நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 24 ஜூலை, 2008

சங்கநூற் சொல்லடியம் கண்ட மருதூர் முனைவர் பே.க.வேலாயுதம் அவர்கள்

<
மருதூர் முனைவர் பே.க.வேலாயுதம் அவர்கள் (11.07.1938)

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யான் முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்த பொழுது (1993-97) எனக்குப் பழகுவதற்குக் கிடைத்த அறிஞர்களுள் பேராசிரியர் பே.க.வேலாயுதம் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர். என் பிறந்த ஊர் செல்லும் பொழுதெல்லாம் அவர்தம் தமையனார் பேராசிரியர் மருதூர் இளங்கண்ணனார் அவர்களுடன் நான் நெருங்கிப் பழகியவன். அது பொழுதில் தம் இளவல் திருச்சிராப்பள்ளியில் பேராசிரியர் பணிபுரிவதையும் அவருடன் தொடர்புகொள்ளும்படியும் என்னைப் பணித்திருந்தார் மருதூர் இளங்கண்ணனார். பல நாள் காண நினைத்தும் எங்கள் சந்திப்பு நிகழாமல் இருந்தது.

ஒருநாள் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கு தொடர்பில் தமிழியல்துறைக்குப் பே.க.வேலாயுதனார் வந்தார்.வரும் வழியில் எதிர்ப்பட்ட என்னிடம் என்னைப் பற்றி வினவினார். அவர்கள் தேடி வந்த ஆள் நான் என்பது அறிந்ததும் அளவிலா மகிழ்ச்சியுற்றார். அண்ணன் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் எனக்குக் கட்டளையிட்ட வண்ணம் அவருக்கும் கட்டளையிட்டிருந்ததால் மருதூர் வேலாயுதனார் என்னைக் காண வந்திருந்தார். அன்று முதல் கொண்ட நட்பு நாளை வரை வளர்பிறைபோல் வளர்ந்து வருகிறது.

அந்தக் கிழமையே திருச்சிராப்பள்ளி கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்திருந்த வேலாயுதனார் இல்லம் சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவர்களின் நட்பு கிடைத்த பிறகே திருச்சியில் வாழ்ந்த பல பேராசிரியர்கள் எனக்குப் பழக்கமானார்கள். இவ்வகையில் முனைவர் கு.திருமாறன், பேராசிரியர் திருஞானம்,பேராசிரியர் சி.மெய்கண்டான், அறிஞர் வீ.ப.கா.சுந்தரனார், தமிழ்த்தந்தி சிவலிங்கனார்,முனைவர் சக்திவேல், முனைவர் ச.நாகராசன் உள்ளிட்டவர்களின் தொடர்பு அமைந்தமை நினைத்து மகிழ்கிறேன்.

ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் பே.க.வேலாயுதனாரின் வீட்டு மாடியில் எங்கள் உரையாடல் அமையும்.அங்கு வருபவர்களில் யானே அகவை குறைந்தவன்.அவர்கள் என்னையும் இணைத்துக்கொண்டு பல பொருள் பற்றி உரையாடுவார்கள். சிலநாள் என் நாட்டுப்புறப் பாடல்கள் அரங்கேறும். சில நாள் தமிழ்த்தந்தி சிவலிங்கனார் அவர்கள் கரைநாட்டு இசை வழங்குவார். உரையிடையிட்ட பாட்டாக எங்கள் சந்திப்பு அமைந்தது.

தமிழ்த்தந்தி அவர்களை நம் வீ.ப.கா.சுந்தரம் ஒரு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கச் சொல்லி, அவர் இசைபற்றி உரையாற்றினார் என்றால் தமிழ்த் தந்தியின் இசையறிவை நீங்கள் ஒருவாறு உணரலாம்.தமிழ்த்தந்தி அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். பட்டம் பெற்றவர். மிகப்பெரிய அறிவாளி. பொதுவுடைமைக் கொள்கையில் பேரறிவு பெற்றவர். சமூகச் சீர்திருத்தக்காரர்.தம் பிள்ளைகளுக்குச் சாதி மறுப்புத் திருமணம் செய்த சால்பாளர்.உலக இலக்கியங்களில் உலா வருவது அவர்தம் வழக்கம்.பல்வேறு இராகங்களை அறிந்து பாடுவதில் வல்லவர்.நடமாடும் அறிவுச்சுரங்கம் எனில் மிகையன்று.

தமிழில் தந்தி அனுப்பமுடியும் என அக் காலத்தில் மெய்ப்பித்து உலகப் புகழ் பெற்றவர். ஒரு முறை குளித்தலையில் நடந்த விழா ஒன்றில் இவர்தம் செய்ம்முறை விளக்கம் கண்ட பாவேந்தர் தமிழ்த்தந்தி அவர்களைப் பாராட்டிப் பேசியதாக அறிந்தேன்.

இத்தகு அறிஞர் குழாம் சூழ இருந்த நம் வேலாயுதனார் பல நாள் அமைதியாக எங்களை உரையாட வாய்ப்பு அமைத்துத் தந்துவிட்டு அவர்மட்டும் கேட்டவண்ணம் இருப்பார்.சிலநாள் தெளிந்த கருத்துகளை வெளியிட்டு எங்கள் உரையாடலில் பங்கேற்பார்.பழகப் பழகத்தான் தெரிந்தது பேராசிரியர் பே.க.வேலாயுதனார் மிகப்பெரும் மேதை என்று.அவர்களுடன் உரையாடிப் பெற்றுத் திருச்சிராப்பள்ளியில் அரிய நூல்கள் எழுதியவர்கள் பலரை அறிவேன்.

அவர் கிரேக்க இலக்கியங்களைப் பற்றியும் கிரேக்க நாட்டு வரலாறு பற்றியும் விரல்நுனியில் செய்திகள் வைத்திருப்பார்.அங்கு இருக்கும் நாடு, நகரம், வழி, வாய்க்கால், ஆறு, அரசன் அவன் மனைவிமார், குழந்தைக் குட்டிகள், அங்கிருந்த பள்ளிகள், படிப்பாளிகள் பற்றியெல்லாம் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் நிரல்படத் தமிழில் சொல்வதில் நம் வேலாயுதனாருக்கு நிகரான அறிஞர் ஒருவரைப் பற்றி இதுவரை யான் கேள்விப்பட்டதும் இல்லை. இனி அறியப்போவதும் இல்லை. அந்த அளவு அவருக்குக் கிரேக்க இலக்கிய வரலாறு கைவயம்.

கிரேக்க வரலாறு மட்டும் தெரியும் என நினைத்தால் அது தவறாகும்.வடமொழி இலக்கியங்கள் பற்றியும் விரிவாகப் பேசுவார். வடமொழிக் காப்பியங்கள், புராணங்கள் பற்றியெல்லாம் நன்கு அறிந்தவர். தமிழ்நூல்கள் வடமொழிக்குச் சென்ற வரலாற்றை நன்கு விளக்குவார். அதுபோல் வடமொழி இலக்கியச் சிறப்புகளை எல்லாம் நன்கு எடுத்து ஓதுவார்.

இவ்வாறு இலக்கிய, இலக்கண, வரலாறு பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வானில் தெரியும் விண்மீன்களைக் காட்டி அதன் வடிவம், இயக்கம்,அமைப்பு இவற்றையெல்லாம் எனக்கு அறிவிப்பார். வானியல் அறிவில் தமிழர்கள் பெற்றிருந்த பேரறிவை விளக்குவார். அவருக்கு ஈடுகொடுத்து மனத்துள் பதிக்கும் வண்ணம் எளியேன் அத்துறைகளில் ஈடுபடாமல் போனமை வருத்தம் தருவதாகவே உள்ளது.நிற்க.

இவ்வாறு பிறதுறைகளில் நம் வேலாயுதனாருக்கு இருந்த அறிவார்வம் பற்றி எண்ணும் பொழுது அவருக்குப் பழந்தமிழ்ச் சங்க நூல்களில் நல்ல பயிற்சி இருந்தது என்பதைக் கவனமுடன் எண்ணிப் பார்க்கவேண்டும். இலக்கண அறிவும் நிரம்பப் பெற்றவர். தமிழில் உள்ள சொற்கள் தோற்றம் பெற்றதை மிக எளிமையாக விளக்குவார். அதற்கான சில 'பார்முலாக்கள்' அவர் உருவாக்கியுள்ளார்.அதில் பொருத்திப் பார்த்தால் தமிழ்ச்சொற்கள் யாவும் அதில் அடங்கிவிடும்.

சங்க இலக்கியங்களின் துணையுடன் சங்ககாலப் புலவர்கள்,அரசர்கள் பற்றிய வரலாறு எழுத வேலாயுதனார் பொருத்தமான அறிஞர். ஒவ்வொரு அரசனின் காலம், புலவரின் காலம், இன்னாருக்குப் பின் இன்னார் என்ற முறையான வரலாற்றை இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகளுடன் நிறுவுவதில் வல்லவர். தம் முனைவர் பட்ட ஆய்வை முன்னிட்டுச் சோழ நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களுக்கு இவர் உந்துவண்டியில் பயணம் செய்து களப்பணியாற்றி ஆய்வேட்டை வழங்கியவர். இவர் ஆய்வேட்டில் பல உண்மைகள் பொதிந்துள்ளன.இதற்கு முன்னர் வெளிவந்துள்ள பல ஆய்வு முடிவுகள் பொய்யாகும் வண்ணம் இவர் ஆய்வேட்டில் செய்திகள் உள்ளன.

பேராசிரியர் வேலாயுதனார் தமிழுக்கு ஆக்கமாக அமையும் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவற்றுள் சங்கநூற் சொல்லடியம் (Concordance of Sangam Literature) என்னும் நூல் தொகுதிகள் குறிக்கத்தகுந்தன.இந்நூலில் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் சொற்கள் எந்த எந்த இடங்களில் என்ன பொருளில் வந்துள்ளன என்பதை மிக நுட்பமாக வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர் வந்த சொல்லடியங்களில் உள்ள பிழைகள் தவறுகளைப் போக்கும் வண்ணம் இதனைத் தன்னந்தனியாக இருந்து வெளிப்படுத்தியுள்ளமை போற்றுதலுக்கு உரிய ஒன்றாகும். முதல் இரு தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிற தொகுதிகள் வெளிவரவேண்டும்.

பேராசிரியர் பே.க.வேலாயுதனார் வாழ்க்கைக் குறிப்பு

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள மருதூர் என்னும் ஊரில் 11.07.1938 இல் பிறந்தவர். பெற்றோர் கந்தசாமி முதலியார், தனபாக்கியம் அம்மாள். மருதூரில் தொடக்க கல்வியைக் கற்ற வேலாயுதம் அவர்கள் உயர்நிலைக் கல்வியைப் பொன்பரப்பியில் கற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் வகுப்பை நிறைவு செய்தார். பி.ஒ.எல்(1960) பட்டத்தைப் பெற்றார். சைதாப்பேட்டையில் பி.டி பயிற்சி பெற்றார். 1961-62 இல் சுதேசமித்திரன் இதழில் மெய்ப்புத்திருத்துநர் பணி செய்தார். அப்பொழுது சென்னை மூர்மார்க்கெட்டில் நாளும் சென்று ஆங்கில நூல்கள் கிரேக்க நூல்களை வாங்கிக் கற்கத் தொடங்கினார். இதனால் கிரேக்க இலக்கியங்களில் நல்ல பயிற்சி ஏற்பட்டது. அப்பொழுது சங்க இலக்கியச் சொல் தொகுப்பு முயற்சி தொடங்கியது.

1966-72 இல் புதுக்கோட்டைக் கல்லூரிப் பணிக்கு வந்தார். இவர் தம் மாணவர் திரு.  இரகுபதி (நடுவண் அமைச்சர்) அவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது.
1972 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேலூர், பூலாங்குறிச்சி, முசிறிக் கல்லூரிகளில் பணியாற்றிப் பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள பெரியார் கல்லூரியில் பேராசிரியர் பணியேற்றார். முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் படிப்படியே பெற்றுக் கல்வித்துறையில் தம் தகுதியை நிலைப்படுத்திக்கொண்டார்.

பெரியார் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பிறகு புதுக்கோட்டையில் தமிழ்க் கோட்டம் என்ற அமைப்பை உருவாக்கிப் பல நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்தார். இப்பொழுது திருச்சிராப்பள்ளியில் தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்குத் தமிழிலக்கியம் பயிற்றுவிக்கும் பொறுப்பில் உள்ளார். இவரைப் பயன்படுத்திச் சங்க இலக்கியப் பதிப்புகள், இலக்கண நூல்களின் பதிப்புகளைத் திறம்படச் செய்யலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் பயின்றபொழுது அறிஞர் கா.செல்லப்பன் (ஆங்கிலப் பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக் கழகம்), டீலக்சு அப்துல்கபூர் போன்றவர்களின் தூண்டுதலால் ஆங்கில இலக்கியங்களில் கவனம் செலுத்தியவர். இதன் பயனாக கிரேக்க இலக்கியங்களைப் பயின்று அவற்றைத் தொகுத்து தமிழிற்குக் "காவியப் பொன்னிலம்" என்னும் பெயரில் வழங்க நினைத்து சிறு பகுதிகளை வெளியிட்டுள்ளார்.

ஆய்வியல் நிறைஞர் பட்டப் பேற்றிற்குக் கல்லாடனார் உரை பற்றியும் முனைவர் பட்டத்திற்குச் 'சங்க காலச் சோழநாட்டு ஊர்கள்' என்ற தலைப்பிலும் ஆய்வு செய்தவர்.

இவர் மாணவர் யாப்பியம் (சூத்திர வடிவம்), கடமையா? தெய்வமா? (கவிதை நாடகம்), வேல் அட்டவனை, சங்ககால மன்னர் வரிசை, சங்கநூற் சொல்லடியம் (இரு தொகுதிகள்) வெளியிட்டவர்.

சங்க நூற்சொல்லடியம் அறிமுகம்.

பேராசிரியர் வேலாயுதனாரின் கடும் உழைப்பில் வெளிவந்துள்ள நூல் சங்க நூற்சொல்லடியம்(2003). இது 14+314=328 பக்கங்களைக் கொண்ட நூல். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் இருதொகை நூல்களில் உள்ள சொற்கள் எந்தப்பொருளில் ஆளப்பட்டுள்ளன என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும் நூல் இஃது. சங்க இலக்கியத்தில் மீயுயர் பயிற்சியும்,புலமையும் உடையவர்களால் மட்டும் இத்தகுப் பணிகளைச் செய்யமுடியும்.


Thomas Leyman, Thomas Malten இவர்கள் A Word Index for Chankam Literature என்னும் பெயரில் உருவாக்கிய சொல்லடியத்தின் துணைகொண்டு வேலாயுதனார் இச்சொல்லடியத்தை உருவாக்கியுள்ளார். முன்னவர்கள் செய்த சொல்லடியத்தில் உள்ள பிழைகள், குறைகள் நீக்கப்பெற்று இந்நூல் வெளிவந்துள்ளதை வேலாயுதனார் முன்னுரையில் குறித்துள்ளார். சங்க நூல்களில் இடம்பெறும் "அ" முதல் "அரோ" வரையிலான சொற்கள் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

இச்சொல்லடியத்தின் வழியாகச் சங்க காலத்தில் ஒரு சொல் என்ன பொருளில் ஆளப்பட்டது என்பதையும், அக்காலத்தில் அச்சொல் என்ன வடிவத்தில் ஆளப்பட்டது என்பதையும் இச்சொல்லடியம் காட்டுகிறது. சொற்கள் முழுவதையும் ஒட்டுமொத்தமாகப் பார்ப்பதால் பொருள் விரிவு அறிய உதவும். அக்காலத்தில் இருந்து வழக்கு வீழ்ந்த சொற்களையும் அறியலாம். காலந்தோறும் சொல்லுருவங்கள் மாறிவந்துள்ளதை அறியவும் இச்சொல்லடியம் பயன்படும் என வேலாயுதனார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சங்க நூல்களில் இடம்பெறும் பாடல்கள் பலவும் பல காலங்களில் பல புலவர்கள் பாடியன.இவற்றில் பல சொற்கள்,பாடலடிகள் ஒரே தன்மையில் காணப்படுகின்றன.இவற்றை அறிவதற்கு இச்சொல்லடியம் மிகுந்த பயனைத் தருகிறது.

(எ.கா)
சங்க இலக்கியத்தில் "அ" என்ற சொல் அகநானூற்றில் 40 இடத்திலும், ஐங்குறுநூற்றில் 7 இடத்திலும், கலித்தொகையில் 81 இடத்திலும், குறிஞ்சிப்பாட்டில் 7 இடத்திலும், குறுந்தொகையில் 11 இடத்திலும், திருமுருகாற்றுப்படையில் 1 இடத்திலும், நற்றிணையில் 26 இடத்திலும், நெடுநல்வாடையில் 1 இடத்திலும், பதிற்றுப்பத்தில் 7 இடத்திலும், பரிபாடலில்19 இடத்திலும், புறநானூற்றில் 29 இடத்திலும், பெரும்பாணாற்றுப்படையில் 5 இடத்திலும், பொருநராற்றுப் படையில் 2 இடத்திலும் மலைபடுகடாமில் 1 இடத்திலும் ஆக 237 இடங்களில் ஆளப்பட்டுள்ளது எனத் துணிவுடன் பட்டியலிட்டுக் காட்ட இந்நூல் பெரிதும் பயன்படும்.

சங்கநூற் சொல்லடியம் வேலாயுதனாரின் நண்பர் பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்களால் வெளியிடப் பெற்றுள்ளது. (முகவரி : பேராசிரியர் இராசசேகர தங்கமணி அறக்கட்டளை,9 / 3,பாண்டியர் நகர்,கரூர் -639 001)

சங்ககால மன்னர் வரிசை நூல் அறிமுகம்

சங்க கால மன்னர்களின் வரலாற்றை அறிஞர்கள் பலர் தெளிவுப்படுத்த முயன்று பல சான்றுகள் கிடைக்காததால் தங்கள் ஆய்வு முடிவுகளில் வேறுபட்டு நிற்கின்றனர். பதிற்றுப்பத்து நூலில் இடம்பெறும் பதிகங்கள் பல பிற்காலத்தில் எழுந்தன.எனவே இவற்றைக் கொண்டு வரலாற்றை எழுதும்பொழுது பிழை ஏற்படுகின்றது. எனவே இவற்றை ஒதுக்கி விட்டுப்பிற சான்றுகளின் துணையுடன் வேலாயுதனார் சங்ககால மன்னர் வரிசையைத் தெளிவுற எழுத முயன்றுள்ளார்.


சங்க இலக்கியம்கொண்டு சங்ககால வரலாற்றை அறியும் முயற்சியில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.மாமூலனார் தொடங்கி, புலவர்களையும் அவர்களால் பாடப்பட்ட அரசர்களையும் பிணைத்துக்காட்டி தொடரிபோல கி.பி.142 வரையிலான வரலாற்றைச் சான்றுகளுடன் விளக்கும் நூல் இஃது. மன்னர்களையும் அவர்களைப் பாடிய புலவர்களையும் கால அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளமை இந்நூலின் தனிச்சிறப்பு ஆகும்.

கல்வெட்டுகள், காசுகள், இலக்கியச் சான்றுகள் அடிப்படையில் இந்நூல் எழுதப்பெற்றுள்ளது. 32 பக்கம் அளவுள்ள நூல். 1997 இல் வெளிவந்தது. பாரதி நூலகம், 1- 199 ஏ 9, சீதக்காதி தெரு,திருச்சிராப்பள்ளி - 620 019 என்னும் முகவரியிலிருந்து வந்துள்ளது.

பேராசிரியரின் முகவரி :

முனைவர் பே.க.வேலாயுதம்,
33,இராசாராம் சாலை,
கலைஞர் கருணாநிதி நகர்,
திருச்சிராப்பள்ளி -620 021

புதன், 23 ஜூலை, 2008

தமிழண்ணல் இராம.பெரியகருப்பன் அவர்களின் தமிழ்வாழ்வு...


பேராசிரியர் தமிழண்ணல்


தமிழறிஞர்களால் தமிழண்ணல் என அழைக்கப்படும் இராம. பெரியகருப்பன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத் தகுந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி இவர் ஆற்றிய பெரும்பணிகள் இலக்கிய உலகில் என்றும் நினைவு கூரத்தக்கன. அறிஞர் மு.வ, அறிஞர் வ.சுப, மாணிக்கம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் தகு தலைமையின் கீழ் பணியாற்றிய பெருமைக்கு உரியவர்.

இவர் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்த பொழுது தமிழறிஞர்களுள் தகுதியானவர்களை மதிக்கும் முகமாக அவர்களுக்குச் சிறப்புநிலைப் பேராசிரியர் பணி வழங்கி அவர்களுக்குச் சிறப்பு செய்யப்பெற்றது. அவ்வகையில் தமிழறிஞர்கள் வீ.ப.கா.சுந்தரம், புலவர் இரா.இளங்குமரனார், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், கவியரசு முடியரசனார், பெரும்புலவர் தண்டபாணி தேசிகர் உள்ளிட்ட அறிஞர்கள் மதுரைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் பணிபுரியும் பேறு பெற்றார்கள். இன்று பல்வேறு துறைகளில் புகழுடன் விளங்கும் பேராசிரியர்கள் பலர் தமிழண்ணலின் மாணவர்களாக விளங்கியவர்கள் எனில் மிகையன்று.

தமிழண்ணலிடம் படித்தவர்கள், அல்லது உடன் பணிசெய்தவர்கள் பலரும் புகழ் பெற்றவர்களின் வரிசையில் உள்ள அறிஞர் பெருமக்களேயாவர். தமிழ்ப்பற்றும், சங்க இலக்கியப்புலமையும், தமிழுக்குத் துறைதோறும் பெருமையும் சிறப்பும் வந்தாக வேண்டும் என்ற போர்க்குண இயல்பும் கொண்ட தமிழண்ணல் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு முன்மாதிரி யாவார். தமிழுக்கு எதிராக நடக்கக்கூடியவர் யார் என்றாலும் எத்தகுப் பொருள்வளம் உடையவர் என்றாலும், எத்தகு உயர்பதவியில் இருப்பவர் என்றாலும் அஞ்சாமல் குரல் கொடுக்கக் கூடியவர் தமிழண்ணல். அவர்தம் தமிழ் வாழ்வையும் இலக்கியப் பணிகளையும் இக்கட்டுரையில் நினைவுகூர்கிறேன்.

பிறப்பு
தமிழண்ணல் அவர்கள் 12.08.1928 இல் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் இட்டபெயர் பெரியகருப்பன் என்பதாகும். இவர்தம் பெற்றோர் இராமசாமி, கல்யாணி ஆச்சியாவர்.

