நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 25 ஜூலை, 2009

சிற்பி இலக்கிய விருது 2009



தமிழ்ப்பேராசிரியரும்,நாடறிந்த நல்ல கவிஞரும்,சாகித்திய அகாதெமியின் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் சிற்பி அவர்கள் ஆழமான தமிழ்ப்பற்றும் அழுத்தமான மொழிப்புலமையும் கொண்டவர்.செயல்திறமும் வினைத்திட்பமும் ஒருங்குபெற்ற இவர்கள் 1996 ஆம் ஆண்டு முதல் (தம் மணிவிழா ஆண்டிலிருந்து) தமிழ்ப்பாவலர்களைச் சிறப்பிக்கும் வகையில் விருது வழங்கிப் பாராட்டி வருகின்றார்.வாழும் காலத்தில் அறிஞர்களை மதிக்க வேண்டும் என்ற சிற்பி ஐயாவின் உள்ளத்தைத் தமிழர்கள் நன்றியுடன் போற்றவேண்டும்.

அவ்வகையில் இதுவரை கவிக்கோ அப்துல் இரகுமான்(1996),த.பழமலய்(1997),சி.மணி
(1998),தேவதேவன்(1999),புவியரசு(2000),கவிஞர் பாலா(2001),கல்யாண்ஜி(2002), தமிழ்நாடன்(2003),தமிழன்பன்(2004),க.மீனாட்சி(2005),ஈழத்துக்கவிஞர் செயபாலன்(2006), ம.இலெ.தங்கப்பா(2007),சுகுமாரன்(2008) ஆகியோர் கவிதை இலக்கிய விருது பெற்றுள்ளனர்.இவர்கள் தவிர பல கவிஞர்கள் இலக்கியப் பரிசு பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு தமிழகத்தின் புரட்சிப் பாவலரான கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கப்பட உள்ளது.பொள்ளாச்சியில் 26.07.2009 இல் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.ஆண்டுதோறும் மிகச்சிறந்த திருவிழாபோல் நடைபெறும் கவிதைத் திருவிழா இந்த ஆண்டு ஈழத்தமிழ் மக்களின் சொல்ல இயலாத துன்பச்சூழல் காரணமாக மிக எளிமையாக நடைபெற உள்ளது.

சிற்பி இலக்கிய விருது(2009) விழா நிகழ்ச்சி நிரல்

இடம் என்.ஜி.எம்.கல்லூரி,பொள்ளாச்சி
நாள்: 26.07.2009
நேரம்: மாலை 4.30 மணி
தலைமை: பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்
வரவேற்புரை : சிற்பி பாலசுப்பிரமணியம்
சிறப்புரை: ஈரோடு தமிழன்பன்

பாராட்டுப் பெறுவோர் கவிஞர் இன்குலாப்
தொழிலதிபர் இயகோகா சுப்பிரமணியம்

அனைவரையும் சிற்பி அறக்கட்டளையினர் அழைத்து மகிழ்கின்றனர்.
ஈழம் என்னும் தலைப்பில் கவிஞர் சிற்பி வரைந்துள்ள கவிதையைக் கீழே கண்டு கொண்டாடுங்கள்.


என் மொழி பேசும் எவனும் உலகினில்
எனது சகோதரனே
எவன் அவன் பகைவன் எனக்கும் நிச்சயம்
அவன் பகையானவனே

வன்னிக்காடே முல்லைத்தீவே
வணங்காதத் தமிழ்மண்ணே
மன்னிப்பாய் நீ உனக்குதவா என்
வாழ்க்கை வெறும் மண்ணே

இனவெறி எருமை மிதித்துச் சிதைத்த
ஈழத்தின் ஆழத்தில்
வினைகள் விதைத்தவர் அறியட்டும் பழி
அறுவடையாகும் இனி

வேலி முகாம்களில் சித்திரவதைப்படும்
தமிழ்மகளே இது கேள்
காலம் சமைக்கும் உன் கண்ணீர் கொண்டு
விடுதலையின் போர்வாள்

யாழ்நூல் தந்த விபுலானந்தர்
நாவலர் உலவியமண்
பாழ்படுமோ அதன் வேரில் சொரிந்த
இரத்தம் உலர்ந்திடுமோ?

வேடிக்கை பார்த்துக் கைகளைக் கட்டிய
உலகின் மனச்சான்றே
நீடும் புயல் வரும் சிங்களம் நொறுங்கும்
நீச்சயம் காண்பாய் நீ

புதிய விண்மீனொன்று தெற்கில் முளைக்கும்
தடுக்கும் இருள் வீழும்
அதுவரை அதுவரை நண்பர்களே என்
இன்னொரு பெயர் ஈழம்.

