சதுக்க பூதம்
பத்துப்பாட்டு
நூல்களை நுண்ணிதின் கற்கும்பொழுது ஒவ்வொரு நூலும் தனித்த பெருமைக்குரியனவாக விளங்குகின்றன.
ஆயிடை அரிய ஆய்வுக்கு இடந்தருவனவாகவும் இலங்குகின்றன.
திருமுருகாற்றுப்படையைக்
கற்கும்பொழுது சங்கநூல்களில் குறிக்கப்படும் முருகனின் வரலாற்றிலிருந்து கூடுதலான செய்திகளைக்
கொண்டு நிற்கின்றது. குறிஞ்சிப் பாட்டைக் கற்கும்பொழுது பழந்தமிழக இயற்கை வளங்களை அறியமுடிகின்றது.
மலைபடுகடாமைக் கற்கும்பொழுது சேயாற்றின் சிறப்பு, செங்கண்மா நகர், அதனை ஆண்ட நன்னன்,
அவனின் நவிரமலைச் சிறப்புகள் புலப்படுகின்றன. சிறுபாணாற்றுப்படையைக் கற்கும்பொழுது
கிழக்குக் கடற்கரையின் நடுவிடமான இடைக்கழிநாடு, எயில்பட்டினம், நல்லியக்கோடனின் நாட்டு
வளம், கிடங்கில் நகர், மாவிலங்கைச் சிறப்பு உள்ளிட்ட அரிய செய்திகள் நமக்கு மகிழ்வை
ஏற்படுத்துகின்றன.
அதுபோல் பொருநராற்றுப்படை
அந்நாளைய பொருநர்களின் கலைத்திறத்தையும், அவர்களின் வாழ்க்கை நிலையினையும் காட்டி நிற்கின்றது.
பெரும்பாணாற்றுப்படை தொண்டைநாட்டின் சிறப்பினையும், மக்கள் வாழ்க்கையையும் காட்டி நிற்கின்றது.
மதுரைக்காஞ்சி நூல் நிலையாமை என்னும் அறநெறி பற்றியும், மதுரை மாநகர் பற்றியும், தலையாலங்கானத்துச்
செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றியும் வேறுபல அரிய செய்திகளையும் தாங்கி நிற்கின்றது.
இந்நூல்களைப் போல் பட்டினப்பாலை என்னும் நூல் தமிழக வரலாற்றுக்குரிய அரிய சான்றுகள்
பலவற்றைத் தாங்கி நிற்கின்றது. பண்டைத் தமிழர்களின் வாழ்வியலையும், வணிகநிலையையும்
குறிப்பிடுகின்றது.
பட்டினப்பாலை
என்னும் அரிய நூலை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் பெருமகனார்
ஆவார். இந்நூல் திருமாவளவன் என்னும் அரசர்பெருமானையும் அவனது நாட்டினையும், காவிரிப்புகும்பட்டின
நகரினையும்(பூம்புகார்) போற்றியுரைக்கும் வகையில் உள்ளது. திருமாவளவனும் கரிகாலன் என்னும்
அரசனும் ஒருவரே எனவும், இருவரும் வேறு வேறானவர் எனவும் தமிழறிஞர்களிடையே கருத்துவேறுபாடு
உண்டு. திருமாவளவன் காலத்தில் உறையூர் தலைநகராகவும், பூம்புகார் கடற்கரை நகராகவும்
விளங்கியிருக்க வேண்டும் என்று உய்த்தறிய சான்றுகள் பல உள்ளன.
பட்டினப்பாலை
ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் இப் புலவர் பட்டினப்பாலையே அன்றிப் பெரும்பாணாற்றுப்படை
என்னும் நூலையும் இயற்றியுள்ளார். இவர் பற்றிய முழுமையான வரலாறு நமக்குக் கிடைத்தில.
இவர் பெயருக்கு அடையாக வரும் கடியலூர் என்னும் ஊர் தமிழகத்தின் எப்பகுதியில் உள்ளது
என அறிய இயலாமல் அறிஞருலகம் மயங்குகிறது. “ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும் யாருஞ்
சார்த்தி யவையவை பெறுமே” (தொல்.மரபு. 74) என்னும் நூற்பாவிற்குப் பேராசிரியர் உரை வரையும்பொழுது,
”ஊரும் பெயரும் என்பன: உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகன்,
கடியலூர் உருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க்குரியன” என விளக்குவதால் கடியலூர் உருத்திரங்கண்ணனார்
அந்தணர் குலத்தில் பிறந்தவராக இருத்தல்கூடும்.
பட்டினப்பாலை
நூலை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்கு அரசன் சிறப்பு செய்த குறிப்பு பட்டினப்பாலையில்
இல்லை. ஆனால் பதினாறு நூறாயிரம் பொன் வழங்கினான் என்ற குறிப்பு பிற்கால நூலான இராசராசன்
உலாவில் பதிவாகியுள்ளது. கலிங்கத்துப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழிலும் திருவெள்ளறைக்
கல்வெட்டிலும் இச்செய்தி பதிவாகியுள்ளது.
பட்டினப்பாலை
நூலின் பாடலடிகளின் எண்ணிக்கை 301 ஆகும். 302 எனக் கொள்வாரும் உண்டு. இந்த நூல் யாப்புவகையான்
ஆசிரியமும் வஞ்சியுமாக ஓரினத்து இருவகை யாப்பால் அமைந்து, வஞ்சிநெடும் பாடலாக அமைகின்றது.
குறளடி 167 எனவும், அளவடி 134 எனவும் ஈற்றயல் சிந்தடி 1 எனவும் கொண்டு அறிஞர்கள் கணக்கிடுவது
உண்டு.