கல்வி

மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர்(1948). பிறகு தன்முயற்சியால் கற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளியல்) (1948), முதுகலைத் தமிழ்(1961) ஆகிய பட்டங்களைப் பெற்றவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்(1969). முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனாரும் இவர்தம் ஆய்வு நெறியாளர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆசிரியர் பணி

தமிழண்ணல் அவர்கள் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். இங்குத் தம் கல்லூரித் தோழர் கவிஞர் முடியரசனாருன் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பதின்மூன்று ஆண்டுகள் இங்குப் பணிபுரிந்த பிறகு மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பத்தாண்டுகள் தமிழ்ப் பேராசிரியர் பணியாற்றினார். இவர் தம் சங்க இலக்கியப் புலமையை அறிந்த ஆலை அரசர் கரு. முத்து. தியாகராசனார் இவருக்கு உள்ளன்போடு பணி வழங்கியதை அண்ணல் அவர்கள் நெகிழ்ந்து கூறுவார்கள்.

1971 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியும் பின்னர் இணைப்பேராசிரியர், அஞ்சல்வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல்துறைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் பணி என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பல நிலைகளில் பணிபுரிந்துள்ளார். இவர்ம் பணிக்காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்பு நிதியுதவித் துறையாக உயர்வுபெற்றது.

குடும்பம்

தமிழண்ணல் அவர்களுக்கு 1954, ஆகத்து 30 இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சோலையப்பன், கண்ணன், மணிவண்ணன் என்ற ஆண்மக்களும், கண்ணம்மை, அன்புச்செல்வி, முத்துமீனாள் என்ற பெண்மக்களும் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.

தமிழண்ணல் பெற்ற சிறப்புகள்

1971 இல் குடியரசு நாளில் புதுதில்லி அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு இவர் செல்வம் என்ற தலைப்பில் பாடிய கவிதை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப் பெற்ற சிறப்பிற்கு உரியது. மதுரை மீனாட்சியம்மை பற்றி இவர் பாடிய பாடல்கள் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் என்ற இவர் நூலும் பரிசுபெற்ற ஒன்றாகும். தமிழக அரசால் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர்.

பல்கலைக்கழக நல்கைக்குழு தமிழண்ணல் அவர்களை 1981-82 ஆம் கல்வியாண்டில் தேசியப் பேராசிரியராகத் தேர்வு செய்து சிறப்புச்செய்தது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கும் சென்று தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு, இலக்கியக் கொள்கைகளைப் பற்றி சொற்பொழிவாற்றிப் பிற மொழியினருக்குத் தமிழின் சிறப்பை எடுத்துரைத்தர்.

இலங்கை, சப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று கருத்தரங்குகளில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர்.

இவர் மேற்பார்வையில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். முனைவர் மு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்டவர்கள் இவரின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம்பெற்றவர்கள். தினமணி உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் புகழ்பெற்றவைகளாகும்.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இவருக்கு 1989 ஆம் ஆண்டில் தமிழக அரசின் திரு.வி.க.விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிங்கப்பூர் அரசின் அழைப்பில் தமிழ்க்கல்விக்கு உரிய பாடநூல் எழுதும் பணியிலும் ஈடுபட்டவர்.

தமிழகப்புலவர் குழுவின் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிந்து வருகிறார். தமிழ்ச்சான்றோர் பேரவை தமிழ்வழிக் கல்வியை முன்னிலைப்படுத்தித் தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டம் நிகழ்த்திய பொழுது அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் போராட்டத் தலைமையிலிருந்து விலகிக்கொண்டபொழுது தாமே முன்வந்து தமிழ்வழிக் கல்விக்காகச் சாகும்வரை உண்ணா நோன்பில் தலைமைதாங்கி நடத்திய வரலாற்றுப் பெருமைக்கு உரியவர் நம் தமிழண்ணல் அவர்கள்.

அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் தொல்காப்பியப் பதிப்பை அறிஞர் இராமலிங்கனார், பகீரதன் ஏற்பாட்டில் பதிப்பித்துப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிட்டபொழுது தமிழுக்கு இந்நூல் கேடானது எனத் துணிந்து குரல்கொடுத்து கண்டித்தவர் நம் தமிழண்ணல் அவர்கள். (இத்துணிவும் தமிழ்ப்பற்றும் கண்ட பிறகே அந்நாளில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுமாணவனாக இருந்த இக் கட்டுரையாளனுக்கு இவரின் மேல் அளவுக்கு அதிகமான ஈடுபாடு வந்தது.இவர்தம் தலைமையில் தம் திருமணம் நிகழவேண்டும் என உறுதி செய்து பல ஆண்டுகளுக்குப் பிறகு செயங்கொண்டத்தில் 31.03.2002 இல் திருமணம் நிகழ்ந்தது)

தமிழண்ணல் நூல்கள்

தமிழண்ணல் தமிழ் இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல், உரை, படைப்பு எனப் பல திறத்தில் அமையும் நூல்களை வழங்கியுள்ளார். அவற்றுள் சில :

வாழ்வரசி புதினம்
நச்சுவளையம் புதினம்
தாலாட்டு
காதல் வாழ்வு
பிறைதொழும் பெண்கள்

சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள் (2003)
சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள்(2005)
தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்(2004)
புதியநோக்கில் தமிழ்இலக்கிய வரலாறு
தமிழியல் ஆய்வு(இ.முத்தையாவுடன்)
ஆய்வியல் அறிமுகம்(இலக்குமணனுடன்)
ஒப்பிலக்கிய அறிமுகம்
குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு விளக்கம்

தொல்காப்பியம் உரை
நன்னூல் உரை
அகப்பொருள் விளக்கம் உரை
புறப்பொருள் வெண்பாமாலை உரை
யாப்பருங்கலக் காரிகை உரை
தண்டியலங்காரம் உரை
சொல் புதிது சுவை புதிது
தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்
தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?
பேசுவது போல் எழுதலாமா? பேச்சுத் தமிழை இகழலாமா?
பிழை திருத்தும் மனப்பழக்கம்
உரை விளக்கு
தமிழ் உயிருள்ள மொழி
தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள்
தமிழ்த்தவம்
உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்
திருக்குறள் உரை

இனிய தமிழ்மொழியின் இயல்புகள் முதலியன

முனைவர் தமிழண்ணல் அவர்களின் முகவரி :

முனைவர் தமிழண்ணல் அவர்கள்
ஏரகம்,
4/585 (732) சதாசிவ நகர்,
வண்டியூர்ச்சாலை,
மதுரை - 625 020

பேசி : 0452 - 2533792
செல்பேசி : 94430 64749

நூல்கள் கிடைக்குமிடம் :
மீனாட்சி புத்தக நிலையம்
48,தானப்ப முதலி தெரு,மதுரை - 625 001,தமிழ்நாடு

செவ்வாய், 22 ஜூலை, 2008

கல்வெட்டியல் அறிஞர் புலவர் செ.இராசு

புலவர் செ.இராசு

 திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் யான் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றபொழுது நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் அறிஞர்கள் பலர் உரையாற்ற அழைக்கப் பெற்றிருந்தனர். அவர்களுள் எளிய தோற்றத்துடன் ஒருவர் மிகச் சிறந்த கல்வெட்டுச் செய்திகளை அவைக்கு வழங்கிக்கொண்டிருந்தார். தமக்குத் தொடகத்தில் பேச இயலாத தன்மை இருந்ததாகவும் பின்னர் பேசிப்பேசி அக்குறை நீங்கிவிட்டதாகவும் குறிப்பிட்ட அந்த அறிஞரின் பேச்சு இன்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே உள்ளது.

 ஆம். அவ்வாறு பேசியவர் நம் மதிப்பிற்குரிய புலவர் செ.இராசு அவர்களேயாவர். பிறகு அவர்கள் எழுதிய நூல்கள், கட்டுரைகள், ஆய்வுரைகளைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தாலும் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமையாமல் போனது. அண்மைக் காலமாக எமக்கு வாய்த்த உயரிய நட்புக்கு உரிய முனைவர் நா. கணேசன் (அமெரிக்கா) அவர்கள் வழியாகப் புலவரின் பன்முகச் சிறப்புகளையும் உள்ளம் உவக்கும்படி கேட்டு அவர்களுடன் நட்பு கொள்ளத் தொடங்கினேன்.

 தமிழுக்கு உழைத்த அறிஞர் பெருமக்களின் வரலாறு இணையத்தில் பார்வைக்குக் கிடைக்காத சூழலில் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இயன்ற வகையில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டவன் யான் என்பதால் புலவர் செ.இராசு அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இணையத்தில் அறிய விழைவார்க்குப் பயன்படும் வகையில் பதிவு செய்கிறேன். விரிவான வரலாறு அறிய விழைவாருக்கு உதவும் வகையில் அவர்களின் முகவரியும் தருகிறேன். தக்கவர்கள் தக்காங்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 புலவர் செ. இராசு அவர்கள் 02.01.1938 இல் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு (பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் ந.சென்னியப்பன், நல்லம்மாள். இவர்தம் மனைவியார் பெயர் கெளரி அம்மாள். மூன்று ஆண்மக்கள் இவருக்கு வாய்த்தனர். கணிப்பொறித் துறையில் இவர்கள் பணிபுரிகின்றனர்.

 தொடக்கக் கல்வியை(1-5) திருப்பூர் கருவம்பாளையம், தண்ணீர்ப்பந்தல், வள்ளுவர் தொடக்கப்பள்ளி, ஞானிபாளையம், இலண்டன் மிசன் பள்ளி(ஈரோடு) செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பை நிறைவு செய்தவர் (1955-59). சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட், முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

 ஈரோட்டில் தமிழாசிரியர் பணியைத் தொடங்கி(1959), 1980-82 இல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்தார். பிறகு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1982 இல் இணைந்து கல்வெட்டு, தொல்லியல் துறையில் துறைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட ஆய்வுப்பணியை மேற்கொண்டிருந்தார்.

 இவர்தம் பணிக்கு மேலும் பெருமை கிடைக்கும்படி பல்வேறு தமிழ் அமைப்புகள் இவருக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவற்றுள் கல்வெட்டறிஞர், பேரூராதீனப் புலவர், கல்வெட்டியல் கலைச்செம்மல், திருப்பணிச் செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் குறிப்பிடத் தக்கன.

 இவர் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை (4 முறை) நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று வந்தவர்.

 1959 இல் தமிழாசிரியர் பணியேற்றது முதல் கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கல்வெட்டு, செப்பேடு, ஓலைப் பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். பெரும்புலவர் தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் சுவடிப்பயிற்சி, பேராசிரியர் கா.ம.வேங்கடராமையாவிடம் கல்வெட்டுப் பயிற்சி, தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் இரா. நாகசாமியிடம் தொல்லியல் பயிற்சியும் பெற்று, தொடர்ந்து களப்பணிகள் வழியாகத் தன் பட்டறிவை வளர்த்துக்கொண்டவர்.

 இவர் அடிப்படையில் தமிழ்ப்புலமை பெற்றவர். ஆதலால் தமிழ் ஆவணங்களைப் பிழையின்றி, பொருள் உணர்ச்சியுடன் படிப்பதில் வல்லவர். கல்வெட்டு, செப்பேடு, சுவடி பற்றிய தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று அவைகளை ஆய்வு செய்து செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளி உலகிற்கு வழங்குவதில் வல்லவர். இவ்வகையில் இவர் வெளியிட்ட நூல்கள் நூற்றுக்கு மேல் அமைகின்றன. கட்டுரைகள் 250 அளவில் வெளிவந்துள்ளன. செய்திகள் 100 மேல் வந்துள்ளன.

