன்னே, அன்றைய இரவே வேரொரு அரங்கில் இரண்டு மணி நேரம் நின்றுகொண்டே மிகவும் தெம்போடும் உணர்வுப் பெருக்கோடும் பேருரை ஆற்றி அனைவரையும் திக்கு முக்காட வைத்துவிட்டார் புலவர் ஐயா.

இதற்கு முன்னர், 1997ஆம் ஆண்டில் புலவர் ஐயா இங்கே வந்திருக்கிறார்கள். அப்போதும்கூட பல ஊர்களில் தமிழ் எழுச்சிப் பேருரை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புலவர் ஐயா அவர்கள் நிலையான உடல்நலத்தோடும் நீடித்த ஆயுளோடும் வாழ்வாங்கு வாழ்திட இறைமைப் பேரருள் துணைசெய்ய வேண்டுகிறேன்.

சுந்தரவடிவேல் சொன்னது…

விளக்கமான இடுகைக்கு நன்றி! அய்யா அவர்களைக் குறித்த ஆவணப்படத்தைப் பற்றிய சிறு குறிப்பு இங்கே:
http://sundaravadivel.blogspot.com/2008/11/blog-post_13.html