நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 31 மார்ச், 2007

தமிழ் மாணவர்களுக்குத் தமிழில் கலந்துள்ளஅயல்மொழிச் சொற்களை அடையாளம் காட்டல்

தமிழ்மொழி பல நூற்றாண்டுக்காலப் பழைமையைக் கொண்டது. தமிழ்மொழியிலிருந்து பல்வேறு மொழிகள் கிளைத்து, வளர்ந்துள்ளதைத் தமிழ்மொழியையும், பிறமொழிகளையும் ஆராய்ந்த மொழியியல் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழிலிருந்து கிளைத்த மொழிகள் (தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வன) பிறமொழிச் சொற்களின் கலப்புடன் வழங்குகின்றன. அயற்சொற்களின் கலப்பின்றி அம்மொழிகளை வழங்கமுடியாதபடி அம்மொழிகளின் நிலை உள்ளது. ஆனால் பிறமொழிச்சொற்களின் கலப்பின்றித் தமிழால் தனித்தியங்க முடியும் என்று கால்டுவெல் பெருமகனார் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தமிழர்களின் விழிப்பின்மையாலும், மொழிக்காப்பு உணர்வு இன்மையாலும், போலி நாகரிகப்போக்கினாலும் தமிழ்மொழியில் இன்றைக்குப் பல்வேறு மொழிகளின் கலப்பு அமைந்துள்ளது. தமிழில் ஏறத்தாழ இருபத்தைந்து மொழிகளின் சொற்கள் கலந்துள்ளதாகவும், நாம் வழங்கும் தமிழ்ச்சொற்களில் எண்பது விழுக்காடு அயற்சொற்கள் மலிந்துள்ளன என்றும் பேராசிரியர் ப. அருளி அவர்கள் குறிப்பிடுவார்.தமிழகத்தின் மீது வேற்றவர்களின் வல்லாண்மை ஏற்பட்டபொழுதெல்லாம் அது மொழி, இன, நாட்டு, பண்பாட்டில் பல தாக்கங்களை ஏற்படுத்தின. அத்தகு சூழலிலெல்லாம் இயன்ற வகைகளில் நம்முன்னோர் தமிழ் மொழியைப் பாதுகாத்து வளர்க்கத் திட்டமிட்டுள்ளனர். வடசொற்களை வழங்க நேர்ந்தபொழுது "வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ' (வட எழுத்து நீக்கி) எழுதினர். சில இடங்களில் வடசொற்களைத் தமிழ்ப்படுத்தி வழங்கும் போக்கும் நிலவியது (கம்பன் இரணியனைப் பொன்னன் எனவும், பண்டிதமணியார் "அர்த்தசாத்திரம்' என்பதைப் "பொருணூல்' எனவும் தமிழ்ப்படுத்தி வழங்கியதை நோக்குக).மொழிக்காப்பு முயற்சி என்பது இயல்பாகத் தொடங்கப்பெற்றது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொழிக்காப்பு உணர்வு மறைமலையடிகளாரால் தனித்தமிழ் இயக்கமாக வளர்ந்தது.மறைமலையடிகளார் வழியில் நீலாம்பிகையார், பாவாணர், பெருஞ்சித்திரனார் வழி வளர்ந்து நிற்கும் தமிழ்ப்பணி மு. தமிழ்க்குடிமகனார், பா. வளன்அரசு, இரா. இளவரசு முதலானவர்கள் காலத்தில் மக்கள் மன்றங்களை நோக்காக வைத்து வளர்ந்தது. பேருந்து, விளம்பரப்பலகை, கோயில் போற்றி, தமிழ்வழிக்கல்விப் போராட்டம், செம்மொழி அறிவிப்புப் போராட்டம், திரைப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டல், மாந்தர் பெயர் மாற்றம் எனத் தமிழ்க்காப்பு வேலைகள் பலதிறத்தனவாக அமைந்துள்ளன.தமிழ்ச்சொற்களை உருவாக்கல், பழஞ்சொற்களைப்பதிவு செய்தல், வழக்குச் சொற்களைத் தொகுத்தல் எனச் சொற்காப்பு - வளர்ச்சிப்பணிகள் நூல்தொகுப்புகளாகவும், அகர முதலிகளாகவும், உரைகளாகவும் இருக்கின்றன. இதிலிருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல, தமிழ்ச்சொற்களைப் பரப்பும் பணியைத் தொடக்கப் பள்ளிகளிலேயே தொடங்க வேண்டியுள்ளது.தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் அமையும் தமிழ்ப்பாடங்கள் பெரும்பாலும் சடங்குத் தன்மையுடன் அமைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. வழிபாட்டுப்பாடல்கள், மறுமலர்ச்சிப் பாடல்கள், காப்பியங்கள், கட்டுரைகள், அரிய இலக்கணக் குறிப்புகள், மொழியியல் செய்திகள் (கல்லூரிகளில்), பேச்சுப்பயிற்சி, கட்டுரைப்பயிற்சி எனத் தமிழ்ப்பாடங்களின் உள்ளடக்கம் அமைந்துள்ளது. இவற்றினிடையே "அறிவியல்தமிழ்' என்ற அமைப்பில் அறிவியல் செய்திகள், குறிப்புகள், சொற்கள் தமிழ்ப்பாட நூல்களின் வழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப்பாட அமைப்புகளை மறுஆய்வுக்கு உட்படுத்தி எளிமைப்படுத்தும் முயற்சி தேவை. ஆட்சியாளர்களைக் கவனத்தில் கொண்டு பாடநூல் ஆயத்தம் செய்வதை