பேராசிரியர் அ.சுப்பராயலு அவர்களுடன் இணைந்து தமிழகத் தொல்லியல் கழகம் நிறுவி எட்டாண்டுகளாகத் தொடக்கச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் செயல்பட்டவர். ஆவணம் என்ற இதழ் கொண்டுவரக் காரணமானவர். பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிபவர்.ஆசிரியப்பணி புரிந்த பொழுது மாணவர்களை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வரலாற்று ஆர்வம் ஊட்டியவர்.

பல கல்லூரிகளில் இவரின் முயற்சியால் தொல்லியல் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது. இவர்தம் கண்டுபிடிப்புகளுள் பல இவரின் பெருமையை என்றும் நினைவுகூரும். அவற்றுள் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர் இசைக் கல்வெட்டைக் கண்டுபிடித்து உலகிற்கு வெளிப்படுத்தியவர். இந்தியாவில் இதுவே முதலாவது இசைக் கல்வெட்டாகும்.

 சங்க காலத்தில் கொடுமணம்(இன்றைய கொடுமணல்) ஊரைக் கண்டறிந்து அகழாய்வு செய்து உரோமானியர்களுடன் தொடர்புடைய நொய்யல் கரை நாகரிகம் வெளிப்படுத்தியது இவர் கண்டுபிடிப்புகளுள் மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த பணியாகும். தென்னிந்தியாவில் மிக அரிதான பாடலுடன் கூடிய பழமங்கலம் நடுகல் கண்டறிந்தமையும் குறிப்பிடத் தகுந்த பணியேயாகும்.

 சித்தோட்டுக்கு அருகில் குட்டுவன் சேய் பிராமி கல்வெட்டைப் படித்து அறிவித்த இவர்தம் பணி குறிப்பிடத்தக்கது. சென்னையிலிருந்து பூனா செல்லவிருந்த தஞ்சை மராட்டியர்களின் மோடி (மோடி என்பது மராட்டிய மொழியின் சுருக்கெழுத்தாகும்) ஆவணங்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு வந்த முயற்சியும் இவருடையது ஆகும்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலாக இவருடைய நூல் வெளியிடப்பட்டது. ஆய்வாளர்கள் நிகழ்கால வரலாற்றிலும் கவனம் செலுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் கண்ணகி கோட்டம், கச்சத்தீவு உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவர் தம் உழைப்பில் கொங்கு, சுவடி, ஆவணம், தேனோலை, கொங்குமலர் உள்ளிட்ட இதழ்கள் பொலிவு பெற்றன.

புலவர் செ.இராசு அவர்கள் பதிப்பித்த சுவடிப் பதிப்புகள்.

1.கொங்கு மண்டல சதகம் 1963
2.மேழி விளக்கம் 1970
3.மல்லைக் கோவை 1971
4.பூர்வச்சக்கரவர்த்தி நாடகம் 1978
5.கொடுமணல் இலக்கியங்கள் 1981
6.பூந்துறைப் புராணம் 1990
7.மரபாளர் உற்பத்திக்கும்மி 1995
8.மங்கலவாழ்த்து 1995
9.ஏரெழுபது 1995
10.திருக்கை வழக்கம் 1995
11.கம்பர் வாழி 1995
12.ஞானமாலை 1997
13.புயல் காத்துப்பாட்டும் பஞ்சக்கும்மியும் 1997
14.கல்வியொழுக்கம் 1998
15.திங்களூர் நொண்டி1998(இணையாசிரியர்)
16.நீதியொழுக்கம் 2002
17.பஞ்சக்கும்மிகள் 5 (அச்சில்)

தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள்

1.தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 1983
2.தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள் 1987
3.கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள் 1991
4.சேதுபதி செப்பேடுகள் 1994
5.சோழமண்டல சதகம் 1994
6.கல்வெட்டியலும் வரலாறும் 2001
7.தொண்டைமான் செப்பேடுகள் 2004

வட்டார,ஊர் வரலாற்று நூல்கள் :

1.எங்கள் பவானி 1967
2.தங்கம்மன் திருக்கோயில் வரலாறு 1981
3.வெள்ளோடு சாத்தந்தைகுல வரலாறு 1987
4.முருங்கத்தொழுவு பெரியகுல வரலாறு 1989
5.நாகம்பள்ளி காணியாளர் வரலாறு 1989
6.அனுமன்பள்ளி பண்ணைகுல வேளாளர் வரலாறு 1990
7.பரஞ்சேர்வழி காணியாளர் குல வரலாறு 1990
8.தலையநல்லூர்க் கூறைகுல வரலாறு 1990
9.கொடுமணல் வரலாறு 1991
10.ஆலாம்பாடி பொருள் தந்த குல வரலாறு 1993
11.கீரனூர்க் காணியாளர்கள் வரலாறு 1993
12.நசியனூர்க் காணியாளர் வரலாறு 1994
13.நசியனூர்க் கண்ணகுல வரலாறு 1994
15.சின்ன அண்ணன்மார் கோயில் வரலாறு 1994
16.காடையூர் முழுக்காதுகுல வரலாறு 1994
17.எழுமாத்தூர்ப் பனங்காடர்குல வரலாறு 1995
18.கொங்கு நாட்டுச் செம்பூத்த குல வரலாறு 1995
19.காங்கயம் அகத்தீசுவரர் கோயில் வரலாறு 1995
20.ஆனங்கூர்க் காணியாளர் வரலாறு 1997
21.கண்ணபுரம் செங்கண்ணர்குல வரலாறு 1997
22.ஊத்துக்குளி கதித்தமலை வரலாறு 1997
22.திண்டல்மலை வரலாறு 1997
23.அத்திப்பாளையம் செம்பூத்தகுல வரலாறு 1998
24.கொத்தனூர்க் குழாயகுல வரலாறு 1998
25.கத்தாங்கண்ணி வெண்டுவகுல வரலாறு 1998
26.பொன் ஆரியூர் வரலாறு 1998
26.கொங்கூர் வெண்டுவகுல வரலாறு 1999
27.குமரமங்கலம் தூரகுல வரலாறு 1999
28.நல்லூர் வரலாறு 2000
29.நீலம்பூர் வரலாறு 2000
30.புத்தரச்சல் குழாயகுல வரலாறு 2000
31.சிவன்மலை வரலாறு 2000
32.முத்தூர் வரலாறு 2001
33.அமுக்கயம் பொருள் தந்தகுல வரலாறு 2001
34.கொங்கலம்மன் கோயில் வரலாறு 2001
35.ஆயப்பரப்பு வரலாறு 2001
36.பிடாரியூர் வரலாறு 2001
38.நல்லூர் பனங்காடர்குல வரலாறு 2001
39.கிழாம்பாடி கண்ணகுல வரலாறு 2001
40.கொல்லன்கோயில் வரலாறு 2002
41.தாராபுரம் வரலாறு 2004
42.வள்ளியறச்சல் வரலாறு 2005
43.கோலாரம் வரலாறு 2005
44.கொளிஞ்சிப்பட்டி பண்ணைகுல வரலாறு 2005
45.மேல் ஒரத்தை வரலாறு 2005
46.மறவபாளையம் வரலாறு 2005
47.வரலாற்றில் அறச்சலூர் 2006
48.பருத்திப்பள்ளி செல்லகுல வரலாறு 2006
49.வெள்ளோடு காணியாளர் வரலாறு 2007
50பொங்கலூர் பொன்னகுல வரலாறு 2007
51.ஈங்கூர் ஈஞ்சகுல வரலாறு 2008
52.தோளூர் காணியாளர் வரலாறு 2008

பிற குறிப்பிடத் தகுந்த நூல்கள்

1.கொங்கு குல மகளிர் 2008
2.ஈரோடு மாவட்ட வரலாறு 2008
3.காளிங்கராயன் கால்வாய் 2007
4.ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள் (தொகுதி - 1) 2007
5.கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப்பாடல்களும் 2007
6.கொங்கு வேளாளர் செப்பேடு, பட்டயங்கள் 2007
7.தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் 2007
8.கொங்கு நாடும் சமணமும் 2005
9.வெண்டுவண் குல வரலாறு 2005
10.தொண்டைமான் செப்பேடுகள் 2004
11.உ.வே.சா பதிப்புப் பணியும் பன்முக மாட்சியும் 2003
12.கொங்கு நாட்டுவேளாளர் வரலாறு 2003
13.காடையீசுவரர் கோயில் பொருளந்தை முழுக்காது குல வரலாறு 2002
14.திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள் 1999
15.ஆரியூர் வெண்டுவன்குல வரலாறு 1998
16.கொத்தனூர்க் காணியாளர், குழாயர்குல வரலாறு 1998
17.வரலாற்றுக் கலம்பகம் 1998
18.விதரி அத்திப்பாளையம் செம்பூத்த குல வரலாறு 1998
19.ஆனங்கூர் கரியகாளியம்மன் கோயில் காணியாளர்கள் வரலாறு 1997
20.ஊத்துக்குழி கதித்தமலை வரலாறு 1997
21.கச்சத் தீவு 1997
22.கூனம்பட்டி மாணிக்கவாசகர் திருமடாலய வரலாறு 1994
23.நெஞ்சை அள்ளும் தஞ்சை 1994
24.பூந்துறைப் புராணம் 1994
25.செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் - ஒரு வரலாற்று ஆய்வு 1985
26.கலைமகள் கலைக்கூடக் கையேடு 1984
27.கலைமகள் கலைக்கூடம் 1981
28.நன்னூல் உரை 1980
29.கண்ணகி கோட்டம் 1976
30.திருமந்திரம் 100 1967
31.சிவாக்கிர யோகிகள் ஆதீன வரலாறு 1959

புலவர் பெருமகனாரின் முகவரி :

புலவர் செ.இராசு அவர்கள்,
64 / 5 டி.பி.ஜி.காம்பளக்சு
புதிய ஆசிரியர் குடியிருப்பு அருகில்,
ஈரோடு -638 011

நன்றி :
தி இந்து நாளிதழ்(படம்)
நா.கணேசன்(ஊசுடன்,அமெரிக்கா)
கா.சா.சு.செந்தமிழ்க்கல்லூரி,திருப்பனந்தாள்

சனி, 19 ஜூலை, 2008

தமிழ்-சப்பானிய மொழிஅறிஞர் சுசுமு ஓனோ மறைவு...


தமிழ்-சப்பானிய மொழியறிஞர் சுசுமு ஓனோ (23.08.1919 -14.07.2008)

  தமிழ் மொழிக்கும் சப்பான் மொழிக்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு உள்ளதைப் பல்வேறு சான்றுகள் வழியாக உலகிற்கு வெளிப்படுத்திய பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள் தம் 89 ஆம் அகவையில் 14.07.2008 திங்கள் கிழமை டோக்கியோவில் இயற்கை எய்தினார்.

  டோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்த சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால சப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக் கொணர்ந்தவர். 1943 ஆம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

 1930 ஆம் ஆண்டளவில் மொழியியல் துறையில் கவனம் செலுத்தினார். இரண்டாம் உலகப் போரின் பொழுது கல்வித்துறைக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்தவர். டோக்கியோ கக்கு சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றிய சுசுமு அவர்கள் மொழிக்கல்வி உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர். தமிழ் மொழிக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999 இல் தம் ஆய்வை நூலாக வெளியிட்டார். சப்பானிய மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம் படிகள் விற்பனை ஆயின.

