நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 27 மே, 2014

குடந்தை ப. சுந்தரேசனார் வாழ்க்கை ஆவணப்படமாகின்றது...



பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் ப. சு. பற்றிய நினைவுரை( படப்பிடிப்பு)

  தமிழுக்கு உண்மையாக உழைத்த பெருமக்களை இத்தமிழுலகம் உரிய காலங்களில் போற்றுவதில்லை.  அவர்களின் பேரறிவை மதிப்பதும் இல்லை. அவர்களை வறுமையில் வாடாமல் காத்ததும் இல்லை. அவ்வாறு செய்திருந்தால் அத்தகு பெரியோர்களிடத்திருந்து இன்னும் பல்வேறு ஆக்கங்கள் இம்மொழிக்கும் நாட்டுக்கும் கிடைத்திருக்கும். அவ்வகையில் திரு. வி. க, மயிலை சீனி. வேங்கடசாமியார், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட பெருமக்கள் பல்வேறு இன்னல்களை ஏற்று வாழ்ந்துள்ளனர். எனினும் தங்களால் இயன்ற வகையில் இவர்கள் தமிழுக்குப் பாடுபட்டுள்ளனர்.

  அந்த வகையில் தமிழிசை மீட்சிக்கு உழைத்த குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் வறுமை வாழ்க்கையில் தம் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துள்ளனர். அன்பர்கள் சிலர் அவரின் கடைசிக்காலத்தில் உதவியுள்ளனர் எனினும் அவரின் துறைசார் அறிவுக்கு ஈடான பொருள்வளத்தையோ, புகழ்நிலையையோ அவர்கள் பெறவில்லை என்பதுதான் உண்மை. தமிழிசைத்துறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, பெருமைக்குரிய குடந்தை ப. சுந்தரேசனாரை வாழும்காலத்தில் போற்றாத மக்கள், மறைந்த பிறகா போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவார்கள்?

  இக்குறையை ஓரளவு போக்கும் வகையில் தமிழ்ப்பற்றாளர்கள் அன்னாரின் நூற்றாண்டு விழாவைத் தமிழகத்திலும் அயலகத்திலும் கொண்டாட முன்வந்துள்ளமை பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும். நூற்றாண்டு விழாவைப் புதுச்சேரியில் கொண்டாடிய இந்நிலையில் குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழ் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் வகையில் ஓர் ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் உள்ளோம்.

  எத்தகு பொருள் உதவியோ, ஆள் வலிமையோ இல்லாமல் மலையுடைக்கும் முயற்சிக்கு நிகரான படப்பிடிப்புப் பணியில் ஈடுபட்டு உழைத்த எனக்குப் பேராசிரியர் மு. இளமுருகன், புலவர் சூலூர் கௌதமன் உள்ளிட்டோர் ஊக்கமொழிகளைப் பகர்ந்ததோடு, என் பயணத்தில் உடன் வந்தும் மகிழ்வித்தனர். ஆம். புதுச்சேரியில் படப்பிடிப்பு என்று சொன்னவுடன் தம் பொருட்செலவில் வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு முழு ஒதுழ்ழைப்பு நல்கினர். பேராசிரியர் இ.அங்கயற்கண்ணி அம்மா அவர்களும் எங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.

  பூம்புகார் மாதவி மன்றத்தின் தலைவர் திரு. நா. தியாகராசன் ஐயா அவர்கள் தம் தள்ளாத அகவையிலும் தனித்து, பூம்புகாரிலிருந்து புதுவைக்கு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதுபோல் பேராசிரியர் மா. வயித்தியலிங்கன்(சென்னை), பேராசிரியர் அரிமளம் பத்மநாபன் ஆகியோர் குடந்தை ப. சுந்தரேசனார் குறித்த நினைவுகளைப் பெருந்தன்மையுடன் பதிவு செய்துள்ளனர்.


