நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 24 ஜூன், 2017

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்திற்கு ஒரு சிலைசெய்தோம்!



விபுலாநந்தரின் சிலையை உருவாக்கிய வில்லியனூர் திரு. முனுசாமி


விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் படத்தொகுப்பில் இருந்தபொழுது இசையமைப்பாளர் இராஜ்குமார் இராஜமாணிக்கம் அவர்களிடம் விபுலாநந்த அடிகளாருக்கு ஒரு சிலை செய்து படத்தில் இணைக்கலாம் என்று என் விருப்பத்தைச் சொன்னேன். உடனே சுடுமண் சிற்பத்தில் தலைசிறந்த கலைஞரான வில்லியனூர் முனுசாமி அவர்களிடம் எங்களின் விருப்பத்தைச் சொன்னோம். உடன் புறப்பட்டு வரலாம். மண் குழைத்து அணியமாக உள்ளது என்றார்.

வில்லியனூரில் உள்ள முனுசாமியின் தொழிற்சாலைக்கு நாங்கள் செல்வதற்கும், தண்டச்சக்கரம் சுழல்வதற்கும் சரியாக இருந்தது. திருவாளர் முனுசாமி அவர்கள் முன்பே எங்களின் ஆவணப்படத்தில் இணைந்து பணிபுரிந்தவர். அவரின் பேராற்றலை நாங்கள் உணர்ந்தவர்கள் என்பதால் கையில் கொண்டுபோயிருந்த இரண்டு விபுலாநந்தர் படங்களை அருகில் கண்ணில் தெரியும்படி மாட்டினோம். அக்கம் பக்கம் இருந்த சில சிலைகளைத் தூக்கிவந்து அருகில் வைத்தோம்.

முனுசாமி மண்ணை எடுத்துத் தமக்குத் தருவதற்கு அவர் தொழிற்கூடத்தில் பணிபுரியும் ஒருவரை அருகில் அமர்த்தினார். முதலில் ஒரு குச்சியைத் தண்டச்சக்கரத்தின் நடுவில் நிறுத்தினார். குச்சியின் ஓரப் பக்கத்தில் மண்ணை அணைக்கத்தொடங்கினார். சில முழம் சணல் கொண்டுவரச்சொல்லி அதனையும் பொருத்தமாகப் பயன்படுத்தினார். அதற்கு முன்பாகவே ஒளிப்பதிவுக்கருவி பதிவுப்பணியைத் தொடங்கியிருந்தது. மளமளவென மண்ணைக் கொண்டு விபுலாநந்தருக்கு வடிவம் தந்தார். முக்கால் மணி நேரத்தில் நாங்கள் எதிர்பார்த்த வடிவம் கிடைத்தது. சிறிது நேரம் காய்ந்த பிறகு பணியைத் தொடரவேண்டிய நிலையில் இருந்தோம். முனுசாமி ஐயாவிடம் விடைபெற்று, உணவை முடித்துக்கொண்டு திரும்பினோம்.

மீண்டும் சிலை செய்யும் பணி தொடர்ந்தது. சற்றொப்ப இரண்டு மணி நேரத்தில் முனுசாமி ஐயாவின் கையால் விபுலாநந்தர் வில்லியனூரில் எழுந்தருளினார். எங்களின் விருப்பத்துக்குத் தக்கவாறு ஒளிப்பதிவு செய்துகொண்டு, அந்த மண்ணின் கலைஞருக்கு நெஞ்சுருகி எங்களின் நன்றி கூறி விடைபெற்றோம்!
விபுலாநந்த அடிகளார் சிலையழகை உற்றுநோக்கியபொழுது...


புலம்பெயர்ந்த தேசங்களில் உழைத்த பணத்தைத் திரைக்கூத்தர்களின் கையிலும் பையிலும் திணிக்க, படாத பாடு படும் எம் தமிழின உடன்பிறந்தோர் இந்த மண்ணின் கலைஞரை அழைத்து, இவர் விரல் அசைவில் மரபு வழியான நம் முன்னோர் அறிவு இருப்பதை உணர அன்புடன் வேண்டுகின்றேன். பயிற்சிப்பட்டறைகள் வைத்து, நம் பிள்ளைகளுக்கு இவரின் மண்கலையைப் பயிற்றுவிக்க உரிமையுடன் கேட்கின்றேன். இவருக்கு உயரிய பரிசில்களை இல்லம்தேடிச் சென்று வழங்கி ஊக்கப்படுத்தும்படி உரிமையுடன் கோரி நிற்கின்றேன். விருது, பரிசுக்கு நசையுடன் காத்திருக்கும் மூத்தோர்கள் இந்த இளைய கலைஞனுக்கு வழிவிட்டு, ஒதுங்கி நின்று ஊக்கப்படுத்தும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
வில்லியனூர் முனுசாமி, மு.இளங்கோவன்

ஞாயிறு, 18 ஜூன், 2017

தவத்திரு விபுலாநந்த அடிகளாரால் பாடப்பெற்ற பேரையூர் பொய்யாத விநாயகர் கோவில்...






