நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
#பொற்கோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#பொற்கோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 மே, 2020

பொற்கோவின் வாழ்க்கைப் பாதை!




 பேராசிரியர் பொற்கோ அவர்களின் வாழ்க்கை வரலாறு,பொற்கோவின் வாழ்க்கைப் பாதை” என்ற தலைப்பில் 2018 ஆம் ஆண்டில் 446 பக்கம் கொண்ட நூலாக வெளிவந்தது. நீண்ட நாட்களாகப் படிப்பதற்கு எடுத்து வைத்திருந்த இந்த நூலினை இப்பொழுதுதான் படிக்க முடிந்தது. தனிப்பட்ட ஒருவரின் வரலாறாக இல்லாமல் இந்த நூல் தமிழகத்து ஆளுமைகள் பலரைக் குறித்த செய்திகளையும் தாங்கி நிற்கின்றது. தமிழகத்தின் கல்வி வரலாறாகவும் மலர்ந்துள்ளது. இலண்டனில் தமிழ் தழைத்த வரலாற்றையும் இந்த நூல் வழியாக அறிந்துகொள்கின்றோம். தமிழகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களின் எழுச்சி, தேக்க நிலைகள் யாவும் இந்நூலில் பதிவாகியுள்ளன.

 முந்திரிக் காடுகள் நிறைந்த செம்மண் நிலமான இரும்புலிக்குறிச்சி (உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம்)  என்ற சிற்றூரில் உழவர் குடியில் பிறந்து, திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று, இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைக் கலையியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் (SOAS) நிறுவனம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய பொற்கோவின் பனிமலை நிகர்த்த வாழ்க்கை வரலாறு இந்த நூலில் அருமையாகப் பதிவாகியுள்ளது.

 இலண்டனில் பணிபுரிந்தபொழுது இலண்டன் தமிழ்ச்சங்கம், இலண்டன் முரசு (இதழ்), பி.பி.சி. தமிழோசை உள்ளிட்ட அமைப்புகளின் வளர்ச்சிக்குத் துணை நின்றுள்ளார். கீழைக் கலையியல் நிறுவனத்தில் இவர் தமிழ் கற்பித்த முறை, ஐரோப்பிய நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. இங்கு இவர் உருவாக்கிய பாடத்திட்டமே இன்றும் பயன்பாட்டில் இருப்பதை அறிந்து நமக்குப் பெருமையே ஏற்படுகின்றது. அதுபோல் ரெடிங் பல்கலைக்கழகத்திலும் இவரின் கல்விப்பணி நீண்டு அமைந்தமையை எண்ணும்பொழுது வியப்பு மேலிடுகின்றது. இலண்டன் பணியைத் துறந்து, தாய்நாட்டுக்குத் தம் அறிவு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் திரும்பிய இவருக்கு அமைந்த வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை அறியும்பொழுது இவர்தம் படிநிலை வளர்ச்சி நேர்மையான நிலையில் அமைந்தமை சிறப்பாக எண்ணத்தக்கது.

 பேராசிரியர்கள் மால்கம் ஆதிசேஷையா, ஜி.ஆர். தாமோதரனார். நெ.து. சுந்தரவடிவேலு, தொ.பொ.மீனாட்சிசுந்தரம், மு.வ. ச.அகத்தியலிங்கம், சுசுமு ஓனோ, ஜான் இரால்ஸ்டன் மார் உள்ளிட்ட அறிஞர்கள் இவரின் வாழ்வில் கொண்டிருந்த தொடர்புகள் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

 பேராசிரியர் பொற்கோ அவர்கள் தமிழகத்தின் மிகச் சிறந்த பேராசிரியர்; மொழியியல் அறிஞர். ஆளுமைத் திறம் கொண்ட துணைவேந்தர். இதழாசிரியர். பேச்சாளர். ஆய்வாளர். கல்வியாளர். பகுத்தறிவுச் சிந்தனையாளர். மாந்தநேயம் கொண்டவர். கல்வி, சமூக மேம்பாட்டுக்கான செயல்திட்டங்களை உருவாக்கி, நடைமுறைப்படுத்தியவர். தமிழக அரசு, தமிழகப் பல்கலைக்கழகங்கள் சார்ந்த பல பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு உழைத்தவர். இவரின் நெறிகாட்டலில் பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அமெரிக்க, ஐரோப்பிய, தென்னாப்பிரிக்க, மலேசிய, சிங்கப்பூர், சப்பான், மொரீசியசு உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகைபுரிந்து இவரிடம்  தமிழ் கற்ற மாணவர்களின் எண்ணிக்கை கணக்கற்று நீளும்.

 சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளிலும் இவரின் கல்விப்பணி நீண்டிருந்தது.

 தமிழகத்தின் கல்வி அமைப்புகள், தமிழமைப்புகளின் அழைப்பில் சென்று உரையாற்றித் தமிழாய்வு தழைக்க உழைத்தவர். தமிழகத்து அரசியல் தலைவர்களுடன் இணைந்து பணிபுரிந்த பேறு பெற்றவர். இக்கால இலக்கணம் கண்டவர்; திருக்குறளுக்கு உரைவரைந்தவர்; தொல்காப்பிய அறிமுகம் நூல் தந்தவர். ஆய்வியல் அறிமுகத்தைப் பயிற்றுவித்தவர். பிறமொழி மாணவர்கள் தமிழ் கற்க உதவும் நூல்களை ஆங்கிலத்தில் வரைந்தவர். இவர்தம் நீண்ட நெடிய வரலாற்றினைத் தாங்கி நிற்கும் பொற்கோவின் வாழ்க்கைப் பாதை நூல் தமிழுணர்வாளர்கள் கற்றுப் பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலம். செய்திகளின் பெட்டகம்.

 இந்த நூலில் பொற்கோவின் கல்விப் பயணம், பயிற்றுவித்த ஆசிரியர்கள், துணை நின்ற நண்பர்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய பட்டறிவுகள், பொதுப்பணியில் ஈடுபட்ட நினைவுகள், நூலாக்கப் பணிகள், இதழ் வெளியீட்டுப் பங்களிப்பு, குடும்ப வாழ்க்கை, தந்தை பெரியார், தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார், அறிஞர் வே.ஆனைமுத்து உள்ளிட்டோருடன் அமைந்த தொடர்புகள் யாவும் நிரல்பட எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

 முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க  மூத்த மொழியியல் அறிஞர் பொற்கோ அவர்களின் வாழ்க்கை வரலாறு விளக்கும் அரிய நூலினைக் கற்ற பிறகு நெஞ்சம் அமைதியில் திளைத்தது. உழைப்பும் நேர்மையும் ஒருவனை உயர்த்தும் என்ற நம்பிக்கை வேர்கொண்டது. உள்ளங் கவர்ந்த இந்த நூலினை முன்மொழிவதில் மகிழ்கின்றேன்.


சனி, 11 ஜூன், 2011

பொற்கோவின் அயலகத் தமிழ்ப்பணிகள்



   தமிழ் இலக்கியம், இலக்கணம் கற்ற அறிஞர்கள் மொழியியல்துறையின் வல்லுநர்களையும் அவர்களின் கருத்துகளையும் ஏற்கத் தயங்குவார்கள். அதுபோல் மொழியியல்துறை வல்லுநர்கள் தமிழறிஞர்களைத் தாழ்த்திப் பார்ப்பது உண்டு. இந்நிலைதான் தமிழகத்தில் பலவாண்டுகளாக நிலவியது. இச்சூழலில் தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் முறையாகத் திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் கற்றும், மொழியியலை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பயின்றும் பேரறிவு பெற்றவர் பொற்கோ அவர்கள் ஆவார். தமிழறிஞராகவும், மொழியியல் அறிஞராகவும் இருதுறை சார்ந்த அறிஞர் பெருமக்களால் இன்று போற்றப்படும் உலக மொழியியல் அறிஞர் பொற்கோ ஆவார். இவரின் தமிழ்ப்பணிகள் பல தரத்தன. திறத்தன.

  தமிழகத்தின் பல பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள் இவரிடம் தமிழ் பயின்றமை போலவே, பிறநாட்டு மாணவர்களும் அறிஞர்களும் இவரிடம் தமிழ் பயின்றுள்ளனர். பன்னாட்டு அறிஞர்கள், ஆய்வாளர்களின் ஆய்வுரைகளை மதிப்பிட்ட பெருமையும் இவருக்கு உண்டு. உலக அளவில் புகழ்பெற்ற அறிஞர்களான எமனோ, சான் இரால்சுடன் மார், கமில்சுவலபில், சுசுமு ஓனோ உள்ளிட்டவர்களின் பெரும் மதிப்பிற்கு உரியவர்.