 திருவாரூர் புலவர் இரெ. சண்முகவடிவேல், தவத்திரு ஊரன் அடிகளார், மலேயா பல்கலைக்கழகப் பேராசிரியர் சு. குமரன், ஆ. பிழைபொறுத்தான் ஆகியோர் முதற்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியுள்ளனர். அடுத்த படப்பிடிப்பு அரியலூர், திருமழபாடி, புள்ளம்பாடி, பூவாளூர், திருத்தவத்துறை (இலால்குடி), திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் நடைபெற உள்ளது.
புலவர் சூலூர் கௌதமன் ப.சு. பற்றிய நினைவுரை( படப்பிடிப்பு)


தவத்திரு ஊரன் அடிகளார் நினைவுரை( படப்பிடிப்பு)



திரு. நா. தியாகராசன்(பூம்புகார் மாதவி மன்றம்) ( படப்பிடிப்பு)


முனைவர் இ. அங்கயற்கண்ணி  நினைவுரை( படப்பிடிப்பு)

முனைவர் மு.இளமுருகன் நினைவுரை( படப்பிடிப்பு)


படப்பிடிப்புக்குப் பிறகு ஓரிடத்தில் உரையாடியபொழுது

திங்கள், 26 மே, 2014

தமிழ் இலெமூரியாவின் தமிழ்ப்பணி....



  இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியில் மகாராட்டிரா மாநிலத்திலிருந்து தமிழ்மொழி, தமிழ் இனம் சார்ந்து அறிவார்ந்த செய்திகளைத் தாங்கி வரும் சிறப்பான மாத இதழ் தமிழ் இலெமூரியாவாகும். கடந்த ஏழு ஆண்டுகளாகத் தமிழினம், தமிழ் மொழி என்கிற இரு கரைகளுக்கிடையே நடையிடும் இவ்விதழில் தமிழ் மக்களிடையே மாந்த நேய உணர்வு, மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சி, வரலாற்றுத் துய்ப்புகள் போன்றவற்றை நல்ல தமிழில் எடுத்தியம்பும் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழ் இதழ்களிலிருந்து சற்று வேறுபட்ட கண்ணோட்டத்தில் தமிழ், தமிழர் குமுகாய வளர்ச்சி இலக்கை அடைவதற்குரிய அரிய ஆய்வுகள், வரலாற்று நிகழ்வுகள், இயற்கையை போற்றுதலுக்குரிய நம் கடமைகள், தமிழறிஞர்களின் வாழ்கைக வரலாறு போன்றவை இதன் உள்ளீடுகளாக அமைந்துள்ளன. இயன்றவரை தூய தமிழில் செய்திகளைத் தருவதில் தமிழ் இலெமூரியா முன்னிற்கின்றது.


தமிழ் இலெமூரியா ஆசிரியர் திரு. சு. குமணராசன் அவர்கள்

  கடந்த நாற்பது ஆண்டு காலமாகத் தமிழ், தமிழர் மேன்மைக்காக மும்பை மாநகரில் தொய்வின்றிச் சமூகப் பணி ஆற்றி வரும் திரு சு. குமணராசன் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்று வழி நடத்துகின்றார். கண்ணைக் கவரும் வண்ண அமைப்பில் இந்த இதழ் உலாவருவது இதன் தனிச்சிறப்பாகும்.

  இந்திய நாட்டில் குறிப்பாகத் தமிழ்நாடு, மகாராட்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும், தமிழர்கள் பெருமளவில் வாழும் மத்திய தரைக் கடல் நாடுகளிலும், கிழக்காசிய நாடுகளிலும் எண்ணற்ற வாசகர்களை தன்வயப்படுத்தி சற்றொப்ப மூன்று இலக்கம் தமிழ் ஆர்வலர்களை வாசகர்களாகக் கொண்டுள்ள இதழாகத் தமிழ் இலெமூரியா விளங்குகின்றது. மாதந்தோறும் தவறாமல் வெளிவந்துகொண்டிருக்கும் இந்த இதழைத் தமிழர்கள் வாங்கிப் படிக்க வேண்டும். இதில் படைப்புகளை வழங்கிப் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

  பல்கலைக்கழக நூலகங்கள், கல்விக் கூட நூலகங்கள், அரசு பொது நூலகங்கள் என அனைத்து இடங்களில் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகின்ற ஒரு சீரிதழ் இது என்பது இதன் பெருமையின் அடையாளம் ஆகும்.

  இணக்கமான இந்தச் சீரிய கூட்டுணர்வு முயற்சியில் தாங்களும் பங்கேற்று மனித நேய மாண்புகள் பெருகிடவும், தமிழினம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கும் துணை நிற்கலாம். தமிழார்வலர்கள் இந்த இதழை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யலாம். தமிழ்ச்செல்வர்கள் வெற்று ஆரவாரப் பணிகளில் தம் செல்வத்தை இழப்பதைக் காட்டிலும் இந்த இதழ் வளர்ச்சிக்குத் தம் அரும்பொருள் வழங்கி உதவலாம்.

  தமிழ் இலெமூரியாவை வளர்த்தெடுப்பது தமிழ்ப்பற்றாளர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இணையத்தில் படிக்க இங்குச் செல்க

தமிழ் இலெமூரியா கட்டணம்:

ஆண்டு உறுப்பாண்மை: 180 உருவா
மூன்று ஆண்டு : 500 உருவா
வாழ்நாள் கட்டணம்: 5000 உருவா
புரவலர் கட்டணம்: 10, 000 உருவா

தொடர்புக்கு:

Tamil Lemuriya Publications
102 B Wing, Dannes Building,
Veer Savarkar Nagar, Thane (W),
Maharashtra – 400 606, India
Phone : 022 - 25806298

மின்னஞ்சல்: tamil.lemuriya@gmail.com

இணையப்பக்கம்: http://www.tamillemuriya.com/

ஞாயிறு, 25 மே, 2014

திருத்தவத்துறை(இலால்குடி)யில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா


திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருத்தவத்துறை(இலால்குடி)யில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா 28. 05. 2014 (புதன் கிழமை) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. திருத்தவத்துறை(இலால்குடி) அருள்மிகு பெருந்திருப்பிராட்டியார் உடனுறை அருள்மிகு எழுமுனிவர்க்கிறைவர் திருக்கோயில் வளாகத்தில் பண்ணிசை அரங்கு, படத்திறப்பு, உரையரங்கம், பாராட்டரங்கம், கலைமாமணி தாயுமானவர் அவர்களின் நிகழ்ச்சிகள் எனச் சான்றோர் பலரும் பங்கேற்கும் அரிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

விழாத் தலைமை: புலவர் மாமணி வீ. தமிழ்ச்சேரனார்

முன்னிலை: செயல் அலுவலர் அவர்கள், திருக்கோயில் இலால்குடி

பண்ணிசை அரங்கம்: 
தேவார இசைமணி சுந்தர சாமவேதீசுவரன்
திருமுறை நன்மணி நா சுப்பிரமணியன் குழுவினர்.

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் படத்திறப்பு
முதுபெரும் புலவர் ப. அரங்கசாமி அவர்கள்

நூற்றாண்டு விழாத் தொடக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன்

தலைமையுரை: புலவர் மாமணி வீ. தமிழ்ச்சேரனார்

யாம் கண்ட பண்ணாராய்ச்சி வித்தகர் - உரையரங்கம்

கயிலை எசு. பி. இராமசாமி
புலவர் மா. திருநாவுக்கரசு
இறைநெறி இமயவன்
திரு. க. தமிழழகன் நாடுகாண் குழு
திரு. ச. இராமையா, காரைப்பாக்கம்
திரு. து. திருஞானம், பாளையப்பாடி
திரு. பூவை பி. தயாபரன், பூவாளூர்
திரு. வ. பஞ்சநாதன், திருமானூர்
திரு. அ. சீனிவாசன், திருத்தவத்துறை
திரு. நா. சு. மணியன், திருமங்கலம்
திரு. சி. சுந்தரராசலு, கீழைப்பழுவூர்
திரு. சு. பெரியசாமி, புள்ளம்பாடி

பாராட்டுச் சிறப்பரங்கம்
திரு. இராம. துரைக்கண்ணு- தனமணி இணையர் (80 அகவை நிறைவு)

விழாப் பேருரை முனைவர் சண்முக செல்வகணபதி

தமிழின்பம் பருக! அனைவரும் வருக!



சனி, 24 மே, 2014

பொதிகை தொலைக்காட்சிக்கு நன்றி...



பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் தமிழிசை வாழ்க்கையை இன்று(24.05.2014) முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை ஒளிபரப்பி உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்த பொதிகை தொலைக்காட்சியின் புதுச்சேரி நிலையத்தாருக்கு நன்றி. இதில் சிறப்பாகப் பங்காற்றிய பரதநாட்டியக் கலைஞர், ஒலிவட்டுகள் உதவியோர், ஒளிஓவியர், படத்தொகுப்பாளர், உதவியாளர்கள், தயாரிப்பாளர், மற்றும் நிலையத்தின் அதிகாரிகள், படப்பிடிப்புக்குத் துணைநின்ற நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

மின்னஞ்சல், இணையம், தொலைபேசி, குறுஞ்செய்திகள் வழியாகச் செய்திகளைப் பகிர்ந்தோருக்கும் பாராட்டுமொழிகள் உரைத்தோருக்கும் நன்றி.
தொடர்ந்து குடந்தை ப. சுந்தரேசனாரின் எஞ்சிய குரலிசையையும் இத்தமிழுலகம் கேட்டு மகிழ ஆவணப்படுத்துவோம்.


