நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 21 மே, 2018

கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு!


நாள்: 26.05.2018 காரி(சனி)க் கிழமை, நேரம்: மாலை 6 மணி
இடம்: திருப்புமுனைப் பயிற்சி மையம், சர்க்கரைத் தெரு,
புதுப்பாளையம், கடலூர்

மொழி வாழ்த்து: புலவர் மு. நாகப்பன்

தலைமை: புலவர் சந்தான சுகிர்தராசு

வரவேற்புரை: வாழ்நாள் வழிகாட்டி அரங்க. இரகு

முன்னிலை: பேராசிரியர் இராச. குழந்தைவேலனார்
           சிந்தனையாளர் நம். கார்மேகவண்ணன்

பாராட்டு அரங்கம்:
திராவிடத் தொண்டர் திரு. மாதவன் அறுபது அகவை நிறைவுப் பாராட்டு

பாராட்டுரை: கவிஞர் .எழிலேந்தி
கவிஞர் இராச. சொக்கநாதன்

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அறிமுகவுரை
முனைவர் மு.இளங்கோவன்

ஆவணப்பட ஒளிவட்டினைப் பெற்று வாழ்த்துரை: பாவலர் சு. சண்முகசுந்தரம்

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு

கருத்துரை: பங்கேற்பாளர்கள்

நன்றியுரை சாது. சாஇராசதுரை

அனைவரும் வருக!

ஞாயிறு, 20 மே, 2018

கனடாவில் வாழும் பேராசிரியர் சு.பசுபதிபேராசிரியர் சு. பசுபதி


     கனடாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மின்னியல்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் சு.  பசுபதி அவர்களைச் சற்றொப்ப பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் நன்கு அறிவேன். இவர்தம் யாப்புத்துறை ஈடுபாடே இவர்மேல் மிகுந்த மதிப்பு எனக்கு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது. கவிதை இயற்றிக் கலக்கு என்ற தலைப்பில் இவர் இயற்றிய கட்டுரைகளைக் கண்டு அக்காலங்களில் வியப்புற்றேன். தொடர்ந்து இவர்தம் பல்துறைக் கட்டுரைகளைப் படித்து மகிழ்ந்ததுண்டு. மின்னஞ்சலில் நட்பு வளர்பிறைபோல் வளர்ந்தது. அதனால் ஈராண்டுகளுக்கு முன்பாகக் கனடா சென்றபொழுது பேராசிரியர் அவர்களை நானும் திரு. சிவம் வேலுப்பிள்ளை அவர்களும் தனித்துச் சந்தித்து உரையாடும் வாய்ப்பும், பல நிகழ்ச்சிகளில் கண்டு உரையாடும் வாய்ப்பும் எங்களுக்கு அமைந்தன. தொடர்ந்து மின்னஞ்சலில் தொடர்புகொண்டு வேண்டிய விவரங்களைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். பேராசிரியருடன் பழகியதிலிருந்து அவர்தம் பல்துறைப் புலமையை அறிந்துகொள்ள முடிந்தது. அவர்தம் தமிழ்ப்பணியும், கல்விப்பணியும் தமிழகத்தார் அறிய வேண்டுவன.

     பேராசிரியர் சு. பசுபதி, சென்னையில் 1940 செப்டம்பர் 21 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர்: ஜெயலட்சுமி, வாங்கல் எம். சுப்பராயன் ஆவர். சு. பசுபதியின் இளமைக்கல்வி சென்னை இராமகிருஷ்ண மிஷனில் அமைந்தது.

     சு. பசுபதி சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிண்டிப் பொறியியல் கல்லூரியில் படித்துத் தொலைத்தொடர்புத் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர் (1963). இவர் சென்னை ஐ.ஐ.டியில் முது தொழில்நுட்பம் (எம்.டெக்) படித்தவர் (1966). அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு பட்டம் பெற்றவர்(1972).

1972 முதல் 2006 வரை டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மின்னியல் கணினித்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தகைசார் பேராசிரியராக அப் பல்கலைக்கழகத்தில் பணியைத் தொடர்பவர்.

     சென்னை ..டி-யில் பயின்றபொழுது நோபல் பரிசு விஞ்ஞானி சி.வி. இராமன் அவர்களின் திருக்கையால் பரிசு பெற்ற பெருமைக்குரியவர் (1966). 2010-இல் சென்னை ..டி-யின் புகழ்பெற்ற பழைய மாணவருள் ஒருவராய்த் (Distinguished Alumnus Award) தேர்வு செய்யப் பெற்றவர்.

            1951- இல் பரலி சு. நெல்லையப்பர், நாரண. துரைக்கண்ணன் போன்றோரின் முன் தொடங்கப்பெற்ற பாரதி கலைக்கழகத்தின் (சென்னை -1)  வாழ்நாள்  உறுப்பினர் இவர்.

  பேராசிரியர் சு. பசுபதி அவர்களின் துணைவியார் பெயர் ஜெயா பசுபதி ஆகும். இவர்களுக்கு வாணி என்ற ஒரு மகள் உண்டு.

         சந்தவசந்தம்இணையக் கவிதைக் குழுமத்தில் பல ஆண்டுகளாகக் கவிதைகள், யாப்பிலக்கண விளக்கங்கள் எழுதிவருபவர். டொராண்டோவில் 2006 - இல் நடந்த திருமுறை மாநாட்டில்நாயன்மார்கள்கவியரங்கம், 2016 - இல் நடந்த தொல்காப்பியக் கவியரங்கம் ஆகியவற்றிற்குத் தலைமை வகித்து நடத்தியவர். கனடாவில் நடைபெறும் தமிழ் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் ஆர்வமாகக் கலந்துகொண்டு, தம் பங்களிப்பை நல்குபவர்.