பட்டினப்பாலை
நூல் தமிழறிஞர்கள் பலரின் உள்ளங் கொள்ளைகொண்ட நூலாகும். இந்த நூலுக்குப் பண்டைத் தண்டமிழாசிரியர்
நச்சினார்க்கினியரும், இருபதாம் நூற்றாண்டின் அறிஞர்களான தவத்திரு மறைமலையடிகளாரும்,
அறிஞர் இரா. இராகவையங்காரும், பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரும் வரைந்துள்ள உரைப்பகுதிகளைக்
கற்கும்பொழுது பட்டினப்பாலை என்னும் இப்பனுவல் அவர்களின் உள்ளத்தைக் கவர்ந்த காரணத்தை
உணரலாம்.
பட்டினப்பாலையைக்
கற்கும் முன்பாக…
பட்டினப்பாலையைத்
தமிழ்க்கண்கொண்டு நயம்சார் பார்வையில் கற்பதினும் அரசியல், வரலாறு, புவியியல், கடலியல்,
தொல்லியல், அகழாய்வியல், கடலகழாய்வியல் கண்கொண்டு உற்றுநோக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் காவிரியாறு இன்றைக்கு ஓடிவரும் போக்கில் பண்டைக்காலத்தில் ஓடவில்லை என்று தொலை உணர்வுத்துறையின் பேராசிரியர் எஸ். எம். இராமசாமி
அவர்கள் குறிப்பிடுவார். (S.M. Ramasamy: “Remote sensing
and Ecstatic changes along the east cost of TamilNadu and its possible influence
in poompuhar’s submergence”. Paper presented at seminar on Marine Archaeology –
1994, held at Chennai.
மேற்கோள். நடன.காசிநாதன், பூம்புகாரும் கடல் அகழாய்வும்). அதுபோல் பூம்புகாரும் இன்றைக்கு
உள்ள பூம்புகாரின் வடகிழக்கே ஐந்துகல் தொலைவில் உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுரைத்துள்ளனர்.
இன்றைய அறிவியல் தொழில்நுட்ப உதவியால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பூம்புகாரை அறிய
முற்பட்டால் வியத்தகு உண்மைகள் வெளிவரும்.
மேலும்
“வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரியாறு” இன்று கர்நாடக மாநிலத்திற்கு
மட்டும் உரிமையுடையது போன்ற சூழல் அரசியல்காரர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. வறண்ட காலத்தில்
மட்டும் தமிழக மக்களால் காவிரி என்ற சொல் ஒலிக்கும் சொல்லாக உள்ளது. ஆனால் காவிரியின்
வரலாற்றைப் பார்க்கும்பொழுது காவிரிக்கும் தமிழகத்திற்குமான தொடர்பு, உரிமை பன்னெடுங்காலமாக
உள்ளது.
“நீயே தண்புனல் காவிரிக் கிழவன்” (புறம்)
“கரிகாலன் காவிரி சூழ் நாடு” (பொருநராற்றுப்படை-
பிற்சேர்க்கைப் பாடல்)
“காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர்” (புறம்- 385:8-9)
“பழஞ்சோ றயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
“காவிரிக் கிழவன்”- (புறம். 399:11-12)
முதலான பாடலடிகள் காவிரியாற்றின் உரிமையாளர்களாகப்
பண்டைத் தமிழ்ச் சோழ மன்னர்கள் இருந்துள்ளதைக் காட்டுகின்றன.
காவிரியாறு ஆழமான நீர்நிறைந்தோடும் சிறப்போடு
விளங்கியதை,
“ பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண்
“கழைநிலை பெறாக் காவிரி நீத்தம்” – (அகம்.-6)
“கழையளந் தறியாக் காவிரி” (அகம். 32)
“ கழைமாய் காவிரி” (அகம். 10)
“கழல்கால் பண்ணன் காவிரி வடவயின்” (அகம்.
177)
“பல்வேல் மத்தி கழாஅர் முன்றுறை” (அகம்.
226)
என்னும் பாடலடிகள் காவிரி நீர்நிறைந்தோடியமையை
நினைவூட்டும். இன்று வறண்டு கிடக்கும் மணல்வெளியைக் காண்போர் இவ்வரிகளை நம்ப மறுப்பர்.
வானம் இயற்கையாகப்
பெய்யும் மழையைப் பெய்யச் செய்யாமல் பொய்த்தாலும் காவிரியாறு தொடர்ந்து ஓடிவந்து சோழநாட்டு
மக்களைக் காக்கும் தாயாக விளங்கியதைத் தமிழ்நூல்கள் எடுத்துரைக்கின்றன.
காவிரியாறு
குடகு மலையில் தோன்றிக் கீழைக் கடலில் கலக்கிறது என்பதை “மலைத்தலையக் கடற்காவிரி” என்பர்.
இத்தகு காவிரி பாயும் சோழநாட்டினைச் சோழமன்னர்கள் பண்டைக்காலம்தொட்டு ஆட்சி செய்துவந்துள்ளனர்.
இச்சோழப் பெருவேந்தர்கள் காலத்தில் கடல்வணிகமும் சிறப்பாக நடைபெற்றுள்ளதைச் சான்றுகளால்
அறியமுடிகின்றது. சோழநாட்டின் தலைநகராக உறையூர் விளங்கியமை போன்று கடற்கரை நகராகப்
பூம்புகாரும் வேறுபல ஊர்களும் இருந்துள்ளன. பூம்புகாரின் சிறப்பினைப் போற்றியுரைக்கும்
நூல்களுள் பட்டினப்பாலை தலைசிறந்து விளங்குகின்றது. அந்த நூலில் இடம்பெறும் செய்திகளை
இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.
பட்டினப்பாலையில் காவிரியின் சிறப்பு,
பூம்புகாரின் சிறப்பு, திருமாவளவனின் வீரம் பேசப்படுகின்றன.
பூம்புகார்
சிறப்பு:
பூம்புகார்
நகரம் சங்க காலச் சோழமன்னர்களின் கடற்கரைத் துறைமுகப்பட்டினமாக விளங்கியுள்ளது. இந்நகரை
இருமுறை கடல்கொண்டமைக்கான குறிப்புகள் காணப்படுகின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான
நூல்கள் கடல்கோள் பற்றி பேசுகின்றன. மணிமேகலையில் இரு இடங்களில் கடல்கோள் ஏற்படும்
என்ற குறிப்பு உள்ளன.
“தீவகச்
சாந்தி செய்யா நாள்உன்
காவல்
மாநகர் கடல்வயிறு புகூஉம்” (மணி: 24:62-63)
(இந்திரவிழா கொண்டாடத் தவறினால் கடல்கோள்
நிகழும்) என்றும்,
ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதையில்
காவிரிப் பூம்பட்டினம் கடலால் கொள்ளப்பட்டதை மணிபல்லவத் தீவின் காவல் தெய்வம் தீவதிலகை,
“மணிமேகலா
தெய்வம் மற்றது பொறாஅல்
அணிநகர்
தன்னை அலைகடல் கொள்கென
விட்டனள்
சாபம் பட்டதிதுவால்
கடவுள்
மாநகர் கடல்கொள”
(மணி: 25:198-201)
என்று குறிப்பிடும் பகுதிகள் இதனை மெய்ப்பிக்கும்.
காவிரியின் சிறப்பு
காவிரியாற்றின்
சிறப்பினை மிகச்சிறப்பாக விதந்தோதும் நூல் பட்டினப்பாலை ஆகும். பட்டினப்பாலை நூலின்
வழியாக அக்காலத்தில் இருந்த நில அமைப்பு, கடற்கரையமைப்பு, துறைமுகம், பண்டமாற்று, செல்வச்செழிப்பு,
இறைவழிபாடு, சடங்குமுறை, உணவுமுறை, மக்களின் பொழுதுபோக்கு, வாழ்க்கைமுறை, வணிகச்சிறப்பு
உள்ளிட்ட பல செய்திகளை அறியமுடிகின்றது. காவிரியாற்றின் வரலாற்றையும், பெருமையையும்
இந்த நூலில் விரிவாகக் காணலாம்.
வெள்ளிக்கோள்
தான் நிற்பதற்குரிய வடதிசைக்கண் நில்லாமல் தென்திசைக்குச் சென்றாலும், மழைத்துளியையே
உணவாக உண்ணும் வானம்பாடி வருந்தும்படி முகில் மழையைப் பொய்த்தாலும் குடகு மலையில் தொடங்கிக்
கடலில் புகுவதாகிய காவிரிப் பேரியாறு சோழ நாட்டை வளப்படுத்திப் பொன் கொழிக்கச் செய்யும்
பெருமைக்குரியது. இச்செய்தியில் தமிழரின் வானியல் அறிவு மிளிர்ந்து நிற்கின்றது. காவிரி
பாய்வதால் கழனிகளில் மிகுதியாகக் கரும்பு விளையும்; கரும்பு ஆலைகளில் மணம் கமழும் பாகினை
அடுவதால் எழும் புகை சுடுதலால் வயலில் நிறைந்து நின்ற நெய்தல் பூக்கள் வாடும். அந்த
வயல்களில் விளைந்த கதிரைத் தின்ற எருமை மாடுகள் ஈன்ற கன்றுகள் உழவர்களின் நெற்கூடுகளின்
நிழலில் உறங்கும். இக்கருத்துகள் தமிழகத்தில் பண்டைக்காலத்திலேயே கரும்புகள் விளைவுக்கு
வந்துவிட்டதைக் குறிப்பிடுகின்றது.
தெங்கு, வாழை,
கமுகு, மணம் வீசும் மஞ்சள், மா மரம், பனை, சேம்பு, இஞ்சி முதலியவற்றை உடையதாகச் சோழ
நாட்டின் மருத நிலம் கொண்ட சிற்றூர் விளங்கியது. சோழநாட்டின் விளைபொருள்களைக் கடியலூர்
உருத்திரங்கண்ணனார் இந்த நூலில் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். செல்வம் மிக்க வீடுகளின்
முன்றிலில் அணிகலன்களை அணிந்த மகளிர் உலரும் நெல்லைத் தின்ன வரும் கோழியை வெருட்டுதற்கு
எறிந்த மகரக்குழையானது இளம் சிறுவர்கள் குதிரை பூட்டாமல் உருட்டி விளையாடும் சிறிய
தேர்களின் வழியை விலக்கும். இவ்வாறு வளம் வாய்ந்த பலவாகிய ஊர்களை உடையதாகச் சோழ நாடு
விளங்கியது என்பதைப் பட்டினப்பாலை உணர்த்தி நிற்கின்றது.
காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள பொழில்களும்,
தோட்டங்களும்
பூம்புகாரின்
கழிமுகப் பகுதிகளில் படகுகள் வரிசையாக நிற்கும். அந்தப் படகுகள் பந்தியிலே வரிசையாகக்
குதிரைகளைப் பிணித்து வைத்தது போல் இருக்கும். பொழில்களையும் சோலைகளையும் கொண்டு ஓவியத்தின்
அழகினைப் பெற்றது போல் பொய்கைகளும், ஏரிகளும் நிறைந்திருந்தன. சோழனின் புலிச்சின்னத்தை
அடையாளமாகக் கொண்டு பலகைகள் நன்கு பொருந்திய கதவினை உடையதாக மதில்கள் விளங்கின.
பூம்புகாரில்
உணவுச் சாலைகள் மிகுந்திருந்தன. அந்த உணவுச் சாலைகளில் வடித்த கஞ்சி தெருக்களில் ஆறு
போல் ஓடியது. அந்த இடத்தில் காளைகள் தம்முள் போர் செய்வதால் சேறாய் மாறியது. அவ்வழியில்
பல தேர்கள் ஓடியதால் அத்துகள்கள் எங்கும் பரவின. இதனால் அரண்மனைகள் புழுதியை மேலே பூசிக்கொண்ட
களிறு போல் அழுக்குடன் விளங்கின. எருதிற்கு வைக்கோல் இடும் சாலைகளும், தவம் செய்வோர்
உறையும் பள்ளிகளைக்கொண்ட பொழில்களும் பூம்புகாரில் இருந்தன. தாபதர்கள் தீயில் நெய்
முதலியவற்றை இட்டு வளர்த்தலால் உருவாகும் புகையை வெறுத்த குயில்கள் தம் பேடைகளுடன்
அந்த இடத்தைவிட்டு நீங்கும் என்ற குறிப்பு அக்காலத்தில் நிலவிய வைதீகச் சடங்குகளை நினைவூட்டுகின்றன.
காவிரிப்பூம்பட்டினச் சிறப்பு
அகவை முதிர்ந்த
மரங்கள் கடற்கரையெங்கும் காணப்படும். பொய்ப்போர் செய்வதற்கு என அமைக்கப்பட்ட மணல் திட்டுகளில்
அமர்ந்து மறவர்கள் கடலின்கண் கிடைத்த இறால் மீன்களின் சூட்டு இறைச்சியைத் தின்று மகிழ்வர்.
மற்றொரு பிரிவினர் வயலில் கிடைத்த ஆமையைப் புழுக்கி அதன் இறைச்சியைத் தின்றும் ஒரு
பிரிவினர் அடப்பம் பூவைத் தலையில் சூடியும், மற்றொரு பிரிவினர் நீரில் நின்ற ஆம்பல்
பூவைப் பறித்துச்சூடியும் மகிழ்வர்.
இந்த உணவு வகைகளைக்
கொண்டு நிலத்தைப் பாகுபாடு செய்ய வாய்ப்பு கிடைக்கின்றது என்பதைப் பெருமழைப் புலவர்
உரையால் அறியமுடிகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம்
என்னும் இரு பகுதிகள் இருந்தன. மருவூர்ப்பாக்கம் என்பது கடற்கரையருகேஅமைந்த நெய்தல்
நிலப் பகுதியாகும். பட்டினப்பாக்கம் என்பது காவிரிக்கரையில் மருதநிலத்தில் உள்ளது.
அதனால் மருவூர்ப்பாக்கத்து மறவர்கள் நெய்தல் நிலத்தில் கிடைக்கும் கடல்சுறாவின் சூட்டினைத்
தின்று அடப்ப மலர்களை அணிந்துகொண்டனர். பட்டினப்பாக்கத்து மறவர் வயலாமையைப் புழுக்கிப்
புனலாம்பல் சூடினர் என்று விரித்துரைக்கும் பெருமழைப்புலவரின் உரைச்சிறப்பை அவர் உரையால்
மேலும் அறிக.
நெய்தல் நிலத்தின்
அம்பலங்களில் கையாலும் கருவிகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பெருஞ்சினத்தோடு போர் செய்வர்.
தம் வலிமையை அளத்தற் பொருட்டு பனை மரங்களை இலக்கு வைத்துக் கவண் கற்களை வீசுவர். அக்கற்களுக்கு
அஞ்சி பறவைகள் அந்த இடத்திலிருந்து நீங்கும். இவ்வாறு செய்வோர் பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம்
என இரு ஊர்ப் பாக்கங்களில் வாழ்பவர் ஆவர். இக்குறிப்புகளைக் கொண்டு பண்டைத்தமிழர்களின்
வாழ்க்கைமுறையை ஒருவாறு உணரலாம்.
புறஞ்சேரியின் தன்மை
சேரிப்புறம்
என்பது புறஞ்சேரி என்று மாறி வந்தது. புறஞ்சேரிப் பகுதிகளில் உறைக்கிணறு இருக்கும்.
மேலும் புறஞ்சேரியில் குட்டிகளை உடைய பன்றிகளும், பல்வேறு வகை கோழிகளும் துருவ ஆட்டின்
கிடாய்களும், கௌதாரிகளும் விளையாடுவது உண்டு. இவை உணவின் பொருட்டு வளர்க்கப்பட்டிருக்க
வேண்டும்.
பரதவர் இருக்கை
போரில் விழுப்புண்
பட்டு இறந்த வீரருக்கு நடுகல் எடுப்பது பண்டைய வழக்கம். அவ்வாறு நடும் கல்லைச் சுற்றிலும்
வேலினை ஊன்றிக் கிடுகைக் கட்டி அரண் போலச் செய்வர். அதுபோல் நெடிய கோல் சார்த்திய கூரைகளை
உடைய குடியிருப்புகள் இருந்தன. நிலவினைச் சேர்ந்த இருள் போல வலை கிடந்து உலரும் மணல்வெளிகளுடன்
பரதவர் மனைகள் இருந்தன. சுறா மீனின் கொம்பை நட்டுத் தம் மனையில் சேர்த்த தெய்வமாகிய
வருணனுக்கு வழிபாடு செய்வர். அந்தத் தெய்வத்திற்கு இட்ட தாழை மலரைத் தாம் சூடியும்,
படைத்த பனையின் கள்ளைப் பருகியும் மகிழ்வர். கடலிடத்துத் தொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்துத்
தாம் விரும்பும் உணவை உண்டு மனம் போனவாறு பரதவர்கள் விளையாடுவர். காவிரிப்புகும்பட்டினத்து
மக்களிடம் பண்டைக்காலத்தில் நிலவிய வாழ்வியல் கூறுகளைப் பல நூறு ஆண்டுகளானாலும் பட்டினப்பாலை
இன்றும் வரலாற்று ஆவணமாக இருந்து சுட்டிக்காட்டுகின்றது.
