நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 21 அக்டோபர், 2008

தனித்தமிழ் அரிமா புலவர் கி.த.பச்சையப்பனார்


புலவர் கி.த.பச்சையப்பனார்

 மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர்களின் தமிழ்க் கனவைச் செயல்வழி மெய்ப்பித்தவர் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் ஆவார்.

 ஆம். தமிழ் ஓசை நாளேடு, மக்கள் தொலைக்காட்சி இவற்றின் வழியாகத் தமிழ் மொழிக்கும் தமிழ்ப்பண்பாட்டிற்கும் இவர் ஆற்றும் பணிகளை இவர்தம் அரசியல் எதிரிகள்கூட நன்றியுடன் போற்றுவது உண்டு.

 இந்த ஊடகங்களில் தமிழ் மணப்பதற்கு அடிப்படைக் காரணமாக விளங்குபவர்களுள் புலவர் கி.த.பச்சையப்பன் அவர்கள் தலையாயவர். மொழிநடை ஆசிரியர் என்னும் பொறுப்பளிக்கப்பட்டு மொழிச்செப்பம் அமையத் தமிழ் ஓசை நாளேட்டில் பணிபுரிபவர்.

 அண்மையில் சென்னையில் நெஞ்சுவலி நோய்க்கு ஆட்பட்ட புலவர் கி.த.பச்சையப்பனார் அவர்கள் முறையான பண்டுவத்திற்குப் பிறகு உறவினரின் திருமணத்தின் பொருட்டுப் புதுச்சேரி வந்திருந்தார்.

 அவர் வருகையை அறிந்து நானும் எழுத்தாளர்கள் திரு.மகரந்தன், திரு.சீனு.தமிழ்மணி ஆகியோரும் 32, மேட்டுத்தெரு, குயவர்பாளையம் என்னும் முகவரியில் உள்ள அவர்தம் உறவினரின் இல்லத்திற்குச் சென்று புலவர் அவர்களை நலம் வினவி மீண்டோம்(20.10.2008 இரவு 8-9).

 எங்களைக் கண்டதும் தம் போராட்ட வாழ்க்கையை மெல்ல அசைபோட்டார். நெஞ்சுவலி நோய் (மாரடைப்பு) தாக்குவதற்கு முன்நாள் அறிஞர் ஆனைமுத்து அவர்களின் சிந்தனையாளன் அலுவலகத்தில் இதழ்ப்பணிகளில் புலவர் பெருமகனார் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு வரை அப்பணி நீண்டது. அதன் காரணமாக அக்கொடிய நோயின் பிடியில் சிக்கினார். முறையான மருத்துவ ஆய்வுகளுக்குப் பிறகு அந்நோய்ப் பிடியிலிருந்து மீண்டார்.

 புலவர் கி.த.ப.அவர்களை முழுமையான ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். புயலைக் குடுவையில் அடக்கமுடியுமா?

ஆம்.

 நம் புலவர் அவர்கள் காலையில் புதுச்சேரியில் இருப்பார். பகலில் சென்னையில் போராட்டத்தில் இருப்பார். மறுநாள் கன்னியாகுமரியில் உண்ணாநோன்பில் தலைமை ஏற்பார். மறுநாள் தஞ்சையில் தமிழ்வழிக் கல்விக்குக் குரல் கொடுத்துப் பேசுவார். அந்த அளவு பம்பரமாகச் செய்பட்டவர்.

 இளமையில் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து பணிபுரிந்தவர். மயிலம் தமிழ்க்கல்லூரியில் தமிழ் கற்ற பெரும்புலமையாளர். தமிழாசிரியராகப் பல பள்ளிகளில் பணிபுரிந்தவர். புதுச்சேரி இந்தியாவுடன் இணையப் போராடி அடிபட்டவர். பிறப்பிலேயே வீரமும் தமிழ்ப்பற்றும், போராட்டக் குணமும் அமையப்பெற்ற நம் புலவர் அவர்கள் தமிழகத் தமிழாசிரியர் கழகம், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளில் தலைமை தாங்கிப் பணிபுரிபவர்.

 ஈழத்து மக்களுக்குக் குரல்கொடுப்பவர். தமிழியக்கம் என்னும் இதழின் ஆசிரியராகப் பணிபுரிபவர். 23.10.1935 இல் புதுச்சேரியில் கி.தங்கவேல், தனம் அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்த புலவர் அவர்கள் புதுச்சேரி கலவைக் கல்லூரியில் பயின்றவர். அண்ணாமலைப் பல்கலையில் ஓராண்டு பயின்றவர். தம் அரசியல் ஈடுபாட்டால் அப் படிப்பை இடையில் விட்டவர்.

 மயிலம் கல்லூரிப் படிப்பிற்குப் (1955-59) பிறகு அரக்கோணம் ,செங்கழுநீர்ப்பட்டு, சென்னை உள்ளிட்ட ஊர்களில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து தமிழ், பொதுவுடைமை, பகுத்தறிவு, திராவிட இயக்க உணர்வை மாணவர்களுக்கு ஊட்டி வளர்த்தவர். புலவர் பெருமான் முழு உடல்நலம் பெற்று மீண்டும் தமிழ்ப்பணிக்குத் திரும்ப அன்புடன் அழைக்கின்றோம்.

2 கருத்துகள்:

S.Lankeswaran சொன்னது…

புலவர் பெருமான் முழு உடல்நலம் பெற்று மீண்டும் தமிழ்ப்பணி செய்ய எல்லாம் வல்ல இறைவனை எமது வவுனியா தமிழ் வலைப்பதிவு சார்பாகவும் பிரார்த்திக்கின்றோம்.

தமிழினியன் சொன்னது…

இந்த ஆண்டு புலவருடன் சிந்தானையாளன் பொங்கல் மலர் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது அவருடன் தொடர்ச்சியாக ஒரு வார காலம் பணியாற்றிய போது அவரது மொழிப்புலமை வியக்க வைத்தது. தோழர்கள் வட்டாரத்தில் இன்றும் அவர் பெயர் இளைஞர்... அதற்கேற்றபடி சுற்றியிருக்கும் பலரை விடவும் சுறுசுறுப்பாகச் செயல்படக்கூடியவர்.