 பொற்கோ அவர்கள் பல நாடுகளுக்குச் சென்று அங்கு நடைபெற்ற தமிழாய்வுகளை அறிந்த பெருமைக்குரியவர். அதுபோல் பல நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்திய பெருமைக்கு உரியவர். இக்கட்டுரையில் அறிஞர் பொற்கோ அவர்களின் அயலகத் தமிழ்ப் பணிகள் சுருக்கமாக நினைவுகூரப்படுகின்றன.

இலண்டன் பணி

  அறிஞர் பொற்கோ அவர்கள் பல்கலைக்கழகக் கல்வியை நிறைவுசெய்த தம் இருபத்தொன்பதாம் அகவையில் (1970) இலண்டன் மாநகரில் உள்ள இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைக் கலையியல் ஆய்வு நிறுவனத்தில் ஆசிரியப் பணியாற்றிய பெருமைக்குரியவர். இரண்டாண்டு காலம் இலண்டனில் தங்கிப் பொற்கோ அவர்கள் தமிழ்ப்பணியாற்றினார். முனைவர் சான் இரால்சுடன் மார் அவர்கள் முனைவர் பொற்கோ அவர்களின் கல்வியார்வம் அறிந்து, இலண்டனில் பணியாற்றுவதற்கு அழைத்துச் சென்றவர்.

  முனைவர் மார் அவர்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் முதன்முதல் சங்க இலக்கியத்தை முனைவர் பட்டத்திற்கு உட்படுத்தி ஆய்வு செய்த பெருமகனார் ஆவார். முனைவர் மார் அவர்களும் அறிஞர் பொற்கோ அவர்களும் இணைந்து இலண்டனில் தமிழ் பயிலுவதற்குரிய உயரிய சூழலை ஏற்படுத்தினர். இவர்களிடம் சற்றொப்ப நாற்பது மாணவர்கள் ஒரே காலத்தில் தமிழ் கற்றனர். இவ்வாறு கற்றவர்கள் யாவரும் பிற துறைசார்ந்தவர்கள். இலண்டன் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வுக்கூடத்தில் பொற்கோ நடத்திய பாடங்கள் பலமணிநேர ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பெற்று இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. பொற்கோ அவர்கள் உருவாக்கிய பாடம்தான் பல்லாண்டுகளாக  அங்கு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது.

  இலண்டனில் தமிழாய்விலும் மொழியியல் ஆய்விலும் ஈடுபட்ட பலருக்கு முனைவர் பொற்கோ அவர்கள் உதவியுள்ளார். ரெடிங் பல்கலைக்கழகத்தில் ஒரு மாதம் பயிற்றுவிக்கப்படும் “இன்டன்சிவ் கோர்சு” எனும் இந்தியாவுக்கு வரும் ஆங்கிலேயர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியையும் பொற்கோ அவர்கள் ஈடுபாட்டுடன் செய்துள்ளார்.

  ஆக்சுபோர்டு, கேம்பிரிட்சில் பல சிறப்புரைகளைப் பொற்கோ அவர்கள் வழங்கியுள்ளதுடன் ஆய்வாளர்களின் ஆய்வுகளுக்கு ஊக்கமாக உதவியுள்ளார். இங்கிலாந்து முழுவதும் நடைபெற்ற தமிழ், வரலாறு, தத்துவம், மொழியியல், இலக்கியம் சார்ந்த ஆய்வேடுகளைப் படித்து, ஆய்வேட்டுச் செய்திகள் வெளியுலகுக்குத் தெரிய அவற்றை இலண்டன் பி.பி.சியின் வழியாக அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளார். இவ்வாறு இவர் இலண்டனில் பி.பி.சியில் ஆற்றிய உரை(1972) நூலாக வெளிவந்துள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட உரைகள் இடம்பெற்றுள்ளன. இலண்டனில் பணிபுரிந்த காலத்தில் பிரிட்டிசு கவுன்சில் நூலகத்திற்கு நாளும் சென்று பயிலும் பழக்கத்தைக் கொண்டிருந்ததால் அங்குப் பணியாற்றிய பலரும் பொற்கோவை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

  இலண்டனில் பொற்கோ இருந்த காலத்தில் இலண்டன் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு மிகுந்து, சங்கம் இரண்டு அணியாக இருந்தது. நீதிமன்றம் செல்லும் நிலையில் இருந்த இரண்டு பிரிவினரையும் பொற்கோ அழைத்து (திரு.செல்வநாயகம் உதவியுடன்) ஒன்று சேர்த்த பெருமைக்குரியவர். இதற்குக் கோவை செழியன் அவர்களும் உதவியாக இருந்துள்ளார். இலண்டன் சேகர், கேப்டன் பதி உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்புடன் சங்கத்தினர் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாயினர். இந்த நிகழ்வுகள் யாவும் இலண்டன் தமிழ்ச்சங்க மலரின் பதிவாகியுள்ளது. தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் இணைந்தபிறகு முறையான தேர்தல் நடைபெற்றுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவரை தலைமைப் பொறுப்பில் இருந்த பொற்கோ முறையான தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தாம் அப்பொறுப்பிலிருந்து விலகினார். அதன் பிறகு இலண்டன் தமிழ்ச்சங்கத்தின் புரவலராகப் பணியாற்றினார். தமிழ்ச்சங்கத்தின் மலர் வெளியீட்டிற்குத் தரமான ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து வழங்கி இலண்டன் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றார்.
இங்கிலாந்தில் பொற்கோ அவர்கள் இருந்தபொழுது ஐரோப்பிய நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளார். பொதுவுடைமை நாடுகளுக்கு மட்டும் செல்லவில்லை.

பொற்கோவின் அமெரிக்கப் பயணம்

  யுனெசுகோ நிறுவனம் அமெரிக்காவில் நடைபெறும் இலக்கியம், இலக்கணம், மொழியியல் ஆய்வுகளைப் பார்வையிட அறிஞர் பொற்கோ அவர்களை அனுப்பி வைத்தது (1973). நோக்குநிலை ஆய்வாளராக (Visiting Fellow) சென்ற முனைவர் பொற்கோ அவர்கள் நாட்டுப்புறவியல், இதழியல் துறை சார்ந்த ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார். நியூயார்க் பல்கலைக்கழகம், சிக்காகோ அருகில் உள்ள வடமேற்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைப் பார்வையிடும் வாய்ப்புப் பெற்றார். அவ்வாறு சென்ற பொழுது வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையினருடன் நெருங்கிப் பழகும் சூழல் அமைந்தது. அவர்களின் விருந்தினராகத் தங்கும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு நடந்த புதுக்கவிதை (New Poetry) வகுப்புகளையும் கவனித்தார். இங்கு செர்மனியிலிருந்து வந்து, புதுக்கவிதையைக் கற்பித்த ஆசிரியர் மரபுவழிப் பட்டங்களைப் பெறாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொற்கோ அவர்கள் வடமேற்குப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பாடங்களையும் மாணவர்களுக்கு நடத்தியுள்ளார்.

  பொற்கோ அவர்களின் அமெரிக்கப் பயணத்தில் பழம்பெருமை கொண்ட நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அப்பொழுது நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி அங்கு நடந்துள்ளது. அமெரிக்காவின் கல்விப் பயணத்தை முடித்துக்கொண்டு பொற்கோ அவர்கள் திரும்பி வரும்பொழுது இலண்டனில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது பொங்கல் விழா நடந்தது. மலர் வெளியிட்டனர். தந்தை பெரியார் படத்தைத் திறந்துவைத்து, பெரியார் பற்றி பொற்கோ அவர்கள் இலண்டன் தமிழ்ச்சங்கத்தில் உரையாற்றினார்.

மலேசியப் பயணம்

 மலேசியாவின் மலேயா பல்கலைக்கழகத்தின் புறநிலை அறிவுரைஞராகவும் பாடத்திட்ட மேம்பாட்டுக்கான ஆய்வு அறிஞராகவும் அப் பல்கலைக்கழகத்திற்குப் பொற்கோ சென்றுள்ளார். மேலும் மலேசியாவின் சோகூர் பாரு என்னும் ஊரில்  இலக்கணத்திற்காக நடைபெற்ற ஒரு பணிமனையில் முதன்மையானவராக இருந்து நடத்திக்கொடுத்துள்ளார். மேலும், சிங்கப்பூர் கல்வி அமைச்சின் அழைப்பின்பேரில் இருமுறை சென்று சிறப்பு வகுப்புகள் நடத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்கப் பயணம்

  பொற்கோ அவர்கள் தென்னாப்பிரிக்க நாட்டுக்கும் கல்விப் பயணமாகச் சென்றுள்ளார். டர்பனில் நடைபெற்ற தமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாட்டுக்கு மையக் கருத்துரை வழங்கும் சிறப்பு அறிஞராகப் பொற்கோ அழைக்கப்பட்டார். அப்பொழுது முனைவர் பொற்கோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  தென்னாப்பிரிக்காவில் பொற்கோ அவர்கள் வழங்கிய பேச்சு அங்குக் குழுமி இருந்த மக்களிடம் ஒரு பெரிய எழுச்சியை உண்டாக்கியது. இந்தப் பயணத்தின்பொழுது டர்பன் பல்கலைக்கழகமும் சென்னைப் பல்கலைக்கழகமும் கல்விசார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அதற்குக் காரணமானவர் முனைவர் பொற்கோ அவர்கள் ஆவார். அதுபோல் மலேயா பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெறவும் பொற்கோ அவர்கள் காரணமாக இருந்துள்ளார். இந்த ஒப்பந்தங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டால் இரு நாட்டுக்கும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் சென்றுவர வாய்ப்பு உருவாகும்.

தமிழ் - சப்பானிய மொழியாய்வில் பொற்கோவின் பங்களிப்பு

  திராவிட மொழிகளுக்கும் சப்பானிய மொழிக்கும் இடையில் நெருங்கிய உறவு உள்ளது என்ற கருத்து சப்பானிய அறிஞர்கள் பலரால் 1975 அளவில் முன்வைக்கப்பட்டது. சப்பானிய மொழியறிஞர் சுசுமு ஓனோ அவர்கள் இந்த ஆய்வை மிகச்சிறப்பாக வளர்த்தெடுத்தார். சுசுமு ஓனோ அவர்கள் ஆற்றிய உரை ஆசகி இதழில் ஒரு கட்டுரையாக வெளிவந்தது. அக்கட்டுரையின் சுருக்கம் ஒன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் ஜி.ஆர். தாமோதரன் அவர்களுக்குச் சப்பானில் உள்ள இந்தியத் தூதரகம் அனுப்பி வைத்தது. துணைவேந்தர் அவர்களின் அறிமுகத்துடன் முனைவர் பொற்கோவும், சுசுமு ஓனோவும் இணைந்து 1979 முதல் ஓராண்டுக் காலம் அஞ்சல் வழியாகச் தமிழ்-சப்பானிய ஆய்வு குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். இது பற்றி பொற்கோ அவர்களைக் கண்டு பேச சுசுமு ஓனோ சென்னை வந்தார். இரண்டு நாள் கலந்து பேசிய சுசுமு ஓனோ டோக்கியோவிற்குச் சென்றார். அதன் பிறகு பொற்கோ, ஓனோ ஆய்வுத்தொடர்பு வலுப்பெற்றது. 1982 இல் சப்பானில் டோக்கியோவில் நடந்த அனைத்துலக மொழியியலார் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி சுசுமு ஓனோ அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று, பொற்கோ அவர்களும் கலந்துகொண்டார்.

  சாப்பான் சென்ற பொற்கோ “திராவிட மொழிகளுக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள மொழித்தொடர்பு” என்ற பொருளில் உரையாற்றினார். இவ்வாறு ஆற்றிய உரை சப்பான் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து சப்பானிய மொழிக்கும். சிறப்பு நிலையில் மொழிபெயர்க்கும்படி வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆய்வுரை முடிந்ததும் பன்னாட்டு ஆய்வறிஞர்களும் பல்வேறு வினாக்களை எழுப்பினர். பின்னர் நிகழ்ந்த தனிக் கலந்துரையாடல்கள் வழியாகவும் தமிழ் சப்பானிய மொழித்தொடர்பு பொற்கோவால் முன்வைக்கப்பட்டது. இந்தச் செய்திகள் இதழ்கள் வழியாகப் பலரின் பார்வைக்குச் சென்றன. 1982 இல் தமிழ் சப்பானிய ஒப்பாய்வு மிகச்சிறப்பான வளர்ச்சி நிலை கண்டது.