நினைவுக்காக ஒளிபரப்பில் எடுக்கப்பட்ட சில படக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன:











வியாழன், 22 மே, 2014

பொதிகை தொலைக்காட்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் நினைவு ஒளிபரப்பு


கயலெழுதி, வில்லெழுதி பாடலுக்குரிய காட்சி

சிலப்பதிகாரம் கானல்வரியைக் குடந்தை ப. சுந்தரேசனார் பாடியுள்ளார். அந்தப் பாடலுக்கு நாட்டியமாடும் செல்வி கிருத்திகா இரவிச்சந்திரன்(இடம்: பூம்புகார் கடற்கரை)

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழிசையைப் பருகிய பின்னர் அவர் வாழ்க்கையை இத்தமிழுலகம் முழுமையாக அறியாமல் உள்ளதை நினைத்து யான் பலநாள்... பலவாண்டுகள் கவலைகொண்டிருந்தேன்.

தமிழகத்தில் தமிழிசையை மீட்பதற்கு உழைத்த ஒரு போராளியை இம்மக்கள் கண்டுகொள்ளாமல்விட்டதை நினைத்து இனி அமைதியாக இருத்தல்கூடாது என்று கடந்த கால் நூற்றாண்டுகளாகத் தகவல் தொகுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தேன். இப்பொழுதும் இது தொடர்கின்றது.

குடந்தை கதிர். தமிழ்வாணன், பேராசிரியர் தமிழண்ணல் ஐயா, பொன்னாவாரம்பட்டிப் பொறியாளர் மு.அறவாழி, த. அன்புவாணன் வெற்றிச்செல்வி, கு. வெ.கி. செந்தில், சூலூர் கௌதமன், முனைவர் மு.இளமுருகன், ப. திருநாவுக்கரசு, புலவர் நா. தியாகராசன், புலவர் சுவை. மருதவாணன், புலவர் திருநாவுக்கரசு, நிழல் திருநாவுக்கரசு, அ. தேவநேயன் உள்ளிட்டோரின் தொடர் ஒத்துழைப்பால் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் குரலில் பல பாடல்களை ஒருவாறு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து திரட்டினேன். அயல்நாடுகளிலிருந்தும் திரட்டினேன்.

குடந்தை ப. சுந்தரேசனாரைத் தம் வழிபடு கடவுளாகப் போற்றியவர்களும், தம் ஆசிரியராக நினைத்து ஆதரித்தவர்களும், உறவினர்களாகப் பேணிக்கொண்டவர்களும், தமிழ்ப் பெரியவராக அவரை நினைத்துத் தம்மை மெய்யடியாராக நினைத்துப் பணிவிடைசெய்தவர்களும் தமிழகத்தில் மிகுந்த எண்ணிக்கையில் உள்ளனர் என்பதைக் களப்பணிகளில் காணநேர்ந்தது. குடந்தை ப. சுந்தரேசனாருக்குக் களம் அமைத்துத் தந்தவர்களும், கைகோர்த்துச் செலவு செய்தவர்களும் ஏராளம்.

இத்தகு பெருமைக்குரிய பெரியவரின் பணிகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சேர்க்கும் வகையில் அமெரிக்காவில் நூற்றாண்டு விழா நடத்த பெட்னா அமைப்பைச் சேர்ந்த அன்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். முழு மனத்துடன் விழா கொண்டாட முன்வந்த அவர்களைத் தமிழுலகம் என்றும் நினைக்கும்.

அதுபோல் புதுச்சேரியில் நூற்றாண்டு விழா நடத்தியும் நினைவுகூர்ந்தோம். அடுத்தடுத்து பல ஊர்களில் நூற்றாண்டு விழா நடப்பதற்குத் திட்டமிட்டு வருகின்றோம். அந்தவகையில் திருவாரூரில் நூற்றாண்டு விழா நடந்துள்ளது. வரும் 28.05. 2014 இல் இலால்குடியிலும், 01.06.2014 இல் சென்னையிலும் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஊடகங்களின் வழியாக ப. சு. ஐயாவின் பாடல்களை வெளியுலகிற்குத் தெரியப்படுத்த முயன்றோம்.

