மாந்த குல வரலாற்றில் மொழி முதன்மை இடம்பெறுகிறது. அம்மொழி செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் கருவியாக அமைவதுடன் பேசப்படும் மக்களின் பண்பாடு, நாகரிகம், அறிவுத்துறை வளர்ச்சிகளையும் தாங்கிநிற்கிறது. உலகில் ஏறத்தாழ மூவாயிரத்திற்கும் அதிகமான மொழிகள் வழங்கப்படுவதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இம்மொழிகளில் சில பேச்சு வழக்குடைய மொழியாகவும் சில எழுத்து வழக்குடைய மொழியகவும் விளங்குகின்றன. சில மட்டும் எழுத்து, பேச்சுவழக்குடைய மொழியாக விளங்குகின்றன.எழுத்து,பேச்சு எனும் இருவகை வழக்குகளைக் கொண்டு நம் தமிழ்மொழி விளங்குகின்றது.
தமிழ் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய இலக்கண இலக்கியங்களைக் கொண்டு விளங்குவதால் அண்மையில் செவ்வியல்மொழி எனும் தகுதியை அரசு ஏற்றுப் போற்றி அறிவித்துள்ளது. தமிழ்மொழியைப் பேசுபவர்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் திருவனந்தபுரம், பெங்களுர், மும்பை, கல்கத்தா, தில்லி, திருப்பதி முதலான இந்தியப் பெருநகரங்களிலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், கனடா, இலண்டன், ஆத்திரேலியா, மொரீசிசு, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, செர்மனி, நார்வே, டென்மார்க், பிசித்தீவு, ரியூனியன் முதலான அயல் நாடுகளிலும் பரவி வாழ்கின்றனர். இவ்வாறு பரவி வாழும் தமிழர்கள் தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழ் இலக்கியங்கள், தமிழ்க் கலைகளைப் போற்றி வாழ்கின்றனர். தமிழ்மொழி தொன்மைச் சிறப்புடையது என்பதுபோலவே புதுவகையான அறிவியல் தொழில் நுட்பக்கருவிகளுக்கு இடம்கொடுத்து வளரும்மொழியாகவும் உள்ளது.
உலகில் மொழி எப்பொழுது தோன்றியது என்பதில் கருத்துவேறுபாடு உண்டு. பலரும் பலவகையான கருத்துகளை முன்வைக்கின்றனர்.இம்மொழி குறித்த கருத்துகளைப் போலவே மொழியை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இலக்கியங்களின் தோற்றம்பற்றியும் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. எனினும் இலக்கியங்கள் எழுத்து வடிவில் எழுதப்படுவதற்கு முன்னரே வாய்மொழியாகப் படைக்கப்பட்டன எனவும் அதனை "நாட்டுப்புறவியல்" எனவும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
உலகில் தோன்றிய பழைமையான இலக்கியங்கள் யாவும் வாய்மொழிக்கூறுகளை மிகுதியாகக் கொண்டுள்ளதையும் அவ்வப்பொழுது அறிஞர்கள் ஆராய்ந்து உரைத்துள்ளனர். எனவே வாய்மொழிக்கூறுகளை மிகுதியாகக் கொண்டுள்ள நாட்டுப்புற இலக்கியங்களை ஆராய்வதை ஒவ்வொரு மொழியினரும் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
உருசிய நாட்டில் முதலாளி இனத்தினரும் உழைக்கும் இனத்தினரும் நாட்டுப்புறங்களில் வழங்கும் கதைகளையும் இன்னபிற நாட்டுப்புற இலக்கிய வடிவங்களையும் கேட்பதில் நாட்டம் செலுத்தினர். எனினும் ஐரோப்பியர்கள்தான் நாட்டுப்புற இலக்கியங்களை அங்குத்தொகுப்பதில் கவனம் செலுத்தினர். மாசுகோ நகரில் பணியாற்றிய ரிச்சர்ட் சேம்சு(RICHARD JAMES) 1619-20 இல் பல பாடல்களைப்பதிவு செய்தார். மருத்துவப் பணியாற்றிய சாமுவேல் காலின்சு என்பவர் 1660 இல் பல உருசிய நாட்டுப்புறக் கதைகளைப் பதிவு செய்தார். இம்முயற்சிகளுக்குப் பிறகு டெமிடோவ் என்பவர்-1775-இல் ஊரல் பகுதியில் தொகுத்த பாடல்கள் 1804 இல் செப்பம் செய்து வெளியிட்டனர்.
செருமன் மொழியை ஆய்வு செய்த கிரிம் உடன்பிறந்தோர் (GRIM BROTHERS) நாட்டுப்புற இலக்கியங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதன் பயனாக இரு கதைப்பாடல் நூல்களை வெளியிட்டனர். இந்த நூல்கள் நாட்டுப்புறவியல் துறை வளர்ச்சிக்குப்பெரிதும் உதவின.