காக்சூயின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பொற்கோ

  சப்பானில் உள்ள காக்சூயின் பல்கலைக்கழகத்தின் அழைப்பின்பேரில் விருந்துநிலைப் பேராசிரியராக முனைவர் பொற்கோ அவர்கள் டோக்கியாவுக்கு 1990 இல் சென்று பிப்ரவரி, மார்ச்சு ஆகிய இரண்டு மாதங்களில் ஓனோ அவர்களுடன் தங்கித் தமிழ்-சப்பானிய ஆய்வைத் தொடர்ந்தார். இவ்வாறு தங்கியிருந்தபொழுது இதுவரை நடந்துள்ள தமிழ்-சப்பானிய மொழித்தொடர்பு பற்றிய ஆய்வுகள் அனைத்தையும் படித்து முடித்தார். நாள்தோறும் ஓனோ அவர்களுடன் உரையாடி இந்த ஆய்வு சிறக்க பொற்கோ வழிகாட்டியுள்ளார். இந்த இரண்டு மாதங்களில் பொற்கோ வழங்கிய 1. தமிழ் சப்பானிய மொழிகளில் மிதவை ஒட்டுகள், 2. தமிழ் சப்பானிய மொழிகளில் யாப்பு என்னும் ஆய்வுரைகள் சிறப்பிற்குரியனவாகும்.

  தமிழுக்கும் சப்பானுக்கும் மொழி வழி ஒப்புமை உள்ளதோடு இலக்கிய வழியிலும் வியக்கத்தக்க வகையில் ஒப்புமைகள் உள்ளதைப் பொற்கோ கண்டு காட்டினார். சங்க இலக்கியத் தொகுப்புப் போல் சப்பானில் “மங்யோஷூ” என்று ஒரு தொகை இலக்கியம் காணப்படுகின்றது. மேலும் பண்பாட்டு வழியிலும் ஒப்புமை காணப்படுவதை ஓனோ அவர்களுடன் இணைந்து பொற்கோ கண்டுபிடித்துள்ளார்.

  1993 இல் மீண்டும் பொற்கோ சப்பானுக்கு ஆய்தகைப் பேராசிரியராக அழைக்கப்பட்டார். அப்பொழுது தமிழ் சப்பானிய ஆய்வின் வளர்ச்சி நிலையை விளக்கி ஆங்கிலத்தில் 100 பக்க அளவில் பொற்கோ அவர்கள் ஒரு எழுத்துரையை உருவாக்கினார். 1996 இல் மீண்டும் பொற்கோ ஆய்தகைப் பேராசிரியராக அழைக்கப்பெற்றார். 1999 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் தமிழ் சப்பானிய மொழி ஆய்வு குறித்து விரிவான கலந்தாய்வரங்கம் டோக்கியோவில் காக் சூயின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

  தமிழ் சப்பானிய மொழிகளுக்கு இடையே உள்ள உறவைத் தக்க சான்றுகளுடன் நிறுவியதால் ஓனோ அவர்களும் பொற்கோ அவர்களும் தமிழக மக்களாலும் சப்பானிய மக்களாலும் போற்றப்படும் பெருமைக்கு உரியவர்கள் ஆனார்கள். தமிழ் சப்பான் மொழிகளுக்கு இடையே உள்ள உறவைச் சப்பானிலும் தமிழகத்திலும் அறிவுப்பூர்வமாக அறிமுகப்படுத்திய பெருமை முனைவர் பொற்கோ அவர்களுக்கு உண்டு.

  முனைவர் பொற்கோ அவர்களின் அயலகத் தமிழ்ப் பயணங்கள் தமிழின் சிறப்பைப் பிற நாட்டினர் அறியவும், அயல்நாட்டில் தமிழாய்வுகள் தழைக்கவும் உதவியுள்ளன.

----------------                    ---------------------------                --------------------                ----------

  **சென்னைத் தேவநேயப்பாவாணர் நூலகக் கட்டடத்தில் இன்று (11.06.2011) நடைபெற்ற பொற்கோ 70 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வெளியிடப்பெற்ற ஆய்வுலகில் பொற்கோவின் பாதையும் பயணமும் என்ற நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை.

நூல் வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்,சென்னை
பதிப்பாசிரியர்கள்: முனைவர் தங்க.மணியன்,முனைவர் ஒப்பிலா.மதிவாணன்

சனி, 19 ஜூலை, 2008

தமிழ்-சப்பானிய மொழிஅறிஞர் சுசுமு ஓனோ மறைவு...