விடுத்தல் வேண்டும். குமூகத்தில் புகழ் பெற்றவர்களிடம் பயன்நோக்கி அவர்தம் படைப்புகள் நூலாவதும் உண்டு. புத்தகச் சந்தையினரின் கழிவுகளுக்கு விலைபோகும் சில கல்வியாளர்கள், தமிழ்ப் பண்பாட்டிற்குப் புறம்பான நூல்களைப் பாட நூல்களாக்கியுள்ளதையும் கூர்ந்து நோக்கும் போது உணர முடிகிறது. நல்ல மாந்தப்பண்புகளைத் தாங்கிய அடுத்த தலைமுறையை நினைவில் கொண்டு பாடநூல்கள் இயற்றப்பட வேண்டும். ஒவ்வொரு இனமும் படிப்பின் வழியாகத் தன் அடையாளங்களையும், அறிவுத் தொடர்ச்சிகளையும் தன் பிறங்கடைகளுக்கு (சந்ததிகளுக்கு) உணர்த்த நினைக்கின்றது. இந்நிலையில் செய்தித்தாள், வானொலி, பண்பலை வானொலி (எப்.எம்.), தொலைக்காட்சி, திரைப்படம், அரசியல் துறையினரிடமிருந்து தமிழைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம்.ஊடகங்களில் தமிழ்ச்சிதைவு :அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகத்தொடர்பின் அடிப்படையில் செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் முதலானவற்றை மக்கள் நாள்தோறும் பயன்படுத்துகின்றனர். இவ்வூடகங்கள் மொழிச்செப்பம் பற்றிய கவலை துளியும் இல்லாமல் இயங்குகின்றன. அயற்சொற்களை முறையின்றிக் கலந்தும், செம்மைச் சொற்களைப் பலவாறு திரித்தும், கூட்டியும், குறைத்தும் எழுதிவரும் - பேசிவரும் போக்கினை அறிய முடிகின்றது. இவற்றை அடையாளம் கண்டு, அவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் முகத்தான் தொடக்கநிலையிலிருந்து மாணவர்களுக்கு இவற்றைக் கல்வித்தகுதிக்கு ஏற்ப அறிமுகம் செய்ய வேண்டும். ஊர் ஊராகச் சென்றோ, நாடு நாடாகச் சென்றோ, கண்டம் விட்டுக் கண்டம் கடந்தோ, இப்பணிகளைக் கையில் எடுப்பதைவிடத் தொடக்கப் பள்ளிகளில் பாடநூல்களில் செய்வதன்வழி உலகம் முழுவதும் இப்பணி விரிவடையும். தொடக்கத்தில் இச்செய்தி பதியம்போடப்படுவதால் பசுமரத்தாணி போல் மாணவர்களின் நினைவில் நிற்கும்.இன்றைய தொடக்கப்பள்ளிப் பாடநூல்களில் இடம்பெறும் பாடல்கள், கட்டுரைகள் முதலிய யாவற்றிலும் வேற்றுமொழிச் சொற்கள் அளவின்றி விரவியுள்ளன. இவ்வாறு வேற்றுமொழிச் சொற்கள் கலந்துள்ள பழம்பாடல்களைப் பாடத்திட்டத்தில் அமைக்கும்பொழுது அயற்சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டித் தனியாக அடையாளம் காட்டலாம் (இலக்கணக் குறிப்புகள் தருதல்போல). அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களைத் தரலாம். அதுபோல் அயற்சொல் விரவாத தூயதமிழில் படைப்புகளை உருவாக்கும்படி படைப்பாளர்களை வேண்டலாம். அல்லது தரமான படைப்புகளை உருவாக்குவோரிடமிருந்து படைப்புகளைப் பெற்று, அவற்றில் இடம்பெற்றுள்ள அயற்சொற்களை அவர்களின் இசைவுடன் நீக்கலாம். இன்றைய பாடநூல்களில் அயற்சொற்களின் நிலை :தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை அமைந்துள்ள தமிழ்ப்பாட நூல்களில் அயற்சொற்கள் மிகுதியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு (நெஞ்சில் நிறுத்துங்கள், பக்கம் 75 (2001)ப் பாடநூலிலும், சென்னைப் பல்கலைக்கழக இளநிலை இரண்டாம் ஆண்டுப் பாடநூலிலும் அயற்சொற்கள் அறிமுகம் எனும் பகுதி இடம்பெற்றுள்ளது. இவற்றுள் கல்லூரி நிலையில் மாணவர்களுக்கு அயற்சொற்கள் அறிமுகப் பகுதியை நடத்தும்பொழுது ஆர்வமுடன் மாணவர்கள் கேட்கின்றனர். மகிழ்ச்சியுடன் பங்குபெறுகின்றனர். தாம் இதுவரை கேட்ட சொற்கள் யாவும் பிறமொழிச் சொற்களா என அறிந்து வியக்கின்றனர். அவ்வாறு மாணவர்களைப் பாடத்தை நோக்கி ஈர்க்க அவர்களின் வழக்கத்தில் அன்றாடம் பயன்கொள்ளும் சொற்களைச் சான்றுகாட்டி ஆர்வத்தை மேலும் தூண்டவேண்டும். மாணவர்களின் பயன்பாட்டில் உள்ள பலதுறைச் சொற்களையும் ஒவ்வொரு வகுப்பில் பயிலும் மாணவர்களின் அறிவுத் திறனுக்குத் தக்கபடி அறிமுகம் செய்யலாம்.