  தமிழ் படிக்கத் தமிழகத்திற்கு வந்த சுசுமு ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர். 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகச்சிறந்த ஆய்வு முடிவுகளை வெளியிடும் அளவிற்குச் சுசுமு ஓனோ அவர்களுக்குத் தமிழ் - சப்பானிய மொழி உறவு பற்றிய உண்மைகள் வெளிப்படத் தொடங்கின.

 இலங்கைப்  பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசுவும் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.

  தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவினைப் போலச் சப்பானில் அறுவடைத் திருவிழா நடைபெறுவதை எடுத்துரைத்தவர் சுசுமு ஓனோ அவர்கள். தமிழுக்கும் சப்பான் மொழிக்கும் இடையில் இலக்கிய, இலக்கண, கல்வெட்டு, நாட்டுப்புவியல் செய்திகளுடன் உள்ள உறவையும் வெளிப்படுத்தியவர்.

 சப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள (கி.மு. 1300300) காலப்பகுதி கல்லறைகளை ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.

  1990 களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரின் ஆய்வுமுடிவுகள் இரு பண்பாட்டுக்குமிடையில் இலக்கியம், பண்பாட்டு நடை முறைகள் உள்ளிட்டவற்றில் ஒற்றுமைத் தன்மைகளை அதிசயிக்கத்தக்க வகையில் இருந்ததை வெளிப்படுத்தியிருந்தன.

 தமிழ்க் கல்வி நிறுவனங்கள், தமிழ்அறிஞர்களுடன் பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்டகாலத் தொடர்புகளைப் பேணிவந்தார். சப்பானிய மாணவர்கள் பலரைத் தமிழ் மொழியைக் கற்குமாறு அவர் ஊக்குவித்தார். தமிழுக்கும் சப்பானுக்கும் உறவுப்பாலம் அமைத்த அறிஞரை இழந்து தமிழுலகம் வருந்துகிறது.

 Encyclopedia of Languages & Linguistics என்ற நூலில் சுசுமு ஓனோ பற்றிய குறிப்பு:

  1957ல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் துவங்கினார். அவர் ஜப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் சப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.

  இவருடைய பணியைப் பற்றி கமில் சுவலபில் அவர்கள் 1990 இல் சொன்னது : சப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்.

தொடர்புடைய தொடுப்புகள் :

http://books.google.com/books?id=9PhwAAAAIAAJ&q=%22Susumu+Ohno%22+%2Btamil&dq=%22Susumu+Ohno%22+%2Btamil&ei=yWeBSOXbF42AsgOEwfDhDw&pgis=1

http://books.google.com/books?id=OkkgAAAAIAAJ&q=%22Susumu+Ohno%22+%2Btamil&dq=%22Susumu+Ohno%22+%2Btamil&source=gbs_book_other_versions_r&cad=2_0&pgis=1

http://books.google.com/books?id=T7Wv4ncys88C&pg=PA45&dq=%22Susumu+Ohno%22+%2
Btamil&ei=yWeBSOXbF42AsgOEwfDhDw&sig=ACfU3U2Fbk6OX66FEtWiz6Tk7eQiwoTTFg

http://en.wikipedia.org/wiki/Susumu_%C5%8Cno

http://www.xlweb.com/heritage/lj2.gif

நனி நன்றி :

தமிழ்நெட்.காம்
முனைவர் பொற்கோ
தூரிகா வெங்கடேசு
தமிழ் ஓசை நாளிதழ், சென்னை, தமிழ்நாடு

வியாழன், 17 ஜூலை, 2008

சந்தனக்காடு வெற்றிவிழாப் படங்கள்...

 சந்தனக்காடு என்னும் பெயரில் வீரப்பன் வாழ்க்கையும் அதிரடிப்படையினரின் செயல்பாடுகளும் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. உலகத் தமிழர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இத்தொடர் 171 நாள் வெற்றியாக ஒளிபரப்பப்பட்டது. இதன் வெற்றிவிழா சென்னை இராயப்பேட்டை மியூசிக் அகாதெமியில் 16.07.2008 மாலை தொடங்கியது.

 திருமானூர் குமார் குழுவினரின் தப்பாட்டத்துடன் விழா தொடங்கியது. அடுத்து சந்தனக்காடு தொடரில் இடம்பெறும் பாடலைத் தாய்த்தமிழ்ப் பள்ளி மழலையர்கள் பாடி மகிழ்ச்சியூட்டினர்.

 மக்கள் தொலைக்காட்சியைச் சார்ந்த திரு.கார்மல் அனைவரையும் வரவேற்றார்.

 சந்தனக்காடு உருவான கதை திரையிடப்பட்டது. இயக்குநர் மகேந்திரன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். திரைத்துறையைச் சேர்ந்த கலைப்புலி தாணு, சீமான், பாலு மகேந்திரா, திருச்செல்வம், சமுத்திரக்கனி, பாலாசி சக்திவேல், ஓவியர் வீரசந்தனம், பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், காசி ஆனந்தன், கண்மணி குணசேகரன், இராசேந்திர சோழன், புட்பவனம் குப்புசாமி உள்ளிட்டவர்கள் உரையாற்றினர். மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் கலந்துகொண்டு கலைஞர்களுக்குப் பரிசு வழங்கி நிறைவுப் பேருரையாற்றினார். தயாரிப்பாளர் உலகரட்சகன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

 கவிஞர் செயபாசுகரன், முனைவர் திருப்பூர் கிருட்டிணன், கி.த.பச்சையப்பன், திரு. கிருட்டிணசாமி, அனிதா குப்புசாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.



மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் நிறைவுரை


தாய்த் தமிழ்ப்பள்ளி மழலைகள் பாடலிசைத்தல்


பறையாட்டம்


புட்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி


கராத்தே இராசா பரிசுபெறல்


சீமான் உரை


திருச்செல்வம் உரை


பாலு மகேந்திரா உரை


பாலாசி சக்திவேல் உரை


நடிகை தீபிகாவுக்குப் பாராட்டு


இயக்குநர் வ.கெளதமன் சிறப்பிக்கப்படுதல்


இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்குப் பரிசளிப்பு


முனைவர் திருப்பூர் கிருட்டிணன், செயபாசுகரன், வீரசந்தனம்

புதன், 16 ஜூலை, 2008

தமிழறிஞர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன்...


முனைவர் ச.வே.சுப்பிரமணியன்

 தமிழ் மொழிக்கு அறிஞர் பெருமக்கள் பல வகையில் தொண்டு செய்துள்ளனர். அவ்வறிஞர் பெருமக்களுள் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர். நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரில் 31.12.1929 இல் பிறந்தவர். பெற்றோர் சு.சண்முக வேலாயுதம், இராமலக்குமி அம்மாள்.

 தொடக்கக் கல்வியை விக்கிரம சிங்கபுரத்தில் உள்ள புனித இருதய மேல்நிலை தொடக்கப் பள்ளியில் பயின்றவர். உயர்நிலைப் பள்ளிக்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். இடைநிலைக் கல்வியை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பயின்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு)1950-53 இல் பயின்றவர். முனைவர் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்துபெற்றவர்.

 தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-56  இல் தமி ழ் பயிற்றுநராகப் பணியைத் தொடங்கி, பின்னர் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத்தலைவராக வீற்றிருந்து, புகழ்பெற்ற பல மாணவர்களை உருவாக்கினார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்து அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டுத் தமிழன்னைக்கு அழகு செய்து பார்த்தவர். இவர் காலத்தில் வெளியிட்ட நூல்கள் இன்றளவும் அரிய பார்வை நூல்களாகவும் பாடநூல்களாகவும் உள்ளன. கடும் உழைப்பாளியான இவர் தன் மாணவர்களையும் இவ்வாறு வளர்த்தவர். இன்று புகழ்பெற்று விளங்கும் தமிழறிஞர்கள் பலர் இவர் மாணவர்களாக இருப்பர்.

 அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களால் இதுவரை எழுதப்பெற்ற நூல்களாகத் தமிழில் 54, ஆங்கிலத்தில் 5, மலையாளத்தில் 1 என்ற எண்ணிக்கையில் அமைகின்றன. தமிழகத்தின் எல்லாப் பல்கலைக் கழங்கங்களிலும் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றியுள்ளார். அவை பல நூல்வடிவம் பெற்றுள்ளன.

 தமிழகத்தில் பல கருத்தரங்குகளில் பங்கு பெற்றதுடன் இந்திய அளவிலும், உலக அளவிலும் பல கருத்தரங்குளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். தமிழ்ப் பணிக்காக இவர் இலங்கை, மொரீசியசு, செர்மனி, போலந்து, செக்கோசுலேவியா, சப்பான், ஆங்க்காங்கு, தாய்லாந்து, மணிலா, சிங்கப்பூர், மலேசியா, பாரிசு, இலண்டன், ஏதென்சு, கெய்ரோ போன்ற நாடுகளுக்குச் சென்று வந்த பெருமைக்கு உரியவர்.

 இவர் மேற்பார்வையில் 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழ்ப்பற்று மிக்குடைய பேராசிரியர் அவர்கள் 1985 இல் தமிழூர் என்னும் ஊரை உருவாக்கி அங்கு வாழ்து வருகிறார் (நெல்லை மாவட்டம்). இவர்தம் வீட்டின் பெயர் தமிழகம். இடத்தின் பெயர் தமிழ்நகர்.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1969 இல் திருவள்ளுவர் கல்லூரியை உருவாக்கியவர்.

இராசா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசில் ஓரிலக்கம் உரூவா உள்ளிட்ட பல பரிசில்களைப் பெற்றுள்ளார். தொல்காப்பியச் செம்மல், கம்பன் விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது உள்ளிட்ட விருதுகளும் இவரால் பெருமை பெற்றன. தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்வதிலும், பாடம் சொல்வதிலும் ஒப்பாரின்றி உழைத்தவர். சிலப்பதிகாரம் பேராசிரியரின் உள்ளம் கவர்ந்த நூல் எனில் சாலப் பொருந்தும். சிலம்பினை   இசையுடன் பாடி விளக்கம் சொல்வதில் வல்லவர்.

முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் நூல்கள் :

1. இலக்கிய நினைவுகள் 1964
2.சிலம்பின் சில பரல்கள் 1972
3.இலக்கியக் கனவுகள் 1972
4.மாந்தர் சிறப்பு 1974
5.ஒன்று நன்று 1976
6.அடியார்க்கு நல்லார் உரைத்திறன் 1976
7.இலக்கிய உணர்வுகள் 1978
8.கம்பன் கற்பனை 1978
9.காப்பியப் புனைதிறன் 1979
10.கம்பனும் உலகியல் அறிவும் 1981
11.கம்பன் இலக்கிய உத்திகள் 1982
12.கம்பன் கவித்திறன் 2004
13.இளங்கோவின் இலக்கிய உத்திகள் 1984
14.இலக்கிய வகையும் வடிவும் 1984
15.தமிழ் இலக்கிய வரலாறு 1999
16.சிலப்பதிகாரம் மூலம் 2001
17.சிலப்பதிகாரம் இசைப்பாடல்கள் 2001
18.சிலம்பும் சிந்தாமணியும் 1977
19.திராவிட மொழி இலக்கியங்கள் 1984
20.இளங்கோவும் கம்பனும் 1986
21.தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் 1998
22.தமிழில் விடுகதைகள் 1975
23.தமிழில் விடுகதைக் களஞ்சியம் 2003
24. காந்தி கண்ட மனிதன் 1969
25.பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள் 1982
26.நல்வாழ்க்கை 1992
27.மனிதம் 1995
28.மனமும் உயிரும் 1996
29.உடல் உள்ளம் உயிர் 2004
30.தமிழர் வாழ்வில் தாவரம் 1993
31.கூவநூல் 1980
32.சிலப்பதிகாரம் தெளிவுரை 1998
33.சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப் பாடல் 1993
34.தொல்காப்பியம் தெளிவுரை 1998
35.சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை 2001
36.திருக்குறள் நயவுரை 2001
37.திருமுருகாற்றுப்படை தெளிவுரை 2002
38.சிலப்பதிகாரம் குன்றக்குரவை உரை 2002
39.கானல்வரி உரை 2002
40.பத்துப்பாட்டு உரை 2002
41.இலக்கணத்தொகை எழுத்து 1967
42.இலக்கணத்தொகை சொல் 1970
43.இலக்கணத்தொகை யாப்பு,பாட்டியல் 1978
44.வீரசோழியம் குறிப்புரையுடன் 1977
45.தொன்னூல் விளக்கம் குறிப்புரையுடன் 1978
46.குவலயானந்தம் சந்திரலோகம் 1979
47.பிரபந்த தீபம் 1980
48.தொல்காப்பியப் பதிப்புகள் 1992
49.மொழிக்கட்டுரைகள் 1974
50.சங்க இலக்கியம் 2006
51.மெய்யப்பன் தமிழகராதி 2006
52.தமிழ் இலக்கண நூல்கள் 2007
53.பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 2007
54.பன்னிரு திருமுறைகள் 2007
55.Descriptive Grammar of Chilappathikaram 1975
56.Grammar of Akananuru 1972
57.Studies in Tamil Language and Literature 1973
58..Studies in Tamilology 1982 1982
59.Tolkappiyam in English 2004
60.சிலப்பதிகாரம் வஞ்சிகாண்டம் மலையாளம் 1966

ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் வாழ்க்கை வரலாறு "தமிழ் ஞாயிறு" என்னும் பெயரிலும், "சாதனைச்செம்மல். ச.வே.சு" என்னும் பெயரிலும் நூலாக வெளிவந்துள்ளன.

முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் தொடர்பு முகவரி :

முனைவர் ச.வே.சுப்பிரமணியன்
தமிழூர்,
அடைக்கலப்பட்டணம் அஞ்சல்,
திருநெல்வேலி மாவட்டம்-  627 808
பேசி : 04633 - 270239

தொடர்புடைய பதிவுக்குச் செல்ல இங்கே அழுத்துக

திங்கள், 14 ஜூலை, 2008

என்று மடியும்... குறும்படம் அறிமுகம்



மென்பொருள் துறையில் பணிபுரியும் இளைஞர்கள் பணத் தேடலுக்காக ஊர்,உறவு,வாழ்க்கை இவற்றைத் தொலைத்துக் கிடப்பதை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வண்ணம் என்று மடியும் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.இயக்குநர் முத்துக்குமார்(செல்பேசி எண் : + 9841166519) அவர்கள் இப்படத்தைச் சிறப்பாக எடுத்துள்ளார்.நண்பர்கள் கலைக்கூடம் வழி உருவாகியுள்ள இப்படத்தில் கவிஞர் தமிழியலன் அவர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.இவர் மின்துறையில் பொறியாளராகச் சென்னைக் கோயம்பேட்டில் பணிபுரிகிறார்.

வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தொழிற்சாலை கட்ட ஒரு ஊரில் பெரும்பகுதியான நிலத்தைக் கையகப்படுத்துகிறது.பாதிக்கப்பட்ட விவசாயி கடைசியாக விளைந்து நிற்கும் நெல்கதிரை வருடிக் கொடுப்பதிலிருந்து படம் நகர்கிறது...

சென்னையில் கணிப்பொறி நிறுவனத்தில் பணிபுரியும் தன் மகனுக்குத் தொலைபேசியில் பேச முயன்றும் தந்தைக்கு இணைப்புக் கிடைக்கவில்லை. நேரடியாகப் பார்த்துவிட்டு வரலாம் எனப் பலகாரம் சுட்டுக்கொண்டு நகரத்திற்குப் புறப்படுகிறார்.முகவரி வினவி அறைத் தோழனிடம் கேட்கும் பொழுது மகன் பணியிலிருந்து இன்னும் திரும்பி வரவில்லை என்பதை அறிகிறார்.

அறை முழுவதும் திரை நடிகைகளின் பாலியல் படங்கள் ஒட்டியிருக்கும் காட்சியைக் கண்டு அருவருக்கும் தந்தையார் அலங்கோலமாக இருக்கும் அறையைத் தூய்மை செய்து மகனின் வருகைக்குக் காத்துள்ளார்.நள்ளிரவில் தந்தைக்கு உணவுப் பொட்டலத்துடன் வரும் மகன் களைப்புடன் இருக்கிறான்.அப்பா களைப்பாக இருக்கிறது.குளித்துவிட்டு வருகிறேன் என்று குளியலறைக்குச் செல்கிறான்.அப்பா குடும்ப நிலையைச் சொல்லவும் அம்மா சுட்டுக்கொடுத்த பலகாரங்களை வழங்கவும் முயற்சி செய்கிறார்.மகன் களைப்பால் காலையில் பேசிக்கொள்ளலாம் என அசதியில் படுத்துக்கொள்கிறான்.

விடியற் காலையில் தொலைபேசி அழைப்பு.சார்ச் புஷ் தேவை என அழைப்பு. தொலை பேசியை எடுத்த சிற்றூர் வாழுநரான அப்பா அப்படி யாரும் இல்லேயே என அப்பாவியாக விடைதருகிறார். அது மகனுக்கு அமெரிக்க கம்பெனி தந்துள்ள பெயர் என்பது அவருக்குத் தெரியவில்லை. தொலைபேசியை எடுத்துத் தன் மகனை எழுப்புகிறார்.பத்து நிமிடத்தில் குளித்துவிட்டு காத்திருக்கும் மகிழ்வுந்தில் பறக்கிறான் மகன்.

மகனிடம் பேச முடியாமல் திரும்புகிறார் தந்தையார்.வழியில் தென்படும் மகனின் நண்பன் தான் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவதையும் தன் மனைவி அமெரிக்காவில் பணிபுரிவதையும் வாழ்க்கையில் செட்டிலானதும் குழந்தை பெற்றுக்கொள்ள உள்ளதையும் சொன்னவுடன் எப்பொழுது நீங்கள் வாழப்போகிறீர்கள் என வினவும்பொழுது வாழ்க்கையில் திகைக்கிறான் கணிப்பொறித் தொழில்நுட்ப இளைஞன்.

மெதுவாக அவன் அறைக்குச் செல்வதும் ஏமாற்றத்துடன் தந்தையார் ஊர் திரும்புவதும் எனப் படம் நகர்கிறது.இனிய இசை.காட்சி விளக்கம்,நடிப்பு என அனைத்துக் கூறுகளும் சிறப்பு.நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் இப்படத்தின் இயக்குநரும்,நடிகர் தமிழியலனும் சிறப்புச் செய்யப்பட்டுள்ளனர்.வளரும் கலைஞர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.சமூக மாற்றத்திற்கு உங்கள் படைப்பு உரமாக அமையட்டும்...

வெள்ளி, 11 ஜூலை, 2008

சந்தனக்காடு இயக்குநர் வ.கெளதமன் எங்கள் இல்லத்தில்....

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக்காடு தொடரின் இயக்குநர் திரு.வ.கெளதமன் அவர்கள் எங்கள் அன்பான அழைப்பை ஏற்று இன்று(11.07.2008) மாலை எங்கள் புதுச்சேரி இல்லத்திற்கு வந்தார்கள்.சந்தனக்காடு தொடரின் வெற்றி விழா அழைப்பினை வழங்கி எங்களை நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைத்தமை வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வாகும்.

எங்கள் உரையாடலின் பொழுது 'திரட்டி' உருவாக்குநர் திரு வெங்கடேசு அவர்களும் உடனிருந்தார். நாட்டுப்புறப்பபாடல்கள் பல பாடி எங்கள் ஊரின் பாடல்களை இயக்குநருக்கு அறிமுகம் செய்தேன். மண்ணின் மணம் விரும்பும் இயக்குநர் அவர்கள் என் பாடல்களை ஆர்வமுடன் கேட்டு ஊக்கப்படுத்தினார்.அவர்களின் திரைத்துறை முயற்சிகள் பற்றியும் பல்வேறு திரைப்பட உருவாக்கம்,இலக்கிய முயற்சிகள் பற்றியும் உரையாடினோம்.
இணைய நண்பர்களுக்காக அழைப்பிதழைப் பார்வைக்கு வைத்துள்ளேன்.


வியாழன், 10 ஜூலை, 2008

சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியருக்குப் புதுச்சேரியில் பாராட்டு விழா...

சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் அவர்களுக்குப் புதுச்சேரியில் பாராட்டு விழா நடைபெறுகிறது. புதுச்சேரித் தகவலாளர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் 10.07.2008,வியாழக் கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது.

முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் அவர்கள் சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ள தேசியக்கல்விக் கழகத்தில் தமிழ் மொழி, பண்பாட்டுத்துறைத் தலைவராகப் பணிபுரிகிறார். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பல்வேறு ஆய்வுகளைச் செய்த இவரின் தமிழ்ப்பணியைப் பாராட்டி நடைபெறும் விழாவில் கவிக்கோ கமலக்கண்ணன் தலைமை தாங்குகிறார்.

முனைவர் மு.சுதர்சன் அவர்கள் பாராட்டிச் சான்றிதழ் வழங்கவும், முனைவர் சு.தில்லைவனம், முனைவர் ப.பத்மநாபன் அவர்கள் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர். முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் அவர்கள் ஏற்புரையாற்ற உள்ளார். புதுச்சேரித் தகவலாளர் மன்றம், தொல் இளமுருகு பதிப்பகம் அனைவரையும் வரவேற்று மகிழ்கிறது.

ஞாயிறு, 6 ஜூலை, 2008

தமிழ்மணம் தந்த காசி ஆறுமுகம் தமிழ் ஓசையில் என் கட்டுரை...


தமிழ்ஓசை களஞ்சியம்,06.07.08

உலக மக்களுக்குப் பயன்படும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள்அவர்கள் வாழுங் காலத்தில் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள் என்பதுவரலாறு. உலகம் உருண்டை என்ற கலிலியோ தொடங்கி ஒரு செல் உயிரியிலிருந்து மாந்தன் தோன்றினான் என்ற சார்லசு டார்வின் வரை இதனை நம்மால் அறியமுடிகிறது. இத்தகு கண்டுபிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் தமிழர்கள்என்றால் அடையும் இன்னல்களும் பழிகளும் கணக்கிலடங்காது. அறிஞர் துரைசாமியார் நாயுடு அவர்களின் கண்டுபிடிப்புகள் நம் நாட்டில் போற்றப்படாமையை நினைவிற்கொள்க.

கணிப்பொறி, அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றால் குறிப்பிட்டஒருசாராருக்கு என்று இருந்த நிலையை உடைத்து இன்று தமிழர்கள் அனைவரும்வல்லாண்மை செலுத்தும் ஒரு துறையாகக் கணிப்பொறித்துறை மாறிவருகிறது. ஆனந்தகிருட்டிணன், பொன்னவைக்கோ, அமரர் நா.கோவிந்தசாமி, முத்தெழிலன்,முகுந்து என்று தமிழ்க் கணிப்பொறித் துறையில் குறிப்பிடத் தகுந்தஆளுமைகள் இன்று உலகம் பாராட்டும் வண்ணம் செயல்படுகின்றனர். கணிப்பொறியில் ஆங்கிலத்திற்கு அடுத்த நிலையில் அனைத்து வசதிகளும் தமிழ்மொழியில் கிடைக்கும் வண்ணம் அறிஞர்கள் பலர் பங்களிப்புகளைச் செய்துவருகின்றனர்.

