நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 11 ஜூன், 2011

பொற்கோவின் அயலகத் தமிழ்ப்பணிகள்



   தமிழ் இலக்கியம், இலக்கணம் கற்ற அறிஞர்கள் மொழியியல்துறையின் வல்லுநர்களையும் அவர்களின் கருத்துகளையும் ஏற்கத் தயங்குவார்கள். அதுபோல் மொழியியல்துறை வல்லுநர்கள் தமிழறிஞர்களைத் தாழ்த்திப் பார்ப்பது உண்டு. இந்நிலைதான் தமிழகத்தில் பலவாண்டுகளாக நிலவியது. இச்சூழலில் தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் முறையாகத் திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் கற்றும், மொழியியலை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பயின்றும் பேரறிவு பெற்றவர் பொற்கோ அவர்கள் ஆவார். தமிழறிஞராகவும், மொழியியல் அறிஞராகவும் இருதுறை சார்ந்த அறிஞர் பெருமக்களால் இன்று போற்றப்படும் உலக மொழியியல் அறிஞர் பொற்கோ ஆவார். இவரின் தமிழ்ப்பணிகள் பல தரத்தன. திறத்தன.

  தமிழகத்தின் பல பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள் இவரிடம் தமிழ் பயின்றமை போலவே, பிறநாட்டு மாணவர்களும் அறிஞர்களும் இவரிடம் தமிழ் பயின்றுள்ளனர். பன்னாட்டு அறிஞர்கள், ஆய்வாளர்களின் ஆய்வுரைகளை மதிப்பிட்ட பெருமையும் இவருக்கு உண்டு. உலக அளவில் புகழ்பெற்ற அறிஞர்களான எமனோ, சான் இரால்சுடன் மார், கமில்சுவலபில், சுசுமு ஓனோ உள்ளிட்டவர்களின் பெரும் மதிப்பிற்கு உரியவர்.

 பொற்கோ அவர்கள் பல நாடுகளுக்குச் சென்று அங்கு நடைபெற்ற தமிழாய்வுகளை அறிந்த பெருமைக்குரியவர். அதுபோல் பல நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்திய பெருமைக்கு உரியவர். இக்கட்டுரையில் அறிஞர் பொற்கோ அவர்களின் அயலகத் தமிழ்ப் பணிகள் சுருக்கமாக நினைவுகூரப்படுகின்றன.

இலண்டன் பணி

  அறிஞர் பொற்கோ அவர்கள் பல்கலைக்கழகக் கல்வியை நிறைவுசெய்த தம் இருபத்தொன்பதாம் அகவையில் (1970) இலண்டன் மாநகரில் உள்ள இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைக் கலையியல் ஆய்வு நிறுவனத்தில் ஆசிரியப் பணியாற்றிய பெருமைக்குரியவர். இரண்டாண்டு காலம் இலண்டனில் தங்கிப் பொற்கோ அவர்கள் தமிழ்ப்பணியாற்றினார். முனைவர் சான் இரால்சுடன் மார் அவர்கள் முனைவர் பொற்கோ அவர்களின் கல்வியார்வம் அறிந்து, இலண்டனில் பணியாற்றுவதற்கு அழைத்துச் சென்றவர்.

  முனைவர் மார் அவர்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் முதன்முதல் சங்க இலக்கியத்தை முனைவர் பட்டத்திற்கு உட்படுத்தி ஆய்வு செய்த பெருமகனார் ஆவார். முனைவர் மார் அவர்களும் அறிஞர் பொற்கோ அவர்களும் இணைந்து இலண்டனில் தமிழ் பயிலுவதற்குரிய உயரிய சூழலை ஏற்படுத்தினர். இவர்களிடம் சற்றொப்ப நாற்பது மாணவர்கள் ஒரே காலத்தில் தமிழ் கற்றனர். இவ்வாறு கற்றவர்கள் யாவரும் பிற துறைசார்ந்தவர்கள். இலண்டன் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வுக்கூடத்தில் பொற்கோ நடத்திய பாடங்கள் பலமணிநேர ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பெற்று இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. பொற்கோ அவர்கள் உருவாக்கிய பாடம்தான் பல்லாண்டுகளாக  அங்கு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது.

  இலண்டனில் தமிழாய்விலும் மொழியியல் ஆய்விலும் ஈடுபட்ட பலருக்கு முனைவர் பொற்கோ அவர்கள் உதவியுள்ளார். ரெடிங் பல்கலைக்கழகத்தில் ஒரு மாதம் பயிற்றுவிக்கப்படும் “இன்டன்சிவ் கோர்சு” எனும் இந்தியாவுக்கு வரும் ஆங்கிலேயர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியையும் பொற்கோ அவர்கள் ஈடுபாட்டுடன் செய்துள்ளார்.

