நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 14 பிப்ரவரி, 2024

கணினித் தொழில்நுட்ப வல்லுநர் மு.சிவலிங்கம் மறைவு!

மு.சிவலிங்கம்  

  கணினித் தொழில்நுட்ப வல்லுநரும், இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், பன்னூலாசிரியருமான அறிஞர்  மு. சிவலிங்கம் அவர்கள்(அகவை 73) நேற்று (13.02.2024) இரவு 9.30 மணியளவில், சென்னை மாம்பலத்தில் உள்ள தம் இல்லத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மு. சிவலிங்கம் ஐயாவை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற கணித்தமிழ் மாநாட்டில் மு. சிவலிங்கம் ஐயாவைக் கண்டு உரையாடியமையும் 2014 இல் புதுச்சேரியில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டில் அவர்தம் அரிய உரையைச் செவிமடுத்தமையும் நினைவில் வந்துபோகின்றன. தமிழ்க் கணிமைத் துறைக்கு இவரின் மறைவு பேரிழப்பாகும். 

  மு. சிவலிங்கம் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் வட்டம், கூவக்காப்பட்டி என்னும் ஊரில் 12.09.1951 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர்: முனியப்பன், சின்னக் கண்ணம்மாள் ஆவர். பெற்றோருக்கு இவர் பன்னிரண்டாவது பிள்ளையாகப் பிறந்தவர். வெள்ளைய கவுண்டனூர் தொடக்கப்பள்ளியிலும், கூவக்கப்பாட்டிப் பள்ளியிலும், வேடசந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வி பயின்றவர். சிவகாசி அய்யநாடார் கல்லூரியில் கணிதப்பாடத்தைப் பட்டடப் படிப்பிற்காகப் பயின்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்திற்காகக் கணிதத்தைப் பயின்றவர். கணிதம், தமிழ், கணினிப் பயன்பாடு, தொழிலாளர் சட்டம், மனித வள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தமிழக அரசு அமைத்த பல்வேறு குழுக்களில் இருந்து, கணினி, தொழில்நுட்ப மேம்பாட்டுக்குப் பணியாற்றியவர். மரபு கவிதை எழுதுவதில் பேரீடுபாடு கொண்டவர். சிற்றிதழ் நடத்தியவர். கவியரங்கேறியவர்.


புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாட்டில் மு. சிவலிங்கம் அவர்கள் உரையாற்றும் காட்சி(2014)

  நெட்வொர்க் தொழில்நுட்பம், டிபேஸ் வழியாக சி-மொழி, வருங்கால மொழி சி#,  கம்ப்யூட்டர் இயக்க முறைகள், மின்-அஞ்சல், டாஸ் கையேடு, IQ தேர்வுகள் எழுதுவது    எப்படி?, +1 கணிப்பொறியியல்,  +2 கணிப்பொறியியல், ரெட்ஹேட் லினக்ஸ்,   ஓப்பன் ஆஃபீஸ் கையேடு, தகவல் தொழில்நுட்பம்:    ஓர் அறிமுகம், முதலிய நூல்களைத் தமிழுக்குத் தந்துள்ளார். மொழிபெயர்ப்புகள் என்ற வகையில் லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும், கம்யூனிசத்தின் கோட்பாடுகள்,  கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை, கூலியுழைப்பும் மூலதனமும், கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் முதலிய நூல்களை வழங்கியுள்ளார்.