பொதிகை தொலைக்காட்சியில் ஐயாவின் பாடல்கள் சிலவற்றை ஒளிபரப்பும் முயற்சிக்குப் புதுவைத் தொலைக்காட்சி நிலையத்தார் மனமுவந்து ஒத்துழைப்பு நல்கினர். இந்திய மக்களின் கலைகளுக்கும், பண்பாட்டுக்கும் அளப்பரிய தொண்டாற்றிவரும் பொதிகை தொலைக்காட்சியில் பண்ணாராய்ச்சியாளர் குடந்தை ப. சுந்தரேசனாரின் வாழ்க்கைக் குறிப்புகளும் பாடல்களும் மிகச் சிறப்பாக ஒளிபரப்பாக உள்ளன.

வரும் காரி(சனி)க்கிழமை 24. 05. 2014 இந்திய நேரம் முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை இந்தச் சிறப்பு ஒளிபரப்பு நிகழ உள்ளது. பொதிகை தொலைக்காட்சியில் இந்த ஒளிபரப்பை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் பார்க்கமுடியும். இணையத்தின் வழியாகவும் உடனுக்குடன் பார்க்கலாம்.

இணையத்தில் பார்க்க


குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்தும், சிலப்பதிகாரத்திலிருந்தும், திருவாசகத்திலிருந்தும், திருத்தவத்துறை பெருந்திருப்பிராட்டி பிள்ளைத்தமிழிலிருந்தும் சில பாடல்களைப் பண்ணாராய்ச்சி வித்தகரின் குரலில் கேட்கலாம்.

அடுத்த வாய்ப்புகளில் சங்க இலக்கியம், கம்பராமாயணம், ஆழ்வார் பாடல்களிலிருந்து பாடிய பாடல்களைக் கேட்கும் வாய்ப்பினை உருவாக்குவோம். தமிழ்ச்செல்வர்கள் யாரேனும் முன்வந்து பொருட்கொடை வழங்கினால் ப. சுந்தரேசனாரின் குரலில் சிலப்பதிகாரத்தின் முதன்மையான பாடல்கள், பரிபாடல் பகுதிகள், திருமுருகாற்றுப்படை, திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், சித்தர் பாடல்களின் பகுதிகளைத் தமிழுலகிற்குத் தொகுத்து வழங்கமுடியும். எமக்கு அமையும் ஒத்துழைப்பு, தடைகளைப் பொறுத்து எங்கள் பணி அமையும்.

தமிழிசை மீட்க துணைநின்ற அனைத்து நல்லுள்ளங்களையும் நன்றியுடன் போற்றுகின்றோம்.


 அரவஞ்சி வாழ்வதுவே என்னும் வரிக்கு...


திமில் வாழ்நர் சீரூர் காட்சி



படப்பிடிப்பு குழு

ஞாயிறு, 18 மே, 2014

இருபதாம் நூற்றாண்டில் தமிழிசையை மக்களிடம் பரப்பியவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் - புதுச்சேரி நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் பேச்சு



தவத்திரு ஊரன் அடிகள் நூலை வெளியிட பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா பெற்றுக்கொள்ளுதல். அருகில் பாரிசு பாலகிருட்டினன்

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க - இந்திய ஒன்றியமும், புதுச்சேரி இலக்கிய வட்டமும் இணைந்து இன்று 17. 05. 2014 சனிக்கிழமை மாலை ஆறு மணிமுதல் ஒன்பது மணிவரை புதுச்சேரி செயராம் ஓட்டலில் நடத்தின.

குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவுக்கு வடலூர் ஊரன் அடிகளார் தலைமை தாங்கினார். முனைவர் மு.இளங்கோவன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்று வரவேற்புரையாற்றினார். முனைவர் அரிமளம் பத்மநாபன் விழா குறித்த நோக்கவுரையாற்றினார். மலேசிய இந்தியர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவையின் தேசியத் தலைவர் முனைவர் விக்டர் சுப்பையா, இரா. மதிவாணன் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இந்தியக் கடலோரக் காவல்படையின் புதுச்சேரி பிரிவு கமாண்டன்டு நா. சோமசுந்தரம் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் மலேசிய எழுத்தாளர் புலவர் முருகையன் எழுதிய உலகத்தின் ஒளிவிளக்கு பெற்றோரும் பிள்ளைகளும் என்ற நூலினை தவத்திரு ஊரன் அடிகள் வெளியிட, முதற்படியினைப் பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா பெற்றுக்கொண்டார். சிறப்புப் படிகளை பாரிசிலிருந்து வருகை தந்த திரு. பாலகிருட்டிணன், புதுவை திரு. அமரநாதன் பெற்றுக்கொண்டனர்.

குடந்தை ப. சுந்தரேசனார் குறித்த நினைவுரைகளைச் சூலூர் பாவேந்தர் பேரவையைச் சேர்ந்த செந்தலை கௌதமன், தமிழியக்கத் தலைவர் முனைவர் மு.இளமுருகன், தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இ. அங்கயற்கண்ணி, மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல்துறைத் தலைவர் முனைவர் சு. குமரன், புதுவைத் திருவள்ளுவர் மன்றத்தின் நிறுவுநர் சுந்தர. இலட்சுமிநாராயணன், ஆ பிழைபொறுத்தான் ஆகியோர் வழங்கினர்.


குடந்தை ப. சுந்தரேசனாரின் மாணவர் பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் சுந்தரேசனாரின் சிறப்புகளை எடுத்துரைத்து, சுந்தரேசனார் பாடிய பாடல்களை அரங்கிலிருந்தவர்களுக்குப் பாடிக்காட்டிச் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு மு. பாலசுப்பிரமணியன் நன்றியுரை வழங்கினார்.

நூற்றாண்டு விழா - காட்சிகள்

மு.இளங்கோவன் வரவேற்புரை

தவத்திரு ஊரன்அடிகள் தலைமையுரை

முனைவர் அரிமளம் பத்மநாபன் சிறப்பிக்கப்படுதல்

மலேசியத் தமிழர்களைச் சிறப்பித்தல்

மலேசியத் தமிழர்களைச் சிறப்பித்தல்

மலேசியப் பேராசிரியர் குமரன், டாக்டர் விக்டர் சுப்பையா சிறப்பிக்கப்படுதல்

புலவர் சூலூர் கௌதமன் நினைவுரையாற்றுதல்

சுந்தர இலட்சுமிநாராயணன் நினைவுரை


முனைவர் மு.இளமுருகன் எழுச்சியுரை

டாக்டர் விக்டர் சுப்பையா(மலேசியா) வாழ்த்துரை

பொறியாளர் பாலா நன்றியுரை

வெள்ளி, 16 மே, 2014

தமிழிசை மீட்ட தலைமகனுக்கு நூற்றாண்டு விழா! உலகத் தமிழர்களே உணர்வால் ஒன்று கூடுவோம்!




பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு விழா 17. 05. 2014 காரி(சனி மாலை) 6 மணிக்குப் புதுச்சேரியில் நடைபெறுகின்றது. ப.சு. அவர்களுடன் பழகியவர்கள், அவரின் மாணவர்கள், அவரின் இசையில் ஈடுபாடு உடையவர்கள், புதுவைத் தமிழ் அன்பர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு பண்ணாராய்ச்சி வித்தகரின் நினைவைப் போற்ற உள்ளனர். ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்!

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழ் இசைப்பணிகள் குறித்த ஆய்வை ஊக்கப்படுத்திய இந்து- தமிழ் நாளிதழுக்கு நன்றி.



நாள்: 16.05. 2014 புதுவை பதிப்பு

செவ்வாய், 13 மே, 2014

திருவையாறு அருகே நல்லேர் பூட்டும் விழா


கோடைமழை பெய்ததைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே பருத்திக்குடி கிராமத்தில் நல்லேர் பூட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் நல்லேர் பூட்டி வேளாண்மைப் பணிகள் தொடங்குவது வழக்கம். இந்த வழக்கம் பல சிற்றூர்களில் மறைந்து விட்டாலும், சில சிற்றூர்களில் இன்னும் தொடர்கின்றன.

கடந்த வாரம் கோடைமழை பெய்ததைத் தொடர்ந்து, சித்திரை மாத வளர்பிறையையொட்டியும், திருவையாறு அருகேயுள்ள பருத்திக்குடி கிராமத்தில் நல்லேர் பூட்டும் விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இதற்காக மாடுகளுக்குச் சந்தனப் பொட்டு வைத்தும், விளைநிலத்தில் பூசைகள்  நடத்தப்பட்டன. பின்னர், கலப்பையில் மாட்டை பூட்டி உழவு செய்யப்பட்டது.

வேளாண்மைக்குப் பயன்படும் நெல், பயறு, எள் போன்ற தானியங்களைத் தெளித்தனர். இதில், விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி இராசேந்திரன் கூறுகையில், ஆண்டுதோறும் நல்லேர் பூட்டும் விழா நடைபெற்று வருகிறது. இதன்மூலம் விவசாயப் பணிகளைத் தொடங்கி நிலத்தை உழவு செய்யப்படும். தென் மேற்கு பருவமழை, மேட்டூர் அணை நீர் திறப்பைப் பொருத்து குறுவை சாகுபடியைத் தொடங்குவோம். இல்லாவிட்டால் ஆழ்குழாய் மூலம் சாகுபடி மேற்கொள்வோம் என்றார்.

