நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 16 ஜனவரி, 2018

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்
      தமிழில் கிடைத்துள்ள முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு குறிப்பிடும் கதை இந்த நூலுள் பொதிந்திருந்தாலும் அக்காலத்தில் இருந்த தமிழர்களின் கலைகளைத் தாங்கி நிற்கும் கலைக் கருவூலமாகவும் இந்த நூலைக் குறிப்பிடலாம். தமிழர்களிடம் வழக்கத்தில் இருந்த ஆடல், பாடல், கூத்து, இசைக்கருவிகள், அவற்றை இசைக்கும் முறைகள் யாவும் இந்த நூலில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. கதைப்போக்கில் இவ்வாறு பலதுறைச் செய்திகளைத் தாங்கி நிற்கும் நூல் உலகில் வேறுமொழிகளில் இல்லை என்று குறிப்பிடும் அளவுக்குச் சிலப்பதிகாரம் ஒப்புயர்வற்ற நூலாக விளங்குகின்றது.

     சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள கலைக்கூறுகளை நாம் விளங்கிக்கொள்ள சிலப்பதிகாரத்தின் பழைய அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரை, பஞ்சமரபு வெண்பாக்கள் பெரிதும் துணைசெய்கின்றன. சிலப்பதிகாரத்தின் கதைப்போக்குகளும், உத்திகளும், இசைப்பாடல்களும், கலை வெளிப்பாட்டு முறைகளும் நமக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்துகின்றன. இக்கட்டுரை சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து, இந்த நூல் நம் நெஞ்சில் நிலைபெறுகின்றமைக்கான காரணத்தை முன்வைக்கின்றது.

     சிலப்பதிகாரத்தின் சிறப்பினை எடுத்துரைக்கும் பகுதியாக அடியார்க்கு நல்லாரின் பதிகவுரை நமக்குப் பெருந்துணைபுரிகின்றது. பெரும்பாலும் கல்வியுலகில் இந்தப் பதிகவுரையை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. இப்பதிகவுரை சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் முன்னுரையாக அமைகின்றது.

     அடியார்க்கு நல்லாரின் உரை சிலம்பு முழுமைக்கும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது எனினும் பதிகத்திலிருந்து ஊர்சூழ் வரி வரை மட்டும் கிடைக்கின்றது (கானல்வரி நீங்கலாக). மதுரைக் காண்டத்தில் வழக்குரை காதை, வஞ்சினமாலை, அழற்படு காதை, கட்டுரை காதை ஆகிய நான்கு காதைகளுக்கும், வஞ்சிக்காண்டம் முழுமைக்கும் அடியார்க்குநல்லாரின் உரை இல்லை.

     நான்கு நிலத்திற்கும் உரிய பெரும் பண்களாகிய முல்லை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், நெய்தல் யாழ் ஆகியவற்றிற்குரிய ஏறு நிரல் நரம்புகள் இவை இவை, இறங்கு நிரல் நரம்புகள் இவை இவை என்று பதிகவுரையில் அடியார்க்குநல்லார் தெளிவாக அறிவுறுத்தியுள்ளமை இசை ஆராய்ச்சியாளர்களை வியப்படையச் செய்கின்றது. மேலும் ஆதி இசை என்பது முல்லை நிலத்திற்குரிய செம்பாலை (அரிகாம்போதி) என்று சிறப்பித்துக் கூறியுள்ளமை இங்கு நினைக்கத் தகுந்தது. அதுபோல் நடுவண் திணையாக விளங்கும் பாலை நிலத்திற்குரிய அதாவது அரும்பாலைக்குரிய (சங்கராபரணம்) நரம்புகள் இவை இவை என்றும் அடியார்க்கு நல்லார் தம் பதிகவுரையில் தெளிவுபடுத்தியுள்ளமையும் இசையாய்வுக்கு உரிய அரிய குறிப்புகளாகும். நூல்தரும் குறிப்புகள் நம்மை வியப்புறுத்தி நிற்பதுபோல் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய அடியார்க்கு நல்லார் உரையும் நமக்குப் பல உண்மைகளைப் புலப்படுத்துகின்றது.

காப்பியக் கட்டமைப்பில் புதுமை

     சிலப்பதிகாரத்துக் கதை மக்கள் வழக்கில் இருந்த கதையாக இருந்துள்ளது. அதனை அறிந்த இளங்கோவடிகளார் தம் கலைத்திறன் முழுவதையும் கூட்டிப் பெருங்காப்பியமாகச் செய்துள்ளார். இன்றும் நாட்டார் வடிவில் கோவலன் கண்ணகி கதை வேறு வேறு வடிவங்களில் வழங்குகின்றது. சிலப்பதிகாரத்தின் தலைவி கண்ணகிக்கு இலங்கையின் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன. கண்ணகை அம்மன் என்னும் பெயரில் அமைந்த கோயில்களில் ஆண்டுதோறும் சிறப்பு விழாக்கள் நடைபெற்றுவருகின்றன. காரைதீவு கண்ணகி அம்மன் கோயில், ஆரையம்பதி கண்ணகியம்மன் கோயில், முல்லைத்தீவு  வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில்  உள்ளிட்ட கண்ணகி கோயிலும் அங்கு நடைபெறும் திருவிழாக்களும், நாட்டார் நம்பிக்கைகளும் இங்கு எண்ணிப்பார்க்கத்தக்கன.

     மக்களிடம் பெரு வழக்கில் இருந்த கோவலன் - கண்ணகிக்  கதையை எடுத்துக்கொண்ட இளங்கோவடிகளார் அவர் காலம் வரை பெரு வழக்கில் இருந்த ஆசிரியப்பா வெண்பா வடிவங்களிலிருந்து வேறுபட்டு, இசைப்பாடல்கள் அடங்கிய நூலாகத் தம் காப்பியத்தைச் செய்துள்ளார்.

அரசர்களையும், கடவுளையும் புகழ்ந்து பேசும் மரபிலிருந்து வேறுபட்டு, குடிமக்களைத் தம் காப்பிய மாந்தர்களாக்கிப் புதுமை செய்தார். இயற்கையை வாழ்த்தித் தம் காப்பியத்தைத் தொடங்கி மேலும் புதுமை செய்தார். பின்பு நடக்க உள்ள நிகழ்வுகளை முன்பே குறிப்பால் உணர்த்தும் நுட்பத்தை அறிமுகம் செய்கின்றார். உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகச் சிலம்பு மிளிர்கின்றது.

     சிலப்பதிகாரத்தில் பெண்ணுக்கு முதன்மையளிக்கும் வகையில் காப்பியத் தலைவியை முதலில் அறிமுகம் செய்கின்றார் (நாக நீள் நகரொடு நாக நாடதனொடு....). காப்பியத்தலைவனை அடுத்த நிலையில் நிறுத்தி அறிமுகம் செய்கின்றார் (பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த...). அக்காலத்தில் நடைபெற்ற திருமண முறைகளை இளங்கோவடிகள் நமக்கு அறிமுகம் செய்கின்றார் (இருபெருங் குரவரும் ஒருபெரு நாளில் மணவணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி..) கண்ணகி கற்பில் சிறந்தவள் என்பதைக் குறிப்பிடும் இளங்கோவடிகள் "தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்று.." என்று உவமைகாட்டுவது கற்போரைக் கழிபேருவகை கொள்ளச் செய்வதாகும். "மயன்விதித் தன்ன மணிக்கால மளிமிசை" இருந்த கோவலன் கண்ணகியின் நலம்பாராட்டிப் பேசும் பகுதிகள் காப்பிய ஆசிரியரின் பண்பாடு கட்டிக்காக்கும் பகுதியாகும் (உலவாக் கட்டுரையாக்கிய உள்ளத்து மொழிகளை நினைமின்).

     அரங்கேற்று காதையில் மாதவியின் ஆடலும் பாடலும் அழகும் குறிப்பிடும் வகையில் பண்டைக்காலத்து நாட்டிய மேடையையும், அதனை அணிசெய்து அமர்ந்திருந்த தண்ணுமையாசான், குழலாசான், யாழாசான், தமிழ் முழுதறிந்த புலவர் பெருமகனார் உள்ளிட்ட கலைவல்லார்களையும் காட்டுக்கின்றமைகொண்டு, உலக அரங்கில் இப்பேரிலக்கியத்துக்கு நிகராக ஒரு பாவியம் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்.

அந்திமாலை சிறப்புச்செய் காதையில்,

"நிலவுப்பயன்கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற் களித்தாங்
கார்வ நெஞ்சமொடு கோவலற்கெதிரிக்
கோலங்கொண்ட"

மாதவியையும்,

"அஞ்செஞ் சீறடி யணிசிலம்பொழிய
மென்றுகிலல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றிற் குங்குமெழுதாதவளாய்" விளங்கும்
கையறு நெஞ்சத்துக் கண்ணகியையும் அடிகளார் சிறப்பாகப் படைத்துக்காட்டியுள்ளார்.

     இந்திர விழாவின் சிறப்பினையும் பூம்புகார் நகரத்து மக்கள் கடலாடும் காட்சிகளையும் காட்டிய இளங்கோவடிகள் ஏழாம் காதையாக கானல்வரியைப் படைத்து, பண்டைத் தமிழகத்துப் பண்மரபுகளை நிலைப்படுத்தியுள்ளார். கோவலன் இசைக்கத் தொடங்கும் யாழ்க்கருவியை அடிகளார் "மணமகளிர் கோலத்தொடு" ஒப்புமைப்படுத்திக் காட்டி, இக்கருவியின் இசையும், கண்டத்து இசையும் போட்டியிட்டு, இறுதியில் விளரிப்பண்ணாக விரிந்து, கோவலன் - மாதவியின் பிரிவுக்கு இந்தப் பகுதி அடிகோலுகின்றது.

     மாதவியிடம் ஊடல்கொண்ட கோவலன் இல்லம் திரும்புவதும், கண்ணகியுடன் கதிரெழும் முன்னர் பூம்புகார் எல்லை கடப்பதும், கவுந்தியடிகளின் துணையால் நாடு காண்பது, காடு காண்பதும், மாதரி ஐயை தொடர்பால் ஆயர்பாடியில் தங்குவதும், மதுரை நகர் அடைவதும், கோவலன் கொலைக்களப்படுவதும், கண்ணகி வழக்குரைப்பதும், மதுரை மாநகரில் ’தீத்திறத்தார் பக்கம் தீ சேர்வதும்’, பின்னர் பேரியாற்றங்கரையின் வழியில் நடந்து, வேங்கை மர நிழலில் நின்று "வலவன் ஏவா வானூர்தி" ஏறுவதும், குன்றக்குரவர்கள் தம் அரசனான சேரன் செங்குட்டுவனுக்கு நடந்த விவரங்களைக் கூறக் கண்ணகிக்கு கல்லெடுத்து வந்து, படிமம் செய்து, கோயில் எடுப்பித்து, வழிபாடு செய்துவதுமாகக் காப்பியம் நிறைவுக்கு வருகின்றது.

     இளங்கோவடிகள் மூன்று நாடுகளை இணைப்பதும், ஐந்து நிலத்து வாழ்க்கை முறைகளையும் கலைவடிவங்களையும் எடுத்துரைப்பதும் காப்பியத்திற்கு அழகூட்டும் பகுதிகளாகும். முல்லை நிலத்திற்குரிய இசையை (செம்பாலை = அரிகாம்போதி), ஆய்ச்சியர் குரவையிலும், குறிஞ்சி நிலத்திற்குரிய இசையை (படுமலைப் பண்   = நட பைரவி) நடுகற்காதையிலும் குன்றக்குரவையிலும் விளக்கியுள்ளார். நெய்தல் நிலத்திற்குரிய விளரிப்பண் (தோடி), செவ்வழிப்பண் ஆகியவற்றை கானல்வரியில் விளக்கியுள்ளார். மருத நிலத்திற்குரிய மருதப்பண்ணை (கோடிப்பாலை  = கரகரப் பிரியா) வேனிற் காதையில் விளக்கியுள்ளார். பாலை நிலத்திற்குரிய பண்ணைப் (அரும்பாலை = சங்கராபரணம்) புறஞ்சேரி இறுத்த காதையிலும் விளக்கியுள்ளார். மேலும் அக்காலத்தில் மக்கள் வழக்கில் இருந்த வழிபாட்டு முறைகள், தெய்வ நம்பிக்கைகளையும் தம் காப்பியத்தில் இளங்கோவடிகளார் பதிவுசெய்துள்ளார். மக்களின் வாழ்க்கைமுறை, தொழில்கள், நம்பிக்கைகள் யாவும் இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன.

கதைப்போக்கில் புதுமை

     சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும்பொழுதும், கதையை நகர்த்தும்பொழுதும் தேவையான உவமைகள், பொருத்தமான எடுத்துரைப்புகளை அடிகளார் பின்பற்றியுள்ளார். அக்காலத்தில் நிலவிய பழக்கவழக்கங்களையும் நமக்கு நினைவுப்படுத்துகின்றார். "சோமகுண்டம், சூரிய குண்டம் துறை மூழ்கும்" பழக்கம் இருந்ததை நினைவூட்டுகின்றார். தலைக்கோல் பட்டம் சமூகத்தில் இடம்பெற்றிருந்ததை எடுத்துரைக்கின்றார். கோவலன் கூறும் குறியாக் கட்டுரைக்கு மறுமொழி பேசாத கண்ணகி, பின்னாளில் "பீடன்று", "சிலம்புள கொண்ம்" "மதுரை மூதூர் யாது" என்று அளவொத்த சொற்களைப் பேசுகின்றாள். பின்னர் கண்ணகியை உரிய இடத்தில் இளங்கோவடிகள் வழக்குரைக்க வைத்துள்ளமை காப்பியத்தைக் கற்போருக்கு ஆர்வத்தை உண்டாக்கும் படைப்பு உத்தியாகும்.

     "மாதரார் தொழுதேத்த" என்ற தொடக்கத்தில் குறிப்பிடும் இளங்கோவடிகள் பின்னாளில் இவ்வையம் கண்ணகியைத் தெய்வமாகப் போற்றும் வகையில் அவளின் பண்புமேம்பட்ட தன்மையினை வளர்த்தெடுக்கின்றார். கடல்சூழ் இலங்கை கயவாகு வேந்தன் இக்காப்பியத் தலைவிக்குக் கோயில் எடுப்பித்துப் போற்றுவதாலும், கதைத்தலைவி கண்ணகி இலங்கைக்குச் சென்றதாக மக்களிடம் நம்பிக்கை இருப்பதாலும் இது பன்னாட்டுக் காப்பியமாக மிளிர்கின்றது. சிங்கள மக்கள் கண்ணகியைப் "பத்தினி தெய்யோ’ என்று குறிப்பிடுகின்றனர். கேரள மக்கள் "பத்தினித் தெய்வம்" என்று குறிப்பிடுகின்றனர்.

சிலம்பில் இடம்பெறும் இசைப்பாடல்கள்

     சிலப்பதிகாரத்தில் இசைப்பாடல்கள் பல உள்ளன. அக்காலத்தில் மக்களிடம் இருந்த இசைவடிவங்களை அடிகளார் "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்" என்று தொடங்கும் பாடலே இசைப்பாடலாகும். அதுபோல் கானல்வரியில் இடம்பெறும் பாடல்கள் யாவும் இசைப்பாடல்களே ஆகும். ஆற்றுவரி உள்ளிட்ட பல வரிப்பாடல்கள் உள்ளன.

     அதுபோல் கந்துகவரி என்ற அமைப்பில் சிலப்பதிகாரத்தில் பாடல்கள் உள்ளன. முல்லைநிலை மக்கள் பாடும் முல்லைப்பண்ணில் அமைந்த ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் குறிப்பிடத் தக்க பாடல்களாகும். குரவைக்கூத்து ஆடும் பெண்கள் பாடும் பாடல்களைக் குன்றக்குரவையில் காணலாம்.

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ ;

`பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்,
ஈங்குநம் ஆனுள் வருமேல், அவன்வாயில்,
ஆம்பல்அம் தீங்குழல் கேளாமோ? தோழி'

`கொல்லைஅம் சாரல் குருந்துஓசித்த மாயவன்,
எல்லைநம் ஆனுள் வருமேல், அவன்வாயில்
முல்லைஅம் தீங்குழல் கேளாமோ? தோழி'

என்னும் ஆய்ச்சியர் குரவையின் பாடல்கள் சிறப்பிற்குரிய பாடல்களாகும்.

 பொன்னிலங்கு பூங்கொடி
           பொலஞ்செய்கோதைவில்லிட 
     மின்னி லங்கு மேகலைகள்
          ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும்
     தென்னன் வாழ்க வாழ்க என்று
          சென்று பந்த டித்துமே
     தேவரார மார்பன் வாழ்க 
            என்று பந்த டித்துமே.( வாழ்த்துக் காதை 20)

எனத் தொடங்குவன பந்தடிப் பாடலாகும்.

நிறைவுரை

     மக்கள் வழக்கில் இருந்த - மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த கதையைத் தம் கலைத்திறமையால் இளங்கோவடிகள் ஈடிணையற்ற காப்பியமாகப் புனைந்துகாட்டியுள்ளமயை அறிந்த பாரதியார் நெஞ்சையள்ளும் சிலம்பு என்று நெஞ்சு நிமர்ந்து உரைத்துள்ளார். வடமொழிக் காப்பியங்களை அறிந்த பாரதியார், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை என்று எழுதிச் சென்றுள்ளமை இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்க பாட்டுப் பத்திரமாகும்.

குறிப்பு: இக்கட்டுரையை எடுத்தாள விரும்புவோர் கட்டுரையாளர் பெயர், எடுத்த இடம் குறிப்பிடுங்கள்.
மலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி

தவத்திரு. பாலயோகி சுவாமிகள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டினை வெளியிட, மலேசிய இலங்கைச் சைவர் சங்கத்தின் தலைவர் க. அருள்ஜோதி முதல் படியைப் பெறும் காட்சி.

     மலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி 26.12.2017 மாலை சிறப்பாக நடைபெற்றது. கோலாலம்பூர்- பிரிக்பீல்ட்சு பகுதியில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

     மலேசியத் திருமுருகன் திருவாக்குத் திருபீடத்தின் நிறுவுநர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியாவில் வாழும் தமிழறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

     திரு. ம. மன்னர் மன்னன் வரவேற்புரையாற்றினார். முனைவர் க.திலகவதி வாழ்த்துரை வழங்கினார். தவத்திரு. பாலயோகி சுவாமிகள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டினை வெளியிட, மலேசிய இலங்கைச் சைவர் சங்கத்தின் தலைவர் க. அருள்ஜோதி முதல் படியைப் பெற்றுக்கொண்டார். பொறியாளர் இராசு அவர்கள் சிறப்புப் படியைப் பெற்றுக்கொண்டார். தான்ஸ்ரீ  குமரன் அவர்கள் ஆவணப்படதின் சிறப்பினைக் குறித்து உரையாற்றினார்.

     மலேசியாவின் மூத்த தமிழறிஞர் முனைவர் முரசு. நெடுமாறன், தமிழ்நெறி இயக்கத்தின் தேசியத் தலைவர் திருமாவளவன், கவிஞர் கம்பார் கனிமொழி, ஆசிரியர் பச்சைபாலன், மருத்துவர் பால. தர்மலிங்கம் உள்ளிட்டோர் ஆவணப்படத்தின் சிறப்புப்படிகளைப் பெற்றுக்கொண்டனர்.

     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் தம் ஆவணப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ம. அண்ணாதுரை நன்றியுரை வழங்கினார்.

தவத்திரு பாலயோகி சுவாமிகளின் வாழ்த்துரை

தான்ஸ்ரீ குமரன் உரை

முனைவர் க.திலகவதி உரை

முனைவர் முரசு. நெடுமாறன் ஒளிவட்டினைப் பெறும் காட்சி

இந்தியாவில் ஆவணப்படம் பெறுவதற்குத் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:


0091 9442029053

திங்கள், 15 ஜனவரி, 2018

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு
முனைவர் சண்முக. செல்வகணபதி விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டினை வெளியிட, முனைவர் பா. ஜம்புலிங்கம் பெற்றுக்கொள்ளும் காட்சி


     தஞ்சாவூரை அடுத்துள்ள கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா 08.01.2018 மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. திருவையாறு அரசர் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் இசைத்தமிழ் ஆய்வறிஞருமான முனைவர்  சண்முக. செல்வகணபதி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை வெளியிட்டு, விபுலாநந்த அடிகளாரின் தமிழிசைப் பணிகளையும் வாழ்க்கை வரலாற்றையும் விளக்கிப் பேசினார்.

     விபுலாநந்த அடிகளார் பதினான்கு ஆண்டுகள் ஆய்வு செய்து, வழக்கிழந்திருந்த யாழினை மீட்டுத் தந்த அருஞ்செயலைப் பாராட்டினார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் தங்கி, யாழ்நூலை உருவாக்கினார் எனவும், எனவே கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் இந்த ஒளிவட்டு வெளியீடு காண்பது பொருத்தம் எனவும் குறிப்பிட்டார். யாழ்நூலில் இசைத்தமிழ் வரலாறு ஆராய்ச்சி முறையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது எனவும், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், திருமுறைகள், திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட தமிழ் நூல்களில் இருந்த இசைத்தமிழ்க் குறிப்புகளை அடியொட்டி, அடிகளார் இந்த யாழ்நூலை உருவாக்கியுள்ளதால் தமிழிசை உலகம் விபுலாநந்த அடிகளாருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளது என்று தம் உரையில் முனைவர் செல்வகணபதி குறிப்பிட்டார்.


     பேராசிரியர் சண்முக. செல்வகணபதி விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னை உதவிப் பதிவாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம், திருவையாறு தங்க. கலியமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் கரந்தை. ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார். கரந்தை உமா மகேசுவரனார் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் வெ. சரவணன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரியின் செயலர் புலவர் இரா. கலியபெருமாள், புலவர் ம. கந்தசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு, தம் ஆவணப்பட அனுபவங்களை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இசையறிஞர் சண்முக. செல்வகணபதியின் சிறப்புரை

ஆவணப்படத்தினை ஆர்வமுடன் காணும் ஆசிரியர்களும், தமிழார்வலர்களும்

திங்கள், 8 ஜனவரி, 2018

தமிழிசைக் கலைஞர் கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தனார்...

கலைமாமணி  ந. மா. முத்துக்கூத்தனார்  (25.05.1925 - 01.05.2005) 

     பலவாண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற தந்தை பெரியார் தமிழிசை மன்ற நிகழ்வுகளிலும், தமிழ்ச் சான்றோர் பேரவை விழாக்களிலும் கலைமாமணி . மா. முத்துக்கூத்தன் ஐயாவைக் கண்டு வணங்கிய நிமையங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. மெல்லிய உருவமும், தாடி தவழும் முகமும், கருப்புநிறத் துண்டும், வெள்ளைச் சட்டையும்(ஜிப்பா) அணிந்து, மெதுவாக நடந்து வரும் அவரின் பெருமையை நான் அப்பொழுது முற்றாக அறியாமல் இருந்தேன். ஊட்டியின் இயற்கை அழகைப் படம்பிடித்துக்காட்டும் வகையில் இவர் இயற்றிய,

"நீலமா மலைத்தொடரில்
கோலமே மிகுந்த குளிர்
சோலைகள் நிறைந்திருக்குது.- அதனைக் கண்டு..
ஞாலமே வியந்து நிற்குது

காணவரும் மாந்தருக்குக்
கண்ணிறைந்த காட்சிபல
வேணமட்டும் தானிருக்குது - கோடை வெயில்
வேட்கையையும் தான்தணிக்குது

வானைமுட்டும் மாமரங்கள்
தானுயர்ந்து நிற்குமதில்
தேனடைகள் தொங்கி நிற்குது - நினைக்கும்போதே
தின்றதுபோல் நாவினிக்குது

மானிடர்கள் கைப்படாத
ஓவியங்க ளாக இங்கே
வண்ணமலர் பூத்திருக்குது - இளமைகொஞ்சும்
பெண்சிரித்தால் போலிருக்குது!   ----  (நீலமா)

நாணி நிற்கும் பெண்ணொருத்தி
போலிருக்கும் பூவிதழின்
மேனிதொட்டு வண்டிசைக்குது - அதனாலது
கோணிக்கொண்டு தானிருக்குது

தேனிலவுக் காக இங்கே
தேடி வரும் காதலர்கள்
வானிலவில் தான் மிதக்கிறார் - பறந்தே இந்த
வையத்தைத் தான் மறக்கிறார்.