தமிழ்-சப்பானிய மொழியறிஞர் சுசுமு ஓனோ (23.08.1919 -14.07.2008)

  தமிழ் மொழிக்கும் சப்பான் மொழிக்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு உள்ளதைப் பல்வேறு சான்றுகள் வழியாக உலகிற்கு வெளிப்படுத்திய பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள் தம் 89 ஆம் அகவையில் 14.07.2008 திங்கள் கிழமை டோக்கியோவில் இயற்கை எய்தினார்.

  டோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்த சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால சப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக் கொணர்ந்தவர். 1943 ஆம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

 1930 ஆம் ஆண்டளவில் மொழியியல் துறையில் கவனம் செலுத்தினார். இரண்டாம் உலகப் போரின் பொழுது கல்வித்துறைக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்தவர். டோக்கியோ கக்கு சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றிய சுசுமு அவர்கள் மொழிக்கல்வி உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர். தமிழ் மொழிக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999 இல் தம் ஆய்வை நூலாக வெளியிட்டார். சப்பானிய மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம் படிகள் விற்பனை ஆயின.

  தமிழ் படிக்கத் தமிழகத்திற்கு வந்த சுசுமு ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர். 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகச்சிறந்த ஆய்வு முடிவுகளை வெளியிடும் அளவிற்குச் சுசுமு ஓனோ அவர்களுக்குத் தமிழ் - சப்பானிய மொழி உறவு பற்றிய உண்மைகள் வெளிப்படத் தொடங்கின.

 இலங்கைப்  பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசுவும் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.

  தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவினைப் போலச் சப்பானில் அறுவடைத் திருவிழா நடைபெறுவதை எடுத்துரைத்தவர் சுசுமு ஓனோ அவர்கள். தமிழுக்கும் சப்பான் மொழிக்கும் இடையில் இலக்கிய, இலக்கண, கல்வெட்டு, நாட்டுப்புவியல் செய்திகளுடன் உள்ள உறவையும் வெளிப்படுத்தியவர்.

 சப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள (கி.மு. 1300300) காலப்பகுதி கல்லறைகளை ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.

  1990 களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரின் ஆய்வுமுடிவுகள் இரு பண்பாட்டுக்குமிடையில் இலக்கியம், பண்பாட்டு நடை முறைகள் உள்ளிட்டவற்றில் ஒற்றுமைத் தன்மைகளை அதிசயிக்கத்தக்க வகையில் இருந்ததை வெளிப்படுத்தியிருந்தன.

 தமிழ்க் கல்வி நிறுவனங்கள், தமிழ்அறிஞர்களுடன் பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்டகாலத் தொடர்புகளைப் பேணிவந்தார். சப்பானிய மாணவர்கள் பலரைத் தமிழ் மொழியைக் கற்குமாறு அவர் ஊக்குவித்தார். தமிழுக்கும் சப்பானுக்கும் உறவுப்பாலம் அமைத்த அறிஞரை இழந்து தமிழுலகம் வருந்துகிறது.

 Encyclopedia of Languages & Linguistics என்ற நூலில் சுசுமு ஓனோ பற்றிய குறிப்பு:

  1957ல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் துவங்கினார். அவர் ஜப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் சப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.

  இவருடைய பணியைப் பற்றி கமில் சுவலபில் அவர்கள் 1990 இல் சொன்னது : சப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்.

தொடர்புடைய தொடுப்புகள் :

http://books.google.com/books?id=9PhwAAAAIAAJ&q=%22Susumu+Ohno%22+%2Btamil&dq=%22Susumu+Ohno%22+%2Btamil&ei=yWeBSOXbF42AsgOEwfDhDw&pgis=1

http://books.google.com/books?id=OkkgAAAAIAAJ&q=%22Susumu+Ohno%22+%2Btamil&dq=%22Susumu+Ohno%22+%2Btamil&source=gbs_book_other_versions_r&cad=2_0&pgis=1

http://books.google.com/books?id=T7Wv4ncys88C&pg=PA45&dq=%22Susumu+Ohno%22+%2
Btamil&ei=yWeBSOXbF42AsgOEwfDhDw&sig=ACfU3U2Fbk6OX66FEtWiz6Tk7eQiwoTTFg

http://en.wikipedia.org/wiki/Susumu_%C5%8Cno

http://www.xlweb.com/heritage/lj2.gif

நனி நன்றி :

தமிழ்நெட்.காம்
முனைவர் பொற்கோ
தூரிகா வெங்கடேசு
தமிழ் ஓசை நாளிதழ், சென்னை, தமிழ்நாடு