நன்றி: படமும் செய்தியும் தினமணி நாளிதழ் 13.04.2014

திங்கள், 12 மே, 2014

தோழர் பெரியார் சாக்ரடீசு மறைவு



பெரியார் சாக்ரடீசு

'உண்மை' இதழின் பொறுப்பாசிரியரும், திராவிடர் கழகத் தலைமை நிலைய பேச்சாளரும், அருமைத் தோழருமான பெரியார் சாக்ரடீசு (அகவை 44) அவர்கள் சென்னையில் நேற்று இரவு நடந்த சாலை நேர்ச்சியில் சிக்கி "ராசீவ்காந்தி அரசு மருத்துவமனை"யில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தச் செய்தி அறிந்து அருமை நண்பர் பிரின்சு அவர்களிடம் நலம் வினவினேன். மீண்டும் நலம்பெற்று இயக்கப்பணிகளில் ஈடுபடுவார் என்று நம்பியிருந்த வேளையில்  மருத்துவம் னளிக்காமல் இன்று(12.05.2014) இயற்கை எய்திவிட்டார்கள் என்ற செய்தியறிந்து வருந்தினேன். அவரை இழந்து வாடும் அருமை தோழரின் குடும்பத்தினருக்கும் இயக்கத் தோழர்களுக்கும்ன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 11 மே, 2014

மலேசியப் புலவர் மு. முருகையன் 18. 05. 1942 - 27. 05. 2013

 புலவர் மு. முருகையன் அவர்கள் (மலேசியா)

புலவர் மு. முருகையன் அவர்கள் மலேசியாவில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் திரு. சி. முத்துசாமி, திருவாட்டி இராசம்மாள் அம்மா. முருகையன் அவர்களின் துணைவியார் பெயர் செயபத்மினி ஆவார். இவர்களுக்குக் கவிதா, வினோத் கண்ணா என இரு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.

புலவர் முருகையன் அவர்கள் பேராக் மாநிலத்தில் தெமொ பானிர் தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றவர். கம்பார் தமிழ்ப் பள்ளியிலும் படித்தவர்.  கம்பார் இடைநிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வி பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்நிலைக் கல்வி பெற்றவர். அந்நாளில் மலேசியாவிலிருந்து வந்து தமிழ் கற்றவர்கள் என்று நினைவுகூரும்பொழுது புலவர் மு. முருகையன் அவர்களே அனைவராலும் நினைவுகூரப்படும் வகையில் தமிழகத்தில் அறிமுகமாகியிருந்தவர்.

திண்டுக்கல் பைந்தமிழ்க் கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி, சென்னை மாருதி திரைப்படக் கல்லூரியில் பயின்றுள்ளார். தென்கிழக்காசியத் திருக்கோயில் ஆய்வுக்காகப் புலவர் பட்டயம் பெற்றவர். முதுகலைத் தமிழ், இளங்கலை மொழியியல் ( B.O.L.) பட்டங்களைப் பெற்றதுடன் கல்வெட்டுகள், ஊடகக் கல்விக்காகச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். திரைப்படத்துறையில் ஈடுபாடு காட்டி ( D. F. Tec ) பட்டம் பெற்றவர்.

பள்ளி ஆசிரியராகப் பாரிட் புந்தார், பேராக், சுங்கைப் பட்டானி, கெடா ஆகிய ஊர்களில் பணிபுரிந்துள்ளார்.

தமிழ்நேசன் நாளிதழில் ஞாயிறுமலர் ஆசிரியராகப் பணியாற்றியவர் (1976 - 1990). மலேசிய நண்பனில் ஞாயிறுமலர் ஆசிரியராகவும் பணியாற்றியவர் (2005 - 2006). விடியல் வார இதழின் ஆசிரியராகவும் (2006-2010) பணிபுரிந்துள்ளார். ஆலமரம் மாத இதழ் ஆசிரியராகவும்(2010-11) பணிபுரிந்துள்ளார். 2011 முதல் 2013 வரை ஒளிவிளக்கு என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். சற்றொப்ப ஐம்பதாண்டுகள் மலேசியாவில் இதழியல்துறையில் தொடர்புடையவராகவும் எழுத்துத்துறைத் தொடர்புடையவராகவும் புலவர் மு. முருகையன் விளங்கியுள்ளார்.

ஒலிப்பேழை, குறுவட்டுகள் வெளியீட்டு முயற்சி

தொழில்நுட்பக் கருவிகளின் வளர்ச்சியை உள்வாங்கிக்கொண்டு பல்வேறு ஒலிவட்டுகளையும், குறுவட்டுகளையும் வெளியிட்டுள்ளார். இதில் இவர் பாட்டியற்றியும் இசை அமைத்தும் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பத்துமலை முருகன், கோலாலம்பூர் மாரியம்மன், ஒன்பது தெய்வங்கள், மலாக்கா திரௌபதி அம்மன், சீரடி சாய், ஒரு மலர் கனலாகிறது, மலேசிய மலர்கள், சாதனைத் தலைவர் சாமிவேலர், களம் கண்ட கலைஞர், அவசர அழைப்பு, சித்தார்த்த நாடகம்(தமிழ், தெலுங்கு), நினைவலையின் ஓசையில், கூட்டுறவுப் பாடல்கள் என்பன குறிப்பிடத்தக்கன.

புலவர் முருகையன் அவர்களின் இசையமைப்பில் வாணி செயராம், உமா ரமணன், டி.எல்.மகாராசன், சுரேந்தர். சிவசிதம்பரம், சிந்து, அமிர்தா, வீரமணி கர்ணா, எம்.ஆர். விசயா உள்ளிட்ட தமிழகக் கலைஞர்கள் பாடியுள்ளனர். வீ. சாரங்கபாணிசுசிலா மேனன், சுசிலா திருச்செல்வம், எம். மாரிமுத்து, வி.செயந்தி, சந்திரிகா உள்ளிட்ட உள்நாட்டுக் கலைஞர்களும் பாடியுள்ளனர்.

நாட்டிய நாடகங்கள்

புலவர் மு. முருகையன் நாட்டிய நாடகங்கள் இயற்றுவதில் வல்லவர்.  1986 இல் உருவாக்கிய சித்தார்த்தா நாட்டிய நாடகம் கோலாலம்பூரில் அரங்கேறியது. இசை, இயக்கம், பாடல்கள் அனைத்திற்கும் பொறுப்பேற்று இயக்கிய இந்த நாட்டிய நாடகம் இவர்தம் அன்னை புரடெக்சன்சு சார்பில் உருவானது. இது தமிழ்நாடு, இலங்கை, தாய்லாந்து, பினாங்கு, கோலாம்பூர், ஈப்போவிலும் அரங்கேறியது. ஐம்பதிற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை இவர் இயற்றியுள்ளார். தமிழகத் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினராகவும் தம்மை இணைத்துக்கொண்டார்.

புலவர் மு. முருகையன் அவர்களின் தமிழ்க்கொடை:

இலக்கிய இலக்கண ஆய்வுகள் குறித்து புலவர் மு. முருகையன் அவர்கள் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வரைந்துள்ளார்.

உலகத்தின் ஒளிவிளக்கு-பெற்றோரும் பிள்ளைகளும் 
மொழியியல் (ஆய்வுநூல்)
உலகத் தமிழர்களும் தொல்காப்பியமும், (ஆய்வுநூல்)
உலகத் தமிழர்களும் திருக்குறளும் (ஆய்வுநூல்

முதலியன வெளிவர உள்ளன.

பெற்ற விருது:

உலகத் தமிழ்க் கவிஞர் இயக்கத்தின் தலைவர் உவமைக்கவிஞர் சுரதா அவர்களும் க. . திருநாவுக்கரசு அவர்களும் இணைந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்  இலக்கியச் சித்தர் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளனர்(23.08.1988).
டாக்டர் விக்டர் சுப்பையா


புலவர் மு. முருகையன் அவர்களின் முதலாண்டு நினைவு விழாவைச் சென்னையில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க இந்திய ஒன்றியமும், கோலாலம்பூர் ஒளிவிளக்கு அமைப்பும் 18.05.2014 இல் நடத்துகின்றன. மறைந்த புலவர் மு. முருகையனை நினைவுகூர முயற்சி எடுக்கும் டாக்டர் விக்டர் சுப்பையா , செந்தமிழ்த்தேனீ இரா. மதிவாணன் ஆகியோர் நம் அன்பிற்கும் பாராட்டிற்கும் உரியவர்கள்.


குறிப்பு: களஞ்சியங்களுக்குக் கட்டுரை உருவாக்குவோர், எடுப்போர் எடுத்த இடம் சுட்டி ஆய்வு நாகரிகம் போற்றுக.