- கவிஞர் சிற்பி

வெள்ளி, 24 ஜூலை, 2009

பொ.தி.ப.அறக்கட்டளை நடத்தும் திருக்குறள் அதிகாரப்போட்டி பரிசளிப்பு விழா

இடம்: இராசராசேசுவரி திருமண மண்டபம்,பாக்கமுடையான்பட்டு,புதுச்சேரி
நாள்: 25.07.2009
நேரம்: மாலை 5 மணி

தலைமை: பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள்

வரவேற்புரை : தி.ப.சாந்தசீலனார்(பொ.தி.ப.அறக்கட்டளை நிறுவுநர்)

திருக்குறள் அதிகாரப்போட்டியைப் பொ.தி.ப.அறக்கட்டளை அண்மையில் நடத்தியது.தமிழகம் புதுவையிலிருந்து பலர் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் கட்டுரை எழுதிப் பரிசு பெற்றவர்களுக்குப் பொ.தி.ப.அறக்கட்டளை சார்பில் உருவா எண்பதாயிரம் தொகைப்பரிசு வழங்கிச் சிறப்பித்தல் புதுவை பாராளுமன்ற உறுப்பினரும் நடுவண் அமைச்சருமான வே.நாராயணசாமி அவர்கள் ஆவார்.

புதுவை மாநில முதல்வர் வெ.வைத்தியலிங்கம்,பொதுப்பணித்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான் உள்ளிட்ட அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க உள்ளனர்.தமிழ்ப்பணி,சமூகப்பணி செய்யும் ஆர்வலர்களுக்கும் அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கிப் பாராட்டப்பட உள்ளனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டைப் பொ.தி.ப.அறக்கட்டளை அன்பர்கள் செய்துள்ளனர்.

வியாழன், 23 ஜூலை, 2009

அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற இருநூல்கள் விரைவில் வெளிவர உள்ளன.


அயலகத் தமிழறிஞர்கள்

தமிழ் ஓசை நாளிதழில் தொடராக நான் எழுதி வெளிவந்த அயலகத் தமிழறிஞர்கள் தொடர் தனிநூலாக வெளிவர உள்ளது.இதில் தமிழுக்கு உழைத்த அயலகத் தமிழறிஞர்கள் முப்பதுபேரின் வாழ்க்கை,இலக்கியப் பங்களிப்பு பதிவாகியுள்ளன.தமிழர்களின் இல்லந்தோறும் இருக்கவேண்டிய நல்ல நூல்.

பக்கம்: 200
விலை: 200 உருவா

நான் பல்வேறு சமயங்களில் எழுதிய தமிழ் இணையம் சார்ந்த பதினைந்து கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இணையம் கற்போம் என்ற பெயரில் நூலாக வெளிவர உள்ளது.



பக்கம்: 112
விலை:100 உருவா

இரண்டு நூல்களும் ஆகத்து முதல் கிழமையில் கிடைக்கும்.

தொடர்புக்கு:
முனைவர் மு.இளங்கோவன்
செல்பேசி+ 91 9442029053
muelangovan@gmail.com


இசாக்,சென்னை
செல்பேசி + 91 9786218777
tamilalai@gmail.com

தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு மாநாடு

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறை தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு மாநாட்டை நடத்துகிறது. இதில் பன்னாட்டளவில் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்க உள்ளனர்.ஆர்வமுள்ள பேராசிரியர்கள் பின்வரும் விளக்கங்களின் துணையுடன் பங்கேற்கலாம்.

மாநாடு நடைபெறும் நாள் 3,4,5,6-10-2009
இடம்: மொழித்துறை,தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை


ஆய்வுச்சுருக்கங்கள் கோரல்

தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறை தனது முதலாவது உலக ஆய்வு மாநாட்டினை நடத்தவுள்ளது. இம்மாநாடு இலங்கை நாட்டிலும் பிற நாடுகளிலுமுள்ள அறிஞர்கள் ஆய்வாளர்களை ஒன்று சேர்ப்பதுடன் மனிதப்பண்பியல், சமூக விஞ்ஞானம் தொடர்பாகத் தம் கருத்துக்களைப் பகிரவும் அறிவினை அகல்விக்கவும் உதவும்.

மாநாட்டின் கருப்பொருள்: “தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம்”.


