நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 31 டிசம்பர், 2011

“தானே” வந்து தானே ஓய்ந்தது…




புதுச்சேரியில் தானே புயலின் தாக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது. 30.12.2011 அதிகாலை 2.30 மணியிலிருந்து காலை 10 மணி வரை புயல்காற்றின் முற்றுகையில் புதுச்சேரி இருந்தது. மழையும் இடைவிடாது பெய்ததால் மக்கள் அச்சத்துடன் இருந்தனர்.

விடியற்காலம் 5 மணி அளவில் ஒரு பதிவு எழுதினேன். அதன் பிறகு மின்சாரம் இல்லாததால் இன்றுதான் கணினியை இயக்க முடிந்தது. இதுவரை 10 பேர் உயிர் இழந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அரசு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக இருந்த பழைமையான மரங்கள் யாவும் சாய்ந்தன. மின்சாரம் பல பகுதிகளில் இல்லை. சாலையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

நேற்று இரவு வரை வீட்டில் இருந்த மக்கள் இன்று வெளியே நடமாடத் தொடங்கியுள்ளனர். கடைகள் எதுவும் திறக்கவில்லை. எனவே உணவுக்குப் பலரும் திண்டாடினர். புத்தாண்டுக்கு வெளியூரிலிருந்து வந்துள்ள சுற்றுலாக்காரர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இந்த ஆண்டு அமைந்துவிட்டது.

கடற்கரையில் கடுமையான காற்று வீசியதால் கருங்கற்களைத் தூக்கிவந்து கடற்கரைச் சாலையில் போட்டது. தென்னை மரங்களின் தலையை முறித்துப் போட்டது. காற்று சில வீடுகளின் கூரைகளைப் பெயர்த்துச்சென்றது. தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி மாடிகளில் வைத்துள்ளது. தென்னை மரத்தில் முற்றிய நெற்றுகள் கீழே விழுந்து தண்ணீரில் மிந்ததன. தெருக்கள்தோறும் தேங்காய்களைப் பார்க்கமுடிந்தது. தண்ணீரில் கழிவுநீர் சில இடங்களில் கலந்தது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததை இன்று வீட்டிலிருந்து மக்கள் இறைத்து வருகின்றனர். சாலைகள் இன்னும் முழுமையாகப் போக்குவரவுக்குத் தயாரகவில்லை. பால் விலை நேற்று இரு மடங்கானது.

பள்ளிகள்,கல்லூரிகள் விடுமுறை என்பதால் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகவில்லை. புதுச்சேரியில் இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்க ஆள் இல்லை என்று கூறும் அளவுக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையைத் "தானே" புயல் பாதித்துவிட்டது.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

புதுவையில் கடும் புயல் - இருளில் மூழ்கிய புதுவை

புதுச்சேரியைப் புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டதாலும், இது கடற்கரையில் அமைந்த ஊர் என்பதாலும் 29.12.2011 இரவு பத்துமணி முதல் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்ததப்பட்டது. காற்றும் பலமாக வீசியது. 30.12.2011 இரவு ஒரு மணிமுதல் முதல் கடும் புயற்காற்று இந்த ஊரைத் தாக்கியது. வீட்டின் சன்னல் கதவுகள் நிலைக் கதவுகளைக் காற்று வேகமாக அடித்து உடைத்தது. நள்ளிரவு இரண்டுமணி முதல் புயலின் வேகம அதிகரித்தது. விடியற்காலம் நாலரை மணிக்குப் புயலின் வேகம் மிகவும் அதிகரித்துள்ளதை உணரமுடிகின்றது. ஐந்து மணிக்கு மேலும் காற்று அதிகமாக வீசுகின்றது. வானிலை மையம் முன்னதாகப் புயலின் தாக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டதாலும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் புயல்பற்றிய செய்தி மக்களுக்குத் தெரிந்ததால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.கடற்கரை ஒட்டிய பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தஞ்சம் அடைந்துள்ளனர். பெரும்பாலான மரங்கள் சாய்ந்திருக்க வாய்ப்பு உண்டு.அதுபோல் குடிசைவீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டிருக்கலாம். காலையில்தான் இழப்புகள் குறித்த விவரம் தெரியவரும். இரவுப்பொழுது என்பதால் அச்சம் கலந்த உறக்கத்தில் மக்கள் உள்ளனர் தொடர்ந்து புயல்காற்று வீசுகின்றது. மழையும் விடாமல் பெய்து கொண்டுள்ளது.தொலைத்தொடர்பு சில இடங்களில் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கம்


அழைப்பிதழ்

சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூர் திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தின் (S.R.M.) தமிழ்ப்பேராயமும், மைசூர் இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தின் மொழித் தரவுத் தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து பத்துநாள் தமிழ்க் கணினிமொழியியல் குறித்த பயிலரங்கினை நடத்துகின்றன. பல்கலைக்கழகம், கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம். அழைப்பிதழில் பயிலரங்க நெறிமுறைகள் உள்ளன.

இடம்: திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்(S.R.M.)
நாள்: 20.01.2012 முதல் 30.01.2012 வரை





தொடர்புக்கு:
திரு.இல.சுந்தரம், தமிழ்ப்பேராயம் + 91 98423 74750

சனி, 24 டிசம்பர், 2011

பொன்னி இதழாசிரியர்கள் முருகு.சுப்பிரமணியன், அரு.பெரியண்ணன் வாழ்க்கைக் குறிப்பு


பொன்னி இதழாசிரியர் முருகு.சுப்பிரமணியன்

 திராவிட இயக்கம் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய இயக்கமாகும். இந்த இயக்கத்தின் கொள்கைகளைப் பறைசாற்றும் வகையில் பல ஏடுகள் உணர்வாளர்களால் நடத்தப்பெற்றுள்ளன. சற்றொப்ப முந்நூறுக்கும் மேற்பட்ட திராவிட இயக்க ஏடுகள் தமிழகத்தில் வெளிவந்துள்ளன. இவற்றுள் பொன்னி ஏடு 1947 இல் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்தது. பின்னர் சென்னையிலிருந்தும் வெளிவந்தது. 1953 அளவில் இந்த இதழ் நிறுத்தப்பட்டது.

 பொன்னி இதழில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பாடல்களை வெளியிட்டும் அதற்குத் தகுந்த படங்களை முகப்பில் வெளியிட்டும் இதழாசிரியர்கள் பாவேந்தர் புகழ்பரப்பியுள்ளனர். பாரதிதாசன் பரம்பரை என்ற ஓர் இலக்கிய அணி இந்த இதழின் வழி உருவானது. தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான அகிலன், கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், தில்லை வில்லாலன் எனப் பலர் இந்த ஏட்டில் எழுதியுள்ளனர்.

 பொன்னி இதழை நடத்திய முருகு.சுப்பிரமணியன், அரு.பெரியண்ணன் ஆகியோரின் படங்களையும், வாழ்க்கைக் குறிப்பையும் இங்கு இணைக்கின்றேன். தொடர்ந்து பொன்னி குறித்து எழுதுவேன். மேலும் விவரம் வேண்டுவோர் நான் பதிப்பித்த பொன்னி ஆசிரியவுரைகள், பொன்னி பாரதிதாசன் பரம்பரை, பொன்னி சிறுகதைகள் (வெளிவர உள்ளது) ஆகியவற்றைப் பார்க்கலாம்.


முருகு சுப்பிரமணியன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

முருகு சுப்பிரமணியன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோனாப்பட்டு என்னும் ஊரில் வாழ்ந்த முருகப்பன், சிவகாமி ஆச்சிக்கு மகனாகப் (5.10.1924-இல்) பிறந்தவர். திருச்சிராப்பள்ளி அர்ச். சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் 1939 - ஆம் ஆண்டு ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்தார். அவர்தம் தமிழாசிரியர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை என்பவர் முருகுவின் கட்டுரை புனையும் ஆற்றலைப் பாராட்டி ஊக்குவித்தார். 1942 - இல் முருகுவின் படிப்பு முதலாண்டு பல்கலைக்கழக வகுப்போடு முடிந்தது. படிப்பு முடியும் முன்னரே இளந்தமிழன் என்னும் திங்கள் இருமுறை ஏட்டைத் தொடங்கினார். கையெழுத்துப்படியாக இந்த ஏடு ஏறத்தாழ மூன்றாண்டுகள் வெளி வந்தது. இளந்தமிழன் ஆசிரியர் முருகு என வெளிவந்தது. அதுமுதல் முருகு. சுப்பிரமணியன் ஆனார்.

இளம் அகவை முதல் பாவேந்தர் பாடல்களிலும் திராவிட இயக்கக் கொள்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 1944 - 45 ஆம் ஆண்டுகளில் காரைக்குடியில் வெளிவந்த குமரன் என்னும் வார ஏட்டில் முருகு துணையாசிரியராகவும் நிர்வாகியாகவும் பணிபுரிந்தார். குமரன் இதழாசிரியர் சொ. முருகப்பா அவர்களிடம் இதழியல் நுட்பங்களை அறிந்து கொண்டார். 1947 - இல் பொங்கல் நாளையொட்டி, பொன்னி என்னும் இதழைத் தொடங்கினார். இது தமிழ் இலக்கிய உலகில் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டது.

1953 - ஆம் ஆண்டு முருகு மலேசியா சென்றார். தமிழ்நேசன் இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார். 1954 - இல் சிங்கப்பூர் சென்று தமிழ்முரசு என்னும் நாளிதழில் துணையாசிரியரானார். மலேசியாவில் வெளிவந்த தமிழ்நேசன் இதழின் தலைமையாசிரியர் பொறுப்பை 1962 - முதல் ஏற்றார். எழுத்துத் துறையில் பலர் உருவாகத் துணையாக இருந்தவர். இவர் 1984 ஏப்ரல் 10 - இல் இயற்கை எய்தினார். இவர்தம் மக்கள் மலேசியாவில் புகழ் வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். (விரிவான செய்திகளுக்குச் சிந்தனையாளன் இதழில் சூன் 2003 - இல் வெளிவந்த எம் கட்டுரையைக் காண்க.)



அரு. பெரியண்ணன்

அரு பெரியண்ணன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

அரு பெரியண்ணன் அவர்கள் புதுக்கோட்டையை அடுத்த ஆத்தங்குடியைச் சேர்ந்தவர். இவர் பிறந்த ஆண்டு 12.8.1925 ஆகும். இளம் அகவை முதல் திராவிட இயக்க உணர்வுடன் வளர்ந்தவர். தம் பகுதிக்கு வந்த திராவிட இயக்கத் தலைவர்களை வரவேற்று விருந்தோம்பியவர். புதுக்கோட்டையில் செந்தமிழ்ப் பதிப்பகம் என்னும் பெயரில் அச்சகம் நடத்தியவர். இதன்வழித் திராவிட இயக்க நூல்கள் பலவற்றை வெளியிட்டு அப்பகுதியில் புகழ்பெற்றவர். முருகு சுப்பிரமணியன் துணையுடன் பொன்னி இதழை வெளியிட்டவர். முருகு வெளிநாடு சென்ற பிறகு பொன்னி இதழை முன்னின்று நடத்தியவர் இவரே ஆவார். எதனையும் திட்டமிட்டுச் செய்து முடிக்கும் ஆற்றலுடையவர். வேகமாக வினையாற்றும் இயல்புடையவர். இவர்தம் மக்கள் நற்பண்பு உடையவர்களாகவும் உயர்கல்வி வாய்த்தவர்களாகவும் விளங்குகின்றனர்.

