திருச்சிராப்பள்ளி மாவட்டம் வைரிசெட்டிப்பாளையத்தில் வாழ்ந்து, தமிழ்த்தொண்டும், திருக்குறள் தொண்டும் செய்து இயற்கை எய்திய
திருக்குறள் மாமணி ஆ.வே.
இராமசாமியார் அவர்களின் வாழ்வியலைக் கொப்பம்பட்டி சிவ. முத்துக்குமாரசாமி நூலாக
எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு
விழா 16.07.2017 காலை 10 மணியளவில்
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
புலவர் ஆ.வே.இராவின் திருவுருப்படத்திற்கு மலர்
வணக்கமும், நூல் வெளியீடும் முதலில் நடைபெற்றன. நூலினைத் தவத்திரு. பொன்னம்பல அடிகளார்
வெளியிட, நூலின் முதல்படியினை முத்தமிழ்ப் பண்ணை பா.அரங்கராசன், கொப்பம்பட்டி மு. தமிழ்மாறன்,
இராம. மு. கதிரேசன், இரா. இராம்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்
முதுமுனைவர் இரா. இளங்குமரனார், தவத்திரு குன்றக்குடி
பொன்னம்பல அடிகளார், முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் திருக்குறள் தொண்டர்
ஆ.வே.இராமசாமியின் பணிகளை நினைவுகூர்ந்தனர்.
முதுமுனைவர் இரா. இளங்குமரனார் தம் நினைவுரையில்
ஆ.வே.இராமசாமியின் திருக்குறள் பணிகளையும், திருக்குறள் குறித்து எழுதிய நூல்பணிகளையும்
நினைவுகூர்ந்தார். ஆ.வே.இராமசாமியார் தம் மகன்களுக்குத் திருவள்ளுவன், தொல்காப்பியன்
எனப் பெயரிட்டமையும், தம் மக்களைத் தம் வழியில் தமிழ்த்தொண்டுக்கு ஆயத்தம் செய்துள்ளமையும்
பாராட்டுக்கு உரியன என்றார்.
முனைவர் மு.இளங்கோவன் ஆ.வே.இராமசாமிக்கும் தமக்குமான
கால்நூற்றாண்டுத் தொடர்பை நினைவுகூர்ந்தார். அதுபோல் நூலாசிரியர் கொப்பம்பட்டி சிவ.
முத்துக்குமாரசாமியின் தமிழ்ப்பற்றை அவர் எழுதியுள்ள நூலின் துணைகொண்டு விளக்கினார்.
திருக்குறள் மாமணி திரு.ஆ.வே.இரா. என்ற நூல் 232 பக்கங்களில் அமைந்துள்ளது எனவும், 16 தலைப்புகளில் ஆ.வே.இராமசாமியின் வாழ்க்கை வரலாறும், பணிகளும் பேசப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார். மேலும் ஆ.வே.இராவின் 32 நூல்களை இந்த நூலின் பிற்பகுதி அறிமுகம் செய்துள்ளமையையும்
எடுத்துரைத்தார்.
இராம. திருவள்ளுவன் மு.இளங்கோவனைச் சிறப்பிக்கும் காட்சி. அருகில் தவத்திரு, பொன்னம்பல அடிகளார், முதுமுனைவர் இரா. இளங்குமரனார்
ஆலத்துடையான்பட்டி வேங்கடாசலம் மகனார் இராமசாமி 11.04.1928 இல் பிறந்தவர்
எனவும், இளமையில் படிக்க வசதி இல்லாமல் எட்டு ஆண்டுகள் இடைவெளிவிட்டு, திருவையாறு அரசர்
கல்லூரியில் புலவர் வகுப்பில் பயின்றவர் என்றும் குறிப்பிட்டு, அவர்தம் தமிழ் இலக்கியப்பணிகளையும்,
தமிழியக்கச் செயல்பாடுகளையும் அவைக்கு எடுத்துரைத்தார். ஆ.வே.இராமசாமியின் மகனார் திருவள்ளுவனைக்
கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் சந்தித்த பழைய நினைவுகளை அவைக்கு எடுத்துரைத்து, அறிஞர்களின்
வாழ்வு இதுபோல் ஆவணமாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தம் உரையை நிறைவுசெய்தார்.
திருக்குறள் மாமணி ஆ.வே.இரா. நூலினை வெளியிட்டும்,
விழாவுக்காக உருவாக்கப்பட்டிருந்த சிறப்பு மலரினை வெளியிட்டும் நிறைவுப் பேருரையாற்றிய
குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள், தமிழ்த்தொண்டர்கள் அருகிவரும்
இந்த வேளையில் ஆ.வே.இரா. போன்ற தமிழ்த்தொண்டர்களின் வரலாற்றை எழுத முன்வந்த முத்துக்குமாரசாமியின்
தமிழ்ப்பற்றை நினைவுகூர்ந்தார்; பாராட்டினார். ஆசிரியர் மாணவர் உறவின் பெருமையைப் பல்வேறு சான்றுகளுடன்
எடுத்துரைத்து, தம் தெள்ளிய தமிழ்ப் பேச்சால் அவையோர்க்கு அரியதோர் செவிச்சுவை விருந்துபடைத்தார்.
நூலாசிரியர் சிவ. முத்துக்குமாரசாமி சிறப்பானதோர்
ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை இரா. திருவள்ளுவன் வரவேற்றார். கி.
நந்தகுமார் நன்றியுரையாற்றினார். பேராசிரியர் கு. திருமாறன் நிகழ்ச்சியைத் தொகுத்து
வழங்கினார். செவி விருந்து உண்டோருக்கு, இனிய பகலுணவும் அளிக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளியைச்
சேர்ந்த பல்வேறு தமிழமைப்புகளைச் சார்ந்த பெரியோர்களும், திருக்குறள் பற்றாளர்களும்
திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.