 


வியாழன், 1 பிப்ரவரி, 2024

வாலையானந்த சுவாமிகள்

வாலையானந்த சுவாமிகள் துயிலுமிடம்


வாலையானந்த சுவாமிகள் துயிலுமிடம் 

[வாலையானந்த சுவாமிகள் சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் பெரும்புலமை பெற்றவர். பன்மொழியறிஞர். சித்த மருத்துவத்தில் பெரும் புகழுடன் விளங்கியவர். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை அடுத்த வெண்ணெய்வாசல் என்னும் ஊரில், பாண்டவை ஆற்றின் வடகரையில் பஞ்சாட்சபுரம் என்ற பெயரில் திருமடம் அமைத்து, சித்தாந்த நிலையம் என்று குடில் அமைத்து, சமயப்பணியாற்றியவர். பன்னிரண்டு ஆண்டுகள் கடும் உணவுக்கட்டுப்பாடுகளுடன் தவம் செய்து, அட்டமா சித்துகள் கைவரப் பெற்றவர். பல்வேறு திருமடங்களின் தலைவர்களுடன் தொடர்பில் இருந்து, தீக்கை பெற்றவர். ] 

கரந்தை உமாமகேசுவரனார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணியாற்றி, ஓய்வுபெற்றுள்ள என் அருமை நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் வாலையானந்த சுவாமிகள் இயற்றிய நூலொன்றின் பெயரைச் சொல்லி, அந்த நூல் தங்களிடம் கிடைக்குமா? என்று வினவினார்கள். அதுவரை வாலையானந்தர் பற்றி அறிந்திராத நான் வாலையானந்தர் பற்றிய விவரங்களைத் தேடினேன். தக்க அன்பர்களை வினவி, விவரம் அறிந்தேன். அவரின் சித்தாந்த ஆராய்ச்சிப் பணிகள் என்னை ஈர்த்தன. அவர்தம் சித்தாந்தம் குறித்த ஈடுபாடும், நூல்களும் பெரும் வியப்பை ஏற்படுத்தின. அவரின் சித்த மருத்துவத்துறைப் பணிகள் மலைப்பை உண்டாக்கின. அவர் எழுதிய நூல்கள், கட்டுரைகளைத் தேடிப் படிக்கத்தொடங்கினேன். என் நண்பர் பேராசிரியர் விவேகானந்தன் (காரைக்கால் ஊரினர். தற்பொழுது புதுவையில் பணியாற்றுகின்றார்)  அவர்களிடம் உரையாடியபொழுது, வாலையானந்தர் பற்றித் தாம் ஒரு கட்டுரை வரைந்துள்ளதைச் சொல்லியதுடன், உடன் கட்டுரைப் படியையும் என் பார்வைக்கு அனுப்பினார்கள். வாலையானந்தர் பற்றிய முழுமையான வரலாறு ஓராற்றான் எனக்குத் தெரியத் தொடங்கியது. வாலையானந்தர் பற்றிய முழுமையான செய்திகளைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டிய தேவையுள்ளதை உணர்ந்தேன். 

வாலையானந்தரின் சக்கர மகாமேரு பீடம், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை அடுத்துள்ள, வெண்ணைவாசலில் இருப்பதைச் சமய அறிஞர்கள் வழியாக விரிவாக அறிந்து, அதனை ஒருமுறை காண வேண்டும் என்று விருப்பம்கொண்டிருந்தேன். திருவாரூர் பெரும்புலவர் எண்கண் மணி ஐயாவுக்கு என் விருப்பத்தைத் தெரிவித்தேன். பெரும்புலவர் எண்கண் மணி ஐயா அவர்கள் அகவை முதிர்ந்த சான்றோர் பெருமகனார் எனினும் என் ஆய்வுப்பணிகளுக்கு ஓர் இளைஞரைப் போல் முன்வந்து உதவுவதைப் பேரீடுபாட்டுடன் செய்பவர். உரிமையுடன் கேட்டு, அவரிடம் பெற்ற உதவிகள் கணக்கில. குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம், விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம், தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் என என் ஆவணப்படப் பணிகளுக்குத் தரவுகளைத் தேடி, ஐயாவிடம் செல்லும்பொழுதெல்லாம் இன்முகத்துடன் உதவும் பெரும்பண்பு வாய்த்த தமிழ்மகனார் நம் மணி ஐயா அவர்கள். 