உலக நாடுகளில் பின்லாந்து நாட்டு மக்கள் மொழி, இனப்பற்று மிக்கவர்கள. தங்கள் பெருமையை உலகிற்குத் தெரியப்படுத்த நாட்டுப்புற இலக்கியங்களத் தொகுக்க முயற்சி மேற்கொண்டனர். பின்லாந்தில் 1702-இல் பழமொழி தொடர்பான நூலினை வெளியிட்டனர். பின்லாந்து இலக்கியக்கழகம் 1831-இல் நாட்டுப்புற வழக்காறுகளின் ஆவணக்காப்பகம் (THE FOLKLORE ARCHIVES OF THE FINISH LITERARY SOCIETY) உருவாக்கப்பட்டது. பின்லாந்து நாட்டின் புகழ்பெற்ற அறிஞரான எலியாசு லோன்ராட்(Elias Lonrot) என்பவர் நாடு முழுவதும் வழங்கிய ஒரு காப்பியத்தின் பல்வேறு கதைக் கூறுகளைத்தொகுத்து கலேவலா (Kalevala) என்னும் காப்பியமாக்கினார். 1835-இல் இக்காப்பியம் வெளிவந்தது. பின்லாந்து மக்கள் தங்கள் இலக்கிய வரலாற்றை இக்காப்பியத்தை எல்லையாகக்கொண்டு மதிப்பிடுவர். அறிஞர் சிவலிங்கம் அவர்கள் இந்நூலினைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து, அமெரிக்கா முதலான வளர்ந்த நாடுகளில் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சிறப்பாநிலையில் இருந்தது. இலண்டனில் 1878- ஆம் ஆண்டு நாட்டுப்புறவியல்கழகம் (THE FOLKLORE SOCIETY) என்னும் அமைப்பும், அமெரிக்காவில் 1888-ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டுப்புறவியல் கழகம்(THE AMERICAN FOLKLORE SOCIETY) என்னும் அமைப்பும் நாட்டுப்புறவியல் ஆய்விற்கெனத் தோற்றம் பெற்றன. அமெரிக்க நாட்டுப்புறவியல் கழகத்தில் 2200 உறுப்பினர்களுக்குமேல் உள்ளனர். இவ்வமைப்பு உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நாட்டுப்புறவியல் செய்திகளைத்தெரிவிக்க ஏற்படுத்தப்பட்டது என இதன்இணையதளச்செய்தி தெரிவிக்கின்றது.
இவ்வுறுப்பினர்கள்ஆய்வாளர்கள், கல்லூரி, பல்கலைக்கழகம் சார்ந்தவர்கள் ஆவர். கலை, பண்பாடு சார்ந்த இவ்வமைப்பில் நாட்டுப்புறவியலில் ஆர்வமுடைய அமெரிக்கர்களே மிகுதி எனலாம். ஆய்விதழ்களை வெளியிடும் இவ்வமைப்பு தேசிய, உலக அளவில் நாட்டுப்புறவியல் ஆய்வுத்திட்டங்களை உருவாக்கிச்செயல்படுவதுடன் பரிசுகள் விருதுகளையும் வழங்கிச்சிறப்பிக்கின்றது.
அமெரிக்காவைப்போல்இங்கிலாந்து, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியாவிலும் நாட்டுப்புறவியல் சார்ந்த அமைப்புகள், ஆய்வு நிறுவனங்கள் தோன்றி நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுகளை வளர்த்து வருகின்றன. இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளிலும் ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை போலவே நாட்டுப்புறவியல் துறைசார்ந்த ஆய்வுகளும் நடந்தன. ஆங்கிலேயர்கள் பலர் இத்துறையில் ஈடுபட்டு உழைத்தனர். இந்தியாவிற்குச்சமயப்பணிபுரிவதற்கு வந்த அருட்தந்தையர் பலரும் அக்காலத்தில் இருந்த பேச்சுவழக்குகள், நாட்டுப்புறம் சார்ந்த கடவுளர்களைப்பற்றிய விவரங்கள், பழக்கவழக்கங்கள், மருத்துவக்குறிப்புகள், பழமொழிகள் முதலானவற்றைத்தொகுத்தனர். இவை மக்களுடன் நெருங்கிப்பழகிட உதவும் என நம்பினர்.