கணிப்பொறியிலும் அதன்வழி இயங்கும் இணையத்திலும் பல வசதிகள் உள்ளன.அவற்றுள் ஒன்று வலைப்பதிவு.வலைப்பதிவுகள் இன்று உலகம் முழுவதும் விவரம் தெரிந்தவர்களால் நன்கு பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க நாட்டுத் தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதில் வலைப்பதிவர்களின் பங்கு மிகுதியாக உள்ளது.

தமிழ் வலைப்பதிவுகள் 2003 இல் அறிமுகம் ஆயின. இணைமதி, மயிலை எழுத்துருக்களில் தொடங்கி, தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்களில் வளர்ந்து,ஒருங்குகுறி எழுத்தின் வருகைக்குப் பிறகு தமிழ் வலைப்பதிவு மிகப் பெரிய வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. தமிழ்வலைப்பதிவு வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்காற்றிய பொறியாளர் ஒருவரை இங்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் இக் கட்டுரைஅமைகிறது.

தமிழ் இணையம் பயன்படுத்துபவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் 'தமிழ்மணம்'. இதனை உருவாக்கியவர் காசிலிங்கம் ஆறுமுகம். 'காசி' எனஅறியப்படுபவர். இவர் கோயமுத்தூருக்கு அருகில் உள்ள வடசித்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திரு. ஆறுமுகம், திருமதி. சரசுவதி. தந்தை சில வகுப்புகள் படித்தவர். தாய் எழுதப் படிக்கத் தெரியாதவர்.

காசி எட்டாம் வகுப்பு வரை வடசித்தூரில் படித்தார்; ஒன்பதும் பத்தும் பொள்ளாச்சியில் படித்தார். பல்தொழில் நுட்பப் படிப்பைப் பொள்ளாச்சி நாச்சிமுத்து பல்தொழிற் கல்லூரியில் படித்தார்(1978-81). கோவை எவெரெசுடு பொறியியல்நிறுவனத்தில் சிலகாலம் பணி. அத்துடனே மாலைநேரத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் பகுதி நேரமாகப் பொறியியல் பட்டப்படிப்பு. இதன் பின்னர் திருவள்ளூரில் இந்துசுதான் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பொருள் வடிவமைப்பாளராகப் பணியில் இணைந்தார். மண்வாரி இயந்திரங்களின் பகுதிகளை வடிவமைக்கும் பணி. ஆறரை ஆண்டுகள் இப்பணியில் இருந்தார். இக்காலத்தில்சென்னை ஐ.ஐ.டியில் தொழில்நுட்பம் முதுகலை(எம்.டெக்) படித்தார்.

பின்னர் கோவை ரூட்சு நிறுவனத்தில் வடிவமைப்பு மேலாளராகப்பணிபுரிந்து அந்நிறுவன வளர்ச்சிக்குப் பல வகையில் உதவியாக இருந்தார்.2000 ஆண்டில் தொழில்நுட்ப இயக்குநர் பொறுப்புக்கு உயர்ந்தார். காசிஅவர்கள் கணினிவழி பொருள் வடிவமைக்கும் நுட்பத்தைச் செயல்படுத்தி தரையைத்தூய்மை செய்யும் பல கருவிகளை வடிவமைத்தார். உலக அளவில் ஏற்றுமதித் தரம்வாய்ந்த பொருள்களை உருவாக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார் காசி. 2000 இல் அந் நிறுவனத்திலிருந்து வெளியேறி சென்னையில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

ஒருவருடம் கணினி வழிவடிவமைப்புகளைப் பகுப்பாய்வு செய்யும் பணிபுரிந்த பிறகு இவரைஅமெரிக்காவிற்கு அனுப்பியது டாடா நிறுவனம். நியூயார்க் மாநிலத்தில் ரோச்சஸ்டர் நகரில் உள்ள, புத்துருவாக்கத்தில் உலகப் புகழ்பெற்றசிராக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பணிபுரிந்தார்.

இருகுழந்தைகள், மனைவியுடன் நான்கு வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தார். முன்னதாகவே ஓய்வு நேரத்தில் முயன்று, 2000 இல் இல்லங்களில் 'சேவை'எனப்படும் இடியாப்பம் செய்வதற்காக புதிய சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து,2001 இல் காப்புரிமைக்கும் விண்ணப்பத்திருந்தார். இக்கருவி பற்றி தனியாகச் செய்தி உள்ளது.

அமெரிக்காவில் வசித்தபோது, காசிக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில்இணைய வசதிகளைப் பயன்படுத்த தொடங்கினார். யாகூ உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கியது. 2003 இல் வலைப்பதிவுகள் அறிமுகம்ஆனது. அயல்நாடுகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் அனுபவங்களை,படைப்புகளை,செய்திகளை வலைப்பதிவில் பதியும் வழக்கத்தில் இருந்தனர்.இவ்வாறு உலகம் முழுவதும் பதியும் தமிழ் வலைப்பதிவர்கள் முகவரியை சில ஆர்வலர்கள் பட்டியலிட்டுத் தங்கள் கணிப்பொறியில் வைத்திருந்தனர்.இப்பட்டியல் வழியாக யார் யார் என்ன செய்திகளைப் பதிந்துள்ளனர் என வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கியது.

வலைப்பதிவு எழுதுபவர்கள் தொழில் நுட்பம்தெரிந்தவர்கள் என்பதால் இலக்கியப் படைப்புகளாக அல்லாமல் பெரும்பாலானவலைப்பதிவுகள் சிறு அனுபவங்கள், பயண அனுபவங்கள், சிறுபடைப்புகளைத் தங்கள் வலைப்பதிவுகளில் இட்டு வைத்தனர்.

காசி ஆறுமுகம்

காசி அவர்களும் சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள் என்றதலைப்பில் தன் வலைப்பதிவை உருவாக்கினார். கருவிகளைப் புத்துருவாக்கம் செய்யும் ஆற்றல் பெற்றிருந்த காசி வலைப் பதிவில் தொடந்து ஈடுபட்டு உலகம் முழுவதும் தமிழில் எழுதும் வலைப்பதிவுகளை இணைப்பது பற்றி சிந்திக்கத்தொடங்கினார். இந்த நேரத்தில் எ-கலப்பை முகுந்து அவர்கள் நியூக்ளியசுஎன்னும் வலைப்பதிவு தொடர்பிலான மென்பொருளைத் தமிழ்ப்படுத்தும்படி இணையம்வழி வேண்டுகோள் விடுத்தார். இப் பணியில் ஈடுபட்டதன்மூலம் வலைப்பதிவுகள் ஒன்றிணைக்கும் முயற்சிக்கான நுட்ப அறிவு காசிக்குக் கிடைத்தது.

ஆதாரப்பூர்வ முதல் வலைப்பதிவு தொடங்கிய கார்த்திகேயன் இராமசாமி(தமிழ்மணத்தை நடத்தும் நிறுவனச் செயலர்) வலைப்பதிவுகளில் முன்னோடியாக விளங்குபவர். நா.கண்ணன், கனடா வெங்கட், மாலன், மதி கந்தசாமி, சுரதா,இராம.கி, பத்ரி உள்ளிட்டவர்கள் தொடக்ககாலத்தில் சிறப்பாக வலைப்பதிவில் இயங்கியுள்ளனர். அக்கால வலைப்பதிவில் செய்தி சொல்வது இயல்பாக இருந்தது. எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவு. செய்திகள் சிறப்பானவையாக இடம்பெற்றன.

தனிமாந்தத் தாக்குதல், மொக்கைப்பதிவு, கும்மிப் பதிவுகள் அதிகம் இல்லை. பழந்தமிழ்க் கட்டுரை, பயண இலக்கியம், புனைவு இலக்கியம், ஆன்மீகம்,பழந்தமிழ் இலக்கியம் பற்றி பல பதிவுகள் இருந்தன. அரசியல், சமூகம் சார்ந்த செய்திகள் இன்றிருப்பதைப்போல அதிகம் இல்லை. முகுந்து, சுரதா, செல்வராசுஉள்ளிட்டவர்கள் தொடக்க காலத்தில் வலைப்பதிவு திரட்டி முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் எனில் பிழையன்று. உலகம் முழுவதும் இம்முயற்சி நடைபெற்றதால் இவற்றைத் துல்லியமாகக் குறிப்பிடுவதில் சிக்கல் உள்ளது.

இந்த சூழலில் புதுமையான வடிவமைப்பு, இயங்குமுறை கொண்டு காசியின்உழைப்பில் தமிழ்மணம்.காம் உருவாகி 2004ஆம் ஆண்டு ஆகசுடு மாதம் பயனுக்குவந்தது. ஓர் ஆண்டுக்குள் பல மாற்றங்களை, வளர்ச்சிகளைப் பெற்றுதமிழ் இணையத்தில் தனக்கென ஒரு தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றது. உலகில்எழுதப்படும் அனைத்துத் தமிழ்ப் பதிவுகளையும் திரட்டித் தரும் தளமாகஅத்தளம் செயல்பட்டது.

இன்று தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகள் மட்டுமன்றித் தமிழின்கிளைமொழிகளான தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்படும் வலைப்பதிவுகளையும் திரட்டித் தரும் தளமாகத் தமிழ்மணம் உள்ளது. நாம்எழுதும் வலைப்பதிவுகளை உடனுக்குடன் திரட்டும் வண்ணம் தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் உள்ளது. தமிழ்மணத்தின் கருவிப் பட்டையை நம் தளத்தில் பொருத்திவிட்டால் நாம் எழுதும் வலைப்பதிவை ஒரு நொடியில் தமிழ்மணம் வழியாகஉலகத்தின் பார்வைக்கு வைக்கமுடியும்.

நம் படைப்புகளைப் படித்த படிப்பாளிகள் நமக்கு எழுதும்மறுமொழிகளையும் தமிழ்மணத்தில் காட்ட வசதி உள்ளது. இன்றைய தமிழ்மணம் தளத்தில் உலகில் நடைபெறும் நிகழ்வுகள் விழி என்னும் தலைப்பில் காணொளியாகக் காட்டும் வசதியும், உலகச்செய்திகள் உடனுக்குடன் காட்டும்படியான வசதிகளும் உள்ளன. உண்மையில் சொல்லப்போனால் உள்ளங்கையில்
உலகம் என்பது தமிழ்மணத்திற்குதான் பொருந்தும். இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பைக் காசி நிகழ்த்தியதால் இணையத்தில் தமிழில் எழுதக்கூடியவர்களின் எண்ணிக்கை மிகுந்தது. உலக வலைப்பக்கத்தில் தமிழ்ப்பக்கங்களின் எண்ணிக்கை
மிகுந்தது.

தமிழ் எழுத்தாளர்கள்/செய்தியாளர்கள்/பத்தியாளர்கள், பொதுவாகச்சொன்னால் வலைப் பதிவாளர்கள், தங்கள் படைப்புகளை எந்தச் சிக்கலும் இல்லாமல் உடனுக்குடன் வெளியுல கிற்குத் தெரிவிக்க முடிந்தது. உலகம் முழுவதும் உள்ளதமிழர்கள் தம் தாய்மொழியில் எழுதப்படும் படைப்புகளை உடனுக்குடன்தெருந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். காசிக்கு உதவியாக ஈரோடுபகுதியிலிருந்து அமெரிக்கா குடிபுகுந்த முனைவர் செல்வராசும், கனடாவிலிருந்து மதி கந்தசாமியும் நிர்வாகத்தில் உதவினார்கள்.

பெரிய ஊடங்கங்கள் தாங்கள் தருவதுதான் உண்மைச் செய்தி என்ற நிலையைமாற்றி உலகின் எந்த மூலையில் வாழும் எவராலும் செய்தியை உடனுக்குடன் உலகின் பார்வைக்குக் கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையைத் தமிழ்மணம் உண்டாக்கியது. இதனால் உடனுக்குடன் உள்ளூர் அரசியல முதல் உலக அரசியல்வரை செய்திகள் பரிமாறப்பட்டன.

சாதி,மத உணர்வு கொண்டவர்கள் செய்த தவறுகள் இணைய அன்பர்களால் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. இருட்டில் நடக்கும் நிகழ்வுகள் அடுத்த நொடியே உலகின் பார்வைக்கு வந்ததால் தவறு செய்தவர்களும்அவர்களுக்கு வேண்டியவர்களும் தமிழ்மண வளர்ச்சியைக் குறிவைத்துத் தாக்கினர்.பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்பினர்.

காசி உள்ளிட்ட அன்பர்கள் பலவகை மன உலைச்சலுக்கு ஆளானார்கள். காசியைப் பற்றி அவதூறுசெய்திகள் பரப்பட்டன. தொடர்ந்து தமிழ்மணத்தை நடத்த விரும்பாத நிலைக்கு காசி வந்துவிட்டார். உலகத் தமிழர்களை இணைத்த தமிழ்மணம் என்ற திரட்டியைஉருவாக்கிய காசிக்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அணிதிரண்டு உதவ நினைத்தனர். இதன் ஒரு விளைவாகத் தனி ஒருவர் நிர்வகிப்பதற்குப் பதிலாக அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிறுவனமான தமிழ் மீடியா இண்டர்நேஷனல் என்னும் நிறுவனம் தமிழ்மணத்தை வாங்கி தன்பொறுப்பில் ஏற்று நிர்வாகம் செய்யப்பட்டுகிறது.

பலநாள் கண்விழித்துத் தமிழ்மணத்தை உருவாக்கிய பொறியாளர் காசிஆறுமுகம் அவர்கள் வலைப்பதிவு வரலாற்றில் என்றும் நிலைத்த புகழ்பெற்றவர்.அமெரிக்கா சென்றால் மிகுதியாகப் பொருளீட்டலாம என நினைக்கும் நம்வெள்ளைக்கார அடிமைக் கணிப்பொறி வல்லுநர்களிலிருந்து வேறுபட்டவர் நம்காசி. அமெரிக்க வாழ்க்கை தம் கண்டுபிடிப்புகளைத் தமிழ்நாட்டிற்குவழங்கவிடாமல் செய்துவிடும் என உணர்ந்து, தமிழகத்திற்கு வந்து ஒப்பந்தப்படி மீண்டும் தாம் பணிபுரிந்து நிறுவனத்தில் ஆறுமாதம் பணிபுரிந்துவிட்டுமுன்பே திட்டமிட்டபடி கோவையில் நண்பர்களுடன் சேர்ந்து நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.

'சேவை மேசிக்' எனப்படும் இடியாப்பக் கருவிகள் செய்யும் நிறுவனம் இப்பொழுது அவரின் நண்பர்களின் பொறுப்பில் சிறப்பாக இயங்குகிறது.

அது என்ன தமிழ்மணம்?

தமிழ் மணம் என்பது உலகம் முழுவதும் தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகளைத் திரட்டித்தரும் இணையத்தளம். தமிழ்ப்பதிவுகள் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்படும் பதிவுகளையும் திரட்டித் தரும். தமிழ் மணத்தில் நாம் நம் மின்னஞ்சல்,வலைப்பக்க முகவரியைத் தந்து பதிவு செய்தால் நாம் வலைப்பதிவு செய்யும் கருத்துகளை ஆராய்ந்து பார்த்து தமிழ்மணம் இணைப்பில் நம் வலைப்பதிவை இணைத்துக்கொள்வார்கள்.மூன்று பதிவுகள் நம் வலைப்பக்கத்தில் இட்ட பிறகே தமிழ்மணத்தில் பதிவு செய்யமுடியும்.

பாலியல்,வன்முறை உள்ளிட்ட சமூகத்திற்குத் தீங்கு தரும் செய்திகளை எழுதுபவரின் பதிவைத் தமிழ்மணம் இணைத்துக்கொள்ளாது. தமிழ்மணத்தில் இதுவரை 3182 பேர் தங்கள் பதிவுகளை இணைத்துக்கொண்டு எழுதி வருகின்றனர்(28.06.2008 நிலவரம்).ஒரு நாளைக்குச் சராசரியாக 505 படைப்புகள் எழுதப்படுகின்றன. 1168 மறுமொழிகள் இடப்படுகின்றன. தமிழில் வலைப்பதிவைத் திரட்டும் முதல் தளமாகவும் அனைவராலும் அறியப்பட்ட தளமாகவும் இருப்பது தமிழ்மணமாகும். அமெரிக்காவில் உள்ள தமிழ் மல்டிமீடியா இண்டர்நேசனல் என்னும் நிறுவனம் இதனை நடத்திவருகிறது. இதற்கென நிருவாக குழு உள்ளது.

தமிழ்மணம் அமைப்பு

தமிழ்மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் தொடர்ந்து தமிழ்மணத்தைநுட்பரீதியாக மேம்படுத்திவருகிறது. இன்றைய தமிழ்மணம் தளம் கண்ணைக் கவரும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு இரு வகையில் மாற்றிக்கொள்ளும்படி உள்ளது. முகப்பு,இடுகைகள்,பதிவுகள்,'ம'திரட்டி,பூக்கூடை,தமிழ்விழி, கேளிர்,மன்றம், உதவி/தகவல் என்னும் அமைப்பில் சிறு தலைப்புகளைப் பெற்றிருக்கும். இன்று என்னும் பகுப்பில் இன்று இடப்பட்டபதிவுகள் மின்னிச்செல்லும் அமைப்பில் இருக்கும். இடப்பக்கமும்,வலப்பக்கமும் பட்டிகளாகவும், நடுவில் ஒரு பகுப்பு செய்திகளுக்கு எனவும்அமைக்கப்பட்டிருக்கும்.

இடப்பக்கப் பட்டையில் விளம்பரம் அறிவிப்புகள்,தமிழ்மணத்தில் இணைக்க, தமிழ்மணம் புள்ளிவிவரம், தமிழில் எழுதுங்கள்,தமிழ் மென்பொருட்கள், சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, பதிவர் பலகை,பதிவர் புத்தங்கங்கள்,பதிவர் முயற்சி, குறிச்சொற்கள் உள்ளிட்ட சில விளக்கக் குறிப்புகள் காணப்படும். இவற்றின் துணையால் நமக்குத் தேவையான
வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வலப்பக்கம் இருக்கும் பட்டையில் மறுமொழிகள்,அனைத்து மறுமொழிகள்,இன்றைய மறுமொழிகள், செய்திகள்,கேளிர் திரட்டி என்னும் குறிப்புகள்இருக்கும். நடுப்பக்கம் உள்ள பட்டையில் பதிவர்பெயர், இடும் செய்திகளின்தலைப்பு,உள்ளடக்கம் ஒரிரு வரி இடம்பெறும்.புதியதாக இணைக்கும் பதிவுகள்புதியது என்று சிவப்பு மையால் தனி அடையாளப்படுத்திக் காட்டப்படும்.

பதிவுகளைத் தமிழ்மணத்தில் இணைக்க அதன் கருவிப்பட்டையை நம்வலப்பதிவுப்பக்கத்தில் இணைத்திருந்தால் உடன் நமது பதிவையும் மறுமொழியையும் தமிழ்மணத்தில் காட்டிவிடமுடியும்.தமிழ்மணத்தின் வழியாகத் தமிழ்ப்பதிவுகளை மட்டும் படிக்க முடியும் என்றில்லை.மலையாளம்,தெலுங்கு,கன்னட மொழியில் உலகம் முழுவதும் எழுதுபவர்களின் பதிவுகளையும் நம்மால் படிக்கமுடியும். பிறமொழி தெரிந்தவர்களுக்குத் தமிழ்மணம் மிகப்பெரிய கொடையாகும். தமிழர்களை இணைக்கும் பணியைச் செய்த காசி ஆறுமுகம் இணைய உலகில் என்றும்நினைவூகூரப்படும் பெயராகும்.

பெட்டிச்செய்தி

காசியின் சேவைமேஜிக் குக்கர்

காசியின் 'சேவைமேஜிக்' என்னும் பொருள் வடிவமைப்பிற்கான எண்ணம் 1999 இல் தோன்றியது. இதனை வடிவமைத்து விற்பனைக்குவிட பெருமளவு பணம் தேவை. எனவே பணம் திரட்ட டாடா கம்பெனி வழியாக அமெரிக்கப் பயணம். ஒரளவு கோவையில் சேவைமேஜிக் தயாரிக்க தொகை சேமித்துக்கொண்டார். இதற்கு முன்பாகவே இக்கருவிக்குக் காப்புரிமை பெற்றுவிட்டார். இரண்டு ஆண்டு உழைப்பு,திட்டமிடலுக்குப் பிறகு கோவையில் புதிய தொழிற்சாலை உருவாக்கும் எண்ணம் செயல்வடிவம் பெற்றது. இடியாப்பம் செய்ய எளிய கருவி இது.

கீழ்ப்பாத்திரம் குக்கர் வடிவம் போன்றது. விளிம்பில் சிறு மாறுபாடு காணப்படும். அதில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவேண்டும்.மூடிசிறப்பு வடிவமைப்பைக் கொண்டிருக்கும். நடுப்பாத்திரத்தில் மாவு ஒட்டாதவகையில் சிறப்புப் பூச்சு இருக்கும். உட்பகுதியின் நடுவில் ஒரு தண்டு இருக்கும். அரைத்த புழுங்கலரிசி மாவை ஊற்றி அடுப்பில் வைத்தால் 20மணித்துளிகளில் மாவு வெந்துவிடும். அதன்பிறகு மேல் பாத்திரத்தில் பிளாசுடிக்கில் செய்யப்பட்ட பாத்திரத்தைப் பொருத்தி குக்கர் வெயிட்டைப் போட்டுவிட்டால் நீராவியின் அழுத்தத்தில் நமக்குச் சிற்றுண்டிக்கு ஏற்ற இடியாப்பம் கிடைக்கும்.

நம் மரபு வழி உணவை மிகச் சிறப்பாகச் செய்ய இக் கண்டுபிடிப்பைக் காசி உருவாக் கியுள்ளார். ரூ.3150 விலையுள்ள சேவை மேஜிக் குக்கர் தன் அதிக அளவு உற்பத்தியை அடையும்பொழுது விலைகுறையும்.இதன் செயல்பாட்டு விளக்கத்தை இணையத்தில் சென்று பார்வையிடலாம்.

(தமிழ் ஓசைக்கு அனுப்பப்பெற்ற கட்டுரையின் மூலவடிவம் இது.கட்டுரை பக்க வரையறை கருதி சில பத்திகள் வெளியிடப்பெறவில்லை.எனவே அனைவருக்கும் பயன்படும் என்ற நோக்கில் முழுமையாக வெளியிடப்பெறுகிறது).

நனி நன்றி : தமிழ்ஓசை களஞ்சியம் 06.07.08 சென்னை,தமிழ்நாடு