20.01.2024 மாலை 5 மணிக்குக் கொரடாச்சேரி வரும் என் திட்டத்தை எண்கண் மணி ஐயாவிடம் உறுதிப்படுத்தினேன். குடந்தையிலிருந்து  குடவாசல்  ஊருக்குப் பேருந்தில் பயணம். அங்கிருந்து மூடுந்தில் கொரடாச்சேரியை அடைந்தேன். முன் பின்னாக இருவரும் கொரடாச்சேரி, வாலையானந்த சுவாமிகளின் திருமடத்தில்  அந்தி மாலையில், சந்தித்தோம். அம்மடத்தில் இருபத்தைந்து ஆண்டுகளாக வாழ்ந்துவரும் தவத்திரு முத்துக்குமாரசாமி அடிகளார் அவர்களைப் பணிவுடன் வணங்கி, வாலையானந்த சுவாமிகளின் பணிகளையும், சிறப்புகளையும், பெருமைகளையும் கேட்டறிந்தேன். 

வாலையானந்தரின் பிறந்த ஊர் காரைக்காலை அடுத்துள்ள பொன்பற்றி (பொன்பேத்தி) ஆகும். இவ்வூர் நெடுங்காடு என்னும் ஊருக்கு அருகில் உள்ளது. சைவ வேளாளர் மரபில் தோன்றியவர். இவர் பிறந்த ஆண்டு 1879 ஆகும். தந்தையின் பெயர் கோவிந்தசாமி என்பதாகும். இளமை வயதிலேயே ஆன்மீக நாட்டம்கொண்டு, பல ஊர்களில் உள்ள கோவில்களை வழிபட்டவர்.  தருமபுர மடத்தின் தவத்திரு. அருள்நந்தி தேசிக ஞானசம்பந்த பரம்மாச்சாரியார்களிடத்துச் சமய தீட்சை, நிர்வாண தீட்சை பெற்றவர். திருவாவடுதுறை ஆதீனத்தின் குருமகா சந்நிதானம் அம்பலவாண சுவாமிகள் அவர்களிடத்துப் பல்வேறு தீட்சைகளைப் பெற்று, சச்சிதானந்தன் என்னும் திருப்பெயரும் பெற்று விளங்கினார்கள். வாலையானந்தரின் பக்திநெறிகண்டு உளம்மகிழ்ந்த திருவாவடுதுறை ஆதீனகர்த்தர், ஸ்ரீவித்யை உபதேசித்து பாஸ்கரராயர் உருவாக்கிய ஸ்ரீசக்ர மகாமேருவை நமது சுவாமிகளுக்கு வழங்கியருளினார்கள். அதனைப் பூசனை செய்ய வேண்டுமெனில் துறவுநிலையில் மேம்பட்டிருத்தல் வேண்டும்; பல்வேறு துறவுநிலைகளில் உயர்நிலை பெற்றிருக்க வேண்டும். அத்தகைய தகுதிப்பாடுகள் நம் வாலையானந்தருக்கு இருந்ததால் மகாமேருவை நாளும் வழிபாடாற்றிவந்தார்கள். 

தம் தவப்பணிகளுக்குத் தனியிடம் வேண்டும் என்பதை உணர்ந்த வாலையானந்த சுவாமிகள், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை அடுத்த வெண்ணெய்வாசல் ஊரில், பாண்டவை ஆற்றின் வட கரையில் அமைதியான இடத்தைத் தேர்வு செய்து திருமடத்தை உருவாக்கி, அப்பகுதியில் உள்ள ஆர்வலர்களுக்கும் தம்மை நாடி வரும் சைவ அன்பர்களுக்கும் சைவ சித்தாந்த முப்பொருள் உண்மைகளை விளக்கமாகப் பாடம் சொல்லி வந்தார்கள். கரந்தை உமாமகேசுவரம் பிள்ளை உள்ளிட்ட அன்பர்கள் சுவாமிகளிடம் பாடம் கேட்டுள்ளனர் என்பதை அறியும்பொழுது சுவாமிகளின் கல்வி, கேள்வி நலன் தெற்றென விளங்கும். 

முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், ஔவை துரைசாமிப் பிள்ளை முதலியோரும் சுவாமிகளிடத்துப் பாடம் கேட்டவர்கள் என்பதை அறியமுடிகின்றது. அ. ச. ஞானசம்பந்தன், மறைமலையடிகளாரின் மகன் மறை. திருநாவுக்கரசு,, சாமி. வேலாயுதம் பிள்ளை, திருச்சி இராம. நடேசம் பிள்ளை, கொரடாச்சேரி துரைசாமி பிள்ளை போன்றவர்கள் சுவாமிகளின் சீடர்களாக இருந்து, சுவாமிகளின் பணிகளுக்குத் துணைநின்றுள்ளனர். 

சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்கள் தம் இளமைக்காலத்தில் கொரடாச்சேரியில் வாழ்ந்தபொழுது, தம் தந்தையாருடன் சென்று வாலையானந்த சுவாமிகளைச் சந்தித்தமையையும், சுவாமிகளின் திருக்கையினால் சிந்தாந்தப் பட விளக்கம் நூலினைப் பெற்றமையையும் நன்றியுடன் குறிப்பிடுவார். சுவாமிகள் தம்முடன் எளிமையாகப் பழகி, அறிவுரை நல்கியதை என்னுடன் அமைந்த ஓர் உரையாடலின்பொழுது தெரிவித்தார்கள்.

வாலையானந்த சுவாமிகள் தமிழ் ஆங்கிலம் பிரெஞ்சு, வடமொழி அறிந்தவர்கள். சுவாமிகளுக்குத் தமிழ் இலக்கண, இலக்கிய அறிவு, வடமொழியறிவு, புராணம், இதிகாச, சாத்திரக் கருத்துகளில் மிகப்பெரும் புலமை இருந்துள்ளதை அவர்தம் சித்தாந்தப் பட விளக்கம் நூலின் வழியாக அறியலாம். சிவஞான போதம் நூலில் சுவாமிகளுக்கு இருந்த ஆழமான புலமையை அவர் எளிதாக எடுத்துரைக்கும் அவரின் வினா-விடை வடிவிலான சிவஞானபோத நூல் விளக்கங்களிலிருந்து தெரிந்துகொள்ள இயலும். 

1941 ஆம் ஆண்டு இத்திருமடத்திற்கு வருகைபுரிந்த காஞ்சி காமகோடி பீடம் சந்திரசேகரேந்திர சுவாமிகள்  அவர்கள், வாலையானந்தரால் வழிபடப்பட்டு வந்த மகாமேருவை வழிபட்டுச் சென்றுள்ளார்கள். 

சித்தாந்தப் பட விளக்கம் என்னும் வாலையானந்தரின் நூலுக்கு அன்னப்பன்பேட்டை ஆதீனம்  தவத்திரு தாயுமான  பண்டார சந்நிதி அவர்களும், தருமபுர ஆதீனத்துத் தவத்திரு சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகளும், தில்லைவிளாகம் தவத்திரு சிவாஞானத் திருத்தளி சிதம்பர சுவாமிகள், தில்லைவிளாகம் மடத்துவாசியாகிய திருச்செந்தூர் ஆனந்த சண்முக சரணாலய சுவாமிகள் உள்ளிட்டோர் சிறப்புப் பாயிரங்களை எழுதியுள்ளனர். தவத்திரு மறைமலையடிகள், நாகை வித்துவான் கிருஷ்ணசாமி உபாத்தியாயர்  உள்ளிட்ட அறிஞர்கள் சுவாமிகளிடத்துப் பெரும் மதிப்புவைத்திருந்தனர். வாலையானந்தரின் மறைவையொட்டி, திருவாவடுதுறை ஆதீனப்புலவர் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரைந்துள்ள இரங்கல் பாக்கள் சுவாமிகளின் பெருமையுரைக்கும் அரிய ஆவணமாகும். 

கயிலாய பரம்பரையிற் சயிலாதி மரபினிலே கவினத் தோன்றிப்

பயிலுமுயர் சிவஞான பாநுவென அகத்திருளைப் பாற்றி யாங்கள்

உயுநெறியைப் பல்லாற்றானும் விரித்துப் படவிளக்கம் உஞற்றி மேலும்

செயுநெறியை யுரையாமற் சிவபரிபூரணத் துற்றாய் செய்வதென்னே. 

எனத் தொடங்கும் த.ச.மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இரங்கற்பா கற்போர் உள்ளத்தைக் கரைக்கும் ஆற்றல்பெற்றவை. 

வாலையானந்த சுவாமிகள் பல்வேறு நூல்களை இயற்றியிருப்பினும் அவற்றைத் தொகுத்துப் போற்றுவார் இல்லாமல் போனதால் கீழ்வரும் நூல்களைக் குறித்த விவரங்கள் மட்டும் தெரிய வருகின்றன. வன்படிகளாகவும், மென் படிகளாகவும் சில நூல்கள் கிடைப்பினும் அவர்தம் அனைத்து நூல்களையும், கட்டுரைகளையும், தொகுத்துப் பாதுகாப்பது அடிகளார்க்குச் செய்யும் பெருந்தொண்டாக அமையும். 

நூலாக்கப் பணிகள்: 

வாலையானந்த சுவாமிகள் தாம் கற்ற செய்திகளையும் அறிந்த செய்திகளையும் கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளிப்படுத்தியுள்ளார்கள். அவ்வகையில் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளதை அறியமுடிகின்றது. இந்த நூல்கள் யாவும் ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டதாகவும், பட விளக்கங்களுடன் செய்திகளை விளக்குவனவாகவும் உள்ளன. சித்தாந்தக் கருத்துகளை நுட்பமாக எடுத்துரைக்கும் வகையில் இவரின் நூல்கள் உள்ளன. சைவ சித்தாந்த நூல்களில் இவருக்குப் பெரும்புலமை இருந்துள்ளதை இவரின் நூல்கள் வழியாக அறியமுடிகின்றது. தருக்க நூல் புலமை, வடமொழி சாத்திர அறிவும் இவருக்கு மிகுதியாக இருந்துள்ளன. அதுபோல் வழிபாடுகள், முத்திரைகள், கோவில் அமைப்பு முதலியனவற்றை விளக்குவனவாகவும் இவரின் நூல்கள் உள்ளன.

சொற்பொழிவுகள்: 

வாலையானந்த சுவாமிகள் தம் காலத்தில்  நடைபெற்ற சமய இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு கேட்போர் வியக்கும் வகையில் சொற்பெருக்காற்றியுள்ளார்கள். தமிழ்ப்பொழில், தமிழர் உள்ளிட்ட இதழ்களில் சுவாமிகள் பல கட்டுரைகளை எழுதி, நாட்டில் சமய நெறி தழைப்பதற்குப் பாடுபட்டுள்ளார். 

திருமுறைப்பணி: 

வெண்ணைவாசலுக்குத் தெற்கே ஒரு கல் தொலைவில் உள்ள திருவிடைவாயில் என்னும் ஊரில் உள்ள விடைவாயப்பர் கோவில் சுவாமிகளுக்கு, ஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் கல்வெட்டில் உள்ளதைக் கண்டறிந்து(1917) அதனை ஊர் மக்களுக்குத் தெரிவித்து, கருங்கல் திருப்பணியும் செய்வித்தார்கள். அப்பதிகம், 

மறியார் கரத்தெந்தையம்  மாதுமை யோடும்

பிறியாத பெம்மான்   உறையும் இடமென்பர்

பொறிவாய் வரிவண்டுதன்  பூம்பெடை புல்கி

வெறியார் மலரில்  துயிலும் விடைவாயே.  

எனத் தொடங்குவதாகும். 