தமிழகத்தில் நாட்டுப்புறப்பாடல் தொகுப்புப்பணியைத்தொடங்கிய பெருமை சார்லசு இ.கோவர் (Charles E.Govar) அவர்களைச்சாரும்.இவர் ஆங்கிலேய ஆட்சியாளர் ஆவார்.1871-இல்இவர் வெளியிட்ட Folk Songs Of Southern India என்னும் நூல் இந்திய மக்களைப்பற்றி ஆங்கிலேயர் அறிவதற்கென வெளியிடப்பட்டது.இந்நூலில் எழுத்திலக்கியங்களும் (திருக்குறள், சிவ வாக்கியார் பாடல்கள் முதலியன) நாட்டுப்புறவியல் என்ற பெயரில் வெளிவந்துள்ளமை ஒரு குறையாகும். கோவரின் எழுத்துப்பணிக்குத் தேவராசுபிள்ளை என்பவர் உதவியுள்ளார். இந்திய நாட்டைச்சார்ந்த நடேச சாத்திரி என்பவர் ஆங்கிலேயருடன் கொண்டிருந்த தொடர்பால் நாட்டுப்புறவியல் தொகுப்பு முயற்சிகளில் ஈடுபட்டதுடன் இந்தியன் ஆன்டிகுயரி (1888) முதலான ஏடுகளிலும் எழுதியுள்ளதை நாட்டுப்புறவியல்துறை அறிஞர்கள் தம்நூல்களில் குறிப்பிட்டுள்ளனர் (தமிழகத்தில் நாட்டுப்புறவியல் ஆய்வு வளர்ச்சி நூலின் உள்ளே விரிவாக விளக்கப்பட்டுள்ளது).
நாட்டுப்புறவியல் என்பது நாட்டுப்புற மக்களின்வாழ்வினையும், வாழ்வில் இடம்பெறும் பண்பாட்டுக்கூறுகளையும்ஆராய்வது ஆகும். நாட்டுப்புற மக்களின் வாழ்வில் பல்வேறு சமயங்களில்பாடப்படும் பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், கைவினைத்தொழில்கள், வழக்காறுகள் யாவும் நாட்டுப்புறவியலில் அடங்கும். அறிஞர் சு.சக்திவேல் அவர்கள் நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்களையும் பண்பாடுகளையும் நம்பிக்கைகளையும் இலக்கியங்களையும் ஆராயும் இயலே நாட்டுப்புறவியலாகும் என நாட்டுப்புறவியலுக்கு விளக்கம் தருவார். நாட்டுப்புற வழக்குகள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராயும் துறையாக நாட்டுப்புறவியல்துறை வளர்ந்துள்ளது.
ஒரு நாட்டு மக்களின் அக,புற வாழ்க்கையைக்காட்டும் கண்ணாடியாக இருப்பவை நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகும். நாட்டுப்புற இலக்கியங்களில் அவ்விலக்கியத்திற்குரிய மக்களின் மொழிநடை, கற்பனை, வெளியீட்டுமுறை, இசை எனப்பல கூறுகள் பொதிந்திருக்கும். எனவேதான் ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்தபொழுது நம்மக்களின் மன உணர்வுகள், அறிவுத்திறன், பண்பாடு, பழக்கவழக்கம் இவற்றை அறிந்துகொள்ள நாட்டுப்புறவியல் துறையில் கவனம் செலுத்தினர். நாட்டுப்புறப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள்,நாட்டுப்புற நம்பிக்கைகள், மருத்துவமுறைகள், மூலிகைகளில் கவனம் செலுத்தினர். நாட்டுப்புறவியலை Folklore என்னும் சொல்லால் வில்லியம் சான்தாமசு(W.J.Thoms) அவர்கள் 1846 இல்வழங்கினார். அதன்பின்னரே இத்துறை தனியாக வளர்ச்சிபெறத்தொடங்கியது. நாட்டுப்புறவியலில்மாந்தனின்சடங்கு முறைகள்,கதைப்பாடல்கள், பழமொழி, நாட்டுப்புறப்பாடல்கள் முதலியன அடங்கும் என்பது தாமசு அவர்களின் கருத்தாகும்.
Folk,Lore என்னும் இருசொற்கள் இணைந்து Folklore என்னும் சொல் உருவானது.ஐரோப்பியநாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் Folk என்னும் சொல் உழவுத்தொழிலில் ஈடுபட்ட மக்களைக்குறித்தது.பின்பு கல்வியறிவு பெறாத சிற்றூர்ப்புற மக்களைக்குறித்தது.பொதுவாக Folk என்னும் சொல் சிற்றூர்ப்புற,படிப்பறிவு இல்லாத மக்களைக்குறிக்கும்.Lore என்னும் சொல்லுக்கு மரபுச்செய்தி தொகுதி என்றும் வழக்காறு என்றும் பொருள்கூறுவது உண்டு.Folklore என்னும் சொல்லுக்கு நாட்டுப்புறமக்களின் அறிவு எனப்பொருள் உண்டு.நாட்டுப்புறவியலைக்குறிக்கும் Folklore என்னும் சொல்லுடன் ஒப்புமை தரும்படி Verbalart, Folklife என்னும் சொற்களை உருவாக்கினர்.ஆனால் இச்சொற்கள் நிலைபெறவில்லை. Folklore என்னும் சொல்லே உலகளவில் நிலைபெற்றது.
நாட்டுப்புற இலக்கியம் என்பவை சில பொதுப் பண்புகளைக் கொண்டிருக்கும். அவற்றை அறிஞர் சான் கரால்டு பிருண்வார்ட்(Jan Harold Brunward) ஐந்தாகப் பகுத்துக்காட்டுவார். 1. வாய்மொழியாகப் பரவல் 2. மரபு வழிப்பட்டது 3. பல்வேறு வடிவங்களாகத் திரிபடைதல் 4. ஆசிரியர் இல்லாமை. 5. வாய்ப்பாட்டுக்குள் அடங்குவது.(Jan Harold Brunward,The Study Of American Folklore,P.4) எனவே நாட்டுப்புற இலக்கியம் என்பது தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகப் பரவுவது எனவும், ஒவ்வொருவரும் தத்தம் பயன்பாட்டுக்கு ஏற்பத் திரிபுகளுடன் பயன்படுத்துவர் எனவும், ஆசிரியர்ர யார் என்பது சொல்ல முடியாதபடி ஆதிஅந்தம் இல்லாததாகவும், இசைவடிவம் கொண்டும் விளங்குவது என வரையறை செய்யலாம்.
நாட்டுப்புறவியல் விளக்கம்
நாட்டுப்புறவியல்(Folklore) எனும் துறை குறித்து அறிஞர்கள் குறிப்பிடும் விளக்கங்கள் பல திறத்தனவாக உள்ளன. ஒவ்வொருவரும் தத்தம் பட்டறிவிற்குத் தகுந்தபடி விளக்கம் தருகின்றனா. இந்திய நாட்டு அறிஞர்களும், உலக அறிஞர்களும் நாட்டுப்புறவியல் பற்றிய பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இந்தியாவின் மூத்த நாட்டுப்புறவியல் அறிஞர் சங்கர் சென்குப்தா என்பவர் நாட்டுப்புற இலக்கியம் என்பது கிராமப்புற மக்களின் அனுபவம் மட்டுமின்றி அவர்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தி காட்டுவது ஆகும் என்கிறார். மானிடவியல் அறிஞர் வில்லியம் பாசுகம் அவர்கள் புராணமரபுக் கதைகள், பழமொழி, விடுகதை, பாடல், கலையின் பாற்பட்ட கூறுகள், அனைத்தின் அறிவையும் நாட்டுப்புறவியல் என்னும் சொல் உணர்த்துவதாகக் குறிப்பிடுகின்றார். (Standard Dictionary Of Folklore Mythology And Legend p.398). இதுபோல் மாயாலீச், கொட்ரூத் கூரத், எர்மின் டபில்யூ வோக்லின், சேம்சன் முதலான அறிஞர்களின் கருத்துகள் நாட்டுப்புறவியல் துறை பற்றி சிறப்பானவை ஆகும். தமிழ்மொழியில் நாட்டுப்புறவியலை, நாட்டுப் பண்பாட்டியல், நாட்டார் வழக்காற்றியல், நாட்டுப்புறவியல் எனும் சொல் கொண்டு அழைப்பர். நாட்டுப்புறவியல் என்னும் சொல்லே அனைவருக்கும் வழங்க எளிதாக உள்ளது.
நாட்டுப்புறப்பாடல் விளக்கம்
நாட்டுப்புறப்பாடல் என்பது சிற்றூர்ப்புறங்களில் (கிராமங்களில்) படிப்பறிவு இல்லா மக்கள் பாடும் பாடலாகும். தமிழகத்தில் நாட்டுப்புறப்பாடல் எனும் சொல்லாட்சி அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. சிலர் நாட்டார்பாடல் என்வும் வழங்குவர். இலங்கையில் இதனை நாட்டார்பாடல் என்றே கூறுவர். மலேசியாவில் வாழும் தமிழர்கள் தாங்கள் பணிபுரியும் இரப்பர் தோட்டங்களில் இருந்து பாடுவதால் தோட்டப்புறப் பாடல்கள் என்று நாட்டுப்புறப் பாடல்களைக் குறிப்பிடுவர்.
நாட்டுப்புறப் பாடல்கள் என்பவை படிப்பறிவு இல்லாத மக்கள் பாடுவதால் எளிமையாகவும் கேட்பதற்கு இனிய ஓசை கொண்டும் பாடப்படும். நாட்டுப்புறப் பாடல்களுக்கு ஆசிரியர் யார் என்பது தெரியாது. இனிய சொல்லாட்சிகளும், அழகிய கற்பனைகளும் கொண்டு இப்பாடல் உயிரோட்டமாக இருப்பதால் அனைவராலும விரும்பப்படுகிறது.
வாய்மொழியாக மக்களால் இப்பாடல்கள் பாடப்படுவதால் வாய்மொழி இல்க்கியம் என்றும், வாய்மொழிப் பாடல்கள் என்றும் குறிப்பிடுவது உண்டு. தானே மலர்ந்து மணம் வீசும் காட்டுமல்லிகை போன்று இப்பாடல்கள் மக்களிடம் தோன்றிப் பரவுவதால் இதனைக் காட்டு மல்லிகை எனவும் குறிப்பிடுவர். தோற்றம் வளர்ச்சி தெரியாமல் உலவுவதால் இதனை மலையருவி என மக்கள் அழைப்பதும் உண்டு. காற்றின் வழியாக இனிய ஓசையுடன் பாடப்படுவதால் காற்றினிலே வரும் கீதம் எனவும் அழைப்பது உண்டு.
நாட்டுப்புறப்பாடல்களின் பெயர்களை அறிஞர் சு. சக்திவேல் அவர்கள் நாட்டுப்புறபாடல், நாடோடிப்பாடல், நாட்டார்பாடல், வாய்மொழிப்பாடல், பாமரர்பாடல், பரம்பரைப்பாடல், கிராமியப்பாடல், கல்லாதார்பாடல், மக்கள் பாடல், ஏட்டில் எழதாக்கவிதை, மலையருவி, காட்டுப்பூக்கள், வனமலர், காற்றிலே மிதந்த கவிதை என்றெல்லாம் அழைக்கப்படுவதைத் தந்நூலில் எடுத்துரைத்து விளக்குவார்(பக்கம்.28).
நாட்டுப்புறப்பாடல் உழைக்கும் மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையன. தங்கள் வாழ்வில் நடைபெறும் அனைத்துவகையான நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பாடலுடன் தொடர்புடையதாக மக்கள் அமைத்துக்கொண்டுள்ளனர். பிறப்பு முதல் இறப்புவரை இசையோடு வாழும் இனம் உலகில் தமிழினம் எனில் மிகையன்று.
பெண்டிர் கருவுற்றிருக்கும் பொழுது செய்யப்படும் வளையலணி நிகழ்வில் நலங்குப்பாடல் பாடுவதும் அதே பெண்ணுக்கு மகப்பேறு நிகழ்ந்த பொழுது பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா எனத் தெரிவிக்கும் மருத்துவிச்சிப் பாடல் (இலங்கையில் பாடப்படுவது) பாடுவதும் இங்குக் கருதத்தக்கன. அக்குழந்தையைத் தாலாட்டும் தாலாட்டுப் பாடல்கள், அக்குழந்தை வளர்ந்த பொழுது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தப் பாடும் பாடல்கள், அக்குழந்தைகள் தாங்களே பாடி மகிழும் விளையாட்டுப்பாடல்கள், தொழில் செய்வோர்பாடும் பாடல்கள், மனித வாழ்க்கை முடிந்து இயற்கை எய்திய பொழுது பாடப்படும் ஒப்பாரிப்பாடல் எனத் தமிழில் பல வகையான பாடல்கள் பாடப்படுகின்றன. இவை யாவும் தமிழர்களின் இசையறிவை, கலையறிவைக் காட்டும் சான்றுகளாக உள்ளன.
நாட்டுப்புறப்பாடல்கள் பாடப்படுவோர், தொழில், சூழல், இவற்றை மனதில் கொண்டு பலவகையாக உலக அறிஞர்களால் பகுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதுபோல் தமிழகத்து நாட்டுப்புறவியல் அறிஞர்களும் நாட்டுப்புறப் பாடல்களைப் பல்வேறு வகையாக வகைப்படுத்திக் காட்டியுள்ளனர். இவ்வகைப்பாடு யாவும் நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கினைத் தெளிவாக மக்களுக்கு உணர்த்தும்.
நாட்டுப்புறவியல் அறிஞர் பௌரா (Bowra) நாட்டுப்புறப் பாடல்களை ஆறு வகையாக வகைப்படுத்திப் பின்வருமாறு பட்டியலிடுவார். 1. இயற்கைப்பாடல்கள் 2. காதல் பாடல்கள் 3. மன வாழ்வு 4. தலாட்டு 5.தொழில்பாடல் 6. விழாப்பாடல்அதுபோல் அறிஞர் மரியாலீச் என்பவர் பின்வருமாறு நாட்டுப்புறப் பாடல்களை வகைப்படுத்துவார். 1. உணர்ச்சிப்பாடல்கள் 2. வாழ்வியல் பாடல்கள் 3. வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகளின் போது பாடும் பாடல்கள் 4. குழந்தைப் பாடல்கள் 5. சமயப் பாடல்கள் (நாட்டுப்புறப்பாடல்கள் வகைகள் குறித்த பிற அறிஞர்களின் வகைப்பாடுகளை முனைவர் சு.சக்திவேல் அவர்களின் நூலில் கண்டு மகிழ்க).
தமிழகத்தில் நாட்டுப்புறவியல் துறைகளில் ஆய்வு நிகழ்த்தியவர்களும் நூல்களை வெளியிட்டவர்களும், பதிப்பித்தவர்களும் தங்கள் துறை சார்ந்த ஈடுபாட்டின் காரணமாக நாட்டுப்புறப் பாடல்களை வகைப்படுத்திக் காட்டுவதில் வேறுபட்டு நிற்கின்றனர். மு. அருணாசலம், கி.வ. சகந்நாதன் (மலையருவி), அன்னகாமு(ஏட்டில் எழுதாக் கவிதை) முதலானவாகளின் பகுப்பு முறை ஒன்றாக உள்ளது. அதுபோல் ஆறு. அழகப்பன் (நாட்டுப்புறப்பாடல்கள் ஒரு திறனாய்வு), நா. வானமாமலை, கிருட்டிணசாமி, வரதராசன், வளவன் முதலானவர்கள் நாட்டுப்புறப்பாடலை வேறு வகையாக வகைப்படுத்துவர். சு. சக்திவேல்,ஆறு. இராமநாதன், சு. சண்முகசுந்தரம் (தமிழில் நாட்டுப்புறப்பாடல்கள்) முதலானோர் செய்யும் வகைப்பாடு வேறாக உள்ளது.
நாட்டுப்புறவியலில் பல்வேறு குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளை நிகழ்த்தியவரும், நாட்டுப்புறப்பாடல் களஞ்சியம் நூலின் முதன்மைப் பதிப்பாசிரியருமான ஆறு. இராமநாதன் அவர்கள் நாட்டுப்புறப்பாடலைப் பகுத்துக் காட்டியுள்ள பாங்கு எளிமையாகவும் அனைவராலும் போற்றும்படியாகவும் உள்ளது.
1. தாலாட்டுப்பாடல்கள் 2. குழந்தைப்பாடல்கள் 3. காதல்பாடல்கள் 4. தொழில்பாடல்கள் 5. கொண்டாட்டப்பாடல்கள் 6. பக்திப்பாடல்கள் 7. ஒப்பாரிப்பாடல்கள் 8. பல்பொருள் பற்றிய¢பாடல்கள் என்பது அவரின் பகுப்பு முறையாகும்.
நாட்டுப்புறப்பாடல்களை இலங்கை நாட்டுப்புறவியல் அறிஞர் வெள்ளவத்தை மு. இராமலிங்கம் பின்வருமாறு வகைப்படுத்துவார். அப்பிரிவுகள் வருமாறு காதல்பாட்டு, கல்யாணப்பாட்டு, கூத்துப்பாட்டு, குறையிரத்தல் பாட்டு, போர்ப்பாட்டு, ஏசல்பாட்டு, கொம்புமுறித்தல் பாட்டு, விறகு சுமப்போர் பாட்டு, தோட்டக்காரர் பாட்டு, பெண்கள் தண்ணீர்க் குடத்தினராய்ப் பாடும் பாட்டு, கோலாட்டப்பாட்டு, வசந்தன் பாட்டு, தலாட்டு, திரிகைப்பாட்டு, கப்பல் பாட்டு, ஓடப்பாட்டு,ஏற்றப்பாட்டு,பள்ளுப்பாட்டு, அருவிப்பாட்டு, நாற்று நடுகைப்பாட்டு, சூட்டுமிதிப்பாட்டு, கிரியைப்பாட்டு, கள்ளுப்பாட்டு, ஊஞ்சல்ப்பாட்டு, தெம்மாங்கு, பறையன் பாட்டு, அம்பட்டன் பாட்டு, வண்ணான் பாட்டு, மருத்துவச்சிப்பாட்டு, மழைப்பாட்டு, கொடும்பாவிப்பாட்டு, கிணறு வெட்டிகள் பாட்டு, தவளைப்பாட்டு, எலிப்பாட்டு, நாய்ப்பாட்டு, சேவற்பாட்டு, ஊர்க்குருவிப்பாட்டு, கரிக்குருவிப்பாட்டு, கிட்டிப்பாட்டு, சிறுவர்ப்பாட்டு என்று வகைப்படுத்தி உள்ளார்.
நாட்டுப்புறப்பாடல்களைப் பற்றிய அறிஞர்களின் கருத்துகள்.
நாட்டுப்புறப்பாடல்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்ட அறிஞர்கள் நாட்டுப்புறப்பாடல்களைப் பலவாக வகைப்படுத்தியமை போன்று அதுகுறித்த விளக்கங்கள் பலவற்றைத் தந்துள்ளனர். நாட்டுப்புறப்பாடல் எனும் தொடர் சுருங்கியதாக இருந்தாலும் இது குறித்த விளக்கங்கள் விரிவாக அறிஞர்களால் தரப்பட்டுள்ளன. அவர்களுள் நாட்டுப்புறவியல் குறித்த முதல் தொகுப்பு நூலை வெளியிட்ட இலங்கையைச் சேர்ந்த சதாசிவ ஐயர் மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு (1940) என்னும் நூலில் பின்வரும் விளக்கத்தை எழுதியுள்ளார். நாட்டுப்பாடல் என்பது சாதாரண மக்களின் பாடல். படிப்பு இல்லாத கிராம வாசிகள், வயலில் உழுகிறவர்கள், நாற்று நடுகிறவர், வாய்க்கால் வெட்டுகிறவர்கள், தண்ணீர் இறைக்கின்றவர்கள், மீன் பிடிப்பவர்கள், ஓடம் விடுகிறவர்கள், வண்டி ஓட்டுபவர்கள் முதலிய மக்கள் பாடுகின்ற பாட்டுத்தான் நாட்டுப்பாடல் என்பது. எழுத்தறிவில்லாத இத்தகைய தொழில் மாந்தரின் இதயத்தில் உணர்ச்சிப்பொங்கி அதுவே பாட்டாகப் பெருகுவதுண்டு. அத்தகைய பாட்டில் உணர்ச்சி இருக்கும்; ஓசை இன்பமிருக்கும்; தாளக்கட்டு இருக்கும்; சொல், தொடை, அழகு இருக்கும்; எனினும் இலக்கண வரம்பிற்கு உட்படாமலும் இருக்கும். இந்நாட்டுப்பாடலை ஓலையில் எழுத்தாணி கொண்டோ, காகிதத்தில் பேனாவினாலோ எழுதியிருக்கமாட்டார்கள். தலைமுறை தலைமுறையாக நாட்டுமக்கள் இப்பாட்டுகளைப் பாடியும் ஆடியும் கேட்டுமே வழங்கிவரச்செய்கின்றனர். மேற்கண்ட சதாசிவ ஐயரின் கருத்து நாட்டுப்புறப்பாடல் குறித்த சிந்தனையின் விரிவையும், தெளிவையும் காட்டும்.
தமிழிசை குறித்த விரிவான ஆய்வுகளை நிகழ்த்திய பேராசிரியர் பி. சாம்ப மூர்த்தி அவர்கள் நாடோடிப்பாடல் எனும் நூலில் நாட்டுப்புறப்பாடல் குறித்த தம் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். ஒரு நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தின் முக்கிய அம்சம் அந்நாட்டில் வழங்கும் நாட்டுப்பாடல்கள். இலட்சக்கணக்கான கிராமிய மக்களின் இசையிது. சோர்ந்திருக்கும் விவசாயிக்கு உற்சாகத்தையும் அவர்கள் இல்லக்கிழத்திக்கு மட்டிலா மகிழ்ச்சியையும் தர வல்லன அந்த நாட்டுப்பாடல்கள். கிராம மக்களிடையே கானும் உள்ளுணர்வுகள் இப்பாடலிலே பிரதிபலிக்கும் என்றும் குறிப்பிடும் சாம்பமூர்த்தியார் நாட்டுப்புறப்பாடல்களை நாட்டுப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டுப்புறப்பாடல்கள் குறித்துத் தமிழ்க்கலைக் களஞ்சியம் எனும் நூலில், நாட்டுப்புறப்பாடல்கள் தாமாக மலர்ந்து மணம் வீசும் காட்டு மலருக்கு ஒப்பானவை. செயற்கை அரண் இன்றிப் பெருகித் தழைத்தவை. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தும் மக்களின் உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடும் தன்மை வாய்ந்தவை. நாட்டுப்புறத்து மக்களின் ஆசை, நம்பிக்கை, கனவு, காதல் ஆகிய எல்லாவற்றையும் அவை பொன்னொளி வீசிப் போற்றுகின்றன என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
ஈழத்து நாடோடிப்பாடல்கள் எனும் நூலில் ஆய்வாளர் நடராசா அவர்கள் நாட்டுப்புறப்பாடல் பற்றிய தம் கருத்தினைப் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார். நாட்டுமக்கள் பாடி மகிழும் பாடல்களே நாட்டுப் பாடல்களாம். நாட்டுப்பாடல்கள் வழங்காத ஊர்களே இல்லை. உலகெங்கும் அவை வழங்குகின்றன. இப்பாடல்கள் ஊருக்கு ஊர் மாற்றம் உடையன. ஏனெனில் ஏட்டில் எழுதாதவை. இலக்கணத்தைப் பாராதவை. இதயத்துடிப்பில் எழுந்தவை. ஆகவே உள்ளத்தைக் கவர்ந்தவை எனவே நிலைபேறு பெற்றவை. கால வெள்ளத்திற்கு இரையாகவே இல்லை என்பார்.
நாட்டுப்புறப்பாடல்களின் தொகுப்புகளைத் தொடக்க காலங்களில் வெளியிட்டவரும் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் பல்கலைக் கழக நிலையில் நிகழக் காரணமாக அமைந்தவர்களுள் ஒருவருமான மதுரை காமராசர் பல்கலைக் கழக மேனாள் தமிழ்ப்பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துறை அனுபவத்திலும் ஊடுருவிப் பயின்ற நாட்டுப்புற மக்களின் உள்ளங்கனினின்றும் தம்மை அறியாது அருவிபோல் சுரந்து வெளிப்பட்டவையே நாட்டுப்பாடல்கள் என்று நாட்டுப்புறப் பாடல்கள் பற்றி விளக்கம் தருவார்.
தமிழக நாட்டுப்புறவியலின் தந்தையாகப் போற்றப்படும் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் தமிழ் நாட்டுப் பாமரர்பாடல் என்னும் நூலில் நாட்டுப்புறப்பாடல்கள் குறித்த தம் கருத்துகளைப் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். குழந்தை கருவாக இருக்கும் காலத்திலிருந்து உலகில் தோன்றிய பிள்ளைப்பருவம், வாலிபப்பருவம், முதுமைப்பருவம் ஆகிய வளர்ச்சிக் கட்டங்களைத் தாண்டிச் சாகும் வரைக்கும் மனித வாழ்க்கையில் உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பாக நாடோடிப்பாடல்கள் உள்ளன என்பார்.
மேற்கண்ட அறிஞர்கள் நாட்டுப்புறப்பாடல்கள் குறித்து விளக்கிய விளக்கங்களை நோக்கும் போது நாட்டுப்புறப்பாடல்கள் என்பது கல்வியறிவு இல்லாத மக்களால் பாடப்படுவது, இசையுடன் அமைந்தது, தோற்றம் தெரியாதது, வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் தொடர்புடையது, அனைவருக்கும் புரியும்படி தெளிவாகப் பாடப்படுவது என்று வரையறை செய்யலாம்.
4 கருத்துகள்:
நாட்டுப்புறவியல் குறித்த பதிவு சிறப்பாக உள்ளது
நாட்டுப்புறவியல் பற்றிய உங்களின் பதிவு சிறப்பாக உள்ளது. ஐயா, தமிழர்களின் பாரம்பரிய கைத்தொழிலான மண்பாண்டம் செய்யும் தொழிலின் வரலாற்றைப் பற்றிய பதிவைப் போட முடியுமா? அது எவ்வாறு தமிழகத்தில் தோன்றியது? பின்னர், எப்படி மலேசியா போன்ற நாடுகளுக்கு வந்தது? தமிழகத்தில் எங்கெல்லாம் இத்தொழில் செய்யப்படுகின்றது போன்ற விபரங்களைக் கூற முடியுமா? இது சம்பந்தமான புத்தகத்தின் பெயரோ அல்லது இணையத்தள முகவரியோ கிடைத்தால் பேருதவியாக இருக்கும்.
உங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன்... நன்றி.
நாட்டுப்புறவியல் பற்றிய உங்களின் பதிவு சிறப்பாக உள்ளது. ஐயா, தமிழர்களின் பாரம்பரிய கைத்தொழிலான மண்பாண்டம் செய்யும் தொழிலின் வரலாற்றைப் பற்றிய பதிவைப் போட முடியுமா? அது எவ்வாறு தமிழகத்தில் தோன்றியது? பின்னர், எப்படி மலேசியா போன்ற நாடுகளுக்கு வந்தது? தமிழகத்தில் எங்கெல்லாம் இத்தொழில் செய்யப்படுகின்றது போன்ற விபரங்களைக் கூற முடியுமா? இது சம்பந்தமான புத்தகத்தின் பெயரோ அல்லது இணையத்தள முகவரியோ கிடைத்தால் பேருதவியாக இருக்கும்.
உங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன்... நன்றி.
நாட்டுப்புறவியல் பற்றிய உங்களின் பதிவு சிறப்பாக உள்ளது. ஐயா, தமிழர்களின் பாரம்பரிய கைத்தொழிலான மண்பாண்டம் செய்யும் தொழிலின் வரலாற்றைப் பற்றிய பதிவைப் போட முடியுமா? அது எவ்வாறு தமிழகத்தில் தோன்றியது? பின்னர், எப்படி மலேசியா போன்ற நாடுகளுக்கு வந்தது? தமிழகத்தில் எங்கெல்லாம் இத்தொழில் செய்யப்படுகின்றது போன்ற விபரங்களைக் கூற முடியுமா? இது சம்பந்தமான புத்தகத்தின் பெயரோ அல்லது இணையத்தள முகவரியோ கிடைத்தால் பேருதவியாக இருக்கும்.
உங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன்... நன்றி.
கருத்துரையிடுக