நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 31 டிசம்பர், 2008

அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை...


அழகர் கோயில் யானை முகப்பு

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வடக்கே எட்டுக் கல் தொலைவில் உள்ள ஊர் சலுப்பை. அதற்கு முன்பாகவே சத்திரம் என்னும் ஊர் உள்ளது. சலுப்பை - சத்திரம் சந்திக்கும் இடத்தில் புகழ்பெற்ற அழகர் கோயில் உள்ளது. அக்கோயிலில் "துறவுமேல் அழகர்" உள்ளார். துறவியாக வாழ்ந்து அடக்கமான அழகர் இறப்புக்குப் பிறகு இன்றுள்ள கருவறையில் அடக்கம் செய்யப்பட்டது போன்ற தோற்றம் உள்ளதே தவிர அழகருக்கு உருவம் இல்லை.

அழகர் பற்றி வாய்மொழியாகப் பல கதைகள் உள்ளன. முறைப்படி தொகுக்கப்படவில்லை. நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் இதில் கவனம் செலுத்தலாம். அழகர் கடும் சினம் உடையவர் என்றும் இவர், கோயில் அடர்ந்த காசாங் காட்டுக்கு நடுவே இருந்தது எனவும் மூத்தவர்கள் குறிப்பிடுகின்றனர். அச்சமூட்டும் காட்டுக்கு நடுவே அழகர் கோயில் இருந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் யானும் என் தந்தையார், அம்மா, தங்கை உள்ளிட்ட குடும்பத்தினரும் ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்குச் சென்றுள்ளோம்.

எங்கள் இடைக்கட்டு வீட்டிலிருந்து மாளிகைமேடு, கங்கைகொண்டசோழபுரம் வழியே கொல்லைகளின் ஊடாகப் புகுந்து காட்டுவழியில் நடந்து சென்றுவந்த நினைவு உள்ளது. அப்பொழுது அந்தக் கோயில் பற்றி என் அப்பா பல கதைகள் சொல்வார்.

அங்குள்ள கோயிலுக்கு வருபவர்கள் கிடாவெட்டியும் பூசை செய்வது உண்டு. ஆனால் அழகருக்கு அது படைப்பது இல்லை. அழகர் புலால் உணவுக்காரர். அருகில் உள்ள வீரபத்திரசாமி, கருப்பசாமி உள்ளிட்ட பிற சாமிகளுக்குதான் கிடாவெட்டிப் படைப்பர்.  அழகருக்கு சைவமுறையிலான படையல்தானாம்.

சமைத்த ஏனங்களை மக்கள் அங்குள்ள திருக்குளத்தில் போட்டு வந்துவிடுவார்கள். அடுத்த ஆண்டு சென்று அடையாளமாக அதனை எடுத்துச் சமைத்து உண்பார்கள். அதுவரை அந்த ஏனங்களை யாரும் எடுப்பதில்லை. கோயிலுக்குப் பல ஏக்கர் நிலம் உண்டு. சிலர் மட்டும்  வருவாய் தருகின்றனர்.

அழகர் பற்றிய வேறொரு செய்தி.

சத்திரம் என்ற பகுதி கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து வடதிசைச் செல்பவர்கள் தங்கிச் செல்ல உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளைப் பண்டு பெற்றிருந்தது. அதனால் அவ்வூருக்குச் சத்திரம் என்று பெயர். இப்பகுதியில் பார்ப்பனச்சேரி(அக்கிரகாரம்) இருந்துள்ளது. காட்டில் அழகர் சாமி தவத்தில் இருந்ததாகவும் பார்ப்பனப் பெண்கள் இருவர் அங்கு உள்ள கிணற்றில் நீர் எடுக்க வந்ததாகவும் அப்பெண்கள் முனிவர் அருகில் இருந்த குடத்தை எடுத்து தண்ணீர் எடுத்ததாகவும் தவம் கலைந்த முனிவர் அப்பெண்களைக் கிணற்றில் இறக்கும்படி செய்ததாகவும் இறந்த அந்த இரண்டுபெண்களும் தாமரை மலராகக் கிணற்றில் கிடந்ததாகவும் முனிவர் அக்கிணற்றில் இறந்ததாகவும் அக்கிணறுதான் பின்னாளில் வழிபடும் இடமாக மாறியதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். அதன் நினைவாகவே அழகர் கோயில்  உருவாகியுள்ளது.

அக்கிணற்றின் மேல் ஒரு படுக்கைக் கல்தான் இன்றும் மூலவர் நினைவாக வழிபடப்படுகிறதே அல்லால் முனிவருக்குச் சிலை இல்லை. (30.12.2008 களப்பணியில் பெற்ற தகவல். திரு. சேகர் என்பவர் வழி இத்தகவலை உறுதிசெய்துகொண்டேன்).

கோயிலுக்குப் பொங்கலை ஒட்டியும் தை மாதத்திலும் ஆடிமாதத்திலும் வெள்ளிக் கிழமைகளில் மக்கள் கூட்டமாக வந்து வழிபடுகின்றனர். பொங்கல் முடிந்த கரிநாளில் நல்ல கூட்டம் இருக்கும். பல சாதியைச் சேர்ந்த மக்களும் வந்து வழிபடுகின்றனர். செங்குந்தர் இனமக்கள் பலருக்கு இது குல தெய்வமாக உள்ளது. செங்குந்தபுரம், வாரியங்காவல், கொடுக்கூர், குவாகம், இலையூர், ஆண்டிமடம், சின்னவளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் புதுவை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் செங்குந்தர் இனமக்கள் அதிக அளவில் வந்து வழிபடுகின்றனர்.

காலத்திற்கு ஏற்பப் போக்குவரத்திற்கு இன்று சாலை வசதிகள் உண்டு. மீன்சுருட்டியிலிருந்து மேற்கே ஐந்து கல் தொலைவில் உள்ளதால் மீன்சுருட்டியிலிருந்தும் அழகர் கோயிலை அடையலாம்.

இங்கு உள்ள யானைச் சிற்பம் உலகப் புகழ் பெற்றது. இது அழகர் ஏறி ஊர்வலம் செல்லும் பயன்பாட்டிற்கு என அதன் நினைவாக உள்ளது. இதன் காலம் காட்டும் சான்றுகள் அங்கு வைக்கப்படவில்லை. தொல்லியல் துறை இதுபற்றி விளக்கம் குறிப்பிட்டால் பயனாக இருக்கும். கங்கைகொண்டசோழபுரம் சார்ந்த எத்தனையோ வரலாற்றுத் தரவுகள் சிதைந்ததுள்ளன. அச் சிதைவுகள் பலவற்றுள் இதுவும் ஒன்றாகவே உள்ளது.

இச்சிற்பம் தொன்மையானது என்பதால் சிதைந்து காணப்படுகிறது. இச்சிற்பத்தில் இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்கள் காட்டப்படுகின்றனர். அவர்கள் கையில் சங்கு, மத்தளம் உள்ளிட்ட இசைக்கருவிகள் உள்ளன. யானை ஒருவனைத் தன் பிடிக்குள் வைத்திருப்பது போல் உள்ளது. யானையின் மேலே மணிகள் உள்ளிட்ட அழகுக்காட்சி நன்கு உருவாக்கப்பட்டுள்ளளது.

யானையின் தென்புறப் பகுதியில் உள்ள மூன்று மாந்தர்களின் உருவம் சிதைந்துள்ளது. யானையின் உருவமும் சிதைந்துள்ளது. யானையின் கால் பகுதியில் வேலைப்பாடு சிறப்பாக உள்ளது. கழுத்தில் உள்ள மணிகள், அணிகலன்கள் சிறப்பாக உள்ளன. பண்டைக்கால மக்களின் கலை உணர்வு காட்டும் அரிய இதனைப் புதுப்பித்துப் பாதுகாக்கவேண்டும். கங்கைகொண்ட சோழபுரத்திற்குச் சுற்றுலா செல்பவர்கள் குழுவாகச் சென்றுவரலாம்.

இங்குதான் கங்கைகொண்டசோழபுரத்தின் வட எல்லைக் காளிக்கோயில் உள்ளது.

(பின்பும் விரிவாக எழுதுவேன்.என் படங்கள், செய்திகளை எடுத்தாளுவோர் முறைப்படி இசைவு பெறுக. பெயர் குறிப்பிடுக)


யானை முகப்பு(வேறொரு தோற்றம்)


யானை முகப்பு


யானையின் பிடிக்குள் அகப்பட்டவன்


யானையின் வடபுறத் தோற்றம்


யானையின் வலப்புறத்தில் இசைக்கலைஞர்கள்


யானையின் முழுத்தோற்றம்(தென்புறம்)


யானையின் தென்புறத் தோற்றம்(சிதைவு)


கழுத்துப் பகுதி வேலைப்பாடு


யானையின் கால் பகுதியில் அழகிய வேலைப்பாடு


யானைக்கழுத்தில் அணிகலன்கள்


யானைக்கழுத்தில் அணிகலன்கள்


அழகர்கோயில் திருக்குளம்


புகழ்பெற்ற காளியின் சிலை(அழகர் கோயில்)

நன்றி :
திரு.சொ.அழகுவேல், உள்கோட்டை.

ஞாயிறு, 28 டிசம்பர், 2008

அலெக்சாண்டர் மிகையுலுவிச் துபியான்சுகி


அறிஞர் அலெக்சாண்டர் துபியான்சுகி

  சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கு முன் யான் பணிபுரிந்து கொண்டிருந்தேன். நிறுவனத்தில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் அந்நாளைய தமிழக முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அடுக்குமொழியில் அழகிய தமிழில் பேசினார்கள். தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களும் மிகச்சிறப்பாக உரையாற்றினார்கள். இவ்விருவர் பேச்சசையும் அறிஞர்கள் கேட்டு மகிழ்ந்தனர். நிறைவில் சிவப்பு நிறத் தோற்றமுடைய ஒரு மேல்நாட்டு அறிஞர் சிறப்புரையாகப் பேச எழுந்தார். இவர் ஆங்கிலத்தில் பேசுவாரா? இவருக்குத் தமிழ் தெரியுமா? என அவையினர் ஆர்வமுடன் அவர் எப்படிப் பேசுவார் என உற்று நோக்கிய வண்ணம் இருந்தனர்.

தூயதமிழில் உரையாற்ற நினைத்த அந்த மேல்நாட்டு அறிஞர் கலைஞர் அவர்கள் பேசிய தமிழ்ப் பேச்சிலும் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் பேசிய தமிழ்ப் பேச்சிலும் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளதை எடுத்துச் சொல்லித் தூய தமிழில் பேசும்படி அனைவரையும் வேண்டியதும் கலைஞர் உள்ளிட்ட அனைவரும் ஆர்ப்பரித்துக் கைதட்டி மகிழ்ந்தனர்.

பிறமொழிச்சொற்கள் கலவாமல் தூயதமிழில் உரையாற்றிய அந்த அறிஞர் அலெக்சாண்டர் துபியான்சுகி அவர்கள் ஆவார். உருசியநாட்டைச் சார்ந்தவர். மாசுகோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிய ஆப்பிரிக்கவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ் இலக்கியங்கள் பல உருசியமொழியில் மொழிபெயர்ப்பாவதற்குக் காரணமாக இருந்தவர். உருசிய மாணவர்கள் பலருக்குத் தமிழ்மொழியையும் இலக்கியங்களையும் கற்பித்தவர். அதுபோல் தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆங்கிலத்திலும் உருசிய மொழியிலும் பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டவர். தமிழைப் பேசவும் எழுதவும் படிக்கவும் நன்கு அறிந்த அலெக்சாண்டர் துபியான்சுகி அவர்களைப் பற்றி இங்கு எண்ணிப் பார்ப்போம்.

உருசிய நாட்டின் மாசுகோவில் 1941 இல் பிறந்தவர் துபியான்சுகி அவர்கள். இவரின் பெற்றோர் பெயர் மிகையல், கெலன் ஆவர். துபியான்சுகி 1965 இல் மாசுகோ பல்கலைக் கழகத்தில் படிப்பதற்குச் சேர்ந்தார். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் கல்லூரியில் சேர்ந்து தமிழ் படித்தார்.

1950 முதல் 1990 வரை இந்தியாவிற்கும் உருசியாவிற்கும் இடையில் மிகச் சிறந்த உறவு இருந்தது. உருசியாவில் தமிழ்நூல்கள் பல பதிப்பிக்கப்பட்டன. தமிழ் வானொலி செயல்பட்டது. தமிழர்கள் பலர் தமிழ் நூல்கள் பதிப்பித்தல் உள்ளிட்ட பல பணிகளுக்கு உருசியா சென்றனர். அவர்கள் உருசியர் பலருக்குத் தமிழ் சொல்லித் தந்தனர். உருசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் மேல்படிப்புக்கு இந்தியாவிற்கு (தமிழகத்திற்கு) வந்தனர். உருசியத் தமிழ் வானொலியில் மணிவர்மன், பூர்ணம் சோமசுந்தரம் ஆகியோர் தமிழ் அறிவிப்பாளர்களாகப் பணிபுரிந்தனர்.

உருசியா நாட்டுச் செய்திகளைத் தமிழில் அறிவிப்புச் செய்வது இவர்களின் பணி. இவர்கள் வழியாகவும் துபியான்சுகி தமிழ் கற்றார். பல்கலைக் கழகத்தில் ஐந்தாண்டுகள் தமிழ் படித்தார்.

1973 இல் மாசுகோ பல்கலைக்கழகத்தில் துபியான்சுகி பேராசிரியர் பணியில் இணைந்தார். துபியான்சுகி அவர்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட உருசியர்கள் தமிழ் கற்றுள்ளனர். முதுகலைத் தரத்தில் உள்ள மாணவர்கள் தமிழ் கற்க இவரிடம் வருவர். தமிழ் கற்ற பிறகு இவர்கள் வானொலியின் தமிழ்ப்பிரிவில் பணிபுரிவர். உருசியர்கள் தமிழை எழுதுவார்கள். படிப்பார்கள். பேசத் தயங்குவார்கள். எனவே இவர் பேசக் கற்றுத் தருவதில்லை.

தமிழ் படித்த உருசியர்கள் பலர் தங்கள் பெயரைத் தமிழ்ப்படுத்தி அழைத்ததும் உண்டு. அவ்வகையில் குளோசப் என்பவர் கண்ணன் எனவும், பெத்திகோசுகி என்பவர் ஐங்குன்றன் எனவும் ருதின் என்பவர் செம்பியன் எனவும் துபியான்சுகி அலெக்சந்திரன் எனவும் விக்டர் மினின் என்பவர் மீனவன் எனவும் பெயர் மாற்றிக்கொண்டவர்கள். திருமதி கத்தியானா என்பவர் வானொலி அறிவிப்பாளராக இருந்து தமிழை நன்கு பேசுவார்.

உருசிய வானொலி என்பது அயல்நாட்டு மக்களுக்கான ஒலிபரப்பாகத் திகழ்ந்தது. உருசியாவில் கேட்பதில் தொழில் நுட்பச் சிக்கல் இருந்தது. ஆனால் இந்தியாவில் கேட்க முடியும். உள்நாட்டுச் செய்திகள், சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகியுள்ளன. தமிழ் வானொலிப் பிரிவு வெள்ளிவிழா கண்ட சிறப்பிற்கு உரியது. இந்தி, உருது, வங்காளி மொழிகளில் உருசியாவில் இன்றும் ஒலிபரப்பு உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலிய மொழிகள் முன்பு ஒலிபரப்பில் பயன்படுத்தப்பட்டன. உருசிய நாடு சிதைந்த பிறகு இம்மொழி ஒலிபரப்புகள் நிறுத்தப்பட்டன. தமிழில் ஒலிபரப்புத் தடைப்பட்டதற்குக் காரணம் நிதி இல்லை என்கின்றனர். முன்பு உருசியாவுக்குச் சென்று படிக்க நிதியுதவி கிடைத்தது. இன்று பணம் கட்டிதான் நாம் படிக்கமுடியும்.

துபியான்சுகி அவர்கள் மிகச்சிறந்த தமிழறிவு, ஆங்கில அறிவு, உருசிய மொழியறிவு பெற்றிருந்தாலும் பொருளாதாரச் சூழலில் அவர் பல இடங்களில் பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளார். அந்த அளவு பணம் அங்குப் பெரிய தேவையாக உள்ளது. உருசியாவைப் பொறுத்தவரை பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்குச் சம்பளம் மிகக் குறைவாகும். துபியான்சுகி அவர்கள் நன்கு இசையறிந்தவர். சில காலம் இராணுவத்தில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

அசெல்சாண்டர் துபியான்சுகி அவர்களின் மனைவி பெயர் நத்தாலியா என்பதாகும். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. அவர் பெயர் தான்யா. இவர்களைச் சந்திக்கவே எனக்கு நேரம் கிடைக்காது. அனைவரும் வேறு வேறு நேரங்களில் வெளியே செல்வதும் வீட்டுக்கு வருவதுமாக இருப்போம். ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசும் வாய்ப்பு வாரக் கணக்கில்தான் அமையும். அப்படி இருக்க  இவர்களுக்குத் தமிழ் கற்பிக்க முடிவில்லை என்பார்.

என் மனைவிக்கு இசை தெரியும். பல்கலைக்கழகத்தில் மகள் இந்தி படித்தாள். இந்தி மட்டும் படிக்கப் பல்கலைக்கழகத்தில் வசதி இருப்பதால் இந்தி படித்தாள் என்றார். தமிழகத்திற்கு முதன்முதல் 1979 இல் வந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இலக்கியம் படித்தவர். பேராசிரியர் சஞ்சீவி அவர்களிடத்தில் தொடக்கத்தில் தமிழ் கற்றவர். புறநானூறு அவரிடம் படித்தவர். தத்துவம், அரசியல் பற்றியெல்லாம் அவரிடம் தெரிந்து கொண்டவர்.

இவரின் மாணவி ஒருவர் முக்கூடற்பள்ளு பற்றி அவரிடம் திட்டப்பணி மேற்கொண்டிருந்தார். முக்கூடற்பள்ளு உருசியமொழியில் மொழிபெயர்க்கப்பட்டாலும் நிதி வாய்ப்பு இல்லாததால் வெளிவரவில்லை. பின்னர் முனைவர் பொற்கோ அவர்களிடம் தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்களைத் துபியான்சுகி கற்றவர். (அயல்நாட்டு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்க முனைவர் பொற்கோ அவர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழக ஆளவை தனி ஆணை வழங்கியது).

துபியான்சுகி அவர்கள் தமிழிலுள்ள அகத்துறைப் பாடல்களைப் பற்றி ஆய்வு செய்தவர். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட முறை தமிழகம் வந்துள்ளார். சில பயணங்களின்பொழுது தன் மாணவிகளையும் தமிழகத்திற்கு அழைத்துவந்து தமிழ் மொழி, இனம் பற்றி அறிய வைத்தார்.

தமிழ் இலக்கியம் ஒரு பார்வை, பனை ஓலையில் பாடல்கள், பழந்தமிழ் இலக்கியங்களில் சடங்குகளும் தொல்புனைகதைகளும் (Ritual and Mythological Sources of the Early Tamil Poetry) முதலிய நூல்களை இவர் உருசிய மொழியில் வெளியிட்டுள்ளார். பத்துப்பாட்டு, தமிழின் அகப்பொருள் பாடல்களின் அமைப்பு, பத்தினி வழிபாடு, சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம், உலக இலக்கியங்களில் ஒன்றான தமிழ் இலக்கியம், பாரதியின் தேசபக்திப் பாடல்கள் என்னும் தலைப்புகளில் உருசிய மொழியில் கட்டுரைகள் எழுதியுள்ளார். சிலப்பதிகாரக் கதையும் அமைப்பும், குறிஞ்சிப்பாட்டு, சங்க நெய்தல் பாடல்கள், பழந்தமிழில் காஞ்சி, செவ்வியல் தமிழ் இலக்கியத்தில் நொச்சி, உழிஞைச் செய்திகள் முதலியவை பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை தீட்டியுள்ளதாக மலையமான் எழுதியுள்ளார்.

உலகின் பழைமையான மொழிகளுள் தமிழ் முதன்மையானது என்னும் நம்பிக்கையுடையவர். எட்டாவது உலகத் தமிழ்மாநாடு, கந்த முருகன் மாநாடு, சமணசமயக் கருத்தரங்கு (வேலூர் அடுத்துள்ள திருமலையில் நடந்தது), ஆசியவியல் நிறுவனத்தில் நடந்த செம்மொழிக் கருத்தரங்கு, புதுவை பிரஞ்சு ஆய்வு நிறுவனம் நடத்திய குளிர்கால ஆய்வரங்கு (சீவக சிந்தாமணி பற்றி உரையாற்றியவர்) உள்ளிட்ட பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டவர். பல நாடுகளுக்குச் சென்ற பெருமைக்குரியவர்.

திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி இரண்டையும் மொழிபெயர்த்துள்ளார். சுவடிப் பாடல்கள் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புநானூறு பாடல்கள் பகுதி பகுதியாக உருசியமொழியில் வெளிவந்துள்ளன. மாசுகோ நூலகத்தில் இவை உள்ளன. இவரும் ஒரு கவிஞரும் இணைந்து இந்தப் பணியைச் செய்துள்ளனர். குளாசப் என்பவர் திருக்குறள், சிலப்பதிகாரத்தை உருசிய மொழியில் மொழிபெயர்த்துள்ளதமையும் துபியான்சுகி அவர்களின் மாணவி ஒருவர் சிலப்பதிகாரத்தின் கதை, மக்கள் கதையாகக் கண்ணகி நாடகம் என்ற பெயரில் உலவுவதை ஆராய்ந்துள்ளமையும் கூடுதல் தகவல்களாகும்.

சிலப்பதிகாரம் சிறந்த நூல் என்று குறிப்பிடும் துபியான்சுகி நன்கு இதனைக் கற்றுள்ளார். தமிழ் இலக்கியத்தில் முதல் கதைநூல் இது. தமிழ்ப் பண்பாட்டின் வடமொழிப் பண்பாட்டின் கலப்பு இதில் காணப்படுகிறது. சமற்கிருத இலக்கியத்தின் தாக்கம் இதில் காணப்படுகிறது. சிலப்பதிகாரம் பற்றி இன்னும் நல்ல ஆய்வுகள் வெளிவரவில்லை. சிலப்பதிகாரத்தை நான் உருசிய மொழியில் மொழிபெயர்க்க உள்ளேன் என்றார். இதில் உள்ள கலைச் சொற்களைப் பற்றிய போதிய அறிவு எனக்கு இல்லை. என்றாலும் முயற்சி செய்து மொழிபெயர்ப்பேன்.

கதையமைப்பு, கதையோட்டம் இவற்றில் கவனம் செலுத்தி மொழிபெயர்ப்பைச் சிறப்பாக்குவேன். தமிழ் யாப்பை அப்படியே கொண்டு செல்ல முடியாது. வசனத்தில் கொண்டுபோனால் அழகு போய்விடும். தமிழின் அதே வடிவத்தில் கொண்டு செல்வது என் இலக்கு. அதற்கு நேரம் இல்லை என்கிறார். இந்த அறிவியல் தொழில்நுட்ப உலகின் அறிவுபெற்றவர்கள் மொழிபெயர்த்தால் சிறப்பாக இருக்கும் என்பது அவர் கருத்து.

பாரதியார் பாடல்களைப் பூர்ணிகா என்பவர் மொழி பெயர்த்தார். நவீன இலக்கியத்தில் அக்கறைகொண்டு பல மொழிபெயர்ப்புகளைச் செய்தார். பாரதியார். பாரதிதாசன். செயகாந்தன் உள்ளிட்டவர்களின் படைப்புகள் உருசியமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாவேந்தரின் சில படைப்புகளைப் படித்துள்ளேன். அழகின் சிரிப்பு சிறந்த நூல். அதனை மொழிபெயர்க்க வேண்டுமெனில் ஒரு கவிஞராக இருந்தால்தான் மொழிபெயர்க்கமுடியும். நான் கவிஞன் இல்லை என்கிறார். தற்காலப் புதினங்களை மொழிபெயர்க்கவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. புளியமரத்தின் கதை (சுந்தர ராமசாமி) புதினத்தை மொழிபெயர்க்க நினைத்துள்ளேன் என்கிறார்.

தமிழில் பல நூல்களை இவர் படித்தாலும் தமிழில் எனக்குப் பிடித்தமான நூல் நளவெண்பாவாகும் என்கிறார். இதனை மொழிபெயர்க்க நினைத்துள்ளார். வெண்பா வடிவம் இவருக்குப் பிடித்தமான ஒரு வடிவம். கம்பராமாயணம் பகுதி பகுதியாகப் படித்துள்ளேன். மாசுகோவில் நூல் இல்லை. சென்றமுறை வந்தபொழுது வாங்கிச் சென்றேன். மூலம் மட்டும் உள்ளது. உரையுடன் இருந்தால் நல்லது என்று தன் இலக்கிய ஆர்வத்தைப் பகிர்ந்துகொண்டார்.

தமிழக உணவுவகைகள் தனக்குப் பிடிக்கும். அதுபோல் தமிழர்களின் கலைகள் ஆடல் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். உருசியாவிலும் இதுபோன்ற நாட்டுப்புறக் கலைகள் உண்டு. பாடல்கள் உண்டு. தனியே இதற்கென விரிவான ஆய்வுகள் நடந்துள்ளன என்றார். தமிழகத்துடன் தொடர்பில் இருந்த உருசிய அறிஞர்கள் யார் யார்? என்று வினவியபொழுது, உருதின் என்ற அறிஞரை இவர் குறிப்பிடுகிறார்.

உருதின் தமிழை நன்கு எழுதவும், பேசவும் படிக்கவுமானவராக விளங்கியவர் என்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் நல்ல தொடர்பில் இருந்தவர். செம்பியன் என்று தமிழ்ப்பெயர் தாங்கியவர் இளம் அகவையில் இறந்துவிட்டார். இலெனின் கிராடில் வசித்துவந்தார். நான் சங்க இலக்கியம் படிக்க விரும்பியபொழுது உதவினார். இலெனின் கிராடில் தங்கி, அவர் வீட்டுக்கு வாரம் மூன்றுநாள் சென்று நற்றிணை, குறுந்தொகை படித்தேன். வங்காளம், இந்தி மொழிகளை உருதின் முதலில் படித்தவர். பின்னர் தமிழ் படித்தார். அதன் பின்னர் மலையாளம் படித்தார், 1968 இல் சென்னை வந்தவர். மு.வ. அவர்களிடம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். தமிழகம் முழுவதும் சுற்றிப் பார்த்தவர் என்று மூத்த தமிழறிஞர் உருதினை நினைவுகூர்ந்தார்.

தமிழில் பிறமொழிச்சொற்கள் கலந்துள்ளது பற்றி வினவியபொழுது, பேச்சுத் தமிழில் பிறமொழிச்சொற்கள் கலந்துள்ளன. தமிழ் உயிருள்ள மொழி. உயிருள்ள மொழியில் பிற மொழிச்சொற்கள் கலப்பது இயல்பு. தனித்தமிழ் இயக்கம்போல் உருசிய மொழியிலும் பிறமொழி கலவாமல் பேசவேண்டும் என்ற இயக்கம் உள்ளது. ஆனால் மக்களிடம் வெற்றிபெற முடியவில்லை என்றார்.

அலெக்சாண்டர் துபியான்சுகி அவர்கள் உருதினுக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லத் தக்க தமிழறிஞராக உருசியாவில் விளங்குகிறார். அமைதியும் அடக்கமும் நிறைந்தவர். கொடுத்த பணிகளையும் எடுத்த பணிகளையும் திறம்பட முடித்துக் காட்டுபவர். தமிழ்மொழி, இலக்கியம், இலக்கணம் பற்றி நுட்பமாக அறிந்தவர். தொடர்ந்து தமிழாய்வுகளில் ஈடுபட்டு வருபவர். இவர்களின் தமிழ்ப்பணியைத் தமிழக, இந்திய அரசுகள் இயன்ற வகைககளில் ஊக்குவிக்கவேண்டும். தமிழைச் செம்மொழித் தமிழாக உலகம் உணர இவர் பணி உதவும்.


துபியான்சுகி தமிழக மாணவர்களுடன்


துபியான்சுகி,ஆசிரியர் கி.வீரமணியுடன்


தமிழ் ஓசை - களஞ்சியம்(28.12.08)


துபியான்சுகி நூல்

நனி நன்றி :

தமிழ் ஓசை: களஞ்சியம், அயலகத் தமிழறிஞர் தொடர் 14, சென்னை, 28.12.2008
முனைவர் பொற்கோ
The Hindu
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

(பத்தாண்டுகளுக்கு முன் என்னால் எடுக்கப்பட்ட நேர்காணல் அடிப்படையில் சில செய்திகள் பதிவாகியுள்ளன. புதுப்பிக்கப்பட்ட செய்திகளாக அவை அமையும்பொழுது சிறப்புறும்).

வெள்ளி, 26 டிசம்பர், 2008

கங்கைகொண்டசோழபுரம் - மாளிகை மேட்டு அகழ்வாராய்ச்சி நிலை...


மாளிகைமேடு திசைகாட்டிப் பலகை

கங்கைகொண்ட சோழபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் இராசேந்திரசோழன் மாளிகை அமைத்து அரசாட்சி செலுத்தினான்(கி.பி.10 ஆம் நூற்.) என்பதை வரலாற்றில் நீங்கள்
படித்திருக்கலாம்.

கங்கைகொண்டசோழபுரம் சற்றொப்ப முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கெல்லாம் தலைநகராக விளங்கியது.இந்தியா,இலங்கை,மலேசியா(கடாரம்), நக்கவாரம்(நிக்கோபார்),கம்போடியா உள்ளிட்ட பகுதிகள் இந்த ஊரிலிருந்து ஆட்சி செய்த அரசர்களுக்குக் கட்டுண்டு கிடந்தது.

பாண்டியப் பேரரசின் எழுச்சியால் வீழ்ச்சியுற்ற சோழப் பேரரசு கால ஓட்டத்தில் இல்லாமல் போனது.மாளிகைகள் மண்மேடாயின.கங்கைகொண்டசோழபுரம் கோயில் மட்டும் சிதைவுகளுடன் எஞ்சி நிற்கின்றது.(பிச்சாவரம் பகுதியில் அரச குடும்பம் சார்ந்த மக்கள் வாழ்வதாக அறிஞர்கள் நம்புகின்றனர்.)