புதன், 21 டிசம்பர், 2011

மருந்து மூல நூலாசிரியரும் உரையாசிரியர்களும்

திருக்குறள் நூல் பன்னெடுங் காலத்திற்கு முன்பு பெரும்பேராசான் திருவள்ளுவரால் தமிழகத்தின் அறிவுக்களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் சுவையுணர்ந்த சான்றோர்கள் பலர் அவர்தம் காலச்சூழல், பட்டறிவு, கல்வியறிவு, கொள்கை ஆகியவற்றிற்கு ஏற்பத் தத்தம் விளக்கங்களைக் - கருத்துகளை உரையாக வரைந்துள்ளனர். இவ்வுரைகளில் மூல நூலாசிரியர் வழிநின்றும், மூல நூலாசிரியரின் கருத்துக்கு முரணாகவும் செய்திகள் இடம்பெற்றுள்ளன. மூல நூலாசிரியர் சுருக்கிச் சொன்னதை விரித்தும், அவர் ஒரு கருத்து எல்லையில் நின்று உரைத்ததைத் தம் கால நூலறிவுகொண்டு பன்மடங்கு வகைப்படுத்தியும் உரைக்கும் போக்கினையும் உரையாசிரியர்கள் கைக்கொண்டுள்ளனர். இவ்வுரை வரையும் போக்குகள் பல அறிவுக்கருத்துகளை முன்வைக்கின்றன. இதனை மருந்து எனும் அதிகாரக் குறட்பாக்களின் துணைகொண்டு அவற்றிற்கு எழுந்த பல்வேறு உரைகளை ஒப்பிட்டு விளக்கும் நோக்கில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

மருந்து அதிகாரத்தின் சிறப்பு

திருக்குறளின் அனைத்து அதிகாரச் செய்திகளும் முதன்மை வாய்ந்தவையாகும். திருவள்ளுவரே தம் ஒவ்வொரு அதிகாரத்தையும் முதன்மைப்படுத்தியும், தம் ஒவ்வொரு கருத்துகளையும் வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் உயர்வுப்படுத்தியும் உரைப்பதை அவரின் குறட்பாக்கள் வழியாகவே உணரமுடியும்.

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற” (குறள் 300)

என்று வாய்மையின் மேன்மையைப் போற்றிப் பாடுவார். அவரே,

“பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற” (குறள் 61)

எனக் குழந்தைப்பேற்றின் சிறப்பினைக் கொண்டாடுவார்.

இவ்வாறு திருவள்ளுவர் எடுத்துரைக்கும் அனைத்துச் செய்திகளும் உயர்வானதாகவே இருக்கின்றன. திருவள்ளுவரின் மற்ற அதிகாரங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு “மருந்து” அதிகாரத்திற்கு மட்டும் உண்டு.

கடவுள் வாழ்த்தில் கடவுளின் பெருமையைப் போற்றுவார். புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தில் மக்கள் பேற்றின் மாண்பினை எடுத்துரைப்பார். ஆனால் மருந்து எனும் அதிகாரத் தலைப்பிட்டு எழுதிய திருவள்ளுவர் மருந்து வேண்டாம் என்று புதுமையான முறையில் கருத்தினை முன்வைக்கின்றார். திருவள்ளுவர் குறிப்பிடும் மருத்துவமுறை நோய் வராமல் காக்கும் தடுப்பு முன்னெச்சரிக்கை மருத்துவமுறையாகும். உணவுச்சார்பு, பழவினை, மரபுவழி(Generation), சுற்றுச்சார்பு காரணமாக நோய் வந்தால் அதனைப் போக்கிக்கொள்ளும் முறையினையும் திருவள்ளுவர் தம் மெய்யறிவு புலப்பட வரைந்துள்ளார்.

மருந்து என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறட்பாக்கள் உணவே மருந்து என்னும் வாய்மொழிக்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்குகின்றன. மேலும் இவ்வதிகாரக் குறட்பாக்களுக்கு உரையாசிரியர்கள் வரைந்துள்ள உரைகள் மருத்துவம் - உடல் ஓம்பல் குறித்த மேலதிகத் தகவல்களைத் தருகின்றன.

திருக்குறளின் மருந்து அதிகார முதல் குறட்பா ஊதை(வளி), பித்தம், கோழை(ஐ) என்னும் மூவகை உடற்கூறும் மிகினும் குறையினும் நோய் உண்டாகும் என்று பொதுவாகக் குறிப்பிடுகின்றது. அதனை அடுத்து நோய் வராமல் தடுக்கும் முற்காப்பினை அடுத்த ஆறு குறட்பாக்கள் குறிப்பிடுகின்றன. நிறைவாக உள்ள மூன்று குறட்பாக்களில் உணவுத் தவறாலும், பிற காரணங்களாலும் நோய் வந்துற்றபொழுது மருத்துவர் செய்யும் மருத்துவமுறைகள்- நோயாளிகளின் கடமைகளைக் குறிப்பிடுகின்றன.

திருவள்ளுவர் தமிழ் மக்களின் வாழ்வியல்-அரசியல்-வணிகம்-மெய்ப்பொருளியல் முதாலன எண்ணங்களைப் பதிவுசெய்தவர். அதுபோலவே தமிழக மருத்துவமுறைகளை உளங்கொண்டு தம் குறட்பாக்களை எழுதியுள்ளார். அதனை உணராதவர்போல் பரிமேலழகர் வடமொழிச் சார்பான விளக்கங்களைப் பல இடங்களில் முன்வைத்துள்ளார். குறிப்பாக மருந்து அதிகாரத்தில் பரிமேலழகர் ஆயுர்வேதம் என்னும் ஆரிய மருத்துவநூல் முறையைப் பின்பற்றி உரை வரைந்திருப்பதைப் பாவாணர் போன்ற உரையாசிரியர்கள் தக்கவாறு தம் உரைகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.

மாந்த உடல்களை நோய் தாக்குவதற்குப் பல காரணங்களை இன்றைய மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது. மரபு வழியாகவும், நோய்த்தொற்று அடிப்படையிலும், உணவு, உடை, நஞ்சு, போர், அச்சம், சுற்றுச்சூழல்(காற்று, ஒலி, நீர்) முதலியவற்றின் காரணமாகவும் நோய் மாந்தர்களை, விலங்குகளை, பறவைகளைத் தாக்குகின்றன. திருக்குறள் ஆசிரியரோ சுருக்கிச்சொல்வதுபோல் உடலில் உள்ள ஊதை(வளி), பித்தம், கோழை என்னும் மூன்றும் தம் சுரத்தல் தொழிலில் மிகுதியாக இருப்பினும் குறைவாக இருப்பினும் உடலில் நோய் உண்டாகும் என்று குறிப்பிடுகின்றார்.

ஊதை, பித்தம், கோழை(ஐ) என்னும் மூன்றும் உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதன. மூச்சு, பேச்சு, உட்பொருள் இடம் மாற்றம், வெளியேற்றத்திற்குத் தனியாகவும் பிற தாதுக்களுடன் இணைந்தும் ஊதை(வளி) செயல்புரிகின்றது. அதுபோல் நாம் உண்ணும் உணவு செரிப்பதற்குப் பெரிதும் உதவுவது பித்தநீர் ஆகும். தசைநார்களின் மழமழப்பான இயக்கத்திற்குக் கோழை உதவுகின்றது. இவை மருத்துவ அறிஞர்களின் கருத்தாக இருப்பதைப் பாவாணர் கற்று உணர்ந்து தம் உரையில் எழுதியுள்ளார். இம்மூன்றும் குறைவதற்கும் மிகுவதற்கும் பல காரணங்கள் உண்டு. உணவு, உடை, செயல்கள், ஒவ்வாமை, பழக்கவழக்கங்கள், மரபுவழி எனக் காரணங்களைச் சுட்டலாம். இம்மூன்றின் இயக்கமும் சரியாக இருக்கும்பொழுதே உடல்நோய் இல்லாமல் இருக்கும் என்று திருவள்ளுவர் கருதுகின்றார்.

பாவாணர் போன்ற தமிழ்நெறி சார்ந்தவர்கள் திருவள்ளுவரின் கருத்துக்கு இயையவே உரை கண்டுள்ளனர். ஆனால் பரிமேலழகரோ மிகினும் குறையினும் என்பதற்கு உணவும் செயலும் அவரவர் உடல் வலிவுக்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும் எனவும் இதில் மிகுதியாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் நோய் உண்டாகும் எனவும் விளக்கம் தருகின்றார்.
பரிமேலழகர் உரையின்படி நோய்க்குக் காரணம் உணவும், செயலும் மிகுவதும் அல்லது குறைவதும் என்பது பெறப்படுகின்றது. மணக்குடவரும் உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன் உடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும் நோய்தரும் என விளக்கம் தருகின்றார்.

பரிமேலழகரும் மணக்குடவரும் கூறும் கருத்துகள் சரி எனப்படினும் ஆனால் இவை மூல நூலாசிரியரின் கருத்துக்கு முரணியதாகப்படுகின்றது. ஏனெனில் வள்ளுவப் பெருந்தகை தம் குறட்பாவில் வளி முதலான மூன்றும் என்று குறித்தாரேயன்றி, உணவையோ, செயலையோ நேரடியாகத் தம் குறட்பாவில் இடம்பெறச் செய்தாரில்லை. எனவே பரிமேலழகரும் மணக்குடவரும் கூறும் கருத்துகளை ஏற்கத் தயக்கம் ஏற்படுகின்றது.

உணவுநெறி

உடல் தோற்றம், செயல்பாடுகள், அறிவுமலர்ச்சி, நோயின்மை இவற்றிற்குத் தக்க உணவுகளே அடிப்படையாக அமைகின்றன. இத்தகு உணவினைப் பயன்படுத்தும் முறைகளில் மாறுபாடுகள் உண்டானால் மேற்கண்ட யாவும் குலையும். பெரும்பாலும் நோய்களுக்குக் காரணமாக இருப்பவை உண்ட உணவு செரிக்காமல் இருப்பது, பொருந்தா உணவு, மிகை உணவு என்பனவாகும். எனவே உடல் பாதுகாப்பு, வாழ்க்கைக் காப்பிற்கு உதவும் உணவுகளை உண்ணுவதாலும், உண்ணாமையாலும் ஏற்படும் நோய்களை - உடல்மாறுபாடுகளைத் திருவள்ளுவர் ஆழமாகச் சிந்தித்துள்ளார். இதற்கென இவர் ஆறு குறட்பாக்களைத் தருகின்றார்.