புதுக்கோட்டை மாவட்டம் நற்சாந்துப்பட்டியைச் சேர்ந்த திரு. பெ. இராம. இராமன் செட்டியார் அவர்கள் திருக்கொள்ளம்பூதூர் ஆளுடைய பிள்ளையார் கோவிலுக்குச் சற்றொப்ப நூறாண்டுகளுக்கு முன் இருபத்தைந்து இலக்கம் செலவு செய்து, புதுப்பித்துத் திருப்பணி செய்தவர். இவர்தம் முன்னோர்கள் காலம்தொட்டு, தம் வழிபடு தெய்வமாகப் பேரையூர் பொய்யாத விநாயகரை வழிபடுவது மரபு. புதுக்கோட்டைக்கு மேற்கில் ஆறுகல் தொலைவில் இக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்குக் கோனூர் சமீன்தார் திரு. இராம. சிதம்பரம் செட்டியார் அவர்களுடன் வழிபாட்டுக்குச் சென்ற தவத்திரு விபுலாநந்த அடிகளார் பொய்யாத விநாயகர் மீது ’தேவபாணி’ என்ற பெயரில் தோத்திரப் பாவினை இயற்றினார். இப்பாடல் யாழ்நூல் அரங்கேற்றத்திற்கு விடைபெறுவதாக இருந்தது. எங்களின் ஆவணப் படப்பிடிப்பிற்காக  இக்கோவிலுக்கு அண்மையில் சென்றபொழுது பார்வையிட்டோம். கோவிலும், திருக்குளமும், அமைதி தவழும் மாளிகையும் அருகிருப்பன கண்டு அளவிலா மகிழ்ச்சியுற்றோம். தமிழார்வலர்களின் பார்வைக்கு இதனை நினைவூட்டுகின்றோம்.

வெள்ளி, 2 ஜூன், 2017

பேர்கன் நகரில் செம்மொழித் திருநாள்!





நோர்வே நாட்டின் பேர்கன் நகரில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் பாலசிங்கம் ஜெயசிங்கம், மக்வின் யோகேந்திரன் இருவரின் ஒழுங்கமைப்பில் செம்மொழித் திருநாள் 03.06.2017 ( சனிக்கிழமை), மாலை 5 மணிக்குப் பேர்கன், வெஸ்காந்தன் கலாசார மண்டபத்தில்  (Veskanten Kultursalen) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினர்களும் பேர்கன் நகரத்துத் தமிழ் ஆர்வலர்களும்,  கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

தமிழ் மொழியைச் செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழின் சிறப்புரைக்கும் மாநாடுகள், கருத்தரங்குகள் தமிழகத்திலும், பிறநாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழர்கள் அதிகம் வாழும் நோர்வே நாட்டில் அமைந்துள்ள பேர்கன் நகரில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கும் செம்மொழித் திருநாள் 2017, சூன் மாதம் 3 ஆம் நாள் (சனிக்கிழமை) மாலை  5  மணிக்கு நடைபெறுகின்றது.

பேர்கன் நகரைச் சேர்ந்த திருமதி தோவ சிறிபாலசுந்தரம் முதன்மை விருந்தினராக வருகைதந்து, மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கிவைக்க உள்ளார்.

இந்நிகழ்வில் பேர்கன் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ந. பூலோகநாதன் வரவேற்பு உரையாற்ற உள்ளார். இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் முனைவர் . சண்முகதாஸ்செம்மொழி என்றால் என்ன?” என்ற தலைப்பிலும், ஜப்பான் நாட்டின்  டோக்கியோவில் அமைந்துள்ள கக்சுயின்  பல்கலைக்கழகத்தின்  முன்னாள் ஆய்வுப் பேராசிரியர், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் “செம்மொழித் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பிலும், புதுச்சேரி அரசின் பட்டமேற்படிப்பு மையத்தின் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் “செம்மொழியின் எதிர்காலம்” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளனர்.


ஒஸ்லோ நகரைச் சார்ந்த எழுத்தாளர் உமாபாலன் தமிழின் சிறப்பை எடுத்துரைத்துச் சிறப்புரையாற்ற உள்ளார். ஆர்த்தி உமாபாலன் நடனம், பிருந்தாவன சாரங்க இசை நிகழ்ச்சி,  ஒன்பது பாகை வடக்கு இசை எனக் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பேர்கன் தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறப்புச் செய்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.  பேராசிரியர் வே. தயாளன் செம்மொழி பற்றிய சிறப்புரைகளின் தொகுப்பையும், செம்மொழி தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகளையும் எடுத்துரைக்க உள்ளார். பா. ஜெயசிங்கம் நன்றியுரையாற்ற உள்ளார்.