நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 22 ஜூன், 2011

மேரிலாந்தில் பொட்டாமாக்கு ஆற்றின் அழகு…


பொட்டாமாக்கு ஆறு(படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கவும்)

அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் அருகில் ஓடும் பொட்டாமாக்கு ஆறு மேரிலாந்து வழியாகப் பல கல்தொலைவு ஓடுகின்றது. ஒருகரையில் மேரிலாந்து மாநிலமும், இன்னொரு கரையில் வெர்சீனியாவும் இருப்பது சிறப்பு. மருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்களின் இல்லத்திலிருந்து கால்மணி நேரத்தில் பொட்டாமாக்கு ஆற்றின் அருவியைக் காணச் சென்றோம். இன்று மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் பணிக்குச் சென்றதால் நானும் அம்மா முனைவர் குணா அவர்களும் மகிழ்வுந்தில் அருவிக்குச் சென்றோம்.

முனைவர் குணா அவர்கள் புகழ்பெற்ற புற்றுநோய் குறித்த ஆய்வாளர். பல ஆய்வுத்தாள்களை வழங்கியுள்ளார். இருவரும் அவர்களின் கல்வி,ஆய்வு குறித்து உரையாடியபடி சென்றோம். சாலையின் இரு மருங்கிலும் நெடிதுயர்ந்த மரங்கள். ஆள் அரவமற்ற காட்டின் உள்ளே "வெயில் நுழைவு அறியாத குயில்நிழல் பொதும்பராக" அந்தத் தண்ணஞ்சிலம்பு புலப்பட்டது. சங்கப்பனுவலின் பல காட்சிகளை இந்த இடத்தில் இயைத்துப் பார்த்தேன். சிலம்பில் இடம்பெறும் “மருங்குவண்டு சிறந்தார்ப்ப” என்னுமாறு போல இரண்டு பக்கமும் அடந்த சோலை நடுவே எங்கள் மகிழ்வுந்து சீறிப்பாய்ந்தது.

ஒவ்வொரு இடத்திலும் சாலையில் ஊர்தி ஓட்டுவோர் பின்பற்ற வேண்டிய விதிகளைக் கடைப்பிடித்தபடி செல்வதால் இங்குத் தேவையற்ற நேர்ச்சிகள் தடுக்கப்படுகின்றன. அனைவரும் மார்பு வார் அணிந்து கொள்கின்றனர். நிறுத்தத்தின் எதிரில் வண்டிகள் இல்லை என்றாலும் தங்களுக்கு உரிய கட்டளைகள் வரும்வரை நின்றே செல்கின்றனர். தவறுதலாக வண்டி ஓட்ட நேர்த்தால் தங்கள் தவறுக்கு மனம் வருந்தி வருத்தம் தெரிவிக்கின்றனர். யாரேனும் முறையற்று வண்டி ஓட்டினால் ஒலி எழுப்பி அவரை எச்சரிக்கின்றனர். இந்த ஓர் ஓலி நம் சென்னை மக்களின் ஒருமணி நேர ஏச்சு,பேச்சுக்குச் சமமாம்.

நம் ஊரின் பேருந்தில் ஆண் பெண் இருப்பது நினையாமல் இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் வல்லடி வழக்கிட்டு அவையல் கிளவிகள் மொழிவது எம் செவிப்பறைகளில் நினைவாக ஓடி நின்றது. இத்தகு உயர்பண்புகள் நம் தமிழகத்து இருபால் மக்களிடம் என்றைக்கு வாய்க்குமோ என்று நினைத்தபடி மகிழ்வுந்தில் அமர்ந்து இயற்கை அழகைக் கண்டவாறு சென்றேன். பொட்டமாக்கு அருவிப்பூங்காவை அடைந்தோம். உரிய இடத்தில் முனைவர் குணா அவர்கள் மகிழ்வுந்தை நிறுத்தினார்கள். நடந்தபடி சென்றோம்.

எங்கும் ஞெகிழித்தாள்களோ, மதுப்புட்டிகளோ, வெற்றிலைப் பாக்கு எச்சில்களோ, உணவுப் பண்டங்களின் எச்சங்களோ இல்லை.குப்பைக்கூடைகளில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தவறினால் தண்டம்தான். பேருந்து ஓட்டத்தில் எச்சிலைத் துப்பி, தண்ணீரை ஊற்றிக் கைகழுவிப் பலருக்கும் இடையூறு ஏற்படுத்திவிட்டுத் தட்டிக்கேட்டவர்களை இழுத்துப் போட்டு அடித்துப் பேருந்துப் பயணத்தை நிலைகுலையச்செய்த என் தமிழ்நாட்டு உறவினர்களுக்கு எந்தக் கல்விக்கூடத்தில் இந்தப் பாடத்தைப் பயிற்றுவிப்பது என்ற கவலையே எனக்கு ஏற்பட்டது.

பொட்டாமாக்கு ஆற்றை ஓட்டி ஒரு வாய்க்கால் ஓடுகின்றது. அது செசாபேக்கு-ஓகையா வாய்க்கால் (CHESAPEAKE AND OHIO CANAL) என்று அழைக்கப்படுகின்றது. இந்த வாய்க்கால் 1917 முதல் மக்கள் படகுப்பயணம் செய்ய உதவியுள்ளதை அங்குள்ள குறிப்புகள் வழியாக அறிந்தேன். 1828 சூலை 4 இல் இந்த முயற்சி தொடங்கப்பட்டதாகவும் ஒரு குறிப்பு கிடைத்தது.

பொட்டமாக்கு ஆற்றின் நீரும் பிறவகை நிலத்துநீரும் வந்து நெடுந்தொலைவு ஓடும்படி வாய்க்காலை இயற்கையாக அமைத்துள்ளனர். அந்த வாய்க்காலில் படகோட்டம் நடக்குமாம். நெடுந்தொலைவுக்குப் படகில் பயணம் செய்ய இந்த வாய்க்காலை அங்குள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களாம். இரண்டு பக்கமும் வாய்க்காலின் கரையில் உந்து வண்டிகள், மதிவண்டிகள் செல்ல வாய்ப்பான சாலைகள் உள்ளன.தொடக்க காலத்தில் படகை நீர்நிலையில் நிறுத்திக் கரையில் குதிரையில் கயிறுகட்டிப் பிணைத்து குதிரை நடக்கும் வேகத்துக்குப் படகு சென்றுள்ளது. இடையில் உள்ள மலைக்குகளிலும் அந்த வாய்க்கால் நுழைந்து செல்கிறது.அங்கும் படகு இழுக்கும் குதிரை செல்ல பாதை இருந்துள்ளதைப் படக்காட்சியில் கண்டு மகிழ்ந்தேன்.


பொட்டாமாக்கு ஆறு


பொட்டாமாக்கு ஆறு


பொட்டாமாக்கு ஆற்றின் வாய்க்கால்(படகு பயன்பாட்டுக்கு)

இளநங்கையர்கள் சிலர் ஆடவர்களுடன் பேசி மகிழ்ந்தபடி செல்கின்றனர். உள்நாட்டுச் சுற்றுலாச்செலவர்களும் பலர் காணப்படுகின்றனர். ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து பாடங்களை இயற்கைச்சூழலில் கற்பிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்களும் தங்களுக்குரிய உணவு, எழுதுபொருள்கள், பாடப்பொத்தகங்கள் கொண்டு வந்து தங்கள் பணிகளை ஆர்வமுடன் செய்தனர். குழுச்செலவினர் சிலர் உணவுப்பொருட்களுடனும், மதுவிருந்துக்குரிய பொருட்களுடனும் வந்து பொழுதைக் கழிக்கின்றனர்.

நாங்கள் சென்ற சமயம் மராமத்து வேலைகள் நடந்துகொண்டிருந்தன. நம் ஊர் ஆசாரியார்களைப் போலச் சிலர் தச்சுவேலைகளில் ஈடுபட்டிருந்தனர். இங்கு இரும்பைவிட அதிகம் மரத்தைப் பயன்படுத்தி மதகு வேலைகள் செய்துள்ளனர். வாய்க்காலில் தண்ணீர் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்த ஒரு படகினை மறித்து நிறுத்தியிருந்தனர். வாத்துகள் பல அன்னப்பறவைபோல் ஓய்யார உடலைசைத்து நகர்ந்து நீந்தின. சிட்டுக்குருவிகள் அமெரிக்கா முழுவதும் காணக்கூடியதாக உள்ளன. சில சிட்டுக்குருவிகளை நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டேன். வாசிங்டன்னிலும் பல இடங்களில் குருவிகளைப் பார்த்தேன்.