முன்பு உண்டது செரித்துப் பசித்த பிறகு உண்ண வேண்டும்(944). அளவுடன் உண்ணவேண்டும்(946). குறைவாக உண்ணவேண்டும்(947) உடல்கூறு, பருவம், விருப்பம், காலம், இடம் இவற்றிற்கு மாறுபாடு இல்லாத உணவை உண்ணவேண்டும்(945). நாவின் சுவைக்கு இடம் தராமல் வயிற்றில் வெற்றிடம் இருக்கும்படி உண்ணவேண்டும் என்று உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்தும்படி குறிப்பிடுகின்றார். மேற்கண்ட கருத்துகளைத் திருக்குறளின் வழியாக அறியும் அதே நேரத்தில் உரையாசிரியர் பரிதியார், செரித்தால் சாமம் பார்த்து அன்னம் இரண்டுகூறும் தண்ணீர் ஒரு கூறும் வாயு சஞ்சரிக்க ஒருகூறும் வாத பித்த சிலேட்டுமத்திற்கு வேண்டாக் கறியைவிட்டு அசனம் பண்ணக்கடவன்” என விளக்குவது உணவு உண்ணும்பொழுது கவனத்தில்கொள்ளவேண்டியதை நினைவூட்டுகின்றது.

எனவே நம் முன்னோர்கள் உணவு உண்ணுவதில் மிகச்சிறந்த நெறிகளைப் பின்பற்றியதால் நெடிதுய்க்கும்(943) முறையினைத் தெரிந்துள்ளனர் என்பது புலனாகின்றது.

“மாறுகொள்ளாத உண்டி”யை உண்ணும்படி வள்ளுவரும் வள்ளுவர் குறளுக்கு உரைவரைந்த உரையாசிரியர்களும் வலியுறுத்தியுள்ளனர். மாறுகொள்ளுதல் என்பது உண்ணும் அளவு, காலம், சுவை, வீரியம் இவற்றில் இருத்தல்கூடாது. உண்ணும் அளவில் மிகுதலும், பகலில் உண்பதை இரவிலும், இரவில் உண்பதைப் பகலிலும், மழைக்காலத்தில் உண்பதை வேனிற்காலத்திலும் வேனிற்காலத்தில் உண்பதை மழைக்காலத்திலும் மாற்றி உண்பதும், சுவை கருதி நெய்யும் தேனும் சம அளவுகலந்து உண்டால் நஞ்சாக மாறிக்கொள்ளும் என மணக்குடவர் உரையில் விளக்கம் தருவர்.

இன்றைய நிலையில் Food Poison எனும் நோய்க்கு இதுவே காரணம். இறைச்சி அல்லது காலம் கடந்த மாவு, பூச்சியுற்ற பொருளில் செய்யும் உணவு யாவும் நஞ்சு உணவாக மாறித் துன்பம் செய்யும்(இக்காலத்தில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பெறும் பண்ணியங்களை உண்பதால் புற்றுநோய் உண்டாதலும் எண்ணிப்பார்க்கவும்). எனவே உடலுக்கு மாறுபாடு இல்லாத உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் பசித்திருக்கச் சொன்னார்கள் போலும்(!).

உணவை உண்ணுவதில் தோன்றும் மகிழ்ச்சியைவிட உண்ட உணவு செரிப்பதில்தான் மகிழ்ச்சி. உண்ட உணவு இல்லாமல் போவதுதான் பெரு மகிழ்ச்சியை நமக்குத் தரும்.

இதனை உணர்ந்து பார்த்த வள்ளுவர் காமத்துப்பாலில்

“உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலி னூடல் இனிது(1326) என்பார்.

எனவே வயிற்றில் உணவு அற்றுப்போகும் தன்மையில்தான் உண்மை இன்பம் உண்டு என்பதைப் பொறி புலன்களால் உணர்ந்து அறிக!.

உலக உயிர்களில் மாந்தப் பிறப்பு உயர்வானதாகும். இம்மாந்தப் பிறப்பு வாய்க்கப்பெற்றவர்கள் தத்தம் உடம்பினைப் பேணிக்காத்து நெடிதுநாள் வாழவே விரும்புவர். துறவிகளோ இப்பிறவி வேண்டாம் என்றும் பிறப்பு நீக்கிச் செம்பொருள் நுகர்வு வேண்டும் என்றும் விரும்புவர். ஆனால் திருவள்ளுவப் பேராசான் போன்ற சித்தர் மரபினர் உடம்பினைப் பேணிக் காப்பதைத் தேவையென மாந்த குலத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.

“உடம்பால் அழியின் உயிரால் அழிவர்”(724) “உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”(725) என்பர் திருமூலர். இவ்வுடம்பினைப் போற்றும் வகை தெரியாமல் மிகுதியாக உண்டோ அல்லது வேறு வகையில் உண்டோ உடல்நலம் கெட்டால், உய்யும்பொருட்டு மருத்துவம் பார்த்தல் குறித்த பல செய்திகளைத் திருவள்ளுவரும் அவரின் குறட்பா வழி உரையாசிரியர்களும் தருகின்றனர்.

