[புலவர் வே. பதுமனார் வேலூர் மாவட்டம், குடியேற்றம் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். முத்தமிழ்ச் சுவைச் சுற்றம் என்ற அமைப்பினை ஏற்படுத்திக் குடியேற்றத்தில் தமிழ்ப்பணியாற்றி வருபவர். வள்ளலார் நெறியைப் பின்பற்றுபவர்; பன்னூலாசிரியர்; சொற்பொழிவாளர். தமிழியக்கம் என்ற அமைப்பின் பொருளாளராகவும் விளங்குபவர்]
வேலூர் மாவட்டம் குடியேற்றத்தை நினைக்கும்பொழுதெல்லாம் “முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்” என்னும் இலக்கிய அமைப்பை நிறுவித் தமிழ்த் தொண்டாற்றிவரும் புலவர் வே. பதுமனார் அவர்கள் என் நினைவில் நிலைபெறுவார்கள். அவ்வமைப்பை நேர்த்தியாக வளர்த்தெடுத்து, ஆண்டுதோறும் அறிஞர் பெருமக்களை அழைத்து ஒரு கிழமை இலக்கியத் திருவிழாவைப் புலவர் வே. பதுமனார் அவர்கள் செம்மாப்புடன் நடத்தி, சீர்த்திபெறுவது வழக்கம்.
நான் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றிக்கொண்டிருந்தபொழுது புலவர் வே. பதுமனார் அவர்களின் அழைப்பை ஏற்று இரண்டுமுறை முத்தமிழ்ச் சுவைச்சுற்ற இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டு, அவர்களின் அன்பைப் பெற்றுள்ளேன். நாட்டுப்புறப் பாடல்களைத் தரையிசைப் பாடல்கள் என்னும் தலைப்பமைத்து மக்கள் மன்றத்துக்கு அறிமுகம் செய்யும் பேறு புலவர் வே. பதுமனார் அவர்கள் வழியாகக் கிடைத்தது.
இலக்கிய நிகழ்வுகளில் புலவர் வே. பதுமனார் அவர்களைச் சந்திப்பதோடு அமையாமல் என் அன்பிற்குரிய மாணவர் சுகுமார் இல்லம் செல்லும்பொழுதும் (சுகுமார் அவர்களின் ஊரும் குடியேற்றமாகும்) மறவாமல் வே. பதுமனார் அவர்களைக் காண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். விருந்தோம்பலில் புலவர் கைதேர்ந்தவர். அன்புடன் வரவேற்றுப் போற்றுவார். சிலபொழுது சந்திக்கும் வாய்ப்பு அமையாத நிலையில் தம் மாணவர்களை அனுப்பிக் குடியேற்றத்தில் என்னை வரவேற்று மகிழ்வதையும் புலவர் அவர்கள் பலமுறை செய்துள்ளார்கள். கடந்த கால் நூற்றாண்டுக் காலம் பதுமனாருடன் பழகும் வாய்ப்புப் பெற்றமையை நினைத்து மகிழ்கின்றேன்.
புலவர் பதுமனாரின் “முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்” இலக்கிய அமைப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் குடியேற்றம் பகுதியில் அரிய தமிழ்ப்பணிகளைச் செய்து வருகின்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இலக்கிய விழாவில் அறிஞர் பெருமக்கள் பலர் கலந்துகொண்டு அருமையான இலக்கியப் பொழிவுகளையும் பட்டிமன்றங்களையும் நிகழ்த்துவது உண்டு. பேராசிரியர்கள், கல்வியாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் பலரும் முத்தமிழ்ச் சுவைச்சுற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளனர். அவ்வகையில் சாலமன் பாப்பையா, அப்துல் ரகுமான், அப்துல் காதர், கு. ஞானசம்பந்தன், நெல்லை கண்ணன் திருவாரூர் சண்முகவடிவேல் உள்ளிட்ட பெருமக்களின் உரைகளால் குடியேற்றத்தில் தமிழ்ப்பயிரின் விளைச்சல் அதிகம் எனலாம். புலவர் வே. பதுமனாரின் மாணவர்கள் இந்த விழாக்களை மிகச் சிறப்பாக நடத்தித் தம் ஆசிரியருக்குப் பெரும்புகழ் ஈட்டித் தருவதைக் கண்ணாரக் கண்டுகளித்துள்ளேன்.
புலவர் வே. பதுமனார் அவர்கள் மிகச் சிறந்த ஆசிரியர் ஆவார். மிகச் சிறந்த சொற்பொழிவாளர்; மிகச் சிறந்த தமிழ்ப்பற்றாளர்; நூலாசிரியர்; தமிழியக்கம் என்னும் அமைப்பின் பொருளாளர்; முத்தமிழ்ச் சுவைச் சுற்றத்தின் நிறுவுநர். வள்ளலார் வழியில் வாழ்க்கையை நெறிப்பட அமைத்துக்கொண்டவர். தம் தந்தையார் வழியில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை மிகச் சிறப்பாக நடத்திவருபவர். இத்தகு பெருமைக்குரிய வே. பதுமனார் அவர்களின் சிறப்புகளை இவண் தொகுத்து வழங்குவதில் மகிழ்கின்றேன்.
புலவர் வே. பதுமனாரின் தமிழ் வாழ்க்கை
புலவர் வே. பதுமனார் அவர்கள் 02. 04. 1936 இல் குடியேற்றத்தில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் சாமி. கு. வேலாயுதம் - இராசம்மாள் என்பனவாகும். வே. பதுமனாரின் இயற்பெயர் வே. பத்மநாபன் என்பதாகும். தொடக்கக் கல்வியைக் குடியேற்றம் நகராட்சி தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியைக் குடியேற்றம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும், ஆசிரியர் பயிற்சியை ஆர்க்காடு அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் பயின்றவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாகத் தமிழ் வித்துவான், முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழியாகக் கல்வியியல் இளையர்(B.Ed.) பட்டம் பெற்றவர். 1961 முதல் 1994 வரை 33 ஆண்டுகள் குடியேற்றம் திருவள்ளுவர் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராகவும், தமிழாசிரியராகவும், முதுகலைத் தமிழாசிரியராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். பல்லாயிரம் மாணவர்களுக்குப் பாடம் பயிற்றுவித்த பெருமை இவருக்கு உண்டு.
புலவர் வே. பதுமனார் அவர்கள் ஜெயக்கொடி அம்மையாரை 20.08.1964 இல் மணந்து, இல்லறப் பயனாய்ப் பொற்கொடி (இளநிலைப் பொறியாளர்), பவளக்கொடி(தமிழாசிரியர்), விசுவநாதன் (முதுநிலைப் பொறியாளர், இந்து ஆங்கில நாளேடு) ஆகிய மக்கள் செல்வங்களைப் பெற்று மாண்புற வாழ்ந்துவருகின்றார்.
புலவர் வே. பதுமனார் வகுப்பறைக்குள் பாடம் நடத்துவது மட்டும் தம் பணி என்று வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல் மக்கள் மன்றங்களில் உரையாற்றி, தமிழுணர்வு பரப்பிய தகைமிகு செம்மல் ஆவார். சங்கப் பனுவல்கள், திருக்குறள், வள்ளலார் பாடல்கள், பாவேந்தரின் தமிழுணர்வுப் பாடல்களை மக்களிடம் கொண்டுசேர்த்த அறிநெறிச் செம்மல் இவர். வானொலிகளில் இவர்தம் உரைகள் உலகை வலம் வந்துள்ளன. தொலைக்காட்சிகளில் தோன்றிப் பட்டிமன்றங்களைத் தலைமை தாங்கி நடத்திய பாங்கும் இவருக்கு உண்டு.
விருதுகளும் பெருமைகளும்
புலவர் வே. பதுமனார் அரசு சார்பிலும் பல்வேறு தகுதிமிகு அமைப்புகள் சார்பிலும் வழங்கப்பெற்ற விருதுகளை ஏற்று, அந்த விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர். அவ்வகையில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பெற்ற தமிழ்ச்செம்மல் விருது(2017), தூய தமிழ்ப் பற்றாளர் விருது(2020) குறிப்பிடத்தகுந்தவை ஆகும். வாணியம்பாடி முத்தமிழ்ச் சங்கம் சார்பில் வழங்கப்பெற்ற தமிழ்ப்பணிச் செம்மல் விருது, கவிக்கோ விருது(2022), புதுக்கோட்டை கம்பன் கழகம் வழங்கிய இலக்கிய மாமணி விருது முதலியன குறிப்பிடத்தகுந்த விருதுகளாகும்.
அயலகச் செலவு
புலவர் வே. பதுமனார் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஏற்றமிகு உரைகளையும் பொழிவுகளையும் வழங்குவதற்குச் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து முதலிய நாடுகளுக்குச் சென்றுவந்தவர்.