புதுவகைச் சொற்களை அறிமுகம் செய்யும் பொழுது வழக்கத்திற்குக் கொண்டு வரும் வண்ணம் புதுவகை நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக வகுப்பறைகளில் உள்ள மாணவர்களின் பெயர்கள் தூயதமிழ்ப் பெயர்களாகவும், பிறமொழிச் சொல்லாகவும் இருப்பதைப் பட்டியலிட்டு வரிசைப்படுத்தலாம். பிறமொழிச்சொற்களைப் பெயராக வைத்துள்ளவர்களுக்குக் குறைந்த அளவு தம்பெயர் அயல்மொழிச் சொல்லாக உள்ளமையை நினைவுப்படுத்தலாம். விரும்பினால் பிறமொழிச் சொற்களை நீக்கித் தமிழ்ப்பெயராக வைத்துத் தொடர்ந்து அப்பெயர் வழங்குவதற்குரிய வழிகளைச் சொல்லலாம். அல்லது தமிழ் மரபுக்கு ஒவ்வாத வகையில் எழுதுவோர்களைத் தவறு காட்டி நல்வழிப் படுத்தலாம். இவ்வாறு இளம் அகவையில் தொடக்க வகுப்புகளில் மாணவர்களிடம் பிறமொழிச் சொற்களை அறியும் ஆர்வத்தை உண்டாக்கினால் வளர்ந்துவரும் சூழலில் தத்தம் துறைகளில் தமிழல்லாத பிறமொழிச் சொற்களை நீக்கிப் புதுச் சொல் கொணரும் வேட்கை உண்டாகும். இவ்வாறு வேற்றுமொழிச் சொற்களைப் பற்றிய ஓர் எழுச்சியை மொழிப்பயன்பாட்டில் உருவாக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.இன்றையத் தொடக்க வகுப்புப் பாட நூல்களில் சில தூயதமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை நன்றியுடன் சுட்டியாக வேண்டும். ஒன்றாம் வகுப்புப் பாட நூலில் ஆயத்தம், வண்ணக்கலவை, பேருந்து நிலையம், பேசி, கணினி, கொடிமுந்திரி முதலான சொற்கள் இடத்திற்கேற்ப எளிய முறையில் ஆளப்பட்டுள்ளன. இவ்வாறு ஆளப்பட்டதால் தொடக்கவகுப்பு மாணவர்கள் மருள்வார்கள் என்று சொல்லமுடியாதபடி இச்சொற்களின் பயன்பாடு உள்ளது. அதே ஒன்றாம் வகுப்புப் பாடநூலில் வசனம், துட்டு, தகவல், ரேகை, வனம், சூரியன், பசு, சர்க்கஸ், ஆப்பிள், சீக்கிரம், பாபு, மேகம், ஆதவன் முதலான பிறமொழிச் சொற்கள் ஆளப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தும் பொழுது கவனமுடன் செயல்பட்டு இருந்தால் பிறமொழிச்சொற்கள் கலவாத பாடநூலாக ஒன்றாம் வகுப்புப் பாடநூலை உருவாக்கி இருக்கலாம். இதற்குப் பாடநூல் உருவாக்கும் குழுக்களில் மொழிப்பற்றும், இலக்கணப் புலமையும், புதிய அறிவார்வம் கொண்டவர்களும் இடம்பெறுவது மிகத்தேவை. அதுபோல் ஒன்றாம் வகுப்புப் பாடநூலில் தமிழ் மாதங்கள் என்று இடம்பெறும் பன்னிரு மாதப்பெயர்களும் சமற்கிருதச் சொற்களாக உள்ளன. இவற்றைப் பிறமொழிச் சொல்லாகக் காட்டி, இவற்றிற்குரிய தமிழ் மாதச் சொற்களை இணைத்துக் காட்டும்பொழுது உலகம் முழுவதும் தமிழ்ச்சொற்கள் எளிதில் பரவும். தமிழ்ப்பாடம் உருவாக்கும்பொழுது கிரந்த எழுத்துக்களை ஸ, ஜ, ­, ஹ என்று அறிமுகம் செய்வதுபோல் தொடக்க வகுப்புகளில் அயற்சொற்களை அறிமுகம் செய்வது மிகுபயன் தரும்.மூன்றாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் இடம்பெற்றுள்ள அயற்சொற்களை நோக்கும்பொழுது பாடநூல் தமிழ்ப்பாடநூலா அல்லது அயல்மொழிச் சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டும் அகரமுதலியா என்ற வினா எழும் வண்ணம் பாடநூல் உள்ளது. மூன்றாம் வகுப்பு நூலில் பல்வேறு துறை சார்ந்த பிறமொழிச் சொற்கள் மண்டிக்கிடக்கின்றன. இவற்றுள் சிலவற்றைக் குறிப்பதன் வழி நம் பாடநூல்களில் தமிழ் அல்லாத பிறமொழிச்சொற்களின் தாக்கம் எவ்வளவு என்பது புரியும். சிங்காரம், கலா, வசந்தி, கமலா, அர்ச்சனா, பீட்ரூட், பாத்திரம், பேனா, வாரம், பயணம், சன்னல், மாதம், நளினி, மனிதர், பலூன், பசுக்கள், சிங்கம், கோபம், பயம், கேலி, தந்திரம், மாலா, கவிதா, அபாயம், சுத்தம், சேமிப்பு, தினம், கிராமம், ஆத்திரம், பாவம், பென்சில், பாத்திரங்கள், குல்லாய், நட்சத்திரம், யோசித்தன, பாபு, ரஹீம், தாணியம், கதாபாத்திரங்கள் என்று நூற்றுக்கணக்கான அயற் சொற்கள் தமிழ்ப்பாட நூலில் விரவியுள்ளன. இவற்றைக் களைவதும், இவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களை ஈடாகத் தருவதும் தமிழ்க்கல்வி வரலாற்றில் ஆர்வமுடையவர்களின் கடமையாகும்.பாடநூல்களில் மட்டுமல்லாமல் வாழ்வின் பல சூழல்களிலும் வேற்றுமொழிச்சொற்கள் பற்றிய விழிப்புடன் பேச்சும், கலந்துரையாடலும் அமையும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சொற்கள் பற்றிய நகைப்புத்தன்மை நீங்கி இது செய்யவேண்டிய தேவை என்ற உணர்வு எழும்.அயற்சொற்களை அறிமுகம் செய்யும் பொழுது தோன்றும் சிக்கல்களும் தீர்வுகளும்அயற்சொற்களை அறிமுகம் செய்யும்பொழுது மொழி காக்கும் முயற்சி என்ற வகையில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். தொடக்கத்தில் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள அயற்சொற்களும் அவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களும் அறிமுகம் செய்யப்படவேண்டும். நாள்தோறும் காலையில் பள்ளிக்குப் புறப்படுவதற்குமுன் மாணவர்கள் பயன்படுத்தும் சொற்களான பெட்காபி, லைட்போடுதல், பேஸ்ட், பிரஷ், சோப், ஆயில், பவுடர், டாய்லட், வா´ங்பே­ன், ஆட்டோ, டெம்போ, வேன், வாட்டர்பேக், மோட்டார்பைக், ரிக்ஷா, டவுன்பஸ், பஸ்பாஸ், ஷி, செப்பல், கேட், வாக்கிங், பாலிஷ், டிபன்பாக்ஸ், ஹோம்வொர்க், குரூப்சடிஸ், பிரண்ட்ஸ் முதலான ஆங்கிலச் சொற்களை நாள்தோறும் சிறுவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்துகிறோம். இவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களை மாணவர்களுக்கு உரிய பாடநூல்களில் குறிப்பிடும்பொழுது மாணவர்களை விளையாட்டாகத் தமிழ்ச்சொற்களை அறியவைக்க முடியும். இவையாவும் மாணவர்கள் வீட்டில் இருக்கும்பொழுது பயன்படுத்தும் சொற்கள். அதே மாணவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்பொழுது பஸ், டீ பிரேக், லன்ஞ்சு பிரேக், பிரேக்பாஸ்ட், ஸ்போர்ட்ஸ், லெ­ர் டைம், லைபரரி டைம், பஸ்ட்பெல், லாஸ்ட்பெல் முதலான சொற்களைப் பயன்படுத்துவதைப் பாடநூல்களில் அமைத்து இவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களை அடையாளம் காட்டும்பொழுது அளவிலா மகிழ்வு ஏற்படும். அதுபோல் உயர்நிலை, மேல்நிலை மாணவர்களுக்கு அவர்களின் அகவைக்குத் தகுந்த பிறமொழிச்சொற்களை அறிமுகம் செய்யும்பொழுது அகர முதலிகளில் உருவாகியிருக்கும் புதிய கலைச்சொற்கள், பழந்தமிழ்ச்சொற்கள் மீண்டும் தமிழ் உலகம் முழுவதும் பரவும்.பிறமொழிச்சொற்கள் எவை எவை எனக் குறிப்பதில் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் அறிஞர்களுக்கு இடையே உண்டு. அனைத்துச் சொற்களையும் தமிழாகக்காட்டும் போக்கும் நல்லதமிழ்ச்சொற்களைப் பிறமொழிச்சொற்களாகக் காட்டும் போக்கும், தமிழகத்தில் நிலவுகின்றன. இவற்றுள் கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்கும் சொற்களை விடுத்து, எளிதில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் உள்ள பிறமொழிச்சொற்களை எடுத்துக்காட்டி அவற்றிற்குரிய தூய தமிழ்ச்சொற்களை அறிமுகம் செய்வது நல்லது. அதுபோல் பிறமொழிச்சொல்லுக்கு ஒருவர் உருவாக்கி இருக்கும் புதிய சொல்லைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அடம்பிடிப்பது தேவையில்லை. பொருத்தமானதும் எளிதானதுமான புதிய சொற்கள் அல்லது பழைய சொற்களை மக்களே எது தேவையோ அவற்றை ஏற்றுக்கொள்வர். வழங்குவதற்கு எது அரியதாக உள்ளதோ, அதனை மக்கள் விடுப்பர் (தொடக்க காலங்களில் பை சைக்கிள் என்பதற்குத் துவிசக்கர வண்டி எனப் பெயர் சூட்டியதும் அது ஈருருளி என பெயர்பெற்றதும், அவை இரண்டும் மாறி எளிய மக்கள் வடிவமான மிதிவண்டி எனப் பெயர் பெற்றதும் இங்கு நினைவிற்கொள்ளத் தக்கது).அதுபோல் சிலர் தமிழின் சிறப்புகளை அரணிட்டுக்காக்கும் அரியபணி தமிழ்ச்சொல்லைப் பேசுவது என்று அறியாமல் பகடிபுரிவதற்கும் பல்லிளிப்புச் செய்வதற்கும் மொழிக்காப்புப் பணியைக் கொச்சைப்படுத்தும் போக்கினைக் கைக்கொண்டுள்ளனர். "காபி' எனும் இலத்தின் சொல்லைத் தமிழில் வழங்கும்பொழுது "குளம்பி' என வழங்காமல் வேறுபிற சொற்களை உருவாக்குவதாக நினைத்துத் தேவையற்ற கருத்துக்களைக் கூறி நிற்பர். இயன்றவரை பிறமொழிச்சொற்களைத் தவிர்த்து எழுதுவதையும் பேசுவதையும் நோக்கமாகக் கொண்டு தமிழ்ப் பாடநூல்கள் உருவாக்குவது தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் ஆக்கமாக அமையும்.

சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

 தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றியுள்ளன எனினும் மற்ற நூல்களுக்கு இல்லாத சிறப்புக்கூறுகள் பல சிலப்பதிகாரத்திற்கு உண்டு. இந்நூலை முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என இதன் பொருண்மையுணர்ந்து பெயரிட்டு அழைப்பது உண்டு. இதன் காவியச்சுவையில் மயங்கி நெஞ்சையள்ளும் சிலம்பு எனப்பாராட்டுவதும் உண்டு. இவ்வாறு பலவகையில் சிலம்பைச் சுவைத்து மகிழ்ந்து பாராட்டினாலும் சிலப்பதிகாரக் கடல் முழுவதையும் நீந்திக் கரைகண்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று கூறும் அளவில்தான் உள்ளது. இசைமேதை வீ.ப.க.சுந்தரம் அவர்கள் பத்தாண்டுகள் சிலப்பதிகாரத்தைத் தொடர்ச்சியாகக் கற்ற பிறகே சிறிதளவு விளங்கிற்று எனவும், அறுபது ஆண்டுகள் கற்ற பிறகும் இன்னும் பல இடங்கள் விளங்கவில்லை எனவும் கூறிய கூற்றுகள் (கட்டுரையாளர் இசைமேதை அவர்களின் உதவியாளர்) சிலப்பதிகாரத்தின் ஆழ அகலங்களைக் குறிப்பிடும் சான்றுகளாகும். 
 சிலப்பதிகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்பது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும். அதன்படி இன்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டநூலாகக் கருதலாம்.அக்காலத்தில் தமிழ்மொழியில்,தமிழ்இசையில்,தமிழ்நாடகத்தில்,தமிழ்ப்பண்பாட்டில் அயலவரின் ஆதிக்கம் மிகுதியாக இல்லை.எங்கும்தூய தமிழ்ச்சொல்வழக்குகளே புலவர்களால் ஆளப்பட்டுள்ளது(ஓரிரு அயற்சொற்கள் கலந்துள்ளமையை நெறிவிலக்காகக் கொள்க) அத்தூய தமிழ்ச்சொல்வழக்குகள் கொண்டு அமைந்த,ஒப்புமை சொல்ல முடியாத உயர்காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இசையுண்மைகளைக் குறிப்பிடும் சொற்கள் பலவற்றிற்கு இற்றை அறிஞர்களால் தெளிவான பொருள்காணமுடியாதபடி இசைத்துறை நமக்குத்தொடர்பில்லாத துறையாக ஆகிவிட்டது. இசைத்துறை வல்லார் தமிழறிவு இல்லாமலும் தமிழறிவு உடையார் இசையறிவு இல்லாமலும் ஆனமை சிலப்பதிகாரம் போன்ற நூலின் முழுத்தன்மையும் உணரமுடியாமல் போனமைக்குக் காரணங்களாகும் (இவ்விரு துறையில் வல்ல அறிஞர்கள் சிலர் வரைந்த விளக்கங்கள் - வெளிப்படுத்திய ஆய்வுகள் எளிமைப் படுத்தப்படாமல் புதிய குழப்பம்தரும் விளக்கங்களாகவே உள்ளன).

 சிலப்பதிகாரத்தில் இசை முதன்மை

 சிலப்பதிகாரம் தமிழர்களை ஒன்றிணைக்க எழுந்த காப்பியம் என்று கதையமைப்பு,காண்டங்களின் பகுப்பு முதலியவற்றைக்கொண்டு அறிஞர்கள் குறிப்பிடுவர். இக்கருத்து உண்மை என்பதற்கு வலிவான சான்றுகள் உள்ளன. எனினும் இந்நூல் இளங்கோவடிகளின் இசை, கூத்து அறிவினை வெளிப்படுத்திக்காட்டவும், தமிழர்களின் இசை,கூத்து மரபுகளின் அறிவுச் செழுமையை நிலைநாட்டவும் எழுதப்பட்டது. ஏனெனில் கோவலன் கண்ணகி கதையை மட்டும் கூறுவது அடிகளாரின் நோக்கம் என்றால் பல்வேறு இடங்களில் இசை, கூத்து பற்றிய செய்திகளை மேலோட்டமாகச் சொல்லியிருக்கலாம். அவ்வாறு இல்லாமல் இசைக்கருவிகள் பற்றியும், இசைக்கலைஞர்களைப் பற்றியும், இசைக்கருவிகளை இயக்கும்முறை பற்றியும், இயக்கும்பொழுது ஏற்படும் நிறை, குறை பற்றியும் பதியவைத்துப் பொறுப்புள்ள சமூகக்கலைஞராக அடிகளார் விளங்குகிறார். காப்பியவோட்டத்தில் இசையிலக்கணச் செய்திகளைப் பதிவுசெய்த ஓர் இலக்கிய ஆசிரியனை உலக இலக்கியங்களில் காண இயலவில்லை.

 முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து நிலங்களில் வாழும் மக்கள் அவரவரும் தத்தம் நிலம்சார்ந்த இசைக்கருவிகளையும், பண்ணையும் பயன்படுத்தினர். சிற்றூர் மக்கள் தங்கள் நாட்டுப்புற இசைவடிவங்களைப் பயன்படுத்தினர். இவற்றையெல்லாம் திட்டமிட்டவாறு அடிகளார் உரிய இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.

 இளங்கோவடிகள் குறிப்பிடும் இசைக்கருவிகள், இசைக்கருவிகளை வரிசைப்படுத்தி இயக்கியமுறைகள், இசைகுறித்த சொற்கள் யாவும் தமிழ்நெறி சார்ந்தன. ஆனால் அண்மை நூற்றாண்டுகளில் இசை, நாட்டியத் துறைகளில் புகுந்த அயலவர்களின் செல்வாக்கால் நம் தமிழ்ப்பண்கள், அடவுமுறைகள் முதலியவற்றிலெல்லாம் பயன்படுத்தப்பட்ட தமிழ்ச்சொற்களை அழித்து, அதற்கு வடமொழிப்பெயர்களை இட்டு வழங்கியதால் இப்பொழுது உண்மையை இனங்காண முடியாதபடி சூழல் உள்ளது. இத்தெளிவின்மையை மாற்றிப் புத்தொளி பாய்ச்சி சிலம்பை விளங்கவைக்க முயன்றவர்களுள் ஆபிரகாம் பண்டுவர், விபுலானந்தர், இராமநாதனார், குடந்தை ப.சுந்தரேசனார், சிலம்புச்செல்வர், வீ. ப.கா.சுந்தரனார், ச.வே.சு, இரா.திருமுருகனார் முதலானவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

 காரைக்காலம்மையார். ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், சேக்கிழார், அருணகிரியார், திரிகூடராசப்ப கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, கோபாலகிருட்டிண பாரதியார் வரை வளர்ந்து வந்த தமிழிசை மரபு இன்று இடையீடுபட்டுள்ளதையும் தெலுங்கிசை அந்த இடத்தில் பரப்பப்படுவதையும் யாவரும் அறிவோம். அதுபோல் கோயில்களில் நாட்டியமாடத் தேவரடியார்களாக இருந்து நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்த தமிழகத்துப் பெண்களிடத்திருந்து, நாட்டியத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்கள் பரத முனிவர்தான் (கி.பி. நான்காம் நூற்றாண்டு) வடமொழியில் நாட்டியத்தை முதன்முதல் இலக்கணமாக எழுதியுள்ளார் என்று ஆங்கில நூல்கள் வழி உலகிற்குப் பொய்யுரை புகலும் கூட்டத்தினர் தமிழகத்தில் பரவலாக உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 சிலம்பின் இசைநுணுக்கம் உணரத் துணைபுரிபவர்கள்

 சிலப்பதிகாரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுந்த நூல் என்பதால் அதனை உரையாசிரியர்களின், இசையாய்வு அறிஞர்களின் துணைகொண்டே முழுமையாக உணரமுடியும். அவ்வகையில் அரும்பதவுரைகாரர் (11-ஆம் நூற்றாண்டு) அடியார்க்குநல்லாரின் உரைக்குறிப்புகள் (11ஆம் நூற்றாண்டு), ஆபிரகாம் பண்டிதரின் விளக்கங்கள், குடந்தை ப.சுந்தரேசனார், வீ.ப.கா.சுந்தரனார், இராமநாதனார் முதலானவர்களின் விளக்கங்களின் துணைகொண்டே சிலப்பதிகார இசைநுட்பங்களை உணரமுடியும்.இவற்றுள் அரும்பதவுரை என்பது சில இடங்களில் அரிய உண்மைகளை எடுத்துரைக்கிறது. அரும்பதவுரையைத் தழுவியதாகவே பல இடங்களில் அடியார்க்குநல்லார் உரை உள்ளது. அடியார்க்குநல்லார் உரை கிடைக்காத சில இடங்கள் அரும்பதவுரையின் துணைகொண்டே உணரமுடிகின்றது. 

 அரும்பதவுரைகாரர் மேற்கோள்வரிகளைத் தொடக்கம் முடிவு மட்டுமே தருவார். பஞ்சமரபு முதலான பழந்தமிழ் இசை இலக்கண நூல்களைக் கற்றவராக அரும்பதவுரைகாரர் விளங்குவதை வீ.ப.கா.சுந்தரம் எடுத்துரைப்பார். அரும்பதவுரைகாரர் உரையைக் குறிப்புகளாக வரைந்துள்ளார். இவர் காலத்தில் பல இசையிலக்கண நூல்கள் இருந்துள்ளமையை இவர்தம் உரையை ஆழ்ந்து கற்கும்பொழுது உணரமுடிகிறது. சிலப்பதிகாரம் இசைபற்றிய பல உண்மைகளை எடுத்துரைப்பது போல அதற்கு உரையெழுதிய அரும்பதவுரைகாரர், அடியார்க்குநல்லார், நூல்பதிப்பித்த உ.வே.சா முதலானவர்கள் பல இசைச் செய்திகளைத் தெளிவுபடுத்துகின்றனர். சிலப்பதிகாரத்தில் பொதிந்துள்ள இசைச்செய்திகளை ஒவ்வொரு அறிஞர்களும் விளக்க புகுந்து, அவரவர்களுக்குக் கிடைத்த சான்றுகளின் துணைகொண்டு விளக்கியுள்ளனர். உ.வே.சாவால் விளக்கமுடியாத இடங்கள் ஆபிரகாம் பண்டிதராலும், விபுலானந்தராலும், குடந்தை ப.சுந்தரேசனாராலும், வீ.ப.கா.சுந்தரம் அவர்களாலும் விளக்கம் பெற்றுள்ளன. 

 பஞ்சமரபு என்னும் நூல் 1972,1991 இலும் இருமுறை பதிப்பு கண்டுள்ளது. இரண்டாம் முறையாக (1991) பஞ்சமரபு வீ.ப.கா.சுந்தரம் உரையுடன் வெளிவந்தபொழுது சிலப்பதிகாரத்தின் பல இடங்கள் விளக்கம் பெற்றன. அதிலும் சிறு திருத்தங்கள் செய்யவேண்டிய பகுதிகள் உள்ளதை நுட்பமாகச் சிலம்பையும், பஞ்சமரபையும் கற்கும்பொழுது தெரியவருகின்றது. பேராசிரியர் மு.அருணாசலம்பிள்ளை அவர்கள் பஞ்சமரபு வெண்பாக்கள் 24 சிலப்பதிகாரத்தில் உள்ளது எனச் சிலம்பு ஏழாம் பதிப்பில் இணைப்பாகத் தந்துள்ளார். ஆனால் வீ.ப.கா.சுந்தரம் 31 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளதை எடுத்துக்காட்டுகிறார். வீ.ப.கா.சு காட்டும் எண்ணிக்கையில் மிகுந்து பஞ்சமரபு வெண்பாக்கள் சிலம்பில் இடம்பெற்றுள்ளன(பின்பு இது பற்றி விளக்குவேன்).

 பஞ்சமரபு நூல் கிடைக்காமல் போயிருந்தால் சிலம்பு இசையின் உண்மை வரலாறு உணரமுடியாமல் போயிருக்கும். அடியார்க்குநல்லார் பஞ்சமரபு வெண்பாக்களைக் காட்டும்பொழுது எந்தவகையான குறிப்பும் இல்லாமல் பாடலை மட்டும் காட்டுவதால் இது பஞ்சமரபு வெண்பா என உணரமுடியாமல் போகின்றது. பஞ்சமரபு நூலுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுதே உண்மை வரலாறு உணரமுடிகிறது.

 சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ் இலக்கணம் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் அவ்விலக்கணத்திற்குப் பொருந்தும் படியான இசை உருப்படிகள் பலவும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு கதையின் ஊடே இசையின் இலக்கணமும், இசைப்பாடலும் கொண்ட ஒரு நூல் தமிழிலும் பிற மொழிகளிலும் இல்லை எனலாம்.

சிலப்பதிகார இசையிலக்கணத்துடன் ஒருபுடை ஒப்புமை கொண்ட இசையிலக்கண நூல்கள்

 இசைநுணுக்கம் - சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரன் (அடியார்க்கு.) இந்திரகாளியம் - யாமளேந்திரர் பஞ்சமரபு - சேறை அறிவனார் பரதசேனாபதியம் -ஆதிவாயிலார் மதிவாணர் நாடகத்தமிழ்-பாண்டியன் மதிவாணனார்

 சிலப்பதிகார நூலில் தமிழர்கள் பிரித்துப்பார்த்த ஐந்து நில மக்களின் வாழ்க்கை,அவர்தம் இசை முறைகளை முறையாக இளங்கோவடிகளார் பதிவுசெய்துள்ளார். முல்லை,குறிஞ்சி,மருதம்,நெய்தல்,பாலை எனும் ஐந்து நிலமக்களின் இசையை முறையே ஆய்ச்சியர் குரவையிலும் (முல்லையாழ்), நடுகற்காதை, குன்றக் குரவையிலும் (குறிஞ்சி), வேனிற் காதையிலும் (மருதயாழ்), கானல்வரியிலும் (நெய்தலுக்குரிய விளரி, செவ்வழி) புறஞ்சேரியிறுத்த காதையிலும் (பாலையாழ்) விளக்கியுள்ளார். சிலப்பதிகார நூலுள் இசையிலக்கணச் செய்திகள் கொட்டிக்கிடப்பது போன்று அடியார்க்குநல்லார் வரைந்த பதிகவுரை மிகப்பெரும் இசை வரலாறுகளை உறுதிப்படுத்துகின்றது. அடியார்க்குநல்லார் உரைவழியும் அவ்வுரையின் துணைகொண்டு இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் வரைந்துள்ள இசைக்களஞ்சிய விளக்கங்கள் வழியும் தொடரந்து கற்றல் முயற்சியில் ஈடுபடும்பொழுது தமிழரின் இசைக்கருவூலம் சிலப்பதிகாரம் என்பதை அனைவருக்கும் தெளிவுப்படுத்தலாம்.

 சிலப்பதிகார ஆசிரியர் மங்கல வாழ்த்துப் பாடலிலும் பிற காதைகளிலும் சிறுதொடர்கள் வழியாகக்கூட மிகப்பெரும் இசை உண்மைகளைப் பதிவு செய்துள்ளார். அத்தொடர்களில் உள்ள உண்மைகளை இன்றுவரை முற்றாக வெளிப்படுத்த இயலாதவர்களாய் உள்ளோம். முரசியம்பின, முருடதிர்ந்தன ,முறையெழுந்தன, பணிலம் வெண்குடை அரசெழுந்ததொர் படியெழுந்தன, வகலுண்மங்கல வணியெழுந்தது (46-47) என்னும் சந்த நயமிக்க தொடர்களைப் படிக்கும் போது கோவலன் கண்ணகி திருமணத்தில் முழங்கிய பல்வேறு இசைக்கருவிகள் இன்றும் நம் காதுகளில் ஒலித்தவண்ணம் உள்ளன. ஆடல் அரங்கையும் திரைச் சீலைகளின் அமைப்பையும் அடிகளார் தம் காப்பியத்தில் நிலையான வகையில் காட்சிப் படுத்தியுள்ளார்.

வியாழன், 29 மார்ச், 2007

பாவேந்தர் பாரதிதாசனின் பல்திறப் படைப்பாளுமை - கருத்தரங்கம்

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் உயராய்வு மையம் பாவேந்தர் பாரதிதாசனின் பல்திறப் படைப்பாளுமை என்னும் கருத்தரங்கை 2007 மார்ச்சுத் திங்கள் 26, 27 நாள்களில் நடத்தியது.
துணைவேந்தர் முனைவர் சி.தங்கமுத்து அவர்கள் தலைமை உரையாற்றினார். முனைவர்ச.சு.இராமர் இளங்கோ வரவேற்றார். முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் தொடக்கவுரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன், முனைவர் மு.இளமுருகன், அரிமளம் பத்மநாபன், முனைவர் மு.திருஞானமூர்த்தி, முனைவர் மெய்கண்டான், திருவாட்டிசெ.மகேசுவரி, முனைவர்.ந.சக்திவேலு, முனைவர் இரா.சக்குபாய், முனைவர் ய.மணிகண்டன், முனைவர் சாயபுமரைக்காயர், புலவர்ச.சுப்பிரமணியன், முனைவர் கு.திருமாறன், முனைவர் செயலாபதி, முனைவர் செல்வகணபதி உள்ளிட்ட அறிஞர்கள் ஆய்வுக் கட்டுரைவழங்கினர். முனைவர் த.கனகசபை, முனைவர் மார்க்கரெட் பாஸ்டின், முனைவர் ந.மணிமேகலை, முனைவர் க.கனகராசு, முனைவர் அந்தோனிகுருசு, முனைவர் பீ.மு.மன்சூர் உள்ளிட்டோர் அமர்வுத் தலைமை தாங்கினர்.
நிறைவில் முனைவர் கா.செல்லப்பனாரின் சிறப்புரை அமைந்தது. பாவேந்தர் பாரதிதாசனின் பாட்டுத்திறமையையும் பல துறை ஆளுமையையும் அறிஞர்கள் வெளிப்படுத்தினர்.

வெள்ளி, 23 மார்ச், 2007

பன்முக நோக்கில் சங்க இலக்கியம் தேசியக்கருத்தரங்கம்,புதுச்சேரி

மைசூரில் அமைந்துள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் செம்மொழித் தமிழ் உயராய்வு மையமும், புதுச்சேரியில் அமைந்துள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் (PILC) இணைந்து பன்முக நோக்கில் சங்க இலக்கியம் என்னும் பொருளில் புதுச்சேரி அரசின் தலைமைச் செயலகக் கருத்தரங்க அறையில் தேசியக் கருத்தரங்கம் ஒன்றை 23,24,25-03 2007 ஆகிய நாள்களில் நடத்துகின்றன.

முதல் நாள் நிகழ்ச்சியில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் பண்பாட்டியல் நோக்கில் சங்க இலக்கியம் என்னும் பொருளில் மையக் கருத்துரை வழங்கினார். தமிழகத்தின் ஆய்வறிஞர்களான சி.இ.மறைமலை, த.பழமலை, க.இராசன், அ.பாண்டுரங்கன், ஆ.தட்சணாமூர்த்தி, க.பூர்ணசந்திரன், நா.மம்முது வே.ச.திருமாவளவன், க.நெடுஞ்செழியன், தே.லூர்து, ப.மருதநாயகம், ஆ.சிவசுப்பிரமணியன், பழ.கோமதிநாயகம், மே.து.இராசுகுமார், ஞா.ஸ்டீபன், சுந்தர்காளி, பொ.வேல்சாமி, பெ.மாதையன், இ.முத்தையா, த.தர்மராசு, பிரேம், ஆ.தனஞ்செயன், சூ.கெளதமன், கோ,விசயவேணுகோபால், க.பஞ்சாங்கம் முதலானவர்கள் ஆய்வுக்கட்டுரைகள் படைக்கின்றனர். 

இடையிடையே இராசா முகமது இன்னிசை பாடுகிறார். நிறைவு விழாவில் திரு.சி.குமாரசாமி அவர்கள் (செயலாளர்,கலை, பண்பாட்டுத்துறை, புதுவை அரசு) வாழ்த்தவும் முனைவர் பொற்கோ நிறைவுரை ஆற்றவும் உள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முனைவர் மு.சுதர்சனம், முனைவர் பக்தவச்சலபாரதி, முனைவர் இரா.சம்பத் ஆகியோர் செய்துள்ளனர். புதுச்சேரி அறிஞர்களும் மாணவர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

ஞாயிறு, 18 மார்ச், 2007

சொல்லாய்வறிஞர் ப.அருளி

 சொல்லாய்வறிஞர் .அருளி அவர்கள் புதுச்சேரியில் பிறந்தவர். வணிகவியல், சட்டம் பயின்றவர். மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ் வேர்ச் சொல்லாய்வுகளில் இவருக்கு ஒப்புமைகாட்டமுடியாதபடி புலமைபெற்றவர். பன்மொழிகளை எடுத்துக்காட்டித் தமிழ்ச்சொல்லின் வேர் வளர்ச்சிகளை விளக்குவதில் வல்லவர். தூயதமிழில் உரையாற்றுவதால் தமிழகத்திலும், அயல்நாடுகளிலும் புகழ்பெற்ற பேச்சாளராக விளங்குபவர். தமிழினத் தொண்டியக்கம் நிறுவி, குமூகத் தொண்டாற்றுபவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழத்தின் தூய தமிழ்- சொல்லாக்க அகரமுதலிகள் துறையின் தலைவராகப்பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

பேராசிரியர் ப. அருளி அவர்களின்  நூல்களுள் சில:

1. இவை தமிழல்ல...

2. அயற்சொல் அகராதி

3. அருங்கலைச்சொல் அகரமுதலி

4. இரு வானொலி உரைகள்

5. யா

6. பெற்றோரைப் பற்றி...

7. தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற ...அருளி ஆற்றிய மொழியியல் உரைகள்(5-தொகுதி)

முகவரி:
சொல்லாய்வறிஞர்  .அருளி அவர்கள்
காளிக்கோயில் தெரு, திலாசுப்பேட்டை,
புதுச்சேரி - 605009

வியாழன், 15 மார்ச், 2007

பன்னாட்டுக்கருத்தரங்கு

தமிழர் அலைவு உழல்வு(Tamil Diaspora) பன்னாட்டுக்கருத்தரங்கம்-புதுச்சேரி
புதுச்சேரி பிரஞ்சு நிறுவனமும் சென்னைப்பல்கலைக்கழகமும் இணைந்து தமிழர் அலைவு உழல்வு குறித்த கருத்தரங்கை 14,15,16-03-07 நாள்களில் நடத்தின. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு ஆய்வுரைகளை வழங்கினர்.சங்க காலம் தொடங்கி இக்காலம்வரை தமிழர்களின் இடப்பெயர்வுக்கான காரணங்கள்,அதனால் பண்பாடு,வாழ்க்கைமுறைகளில் ஏற்பட்ட மாறுதல்கள் ஆராயப்பட்டன.அகதிகள் இந்தியாவில் நடத்தப்படும் முறைகள் விளக்கப்பட்டன.இணையம் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எந்த வகையில் உதவுகின்றது என்பது ஆராயப்பட்டது.புலம்பெயர்ந்தோரின் நாடக முயற்சி,இலக்கியப்படைப்புகள்(கவிதை,புதினம்)மதிப்பீடு செய்யப்பட்டன.அறிஞர்களும்,ஆய்வுமாணவர்களும் மிகுதியாகக்கலந்துகொண்டு பயன்பெற்றனர். முனைவர் மெளனகுரு,யோகராசா,சித்திரலேகா,மார்க்சு,சண்முகம்,கலாம்,சாக்கோப்சன்,மங்கை,உமாசங்கரி,சீனிவாசன் உள்ளிட்ட அறிஞர்கள் கட்டுரை படித்தனர்.முனைவர்குரோ,முனைவர் அரசு,கண்ணன் முயற்சியால் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.செய்தி-மு.இளங்கோவன்,புதுச்சேரி பேசி-9442029053