பூம்புகாரின்
பகல்காட்சி
காவிரிப்புகும்பட்டினக்கடற்கரையில்
மீன்படு பரதவர் தொழிலில் கொணர்ந்த மீன் உலர்த்தலால் மணல்வெளியில் மீன் நாற்றம் இருக்கும்.
மேலும் அங்குப் பலவகையான சோலைகள் இருப்பதால் மலர்மணமும் கமழும். இக்கடற்கரையிடத்து
மலையைச் சேர்ந்த மேகம் போலவும், தாய்முலை தழுவிய குழவிபோலவும் காவிரி கடலுடன் கலக்கும்.
இத்துறையில் தீவினைகள் நீங்க மக்கள் கடல்நீரில் குளிப்பர். கடலில் குளித்த உப்புநீர்
நீங்கக் காவிரியில் குளிப்பர். மேலும் மகிழ்ச்சிக்காக நண்டினைப் பிடித்து விளையாடியும்,
அலைகளில் விளையாடியும், பாவைகள் செய்து மகிழ்ந்தும் பகற்பொழுதில் மகிழ்வர். சுவர்க்க
உலகம்போலும் பெருமை மிக்க பூம்புகார் கடற்கரையில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர்.
பூம்புகாரின் இரவுக் காட்சி
பூம்புகாரில்
வதிந்த மகளிர் இரவுக்காலத்தில் தம் கணவரைக் கூடிய இன்ப மயக்கத்தில் தாம் முன்பு உடுத்தியிருந்த
பட்டாடையை நீக்கித் தம் கணவரின் துகிலை உடுத்தி நிற்பர். மேலும் தாம் பருகுதற்கு அமைந்த
மட்டினைப் பருகாமல் தம் கணவர் பருகுதற்குரிய மதுவினைப் பருகுவர். இன்னவண்ணமே மைந்தர்
சூடுதற்குரிய கண்ணியை மகளிர் சூடவும், மகளிர் கோதையை மைந்தர் அணியவும் இருந்தனர். ஒருபகுதி
மக்கள் இசைப்பாடல்களைப் பாடியும், ஒருசார் மக்கள் நாடகம் கண்டும், ஒருசிலர் நிலவு இன்பம்
நுகர்ந்தும் விளங்கினர். இவை யாவும் கடையாமத்து நிகழ்வாக இருந்தது. இவ் இரவுக்காலத்து
நிகழ்வுகளை விரித்துரைக்குமிடத்துப் பெருமழைப்புலவரும் நச்சினார்க்கினியரும் மாறுபட்டு
நின்று பொருள் உரைப்பதை அவரவர் உரைகற்று இன்பம் நுகரலாம்.
சுங்கப்பொருள் கொள்வோர் நிலை
சோழ அரசனின்
நாட்டகத்தில் விற்பனைக்கு வரும்பொருள்களுக்குச் சுங்கவரி விதிப்போர் கடையாமத்தில் சிறுபொழுது
உறங்கி மற்ற அமையங்களில் விழித்திருந்து காவல் செய்வர். அரசனுக்கு உரிய பொருளைப் பிறர்
கொள்ளாமல் காக்கும் இவர்களின் செயல் கதிரவனின் தேர்பூண்ட குதிரைபோல் தொடர்ந்து இயங்குவதுபோல்
இருக்கும் என்ற உவமைவழி விளக்கப்பட்டுள்ளது.
இயற்கை வாழ்க்கை
பூம்புகாரில்
வாழ்ந்த பண்டைத் தமிழ் மக்கள் இயற்கை வாழ்க்கை வாழ்ந்துள்ளதைப் பல சான்றுகளின் வழியாக
உணரமுடிகின்றது. கடற்கரையை ஒட்டிய பரதவ மக்கள் கடல்படு பொருளான மீனையும், மீன் உணங்கலையும்,
கள்ளையும் உண்டு அங்குக் கிடைத்த மலர்களைச் சூடி, தம் உறவினருடன் விளையாடியும் பொய்ப்போர்புரிந்தும்,
நடுயாமத்தும், கடை யாமத்தும் இன்பம் துய்த்தும் வாழ்ந்துள்ளனர்.
முழுநிலவு நாளில்
விழாவெடுப்பது வழக்கமாகத் தெரிகின்றது. சுறா மீனின் கொம்பை நட்டு வழிபட்டுள்ளனர். வருணனுக்கு
விழா எடுத்துள்ளனர். வணிகக்குடியினர் நடுநிலையில் இருந்து வணிகம் செய்துள்ளனர். வேளாண்
மக்கள் தம் குலத்தொழிலைச் செய்து அறவாழ்வு வாழ்ந்துள்ளனர்.
அரசனின் படை
மறவர்கள் காவல் காத்துள்ளதும், அரசனின் பணியாளர்களும் அமைச்சர்களும் அவரவர்களுக்கு
உரிய கடமைகளையாற்றியுள்ளனர் என்பதும் இந்நூலால் விளங்குகின்றன. இன்றைய நாகரிக உலகுபோல்
பண்டைப் பூம்புகார் பன்னாட்டு மக்கள் கூடும் இடமாகவும், பல நாடுகளுக்குச் சென்று பேரறிவு
பெற்றவர்கள் கூடும் இடமாகவும் இருந்துள்ளதையும் பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. புகாரின்
சிறப்பை உரைப்பதுடன் இல்லாமல் அக்காலத்தில் ஆட்சி செய்த பெருவீரனான திருமாவளவனின் இளமை
வாழ்க்கை, அவனின் போர்ச்செயல் யாவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஏற்றுமதி இறக்குமதி
காவிரிப்புகும்பட்டினக்
கடற்கரை பொருள்களை ஏற்றுவதும் இறக்குவதுமாக எந்த நாளும் இருக்கும். அளந்து அறியாப்
பல பண்டங்கள் குவிக்கப்பட்டிருந்ததையும், அவற்றை அருங்கடிப் பெருங்காப்பினர் காவல்
செய்ததையும் பட்டினப்பாலை கவனமாகப் பதிவு செய்துள்ளது. வெளியேறும் பொருட்களுக்கும்,
சோழநாட்டுக்குள் வரும் பொருள்களுக்கும் சோழனின் புலிச்சின்னம் இலச்சனையாகப் பொறிக்கப்பட்டுள்ளதை
நினைக்கும்பொழுது இன்றைய சுங்கத்துறை நடைமுறைகளுக்கு முன் காட்டுகள் பட்டினப்பாலையில்
உள்ளதை அறியலாம்.
பொருள்கள் மிகுதியாகக்
குவிக்கப்பட்டிருந்ததால் அப்பொருள்களின் குவியலில் மலைகளில் வாழும் வருடைமான்களைப்
போல் ஆட்டுக் கிடாய்களும், ஏற்றை நாய்களும் ஏறிக்குதித்து விளையாடும். இவை செல்வப்பெருக்கம்
காட்டும் உவமை. கார்காலத்தில் கடலின்நீரை முகந்துகொண்டுவந்து முகில்கள் மலையில் பொழிவதும்,
மலையின்கண் உருவான நீரை யாறுகள் கடலில் கொண்டுவந்து பரப்பவும் ஒரே அமையத்தில் நிகழ்வதுபோல்
பிற நாட்டிலிருந்து கொண்டுவந்து பொருளைக் கரையில் ஏற்றவும், நான்கு நிலங்களிலிருந்தும்
கொண்டு வந்த பொருள்களைக் கலத்தில் கொண்டு சேர்க்கவுமான காட்சியைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்
சிறப்பாகக் காட்டியுள்ளார்.
அங்காடித்தெரு
திண்ணைகளையும்,
பல கட்டுகளையும், சிறு வாயில்களையும், பெரு வாயில்களையும் உடைய உயர்ந்த மாடங்களைக்
கொண்ட வீடுகள் பூம்புகாரில் இருந்துள்ளன. அந்த வீட்டின் மாடத்தில் மயில்போன்ற சாயல்
உடைய பெண்கள் கிளிபோலும் மழலைமொழி மிழற்றுவர். தம் காந்தள் மலர்போலும் கைகளைக் குவித்துத்
தொழுது, முருகவேளுக்கு வெறியாட்டு எடுப்பர். மகளிர் பாடும் பாடலுடன் குழலும் யாழும்
முழவும் ஒலிப்ப நாளும் திருநாள் நிகழும் அங்காடித்தெருக்கள் பூம்புகாரில் உண்டு.
அங்காடித்தெருக்களில்
தெய்வக்கொடிகளும் கரும்பின் பூ போன்ற வீரக்கொடிகளும், நல்லாசிரியர்கள் வாதுசெய்தலைக்
கருதி உயர்த்திய அச்சந்தரும் கல்விக்கொடிகளும் ஏற்றப்பட்டிருக்கும். யானைபோன்ற மரக்கலங்களில்
கட்டப்பட்டிருக்கும் கொடிகளும், கள் விற்றலைக் குறித்தற்கு ஏற்றப்பட்டக் கொடிகளும்,
ஏனைய பண்டங்களை விற்றலுக்கு ஏற்றப்பட்ட கொடிகளும் மிகுந்து காணப்படும். இன்றைக்கு விளம்பரப்பலகைகள்
செய்யும் பணியைப் பண்டைக்காலத்தில் கொடிகள் அடையாளமாக இருந்து செய்தன போலும்.
காவிரிப்புகும்பட்டினத்தில்
கடல்வழியில் கலத்தில் சுமந்து கொண்டுவந்த பொருள்களும், நிலத்தில் சகடங்களில் வந்த மிளகுப்
பொதியும் குவித்துவைக்கப்பட்டிருந்தன. மேலும் மேருமலையில் பிறந்த மாணிக்க மணியும்,
சாம்பூநதம் என்னும் பொன்னும், குடகுமலையில் பிறந்த சந்தனமும், அகில்மரமும், தென்கடலில்
பிறந்த முத்தும், கீழ்த்திசைக்கடலில் பிறந்த பவளமும், கங்கையாற்றில் பிறந்த பொருள்களும்
காவிரியாற்றில் பிறந்த பொருள்களும் மிகுதியாகக் கிடைத்தன. மேலும் ஈழத்தில் கிடைத்த
பொருள்களும், கடாரத்துப் பொருள்களும் இவையொத்த பெறுவதற்கு அரியனவும் பெரியனவுமான பொருள்களும்
மிகுந்து விளங்கியபடி காவிரிப்புகும்பட்டினம் விளங்கியது.
இவ்விடத்து
ஈழத்துணவும் என்று உரையாசிரியர்கள் பலரும் பாடம்கொள்ள அறிஞர் இரா.இராகவையங்கார் “ ஈழத்துளவும்”
என்று பாடங்கொண்டதை எடுத்துரைக்கும் பெருமழைப்புலவர் இந்த இடத்தில் நுட்பமான விளக்கம்
வரைந்துள்ளார்.
பூம்புகாரில் வாழ்ந்த குடிமக்கள்
பூம்புகார்
நீர்புக்க நிலமாக மாறினாலும் கடியலூர் உருத்திரங்கண்ணனார் வழியாக அவர் பாட்டுத்திறத்தால்
என்றும் வாழும் ஊராக நிலைபெற்றுவிட்டது. இவ்வூரில் வேளாளர், வணிகர் உள்ளிட்ட பலகுடியினரும்
வாழ்ந்துள்ளனர். காவிரிப்புகும்பட்டினத்து வேளாண் மக்கள் பிற உயிர்களை நலித்தல் செய்யாதவர்கள்.
உழவுத்தொழிலை விரும்பிச் செய்கின்றவர்கள்.
உயிர் கொல்லுந்தொழிலுடையவர்க்கும்
நெல்லை வழங்கும் இயல்பினர். தெய்வம் போற்றியும் தெய்வங்களுக்கு அவியுணவு வழங்கியும்,
நான்மறை வல்லோர் போற்றும் படியாகவும் வாழ்ந்துவந்தனர். நல்ல பசுக்களையும் எருதுகளையும்
பாதுகாத்து வாழ்ந்தனர். விருந்தினர்க்கு உணவு முதலியவற்றை வழங்கிப் போற்றினர் என்று
குறிப்பிடப்படுவதால் வேளாண் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பட்டினப்பாலை ஓவியமாய்த்
தீட்டி வைத்துள்ளது எனலாம்.
வணிகர்குடி
புகாரில் வாழ்ந்த
வணிகர்கள் தம் குடிக்குப் பழி வராதபடி நேர்மையான முறையிலும் நடுவுநிலையுடனும் வணிகம்
செய்தனர். தாம் கொள்ளும் பொருள் மிகையாக இல்லாமலும், கொடுக்கும்பொருள் குறைவுபடாமலும்
வழங்கியுள்ளனர். பல பண்டங்களையும் உண்மைவிலைகூறி, தாம் பெறக்கிடந்த ஊதியத்தை வெளிப்படையாகக்
கூறி விற்பதும் வாங்குவதுமாக இருந்தனர் என்பதை அறியும்பொழுது பண்டைக்கால வணிகமுறை நமக்குப்
புலனாகிறது.
காவிரிப்பூம்பட்டினத்தில்
வணிகம் சிறந்திருந்ததாலும், பலவகைத் தொழில்கள் நடைபெற்றதாலும், கடற்கரைப் பட்டினமாதலாலும்
பலமொழி பேசிடும் பலநாட்டு மக்கள் இருந்துள்ளமையையும் பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது.
புகாரில் இருந்த மக்கள் பிறநாட்டுடன் வாணிகத் தொடர்புகொண்டிருந்ததால் பிறநாடுகளுக்குச்
சென்றனர். அதன் காரணமாகவும், பல்வேறு உலகியல் அறிவு நிரம்பியவர்களாக இருந்ததாலும்
“வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்” என்று ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் விதந்தோதினார்.
அயல்நாட்டுத்தொடர்புடைய
மாந்தர் பிறமொழி பேசுபவர்களாகவும் இருந்துள்ளனர். அயலகத்தார் வணிகம்பொருட்டுப் புகாரில்
இருந்ததால் பன்மொழி பேசுவோர் கலந்த வணிக இடமாக (
International Trading centre) இருந்துள்ளதைப்
பட்டினப்பாலை வழியாக அறியமுடிகின்றது.
“பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு,
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது,
உறையும்,
முட்டாச் சிறப்பின், பட்டினம்” - பட்டினப்பாலை (213-218)
என்னும் பாடலடிகள் பழங்காலத்தில் பன்னாட்டு
வணிகத்தளமாகப் புகார் விளங்கியதை விளக்கும் சான்றாவணமாக உள்ளன. இத்தகு புகழ்பெற்ற நகரையும்
அதுகொண்ட நாட்டையும் வலிமை வாய்ந்த அரசன் திருமாவளவன் ஆட்சிசெய்துள்ளான்.
திருமாவளவனின் வரலாறு
பட்டினப்பாலை
பூம்புகாரின் சிறப்பைக் கூறுவதுடன் அக்காலத்து அரசனான திருமாவளவனின் வரலாற்றையும் சுமந்து
நிற்கின்றது. கூர்மையான நகத்தினையும், வளைந்த வரிகளையும் உடைய புலிக்குட்டி கூட்டில்
வளர்வதுபோன்று இளமைப்பொழுதில் பகைவரின் சிறைக்கோட்டத்தில்
சிலபொழுது வாழ்ந்தான். பெருமைக்குரிய குணங்களைப் பெற்ற களிற்று யானை குழியில் வீழ்ந்தவிடத்து,
அக்குழியைத் தம் வலிமையால் தூர்த்துக் கரையேறிப் பிடியானையிடத்துச் சென்றது போல் தன்
அறிவால் பகைவரிடமிருந்து தப்பித் தம் அரசுரிமையைப் பெற்றான். யானை பிடிக்க விழைவார்
குழிவெட்டி வஞ்சகமாகப் பிடிப்பதுபோல் திருமாவளவனை
இளையனாக இருந்தபொழுது அவன் பகைவர் சூழ்ச்சியால் சிறைப்பிடித்தனர் என்பதை இந்த உவமை
வழியாக அறியமுடிகின்றது.
தமக்கு உரிமையான
தாயத்தைப் பெற்று ஆட்சி செய்ததுடன் மட்டும் அமையாமல் பகைவரின் நாடுகளைக் கவர்ந்து,
அவர்களின் மருதநிலத்து ஊர்களில் வாழ்ந்த குடிகளைத் துரத்தினான். அதன் காரணமாகக் கரும்பும்
செந்நெல்லும் விளைந்து குவளையும் நெய்தலும் மயங்கிக்கிடந்த வயல்களும் பொய்கையும் இப்பொழுது
அறுகம்புல்லும், கோரைப்புற்களும் வளர்ந்து இது வயல் அல்லது பொய்கை என்று அறியமுடியாதபடி
ஒன்றாகிக் கிடந்தன. அதனால் அத்தகு வளம்வாய்ந்த இடங்களில் மான்கள் விளையாடின.
பூம்புகாரில்
உள்ள பொது அம்பலங்களில் பகைநாட்டிலிருந்து கொணரப்பட்ட கொண்டி மகளிர் இறைத்தொண்டில்
ஈடுபட்டனர். எதிரிகளின் நாட்டில் முன்பு பூக்கள் எங்கும் படிந்து, கூத்தரின் முழவு,
யாழிசை கேட்டவண்ணம் இருக்கும். இன்று அவ்விடம் நெருஞ்சிமுள், அறுகம்புல்லுடன் மண்டிக்கிடக்க
நரிகள் ஊளையிடவும், கூகைகளுடன் கோட்டான்கள் கூப்பிடவும், ஆண்பேய்களுடன் பெண்பேய்களும்
மயிரைத் தாழவிட்டு நிறையவுமாக இருந்தது. இவற்றால் திருமாவளவனின் பகைநாடு அடைந்த ஊறு
ஒருவாறு புலனாகும்.
திருமாவளவன்
படைநடத்துவதற்கு முன்பாக அவன் பகைவர்நாட்டில் தலைவாயிலில் விருந்தினர்கள் இடையறாது
உண்டு மகிழ்ந்திருந்தனர். கிளிகள் மழலைமொழி பேசும். ஆவின்பால் சிறக்க இருக்கும். இன்று
கொடிய வில்லையுடைய வேடர்கள் பொருள்களைக் கொள்ளைகொண்டு போனமையால் நெற்கூடுகள் வறிதே
கிடக்கும். அதனுள் கூகைகள் நண்பகல்பொழுதிலும் குழறிக்கொண்டு இருக்கும். இவ்வாறு பகைவரின்
பகைநாடுகளைப் பாழ்படுத்தும் இவன் சினம் தணியாதவனாய் உலகத்தோர் பலபடியாகப் புகழும்படி
தாம் கருதியதைக் கருதியவாறு முடிக்கும் மனவலிமை பெற்றவன். திருமாவளவனின் வீரத்தின்
முன் பாண்டியர்கள், ஒளிநாட்டார், அருவாள நாட்டார், வடநாட்டு அரசர், குடநாட்டு அரசர்,
முல்லைநில வேந்தர், இருங்கோவேள் உள்ளிட்ட பகைநாட்டார் பல்வேறு இடுக்கண் எய்தினர்.
திருமாவளவன்
தன் நாட்டில் இருந்த காடுகளை வெட்டி நாடாகச் செய்தான். குளங்களை அகழ்ந்து வளம்பெறச்செய்தான்.
பெரிய மாடங்கள் அமைந்த உறையூரை விரிவுப்படுத்தினான். அங்குக் கோயில்களை எடுப்பித்துக்
குடிமக்களை நிலைபெறச்செய்தான்.
திருமாவளவன்
பகை மன்னர்கள் வீழ்ந்து வணங்கும்படியாகப் பேராற்றல் பெற்றிருந்தான். பகைவர் தலையில்
உள்ள பசுமணி உறிஞ்சப்பெற்ற வீரக்கழல் அணிந்த காலினை உடையவன். பொன்தொடி அணிந்த தம் மக்கள்
ஏறி விளையாடுதலானும், மகளிரின் முகைபோன்ற முலை புணர்தலால் செஞ்சாந்து அழியப்பெற்ற மார்பினையுடையவன்.
ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்தவனாகவும், வலிமையுடையவனாகவும் திருமாவளவன் இருந்தான்.
திருமாவளவன் பகைவர்மேல் ஓச்சிய வேலை விடக் கடியனவாக இருந்தன தாம் செல்லும் காட்டுவழி எனவும் அவனின்
செங்கோலைவிடக் குளிர்ச்சியாக இருந்தது தலைவியின் தோள் எனவும் தலைவன் கூறுவதாகப் பட்டினப்பாலை
நிறைவுகொள்கின்றது.
மிகச்சிறந்த
பெருமையுடைய திருமாவளவனால் ஆளப்பட்ட பூம்புகார்ப் பட்டினத்தைப் பரிசிலாகத் தந்தாலும்
தலைவியைப் பிரிந்து வாரேன் என்றமையால் தலைவியைப் பிரியும் பிரிவுக்கொடுமையை இந்நூலுள்
வைத்துப் பாலைத்திணையின் ஒழுக்கத்தை இந்த நூலில் உருத்திரங்கண்ணனார் சிறப்புடன் பாடியுள்ளார்.
பட்டினப்பாலை
அகவொழுக்கம் அறிய விழைவார்க்கு அதனை இலக்கியச்சுவையுடன் விளக்கும் நூலாகவும், யாப்பியல்
நுட்பம் அறிய விழைவார்க்கு வஞ்சிப்பா விராய ஆசிரியத்தால் அமைந்த செய்யுளாகவும் விளங்குகின்றது.
மேலும், பண்டைத்தமிழரின் வாழ்வியல் அறிய விழைவார்க்கு வாழ்வியல் விளக்கும் நூலாகவும்,
பண்டைக்கால வாணிகம் அறிய விழைவார்க்கு வாணிகம் அறிவிக்கும் நூலாகவும், வரலாறு அறிய
விழைவார்க்குக் காவிரியின் வரலாறு, திருமாவளவனின் வரலாறு தாங்கி நிற்கும் நூலாகவும்
விளங்கி நிற்கின்றது. மொத்தத்தில் தமிழர்களின் பண்டைக்காலத் தமிழ் ஆவணமாக இந்நூலைக்
குறிப்பிடலாம்.
1 கருத்து:
மிகவும் அருமையான படிக்க படிக்க சுவை குன்றாத பதிவு, பழந்தமிழர் குறித்து பலதும் அறிய முடிந்தது. நன்றிகள் !
கருத்துரையிடுக