  ஆக்சுபோர்டு, கேம்பிரிட்சில் பல சிறப்புரைகளைப் பொற்கோ அவர்கள் வழங்கியுள்ளதுடன் ஆய்வாளர்களின் ஆய்வுகளுக்கு ஊக்கமாக உதவியுள்ளார். இங்கிலாந்து முழுவதும் நடைபெற்ற தமிழ், வரலாறு, தத்துவம், மொழியியல், இலக்கியம் சார்ந்த ஆய்வேடுகளைப் படித்து, ஆய்வேட்டுச் செய்திகள் வெளியுலகுக்குத் தெரிய அவற்றை இலண்டன் பி.பி.சியின் வழியாக அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளார். இவ்வாறு இவர் இலண்டனில் பி.பி.சியில் ஆற்றிய உரை(1972) நூலாக வெளிவந்துள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட உரைகள் இடம்பெற்றுள்ளன. இலண்டனில் பணிபுரிந்த காலத்தில் பிரிட்டிசு கவுன்சில் நூலகத்திற்கு நாளும் சென்று பயிலும் பழக்கத்தைக் கொண்டிருந்ததால் அங்குப் பணியாற்றிய பலரும் பொற்கோவை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

  இலண்டனில் பொற்கோ இருந்த காலத்தில் இலண்டன் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு மிகுந்து, சங்கம் இரண்டு அணியாக இருந்தது. நீதிமன்றம் செல்லும் நிலையில் இருந்த இரண்டு பிரிவினரையும் பொற்கோ அழைத்து (திரு.செல்வநாயகம் உதவியுடன்) ஒன்று சேர்த்த பெருமைக்குரியவர். இதற்குக் கோவை செழியன் அவர்களும் உதவியாக இருந்துள்ளார். இலண்டன் சேகர், கேப்டன் பதி உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்புடன் சங்கத்தினர் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாயினர். இந்த நிகழ்வுகள் யாவும் இலண்டன் தமிழ்ச்சங்க மலரின் பதிவாகியுள்ளது. தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் இணைந்தபிறகு முறையான தேர்தல் நடைபெற்றுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவரை தலைமைப் பொறுப்பில் இருந்த பொற்கோ முறையான தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தாம் அப்பொறுப்பிலிருந்து விலகினார். அதன் பிறகு இலண்டன் தமிழ்ச்சங்கத்தின் புரவலராகப் பணியாற்றினார். தமிழ்ச்சங்கத்தின் மலர் வெளியீட்டிற்குத் தரமான ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து வழங்கி இலண்டன் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றார்.
இங்கிலாந்தில் பொற்கோ அவர்கள் இருந்தபொழுது ஐரோப்பிய நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளார். பொதுவுடைமை நாடுகளுக்கு மட்டும் செல்லவில்லை.

பொற்கோவின் அமெரிக்கப் பயணம்

  யுனெசுகோ நிறுவனம் அமெரிக்காவில் நடைபெறும் இலக்கியம், இலக்கணம், மொழியியல் ஆய்வுகளைப் பார்வையிட அறிஞர் பொற்கோ அவர்களை அனுப்பி வைத்தது (1973). நோக்குநிலை ஆய்வாளராக (Visiting Fellow) சென்ற முனைவர் பொற்கோ அவர்கள் நாட்டுப்புறவியல், இதழியல் துறை சார்ந்த ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார். நியூயார்க் பல்கலைக்கழகம், சிக்காகோ அருகில் உள்ள வடமேற்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைப் பார்வையிடும் வாய்ப்புப் பெற்றார். அவ்வாறு சென்ற பொழுது வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையினருடன் நெருங்கிப் பழகும் சூழல் அமைந்தது. அவர்களின் விருந்தினராகத் தங்கும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு நடந்த புதுக்கவிதை (New Poetry) வகுப்புகளையும் கவனித்தார். இங்கு செர்மனியிலிருந்து வந்து, புதுக்கவிதையைக் கற்பித்த ஆசிரியர் மரபுவழிப் பட்டங்களைப் பெறாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொற்கோ அவர்கள் வடமேற்குப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பாடங்களையும் மாணவர்களுக்கு நடத்தியுள்ளார்.

  பொற்கோ அவர்களின் அமெரிக்கப் பயணத்தில் பழம்பெருமை கொண்ட நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அப்பொழுது நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி அங்கு நடந்துள்ளது. அமெரிக்காவின் கல்விப் பயணத்தை முடித்துக்கொண்டு பொற்கோ அவர்கள் திரும்பி வரும்பொழுது இலண்டனில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது பொங்கல் விழா நடந்தது. மலர் வெளியிட்டனர். தந்தை பெரியார் படத்தைத் திறந்துவைத்து, பெரியார் பற்றி பொற்கோ அவர்கள் இலண்டன் தமிழ்ச்சங்கத்தில் உரையாற்றினார்.

மலேசியப் பயணம்

 மலேசியாவின் மலேயா பல்கலைக்கழகத்தின் புறநிலை அறிவுரைஞராகவும் பாடத்திட்ட மேம்பாட்டுக்கான ஆய்வு அறிஞராகவும் அப் பல்கலைக்கழகத்திற்குப் பொற்கோ சென்றுள்ளார். மேலும் மலேசியாவின் சோகூர் பாரு என்னும் ஊரில்  இலக்கணத்திற்காக நடைபெற்ற ஒரு பணிமனையில் முதன்மையானவராக இருந்து நடத்திக்கொடுத்துள்ளார். மேலும், சிங்கப்பூர் கல்வி அமைச்சின் அழைப்பின்பேரில் இருமுறை சென்று சிறப்பு வகுப்புகள் நடத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்கப் பயணம்

  பொற்கோ அவர்கள் தென்னாப்பிரிக்க நாட்டுக்கும் கல்விப் பயணமாகச் சென்றுள்ளார். டர்பனில் நடைபெற்ற தமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாட்டுக்கு மையக் கருத்துரை வழங்கும் சிறப்பு அறிஞராகப் பொற்கோ அழைக்கப்பட்டார். அப்பொழுது முனைவர் பொற்கோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  தென்னாப்பிரிக்காவில் பொற்கோ அவர்கள் வழங்கிய பேச்சு அங்குக் குழுமி இருந்த மக்களிடம் ஒரு பெரிய எழுச்சியை உண்டாக்கியது. இந்தப் பயணத்தின்பொழுது டர்பன் பல்கலைக்கழகமும் சென்னைப் பல்கலைக்கழகமும் கல்விசார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அதற்குக் காரணமானவர் முனைவர் பொற்கோ அவர்கள் ஆவார். அதுபோல் மலேயா பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெறவும் பொற்கோ அவர்கள் காரணமாக இருந்துள்ளார். இந்த ஒப்பந்தங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டால் இரு நாட்டுக்கும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் சென்றுவர வாய்ப்பு உருவாகும்.

தமிழ் - சப்பானிய மொழியாய்வில் பொற்கோவின் பங்களிப்பு

  திராவிட மொழிகளுக்கும் சப்பானிய மொழிக்கும் இடையில் நெருங்கிய உறவு உள்ளது என்ற கருத்து சப்பானிய அறிஞர்கள் பலரால் 1975 அளவில் முன்வைக்கப்பட்டது. சப்பானிய மொழியறிஞர் சுசுமு ஓனோ அவர்கள் இந்த ஆய்வை மிகச்சிறப்பாக வளர்த்தெடுத்தார். சுசுமு ஓனோ அவர்கள் ஆற்றிய உரை ஆசகி இதழில் ஒரு கட்டுரையாக வெளிவந்தது. அக்கட்டுரையின் சுருக்கம் ஒன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் ஜி.ஆர். தாமோதரன் அவர்களுக்குச் சப்பானில் உள்ள இந்தியத் தூதரகம் அனுப்பி வைத்தது. துணைவேந்தர் அவர்களின் அறிமுகத்துடன் முனைவர் பொற்கோவும், சுசுமு ஓனோவும் இணைந்து 1979 முதல் ஓராண்டுக் காலம் அஞ்சல் வழியாகச் தமிழ்-சப்பானிய ஆய்வு குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். இது பற்றி பொற்கோ அவர்களைக் கண்டு பேச சுசுமு ஓனோ சென்னை வந்தார். இரண்டு நாள் கலந்து பேசிய சுசுமு ஓனோ டோக்கியோவிற்குச் சென்றார். அதன் பிறகு பொற்கோ, ஓனோ ஆய்வுத்தொடர்பு வலுப்பெற்றது. 1982 இல் சப்பானில் டோக்கியோவில் நடந்த அனைத்துலக மொழியியலார் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி சுசுமு ஓனோ அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று, பொற்கோ அவர்களும் கலந்துகொண்டார்.

  சாப்பான் சென்ற பொற்கோ “திராவிட மொழிகளுக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள மொழித்தொடர்பு” என்ற பொருளில் உரையாற்றினார். இவ்வாறு ஆற்றிய உரை சப்பான் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து சப்பானிய மொழிக்கும். சிறப்பு நிலையில் மொழிபெயர்க்கும்படி வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆய்வுரை முடிந்ததும் பன்னாட்டு ஆய்வறிஞர்களும் பல்வேறு வினாக்களை எழுப்பினர். பின்னர் நிகழ்ந்த தனிக் கலந்துரையாடல்கள் வழியாகவும் தமிழ் சப்பானிய மொழித்தொடர்பு பொற்கோவால் முன்வைக்கப்பட்டது. இந்தச் செய்திகள் இதழ்கள் வழியாகப் பலரின் பார்வைக்குச் சென்றன. 1982 இல் தமிழ் சப்பானிய ஒப்பாய்வு மிகச்சிறப்பான வளர்ச்சி நிலை கண்டது.

காக்சூயின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பொற்கோ

  சப்பானில் உள்ள காக்சூயின் பல்கலைக்கழகத்தின் அழைப்பின்பேரில் விருந்துநிலைப் பேராசிரியராக முனைவர் பொற்கோ அவர்கள் டோக்கியாவுக்கு 1990 இல் சென்று பிப்ரவரி, மார்ச்சு ஆகிய இரண்டு மாதங்களில் ஓனோ அவர்களுடன் தங்கித் தமிழ்-சப்பானிய ஆய்வைத் தொடர்ந்தார். இவ்வாறு தங்கியிருந்தபொழுது இதுவரை நடந்துள்ள தமிழ்-சப்பானிய மொழித்தொடர்பு பற்றிய ஆய்வுகள் அனைத்தையும் படித்து முடித்தார். நாள்தோறும் ஓனோ அவர்களுடன் உரையாடி இந்த ஆய்வு சிறக்க பொற்கோ வழிகாட்டியுள்ளார். இந்த இரண்டு மாதங்களில் பொற்கோ வழங்கிய 1. தமிழ் சப்பானிய மொழிகளில் மிதவை ஒட்டுகள், 2. தமிழ் சப்பானிய மொழிகளில் யாப்பு என்னும் ஆய்வுரைகள் சிறப்பிற்குரியனவாகும்.

  தமிழுக்கும் சப்பானுக்கும் மொழி வழி ஒப்புமை உள்ளதோடு இலக்கிய வழியிலும் வியக்கத்தக்க வகையில் ஒப்புமைகள் உள்ளதைப் பொற்கோ கண்டு காட்டினார். சங்க இலக்கியத் தொகுப்புப் போல் சப்பானில் “மங்யோஷூ” என்று ஒரு தொகை இலக்கியம் காணப்படுகின்றது. மேலும் பண்பாட்டு வழியிலும் ஒப்புமை காணப்படுவதை ஓனோ அவர்களுடன் இணைந்து பொற்கோ கண்டுபிடித்துள்ளார்.

  1993 இல் மீண்டும் பொற்கோ சப்பானுக்கு ஆய்தகைப் பேராசிரியராக அழைக்கப்பட்டார். அப்பொழுது தமிழ் சப்பானிய ஆய்வின் வளர்ச்சி நிலையை விளக்கி ஆங்கிலத்தில் 100 பக்க அளவில் பொற்கோ அவர்கள் ஒரு எழுத்துரையை உருவாக்கினார். 1996 இல் மீண்டும் பொற்கோ ஆய்தகைப் பேராசிரியராக அழைக்கப்பெற்றார். 1999 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் தமிழ் சப்பானிய மொழி ஆய்வு குறித்து விரிவான கலந்தாய்வரங்கம் டோக்கியோவில் காக் சூயின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

  தமிழ் சப்பானிய மொழிகளுக்கு இடையே உள்ள உறவைத் தக்க சான்றுகளுடன் நிறுவியதால் ஓனோ அவர்களும் பொற்கோ அவர்களும் தமிழக மக்களாலும் சப்பானிய மக்களாலும் போற்றப்படும் பெருமைக்கு உரியவர்கள் ஆனார்கள். தமிழ் சப்பான் மொழிகளுக்கு இடையே உள்ள உறவைச் சப்பானிலும் தமிழகத்திலும் அறிவுப்பூர்வமாக அறிமுகப்படுத்திய பெருமை முனைவர் பொற்கோ அவர்களுக்கு உண்டு.

  முனைவர் பொற்கோ அவர்களின் அயலகத் தமிழ்ப் பயணங்கள் தமிழின் சிறப்பைப் பிற நாட்டினர் அறியவும், அயல்நாட்டில் தமிழாய்வுகள் தழைக்கவும் உதவியுள்ளன.

----------------                    ---------------------------                --------------------                ----------

  **சென்னைத் தேவநேயப்பாவாணர் நூலகக் கட்டடத்தில் இன்று (11.06.2011) நடைபெற்ற பொற்கோ 70 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வெளியிடப்பெற்ற ஆய்வுலகில் பொற்கோவின் பாதையும் பயணமும் என்ற நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை.

நூல் வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்,சென்னை
பதிப்பாசிரியர்கள்: முனைவர் தங்க.மணியன்,முனைவர் ஒப்பிலா.மதிவாணன்

கருத்துகள் இல்லை: