நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 6 நவம்பர், 2011

ஆலந்தூர் கோ.மோகனரங்கன்


ஆலந்தூர் கோ.மோகனரங்கன்


ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் தமிழ்ப்பா புனைவதில் முத்திரை பதித்த பெரும் பாவலர் ஆவார். கிளை நூலகராகப் பணிபுரிந்தபடியே புகழ்பெற்ற பாக்களையும் இசைப்பாக்களையும் எழுதியவர். “தமிழ்க் கவிதைகளில் சந்த அமைப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் சிறப்பாய்வு” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் 01.06.1942 இல் சென்னையில்-ஆலந்தூரில் பிறந்தவர். பெற்றோர் கோ.மீனாம்பாள், மா.கோபால் ஆவர். ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் சென்னைத் தியாகராயநகர் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிக்கும்பொழுது புதிய பாதை என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தியவர். பள்ளி இலக்கிய மன்றச் செயலாளராகச் செயல்பட்டவர். மாணவப்பருவத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றவர்.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் தம் பதினெட்டாம் அகவையில் நூலகத்துறையின் பணியில் சேர்ந்தார். பணிசெய்துகொண்டே புலவர், பி.லிட்,முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாண்டுகள் முழுநேர ஆய்வாளராக இருந்து பேராசிரியர் இரா.குமரவேலனார் நெறிப்படுத்தலில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்.

ஆலந்தூரில் கவிதைவட்டம் என்னும் இலக்கிய அமைப்பை ஏற்படுத்தித் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கவிஞர்கள் வந்து கலந்துகொள்ளும் கவியரங்குகளை நடத்தியவர்.
நூறாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியில் ஈடுபட்டு, ஆறுமுக நாவலர், சுன்னாகம் குமாரசாமிப் புலவர், சபாபதி நாவலர், பரிதிமாற்கலைஞர், அரசஞ் சண்முகனார் ஆகியோரின் நூல்களை வெளியிட்டவர். அறிஞர் அண்ணா அவர்கள் 1942 முதல் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து முதல்முறையாக நூல்வடிவம் கொடுத்து 22 தொகுதிகளாக வெளியிட்டவர்.

மறைமலையடிகள், திரு.வி.க, கா.சு.பிள்ளை, மயிலை சீனி வேங்கடசாமி, பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களை மறுபதிப்பு செய்த பெருமைக்குரியவர்.

தமிழக அரசின் பாவேந்தர் விருது, குழந்தை இலக்கிய மாமணி, விஜி.பி. விருது, கவிவேந்தர், முத்தமிழ்க்கவிஞர் உள்ளிட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். இவர் எழுதிய பொன்னம்மா ஒரு புதுமைப்பெண் என்ற நாடகம் ஏ.வி.எம்.அறக்கட்டளையின் தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.

வணக்கத்திற்குரிய வரதராசனார் என்ற குழந்தை இலக்கிய நூல் தமிழக அரசின் முதல்பரிசைப் பெற்றது.

மலேசியா, தாய்லாந்து, மொரிசீயசு, உள்ளிட்ட அயல்நாடுகளுக்கு இலக்கியப் பயணமாகச் சென்று வந்துள்ளார்.

தில்லியில் உள்ள தேசியப் புத்தக நிறுவனத்தார் இவர்தம் கவிதைகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்த்துள்ளனர். ஞானபீட நிறுவனத்தார் இவர்தம் கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களின் பாடல்கள் பள்ளிப் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் பாட நூல்களே மட்டுமன்றிக் கருநாடக மாநிலத்தின் தமிழ்ப்பாட நூல்களிலும், சிங்கப்பூர், மலேசியா, மொரிசீயசு நாட்டுத் தமிழ்ப்பாட நூல்களிலும் இவர் பாடல்கள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.

ஆலந்தூர் மோகனரங்கன் வானொலியில் இசைப்பாடல்களையும் இசை நாடகங்களையும் எழுதிப் புகழ்பெற்றவர்.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களின் துணைவியார் பெயர் திருவாட்டி வசந்தா மோகனரங்கன். இவர்களுக்கு முனைவர் மோ.பாட்டழகன், மருத்துவர் கவிமணி, மருத்துவர் மோ.தேன்மொழி, மொ.வெற்றியரசி, மருத்துவர் மோ.அன்புமலர், மருத்துவர் மோ.கலைவாணன் என்னும் மக்கட் செல்வங்கள் உள்ளனர்.

“காலமெனும் மலையிடையே கவிதை ஒரு தேனருவி”, எனவும்

“ஆசைக்குப் பாடுவோரும்
அழகுக்குப் பாடுவோரும்
ஓசைக்குப் பாடுவோரும்
உணர்வுக்குப் பாடுவோரும்
பூசைக்குப் பாடுவோரும்
புலமைக்குப் பாடுவோரும்
காசுக்குப் பாடாரானால்
காலத்தை வென்று வாழ்வார்!”

எனவும் பாடியுள்ள வரிகள் இலக்கியச்செழுமை கொண்டன.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் நூல்களுள் சில:

1. ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள்
2. பள்ளிப் பறவைகள்
3. குப்பை மேட்டுப் பூனைக்குட்டி
4. வணக்கத்திற்குரிய வரதராசனார் கதை
5. இமயம் எங்கள் காலடியில்
6. கொஞ்சு தமிழ்க்கோலங்கள்
7. பொன்னம்மா ஒரு புதுமைப்பெண்
8. பொய்யே நீ போய்விடு
9. தமிழ்க் கவிதைகளில் சந்த அமைப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் சிறப்பாய்வு
10. நினைத்தால் இனிப்பவளே
11. இதயமே இல்லாதவர்கள்
12. இளைஞர்களுக்கு ஓர் எச்சரிக்கை
13. ஆலந்தூர் மோகனரங்கன் சிறுகதைகள்
14. கவிதை எனக்கோர் ஏவுகணை
15. குறுந்தொகையின் குழந்தைகள்(ஐக்கூ)
16. பிறர் வாழப்பிறந்தவர்கள்
17. ஆலந்தூர் மோகனரங்கன் மெல்லிசைப்பாடல்கள்
18. தாத்தாவுக்குத் தாத்தா
19. முத்தமிழ்க்கவிஞர் மோகனரங்கன் கவிதை நாடகங்கள்
20. கவிராயர் குடும்பம்
21. நாட்டு மக்களுக்கு நல்ல நாடகங்கள்


கோ.மோகனரங்கன் அவர்களின் அரிய ஆய்வேடு


மெல்லிசைப்பாடல்கள்

தொடர்புக்கு:

மோ. பாட்டழகன்
வசந்தா பதிப்பகம்
26, சோசப் குடியிருப்பு,
ஆதம்பாக்கம், சென்னை- 600081
பேசி
+ 044- 22530954

கருத்துகள் இல்லை: