நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 22 அக்டோபர், 2021

செம்மொழி நிறுவன நினைவுகள்…

 

முனைவர் இரா. சந்திரசேகரன் அவர்களிடம் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் நூல்களைப் பெற்றுக்கொள்ளும் மு.இளங்கோவன், அருகில் முனைவர் ஆரோக்கியதாசு அவர்கள்

 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரனார் அவர்கள் தம் நிறுவனத்தில் தமிழ்ச் செவ்விலக்கியங்களில் இசைக்கலையும் நாட்டியக் கலையும் என்னும் பொருண்மையில் ஒரு கிழமை பயிலரங்கம் நடைபெறுவதாகவும் அதில் தமிழிசை அறிஞர்களைக் குறித்தும் அவர்களின் தமிழிசைப் பணிகள் குறித்தும் உரையாற்ற வேண்டும் எனவும் அன்புக் கட்டளையிட்டார்கள். பயிலரங்கப் பொறுப்பாளர் முனைவர் புவனேசுவரி அவர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு யான் உரையாற்ற வேண்டிய தலைப்புகள் குறித்து கேட்டறிந்தார்கள். நான்கு தலைப்புகளில் உரையாற்றுவதற்கு உரிய செய்திகள் உள்ளன எனவும், வாய்ப்புக்கு ஏற்ப என் உரைகளை வழங்குவதற்கு அணியமாக உள்ளேன் எனவும் மறுமொழி பகர்ந்தேன். அத்தலைப்புகள் வருமாறு:

1.சிலப்பதிகார இசையும் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை .சுந்தரேசனாரின் ஆய்வுகளும்

2. சிலப்பதிகார யாழும் விபுலாநந்தரின் ஆய்வுகளும்

3. பழந்தமிழ் இசையும் ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வுகளும்

4. பழந்தமிழிசையும் வீ. . கா. சுந்தரம் ஆய்வுகளும்

 பயிலரங்கில் கலந்துகொள்ளக்கூடியவர்கள் இசை, நாட்டியம் குறித்த முனைவர் பட்ட ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எனவும்,  தமிழகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்தும் வருகின்றனர் எனவும், அவர்களுக்கு மேற்கண்ட நான்கு தலைப்புகளின் செய்திகளும் சென்றுசேரவேண்டும் எனவும் இயக்குநர் அவர்கள் விரும்பினார்கள். ஒரு கிழமை உழைத்து, கட்டுரைக் குறிப்புகளையும், சுமக்கும் அளவுக்குக் கருவி நூல்களையும் எடுத்துக்கொண்டு சென்னைக்குப் பயணமானேன். 11.10.2021 மற்றும் 12.10.2021 ஆகிய இரண்டு நாளும்  என் பொழிவு நான்கு அமர்வுகளில் செம்மொழி நிறுவனத்தின் கருத்தரங்க அறையில் அமைந்தன.

 குடந்தை ப. சுந்தரேசனார், விபுலாநந்த அடிகளார் குறித்து ஆவணப்படத்திற்கு எனத் திரட்டிய அரிய குறிப்புகளைப் பயன்படுத்தி ஆய்வு மாணவர்களுக்கு என் பொழிவை வழங்கினேன். குடந்தை ப.சுந்தரேசனாரின் பண்ணிசை மீட்பு முயற்சி, அவரின் பஞ்சமரபு பதிப்புப்பணி, கட்டுரைப்பணி, நூல் பணி, இதழ்ப்பணி, சொற்பொழிவுப் பணிகளை ஆய்வுமாணவர்களுக்கு அறிமுகம் செய்தேன். வந்திருந்தோர் இளையோர் என்பதால் யாருக்கும் ப.சுந்தரேசனார் பற்றிய அறிமுகம் இல்லை. ஆயின் ஆர்வமுடன் கேட்டுக் குறிப்பெடுத்துக்கொண்டனர். இருபத்தைந்து ஆண்டுகள் உழைத்து, ப.சு. அவர்களின் குரலினை மீட்டெடுத்த வரலாற்றை நினைவுகூர்ந்தேன். அவரின் பெரும்பாணாற்றுப்படையின் பாடல், சிலப்பதிகாரப் பாடல்கள், தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரம், பெருந்திருப்பிராட்டி பிள்ளைத்தமிழ் (இலால்குடியில் கோயில்கொண்டிருக்கும் அம்மையின் சிறப்புரைக்கும் பெரும்புலவர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய அரிய பாடல்), குமரகுருபர சுவாமிகளின் தொடுக்கும் கடவுள் பழம்பாடல், திருமுருகாற்றுப்படையின் உலகம் உவப்ப உள்ளிட்ட பாடலடிகள் ப. சு. வின் குரலில் ஒலிக்க அரங்கம் அமைதிகொண்டது. அவரின் பரிபாடல் இசையை இத்தமிழுலகம் கேட்கும் வகையில்  என் ஆய்வு முயற்சி தொடர்கின்றது என்று அரங்கினர்க்கு நினைவூட்டி முதல் பொழிவை நிறைவு செய்தேன்.

