முனைவர் சுப.திண்ணப்பன் அவர்கள்
உலக நாடுகளை எப்பொழுதும் வியப்பில் ஆழ்த்தும்படி மிகச்சிறந்த முன்னேற்றம் கண்டுள்ள நாடு சிங்கப்பூர் ஆகும். இந்த நாடு பரப்பளவில் மிகச் சிறியது. பல இன மக்களை உள்ளடக்கிய நாடு.தமிழ்,ஆங்கிலம், மலாய், சீன மொழிகள் இங்கு ஆட்சி மொழிகளாக உள்ளன. தமிழகத்துடன் மொழி, இன, பண்பாட்டு அடிப்படையில் மிக நெருங்கிய தொடர்புகொண்டுள்ளது.
தமிழர்கள் நெடுங்காலமாகச் சிங்கப்பூரில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. தமிழவேள் கோ. சாரங்கபாணி உள்ளிட்ட தலைவர்கள் சிங்கப்பூரில் வாழ்ந்து தமிழர்களின் முன்னேற்றத்திற்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பாடுப்பட்டுள்ளனர். அரசியல் துறையில் உரிய முக்கியத்துவத்தைத் தமிழர்கள் பெற்று இன்று வாழ்வாங்கு வாழ்ந்து வரும் நாடு சிங்கப்பூர் எனில் மிகையன்று.
சிங்கபூரில் தமிழ் மக்கள் மிகுதியாக இருப்பதால் தமிழ்க்கல்வி அவர்களுக்குக் கிடைக்கத் தமிழாசிரியர்கள் தேவைப்பட்டனர்.அரசு உரியவகையில் தமிழாசிரியர்களைப் பணியில் அமர்த்தித் தமிழ்க்கல்விக்கு இன்று உதவி வருகிறது. தமிழகத்திலிருந்து தமிழாசிரியர்கள் சென்ற நிலைமாறி இன்று சிங்கப்பூர் தமிழர்களே தமிழாசிரியர்களாகப் பணிபுரியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்க்கல்வி பயிற்றுவிக்கும் பணிக்குச் சென்றவர்களுள் பேராசிரியர் திண்ணப்பன் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர். சிங்கப்பூர் கல்வி வரலாற்றை எழுதும்பொழுதும், தமிழ்க்கல்வி, தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி எழுதும்பொழுதும் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களின் பெயர் கட்டாயம் இடம்பெறும். அந்த அளவு சுப.திண்ணப்பன் அவர்கள் சிங்கப்பூர் தமிழ்க்கல்வி வளர்ச்சியுடன் தொடர்புடையவர். இவரிடம் தமிழர்களும், தமிழரல்லாத பிற மொழியினரும் கல்வி கற்றுள்ளனர்.
சிங்கப்பூர் கல்வியமைச்சின் மொழி சார்ந்த பல அமைப்புகளில் இருந்து கடமையாற்றியவர். உலகெங்கம் பரவி வாழும் தமிழர்களும் தாயகத் தமிழர்களும் சிங்கப்பூரைப் பற்றி நினைக்கும் பொழுது சுப.திண்ணப்பன் அவர்களைப் பற்றி கட்டாயம் நினைத்துப் பார்ப்பார்கள்.சுருக்கமாகச் சொன்னால் கால் நூற்றாண்டுக் காலமாக ஒன்றாம் வகுப்பு முதல் முனைவர் பட்ட ஆய்வுகள் வரை தமிழில் கல்வி அமைவதற்குரிய பாடத்திட்டங்கள்,கல்வி நிறுவன வளர்ச்சிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்களுக்குப் பங்களிப்பு உண்டு.
சுப.திண்ணப்பன் அவர்கள் தமிழகத்தில் உள்ள தேவகோட்டையில் 19.06.1935 பிறந்தவர். பெற்றோர் சுப்பிரமணியன் செட்டியார், ஆனந்தவல்லி. பெற்ற அன்னையாரின் முகம் கறுப்பா? சிவப்பா என அறியமுடியாத இளமைப்பருவத்தில் அன்னையார் இயற்கை எய்தினார். உறவினர்களின் அரவணைப்பில் திண்ணப்பக் குழந்தை வளர்ந்தது. திருவாரூர், கொரடாச் சேரி, திருக்காட்டுப்பள்ளி(சிவசாமி ஐயர் பள்ளி)யில் படித்தவர். பள்ளியிறுதி வகுப்பில் தமிழில் முதல்பரிசு பெற்றவர்.
