பாவலர் முடியரசனார் (07.10.1920 - 03.12.1998)
திராவிட நாட்டின் வானம்பாடி என்று அறிஞர் அண்ணாவால் போற்றிப் புகழப்பட்ட பாவலர் முடியரசனாரின் நூற்றாண்டு இன்றிலிருந்து தொடங்குகிறது. பாவலர் அவர்களுடன் 1993 முதல் தொடர்பில் இருந்தேன். அவர்களின் குடும்பத்துள் ஒருவனாக வளர்ந்தேன். காரைக்குடியில் இன்று நூற்றாண்டு விழா தமிழார்வலர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. என் முனைவர் பட்ட ஆய்வுக்காலத்தில் பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதி, நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தின் முதல் பரிசான தங்கப்பதக்கமும், வெள்ளிச் சுழற்கோப்பையும் பெற்றேன்(1994). அக்கட்டுரை நூலாகவும் வெளிவந்தது. பாவலர் முடியரசனார் பற்றி முன்பே என் வலைப்பதிவில் எழுதியுள்ளேன் (08.10.2008). அக்கட்டுரையை மீள்பதிப்பாக இப்பொழுது பதிவுசெய்கின்றேன்.
தீத்திறக் காலை தெளிமருந்தே -மூத்த
முடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும்
முடியரசன் செய்யுள் முறை"
என மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரால் புகழப்பெற்றவர் கவியரசு முடியரசன் அவர்கள். தமிழ்ப்பற்றும் பகுத்தறிவுக்கொள்கையும் கொண்டு பாவேந்தர் வழியில் பாட்டுப் பறவையாய்க் கவிவானில் பாடிப் பறந்த குயில் முடியரசன் ஆவார்..படிக்கும் காலத்திலும் பணிபுரியும் காலத்திலும் பல்வேறு இன்னகள் இடையூறுகள் வந்தபொழுதெல்லாம் தன்மானம் மிக்க தமிழ் அரிமாவாகச் செயல்பட்டவர் முடியரசன் ஆவார்.
அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் தமிழ்க் கொள்கைகளை ஏற்று இருவரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர். வகுப்பறையைத் தமிழ் உணர்வூட்டும் பாசறையாக மாற்றியமைத்தவர். தமிழர்களின் வாழ்க்கை வளம்பெற தமிழகத்தில் மண்டிக்கிடந்த சமூக முன்னேற்றத்திற்குத் தடையான கருத்துகளை தம் அனல்கக்கும் பாடல்களால் எதிர்த்து எழுதியவர்.தாம் எழுதியதற்கு எதிராக எந்தச் சூழலிலும் செயல்படாத கொள்கை மறவராக விளங்கியவர்.சொல் செயல் இரண்டும் ஒன்றாக வாழ்ந்தவர். வீட்டிற்கு வருபவர்களிடம்கூட அழகு தமிழில் உரையாடும் தமிழ்நெஞ்சர்.
திராவிட இயக்க உணர்வுடன் செயல்பட்ட முடியரசன் கடைசிக் காலம் வரை தந்தை பெரியார் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை உயர்வாகப் போற்றியவர். தமிழாசிரியர் பணியாலும் கவியரங்கப் பணிகளாலும், எழுத்துப் பணிகளாலும் என்றும் தமிழக வரலாற்றில் இடம்பெறும் பெருமைக்கு உரியவர் முடியரசனார்.
முடியரசனார் மதுரை மாவட்டம் பெரியகுளத்தில் 07.10.1920 இல் பிறந்தவர். பெற்றோர் திண்டுக்கல் சுப்புராயலு, சீதாலெட்சுமி ஆகும். இவர்களுக்கு ஐந்தாவது மகவாகத் தோன்றியவர். இயற்பெயர் கா.சு.துரைராசு. தம் தாய்மாமன் துரைசாமி அவர்களின் இல்லத்தில் இளமையில் வளர்ந்தார். பின்னர் பெற்றோர் காரைக்குடி அருகில் உள்ள வேந்தன்பட்டிக்குக் குடி பெயர்ந்த பொழுது வேந்தன்பட்டி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். வேங்கடராம ஐயரிடம் பயின்றார். அவரிடம் கீழ்வாயிலக்கம்.நிகண்டு நூல்கள் அக்கால முறைப்படி அவரிடம் கற்றார்.
திண்ணைப் பள்ளிக்கூடம் முடிந்ததும் ஐந்து,ஆறாம் வகுப்புகளை மேலைச்சிவபுரியில் இருந்த சன்மார்க்க சபையில் பயின்றார். தமிழில் ஆர்வமுடன் படித்த காரணத்தால் ஆசிரியர்கள் இவரைத் தமிழ் பயிலும் படி வேண்டினர்.பிரவேச பண்டிதம் என்னும் புலவர் நுழைவு வகுப்பில் பயின்றார்.தேர்வு எழுதி புலவரானார். அங்குப் பயின்றபொழுது பண்டிதமணியார், இரா.இராகவையங்கார், விபுலாநந்த அடிகள்,தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை, கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை உள்ளிட்டவர்களின் பேச்சினைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது.
கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் சேர்ந்து வித்துவான் வகுப்பில் சேர்ந்து பயின்றார். முத்து சாமிப் புலவர் என்னும் புலவர் பெருமானில் அறிவுரைப்படி வளர்ந்து தமிழின் மிகச்சிறந்த புலமையைப் பெற்றார். கல்லூரியில் இவர் பேச்சாற்றல்கொண்டு விளங்கியதால் வீரப்புலவர் எனப் பட்டம் வழங்கி அந்நாளைய கல்லூரி முதல்வர் அழைத்தார். நாடகத்தில் நடிக்கும் ஆற்றல் உடையவர்.
திருப்புத்தூரில் அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றியபொழுது அவர்தம் பேச்சைக் கேட்ட முடியரசன் அதுவரை துரைராசு என்று அழைக்கப்பட்ட தம் பெயரை முடியரசன் என மாற்றிக் கொண்டார். அப்புனைபெயரே அவருக்கு நிலைத்த பெயராக நின்றது.
பின்னர் பாவேந்தர் பாரதிதாசன் பழம் புலவர்களைக் கடிந்து பேசிய பேச்சைக்கேட்டுத் தமிழ்மொழி, இன, நாட்டு உணர்வுடன் பாடல் இசைக்கும் முறைக்குச் சென்றார். மேலைச் சிவபுரியில் மருத்துவர் ஒருவரின் இல்லத்திற்கு வந்த குடியரசு, விடுதலை, திராவிட நாடு உள்ளிட்ட இதழ்களைப் படித்து தமிழ் உணர்வும், பகுத்தறிவு உணர்வும் பெற்றார்.
முடியரசன் தம் 21 ஆம் அகவையில் 'சாதி என்பது நமக்கு ஏனோ' என்ற கவிதையை எழுதி திராவிடநாடு இதழுக்கு அனுப்பினார். பெரியகுளம் துரைராசு என்னும் பெயரில் வெளியாயிற்று.பொழுதெல்லாம் இதழ்கள் படிப்பது, திரைப்படம் பார்ப்பது எனப் பொழுது கழிந்ததால் முடியரசன் வித்துவான் தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர் தஞ்சையில் தேர்வெழுதி வெற்றிபெற்றார்.
1947 இல் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்றார். வகுப்பறைக்குள் நுழைந்ததும் தம் இருக்கை அருகே நிற்பார். மாணவர்கள் அனைவரும் 'வெல்க தமிழ்' என ஓங்கி ஒலித்த பிறகே வகுப்பில் அமர்வார்கள். சென்னையில் பணிபுரிந்தபொழுது பொன்னி உள்ளிட்ட இதழ்களில் எழுதவும் திரு.வி.க, வாணிதாசன் உள்ளிட்டவர்களுடன் பழகவும் வாய்ப்பு அமைந்தது.
முடியரசன் தம் 29 ஆம் அகவையில் கலைச்செல்வி என்னும் அம்மையாரை மணந்து கொண்டார். சாதிமறுப்புத் திருமணமாக நடந்தது. மயிலை சிவமுத்து அவர்கள் தலைமையில் திருமணம் நடந்தது. பூவாளூர் பொன்னம்பலனார், காஞ்சி மணிமொழியார், டி.கே.சீனிவாசன், கவிஞர் வாணிதாசன், அழகுவேலன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 28ஆண்டுகள் அப்பள்ளியில் தமிழாசிரியர் பணிபுரிந்து தம் 58 ஆம் அகவையில் ஓய்வுபெற்றார். பள்ளியில் பணிபுரிந்த பொழுது அவரின் தமிழ்ப்பற்று அவருக்குப் பல்வேறு இன்னல்களைப் பெற்றுத் தந்தது.அனைத்திலும் வெற்றிபெற்றார்.
முடியரசனுக்குக் கலைத்துறையில் நல்ல ஈடுபாடு இருந்தது. நவாபு இராசமாணிக்கம் குழுவில் இணைந்து பாடல் எழுதச் சென்றார். அங்கு நிலவிய சூழல் அவருக்குப் பிடிக்கவில்லை. திரும்பிவிட்டார். கண்ணாடி மாளிகை என்னும் திரைப்படத்திற்கு உரையாடலும் பாடலும் எழுதியுள்ளார். திரைத்ததுறையில் நிலவிய சூழல்கள் தமக்கு ஒத்துவராததால் தமிழாசிரியர் பணியில் நிலைத்து நின்றார்.
பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் முயற்சியால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் ஓராண்டுக்காலம்(1985-86) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் வாழ்க்கையைக் காப்பியமாக்கினார். அந்நூல் இன்னும் வெளிவரவில்லை.
தமிழ்ப்பற்றும் கொள்கை வாழ்வும் வாழ்ந்த முடியரசனார் பூங்கொடி, வீரகாவியம், ஊன்றுகோல் என்னும் காவியங்களையும் முடியரசன் கவிதைகள், காவியப்பாவை உள்ளிட்ட மிகச்சிறந்த பாட்டுப் பனுவல்களையும் வழங்கியவர். தமிழிசைக்குப் பயன்படும் வகையில் தமிழிசைப் பாடல்களை எழுதியவர். இவர்தம் கவிதைப் பணியைப் பாராட்டி இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன. 1950 இல் இவர் எழுதிய அழகின் சிரிப்பு என்ற கவிதை முதற்பரிசுக்கு உரியதாகப் பாவேந்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவர் தம் நூல்களுக்குத் தமிழக அரசின் பரிசில்கள் கிடைத்துள்ளன.
அறிஞர் அண்ணா 'திராவிடநாட்டின் வானம்பாடி' என்ற பட்டத்தை 1957 இல் வழங்கினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1966 இல் கவியரசு என்ற பட்டத்தை பாரி விழாவில் வழங்கினார். கலைஞர் விருது(1988), பாவேந்தர்விருது(1987), கலைமாமணி விருது (1998) அரசர் முத்தையாவேள் நினைவுப்பரிசு (1993) முதலிய உயரிய பரிசில்களைப் பெற்றவர். இவர்தம் கவிதைகள் தமிழின முன்னற்றத்திற்கு உதவுவன என நினைத்த தமிழக அரசு இவர்தம் நூல்களை நாட்டுடைமையாக்கிக் கவிஞரைப் பெருமை செய்தது. முதுமை காரணமாகத் தம் 79 ஆம் அகவையில் காரைக்குடியில் முடியரசனாரின் தமிழுயிர் 03.12.1998 இல் பிரிந்தது. கவிஞரின் மறைந்த மறுநாளில் தினமணி நாளேடு "பாடிப் பறந்த பறவை" எனத் தலைப்பிட்டு ஆசிரிய உரை எழுதி மதிப்பளித்தது.