தொட்டுப் பழகாத புது
காதலர்கள் இங்கே வந்தால்
ஒட்டிக்கொள்ள செய்யும் ஊட்டிதான் - வயதானாலும்
கட்டிக்கொள்வார் பாட்டன் பாட்டிதான் ..."

என்னும் பாடலை அண்ணன் புட்பவனம் குப்புசாமி அவர்களின் குரலில் கேட்டபிறகு ஐயாவின் கவிதைச் செழுமையுள்ளம் எனக்கு ஒருவாறு புலப்பட்டது. அந்தப் பாடலை ஆயிரம் முறையாவது கேட்டு இன்புற்றிருப்பேன். சிந்திசையில் நம் முத்துக்கூத்தருக்கு இருந்த பயிற்சியும், தமிழ்ச் சொற்களை இடமறிந்து பயன்படுத்தும் பெரும்புலமையும் அறிந்து வியப்புற்றேன். ந.மா. முத்துக்கூத்தனாரைக் கண்டு அவர்தம் தமிழ் வாழ்க்கையை, அவரின் வாய்மொழியாக அறிந்து, பதிவுசெய்ய ஆசையுற்றேன் எனினும் அவர்தம் இறுதிக்காலம் வரை என் விருப்பம் நிறைவேறாமல் போனது. ஆயிடை, அவர்தம் நூல்களைக் கற்பதும், அவர்தம் பாடல்களைக் கேட்பதும் தடையின்றி நடைபெற்றன. அவர்தம் கலைத்துறைப் பணிகளைத் தொடர்ச்சியாக எடுத்துச்செல்லும் அண்ணன் மு. கலைவாணன் அவர்களுடன் உரையாடி, தந்தையாரின் பெருமைகளை அவ்வப்பொழுது கேட்டின்புறுவது உண்டு. தமிழ் உணர்வுடனும், மான உணர்வுடனும், கலையுணர்வுடனும் செயல்பட்ட ஒரு மீமிசை மாந்தரின் தமிழ் வாழ்க்கையைத் தமிழார்வலர்களின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றேன்.

     ந. மா. முத்துக்கூத்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொய்யாமணி என்னும் ஊரில் 25.05.1925 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் நமச்சிவாயம், மாரியம்மாள் என்பதாகும். 1942 ஆம் ஆண்டு முதல் நாடகத்துறையிலும், திரைத்துறையிலும் இவர் தம் கலைப்பணிகளைத் தொடங்கியவர். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமியின் "கிருட்டினன் நாடக சபா", எசு.எசு. இராசேந்திரன் நாடக மன்றம், எம்.ஜி.ஆர். நாடக மன்றம் ஆகிய நாடகக் குழுக்களில் இணைந்து நாடகங்களில் நகைச்சுவை வேடமணிந்து நடித்தவர்.

     1952 ஆம் ஆண்டு திரைத்துறையில் நடிகராகப் பலவகையில் பங்களித்தவர். பராசக்தி, இரத்தக்கண்ணீர், இராஜராஜன், நாடோடி மன்னன், நல்லவன் வாழ்வான், புதியபூமி, தாய் மகளுக்குக் கட்டிய தாலி உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்தவர். திரைப்படப் பாடல்களையும் இக்கால கட்டத்தில் எழுதியவர்.

     1953 இல் அம்மையப்பன், நாடோடி மன்னன், அரசிளங்குமரி, இராஜராஜன், கலையரசி, மந்திரவாதி, திருடாதே, அரசகட்டளை, நாகமலை அழகி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  பாடல், உரையாடல் எழுதிய பட்டறிவும் இவருக்கு உண்டு.

நாடோடி மன்னன் திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராசன் பாடிய,

"செந்தமிழே வணக்கம் ...
ஆதி திராவிடர் வாழ்வினைச் சீரொடு விளக்கும்"

என்னும் பாடலும்,

திரைப்பட நடிகை பானுமதி அவர்கள் பாடிய,

"சம்மதமா.. நான் உங்க கூடவர சம்மதமா?" பாடலும்,

அரசகட்டளை படத்தில்,

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை.
ஆடி வா ஆடிவா ஆடப்பிறந்தவளே
ஆடிவா" என்ற பாடலும்

"எத்தனை காலம் கனவு கண்டேன்
காண்பதற்கு - உன்னைக் -
காண்பதற்கு" என்ற பாடலும் இவர் இயற்றியவையாகும்.

தமிழ்த்திரையுலகில் இவரின் இத்தகு பாடல்கள் என்றும் நினைவுகூரப்படும் பெருமைக்குரியன.

     கலைத்துறையில் புகழுடன் விளங்கிய ந. மா. முத்துக்கூத்தன் 24.10.1954 இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் மரகதம் அவர்களைச் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்.  ஒரு மகனும் ஐந்து மகள்களும் மக்கள் செல்வங்களாக இவர்களுக்கு வாய்த்தனர். தம்மால் பெரிதும் மதிக்கப்பட்ட கலைவாணர் என்.எசு. கிருட்டினன் நினைவாகத் தம் மகனுக்குக் கலைவாணன் என்று பெயரிட்டார். மற்ற பிள்ளைகளுக்கும், பெயரப்பிள்ளைகளுக்கும் நல்ல தமிழில் பெயரிட்டு, தாமொரு தமிழனென்று அனைவருக்கும் அடையாளம் காட்டியவர்.

ந. மா. முத்துக்கூத்தன் வில்லுப்பாட்டுக் கலையில் தேர்ந்த கலைஞராக விளங்கியவர். கலைவாணர் என் எசு. கிருட்டினன் அவர்கள் பயன்படுத்திய வில் கருவியை, அவர்தம் துணைவியார் டி. ஏ.. மதுரம் அவர்களிடமிருந்து அன்பளிப்பாக வாங்கி, வில்லுப்பாட்டுக் கலைக்குப் புத்துயிர் ஊட்டியவர். தென்தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த வில்லுப்பாட்டுக் கலையை வடதமிழகத்தில் பரவலாக்கிய பெருமை ந. மா. முத்துக்கூத்தன் அவர்களுக்கு உண்டு. கலைவாணரின் வாழ்க்கை வரலாற்றை வில்லுப்பாட்டு வடிவமாக்கி, அவர்தம் முதல் நினைவுநாளான 31.08.1958 இல் கலைவாணரின் இல்லத்தில் நிகழ்த்தினார்.

     கலைவாணரின் வரலாறு வில்லுப்பாட்டில் பாடப்பட்ட பிறகு தமிழ் வரலாறு, அறிஞர் அண்ணா வரலாறு, "பெரியாருள் பெரியார்" என்னும் தலைப்பில் அமைந்த தந்தை பெரியாரின் வரலாறு ஆகியவற்றை வில்லுப்பாட்டு வடிவில் வழங்கினார். அறிவியல் கருத்துகளையும், பகுத்தறிவுக் கருத்துகளையும் வில்லுப்பாட்டு வடிவில்  மக்களுக்கு வழங்கித் தமிழகத்தில் இக் கலையின் மூலம் விழிப்புணர்வை உருவாக்க உழைத்தவர் ந. மா. முத்துக்கூத்தன் என்று குறிப்பிடலாம். சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இவர்தம் வில்லுப்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இவர்தம் கலைச்சிறப்பு உணர்ந்து, புதுதில்லியில் அமைந்துள்ள தொலைக்காட்சி நிலையத்துக்கு அழைத்துச் சிறப்பிக்கப்பட்டவர்.

     ந. மா. முத்துக்கூத்தன் தம் மகன் மு. கலைவாணனுடன் இணைந்து கையுறைப் பொம்மலாட்டக் கலைவடிவில் நிகழ்ச்சிகளை நடத்தி, சிறந்து விளங்கியவர். மூட நம்பிக்கை ஒழிப்பிற்கு, "என்ன செய்யப் போறீங்க?" என்னும் தலைப்பிலும், பெண்கள் முன்னேற்றத்திற்குப் "பெண்ணின் பெருமை" என்ற தலைப்பிலும், தடய அறிவியலுக்கு "ஊமை சாட்சிகள்" என்ற தலைப்பிலும், சுற்றுச்சூழல் தூய்மைக்கு "எமன் ஏமாந்து போனான்" என்ற தலைப்பிலும், மக்கள் நல வாழ்வுக்கு, "நூறாண்டு வாழலாம் வாங்க" என்ற தலைப்பிலும் இவர் வழங்கிய பொம்மலாட்ட நிகழ்வுகள் தமிழகத்தின் கலை வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.

     பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ந. மா. முத்துக்கூத்தன் பாவேந்தரின் "புரட்சிக்கவி" நாடகத்தைப் பொம்மலாட்ட வடிவில் நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அறிஞர் அண்ணாவின் "சந்திரமோகன்" நாடகத்தையும் பொம்மலாட்டக் கலைவடிவில் இவர் நடித்துக்காட்டியவர். தமிழ், தமிழரின் சிறப்புரைக்கும் "கொடை வள்ளல் குமணன்" என்ற பொம்மலாட்டத்தை மக்கள் மன்றத்தில் நிகழ்த்திய முத்துக்கூத்தனாரின் கலைப்பணியைப் பலரும் பாராட்டியுள்ளனர். இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளையும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மலாட்ட நிகழ்வுகளையும் நிகழ்த்தியவர் ந. மா. முத்துக்கூத்தன். இவர்தம் கலைச்சேவையைப் போற்றும் முகமாக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் "கலைமாமணி" என்ற உயரிய விருதினை இவருக்கு வழங்கிப் பாராட்டியுள்ளது(1972).

     1987 இல் சென்னைப் பகுத்தறிவாளர் கழகம்  "பாரதிதாசன் விருதினையும்", தந்தை பெரியார் தமிழிசை மன்றம் "நற்றமிழ்க் கூத்தர் விருதினையும்" (1998), இலக்கிய வீதி அமைப்பு "தாராபாரதி விருதினையும்" (2002), ஆழ்வார்கள் ஆய்வு மையம் "தமிழ்ச்செம்மல் விருதினையும்" (2003) வழங்கிப் பெருமைசேர்த்தன.

     தமிழ்க்கலையுலகில் போற்றப்படும் கலைஞராக விளங்கிய ந. மா. முத்துக்கூத்தன் அவர்கள் 01.05.2005 இல் இயற்கை எய்தினார். ந. மா. முத்துக்கூத்தன் இயற்றிய திரைப்பாடல்களும், பிற கவிதைகளும், பொம்மலாட்டக் கலையும், வில்லுப்பாட்டு வடிவும் என்றும் இவரை நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, புரட்சி நடிகர் எம்.ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்.ஆர். இராதா, எசு. எசு.இராசேந்திரன் உள்ளிட்ட மூத்த திரைக்கலைஞர்களுடன் இணைந்து பணிபுரிந்த ந.மா. முத்துக்கூத்தன் கொள்கைவழிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர். தன்மானத்தை உயிராகப் போற்றியவர். வறுமையில் வாட நேர்ந்தபொழுதும் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கையில் வழுவியதே இல்லை. அதனால்தான் சமகாலக் கவிஞரான மலர்மகன்  நம் முத்துக்கூத்தரைச், "சாயாத கொடிமரம், சரியாத கொள்கைக் குன்று" என்று குறிப்பிடுவார். மக்கள் விழிப்புணர்வுக்குத் தம் கலைத்திறனைப் பயன்படுத்திய இப்பெருமகனாரைத் தமிழ்க்கலையுலகம் - தமிழிசையுலகம் என்றும் நினைவுகூரும்.

ந.மா. முத்துக்கூத்தனின் தமிழ்க்கொடை:

1.   பாதை மாறாத பாட்டுப் பயணம் (தன் வரலாறு)
2.   தமிழிசைப் பாடல்கள்(தொகுப்பு)
3.   பகை வென்ற சோழன்(நாடகம்)
4.   இசை வெள்ளத்தில் எதிர்நீச்சல்(குறும் புதினம்)
5.   மொழிகள் குல முதல்வி (தமிழ் மொழியின் சிறப்புரைக்கும் நூல்)
6.   துணை நடிகர் துரைக்கண்ணு (நடிகர்களின் வாழ்க்கை பற்றியது)
7.   எல்லாரும் நல்லா இருக்கணும்
8.   நெல்லம்மா (கதை-விதை-கவிதை)

குறிப்பு: இக்கட்டுரைச் செய்தியை எடுத்தாளுவோர், களஞ்சியம் உருவாக்குவோர் எடுத்த இடம் குறிப்பிடுங்கள்.

சனி, 6 ஜனவரி, 2018

மலேசியாவில் பரவியுள்ள மு.வ. புகழ்!


நல்லாசிரியர் கி. இராசசேரன்

     அறிஞர் மு. வரதராசனார் படைப்புகளை மூத்த தலைமுறையினர் படித்து, நல்வழியில் நடந்தனர் என்பதை இன்றைய இளைஞர்கள் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பேரிரைச்சல் ஊடகங்களும், புழுதியை  வாரி ஒருவர்மீது ஒருவர் வீசிக்கொள்ளும் படைப்பாளிகளும் மண்டிக் கிடக்கும் இத் தமிழ்ச் சமூகத்தில் மு. வ. வின் படைப்புகள் தமிழ்ப் படிப்பாளிகளைத் தன்வயப்படுத்தி வைத்திருந்ததை நன்றியுடன் இங்கு நினைத்துப் பார்க்கின்றேன். தமிழ்ப் பேராசிரியர் மு. வரதராசனாரின் சிறப்புகளைப் போற்றி அவர்தம் மாணவர்களால் சற்றொப்ப ஐம்பதுக்கும் மேற்பட்ட நினைவு நூல்கள் வரையப்பட்ட பெருமை நம் மு. வ. அவர்களுக்கே உண்டு. தந்தையின் பாசத்தைத் தெ.பொ.மீ. அவர்களிடமும் தாயின் பாசத்தை மு. வ.  அவர்களிடமும் காணலாம் என அறிஞர் இரா. மோகன் குறிப்பிடுவார். மு.வ. அவர்களின் திருக்குறள் தெளிவுரையின் இடத்தையும், தமிழ் இலக்கிய வரலாற்றின் இடத்தையும் வேறொரு நூல் பெறவில்லை என்பதை நினைக்கும்பொழுது இந்த நூல்களின் சிறப்பு நமக்குப் புலனாகும். சிந்தனையில் தெளிவு கொண்டவர் மு. வ.

     என் பேராசிரியர் நா. ஆறுமுகம் அவர்கள் தம் உயிருக்கு நிகராக மு.வ. அவர்களை நேசித்தவர்.  பொன். சௌரிராசனார், சி.பாலசுப்பிரமணியன், இரா. தண்டாயுதம், இரகுநாயகம், தெ. ஞானசுந்தரம் என மு. வ. அவர்களின் மாணவர் பட்டியல் நீளும். மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் மு.வ. அன்பர்கள் நிறைந்து காணப்படுகின்றனர்.

     மு.வ. அவர்களின் மாணவர்கள், மு. வ. வின் படைப்புகளில் மூழ்கித் திளைத்தவர்கள் என மு. வ. வின் தாக்கம்பெற்றவர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளதை அண்மையில் அறிய நேர்ந்தது.

 அண்மையில் மலேசியா சென்றிருந்தபொழுது, உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடக்க விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அரசியல் ஈடுபாடு கொண்ட அன்பர் ஒருவர் வருகின்றார் என்று நண்பர் முனியாண்டி ஐயா சொன்னபொழுது ஒரு வகையான தயக்கம் எனக்கு முதலில் ஏற்பட்டது. நிகழ்வுகள் தொடங்கிச் சிறப்பாக நடந்துகொண்டிருந்தபொழுது அந்தச் சிறப்பு விருந்தினர் உரையாற்றத் தொடங்கினார். அறிஞர் மு. வ. வின் படைப்புகளில் தாம் மிகுந்த ஈடுபாடுகொண்டுள்ளதையும், தம் வாழ்க்கையில் மு. வ. வின் கொள்கைகள் அதிகம் படிந்திருப்பதையும் குறிப்பிட்டுத் தமிழுக்கும் தமக்குமான உறவினை வெளிப்படுத்தினார். அவரின் உரை எனக்குப் பெரும் வியப்பினைத் தந்தது. தனித்து உரையாட நேரம் கேட்டேன். அவரும் நேரம் தந்து, ஓர் உணவு விடுதியில் நண்பர்களுடன் காத்திருந்தார். இணைந்து உண்டபடியே உரையாடினோம். அவர் தமிழ் வாழ்க்கை இதுதான்..

கி. இராசசேரன்...

     மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்துப் பந்திங் வட்டாரத்தில் அனைவருக்கும் அறிமுகமான நல்லாசிரியர் கி.இராசசேரன்தான் மு.வ. படைப்புகளில் மூழ்கித் தம் வாழ்க்கையை நெறிமுறையுடன் அமைத்துக்கொண்டவர். சுங்கை சீடு என்ற ஊரில் 1964 ஆம் ஆண்டு, ஏப்பிரல் 12 ஆம் நாள் பிறந்தவர். இவருடன் பிறந்தோர் எழுவர். பள்ளிப்படிப்பை முடித்த இவர் சிறீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர். 25.06.1984 ஆம் ஆண்டு தம் ஆசிரியர் பணியைத் தொடங்கிய இவர் 05.01.1998 முதல் கேரித்தீவு கிழக்குத் தமிழ்ப்பள்ளியிலும், 01.12.1990 முதல் கேரித்தீவு மேற்குத் தமிழ்ப்பள்ளியிலும், 01.07.1998 முதல் தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளியிலும் பணியாற்றியவர். 16.03.2008 இல் சுங்கை மங்கீசு தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியர் பணியைத் தொடங்கியவர். 16.06.2010 இல் கேரித்தீவு தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய பின் மீண்டும் சுங்கை மங்கீசு தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராக  01.02.2016 முதல் பணியாற்றிவருகின்றார். மாணவர்கள், உடன் பணியாற்றும் ஆசிரியர்களின் உள்ளம்கவர்ந்த ஆசிரியராகக் கடமையாற்றும் இராசசேரன் ஐயா அவர்களை நன்னெறிப்படுத்தியது மு. வ. நூல்கள் என்பதால் மு.வ. இலக்கிய வட்டம் என்ற அமைப்பைத் தொடங்கித் தமிழ்ப்பணியாற்றி வருகின்றார்.

     சுங்கை சீடு தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் செயலாளர், தலைவர் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட நடத்தியவர். சிறுநீரகம் செயலிழந்திருந்த திரு. நடராசன் என்பவருக்கு உதவும் வகையில் இருபதாயிரம் மலேசிய வெள்ளியைத் திரட்டி வழங்கிய கருணை உள்ளம்கொண்டவர் இவர். பந்திங் பகுதியில் நடைபெறும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அனைவரின் உள்ளமும் நிறைவடையும் வகையில் அறிவிப்பு வழங்கும் இயல்புடையவர். பல்வேறு ஆலயங்களின் அறப்பணிகளில் தம்மை இணைத்துக்கொண்டு பணிபுரிந்தவர். பல்வேறு கருத்தரங்குகள், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இலக்கியப் பணியாற்றும் இராசசேரன் நம்மைச் சுற்றியுள்ளவர்களை அரவணைத்து வாழ வேண்டும், நன்றியுணர்வுடன் இருக்கவேண்டும், குறைகூறாமல் இருக்கவேண்டும் என்ற உயரிய நெறிகளுடன் வாழ்ந்துவருகின்றார்.

     1991 ஆம் ஆண்டு  அக்டோபர் 20 இல் திருவாட்டி சாந்தி அம்மையாரை மணந்து, இல்லறப் பயனாக அருணன், அபிராமி என்ற இரண்டு மக்கள்செல்வங்களைப் பெற்றுள்ளார்.

     தம் வாழ்க்கையைத் திருத்தி, நல்வழிப்படுத்தியவை மு. வரதராசனார் நூல்கள் என்று குறிப்பிடும் இராசசேரனைப் போன்ற முன்மாதிரி ஆசிரியர்கள் இன்றைய தமிழுலகுக்கு மிகுதியாகத் தேவைப்படுகின்றார்கள்.


     வாழ்க கி.இராசசேரன் ஐயா!

செவ்வாய், 2 ஜனவரி, 2018

சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு


சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். தினகரன் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டினை வெளியிட, ஹனிபா வணிக நிறுவனங்களின் உரிமையாளர் முகமது ஹனிபா பெற்றுக்கொள்ளும் காட்சி.

இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளாரின் ஆவணப்படம் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் உள்ள ஆனந்தபவன் உணவக மாடியில் 31.12.2017 மாலை நான்கு மணிக்கு நடைபெற்றது.

சிங்கப்பூரில் உள்ள கங்கைகொண்டான் கழகமும், கவிமாலை இலக்கிய அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் கவிமாலை மா. அன்பழகன் வரவேற்புரையாற்றினார். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினைச் சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். தினகரன் வெளியிட,  சிங்கப்பூர் ஹனிபா வணிக நிறுவனங்களின் உரிமையாளர் முகமது ஹனிபா முதற்படியினைப் பெற்றுக்கொண்டார். சிறப்புப் படிகளைப் பொறியாளர் வெட்டிக்காடு இரவிச்சந்திரன், திரைப்படத் தயாரிப்பாளர் அருமைச் சந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பன் ஆவணப்படத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து அறிமுகம் செய்தார். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் தம் படப்பிடிப்பு அனுபவங்களையும், ஆவணப்படத்தின் நோக்கங்களையும் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, கவிஞர் தியாக.இரமேஷ், கவிஞர் தங்க. வேல்முருகன், எழுத்தாளர் இலியாஸ், வழக்கறிஞர் கலாமோகன், பேராசிரியர் ஆ.இரா. சிவக்குமாரன், எழுத்தாளர் சங்கத் தலைவர் நா. ஆண்டியப்பன், கவிஞர் சீர்காழி செல்வராசு உள்ளிட்ட படைப்பாளர்களும், பல்வேறு தமிழமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அதிகமாகக் கலந்து கொண்டனர்.

ஆர். தினகரனிடம் இருந்து, முனைவர் சுப. திண்ணப்பன் ஒளிவட்டினைப் பெறும் காட்சி. அருகில் கவிமாலை மா. அன்பழகன், மு.இளங்கோவன், பொறியாளர் ப.புருஷோத்தமன்

மு.இளங்கோவனைச் சிறப்பிக்கும் முகமது ஹனிபா

ஒளிவட்டினைப் பெற்றுக்கொள்ளும் 
வெட்டிக்காடு சோ.இரவிச்சந்திரன்

திரைப்படத் தயாரிப்பாளர் அருமைச்சந்திரன் அவர்கள் ஒளிவட்டினைப் பெறும் காட்சி

அரங்கு நிறைந்த அறிஞர் பெருமக்கள்

பார்வையாளர்களின் ஒருபகுதியினர்

ஆவணப்படத் திரையிடலை ஆர்வமுடன் கண்டுகளிக்கும் தமிழார்வலர்கள்

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் ஒளிவட்டினைப் பெறும் தொடர்பு முகவரி:
0091 9442029053

படங்கள் உதவி: கவிஞர் தியாக.இரமேஷ்