பின்னர் அழகப்பர் கல்லூரியில் இண்டர்மீடியட் என்னும் வகுப்பில் பேராசிரியர் வ.சுப. மாணிக்கம் அவர்களிடம் பயின்றவர்.இளங்கலைப் பட்டம் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றவர். அறிஞர் மு.வரதராசனார் இவரின் ஆசிரியர்.எம்.லிட் பட்டத்தை அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் அவர்கள் மேற்பார்வையில் பெற்றவர்.முனைவர் பட்ட ஆய்வை முனைவர் ச.அகதியலிங்கத்திடம் மேற்கொண்டவர். இவருக்குப் பயிற்றுவித்த அறிஞர்கள் நால்வரும் துணைவேந்தர்களாக விளங்கிய பெருமைக்குரியவர்கள்.
திருவாரூரில் பள்ளிப்படிப்பு படிக்கும்பொழுது கலைஞர் கருணாநிதி அவர்களின் தமிழ் உணர்வுசான்ற பேச்சைக்கேட்டுத் தமிழ் உணர்வுபெற்றவர். அறிஞர் மு.வ.அவர்களிடம் படிக்கவேண்டும் என்ற விருப்பத்தில் பச்சையப்பனில் சேர்ந்து படித்தார். பச்சையப்பன் கல்லூரியில் படிக்க சேர்ந்த ஒருவாரத்தில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. அறிஞர் மு.வ.அவர்களுடன் முதல் சந்திப்புத் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்றதாகும்.
தமிழ், ஆங்கிலம், மலாய், இந்தி, சமற்கிருதம் அறிந்தவர். இளங்கலை(சிறப்பு), முதுகலை, எம்.லிட், முனைவர் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். முனைவர் பட்டத்திற்காகச் சீவகசிந்தாமணியை ஆய்வு செய்தவர். மொழியியலில் சான்றிதழ் பெற்றவர்.
அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியில் தமிழ் உரையாளராக1960 இல் பணியைத் தொடங்கிய திண்ணப்பன் அவர்கள் 1967 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றவர். பின்னர் மொழியியல் துறையில் இணைப்பேராசிரியராகப் பணிபுரிந்தவர். மலேசியா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இந்தியவியல் துறையில் விரிவுரையாளராகப் பணியேற்றவர்(1973). முனைவர் இரா.தண்டாயுதம் அவர்களும் அப்பொழுது மலேசியாவில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.
திண்ணப்பன் அவர்கள் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வந்து பணியாற்றிவிட்டு, மலேசியப் பல்லகலைக்கழகப் பணிக்குச் சென்றவர். அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்களும் இவர்களுடன் மலேசியாவிற்குப் பணிபுரியச் சென்றவர்கள். 1982 முதல் சிங்கப்பூரில் பணியாற்றத் தொடங்கினார். விரிவுரையாளராகச் சிங்கப்பூரில் பணியைத் தொடங்கிப் பின்னர்ப் பேராசிரியர், துறைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், SIM பல்கலைக்கழகம் ஆகியவற்றில் திண்ணப்பனின் பணி அமைந்தது. இவ்வாறு ஒருநாட்டின் மிகப்பெரிய மூன்று பல்கலைக் கழங்கங்களில் ஒருசேரப் பணியாற்றும் வாய்ப்பு ஒரு சிலருக்கே அமையும்.
முனைவர் சுப.திண்ணப்பனின் வேறொரு தோற்றம்
சிங்கப்பூரில் பணிபுரிந்தபொழுது இலண்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கீழையியல் மற்றும் தென்னாப்பிரிக்க ஆய்வியல் பகுதியில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர் பணிபுரிந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.
அமெரிக்க அறிஞர் சார்ச்சு கார்ட்டு உள்ளிட்டவர்களுடன் பழகும் வாய்ப்பு நம் பேராசிரியருக்கு அமைந்தது. அமெரிக்காவில் தமிழாய்வு நடைபெறும் பென்சில்வேனியா, சிக்காக்கோ உள்ளிட்ட இடங்களுக்கெல்லாம் சென்று உரையாற்றி மீண்டவர். பிரான்சு சென்று பாரிசில் அறிஞர் குரோ அவர்களின் கல்வி நிறுவனத்திலும் உரையாற்றியவர். ஆத்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று வந்தவர்.
சிங்கப்பூர் கல்விசார் உயர் குழுக்களில் பல ஆண்டுகள் பொறுப்பேற்றுத் திறம்படப் பணிபுரிந்த திண்ணப்பன் அவர்கள் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்தல், தமிழரல்லாத மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்தலில் எழும் சிக்கல்களை விளக்கி வரைந்த ஆய்வுக் கட்டுரைகள் புதிய பல தகவல்களைக் கொண்டுள்ளன.சமய இலக்கியங்களில் திண்ணப்பன் அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.குறிப்பாகச் சைவ இலக்கியங்களில் நல்ல பயிற்சியுடை யவர். வைணவம் சார்ந்த பல கட்டுரைகளையும் வரைந்துள்ளார்.
மலேசியாவில் இவர் கல்விப்பணியாற்றியபொழுது அருள்நெறித் திருக்கூட்டம் என்ற அமைப்பின் சார்பில் இவர் மூன்றாண்டுகள் பெரியபுராணம் வகுப்பெடுத்துச் சமயப்பணி யாற்றியவர். சைவசித்தாந்தம் உள்ளிட்ட நூல்களைப் பாடமாக நடத்தியவர். பினாங்கு உள்ளிட்ட நகரப்பகுதிகளில் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்தியவர்.
சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும்,தமிழ் மாணவர்கள் உருவாவதற்கும் திண்ணப்பன் காரணமாக விளங்கியவர். இவர்தம் உரைகள், கருத்துகள் ஆய்வுகள் சிங்கப்பூர் நாளிதழ், வானொலி,தொலைக்காட்சிகளின் வழி சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு நன்கு அறிமுகமாயின. சிங்கப்பூரில் வெளிவந்துள்ள நூல்கள் பலவற்றிற்குத் திண்ணப்பன் அவர்களின் அழகிய அணிந்துரை ஒன்று கட்டாயம் இருக்கும்.
பல திருமுறை மாநாடுகள் நடைபெறவும், அது தொடர்பிலான கருத்தரங்குகள் நடைபெறவும் திண்ணபன் காரணமாக விளங்கியவர். இவர் மேற்பார்வையில் சிங்கப்பூரில் இதுவரை நால்வர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழில் ஆய்வேடு எழுதி முனைவர் பட்டம்பெறலாம் என்ற நிலையைச் சிங்கப்பூரில் ஏற்படுத்தியவர் திண்ணப்பன். இதற்காக நூற்றுக்கணக்கான மடல்களைச் சிங்கப்பூர் அரசுக்கு எழுதி இசைவு பெற்றவர். இவ்வகையில் இவர் மாணவர்களுள் முனைவர் ஆ.இரா. சிவகுமாரன், முனைவர் இராமையா, முனைவர் தியாகராசன், முனைவர் சீதாலெட்சுமி ஆகியோர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவர்களின் ஆய்வேடுகள் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச்சி, சிங்கப்பூர் கல்வி வரலாறு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் முன்னோடி இலக்கியமான சிங்கைநகர் அந்தாதி, குதிரைப்பந்தய லாவணி உள்ளிட்ட நூல்கள் பற்றிய திறனாய்வுகள், ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர் திண்ணப்பன். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் நவீன சிங்கப்பூர் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பணிகளை விரிவாக ஆய்ந்து எழுதிப் பதிவு செய்துள்ளார். ஏனெனில் சிங்கப்பூரில் 500 -க்கும் மேற்பட்ட நகரத்தார் குடும்பங்கள் உள்ளனர். இவர்கள் வணிகம், வேலைவாய்ப்புக்குச் சென்றவர்கள். கல்வி, தொழில்நுட்பம், சமயம், கலை, பண்பாடு, தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு உதவிய பாங்கினை விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளார்.
தமிழ் அர்ச்சனைகள் பற்றியும், திருக்குறள் பற்றியும் இவர் எழுதிய கட்டுரைகள் சிறப்பிற்கு உரியன.
அச்சு இதழ்களில் எழுதுவதுடன் மின்னிதழ்களிலும் எழுதிவருகிறார். திண்ணப்பன் தனித்தும் தம் உடன் பணியாற்றுபவர்களுடனும் இணைந்து பல நூல்களை எழுதியுள்ளார்.அந்நூல்கள் யாவும் சிங்கப்பூர் தமிழ்க்கல்வி, தமிழ்இலக்கியம் பற்றியனவாகும். அவ்வகையில் பேராசிரியர் திண்ணப்பன் அவர்கள் எழுதிய நூல்களுள் சிங்கப்பூரில் தமிழ்மொழியும், இலக்கியமும், கணினியும் தமிழ் கற்பித்தலும் உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தகுந்தன.
சிங்கப்பூர் தமிழ் இலக்கியவளர்ச்சி பற்றி அறிய உதவும் நூல்
கணினியை அறிமுகப்படுத்தும் பேராசிரியரின் அரிய நூல்
சிங்கப்பூர் சித்திரக்கவிகள் பற்றிய திண்ணப்பனின் அறிமுகக் கட்டுரைச் சிங்கப்பூரில் பாடப்படும் தமிழ் யாப்பில் சவாலான சித்திரக்கவி பற்றி எடுத்துரைக்கிறது. தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களைப் பற்றி இவர் சென்னையில் திராவிடர்கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அரிய பெருமைக்கு உரிய உரையாற்றினார்.
சிங்கப்பூரில் தொடக்க,உயர்நிலை,மேநிலைப்பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள பல குறுவட்டுகள் உருவாக மொழியறிஞராக இருந்து பணிபுரிந்துள்ளார். தமிழகத்துப் பல்கலைக் கழகங்களுடன் நல்ல தொடர்பில் உள்ள முனைவர் திண்ணப்பன் இங்கிருந்து அனுப்பப்படும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை - ஏறத்தாழ இருநூறு ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் செயல்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் அவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பொறுப்பில் உள்ளவர்.இப்பொழுது சிம் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியாக உள்ளார். மதியுரை ஞராக இருந்து பட்டப்படிப்புக்கு உரிய பாடத்திட்டங்கள் வகுத்தவர்.அறிஞர் தமிழண்ணல் இப்பணிகளுக்கு உறுதுணையாகி இருந்தவர். சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ் இலக்கிய நிகழ்வுகள்,நூல்வெளியீட்டு விழாக்கள் திண்ணப்பன் தலைமையால் பொலிவுபெறும்.
கடல்கடந்து சென்று கன்னித்தமிழ் வளர்க்கும் பேராசிரியர் திண்ணப்பன் அவர்கள் சிங்கப்பூர் குடியுரிமைபெற்று அங்கு வாழ்ந்து வருகின்றார். இவரைத் தமிழ் மக்கள் என்றும் நன்றியுடன் போற்றுவர்.
தமிழ் ஓசை,களஞ்சியம்,(அயலகத் தமிழறிஞர்கள் தொடர்)12.10.2008,சென்னை.
முனைவர் பொற்கோ,மேனாள் துணைவேந்தர்,சென்னைப் பல்கலைக்கழகம்.
முனைவர் ஆ.இரா.சிவகுமாரன், தமிழ்ப்பேராசிரியர், சிங்கப்பூர்.
முனைவர் ஒப்பிலா.மதிவாணன், சென்னைப் பல்கலைக்கழகம்.
முனைவர் பொற்கோ,மேனாள் துணைவேந்தர்,சென்னைப் பல்கலைக்கழகம்.
முனைவர் ஆ.இரா.சிவகுமாரன், தமிழ்ப்பேராசிரியர், சிங்கப்பூர்.
முனைவர் ஒப்பிலா.மதிவாணன், சென்னைப் பல்கலைக்கழகம்.
6 கருத்துகள்:
மிகவும் அருமையாக கட்டுரை. பேராசிரியரின் சேவைகள் தொடரட்டும். தமிழ் வளரட்டும்.
இவரைப் பற்றி தொலைக்காட்சி மற்றும் வானொலியில் கேட்டிருக்கேன்,கேள்விப்படாத தகவல்களை கொடுத்ததற்கு மிக்க நன்றி.
தமிழ்ப்பேராசிரியர்களைப் போற்றும் நுமது முயற்சி தொடர்க.திண்ணப்பனார்
அயர்விலா உழைப்புக்கும் அருந்தமிழ் மரபு காப்பதற்கும் எடுத்துக்காட்டாக இன்று விளங்கும் பேராசான்.அவர் நீடு வாழ்க.
மிக அரிதானவர்களே செய்யும் பணியைத் தாங்கள் மேற்கொண்டு வருகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
அன்பிற்குரிய நண்பரே வணக்கம். கட்டுரை அருமை. பேராசிரியரைப் பற்றி நல்ல அறிமுகம். ஒரு மகிழ்வான செய்தி. அய்யா படித்த திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளியில்தான் நானும் படித்தேன்.
அன்பிற்குரிய நண்பரே வணக்கம். கட்டுரை அருமை. பேராசிரியரைப் பற்றி நல்ல அறிமுகம். ஒரு மகிழ்வான செய்தி. அய்யா படித்த திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளியில்தான் நானும் படித்தேன்.
கருத்துரையிடுக