சித்த மருத்துவப் பணிகள்: 

வாலையானந்த சுவாமிகள் மக்களுக்குத் தேவையான மருந்துகளை அந்த நாளில் செய்து, அவற்றைக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைப்பதற்கு வழி செய்துள்ளார். அவ்வகையில் அவரின் மருந்துகள் குறித்த விளம்பரங்கள் இதழ்களில் தொடர்ந்து, வெளிவந்துள்ளன. அவ்வகையில் அவரின் மருந்துகளுள் குமரித் தைலம், நேத்திர ரஞ்சனி அரக்(கண் நோய் மருந்து), பற்பொடி,  கோரோஜனை மாத்திரை, காக்கரட்டான் மாத்திரை, இராச சுகபதி மாத்திரை, சுரமாத்திரை, பாலாரக்ஷாமணி, வீரிய விர்த்தி மாத்திரை, சர்வ ரணசஞ்சீவி(வெட்டுக்காயங்கள், புரைப்புண்களுக்கு உரியவை), தேள்கடி மருந்து, முதலியன புகழ்பெற்றவை. குட்டரோகம் உள்ளிட்ட நோய்களும் வாலையானந்தரின் மருந்துகளால் குணப்படுத்தப்பட்டுள்ளன. 

சமயப் பணிகள், இலக்கிய ஆராய்ச்சிப் பணிகள், சித்த மருத்துவப் பணிகள் என்று தம் தவ வாழ்க்கையை அமைத்துக்கொண்ட வாலையானந்த சுவாமிகள் 18.10.1958 ஆம் ஆண்டு (சனிக்கிழமை, இரவு) தனது 80 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்கள். ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி நாளில் ஆண்டுதோறும் சுவாமிகளுக்குக் குருபூசை நடைபெறுகின்றது. 

சுவாமிகளின் மறைவுக்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து, 01.01.2004 முதல் முறைப்படி வழிபாடுகள் திருமடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போதிய உதவிகளும் துணையும் திருமடத்திற்குத் தேவைப்படுகின்றன. அவை கிடைப்பின் திருமடப்பணிகளும், வாலையானந்த சுவாமிகளின் அறிவாராய்ச்சிப்பணிகளும் வெளியுலகிற்குத் தெரியவரும். 





வாலையானந்த சுவாமிகளின் தமிழ்க் கொடைகள்: 

1). சித்தாந்தப் படவிளக்கம் (1917)

2). சித்தாந்தப் பட விளக்கப் பாலபோதம் (1930)

3). சைவ அனுட்டான விதி (1928)

4). துகளறு போதம்

5). குண்டவிதி (1930)

6). சிவனடியார் திருக்கூட்டம்

7). பிரசாதப் படம்

8). தத்துவ விளக்கச் சுருக்கம் (1918)

9).சிவஞானபோதச் சூரணிக்கொத்து (1928) எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளையின் ஆங்கில அறிமுகவுரை உள்ள நூல்.

10). சிவஞானபோதவுரை

11). தமிழ்மறை படம்

12). திரிபதார்த்த சிந்தனை

13). சிவாலயமும் கும்பாபிடேகமும்

14). திருவள்ளுவர் சித்தாந்த சைவர் (1976 கழக வெளியீடு)

15). எறிபத்தநாயனார் புராணத்தின் மெய்ப்பொருள் விளக்கம் (1951)

16). அருணகிரிநாத சுவாமிகள் அமுதம்

17). அர்ச்சனைப் பத்து

18). பத்துக்கட்டளைகள் (1950) 

மு.இளங்கோவன், புலவர் எண் மணி

நன்றி: 

தவத்திரு முத்துக்குமாரசாமி அவர்கள், வாலையானந்த சுவாமிகள் திருமடம்

முனைவர் விவேகானந்தன்

திரு. கரந்தை ஜெயக்குமார்

புலவர் திரு. எண்கண் மணி ஐயா

தமிழ் இணையக் கல்விக்கழகம் 

**** இக்கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.