நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 27 ஜூன், 2011

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின்(பெட்னா) தமிழ் விழா 2011


சார்ள்சுடன் கடற்கரையின் அழகிய தோற்றம்

 தமிழர்கள் பணிகளின்பொருட்டும், படிப்பின்பொருட்டும் அமெரிக்காவின் பல மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் அந்தந்தப் பகுதிகளில் தமிழ்ச்சங்கம் நிறுவியும், தமிழ்ப்பள்ளிகள் அமைத்தும், இன்ன பிற அமைப்புகளை உருவாக்கியும் தமிழ் வளர்ச்சிக்கும் கலைவளர்ச்சிக்கும் பாடுபடுகின்றனர். அத்தகு தமிழ்ப்பற்றுடைய குடும்பத்தார் ஆண்டுதோறும் குடும்பம் குடும்பமாக அமெரிக்காவின் புகழ்பெற்ற நகர் ஒன்றில் ஓரிடத்தில் கூடித் தமிழ்விழா எடுத்து ஒற்றுமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 தமிழகத்திலிருந்தும், உலகின் பிற பகுதிகளிலிருந்தும் புகழ்பெற்ற தமிழறிஞர்கள், கலைஞர்களை அழைத்துச் சிறப்பிப்பதுடன், தமிழர்களின் மரபுக்கலைகளைப் போற்றும் முகமாகத் தமிழகத்து மரபுக்கலைஞர்களை அழைத்துக் கலைநிகழ்ச்சிகள் நடத்தும்படியும் செய்கின்றனர். வளர்ந்து வரும் இளந்தலைமுறையினர் தம் முன்னோரின் பண்பாட்டை அறிய வேண்டும் என்ற உயர்நோக்கில் இத்தகு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

 மேலும் தமிழுக்கும் தமிழருக்கும் உழைத்த தமிழ்ச்செம்மல்களைச் சிறப்பிக்கும் முகமாக அவர்களின் நூற்றாண்டு விழாக்களை நடத்தியும் சிறப்புமலர்கள் வெளியிட்டும் தமிழ்ப்பணியாற்றி வருகின்றனர்.இந்த ஆண்டும் அவ்வகையில் தனித் தமிழே நனிச் சிறப்பு ! இனம் பேணல் நம் பொறுப்பு ! என்னும் உயரிய நோக்கத்துடன் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையினர் 24ஆம் ஆண்டு விழாவினைச் சீரும் சிறப்புமாக நடத்த உள்ளனர்.

 அமெரிக்காவின் தென்கரோலினா மாநிலத்தில், சீர்பெருகும் சார்ள்ஸ்டன் மாநகரில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையும், பனைநிலத் தமிழ்ச் சங்கத்தாரும் மற்றும் உலகளாவிய தமிழ் மெய்யன்பர்களும் இணைந்து நடத்தும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 24வது ஆண்டு விழாவை மிகச்சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

 இந்த விழாவின் இன்னொரு தனிச்சிறப்பு பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரையெழுதித் தமிழ்நூல்களைத் தமிழ்மக்கள் அனைவரும் படித்து மகிழ வழி செய்த பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது பேரவையின் புகழ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். எந்த ஒரு அரசியல் பின்புலமோ, பொருள் வளமோ இல்லாமல், சிற்றூரில் பிறந்து தமிழ்ப்புலமை நலம் மட்டும் துணையாகக் கொண்ட ஒரு அறிஞர் பெருமகனாரின் நூற்றாண்டு விழாவை அமெரிக்க மண்ணில் கொண்டாடுவது பேரவையின் தமிழ்ப்பற்றுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.


சிறப்புமலர் மேலட்டை

பேரவையின் நிகழ்வுக்குப் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். கனடாவைச் சேர்ந்த சீர்மிகு இராதிகா சிற்சபேசன், திரைப்படக்கலைஞர் திரு.நாசர், நடிகர் சார்லி, திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார், திரு.அப்துல் சபார், புதுகைப் பூபாளம் கலைக்குழுவினர், திண்டுக்கல் சக்திக் கலைக்குழு, கோடைமழை வித்யா, திருபுவனம் ஆத்மநாதன், பாடகர்கள் தேவன், பிரசன்னா, உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

 பெருமழைப்புலவர் மலர் வெளியீட்டு நிகழ்விலும், சிலப்பதிகார இசைநுட்பங்கள் குறித்தும் நான் கலந்துகொண்டு உரையாற்ற வாய்ப்பு உள்ளது. இத்தகு பெருமைக்குரிய வாய்ப்பு நல்கிய பேரவையின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என யாவருக்கும் என் நன்றி.

உலகத் தமிழர்களே! வாருங்கள் பேரவை விழாவில் சந்திப்போம்.

நாள்: 2011 சூலை 1 முதல் 4 வரை

இடம்: கில்யார்டு அரங்கம், சார்ள்ஸ்டன், தென் கரோலினா, அமெரிக்கா

3 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் முனைவரே.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இளந்தலைமுறையினர் தம் முன்னோரின் பண்பாட்டை அறிய வேண்டும் என்ற உயர்நோக்கில் இத்தகு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.


காலத்தின் தேவையல்லவா இது!!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு குறித்து பெருமகிழ்வு கொள்கிறேன் ஐயா.

மிக்க மகிழ்ச்சி.

:)

வாழ்த்துக்கள்.
தொடர்க தங்கள் தமிழ்ப்பணி.