மரவேலைப்பாடுகளுடன் மதகு(பொட்டாமாக்கு ஆற்றின் வாய்க்கால்)


நீரைத் தடுத்து நிறுத்தும் படகு


பொட்டாமாக்கு ஆற்றின் கரையில் மு.இளங்கோவன்

முனைவர் குணா அம்மா அவர்கள் இங்குள்ள பலர் நடைப்பயிற்சிக்கு இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டார்கள். பொட்டாமாக்கு ஆற்றறில் சிறிய அளவில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் ஆற்றின் இயற்கைச் சீற்றத்துக்குக் குறைவில்லை. நெடுமரங்கள் பல இயற்கையாக முறிந்து இழுத்துவரப்பட்டு அங்குமிங்கும் சிதறிக்கிடந்தன. நம்மூர் என்றால் இரவோடு இரவாக அள்ளிச் சென்றிருப்பார்கள். இயற்கையைப் போற்ற வேண்டும் என்பதில் அமெரிக்க மக்கள் மிகவும் கவனமாக உள்ளனர். அங்குமிங்கும் நடந்து, ஆற்றையும் அதிலிருந்து வீழ்ந்து செல்லும் அருவியையும் கண்ணாரக் கண்டோம். அங்குள்ள காட்சியகத்தையும் கண்டு மகிழ்ந்தோம்.

ஓய்வறைகள், காட்சிக்கூடம், நெறியாளர்கள், காப்பாளர்கள் யாவரும் தத்தம் கடமையைச் சிறப்பாகச் செய்தனர். ஆற்றைப் பற்றியும் வாய்க்காலைப் பற்றியும் பல பயனுடைய தகவல்கள் அடங்கிய குறிப்பேட்டை இலவசமாகத் தந்தனர். பெற்றுக்கொண்டோம். காணொளியில் ஓடும் காட்சிகளையும் பார்த்தோம்.

அடுத்து நாங்கள் மேரிலாந்திலுள்ள நூலகம் ஒன்றைப் பார்வையிட நினைத்தோம். அழகான பெரிய மாளிகையில் நூலகம் கவின்மிகு தோற்றத்துடன் காட்சியளித்தது. அங்குள்ள வண்டிகள் நிறுத்திமிடம் பரந்துகாணப்படுகின்றது. ஆனால் நாங்கள் சென்ற நேரம் நூலகம் மூடியிருந்தது. எனவே எங்கள் மகிழ்வுந்து ஒரு பேரங்காடியை நோக்கித் திரும்பியது.

கடைக்குப் போகவேண்டும் என்றால் யாவரும் புதுவை- கடலூர் வரை உள்ள தொலைவு பயணம் செய்து தங்களுக்கு உரிய கறிகாய்களை, மளிகைப்பொருட்களை வாங்கி வருகின்றார்கள். அடுப்பில் ஏனங்களை வைத்துவிட்டு தேங்காய் வேண்டும், மாங்காய் வேண்டும், எண்ணெய் வேண்டும், தொன்னை வேண்டும் என்று குறிப்பிடும் நம் மனையுறை மகளிரை நினைத்துப் பெருமூச்சுவிட்டேன்.

MACYS HOME என்ற பேரங்காடிக்கு நாங்கள் சென்றோம். மெத்தை, தலையணை, போர்வை, துணிமணிகள், குளிர்ப்பெட்டிகள், ஏனங்கள், யாவும் கடல்போன்ற அரங்கில் காட்சிக்கு இருந்தன. அடுத்த பகுதிக்குச் சென்று பார்த்தேன். கணக்கற்ற மின்னணுப்பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. அண்மையில் வந்த கணினிகளைப் பார்வையிட வேறொரு அரங்கிற்குச் சென்றேன். விலை எல்லாம் ஒன்றரை இலக்கத்தைத் தாண்டியிருந்தது. என் பயணத்திட்டத்தின் செலவே அவ்வளவுதான் என்று நினைத்தபடி வேறு சில அரங்குகளைப் பார்த்துவிட்டு பகல் ஒருமணிக்கு ஐயா சித்தானந்தம் இல்லத்துக்கு வந்தோம்.

1 கருத்து:

மாதேவி சொன்னது…

பொட்டாமாக்கு ஆறு பெயரே வித்தியாசமாக இருக்கிறது.

அமெரிக்கர்களின் இயற்கையைக் காக்கும் பண்பைப் பாராட்டுவோம்.