 சு. பசுபதியின் படைப்புகள் கலைமகள், அமுதசுரபி, கோபுரதரிசனம், அம்மன் தரிசனம், பாரதி கலைக்கழக இதழானகவியமுதம்போன்ற ஏடுகளிலும், “திண்ணைஇணைய இதழிலும் வெளிவந்துள்ளன.

பேராசிரியர் சு. பசுபதி அவர்களுக்குத் தமிழிலும் இசையிலும் நல்ல ஈடுபாடு உண்டு. இத்துறை சார்ந்த பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

1. கவிதை இயற்றிக் கலக்கு,(இரண்டாம் பதிப்பு, அச்சில்). 2. சங்கச் சுரங்கம் – 1,3.. சங்கச் சுரங்கம் - 2, 4.சொல்லயில் (சொல்+ அயில் = சொல்லயில்; அயில் = கூர்மை/வேல்) இவர்தம் தமிழ்க் கொடையாகும்.

கவிதை இயற்றிக் கலக்கு: நூல் அறிமுகம்

     மின்னணுவியல் துறையில் பணிபுரிந்தாலும் தமிழின்மேல் பேராசிரியர் சு. பசுபதி அவர்களுக்கு மிகுந்த பற்று உண்டு. குறிப்பாகத் தமிழ் யாப்பு சார்ந்து மிகுதியும் எழுதியவர். முறையாக வகுப்பெடுத்துத் தமிழ் யாப்பிலக்கணங்களை மாணவர்களுக்கு விளக்கியவர். பல்கலைக்கழகத்தில் தம் பணிகளுக்கு இடையே இவர் பிறதுறை மாணவர்களுக்குத் தமிழ் யாப்பிலக்கணங்களின் அடிப்படைகளைப் புரியவைத்து, பலரை மரபுப்பாடல் புனைய வைத்தவர். யாப்பு என்றால் அஞ்சியோடும் கூட்டத்தை அன்பொழுக அழைத்து, அவர்களுக்கு எழுத்து, சீர், அசை, சீர், தளை, அடி, தொடை பயிற்றுவிக்கும் பணியை ஈடுபாட்டுடன் செய்தவர்.

பேராசிரியர் சு. பசுபதி இணையக் குழுக்களில் தம் யாப்பிலக்கணக் கருத்துகளை எழுதியதால் உலகம் முழுவதும் பலர் பேராசிரியர் பசுபதியிடம் ஐயங்களை எழுப்பித் தெளிவுபெற்றுள்ளனர். அந்த வகையில் கவிதை இயக்கிக் கலக்கு என்ற தலைப்பில் ஆறாண்டுகள் பல்வேறு நிலைகளில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டில் இந்த நூலை வெளியிட்டுள்ளார். 384 பக்கங்களைக் கொண்ட இந்த நூல், யாப்பிலக்கணங்களை எளிமையாகப் புரியவைக்கும் நூல். தேவையான விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் பயிற்சிகளும் இந்த நூலில் இருப்பதால் யாப்பு ஆர்வலர்களுக்கு இந்த நூல் மிகச் சிறந்த கையேட்டு நூலாகும்.

     பேராசிரியர் சு. பசுபதி, யாப்பிலக்கணம் குறித்த தம் கட்டுரைகளை உருவாக்கும் முன் தம் காலத்திற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த அனைத்துவகையான இலக்கண நூல்களையும் ஆழமாகக் கற்று, தக்கவாறு சிந்தித்து யாப்பிலக்கணத்தை எளிமைப்படுத்தி இந்த நூலில் வழங்கியுள்ளார்.

     கவிமாமணி இலந்தை சு. இராமசாமியார், பேராசிரியர் வே.ச.. அனந்தநாராயணன் ஆகியோர் வழங்கியுள்ள முன்னுரையில் நூலாசிரியர் பற்றியும் நூலின் உருவாக்கம் பற்றியும் அரிய குறிப்புகள் பல கிடைக்கின்றன.     கவிதை இயற்றிக் கலக்கு என்ற இந்த நூல் இரண்டு பகுதியாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் அறிமுகம், கவிதை உறுப்புகள், எழுத்துகள், நேரசை, நிரையசை, பாடலை அலகிடுதல், சீர்கள், தளை, அடி, ஓசை, தொடை - 1, தொடை- 2, குறள்வெண்பா: முதலடி, வெண்பாவின் ஈற்றடி, அலகிடுதல் சில நுண்மைகள், குறள் வெண்செந்துறை, ஆசிரியப்பா, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம், கலிவிருத்தம், தரவு கொச்சகக் கலிப்பா, ஆசிரியத் தாழிசை, கலித்தாழிசை, வெண்பா 1, வெண்பா 2, வெண்பா 3, கலித்துறை 1, கலித்துறை 2, கட்டளைக்கலித்துறை, அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், கட்டளைக் கலிப்பா, வஞ்சிப்பா, கலிப்பா 1, கலிப்பா 2, கலிப்பா 3, மற்ற சில பாவினங்கள் என்ற தலைப்பில்  அமைந்து ஒவ்வொரு தலைப்பிலும் பொருத்தமான செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

     எடுத்துக்காட்டாகக் கட்டளைக்கலித்துறை-1 என்ற தலைப்பில் பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் கட்டளைக்கலித்துறையின் வரலாற்றை நமக்குக் கொண்டு வந்து காட்டுகின்றார். காரைக்காலம்மையார்தான் முதன்முதல் இந்த வடிவத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்கின்றார் (பக்கம் 149). காரிகை என்று இதற்கு வேறுபெயர் உண்டு என்கின்றார் பக்திக் காலத்தில் திருவிருத்தம் என்று கட்டளைக் கலித்துறை அழைக்கப்பட்டதை நினைவூட்டுகின்றார். இலங்கை நாட்டு அறிஞர்கள் குமாரசாமிப் புலவர், தாமோதரம் பிள்ளையின் பரிந்துரைகளை எடுத்துக்காட்டுகின்றார். பட்டினத்தார் தொடங்கி, பாரதி, கவிமணி பாடிய கட்டளைக் கலித்துறைகளை மேற்கோளாக எடுத்தாள்கின்றார். கட்டளைக் கலித்துறையில் பின்பற்றப்படும் விதிகளை அடுக்கிக் காட்டுகின்றார். இவ்வாறு ஒரு  பாத்துறைக்கு விளக்கம் தர எடுத்துள்ள முயற்சியே நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இத்தகு செயற்கரிய செயல் செய்ய வேண்டுமெனில் துறைசார் ஈடுபாடு இருந்தால் மட்டுமே இயலும். அந்த வகையில் பேராசிரியர் பசுபதியின் யாப்புத்துறைப் பணி அனைவராலும் போற்றப்படும்.

  கவிதை இயற்றிக் கலக்கு நூலின் இரண்டாம் பகுதியில் சந்தப் பாக்கள், சந்த வஞ்சித்துறை, சந்த வஞ்சி விருத்தம், சந்தக் கலிவிருத்தங்கள்-1, சந்தக் கலிவிருத்தங்கள்- 2,  சந்தக் கலித்தாழிசை, சந்தக் கலித்துறை, சந்த அறுசீர் விருத்தம், சந்த எழுசீர் விருத்தம், சந்த எண்சீர் விருத்தம், விருத்தங்களின் ஒன்பது, பத்து, பதினொரு சீர்கள், பன்னிரு சீர், பதினான்கு சீர், பதினாறு சீர்கள், பரணித் தாழிசை, வண்ணப்பாடல்கள் - 1, வண்ணப்பாடல்கள் - 2,  வண்ணப்பாடல்கள் - 3, சிந்துகள், கும்மி, சிந்துகள் - 2, கிளிக்கண்ணி, சிந்துகள் - 3, இசைப்பாடல், முடிவுரை என்ற வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.

     நான்கு வகைப் பெரும்பாக்களையும், அதன் பிரிவுகளையும், பிற்காலத்தில் கிளைத்தெழுந்த சிந்துப்பாக்கள், வண்ணப்பாக்கள், கண்ணி, கும்மி ஆகியவற்றையும் பெரும்பாடுபட்டு அறிமுகம் செய்துள்ள பேராசிரியர் சு. பசுபதி அவர்களுக்குத் தமிழறிஞருலகம் மிகுந்த நன்றிக் கடன்பட்டுள்ளது.

கல்லூரியில் யாப்பிலக்கணம் பயிலும் மாணவர்களுக்கு இந்த நூலைப் பேராசிரியர்கள் அறிமுகம் செய்யலாம்.

வெளியீடு: 
எல்.கே.எம் பப்ளிகேஷன்
புது எண் 33, ரங்கன் தெரு,
( பழைய GRT அருகில் .
தெற்கு உஸ்மான் சாலை )
தியாகராய நகர்,
சென்னை -600017    


சு. பசுபதியின் படைப்புகளை அறிய:

இணையக் குழுமம்:  https://groups.google.com/forum/?hl=en#!forum/yappulagam
வலைப்பூ: http://s-pasupathy.blogspot.com/


மு.இ, பேராசிரியர் பசுபதி, கவிஞர் புகாரி (கோப்புப் படம்)
மு.இளங்கோவன், பேராசிரியர் பசுபதி(கோப்புப் படம்)

படங்கள் உதவி: சிவம் வேலுப்பிள்ளை(கனடா)

வெள்ளி, 18 மே, 2018

நெஞ்சில் உறைந்த உறை!

 14.09.2008 இல் தருமபுரித் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவதற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த நிகழ்ச்சிக்குப் பொறியாளர் மு. அறவாழி அவர்கள் நெய்வேலியிலிருந்து வந்திருந்தார். மருத்துவர் கூத்தரசன் அவர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார், பொறியாளர் தகடூர் கோபியும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

 பொறியாளர் மு. அறவாழி அவர்கள் நான் பள்ளி மாணவனாக இருந்ததுமுதல் என்னை நன்கு அறிவார். கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் என்னை அழைத்து நெய்வேலியில் திருவள்ளுவர் விழாவில் பேசச் செய்துள்ளார் (1992). தமிழ் உணர்வுமிக்கவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தம் குடும்பத்தினராகப் போற்றும் உயர்ந்த இயல்புடையவர் மு. அறவாழி. எத்தனையோ ஈழத்துத் தமிழ் நண்பர்கள் அவரின் நெய்வேலி இல்லத்தில் சொந்த வீடுபோல் தங்கி, வாழ்ந்தமையை அறிவேன். அவரைப் போலும் உணர்வாளர்கள் கோடியில் ஒருவர்தான் இருப்பர்.

 பொறியாளர் மு. அறவாழி அவர்கள் என் படிப்பு, ஆய்வு, பணிகள் யாவற்றையும் கண்டு உவந்து, தம் மகனாகவே எண்ணி எண்ணி அன்புசொரிந்தவர். என் திருமணத்தை முன்னின்று நடத்தியவர். சற்றொப்ப முப்பது ஆண்டுகள் அவருடன் பழகியுள்ளேன். என் தமிழ்ப் பணியை ஊக்கும் வகையிலும் போக்குவரவுச் செலவுக்குமாக ஓர் உறையில் ஆயிரம் உருவாவை வைத்து, எனக்கு அன்பளிப்பாக 14.09.2008 அன்று தருமபுரியில் வழங்கினார். அந்த உறையில் "என் மகன் இளங்கோவன் அவர்கட்கு" என்று எழுதி, ஒப்பமிட்டு வழங்கினார். அவரின் நினைவாகப் போற்றிப் பாதுகாக்கும் உறை இன்று என் கண்ணில் தென்பட்டது. பொறியாளர் அறவாழி, மருத்துவர் கூத்தரசன், பொறியாளர் தகடூர் கோபி மூவரும் இயற்கை எய்தினர். இந்த உறை மூவரையும் நினைவுகூர வைத்துவிட்டது.

புதன், 16 மே, 2018

கணக்கியல் அறிஞர் கோணமலை கோணேச பிள்ளை இயற்கை எய்தினார்!


முனைவர் கோ. கோணேச பிள்ளை(மண்டூர்)

 மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் இயற்கை எய்திய செய்தியை இலங்கை நண்பர்கள் நேற்றுப் பகிர்ந்துகொண்டனர். இத் துன்பச் செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். திரு. கோணேச பிள்ளை அவர்கள் விபுலாநந்த அடிகளாரால் ஆற்றுப்படுத்தப்பட்டு, சிவாநந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர்.

 சிறப்புக் கணித ஆசிரியராகவும், ஆங்கில ஆசிரியராகவும், கண்டி ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அட்டாளைச் சேனை ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையிலும், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பெருமைக்குரியவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் முனைவர் பட்டம்(1998) பெற்றவர். கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் தம் கலாநிதிப் பட்டப்பேற்றினைப் பெற்றவர். முது விஞ்ஞான மாணி, முது கலைமாணி பட்டங்களைப் பெற்றவர் "சர்வதேசக் கல்வியும் ஐக்கிய நாடுகள் சபையும்" என்னும் கற்கையில் பங்குபற்றி உச்சப் புள்ளியான  ஏ பிளசைப்
( A +) பெற்றவர்.

 அமெரிக்காவில்  கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்திற்குரிய ஆய்வறிக்கையை ஒப்படைத்துக் கல்வியியல் கலாநிதி, தத்துவக் கலாநிதி ஆகிய பட்டங்களைப் பெற்றவர். பொட்சுவாணாவுக்குச் (Botswana) சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பின்னர் இலங்கை திரும்பியவர். இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணி செய்தவர். இத்தகு பெருமைக்குரியவரைக், கனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் மூன்றாண்டுகளுக்கு முன்னர் எனக்கு  அறிமுகப்படுத்தினார். திரு. காசுபதி நடராசா, திருவாட்டி சிவமணி, ஒளிப்பதிவாளர் இராஜ்பரத்துடன் அவரைச் சந்திக்கச் சென்றமை நினைவுக்கு வருகின்றது.

 விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் படப்பிடிப்புக்காகச் சென்றபொழுதுதான் அந்த அறிமுகம் அமைந்தது.  மண்டூரில் உள்ள கோணேச பிள்ளையின் இல்லத்தில் அவருடன் அறிமுகம் ஆனேன். அகவை முதிர்ந்த நிலையிலும் என் முயற்சியைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார். அவரின் நேர்காணலை எங்கள் ஆவணப்படத்திற்காக ஒளிப்பதிவு செய்தோம். இந்த விவரங்களை முகநூலிலும் அப்பொழுதே பகிர்ந்திருந்தோம். சில காரணங்களால் கோணேச பிள்ளையின் நேர்காணல் எங்கள் ஆவணப்படத்தில் இடம்பெறவில்லை. ஆயினும் அவர்தம் அறிவார்ந்த பேச்சின் காணொளி எங்களிடம் உள்ளது.

 திரு. கோணேச பிள்ளையை நாங்கள் சந்தித்தபொழுது உடல் தளர்வுற்று இருந்தார். படுக்கையிலிருந்தவரை எழுப்பி, சக்கர நாற்காலியில் வெளியில் கொண்டு வந்து படப்பிடிப்பை நிகழ்த்தினோம். அவர் அறையில் கணினியில் அமர்ந்து நாளும் உலகத் தொடர்பைப் பெற்றிருந்தார். உடனுக்குடன் மறுமொழி விடுக்கும் இயல்புடையவர். ஆங்கில அறிவும், கணக்கு அறிவும், கல்வியியல் அறிவும் நிரம்பப் பெற்றவர். கல்வியிலும் ஆராய்ச்சியிலும் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்த காரணத்தால் திருமணம் செய்துகொள்ளவில்லை. தம் உறவினர்களின் அரவணைப்பில் தம் இறுதிக்காலத்தைக் கழித்துவந்தார். திரு. கோணேச பிள்ளை அவர்கள் என்னுடன் தொடர்ந்து நல்ல தொடர்பில் இருந்தார். அடிக்கடி மின்னஞ்சலில் தொடர்புகொள்வார். ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் வரைந்த பல மடல்கள் என்னிடம் உள்ளன. விபுலாநந்தர் குறித்த அரிய செய்திகளை அவரிடமிருந்து பெற்றுள்ளேன். அண்மையில் அவர் எழுதிய பலதுறை அறிவுசார் கட்டுரைகள் (கணித, விஞ்ஞான, கல்விசார்  கடுரைகள்) என்ற நூலினை எனக்கு அனுப்பி, என் கருத்தைக் கேட்டிருந்தார். மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பான அந்த நூல்  கலாநிதி கோணேச பிள்ளையின் பெருமையை என்றும் சொல்லிக்கொண்டேயிருக்கும். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கணிதமேதை, கல்வியியல் மேதை என்று கோணேச பிள்ளையைச் சொல்லலாம். நம் காலத்தில் வாழ்ந்து, உரிய சிறப்பினைப் பெறாமல் போன எத்தனையோ மேதைகளைப் போல் நம் கோணே சபிள்ளைக்கு உரிய சிறப்புகளும் அமையாமல் போனமை நம் போகூழ் என்றே சொல்ல வேண்டும்.

 கலாநிதி கோணமலை கோணேச பிள்ளையைப் பிரிந்து வருந்தும் அவர்தம் உற்றார் உறவினருக்கும், நண்பர்களுக்கும் அவர்தம் மாணவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


கோணேச பிள்ளை(தம் கணினியுடன்)


பேராசிரியர் கோணேச பிள்ளையுடன், சிவமணி, காசுபதி நடராசா, 
சிவம் வேலுப் பிள்ளை, மு.இளங்கோவன்
ஒளிப்பதிவின்பொழுது...
ஒளிப்பதிவின்பொழுது...

வெள்ளி, 4 மே, 2018

தொல்காப்பியம் நூலுக்கு உரைவரைவோர் கவனத்திற்கு!
தொல்காப்பியம் நூலுக்கு அரும்பெறல் உரைகள் கிடைத்துள்ளன. இளம்பூரணர் தொடங்கி, அண்மைக்கால உரையாசிரியர்கள் வரை தமிழின் மரபு உணர்ந்து சிறப்பான உரைகளைப் பலரும் எழுதியுள்ளனர். தக்க உரைகளை வரவேற்றுப் போற்றிய தமிழர்கள், தகுதியற்ற உரைகளைக் கண்டித்துள்ளமையையும் இங்குக் குறிப்பிடுதல் வேண்டும்.

அண்மையில் தமிழார்வலர் ஒருவர் தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டுக்கும் உரைவரைந்து, நூலாக அச்சிட்டு, தமிழகம் முழுவதும் இலவயமாக அனுப்பி வருகின்றார். பொருளதிகாரத்திற்கும் உரைவரைந்து, விரைந்து வெளியிடும் நோக்கில் செயல்படுகின்றார். தமிழகத்துப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், தமிழ்த்துறைத் தலைவர்கள் இந்த நூல் வெளிவருவதற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன.

தொல்காப்பிய நூற்பாக்களில் இடம்பெறும் சொற்களை மனம்போன போக்கில் உடைத்துப் பொருள்கொண்டும் (எ.கா. ஆக்கம் = ஆக்+அம்= ஆக்கம்; திணை= த்+இணை= திணை; ), தமிழ் இலக்கண மரபுக்குப் பொருந்தாத வகையிலும் வெளிவந்துள்ள இந்த உரைநூல் கண்டிக்கத்தக்கது. இதற்குத் துணைபோகும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களும் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள். அன்புகூர்ந்து தொல்காப்பியத்துக்கு உரைவரைய முற்படுவோர் மூல நூல்களையும் பழைய உரைகளையும் கற்ற பிறகு இந்த முயற்சியில் ஈடுபடுவது நலம் பயக்கும்.

சான்றுக்காகத் தொல்காப்பியம்-  பொருளதிகாரத்திற்குப் புதிய உரையாசிரியர் எழுதியுள்ள,  உரைக் குறிப்பின் இரண்டு பக்கத்தை மட்டும் இணைத்துள்ளேன்.

புதன், 2 மே, 2018

மங்கலதேவி கண்ணகி கோட்டத்தில் சித்திரை முழுநிலவு நாள் விழா! கண்ணகி கோவில்(1)
கண்ணகி கோவில்(2)
கண்ணகி கோவில்(3)  சிலப்பதிகாரத்தைப் படிக்கத் தொடங்கிய காலம் முதல் அதில் புதைந்துகிடக்கும் இசைநுட்பங்களையும் காப்பியக் கட்டமைப்பினையும் வரலாற்றுக் குறிப்புகளையும் எண்ணி எண்ணி வியப்பது உண்டு. என் ஆசிரியர் பெருமான், இசைமேதை வீ. ப. கா. சுந்தரம் அவர்கள், "பத்தாண்டுகள் படித்தேன் சிலப்பதிகாரம் ஓரளவு விளங்கிற்று எனவும், அறுபது ஆண்டுகளாகப் படிக்கின்றேன்; இன்னும் பல பகுதிகள் விளங்கவில்லை" எனவும் அடிக்கடி குறிப்பிடுவார்கள். அந்த அளவிற்குச் சிலப்பதிகாரம் நுட்பமான காப்பியம் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

  சிலப்பதிகாரத்தின் கதைக்களமாக விளங்கிய பூம்புகாருக்குப் பலமுறை சென்றுள்ளேன் (இன்றைய பூம்புகாருக்கு ஐந்துகல் தொலைவில் பழைய பூம்புகார் உள்ளது என்பது அறிஞர் கருத்து). அதுபோல் மதுரைக்கும் பலமுறை சென்றுள்ளேன். ஆனால் காப்பியத் தலைவி கண்ணகி வானுலகம் புக்க இடமான வேங்கை மரங்களடர்ந்த "செங்கோட்டு உயர்வரைச் சேண் உயர் சிலம்புக்கு"ச் செல்லும் வாய்ப்பு இதுநாள் வரை அமையாமல் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழுநிலவு நாளில் தமிழகம் - கேரளம் எல்லைப் பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலுக்குச் செல்லும் விருப்பம் எனக்கு எழுவதும், அடங்குவதுமாக இருந்தது. இந்தச் சித்திரை முழுநிலவு நாளில் (30.04.2018) என் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது.

  நான்கு நாட்களுக்கு முன்பாக என் அருமை நண்பர் கொப்பம்பட்டி சிவ. முத்துக்குமாரசாமி அவர்கள் தொலைபேசியில் அழைத்து, சித்திரை முழுநிலவு நாளில் மங்கலதேவி கண்ணகி கோட்டம் செல்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும், நான் உரிய நாளில் வந்துசேருமாறும் அன்புடன் வேண்டுகோள் வைத்தார்கள். நண்பரின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து, எனக்கிருந்த பல்வேறு பணிகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, முதல்நாளே, தேனி நகரத்திற்குச் சென்று அவர் மனையில் தங்கினேன் (29.04.2018).

  30.04.2018 காலை 7.30 மணிக்கு எங்கள் உந்துவண்டி புறப்பட்டது. சின்னமனூர் வழியாகக் கம்பம் சென்றோம். சின்னமனூர் பெயர்ப்பலகையைப் பார்த்ததும் சின்னமனூர்ச் செப்பேட்டின் சிறப்பை நண்பர்களுக்கு நினைவூட்டினேன். கம்பம் பயணியர் மாளிகையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குநர்  திரு. மு. இராசேந்திரன் இ. ஆ. ப. அவர்கள் தங்கியிருக்கும் விவரம் அறிந்து, அவர்களைச் சந்திக்க எண்ணினோம். எங்கள் வருகையை முன்பே அறிந்திருந்த திரு. மு. இராசேந்திரன் எங்களை அன்பொழுக வரவேற்றார்கள். இதுநாள்வரை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை செய்துவரும் பணிகளையும், எதிர்காலத்தில் செய்ய விரும்பும் செயல்களையும் எங்களுக்கு எடுத்துரைத்தார்கள். காலைச் சிற்றுண்டியை அனைவரும் உண்டபடியே பல்வேறு செய்திகளைப் பகிர்ந்துகொண்டோம். என் நெடுநாளைய நண்பர் முனைவர் மனோகரன் (தேவாரம் - வேளாண்மை அதிகாரி) அவர்களையும் எதிர்பாராமல் இங்குச் சந்தித்தமை மகிழ்ச்சி தந்தது. இரண்டு உந்து வண்டிகளில் கம்பத்திலிருந்து அனைவரும் புறப்பட்டோம்.

  உந்துவண்டியில் செல்லும்பொழுது முல்லைப் பேரியாற்றில் அணைகட்டிய பென்னிகுய்க்கு அவர்களின் சிறப்புகளையும் அவரின் பொறியியல் அறிவு, விடாமுயற்சியின் சிறப்புகளையும் நினைவுகூர்ந்தபடியே சென்றோம். மலையேறுவதற்கு வசதியாக, கூடலூரில் நாங்கள் வேறு வண்டிக்கு மாறி, ஏறிக்கொண்டோம். கேரள எல்லையான குமுளியை 11 மணிக்கு அடைந்தோம். முன்பே திட்டமிட்டவாறு உந்துவண்டிக்கும், செல்லும் நபர்களின் எண்ணிக்கைக்குமாக இரண்டு அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டோம்.

  தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு வனத்துறை, கேரள காவல்துறை, கேரள வனத்துறையினர் இணைந்து, மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு மக்கள் சென்று வழிபடுவதற்குரிய ஏற்பாடுகளை ஆண்டுதோறும் செய்வது வழக்கம்.  தமிழகத்திலிருந்தும், கேரளாவிலிருந்தும் மக்கள் வழிபாட்டுக்கு ஆர்வமுடன் வருகின்றனர். வழிபாட்டுக்கு வரும் மக்களுக்குக் கேரளத்துக் காவல்துறையினரும், வனத்துறையினரும் பல்வேறு இன்னல்கள் தருவதாக ஆண்டுதோறும் பக்தர்கள் குற்றம்சாற்றுவது உண்டு. இந்தப் பயணத்தில் நானும் உணர்ந்தேன்.

  கேரளாவுக்கும் தமிழகத்திற்கும் எல்லை வகுக்கப்படாமல் பல கல் தொலைவு பகுதி உள்ளது. அதில் கண்ணகி கோவில் மலைப்பகுதியும் அடங்கும். கண்ணகி கோவில் தமிழகத்தின் எல்லையில் இருப்பதை அண்மைக்காலம் வரை தமிழகத்து வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கிய சான்றுகளால் அறியமுடிகின்றது. இதுகுறித்த வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருட்டினன் எழுதிய கட்டுரை ஒன்று அரிய செய்திகளைக் கொண்டது (தினமணி 25-04-2008).

பூம்புகார் புலவர் நா. தியாகராசனுடன் உரையாடியபொழுது அவர் பத்தாண்டுகளுக்கும் மேல் கண்ணகி கோவிலுக்குச் சென்று வந்ததாகவும் பேராசிரியர் கோவிந்தராசனார், புலவர் செ.இராசு, முனைவர் துளசி இராமசாமி, வலம்புரி ஜான், சோமசுந்தரம் உள்ளிட்டோர் இதுகுறித்து அரிய நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

     தமிழகத்து மக்கள் மூன்றுநாள் பயணமாக ஆட்டுக்குட்டி முதலியவற்றைக் கொண்டுபோய் வெட்டி, பொங்கலிட்டுப் படையல் இட்டு, கண்ணகி அம்மனை வழிபாடு செய்துள்ளனர் என்பதை அங்கு வந்த மூத்தோர்வாய் கேட்டுணர்ந்தேன்.  கண்ணகி வழிபாடு குறித்து, தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் பல்வேறு குறிப்புகள் உள்ளன.

"செங் கோட்டு உயர் வரைச் சேண் உயர் சிலம்பில்,
பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலைநிரம்பிய
அணி கயம் பல உளஆங்கு அவை இடையது,
கடிப்பகை நுண் கலும்கவிர் இதழ்க் குறுங் கலும்,
இடிக் கலப்பு அன்ன இழைந்து உகு நீரும்,
உண்டு ஓர் சுனைஅதனுள் புக்கு ஆடினர்
பண்டைப் பிறவியர் ஆகுவர்;"  (சிலப்பதிகாரம், வஞ்சி, வரம்தரு காதை 54-60)

எனவும்

"முலைமுகம் திருகிய மூவா மேனி
பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து,
நித்தல் விழா அணி நிகழ்க என்று ஏவி,
பூவும்புகையும்மேவிய விரையும்,
தேவந்திகையைச் செய்க என்று அருளி,
வலமுறை மும் முறை வந்தனன் வணங்கி"
                      (சிலப்பதிகாரம், வஞ்சி, வரம்தரு காதை 150-155)

எனவும் குறிப்புகள் உண்டு.

  தமிழ் மக்கள் பல நூறு ஆண்டுகளாகக் கண்ணகி கோவிலை வழிபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பளியன்குடியிலிருந்து மலையேறி, கண்ணகி கோவிலை அடையலாம். அந்தப் பாதை வழியாகவும் தமிழகத்து மக்கள் ஆறு கல் தொலைவு நடந்து வந்து, ஆண்டுதோறும் வழிபாடு செய்கின்றனர். இவ்வாறு செல்லும் பாதையைத் தமிழக அரசு செப்பனிட்டுப், பாதுகாப்பை உருவாக்கினால் கேரள அரசின் தயவு நமக்குத் தேவையில்லை. நம் மக்கள் விடுதலையாகக் கண்ணகிக் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வரலாம். 1959 ஆம் ஆண்டு  வரை கண்ணகி கோவிலைக்  கண்டுகொள்ளாமல் இருந்த கேரள அரசு, படிப்படியாகச் சூழ்ச்சி செய்து, 1976  முதல் தம் வல்லாதிக்கத்தைச் செலுத்த தொடங்கியது. தேக்கடியிலிருந்து அவசர அவசரமாக 14 கி.மீ. சாலையைத் தம் மலைப்பகுதியில் அமைத்து, கண்ணகி கோவிலுக்கு உரிமைகோரும் வேலையைத் தொடங்கியது. காட்டுவிலங்குகளைக் காரணம் காட்டி, மக்கள் சென்று வழிபடத் தடை ஏற்படுத்தியது. கோவிலில் இருந்த சிலைகள், கல்வெட்டுகள், கோபுரப் பகுதிகள் யாவும் சிதைக்கப்பட்டுக், கோவில் அடையாளம் காணமுடியாதபடி யாராலோ பாழ்படுத்தப்பட்டுவிட்டது. கண்ணகி கோவிலில் மூன்று கோவில் பகுதிகள் காணப்படுகின்றன. பழைய சிலைகள் நீக்கப்பெற்று இன்று புதிய சிலைகளை வைத்துள்ளனர். யாண்டும் கண்ணகியின் உருவினைக் காண இயலவில்லை. கண்ணகி அமர்ந்த கோலத்தில் இருந்த அடிப்பகுதி மட்டும் இருப்பதாகவும், தலைப்பகுதி உடைக்கப்பட்டு, வேறு இடத்தில் கிடந்தது எனவும் தஞ்சைப் பேராசிரியர் கோவிந்தராசனார் அதனைப் படமாக வரைந்து கொண்டுவந்ததாகவும், தலைப்பகுதி சிலையைக் கொண்டு வந்தததாகவும் செய்திகள் ஆய்வுலகில் உள்ளன.


  மங்கலதேவி கண்ணகி கோவிலுக்குக் கேரள மாநிலம் இடுக்கி வட்டத்தில் இருக்கும் குமுளியிலிருந்து சித்திரை முழுநிலவுநாளில் மட்டும் செல்ல இயலும். அதுபோல் இந்த நாளில் தமிழகத்தின் கூடலூர்ப் பகுதியில் உள்ள பளியன்குடியிலிருந்து ஆறு கல் தொலைவு நடந்து கண்ணகி கோவிலை அடையலாம்.

  நடந்து செல்ல இயலாதவர்கள் குமுளி சென்று, பேருந்து நிலையத்தில் தற்காலிகமாகச் செயல்படும் அலுவலகத்தில் வண்டிகளுக்கான நுழைவுச்சீட்டு, ஆள்களுக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற்று, அதற்கென உள்ள உந்து வண்டிகளில் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு 14 கி.மீ. பயணம் செய்து கோவிலை அடையலாம்.

  கண்ணகி கோவிலுக்குச் செல்லும் மக்களைக் கேரளக் காவல்துறையினர் சோதித்து அனுப்புகின்றனர். ஞெகிழிப் பைகள், உணவுப்பொட்டலங்களை எடுத்துச்செல்லத் தடைவிதித்துள்ளனர். 5 லிட்டர் அளவுள்ள கேன்களில் தண்ணீர் கொண்டுசெல்லலாம். நடந்தும், வண்டிகளிலும் மக்கள் ஆர்வமாகச் செல்கின்றனர். கரடு முரடான பாதை. மேடு பள்ளங்கள் நிறைந்துள்ளது. காலை ஐந்துமணி முதல் வழிபாடு தொடங்குகின்றது. பிற்பகல் 3 மணிக்குள் வழிபாட்டை முடித்துக்கொண்டு கோவிலிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும். மாலை 4 மணிக்கு அங்கு ஆள் நடமாட்டமே இருக்காது. ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் செல்ல அனுமதி என்பதால் அனைவரும் கோவிலுக்குச் சென்று வருவதில் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழர்களும், கேரள மக்களும் பயபக்தியுடன் சென்று வழிபாடு நிகழ்த்துகின்றனர். போகும் வழியில் வண்டியை நிறுத்தி நினைவுக்குச் சில படங்களை எடுத்துக்கொண்டேன்.

  கோவிலுக்கு முன்பாகவே நூறு அடி தூரத்தில் கோவிலின் சிதைந்த பகுதித் தூண்கள் கிடந்தன. கோவில் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் உரிமை கோருவார்கள் என்று திட்டமிட்டே, இக்கோவிலைச் சிதைத்துள்ளனர் போலும்!. முழுமையான சுற்றுச்சுவர்களுடன் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த தோரண வாயில்களைக் கொண்டு கோவில் விளங்கியிருக்க வேண்டும். மதுரையை நோக்கியவாறு கோவிலின் முகப்பு வாயில் உள்ளது. கல்வெட்டுகள் சில காணப்படுகின்றன. கோவில்களில் இருந்த பழைய சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டு, அண்மைக்கால வழிபாட்டுக்குரிய பகவதி சிலை, இலிங்கம் உள்ளிட்டவை உள்ளன.

  இராசஇராச சோழன் காலத்தில் இக்கோவிலுக்குத் திருப்பணி நடைபெற்றதை இலங்கை வரலாற்று நூலான சூள வம்சம் தெரிவிக்கின்றது. பாண்டிய மன்னர்களான குலசேகர பாண்டியன், கனக வீர தொண்டைமான் ஆகியோர் இக்கோவிலைப் புதுப்பித்துத் திருப்பணிகள் செய்ததாகக் கல்வெட்டுகளின் துணையுடன் வழக்கறிஞர் இராதாகிருட்டினன் எழுதியுள்ளார்.  நாயக்க மன்னர்கள் காலத்தில், புன்செய் ஆற்றுத் தம்பிரான்கள் வழிவந்தவர்கள் மானியங்களும், திருப்பணிகளும் இக்கோவிலுக்குச் செய்துள்ளனர் என்பதையும் கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. காலப் பழைமையாலும், பரமாரிப்பு இல்லாமையாலும், திட்டமிட்ட அடையாள அழிப்புகளாலும் கண்ணகி கோவில் சிதைந்துள்ளதை நேரில் கண்டறிந்தேன்.

  கண்ணகி கோவில் அறக்கட்டளையின் நிறுவுநர் மு. இராசேந்திரன் இ.ஆ.ப. அவர்கள் கண்ணகி கோவிலின் அமைப்பு, வரலாற்றுச் சிறப்பு, தமிழகத்து மக்களின் வழிபாட்டு உணர்வு, இக்கோவிலை மீட்டு, தமிழகத்து மக்கள் எந்த இடையூறும் இல்லாமல் ஆண்டின் அனைத்து நாள்களிலும் சென்று வழிபட்டு வருவதற்குக் கேரள நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள விவரங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.

மு.இராசேந்திரன் இ.ஆ.ப., கோவில்மலை அரசர் இராம் நாயக், மு.இளங்கோவன், சிவ.முத்துக்குமாரசாமி  கோவில்மலை அரசர் இராமன் நாயக் இராசமன்னார் (மன்னாடியார் என்ற பழங்குடி இனத்தின் தலைவர்) இன்றைய நிகழ்ச்சிக்கு வந்திருந்தமை எங்களுக்கு மகிழ்ச்சி தந்தது. ஆணையர் மு.இராசேந்திரன் ஐயா அரசருக்கு என்னை அறிமுகம் செய்தார். கண்ணகி இந்த மலைப்பகுதிக்கு வந்தபொழுது, இந்த இராமன் நாயக்கின் முன்னோர்கள் சந்தித்ததாகவும், கண்ணகி குறித்த செய்திகள், நம்பிக்கைகள், பாடல்கள், சடங்குகள் இவர்களிடம் இருப்பதாகவும் அரசர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அடுத்த முறை தனித்து வந்து அரசரையும் அவர்களைச் சார்ந்த மக்களையும் சந்திப்பதாகத் தெரிவித்து அவரிடம் விடைபெற்றுக்கொண்டேன். ஆணையர் மு.இராசேந்திரன் ஐயாவின் பரிந்துரையால் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டோம். கோவிலின் உள் பகுதிகளுக்குச் சென்று தேவையான படங்களை எடுத்துக்கொண்டோம் சிலரை நேர்காணல் செய்து பதிவுசெய்துகொண்டோம். இறைவழிபாட்டுக்கு வரும் மக்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகள், பாதுகாப்பு வசதிகள் இங்குச் செய்யப்பட்டிருந்தன.

 முழுநிலவு நாளில் மழைபொழிவது வழக்கமாம். அவ்வாறு மழை பெய்தால் மக்கள் நனையாமல் இருப்பதற்குத் தற்காலிகக் கூடாரங்களை அமைப்பது பேருதவியாக இருக்கும்.

  தேனி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்து மக்கள் கண்ணகி வழிபாட்டுக்குச் சென்றுவர வசதி செய்துள்ளது. போதிய பேருந்து வசதிகளும் உள்ளன.

  கண்ணகி கோவில் வழிபாடு என்பது தேனி மாவட்டத்து மக்களுக்கும், கேரளாவின் குறிப்பிட்ட சில மாவட்டத்து மக்களுக்கு மட்டும் உரியதாக நினைத்தல் கூடாது. கண்ணகி தெய்வம் உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களுக்கு உரிமையுடையது. இலங்கையில் கண்ணகியம்மன் வழிபாடு அதிகமாக உள்ளது. அடுத்த ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் சித்திரை முழுநிலவு நாளில் மங்கலதேவி கண்ணகி கோட்டம் வந்து குடும்பத்துடன் வழிபட்டுச் செல்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் செல்வதுபோல் தங்களின் முன்னோர் காலத்திலிருந்து வழிபாட்டில் உள்ள கண்ணகி கோவிலுக்கு வருவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நமக்குள்ள வழிபாட்டு  உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தமிழ் மக்கள் தமிழக மலைப்பகுதியில் சாலை அமைத்துப் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திப், பண்பாடு காப்பதற்கு முன்வர வேண்டும்.

  பிற்பகல் 2.30 மணியிலிருந்து கண்ணகி கோவில் வழிபாட்டை முடித்துக்கொண்டு மக்கள் மலையிறங்கத் தொடங்கினர். அந்த நேத்தில் சிறிதளவு மழைபொழிந்தது. வண்டிகளின் வேகத்தில் பறந்த புழுதியை அந்த மென்மழை அடக்கியது. சிலப்பதிகார நினைவுகளுடனும், கண்ணகி கோவில் நினைவுகளுடனும் நாங்கள் குமுளியை நெருங்கியபொழுது, மக்களை ஏற்றிவருவதற்கு வெறும் ஜீப்பு வண்டிகள் மலையில் ஏறிக்கொண்டிருந்தன.
கண்ணகியை வழிபடுவதற்குக் காத்திருக்கும் மக்கள்

கண்ணகி கோவில் கல்வெட்டு