நோயாளியின் சொல்லாலும், நாடியினாலும், பிற உடற்குறிகளாலும், சிறுநீர் முதலான கழிபொருள்களின் இயல்பாலும் நோய் இன்னதென்பதை ஆராய்ந்து- அந்த நோய் தோன்றியதற்கான காரணத்தை ஆராய்ந்து, பிறகு அந் நோயைப் படிப்படியாக நீக்கும் வழியை மருத்துவன் கைக்கொள்ள வேண்டும் என்கின்றார் திருவள்ளுவர் வழிநின்று பாவாணர்(948).
நோய்நாடி எனத்தொடங்கும் குறட்பாவில் திருவள்ளுவர் “நாடி” எனும் சொல்லை நோய்நாடி, நோய்முதல்நாடி, வாய்நாடி என மூன்று முறை பயன்படுத்தியுள்ளது குறிப்பாக நாடிப்பார்த்தல் எனும் தமிழ் மருத்துவமுறையை உள்ளம்கொண்டே எனப் பாவாணர் கருதுகின்றார். ஏனெனில் நாடிப்பார்த்து நோய்தீர்க்கும் முறை தமிழர்கள் பன்னெடுங்காலம்தொட்டுச் செய்துவரும் மருத்துவமுறையாகும்.

மேலும் “உற்றவன் தீர்ப்பான்..” (950) எனத்தொடங்கும் குறட்பாவில் அரிய மருத்துவத்துறைச் செய்திகளைத் திருவள்ளுவர் வைத்துள்ளார். அவற்றைக் கண்டு காட்டும் உரையாசிரியர்களுள் பரிமேலழகரும், பாவாணரும் பல புதிய நுட்பங்களைத் தருகின்றனர். மருத்துவம் வெற்றியாக நிறைவேற நோயுற்றவன், நோய்தீர்க்கும் மருத்துவன், அம்மருத்துவனுக்குக் கருவியான மருந்து அல்லது மருத்துவமுறை, அம்மருத்துவனுக்குத் துணையாக இருந்து மருந்துகொடுப்பவன் எனும் நான்கு கூறுகளையும் விரித்துக்காட்டும் பரிமேலழகரும், பாவாணரும் மிகச்சிறந்த உலகியல் அறிவுகொண்டு இக்குறட்பாக்களுக்கு விளக்கம் வரைந்துள்ளனர். மருந்து அதிகாரக் குறட்பாக்களும், உரைகளும் தமிழர்களின் மருத்துவமுறையினை எடுத்துக்காட்டுவதில் முன்னிற்கின்றன.

வியாழன், 15 டிசம்பர், 2011

திண்டுக்கல் இணையப் பயிலரங்க நினைவுகள்…

ஐபேடில் தமிழ் கற்கும் வசதியை விளக்குதல்(தினகரன்)

தினகரன் மதுரைப் பதிப்பு(15.12.2011) 

  மதுரை பாத்திமா கல்லூரியில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் இணையப் பயிலரங்கப் பணியினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 13.12.2011 இரவு 7.30 மணிக்குத் திண்டுக்கல் வந்தேன். புகழ்பெற்ற பார்சன் விடுதியில் தங்குவதற்கான ஏற்பாட்டினை மிகச்சிறப்பாகச் செய்திருந்தார்கள். நண்பர் பாரதிதாசன், அமைதி அறக்கட்டளை நிறுவுநர் திரு.பால் பாஸ்கர் ஆகியோர் இரவு அறைக்கு வந்து இணையப் பயிலரங்கம் தொடர்பில் கலந்துரையாடினர். இரவு உணவு அனைவரும் உண்டோம். திரு.பால் பாஸ்கர் அவர்களை முன்பே அறிவேன். அண்ணன் இரா.கோமகன், வழக்கறிஞர் கே.பாலு, கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு, அண்ணன் ஜெயபாஸ்கரன் ஆகியோர் வழியாகப் பால் பஸ்கர் அவர்களின் சமூகப்பணிகளை அறிவேன். இருவரும் இன்றுதான் நேர்கண்டு உரையாடும் சூழல் அமைந்தது. 

  14.12.2011 காலை பத்து மணியளவில் அமைதி அறக்கட்டளையின் அரங்கிற்குச் சென்றோம். மாணவர்களும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் காத்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்கியது. தொடக்கவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. திரு.பால் பாஸ்கர் தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் வரவேற்புரையாற்றினார். அருளகம் சார்ந்த பாரதிதாசன் அறிமுக உரையாற்றினார். தமிழ் இணையம் வளர்ந்த வரலாற்றையும் தமிழ் இணையம் பற்றி அறிய வேண்டியதன் தேவையையும் நான் காட்சி விளக்கத்துடன் அரங்கிற்குத் தெரிவித்தேன். ஐ பேடு உள்ளிட்ட கருவிகள் கல்வி, படிப்புக்கு உதவும் பாங்கினை விளக்கினேன். மாணவர்கள் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு என் உரை தேவையானதாகத் தெரிந்தது. அனைவரும் என் முயற்சியை ஊக்கப்படுத்தினர். மாணவர்கள், பொதுமக்கள் உள்ளம் நிறைவடையும் வகையில் மிக எளிய தமிழில் தமிழ் இணையப் பயன்பாட்டைச் சொன்னதும் அனைவரும் புரிந்துகொண்டனர். 

 தமிழ்த் தட்டச்சினை அறிந்து அரங்கிலிருந்தபடி ஒரு மாணவர் என் மின்னஞ்சலுக்குத் தமிழில் தட்டச்சிட்டுப் பயிலரங்கம் சிறப்பாகச் செல்கின்றது என்று ஒரு பாராட்டு மடல் விடுத்தார். அரங்கில் அந்த மடல் பற்றி ஆர்வமுடன் உரையாடினோம். வேலூர் மென்பொருள் பொறியாளர் ஒருவருடன் ஸ்கைப்பில் உரையாடினோம். அனைவருக்கும் மகிழ்ச்சி. 