 விபுலாநந்த அடிகளாரின் இளமை வாழ்க்கை, துறவு வாழ்க்கை, இலங்கையிலும் தமிழகத்திலும் செய்த அறிவுப்புரட்சி, யாழ் நூல் ஆராய்ச்சி குறித்தும், யாழ்நூல் பதிப்பு குறித்தும், யாழ்நூலின் உள்ளடக்கம் குறித்தும், அடிகளார் தமிழிசையுலகில் செய்து நிறைவேற்றியுள்ள ஆராய்ச்சிப் பணிகள், சமூகப்பணிகள் குறித்தும் ஆய்வாளர்களுக்கு விளக்கினேன். விபுலாந்த அடிகளாரின் வாழ்வியல் விளக்கும் காணொலிக் காட்சியும் திரையிட்டுக் காட்டினோம்.

 மூன்றாம் பொழிவில் ஆபிரகாம் பண்டிதரின் இளமை வாழ்க்கை, கல்விப்பணி, மருத்துவப்பணி, ஆராய்ச்சிப் பணிகளைக் குறித்தும், சிலப்பதிகாரத்தில் பொதிந்துள்ள அரிய இசை உண்மைகளை முதன்முதல் பண்டிதர் விளக்கியுள்ள பாங்கினைக் குறித்தும் கருணாமிர்த சாகரத்தின் துணையுடன் விளக்கினேன். சிலப்பதிகாரத்தின் இசைப்பகுதிகளை முதன்முதல் சிறப்பாகப் புரிந்துகொண்டவர் பண்டிதர் எனவும் குறிப்பாகப் பதிகப்பகுதியில் விளக்கப்பட்டிருக்கும் இசையுண்மைகளை எடுத்துக்காட்டி விளக்கியவர் பண்டிதர் எனவும் அவரின் பெருமையை நினைவுகூர்ந்தேன். இசைமாநாடுகள் கண்டமையையும், பரோடா மன்னர் அவையில் தம் ஆராய்ய்ச்சி உண்மைகளை எடுத்துரைத்த பாங்கினையும்,  தமிழிசையுலகில் கருணாமிர்த சாகரத்தின் சிறப்பினையும் சான்றுகளுடன் விளக்கினேன்.

 நான்காம் பொழிவில் இசைமேதை வீ. ப. கா. சுந்தரம் அவர்களுடன் எனக்கு அமைந்த கலைக்களஞ்சியத் தொடர்பு குறித்தும், தமிழிசைக் கலைக்களஞ்சியத்தின் அமைப்பு, அதன் பெருமை, சிறப்பு, தமிழிசை, நாட்டியம் குறித்து அதில் பொதிந்துகிடக்கும் அரிய உண்மைகள், களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ள தலைமைச்சொற்கள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள், அட்டவணைகள், படங்கள், இசையாய்வுக்கு உழைத்த அறிஞர்களின் பணிகள் இடம்பெற்றுள்ளமையை அரங்கிற்கு எடுத்துரைத்தேன். களஞ்சியம் உருவாவதற்கு அந்நாள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர்களாக விளங்கிய ச. முத்துக்குமரன் ஐயா, வீர. முத்துக்கருப்பன் ஐயா, ஜெகதீசன் ஐயா, பதிவாளர் சி. தங்கமுத்து ஐயா ஆகியோர் செய்த உதவிகளை நன்றியுடன் நினைவுகூர்ந்தேன். என் நான்கு பொழிவுகளும் தமிழிசை, நாட்டியம் குறித்த ஆர்வம் கொண்ட ஆய்வாளர்களுக்கு நல்ல அறிமுகமாக இருந்தமையைப் பின்னூட்டங்களின் வழியாக அறிந்துகொண்டேன். 


      பங்கேற்பாளர்களுடன் மு.இளங்கோவன், முனைவர் புவனேசுவரி

 நிறுவன இயக்குநர் முனைவர் இரா. சந்திரசேகரனார்க்கு என் பொழிவின் சாரச்செய்திகள் உடனுக்குடன் அன்பர்களால் தெரிவிக்கப்பட்டன. முன்பே என் தொல்காப்பிய ஆர்வத்தையும், தொல்காப்பியம் பரப்பும் என் முயற்சியையும், திருக்குறள் ஆர்வத்தையும் அறிந்த இயக்குநர் இரா. சந்திரசேகரனார் அவர்கள் நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள தொல்காப்பியம், சிலப்பதிகாரம் நூலினையும், பதிப்பித்துள்ள இறையனார் களவியல் என்னும் நூலினையும் வழங்கி என் முயற்சிகளைப் பாராட்டினார்கள். 

 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள தொல்காப்பிய நூல் மிகச் சிறந்த தாளில், கண்ணைக்கவரும் அச்சில் பிழையின்றி, நல்ல நூற்கட்டில் அமைந்துள்ளது. மூலம், எழுத்துப்பெயர்ப்பு, வி. முருகன், பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார், சி, இலக்குவனார், கமில் சுவலபில் ஆகியோரின் ஆங்கிலமொழிபெயர்ப்புகள் நூலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன. இத் தொல்காப்பிய மொழிபெயர்ப்பைத் தொகுத்துப் பதிப்பித்தவர் பேராசிரியர் வி. முருகன் ஆவார்.  பேராசிரியர் வி. முருகனின் முன்னுரையும், பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்களின் தொல்காப்பியச் சிறப்புரைக்கும் கட்டுரைகளும் நூலுக்கு மேலும் தரம் சேர்க்கின்றன. இந்நூலினை உலகத் தமிழர்கள் ஆர்வத்துடன் வாங்கிப் பாதுகாக்கும் வகையில் தங்குதடையின்றிக் கிடைப்பதை அறிந்து வியப்புற்றேன். இத்தொல்காப்பிய நூலின் விலை உருவா 1300 ஆகும்.. ஆயின் பாதி விலைக்கு அதாவது 650 உருவாவுக்கு நிறுவனத்தில் பெற்றுக்கொள்ள இயலும். அமேசான் நிறுவனத்தின் வழியாகவும் அயல்நாடுகளில் இருப்போர் பெற்றுக்கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 


 சிலப்பதிகாரம் நூலும் பிழையில்லாத அச்சில், கண்ணைக் கவரும் தரத்தில் மூலம், ஆர். பார்த்தசாரதி, ஆர். எஸ். பிள்ளை, ஆலன் டேனியல் ஆகியோரின் ஆங்கிலமொழிபெயர்ப்புடன் வெளிவந்துள்ளது. தொகுத்துப் பதிப்பித்தவர் பேராசிரியர் கா. செல்லப்பன் ஆவார் (பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறையின் முன்னைத் தலைவர்). பேராசிரியர் கா. செல்லப்பனின் முன்னுரையும், பேராசிரியர் ப. மருதநாயகத்தின் அறிமுகவுரையும் சிலப்பதிகார மொழிபெயர்ப்பு நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன.  இந்த நூலின் விலை 1100 உருவா ஆகும். பாதி விலைக்கு அதாவது 550 உருவாவுக்கு இதனைப் பெற்றுக்கொள்ள இயலும். அமேசான் வழியாகவும் ஆர்வலர்கள் வாங்கிக்கொள்ள இயலும். 


 

 திருமூலத்தானம் முனைவர் அ. தாமோதரன் அவர்கள் பதிப்பித்துள்ள இறையனார் களவியல் நூலும் பதிப்புலகிற்கோர் முன்மாதிரி நூலாகும். அ. தாமோதரனாரின் அரிய உழைப்பு பக்கந்தோறும் பளிச்சிட்டு நிற்கின்றது. சுவடிகளையும் பழம்பதிப்புகளையும் ஒப்பிட்டு ஆராய்ச்சிக்குறிப்புகளும், பாட வேறுபாடுகளும் கொண்ட இறையனார் களவியல் நூலைக் கற்று மகிழ விரும்புவோர் 300 விலையுள்ள நூலினை 150 உருவா விலையில் செம்மொழி நிறுவனத்தில் பெற்றக்கொள்ள இயலும். தமிழாராய்ச்சித் துறைக்கு உழைக்க முன்வருவோர் இத்தகு பதிப்புகளின் உழைப்பையும், தரத்தையும் முதற்கண் மனத்துள் நிறுத்தி, ஆராய்ச்சிப் பணிகளில் நுழைந்தால் தமிழ் வளம்பெறும்.

நிறுவன இயக்குநர் முனைவர் இரா. சந்திரசேகரனார்  செயல்திறனும் வினைவன்மையும் கொண்ட அறிஞர் ஆவார். இவர்தம் அயரா உழைப்பாலும், அறிவார்ந்த வினைப்பாடுகளாலும் செவ்விலக்கிய நூல்கள் அச்சேறுவதும், அடிக்கடி பயிலரங்குகள் வழியாகத் தமிழறிவை ஆய்வு மாணவர்கள் பெறுவதும் அறிஞர் பெருமக்கள் அடிக்கடி நிகழ்வுகளில் கலந்துகொள்ள நிறுவனத்திற்கு வந்துசெல்வதும் காணக் கண்கோடி வேண்டும். தகுதி நிறைந்த இயக்குநரால் தமிழாய்வு வளம்பெறட்டும். தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் உலகம் முழுவதும் சென்று தமிழர்க்குப் பெருமையைச் சேர்க்கட்டும் என்று நெஞ்சார வாழ்த்தி மகிழ்கின்றேன்.