தமிழ் மொழிக்கும் இன மேம்பாட்டுக்கும் பயன்படும் வகையில் இவர் பல்வேறு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதித் தமிழ்ப்பணியாற்றியமை போல் பல்வேறு சிறப்பு மலர்களையும் வெளியிட்டுத் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். அவ்வகையில் இவர் உழைப்பில் வள்ளுவர் வழிநடப்போம்(1998), வெட்டுவானம் திரு. வி. க. நூற்றாண்டு விழா மலர்(1999), இந்தியக் குடியரசு பொன்விழா மலர்(2000), திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி பொன்விழா மலர் (2002), வி.ஐ.டி.வேந்தர் விசுவநாதனின் கல்வியின் மேலாண்மை (2007), குடியேற்றம் வள்ளலார் பள்ளிப் பவளவிழா மலர்(2010), மு. வ. நூற்றாண்டு விழா மலர் (2013), கல்விக்கோ கோ. விசுவநாதனின் முத்துவிழா மலர் (2018), கல்விக்கோ கோ. விசுவநாதனின் முத்துவிழாக் கவிமலர் (2018), குடியேற்றம் முத்தமிழ்ச் சுவைச்சுற்றம் அறக்கட்டளை வெள்ளிவிழா மலர் (2022) முதலிய மலர்களை வெளியிட்டுத் தமிழக வரலாற்றின் சில பக்கங்களை ஆவணப்படுத்தியுள்ளமை பாராட்டினுக்கு உரியது.
வேலூரில் வாழ்ந்துவரும் கல்விக்கோ கோ. விசுவநாதன் ஐயா நிறுவிய தமிழியக்கம் அமைப்பு உலகு தழுவிய அமைப்பு ஆகும். இதன் பொருளாளராக இருந்து, புலவர் வே. பதுமனார் அவர்கள் தம் முதுமைப் பருவத்தும் தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். நூற்றாண்டு விழாவினைக் கண்டு, தமிழன்னைக்குப் புகழ்சேர்க்குமாறு புலவர் பெருந்தகை வே. பதுமனாரைப் போற்றி வணங்குகின்றேன்.
வே. பதுமனார் தமிழ்க்கொடை
1. பொன்முடி தமிழ்த்துணைவன் 11 ஆம் வகுப்பு
– 1978
2. பொன்முடி தமிழ்த்துணைவன் 12 ஆம் வகுப்பு
– 1980
3. கட்டுரைத் தீங்கனிகள் – 1984
4. நடுத்தெரு நாகரிகம் – 1988
5. வள்ளுவர் வழி நடப்போம் உரைநூல் - 1989
6. பதுமனார் தமிழ்த்துணைவன் – 1990
7. அம்பலம் - 1997
8. கீத தாகம் – 1998
9. மாசுபடா மாரியம்மன் தாலாட்டுப் பாமாலை -
1998
10. தலைமேடை நாடகம் – 1998
11. வள்ளலார் வழங்கிய நித்திய கருமமும் சத்திய
தருமமும் - 2000
12. ஆசிரியர் நேற்று இன்று நாளை - 2001
13. சிறுகதைச் செல்வம் - 2001
14. நாக்கு நாகரிகம் - 2001
15. குடியேற்றம் கரும்புலியீசுவரர் தல வரலாறு
- 2004
16. எது ஏது ஏதேது – 2004
17. தமிழ்ச்சிமிழ் கவிதைத்தொகுப்பு - 2007
18. வாரியார் வழங்கிய வளர்தமிழ் - 2007
19. திருக்கோயில் திருநெறி - 2007
20. திருக்குறள் சொற்பொருள் அகராதி - 2013
21. கம்பன் கவியே கவி - 2013
22. இப்படியும் மனிதர்கள் - 2013
23. கல்வியின் மேலாண்மை - 2013
24. வேர்வையின் வெற்றி – 2013
25. வி.ஐ.டி வேந்தர் முத்துவிழா மலர் – 2000
26. சூட்டி மகிழத் தெளிதமிழ்ப் பெயர்கள் –
2014
27. வடமொழி வழக்கு தெளிதமிழ்ச் சொல் அகராதி
– 2014
28. வியர்வையின் வெற்றி – 2014
29. சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் –
2019
30. விழித்தால் விடியும் - 2019
31. வந்தவாறு வருமாறு (புலவர் தன் வரலாறு) -
2022
32. சிறகுகள் எங்கும் செந்தமிழ் மகரந்தம் –
2022
33. புறநானூற்று விழுமியங்கள் – 2022
34. அரனார் அருள்வேட்டல் – 2022
35. மணித்தமிழ்க் கட்டுரைகள் – 2024
36. நீதிக் கலங்கரை விளக்கம் - 2024
37. இது இப்படிதான் - 2024
38. கற்றதும் பெற்றதும் – 2025
குறிப்பு: இக்கட்டுரைக் குறிப்புகள், படங்களை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.