பேராசிரியர் மோ.செந்தில்குமார் அவர்கள்
என் இலண்டன் பயணத்தின் விளைவாகத் தொல்காப்பியத்திற்கு
ஒரு மன்றம் அமைக்கும் முயற்சி கைகூடியது. இலண்டனில் வாழும் திரு.சிவச்சந்திரனாரை நிறுவுநராகக் கொண்டு,
இலண்டனைத் தலைமை இடமாகக் கொண்டு இம்மன்றம் தன் பணியை அமைதியாகச் செய்யத் தொடங்கியுள்ளது.
தொல்காப்பிய மன்றத் தொடக்கம் பற்றி அறிந்த
சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் மொழியியல் அறிஞருமான பேராசிரியர்
முனைவர் பொற்கோ அவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு தம் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துத்
தொல்காப்பியத்தைப் பரப்புவதில் தாம் செய்த முயற்சியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டு,
தொடர்ந்து துணைநிற்பதாக ஊக்கமொழிகளை வழங்கினார்.
மலேசியத் தமிழ் அறிஞர் திரு. திருச்செல்வம்
ஐயா அவர்கள் தொல்காப்பிய அறிமுகம் குறித்த சிறந்த பதிவு ஒன்றை ஒளி-ஒலி வடிவில் இலவசமாக
இணையத்தில் வழங்கியுள்ளார். இளம் ஆய்வறிஞர் தம்பி இளமாறன் அவர்கள் தொடர்புகொண்டு தொல்காப்பியப்
பரவலுக்கான தம் ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளார். அதுபோல் குவைத்தில் வாழும் திரு.
தமிழ்நாடன், குவைத்தில் வாழும் கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.பழமலை
கிருட்டிணமூர்த்தி உள்ளிட்ட தோழர்களும் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளனர். நாமக்கல் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களும் தொல்காப்பிய ஆவணப்படுத்தலுக்குத் துண்நிற்பதாக உறுதியளித்துள்ளார்கள்.
அனைவரின் ஒத்துழைப்புடன் தொல்காப்பிய ஆவணங்களைத்
தொகுப்பது, ஒளிப்பதிவு செய்வது என்று பணிகள் நடைபெற்றுவரும் சூழலில் திருச்சிராப்பள்ளி
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஒரு புத்தொளிப் பயிற்சிக்குச் சென்றிருந்தபொழுது பேராசிரியர்
சு. துரை ஐயா அவர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பு எனக்கு அமைந்த்து. அப்பொழுது தம்முடன் பணியாற்றும்
திரு. மோ. செந்தில்குமார் அவர்கள் இணையத்தில் தொல்காப்பியத்தை இணையத்தில் பரப்பும்
முயற்சியை எடுத்துரைத்தார்கள்.
பேராசிரியர்
மோ. செந்தில்குமார் அவர்களைப் பலவாண்டுகளுக்கு முன்பாகவே அறிவேன் எனினும் எங்கள் தொடர்பு
வலிவுறாமல் இருந்தது.
நேற்று யான் பேராசிரியர்
மோ. செந்தில்குமார் அவர்களுடன் தொடர்புகொண்டு உரையாடியபொழுது எங்களின் பழைய சந்திப்புகளை
அசைபோட்டார்கள். தொல்காப்பியப் பரவலுக்குக் காணொளிகளை அழகாக வடிவமைத்துள்ளதைக் கூறி
இதற்கெனத் தம் இல்லத்தில் ஒரு பதிவு நிலையத்தைச் சொந்த செலவில் அமைத்துள்ளதைக் கூறியதும்
மிக மகிழ்ந்தேன். இவர்கள் அல்லவா தமிழைக் காக்கும் உண்மை மறவர்கள் என்று உள்ளம் மகிழ்ந்தேன்.
பாலை நிலத்தில் ஒற்றை ஆளாகச் செலவு மேற்கொண்டவனுக்குத் அறிவுத்துணை கிடைத்தமை போன்று
அகம் மகிழ்ந்தேன்.
தொல்காப்பியப் பரவல் பணிக்குத் தமிழ்ப்பற்றுடைய அனைத்து
நல்லுள்ளங்களையும் வரவேற்கின்றேன். தமிழர்கள் அனைவரும் தங்களால் இயன்ற வகைகளில் எங்களுக்குத்
துணை நிற்கலாம். செய்தி திரட்டல், ஆவணம் பெறுதல், தொழில்நுட்ப உதவி என்று எவ்வகையிலும் யாரும் உதவலாம். தமிழை அடுத்த பிறங்கடையினருக்குத்
தரும் எங்களின் முயற்சிக்குத் துணைநிற்கும்படி அனைவரையும் வேண்டிப் பேராசிரியர் மோ. செந்தில்குமார் அவர்களின் தமிழ் வாழ்க்கையையும் தமிழ்ப்பணிகளையும் இங்குப் பதிந்து வைக்கின்றேன்,
உலகத் தமிழர்கள் இந்த இளம் அறிஞருக்குத் துணை நிற்பதன் வழியாகத் தமிழுக்குத் தொண்டுசெய்தவர்களாக
மதிக்கப்படுவீர்கள்.
முனைவர் மோ. செந்தில்குமார்
முனைவர் மோ. செந்தில்குமார், ஈரோடு மாவட்டம், சிவகிரி
அடுத்த, மாரப்பம்பாளையம் என்னும் சிற்றூரில் வேளாண்
குடும்பத்தில் பிறந்தவர். பாரதியார்
பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்ற
இவர் கடந்த 15 ஆண்டுகளாக பேராசிரியப்
பணியில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது
கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையில்
உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
தமிழ்க்கொடைகள்
இதழியல் துறையில் பத்தாண்டு பட்டறிவு மிக்கவர். இதழ்களில் இவர் எழுதிய
சமூக விழிப்புணர்வு சார்ந்த கட்டுரைகள் நூல்களாக வெளிவந்துள்ளன. அவை,
1. இயற்கையும் மனிதவாழ்வும்
2. ஆன்மநெறியும் இன்பவாழ்வும்
3. மனிதம் தேடி
ஆகியனவாகும்.
‘குடிசைவாசி’ என்ற புனைபெயரில் ‘சத்தியம்’ என்ற
மையச்சரட்டில் மாந்தகுல இருப்பின் முகங்களைக் கோர்த்துத் தனது முதல் கவிதைப்
படைப்பாக “நடுத்தெருவில் சத்தியம்” என்ற
கவிதை நூலை வெளியிட்டுள்ளார்.
தொழில்நுட்ப அறிவுத்தேடலும் தொல்காப்பியப் பதிப்பும்
இவர், இதழியல்துறைப் பணிக்காலத்தில் தாமாகப் புகைப்படக் கலையைக் கற்றுத் தேர்ந்ததோடு தம் மாணவர்களுக்கும் 10 ஆண்டுகள் கற்றுக் கொடுத்து, அவர்களுள் சிலரைத் தொழில் முனைவோராக உருவாக்கி இருக்கின்றார். மேலும், பக்க வடிவமைப்பு, அச்சு நுட்பம்,
படக்காட்சி உருவாக்கம் ஆகிய துறைசார் நுட்பங்களைத் தாமே கற்றுத்தேர்ந்துள்ளார்.
அத்தொழில்நுட்பங்களைக் கொண்டு தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தையும்,
சங்க இலக்கியங்களையும் காணொளி வடிவிலான (High Definition தரத்தில்) வகையில் செய்யும் நோக்கத்துடன் தற்போது ‘விசும்பு’ என்ற வானளாவிய திட்டத்தை
முன்னெடுத்துள்ளார்.
‘விசும்பு’ திட்டத்தின் முதற்படியாகத் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தைக் காணொளி
வடிவமாக்கி யுடியூபின் வழியாக உலகத் தமிழர்களுக்கு வழங்கத்
தொடங்கியுள்ளார். மேலும்,
http://visumbu.wordpress.com/ என்ற வலைப்பூவை உருவாக்கி, அதில் தான் யுடியூபில் பதிவேற்றும் ஒவ்வொரு காணொளிப்
பாடம் குறித்தும் கூடுதல் கருத்துக்களைப் பத்தியாக எழுதி உரையாடலுக்கான களத்தையும்
உருவாக்கி வருகின்றார். மேலும் அறிய, விசும்பு வலைப்பூவினுள் நுழையுங்கள்.