 தமிழ்த் தட்டச்சு தொடங்கி, சமூக வலைத்தளங்கள், நூலகம் சார்ந்த தளங்கள், கல்வி சார்ந்த தளங்கள், மின்னிதழ்கள் என ஓரளவு பார்வையாளர்களுக்குப் பயன்படும் செய்திகளைப் பகிர்ந்துகொண்டேன். தொலைக்காட்சி, பண்பலை வானொலி, நாளிதழ் சார்ந்த ஊடகத்துறையின் பல செய்தியாளர்கள் நிகழ்ச்சி பற்றிய செய்திகளை ஆர்வமுடன் வெளியிட்டனர். மதுரைப் பதிப்பில் அனைத்து முன்னணி ஏடுகள் வழியாகப் பல மாவட்டங்களைக் கடந்து திண்டுக்கல் பயிலரங்கச் செய்திகள் சென்றன.

தினமணி நாளிதழில் செய்தி 

 * ஊடகத்துறையின் அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி.

புதன், 14 டிசம்பர், 2011

திண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது...

அமைதி கல்லூரியின் நிறுவுநர் பால் பாஸ்கர் உரை திண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது... படங்கள் சில...

பயிற்சி பெற்ற மாணவர்கள்

பார்வையாளர்கள்

செவ்வாய், 13 டிசம்பர், 2011

திண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியில் தமிழும் இணையமும் மாநில அளவிலான பயிலரங்கம்


அழைப்பிதழ்

திண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 14.12.2011 காலை பத்து மணி முதல் மாலை நான்குமணி வரை நடைபெற சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழைப்பிதழ் இணைத்துள்ளேன். ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம்.



தொடர்புக்கு:திரு.பாரதிதாசன் + 9843211772

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது…


பாத்திமா கல்லூரி முதல்வர் உரை

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று 13.12.2011 காலை 9 மணிக்குத் தொடங்கியது. கல்லூரி முதல்வர்,செயலாளர்,தமிழ்த்துறைத்தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முனைவர் மு.இளங்கோவன் மாணவியர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்தார்.உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது…
பயிலரங்கத்தின் காட்சிகள் சில…


கல்லூரிச் செயலர் உரை


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

புதுச்சேரியில் பாரதியார் பிறந்தநாள் விழா


குமரி அனந்தன் அவர்கள் பாரதியார் படத்திற்குச் சிறப்புச்செய்தல்
படம் உதவி: பாபு(புதுச்சேரி)

புதுச்சேரியில் பாரதியார் பிறந்தநாள் விழா இன்று (11.12.2011) காலை பத்து மணியளவில் புதுவை,ஈசுவரன்கோயில் வீதியில் அமைந்துள்ள அவர்தம் நினைவு இல்லத்தில் புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது.

புதுவை சட்டப்பேரவைத் தலைவர் சபாபதி அவர்கள் கலந்துகொண்டு பாரதியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் புதுவை அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சர் குரு.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் க.இலட்சுமி நாராயணன், திரு.குமரிஅனந்தன் அவர்கள் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், தமிழறிஞர்கள், பாரதி அன்பர்கள் கலந்துகொண்டு பாரதியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.


சட்டப்பேரவைத் தலைவர் சபாபதி, அமைச்சர் குரு.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள்


அமைச்சர் குரு.பன்னீர்செல்வம், ச.ம.உ. க.இலட்சுமி நாராயணன் ஆகியோர்


ஒப்பனை செய்யப்பெற்றுள்ள பாரதியார் படம்

சனி, 10 டிசம்பர், 2011

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்


பாத்திமா கல்லூரி(தன்னாட்சி),மதுரை


அழைப்பிதழ்

மதுரை பாத்திமா கல்லூரியின் தமிழ் உயராய்வுமையத்தின் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 13.12.2011 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜோஸ்பின் நிர்மலா மேரி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றுக் கருத்துரை வழங்குவார். கல்லூரிச் செயலாளர் அருட்சகோதரி எஸ்தர் மேரி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயன்பாடுகளை மாணவர்களுக்குக் காட்சி விளக்கம் வழி விளக்க உள்ளார். பாத்திமா கல்லூரியின் தமிழ்த்துறையினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

நாள்: 13.12.2011 செவ்வாய்க்கிழமை,நேரம்: காலை 9 மணி - மாலை 4 மணி வரை
இடம்: பொன்விழா அரங்கம், பாத்திமா கல்லூரி,மதுரை

வெள்ளி, 9 டிசம்பர், 2011

மலேசியாவில் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு

பன்னாட்டுப் பகுத்தறிவு ஆய்வகத்தின் சார்பில் மலேசியாவில் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு (International Rationalism Conference) மலாயா பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் நடைபெற உள்ளது. 2012 சனவரி 27,28,29 ஆகிய நாள்களில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. “பகுத்தறிவின் தோற்றம், மனுக்குலத்தின் ஏற்றம்” என்னும் கருப்பொருளில் அமையும் இந்த மாநாட்டை மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்கள் தொடங்கி வைப்பார்கள். மலேசியாவின் அமைச்சர் பெருமக்கள், தமிழறிஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பகுத்தறிவின் பல்வேறு பரிமாணங்கள் குறித்த ஆய்வரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சி, மாநாட்டு மலர் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.

பினாங்கு நகரில் 30.01.2012 இல் பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் சிலை திறப்பும் நடைபெற உள்ளது. பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளத் தங்களைப் பேராளர்களாகப் பதிவுசெய்துகொள்ளவேண்டும். தமிழகத்திலிருந்து பங்கேற்பவர்களுக்குப் பேராளர் கட்டணம் எதுவும் கிடையாது.

மாநாட்டை ஒட்டிக் கோலாலம்பூர், பினாங்கு, இலங்காவி, முதலான இடங்களைச் சுற்றிப் பார்த்துத் தமிழகம் திரும்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பெரு.அ. தமிழ்மணி, ரெ.சு.முத்தையா, தெ.வாசு, த.சி.முருகன், ஆகியோர் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினர் செய்துவருகின்றனர்.

மாநாடு நடைபெறும் 27, 28, 29 ஆகிய மூன்று நாளும் தங்குமிட வசதிகள், உணவு, 30 ஆம் நாளையப் பினாங்கு பயணம் ஆகியவற்றை ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, சுற்றுலா செல்லாமல் சென்னைக்குத் திரும்ப விரும்புவோர் விமானக் கட்டணம், நுழைவுச்சீட்டு (விசா)க் கட்டணமாக உருவா 15,000 (பதினைந்து ஆயிரம்) செலுத்த வேண்டும்.

கூடுதலாகத் தங்கிச் சுற்றுலா செல்ல விரும்புவர்கள் உருவா 25,000 (இருபத்தைந்தாயிரம்) கட்ட வேண்டும்.

கட்டணத் தொகையைச் சென்னையில் மாற்றத்தக்க வகையில் காசோலை, வரைவோலையாக அனுப்பலாம். அல்லது திரு.இரா.மதிவாணன் வங்கிக் கணக்கு எண் 130801000012748 - இந்தியன் ஓவர்சீசு வங்கி, சூளைமேடு, சென்னைக் கிளையில் பெறத்தக்க வகையில் செலுத்தலாம்.

அனைத்துத் தொடர்புகளுக்கும்:

“உழைப்புச்செம்மல்” இரா.மதிவாணன் ,
தமிழக ஒருங்கிணைப்பாளர்.
4,சௌராட்டிரா நகர் 7 ஆம் தெரு,
சூளைமேடு, சென்னை- 600 094
மின்னஞ்சல்: eramathi@gmail.com
பேசி: + 94441 11951

புதன், 7 டிசம்பர், 2011

திண்டுக்கல்லில் தழிழும் இணையமும் ஒரு நாள் பயிலரங்கு

நாள்: 14.12.2011 இடம் : அமைதி கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல் 

நிகழ்ச்சி நிரல் 

 தொடக்க நிகழ்சி 10.00 – 10.45 
 வரவேற்புரை : திரு.தேவதயான் முதல்வர் - அமைதி அறக்கட்டளை 

தலைமை : திரு.ஜே.பால்பாஸ்கர் தலைவர் அமைதி அறக்கட்டளை 

சிறப்பு விருந்தினர் : முனைவர் மு.இளங்கோவன் துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி 

அறிமுகஉரை : திரு.சு.பாரதிதாசன் செயலாளர், அருளகம் 

முன்னிலை : திருமதி.மெர்சி பாஸ்கர் முதல்வர் அமைதி தொழிற்பள்ளி

கருத்தாளர் முனைவர் மு.இளங்கோவன் 

முதல் அமர்வு 10.46-12.00 இரண்டாம் அமர்வு 12.01 – 01.00 மூன்றாம் அமர்வு 02.00 – 03.00 நான்காம் அமர்வு 03.01 – 03.45  

கருத்துரை 3.46 – 04.00 பங்கேற்பாளர்கள் 

தொடர்புக்கு: சு. பாரதிதாசன், 9843211772

வெள்ளி, 2 டிசம்பர், 2011

சீன வானொலியில் முனைவர் மு.இளங்கோவன் நேர்காணல் முதல்பகுதி ஒலிபரப்பு…

முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் நேர்காணல் இன்று(02.12.2011) இரவு சீன வானொலியில் உங்குள் குரல் பகுதியில் ஒலிபரப்பானது. கவி.செங்கெட்டுவன் அவர்கள் நேர்காணல் செய்தார். சில மாதங்களுக்கு முன்பு ஊற்றங்கரையில் இந்த உரை செல்பேசியில் பதிவு செய்யப்பெற்றது. இன்று ஒலிபரப்பு செய்த சீன வானொலி நிலையத்தாருக்கும், நேர்காணல் செய்த கவி.செங்குட்டுவன் ஐயா அவர்களுக்கும் நன்றி.(இந்த உரை அடுத்த வாரம் முழுமையாக என் பக்கத்தில் இடம்பெறும்).

மு.இளங்கோவனின் இளமைக்கால வாழ்க்கை,இலக்கியம், இணையம், நாட்டுப்புறவியல் சார்ந்த பல செய்திகள் இந்த நேர்காணலில் இடம் பெற்றுள்ளன.

நீங்கள் கேட்டு மகிழவேண்டுமா?

தங்கள் கணினியில் ரியல் பிளையர் என்ற மென்பொருள் இருந்தால் இனிமையாகக் கேட்க முடியும். http://tamil.cri.cn/ என்ற பக்கம் செல்லவும்.இறுதி நிகழ்ச்சி என்னும் பகுதியைச் சொடுக்கவும். முன்னதாகச் சில நிகழ்வுகள் இடம்பெறும். அரை மணிநேரத்திற்கு அடுத்து மு.இளங்கோவனின் உரையைக் கேட்க முடியும். இரண்டாம் பகுதி அடுத்த வாரம் ஒலிபரப்பாக உள்ளது.