இந்த நிலையில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்ற ம.கோ.இரா அவர்களின் ஆட்சியில்(1980அளவில்) கங்கைகொண்ட சோழபுரம்,மாளிகைமேடு அகழாய்வு வேகம் பெற்றது. இராசேந்திர சோழனின் பிறந்தநாள் விழா கங்கைகொண்டசோழபுரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கருத்தரங்குகள்,மேடைநிகழ்வுகள் நடந்ததால் மக்களிடம் மிகச்சிறந்த வரலாற்று விழிப்புணர்ச்சி ஏற்பட்டது.

கங்கைகொண்ட சோழபுரத்திற்கு எனச் சென்னையிலிருந்து பேருந்து இயக்கப் பெற்றது. அகழாய்வு வழியக மாளிகைமேடு,கங்கைகொண்டசோழபுரத்தின் சிறப்பு வெளியுலகிற்குத் தெரியவந்தது.ஆனால் அகழாய்வுப்பணி இடையில் நின்றுவிட்டது.பாதுகாக்கப்படவேண்டிய அகழாய்வுக் குழிகள் மழைநீர் தேங்கி எருமைமாடுகள் விழுந்து புரளும் இடமாகிவிட்டன.

சிலைகள் மழையிலும் வெயிலிலும் கவனிப்பாரற்றுச் சிதைந்து வருகின்றன.உலக நாடுகள் அகழாய்வுக்கு எந்த அளவு முதன்மை வழங்குகின்றன என்பதைப் படித்த,பார்த்த என் உள்ளம் அண்மையில் மாளிகைமேட்டைக் கண்ட பொழுது வாடி வருந்தியது.தமிழக வரலாற்றுத் தடயங்கள் பாதுகாக்கப்படாமல் உள்ளதை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்க கீழ்வரும் சில படங்களை உங்களுக்கு வழங்குகிறேன்.


அகழாய்வுப் பகுதிக்குச் செல்லும் வழி


நீர் நிரம்பிய அகழாய்வுக்குழிகள்


அகழாய்வுச் சுவரும் தண்ணீரும்


மடுபோல் காட்சிதரும் ஆய்வுக்குழிகள்


தண்ணீரில் முகம் பார்க்கும் சுவர்கள்


சிதைந்த காப்புச்சுவர்


தண்ணீர் சூழ்ந்த சுவர்கள்


அகழாய்வுக்குழி வேறொரு தோற்றம்


கற்சிலைகள் காப்பகம்


ஆலமர்செல்வன்


தலை இல்லா அழகிய சிலை


தலை இல்லா அழகிய சிலை


சிதைந்த சிலை


தலையில்லாத தேவி சிலை

செவ்வாய், 23 டிசம்பர், 2008

எங்கள் ஊர் திரைப்பா ஆசிரியர் கு.ம.கிருட்டினன்...


கு.ம.கிருட்டினன்

எங்கள் ஊருக்குச் செல்லும்பொழுது குருகாவலப்பர் கோயிலில் இறங்கி, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எங்கள் வீட்டுவரியைக் கட்டிவிட்டுத் திரும்பிப் பார்த்தால் என்னுடன் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை (1977-82) ஒன்றாகப் பயின்ற நண்பர் கமலக்கண்ணன் நின்றார். அவரிடம் நம் ஊரில் கு.ம.கிருட்டினன் என்பவர் இருந்தார். அவர் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியுமா? என வினவினேன்.

உடன் கமலக்கண்ணன், அவர் என் சிற்றப்பாதான் என உரைத்ததுடன் இப்பொழுது சென்னையிலிருந்து வந்து இங்குதான் உள்ளார் என்றார். அவரைப் பார்க்க வேண்டுமே எனச் சொன்னவுடன் அருகில் இருந்த கவிஞரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். முப்பதாண்டுகளுக்கு முன் முகிழ்த்த எங்கள் நட்பை அசைபோட்டபடி கவிஞர் வீட்டுக்குச் சென்றோம்.

மிகவும் குறுகலான சந்தில் அமைந்துள்ள வீட்டில் ஒரமாகச் சிறு தாழ்வாரத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கவிஞர். சவுக்குக் குச்சிகள் அடுப்புக்கு அருகில் ஒடித்து வைக்கப்படிருந்தன. அடுப்புக்கு அருகில் ஒரு நாற்காலி கொண்டு வந்துபோட்டு அமர்ந்தார். எனக்கும் ஒரு இருக்கை கிடைத்தது. நண்பர் கமலக்கண்ணன் என்னை அறிமுகம் செய்து வைத்துவிட்டு, கீழே அமர்ந்துகொண்டார். அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் கவிஞரைத் தேடி ஆள் வந்துள்ளதை மகிழ்ச்சியோடு பார்த்துப் பேசியபடி சென்றனர்.


கவிஞரின் குடும்பப் பின்புலம் காட்டும் வீடு

நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்துள்ளதைக் கூறினேன்.கவிஞருக்கும் என்னைச் சந்தித்தது நினைவுக்கு வந்தது. இப்பொழுது என் வருகையின் நோக்கம் பற்றி சொன்னதும் தன் வாழ்வை மெதுவாக அசைபோட்டார். சென்னையில் ஆண்டின் பெரும்பகுதி தங்கித் திரைத்தொழிலைக் கவனிக்கும் கவிஞர் சில மாதங்களுக்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வதை அறியமுடிந்தது. இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படும் நம் கவிஞர் அவர்கள் பாடல், நடிப்பு, இயக்கம், உரையாடல், கதை எனப் பல துறைகளிலும் வல்லவர். முறையாக நடிப்புப் பயிற்சி பெற்றவர். இப்பொழுதும் சிறிய திரைகளில் பணிபுரிகிறார்.

கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள குருகாவலப்பர் கோயிலில் மருதமுத்து, செல்லம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்து இப்பொழுது எழுபது அகவையை நெருங்கும் கவிஞர் சற்று மெலிந்த தோற்றமுடையவர். கங்கைகொண்ட சோழபுரம் பள்ளியில் தொடக்கக் கல்வியும் செயங்கொண்டம் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரையும் பயின்றவர்.

கவிதைத்துறையில் உங்களுக்கு நாட்டம் எப்படி ஏற்பட்டது? என்றேன்.

உயர்நிலைப்பள்ளியில் படித்தது முதல் தமிழில் ஆர்வமுடன் படித்தேன். 6, 7 ஆம் வகுப்புகளிலேயே கவிதை எழுதும் ஆர்வம்தொடங்கிவிட்டது. பாரதியார், பாரதிதாசன் கவிதைகளில் நல்ல பயிற்சி இருந்ததால் இயல்பாகப் பாட்டுத் துறையில் எனக்கு நாட்டம் ஏற்பட்டது.

செயங்கொண்டம் பள்ளியில் அந்நாளில் தமிழாசிரியர்களாகப் பணிபுரிந்த நமச்சிவாயம், ப.அரங்கநாதன், நடேச முதலியார், பூவராகசாமி உள்ளிட்ட தமிழாசிரியர் பெருமக்களின் நெறிப்படுத்தலில் தமிழ்ப் பாட்டுத்துறையில் ஈடுபாடு கொண்டேன். ஆசிரியர் நமச்சிவாயம் அவர்களிடம் நான் எழுதிய கவிதைகளைக் காட்டித் திருத்திக்கொள்வேன். சிற்றூரில் படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்த என்னைத் தமிழாசிரியர்கள் அனைவரும் முறையாகத் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து படிக்க வலியுறுத்தினர்.

ஆசிரியர்களின் தூண்டுதல் எனக்குத் தமிழ்க்கல்வி படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. அருகில் இருந்த தமிழ்க் கலூரிக்குக் கவிதையில் விண்ணப்பம் போட்டேன். கல்லூரி முதல்வர் தமிழுக்கு முதன்மையளிப்பவர். உடன் அழைத்துக் கல்லூரியில் இடம்கொடுத்தார். கல்லூரியில் சேர்ந்த எனக்குக் கல்லூரியில் நிலவிய கடவுள் பற்று, சமயச் சடங்குள், கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை. அதன் காரணமாகக் கல்லூரியிலிருந்து சில நாளில் வெளியேறி விட்டேன். என் உள்ளத்தில் இருந்த திராவிட இயக்கக் கருத்துகளும் தன்மான உணர்வும் இவ்வாறு செய்யத் தூண்டின. பெரியார் கருத்துகள், அண்ணாவின் கொள்கை, பாவேந்தரின் பாடல்களில் தோய்ந்த நான் கல்லூரியிலிருந்து வெளியேறியதில் வியப்பொன்றும் இல்லை.

கல்லூரிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் ஆர்வத்தின் காரணமாக யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களை நானே படித்துப் புலமையை வளர்த்துக்கொண்டேன். அதனால்தான் இலக்கண மரபு வழுவாமல் பாடல் எழுதுவதில் இன்றும் வெற்றிபெறுகிறேன் என்றார்.


கு.ம.கிருட்டினன்


அடிக்கடி பனிக்காலச் சாரல் காரணமாக கவிஞர் இடையிடையே இருமலுடன் போராட வேண்டியிருந்தது.

புதுக்கவிதைக்காரர்களின் போராட்டம் ஓய்ந்துபோனாலும் அவர்களைப் பற்றி நினைவூட்டினேன்.

புதுக்கவிதைக்காரர்களைக் கடுமையாகச் சாடும் கு.ம.கிருட்டிணன் அவர்கள் "எழுத்தடுக்கிச் சேர்ப்பதெல்லாம் கவிதை யானால் எழுதுகின்ற மடயனெல்லாம் கவிஞன் ஆவான்" என்று எழுதியுள்ளேன் என்றார். வாரியார் சுவாமிகளிடத்து எனக்கு அளவற்ற அன்பு உண்டு. கண்ணதாசன், பிறைசூடன், சகசரநாமம், உள்ளிட்டவர்களுடன் நன்கு பழகியுள்ளேன். திரைத்துறையில் கடும் போட்டி நிலவியதால் எனக்கு அளவுக்கு அதிகமான திறமை இருந்தும் அங்குள்ள சவால்களைச் சமாளிக்கத் தெரியவில்லை.என் சிற்றூர்ப்புறத்து வாழ்க்கையும் இதற்கு ஒரு காரணம்.

திராவிட இயக்க உணர்வு சுடர்விட்டு எரிந்த காலகட்டம் என் கலை உணர்வு அரும்பியதால் சமூகச்சீர்திருத்த நாடகங்கள் தயாரித்தேன். கல்லக்குடி போராட்டத்திற்குச் சென்ற நான் அங்குத் தங்கி நாடகம் போட்டேன். ஊர்ப்பக்கம் வராமல் நாடகத்தில் கவனம் செலுத்தினேன். நான் இயக்கும் நாடகத்தைப் பார்க்க என் அம்மா ஆசைப்பட்டார். அம்மாவின் ஆசையை நிறைவு செய்ய அவர்கள் வாழும் ஊருக்கு அருகில் உள்ள செயங்கொண்டம் கடலைக் கமிட்டி அருகில் இருந்த கணேசு தியேட்டரில் சிறைக்கூடம் நாடகத்தை நடத்தினேன். அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றியதில் பெருமிதம் கொண்ட அவருக்கு அம்மா நினைவு வந்ததும் கண்ணீர் பனித்தது.

பாட்டுத்துறையில் இருந்த உங்களுக்கு நாடகம் பற்றிய ஆர்வம் எப்படி வந்தது?முறையாக நாடகப் பயிற்சி பெற்றதுண்டா?என்றேன்.

நாடகத்தில் நாட்டம் மிகுந்ததால் முறையாகப் பயிற்சி பெற்றுள்ளேன்.1957 இல் சேவா சுடேச் நாடகக் குழுவில் இணைந்து நாடகப் பயிற்சி பெற்றேன்.எங்களுடைய நிலத்தை அடகுவைத்து சென்னை சென்று நாடகக் கல்லூரியில் பயிற்சி பெற்றேன். கடைசிவரை அந்த நிலத்தை என்னால் மீட்க முடியவில்லை.சி.சுப்பிரமணியம் கல்வியமைச்சராக இருந்த பொழுது அவர் கையால் நாடகப் பயிற்சிக்குப் பட்டயம் பெற்றதை நினைக்கும்பொழுது பல மடங்கு நிலம் வாங்கிய மனநிறைவைப் பெற்றேன்.என்னுடன் பயின்றவர்கள் பலரும் நாடகம் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றுள்ளனர். நாடக மேடை என்ற கையெழுத்து ஏட்டில் தொடக்கத்தில் கவிதை எழுதினேன்

திரைப்படத்துறையில் எப்பொழுது நுழைந்தீர்கள்?

கர்ணன் கதையை மையமிட்டு தேரோட்டி மகன் என்ற நாடகத்தைச் சகசரநாமம் தயாரித்தார். பி.எசு.இராமையா கதை வசன ஆசிரியர். இராசாமணி என்பவர் இயக்கம். கர்ணனாகச் சகசரநாமம் நடித்தார். புகழ்பெற்ற கவிஞர்கள் அப்படத்திற்குப் பாடல் எழுத ஒப்பந்தம் ஆனாலும் அவர்கள் சரியாக இயக்குநர் விரும்பியவாறு எழுதமுடியவில்லை. எனக்கு எழுத வாய்ப்பு தந்தனர்

"ஆதி மூலமாக எங்கும் ஜோதியான தேவனே
ஆதி அந்தம் ஏதும் இல்லா நீதியான நாதனே"

இதில் இடம்பெறும் அமுத உள்ளம் தந்திடு என்று நான் எழுதிய வரி எனக்குத் திருப்பு முனையாக அமைந்தது. அனைவரும் பாராட்டினார்.உலகம் முழுவதும் கவிஞராக அறிமுகமானேன்.

எல்லாம் உனக்காக எனும் படத்தில்(சிவாசி-சாவித்திரி நடித்த படம்) முதன்முதல் பாடல் எழுதத் தொடங்கினேன்.

இதுவரை எத்தனைப் படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளீர்கள்?

பங்காளிகள்,நாகமலை அழகி, தேன்நிலவு, வள்ளி தெய்வானை, அன்புக்கரங்கள் உள்ளிட்ட 40 மேற்பட்ட படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளேன். சிவாசி, இரவிச்சந்திரன், செயசங்கர், செமினி கணேசன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளேன். காவல் தெய்வம் படத்திற்கு உரையாடல்(வசனம்) எழுதியுள்ளேன். 60 படங்களுக்குமேல் பணிபுரிந்துள்ளேன். மருதகாசி, முத்துராமன், சுப்பையா, ஏ.பி.நாகராசன், மேசர் சுந்தரராசன், உள்ளிட்ட கலைஞர்களுடன் நெருங்கிப் பழகியுள்ளேன். பீஷ்மர் என்னும் நாடகத்திற்கு உரையாடல் எழுதியுள்ளேன். கவரிமான், தங்கக் குமரி என்னும் பெயரில் நாடகக்குழு வைத்திருந்தேன்.

கவியரசு கண்ணதாசனைப் பற்றி...

கவிஞர் கண்ணதாசன் மிகச்சிறந்த கவிஞர். நல்ல பண்பாளர். உடன் பழகும் கவிஞர்களை மதிப்புடன் நடத்தியவர். அனைவரிடத்தும் அன்பொழுகப் பேசுவார்.

நூல்கள் எழுதியுள்ளீர்களா?

எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன். நான் எழுதிய பீஷ்மர் நாடக நூல் தமிழ் வளர்ச்சித் துறை பரிசுபெற்றது. அண்மையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் நலிந்த திரைக்கலைஞர்களுக்குத் தாம் திரைப்பட உரையாடல் எழுதிப் பெற்றத் தொகையைப் பகிர்ந்தளிந்தார்.என்னையும் தேர்ந்தெடுத்து வழங்கினார். கலைஞர் கையால் கலைஞனாகிய நான் சிறப்பிக்கப்பட்டது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்று.

திரைப்படம், நாடகம், நூல்கள் எனப் பல நிலைகளில் பணிபுரிந்திருந்தாலும் கவிஞர் இன்னும் வறுமை நிலையில் இருப்பது கவலை அளிப்பதாக இருந்தது. தமக்கு உரிய இடம் அமையாமல் போனமையைக் கவிஞர் உரையாடலில் தெரித்து விழுந்த சொற்கள் காட்டின.

நனி நன்றி:

தமிழ் ஓசை களஞ்சியம்(நாளிதழ்)21.12.2008
திரு.முல்லைநாதன்,ஊராட்சி மன்றத் தலைவர்,குருகாவலப்பர்கோயில்
திரு.கமலக்கண்ணன்

திங்கள், 22 டிசம்பர், 2008

என் படைப்புகளை மறுபதிப்பு செய்பவர்களின் மேலான கவனத்திற்கு...

அன்பு நண்பர்களே! வணக்கம்.
இணையத்தளத்தில் என் பக்கத்திற்கு வந்து படிக்கின்றமைக்கும் தங்கள் மேலான கருத்துகளை வழங்குகின்றமைக்கும் முதற்கண் நன்றி.

என் படைப்புகளை முன்பு இணையத்தில் முதற்கண் பதிப்பிக்கும் இயல்புடையவனாக இருந்தேன்.நண்பர்கள் சிலர் தங்கள் படைப்புகள் போல் அதனை மீண்டும் தங்கள் பக்கத்தில் எடுத்துப் பதிப்பிக்கும் நிலை கண்டு வருந்தினேன்.

பரந்து கிடக்கும் இணைய உலகில் யார் யார் என் படைப்புகளை மறுபதிப்பாக அவர்கள் பெயரில் வெளியிடுகிறார்கள் என உற்று நோக்க எனக்கு நேரம் கிடைக்காததால் பாதுகாப்பு,உரிமை கருதி என் படைப்புகள் பலவும் முதற்கண் தமிழகத்தின் புகழ்பெற்ற
நாளிதழ்கள்,மாத இதழ்களில் அச்சு வடிவம் கண்ட பிறகு அதனை என் வலைப்பூவில் வெளியிட்டு அயலகத் தமிழர்களுக்கு வழங்கி வந்தேன்.

அதனை அறியாமல் சிலர் என் படைப்புகளைத் தங்கள் படைப்புகள் போல் என்பெயர்,என் வலைப்பூ என எந்த அடையாளமும் குறிப்பிடாமல் அடிக்குறிப்பும் வழங்காமல் தாங்கள் அரிதின் முயன்று எழுதியதுபோல் சில இதழ்களில் வெளிப்படுத்தி வருவதை நண்பர்கள் வழியாகவும் நேரிலும் அறிகிறேன்.

அவ்வாறு என் பெயர் குறிப்பிடாமல் என் படைப்புகளை எடுத்துத் தங்கள் பெயரில் வெளியிடுவது ஆய்வு அறமாகாது.அறிவு நேர்மையும் ஆகாது.இன்னொருவரின் பிள்ளையைத் தூக்கி வைத்துக்கொண்டு தன் பிள்ளை என்பது போன்றதே இது.ஒவ்வொரு கட்டுரையை உருவாக்க பல நூலகங்களுக்குச் சென்று குறிப்பெடுத்தும் அறிஞர்களிடத்து நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும், இணையப் பக்கங்களிலிருந்தும் செய்திகள் திரட்டி உருவாக்கப்படுபவை என் கட்டுரைகள்.

அவற்றைப் பயன்படுத்துவோர் முறைப்படி இசைவு பெறுவதும்,உரிய வகையில் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் குறிப்பிடுவது அறிவு நேர்மையாக அமையும்.

அவ்வாறு இல்லாமல் எந்தக் குறிப்பும் சுட்டாமல் எடுப்பது மிகத் தவறு என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொணர்கிறேன்.மீண்டும் இதுபோல் தவறு நேராமல் இருக்க
விரும்புகிறேன்.

என் படைப்புகளை எடுத்தாள யாருக்கும் உரிமை உண்டு.ஆனால் முறைப்படி என் இசைவு பெற்று,பெயர்சுட்டி எடுத்தாள வேண்டுகிறேன்.

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

இலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் அ.சண்முகதாசு - முனைவர் மனோன்மணி


பேராசிரியர் அ.சண்முகதாசு


முனைவர் மனோன்மணி சண்முகதாசு

தமிழாய்வு சார்ந்த கருத்தரங்குகள் எந்தப் பொருளில் எங்கு நடந்தாலும் கலந்துகொண்டு கட்டுரை படித்துத் தம் ஆய்வுத்திறமையால் அனைவரது உள்ளத்திலும் இடம்பிடிக்கும் இலக்கிய இணையர்கள் பேராசிரியர் அ.சண்முகதாசு அவர்களும் முனைவர் மனோன்மணி சண்முகதாசு அவர்களும் ஆவார்கள். இவர்கள் இலங்கையை மையமிட்டு வாழ்ந்தாலும் உலக அளவில் அனைவருக்கும் அறிமுகமானவர்கள் ஆவர். இவ்விரு பெருமக்களின் தமிழ்ப்பணிகள் குறிப்பிடத்தக்க பெருமைக்கு உரியனவாகும்.

சங்க இலக்கியம், இலக்கணம், மொழியியல், நாட்டுப்புறவியல், இலக்கியத் திறனாய்வு, பக்தி இலக்கியம், வரலாறு, கல்வெட்டு எனத் தமிழின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஆய்வுப் புலங்களில் தடம்பதித்து ஆய்வுலகில் தமக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இவர்களின் வாழ்க்கையையும் பணிகளையும் இங்கு நோக்குவோம்.

முனைவர் அ. சண்முகதாசு அவர்கள் இலங்கையில் உள்ள திருகோணமலையில் 1940 ஆம் ஆண்டு சனவரி மாதம் இரண்டாம்நாள் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் அருணாசலம் - முத்தம்மாள் ஆவர். இளமைக் கல்வியை திருகோணமலையில் உள்ள பிரான்சிசு சேவியர் பள்ளியில் பயின்றவர்(1945-51). பின்னர் வந்தாறுமூலையில்(செங்கலடி) உள்ள அரசு கல்லூரியில் பயன்றவர்(1952-57). பின்னர் சிவானந்த வித்தியாலயத்தில் பயின்றவர்(1957-59).

1963 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தமிழை இளங்கலையில் பயின்றவர். இதில் வரலாறு, சமற்கிருதம் உள்ளிட்ட பாடங்களையும் பயின்றார். முதல் வகுப்பில் தேறினார். அதன் பிறகு இசுகாட்லாந்தில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகத்தில் ( University of Edinburgh, Scotland, United Kingdom.) ஓராண்டு மொழியியல் பயின்றார்(1969 – 1970). 1970-72 ஆம் ஆண்டில் மொழியியல் துறையில் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். "இலங்கைப் பேச்சுத் தமிழின் வினைவடிவங்களின் ஒலியன்கள்"(Phonology of the Verbal Forms in Colloquial Ceylon Tamil) என்பது இவர் தம் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பாகும்.

இதற்கிடையில் சண்முகதாசு அவர்கள் 1963 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உரையாளராகப் பணிபுரிந்தார். பின்னர் அதே நிறுவனத்தில் துணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். 1965-68 இல் வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1975 முதல் யாழ்ப்பாண வளாகத்தில் இருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1976 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார்.

1982 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பொறுப்பு வகித்தார். அடுத்த ஆண்டில் நைசீரியாவில் உள்ள இபாதன் பல்கலைக்கழகத்தில் மொழியியல் மற்றும் நைசீரிய மொழியியல் துறையில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார்(University of Ibadan). 1983 இல் சப்பான் டோக்கியோவில் உள்ள காகூசன் பல்கலைக் கழகத்தில் (Gakushuin University)வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்தார்.

1998 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்(பொறுப்பு) பணியையும் கவனித்தவர். 2007 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல நிருவாகப் பொறுப்புகளையும் கவனித்தவர். 2008 முதல் வருகைதரு பேராசிரியராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்றார்.

சண்முகதாசு அவர்கள் படிக்கும் காலத்திலும் பணிபுரிந்த காலத்திலும் பல விருதுகளை, பரிசுகளை வாங்கிப் பெருமை சேர்த்தவர். 1963 இல் ஆறுமுக நாவலர் விருதினை இலங்கைப் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராகத் தேறிப் பெற்றவர். 1987 இல் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ்மொழி இலக்கண இயல்புகள் என்ற தம் நூலுக்காகச் சபாரத்தினம் நினைவுப்பரிசு பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கல்லைகழகத்தில் இருபத்தைந்தாண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தமைக்கு இரண்டு முறை பணப் பரிசு பெற்றவர். யுனெசுகோ விருது ஒன்றும், இலங்கை அரசின் சாகித்ய ரத்னா விருது ஒன்றும் பெற்ற பெருமைக்கு உரியவர்.

இலங்கையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கல்விக்குழு, பாடத்திட்டக்குழு, மதிப்பீட்டுக்குழு எனப் பல நிலைகளில் பணிபுரிந்தவர். அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுப்பும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் தேர்வாளராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிந்தனை என்னும் இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தவர்.

அக இலக்கியமும் அறிவியலும் என்னும் தமிழ்த்துறை வெளியிட்ட நூலின் பதிப்பாசிரியராக இருந்து கடமையாற்றியவர். உலக அளவில் நடைபெற்ற பல உலகத் தமிழ்மாநாடுகளைக் கண்ட பெருமைக்கு உரியவர். அவ்வகையில் சென்னை, பாரிசு, மலேசியா, சிங்கப்பூர், தமிழகம் மொரீசியசு உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று கட்டுரை படைத்த பெருமைக்கு உரியவர்.பல நாடுகள் சுற்றி வந்தாலும் தமிழ் அரங்குகளில் தமிழர் ஆடையான வேட்டியணிந்து அமர்ந்து வீற்றிருப்பது இவர்தம் தமிழ் உணர்வுகாட்டும் சான்றாகும். இலங்கை நாட்டுப்புறப்பாடல்களைப் பாடிக்காட்டி விளக்கும் ஆற்றல்பெற்றவர்.

முனைவர் மனோன்மணி

எளிய தோற்றமும் பேரறிவும் கொண்டு அன்பு ததும்பும் சொல்லாடல்களால் நம்மை ஈர்ப்பவர் மனோன்மணி அவர்கள். இலங்கையில் 14.10.1943 இல் திருவாளர் முருகேசு, பாக்கியம் ஆகியோர்க்கு மகளாகப் பிறந்தவர். 1948 முதல் 58 வரை சிவப்பிரகாசர் பள்ளியில் தொடக்க உயர்நிலை வகுப்புகளைப் பயின்றவர். 1959 இல் புகுமுக வகுப்பை மெத்தடிசுடு நிறுவனத்தில் பயின்றவர். 1961 முதல் 65 வரை இலங்கைப் பரதேனியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு பயின்றவர். பின்னர் நூலகவியல் சார்ந்த பட்டயப்படிப்பு நிறைவு செய்தவர்.

1978-80 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். சி.வை.தாமோதரம் பிள்ளை குறித்த ஆய்வேடு இதற்காக வழங்கினார். க.கைலாசபதி மேற்பார்வையாளர் என்பது குறிப்பிடத்தகுந்தது. 1994-97 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கா.சிவத்தம்பி அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வு நிறைவு செய்தவர். இவர் தம் ஆய்வுத்தலைப்பு சங்க இலக்கியத்தில் உரைகளின் பொருத்தப்பாடு - குறுந்தொகை (Appropriateness of the Commentaries to Cankam literature: A close analysis of Kuruntokai) என்னும் தலைப்பில் அமைந்தது.

வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக்கல்லூரியில் (1965-68) இளங்கலைத் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பணியில் தம் பணியைத் தொடங்கிய மனோன்மணி அவர்கள் 1979-82 வரை தம் கணவரின் ஆய்வுப்பணிகளுக்கு உதவியாக இருந்தார். 1975 முதல் யாழ்ப்பாணக் கல்லூரி ஒன்றில் வருகை தரு விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1983 முதல் 1993 வரை சப்பானியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்களின் ஆய்வுப்பணிகளில் இணைந்து ஆய்வாளராகப் பணிபுரிந்தார். தமிழ்மொழிக்கும் சப்பான் மொழிக்குமான உறவு பற்றிய அரிய ஆய்வுப்பணியில் ஈடுபட்டு உழைத்தார். அதுபொழுது சப்பானிய(யப்பான்) இலக்கியம், கவிதைகள் பற்றிய படைப்புகளைத் தமிழில் வழங்கினார். மேலும் முதுகலை பயிலும் சப்பானிய மாணவர்களுக்கு தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு பற்றி பாடம் நடத்தும் வாய்ப்பு அமையப்பெற்றவர். 1993 ஆம் ஆண்டுக்குப் பிறகு வருகைதரு பேராசிரியர் பணியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியத்தொடங்கினார். தொடர்ந்து சப்பான் நாட்டிற்குச் சென்று தமிழ் சப்பானிய ஆய்வுகளுக்கும் உதவினார்.

படிக்கின்ற காலத்திலும் பணிபுரியும் காலத்திலும் மனோன்மணி அவர்கள் பல பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றவர். கலைஞானச் சுடர் விருது உள்ளிட்ட விருதுகள் இவர்தம் தமிழ்ப்பணிக்குக் கிடைத்துள்ளன. இவர் பல பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணிபுரிந்தவர். கல்வி நிறுவனங்கள் பெண்கள் அமைப்பு உள்ளிட்டவற்றில் இவரின் பணி மேம்பட்டு இருந்தது. இலங்கையிலும் சப்பானிலும் கல்வி சார்ந்த, பாடத்திட்டம் சார்ந்த பல குழுக்களில் இணைந்து பணிபுரிந்தவர்.

பத்தொன்பதாம்நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப்போக்குகள், சி.வை. தாமோதரம் பிள்ளை ஓர் ஆய்வு, ஆற்றங்கரையான், தமிமொழியும் யப்பானியமொழியும் இலக்கண ஒப்புமை, யப்பானிய மொழியைத் தமிழில் கற்க (கைநூல்),தமிழ்மொழி அகராதி தந்த சதாவதானி, பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலங்கள்(இரு தொகுதி), தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல், சப்பானியக் காதல் பாடல்கள், குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு, காலம் தந்த கைவிளக்கு, காலத்தை வென்ற பெண்கள், சங்க காலத்திருமண நடைமுறைகள், சி.வை.தாமோதரன் பிள்ளை உள்ளிட்ட பேராசிரியர் மனோன்மணியின் நூல்கள் இவர்தம் எழுத்து வன்மையை அறிவிக்கும் சான்றுகளாகும்.

இலங்கை வானொலி, தொலைக்காட்சிகளில் குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வண்ணம் தம் கருத்துகளை வழங்கியவர். பல ஆய்வரங்குகளில் கலுந்துகொண்டு கட்டுரை படித்தவர். சமயம், பெண்மை, சங்க இலக்கியம், நூலகம், சப்பானிய மொழி, இலக்கியம், ஈழத்து இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடுகொண்டு இவர் எழுதியுள்ள தமிழ் ஆக்கங்கள் என்றும் இவர் பெருமையைப் பறைசாற்றி நிற்கும்.இலங்கையின் சார்பாளர்களாக உலக அரங்கில் தேமதுரத் தமிழின் ஓசை பரவப் பாடுபடும் இவர்களைத் தமிழுலகம் பாராட்டி மதிக்கவேண்டும்.

மொழி, இன, நாட்டுப்பற்றுடன் விளங்கும் இந்த இலக்கிய இணையர்கள் தம் வாழ்நாள் காலத்தைத் தொடர்ந்து தமிழ் மொழி,இலக்கிய, பண்பாட்டு வளர்ச்சிக்கு உட்படுத்தவேண்டும் என்பதே நம் பேராவலாக உள்ளது.


தமிழ் ஓசை களஞ்சியப் பகுதி

நனி நன்றி :

தமிழ் ஓசை களஞ்சியம்,(நாளிதழ்),21.12.2008,
அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 13
முனைவர் பொற்கோ.
முனைவர் அம்மன்கிளி முருகதாசு(கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு)

சனி, 20 டிசம்பர், 2008

புலவர் உதயை மு.வீரையன் அவர்கள்...


உதயை மு.வீரையன்

தமிழ்ப் புலவர் பெருமக்களுள் பலர் சமூக விடுதலை பற்றிய சிந்தனையுள்ளவர்களாக விளங்கி மாந்த குல விடுதலைக்குக் குரல் கொடுத்துள்ளனர். பாட்டாலும் பேச்சாலும் எழுத்தாலும் செயலாலும் அன்னார் பணிபுரிந்துள்ளனர்.அவர்களின் வரிசையில் எண்ணி மதிக்கத் தக்கவர் புலவர் உதயை மு.வீரையன் அவர்கள் ஆவார்.

திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் என்னும் ஊரில் 1942 மே ஒன்றாம் நாள் பிறந்தவர். பெற்றோர் முத்துராமன், இராக்கம்மாள்.தொடக்கக் கல்வியை நாச்சிகுளத்திலும் உயர் தொடக்கக் கல்வியை இடையூரிலும் உயர்நிலைக் கல்வியைத் திருத்துறைப்பூண்டியிலும், புலவர் படிப்பைத் திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்றவர்.

ஏழைமையின் பிடியில் இளமையில் சிக்கிய நம் புலவர் அவர்கள் தோழர் அடைக்கலம் என்னும் முடித்திருத்தும் தோழரின் கடைக்கு வரும் இதழ்கள் படித்து உணர்வு பெற்றவர். பள்ளிக்குச் செல்வது தவிர மற்ற நேரங்களில் முடித்திருத்தகம் இவர் தமிழ் உணர்வை வளர்த்துள்ளது. விடுதலை, நாத்திகம், குயில் உள்ளிட்ட ஏடுகள் இவர் பார்வைக்கும் படிக்கவும் கிடைத்துள்ளன. புரட்சிக் கவிஞரின் குயில் உள்ளிட்ட ஏடுகளில் எழுதிய பெருமைக்கு உரியவர்.

அக் காலத்தில் மக்கள் நடுவே நாடகங்கள் பெரிதும் சிறப்பிடம் பெற்றிருந்தன. பல நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். அந்நாடக வெற்றிக்கு இவர் பாடல்கள் உதவின.

உதயமார்த்தாண்டபுரத்திற்கு அண்மையில் இருந்த பெருமழை என்ற ஊரில் வாழ்ந்த பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களிடம் உதவியாளராகச் சிலகாலம் பணிபுரிந்தவர். பின்னர் அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பில் பயின்றவர்.

அந்நாளில் பெரும்புலவர் தி.வே.கோபாலையர் அவர்கள் கல்லூரி முதல்வராக இருந்து திருவையாறு கல்லூரியில் தமிழரசாட்சி நடத்திய காலம் அஃது. அங்குப் பயின்றவர். பெருஞ்சித்திரனாரின் தென்மொழி, சி.இலக்குவனாரின் "குறள் நெறி" மதுரையிலிருந்து வந்த தமிழ்நாடு நாளிதழ் உள்ளிட்டவற்றில் படைப்புகளை வழங்கியவர். இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போரில் இவர் ஈடுபட்டு உழைத்துள்ளார்.

முப்பத்து மூன்றாண்டுகள் தமிழாசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். ஆலத்தம்பாடி சானகி அண்ணி உயர்நிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகளும் சென்னைக் கெல்லட் உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டும் சென்னை அயன்புரம் இரயில்வே காலனி உயர்நிலைப் பள்ளியில் முப்பதாண்டுகளும் தமிழாசிரியர் பணிபுரிந்தவர்.

சென்னையில் வாழ்ந்து வரும் புலவர் அவர்கள் தினமணி உள்ளிட்ட ஏடுகளில் தொடர்ந்து சமூக அக்கறையுடன் கட்டுரைகள் வரைவது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

இவர் 1.அக்கினிக் குஞ்சுகள், 2.தீர்ப்பு எழுதுகிறேன், 3.உனக்காகப் பாடுகிறேன், 4.உதயை மு.வீரையன் கவிதைகள் என்னும் தலைப்பில் கவிதை நூல்களை வழங்கியுள்ளார்.

1.கல்வித் துறையும் ஆசிரியர் நிலையும், 2.வரமும் சாபமும், 3.மானிட விடுதலை நோக்கி, 4.வெற்றியைச் சுற்றி, 5.தேசத்தின் மறுபக்கம் உள்ளிட்ட கட்டுரை நூல்களை வெளியிட்டுள்ளார்.


மானிட விடுதலை நோக்கி நூல்

நீதியின் முன் என்ற புதினம், பத்துப் படையல், கேள்விக் குறிகள் உள்ளிட்ட சிறுகதை நூல்கள் இவரின் படைப்பாளுமைக்குச் சான்றாகும். சிறுவர்களுக்காக 1.மூன்று முத்துக்கள், 2. தேடித் தேடி, 3.கூவத் துடிக்கும் குயில்கள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பாரத மாநில வைப்பகத்தின் பரிசில், தமிழ் அரசி இதழ் சார்பில் வழங்கப்பட்ட பொற்கிழி விருது,பல்வேறு கவிதைப் போட்டிகளில் பரிசில்கள் பெற்ற பெருமைக்கு உரியவர். கவிதைச் செம்மணி உள்ளிட்ட விருதுகள் இவர் படைப்பாளுமைக்குக் கிடைத்த சிறப்புகளாகும்.

இவர்தம் படைப்பாளுமையை அறிஞர்கள் மு.வ,தீபம் நா. பார்த்தசாரதி, கே.சி.எசு. அருணாசலம், வல்லிக்கண்ணன், உவமைக் கவிஞர் சுரதா உள்ளிட்டவர்கள் போற்றிப் பாராட்டியுள்ளனர்.

உதயை மு.வீரையன், அவர்களின் முகவரி :

மக்கள் பதிப்பகம்,
146/6, சானி சான்கான் சாலை,
இராயப்பேட்டை,சென்னை - 600 014
செல்பேசி : + 9444296985

புதன், 17 டிசம்பர், 2008

புதுச்சேரியில் தேசியப் புத்தகக் கண்காட்சி

புதுச்சேரிப் புத்தகக் கூட்டுறவுச் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் தேசியப் புத்தகக் கண்காட்சியைப் புதுச்சேரியில் நடத்துகிறது.இந்த ஆண்டு பன்னிரண்டாவது புத்தகக் கண்காட்சி புதுச்சேரியில் சிறப்பாக நடைபெற உள்ளது.இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பதிப்பாளர்கள் சற்றொப்ப அறுபதாயிரம் தலைப்புகளில் அமைந்த புத்தகங்களைக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்க உள்ளனர்.

இதில் தமிழ், ஆங்கிலம்,பிரஞ்சு,இந்தி உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் அடங்கும்.கல்வி நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட அளவில் கழிவு உண்டு.

நுழைவு இலவசம்.

இடம் : வேல்.சொக்கநாதன் திருமண மண்டபம்,புதுச்சேரி.
நாள் : 19-12-2008 முதல் 28-12-2008 வரை

ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் உண்டு.

தொடர்புக்கு :
9444776733
9842330358

வீரா ரெட்டித்தெரு காளியம்மன் கோயில்(கங்கைகொண்ட சோழபுரம்)


கூரைக் கொட்டகையில்தான் இந்த அரிய சிற்பங்கள் உள்ளன

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து நான்கு கல் தொலைவில் தெற்கே வீரா ரெட்டித்தெரு என்னும் ஊர்(பகுதி) உள்ளது.(வீரராகவ ரெட்டித்தெரு என்பது முழுவடிவம்) அங்கே புகழ்பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது.கங்கைகொண்ட சோழபுரத்தின் தென் எல்லைக் காளியாக அது கருதப்படுகிறது.அங்குள்ள புகழ்பெற்ற கல் சிற்பங்கள் இங்கே காட்சிக்கு வைக்கிறேன்.பண்டைக்காலத்தில்(சோழர்கள் காலத்தில்) வட பகுதியிலிருந்து இச்சிற்பங்கள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என மக்கள் நம்புகின்றனர்.பாதுகாக்கப்பட வேண்டிய அரிய சிற்பங்கள் இதோ:





காளியம்மன் மார்பளவுப் படம்


சிவலிங்கம் உள்பட காளியம்மன்


காளியம்மன்



திங்கள், 15 டிசம்பர், 2008

தாமசு லேமான்(செர்மனி)


முனைவர் தாமசு லேமான்

தமிழ்மொழி வளர்ச்சியில் செர்மனி நாட்டிற்கும் பங்கு உண்டு. செர்மனியில் கலோன் பல்கலைக்கழகம், கைடல்பெர்க்குப் பல்கலைக்கழகம் என்னும் இரண்டு பல்கலைக்கழகங்களில் தமிழாராய்ச்சிப் பிரிவு சிறப்புடன் இயங்குகின்றது (ஏறத்தாழ 12 பல்கலைக்கழகங்களில் சமற்கிருத ஆய்விருக்கைகள் உள்ளதையும் கவனத்திற்கொள்க).

கைடல்பெர்க்குப் பல்கலைக்கழகத்தில் முனைவர் அ.தாமோதரன் அவர்கள் (காட்டு மன்னார் கோயில் அருகில் உள்ள திருமூலத்தானம் ஊரினர்) தமிழ்ப் பேராசிரியராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றை அந்நாட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவித்த பெருமைக்கு உரியவர்.அவரிடம் பயின்றவர்களில் ஒருவர் தாமசு லேமான் அவர்கள் ஆவார்.

தாமசு லேமான் அவர்கள் தமிழில் எழுத, பேச, படிக்க நன்கு அறிந்தவர். முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் ஆய்வுகளில் ஈடுபட்டு அரிய நூல்களை வழங்கியுள்ளார். இவர் நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அமைந்துள்ளன. ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்தை ஆய்வு நோக்கில் பதிப்பிக்கும் பெருந்திட்டத்தில் செயல்பட்டு வருகிறார். இவர்தம் தமிழ் வாழ்வை இங்கு எண்ணிப் பார்ப்போம்.

தாமசு லேமான்(Thomas Lehmann) அவர்கள் செர்மனியில் உள்ள கைசசுலவ்டன் (Kaiserslautern) என்னும் ஊரில் பிறந்தவர் (27.06.1954). முதுகலையில் ஆங்கில மொழி, மொழியியல், ஆங்கில இலக்கியத்தைப் பாடமாகப் பயின்றவர் (1975-80). பிறகு கைடல்பர்க்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள தென்னாசிய நிறுவனத்தில் புதிய இந்திய மொழிகள் என்ற அடிப்படையில் தமிழ் இலக்கியம், மொழி பற்றி பயின்றார். இந்தியச் செவ்வியல் மொழி என்ற அடிப்படையில் சமற்கிருதம் பயின்றவர்.

புதுச்சேரியில் அமைந்திருந்த பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனத்தில் (தலைமையகம் திருவனந்தபுரத்தில் இருப்பது) 1983 இல் முறையாகத் தமிழ் படிக்கவும் ஆராயவும் வருகை தந்தார். திராவிட மொழியியற் கழகம் இவர் கல்விக்கு நிதி நல்கியது. பேராசிரியர் சண்முகம் பிள்ளை அவர்கள் இந்நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். அவரிடம் தமிழ் பயின்ற பெருமைக்கு உரியவர். தாமசு லேமான் அவர்கள் தற்காலத் தமிழ் இலக்கணம் குறித்த ஆய்வில் ஈடுபட்டார்.

இக்கால இலக்கியமாக கருதப்படும் புதினம், உரைநடை, சிறுகதை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தமிழ்மொழியின் அமைப்பு இருபதாம் நூற்றாண்டில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆங்கிலத்தில் எழுதி வெளிப்படுத்தினார். செயகாந்தன், கி.இராசநாராயணன், கு.அழகிரிசாமி தி.சானகிராமன் உள்ளிட்ட முன்னணிப் படைப்பாளிகளின் படைப்புகளை ஆராய்ந்து தமிழ் மொழிப் பயன்பாட்டை வெளியுலகிற்கு வெளிப்படுத்தினார். இந்த ஆய்வு கட்டுரைகளாகவும் தனி நூலாகவும் வெளிவந்துள்ளன. இக்காலகட்டத்தில் இவர் ஆய்வு செய்த நிறுவனம் புதுவை மொழியியல் ஆராய்ச்சி நிறுவனமாக மலர்ந்தது.


தற்காலத் தமிழ் இலக்கணம்

இதனிடையே 1982 இல் தாமசு லேமான் அவர்கள் சீலாராணி என்னும் தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தமிழக உறவினரானார். இவர்களுக்கு இரண்டு மழலைச் செல்வங்கள் .இசுடீபன் செல்வன், பிரான்சிசு ஆனந்து என்னும் அக்குழந்தைகள் வளர்ந்து இப்பொழுது செர்மனி நாட்டில் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

தாமசு லேமான் அவர்கள் கைடல் பர்க்கு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தென்னாசிய நிறுவனத்தில் பழந்தமிழ் இலக்கணம் (A Grammar of Old Tamil) என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் 1992 இல் பெற்றார். அந்த ஆண்டிலேயே தென்னாசிய நிறுவனத்தின் இந்தியச் செம்மொழி நிறுவனத்தில் (சமற்கிருதம்) துணைப்பேராசிரியராகப் பணியில் இணைந்தார்.

2000 ஆண்டில் பேராசிரியர் அ.தாமோதரன் அவர்கள் பணி ஓய்வு பெற்றதும் அத்துறையில் தமிழ் விரிவுரையாளராக இணைந்தார். 2008 முதல் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரஞ்சு நிறுவனத்தில் (EFEO) ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

தமிழ்மொழி,இலக்கியம் குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளை வரைந்துள்ள தாமசு லேமான் அவர்கள் தற்காலத் தமிழிலும் சங்க இலக்கியத்திலும் ஆழங்கால்பட்ட புலமையுடையவர். இவர் தாமசு மால்டன் அவர்களுடன் இணைந்து உருவாக்கிய சங்க இலக்கியச் சொல்லடைவு((A Word Index of Old Tamil Cankam Literature) என்னும் நூல் தமிழ் ஆய்வாளர்களுக்குக் குறிப்பாகச் சங்க இலக்கிய ஆய்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு கைவிளக்காகும். இந்த நூலின் முதற்பதிப்பு செர்மனி நாட்டில் வெளிவந்தது. அது தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் வாங்கிப் பயன்படுத்த முடியாதபடி விலை சற்று மிகுதியாக இருந்தது. அதன் இந்தியப் பதிப்பு வெளிவந்தால் அனைவருக்கும்பயன்படும் என நினைத்து இந்தியாவிலும் அந்நூல் பதிப்பிக்கப்பட்டது.


சங்க இலக்கியச் சொல்லடைவு(நூல் முகப்பு)

1993 இல் ஆசியவியல் நிறுவனத்தின் சார்பில் வெளிவந்த இந்த அரிய சொல்லடைவில் ஏறத்தாழ சங்க இலக்கியத்தில் உள்ள இரண்டு இலக்கம் சொற்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஏறத்தாழ இருபதாயிரம் சொற்கள் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. செர்மனியில் கணிப்பொறி வழியாகச் சங்க இலக்கியச் சொற்கள் உள்ளிடப்பெற்று உருவாக்கப் பெற்ற இச்சங்க இலக்கியச் சொல்லடைவு இன்னும் காலத்திற்கேற்ற அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்புடன் வெளிவரவேண்டும்.

இந்தச் சொல்லடைவு இன்னும் பல சொல்லடைவு நூல்கள் வெளிவர முன்னோடிச் சொல்லடைவு நூலாக உள்ளது. இது போன்ற அகராதிகள் தேவை என்பதை லேமான் அவர்கள் கோடிட்டுக்காட்டியுள்ளார்.அதனை முன்மாதிரியாக கொண்டு வேறுபல சொல்லடைவுகள் சங்க இலக்கியத்திற்கு வெளிவர வேண்டியது காலத்தின் கட்டாயத்தேவையாகும். சங்க இலக்கிங்கள் அனைத்துக்குமாக முழுமையாக வெளிவந்த இந்த சொல்லடைவு பழந்தமிழ் இலக்கணத்தை வரைய பெரும் பயன்தருவதாகும்.

அயல்நாட்டு அறிஞர்கள் பலரும் சங்க இலக்கியத்திற்குப் பாடவேறுபாடகளுன் அமைந்த செம்பதிப்புகளை வெளியிடுவதில் அண்மைக் காலமாக கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் ஈவா வில்டன் என்னும் பிரஞ்சு நாட்டு அறிஞர் நற்றிணையை அண்மையில் பதிப்பித்துள்ளார். அவரைத் தொடர்ந்து தாமசு லேமான் ஐங்குறுநூற்று ஆய்வுப் பதிப்பினை வெளிக்கொணரக் கடுமையாக உழைத்துவருகிறார். சிலவாண்டுகள் ஒரே தலைப்பில் தோய்ந்து ஆய்ந்து வெளிப்படுத்துவதால் இவர்களின் ஆய்வுகள் உலகத் தரத்தினவாக உள்ளன.

தாமசு லேமான் ஐங்குறுநூற்றை ஆய்வுப்பதிப்பாக வெளியிட இதுவரை வெளிவந்துள்ள அனைத்துப் பதிப்புகளையும் பார்வையிடுகிறார். அவ்வகையில் 1903 இல் வெளிவந்த உ.வே.சாவின் முதல் பதிப்பு முதல் இதுவரை வெளி வந்த எட்டுப் பதிப்புகளையும் ஒப்புநோக்கிப் பார்வையிட்டுப் பாட வேறுபாடுகளை அறிகிறார். கூற்று விளக்கப் பொருத்தப் பாட்டை ஆராய்கிறார். மேலும் தாளில் எழுதி வைத்துள்ள நான்கு மூலப் படிகளையும் இரண்டு பனை ஓலைப் படிகளையும் பார்வையிடுகிறார். இதற்கென இவர் பல பல்கலைக்கழக, கல்லூரி, திருமட நூலகங்களைப் பார்வையிட்டுத் தம் ஆய்வைச் செப்பப்படுத்துகிறார். தாமசு லேமான் அவர்களின் ஐங்குறுநூற்றுப் பதிப்பு வெளிவந்தால் சங்க நூல் ஒன்றிற்கு முழுமையான ஆய்வுப் பதிப்பு வந்துவிட்டது என்ற மன நிறைவைப் பெறலாம்.

புத்திலக்கிய மொழிநடையிலும் சங்க இலக்கிய மொழிநடையிலும் இலக்கணத்திலும் பெரும் புலமை பெற்றுள்ள தாமசு லேமான் அவர்கள் தமிழ் இலக்கியம் இலக்கணம் ஆகியவறைத் தரமாகப் பதிப்பிப்பது போல் தமிழ் நூல்களைச் செர்மன், ஆங்கில மொழிகளிலும் மொழிபெயர்த்து உலகப் பரவலுக்குத் துணைநிற்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.


தாமசு லேமானின் நூல்

நனி நன்றி:

தமிழ் ஓசை- களஞ்சியம், சென்னை, அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 12,
14.12.2008.
முனைவர் அ. தாமோதரன்(திருமூலத்தானம்)
முனைவர் பொற்கோ
பிரஞ்சு நிறுவன நூலகம்(IFP), புதுச்சேரி
பிரஞ்சு ஆய்வு நிறுவனம்(EFEO), புதுச்சேரி