இம்மாட்டீலே பங்குபற்ற விரும்பும் உலகின் பன்னாட்டு ஆய்வாளர்களையும், அறிஞர்களையும், பட்டமேற்படிப்பு மாணவர்களையும் மாநாட்டின் புரவலர்களும் ஒழுங்கமைப்பாளர்களும் வரவேற்கின்றனர். மாநாட்டில் பங்குபற்றி கட்டுரை படிக்க விரும்புபவர்கள் “தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம்” என்னும் கருப்பொருளுக்குட்பட்டுப் பின்வரும் ஏதாவது தலைப்பில் அய்வுச்சுருக்கத்தினையும் கட்டுரையினையும் படைக்கலாம்.

இலக்கியம், மொழியியல், பண்பாடு, வரலாறு, சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல்,
நாடகம், நுண்கலை, கல்வி, அரசியல், பொருளியல், தமிழ்ப் பேசும் முசுலிம்களின் மறுமலர்ச்சி.

ஆய்வுச்சுருக்கம் வழங்கல்:

நோக்கங்கள், ஆய்வணுகுமுறை, விளைவுகள், முடிவுகள் ஆகியன உள்ளடங்கியதாக 500 சொற்களுக்குள் ஆங்கிலத்திலோ தமிழிலோ ஆய்வுச்சுருக்கம் அமைதல்வேண்டும். ஆய்வுச்சுருக்கம் (Microsoft word (Time New Roman அல்லது Baamini/Kalagam, Font size 12) இல் தட்டச்சுச்செய்து சூலை மாதம் 31 அன்று அல்லது அதற்கு முன்னர் மின்னஞ்சலூடாக saadhiyas@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும். முழு வடிவிலான கட்டுரை ஆகத்து 30இற்குள் அனுப்பிவைக்கவேண்டும்.

வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுச்சுருக்கங்களை வழங்கியவர்கள் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கலாம்.

மாநாட்டில் பங்குபற்றும் வெளிநாட்டவர், நாட்டவர் $50/ பதிவுக்கட்டணமாகச் செலுத்தவேண்டும்.

பங்குபற்ற விரும்புபவர்கள் மாட்டு ஒழுங்கமைப்பாளர்களைப் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

Mr. K. Raguparan / Mrs.M.A.S.F. Saadhiya

Secretaries / International Conference Committee
Department of Languages
South Eastern University of Sri Lanka

University Park, Oluvil #32360,

Mob.: 0094 718218177, 0094 718035182

Email: saadhiyas@gmail.com, centhini@gmail.com

வியாழன், 16 ஜூலை, 2009

புதுவைச்சிவம்-ஒருநாள் கருத்தரங்கு

பாவேந்தரின் மாணவர்களுள் ஒருவரும் புதுவையின் திராவிட இயக்க முன்னோடிகளில் தலைசிறந்தவருமான கவிஞர் புதுவைச்சிவம்(புதுவை சிவப்பிரகாசம்)அவர்களின் படைப்புகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் புதுச்சேரியில் சாகித்திய அகாதெமியின் சார்பில் நடைபெற உள்ளது.அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு புதுவைச்சிவம் படைப்புகள் குறித்த கட்டுரைகள் வழங்குகின்றனர்.

இடம்: புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கம்,புதுச்சேரி
நாள்:17.07.2009
நேரம்: காலை 9.30 மணி முதல்

வரவேற்பு: அ.சு.இளங்கோவன்
தலைமை: சிற்பி பாலசுப்பிரமணியம்
வாழ்த்துரை: எம்.ஓ.எச்.எஃப்.ஷாஜகான்
தொடக்கவுரை : சீனு.இராமச்சந்திரன்
சிறப்புரை: காவ்யா சண்முகசுந்தரம்
நன்றியுரை: ந.பாஸ்கரன்

முதல் அமர்வு
இலக்கிய வகைமைகளில் புதுவைச்சிவம் ஆளுமை-வெளிப்பாடு

தலைமை: நாகி

கட்டுரைகள்

க.பழனிவேல்
சிவ.இளங்கோ
ந.இளங்கோ

இரண்டாம் அமர்வு
புதுவைச்சிவம் படைப்புகளில் கட்டமைப்பும் கட்டுடைத்தலும்

தலைமை:துரை.மாலிறையன்

கட்டுரைகள்

வீ.அரசு
அ.மார்க்சு
ராஜ்ஜா
மு.இளங்கோவன்

நிறைவு விழா
வரவேற்பு: மகரந்தன்
தலைமை: இராம.குருநாதன்
சிறப்புரை: அறிவுநம்பி
நன்றியுரை: பூங்கொடி பராங்குசம்

சனி, 11 ஜூலை, 2009

புதுவை அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணையம் அறிமுகம்


பயிற்சியில் கலந்துகொண்ட தமிழாசிரியப்பெருமக்கள்

புதுவை அரசு அண்மையில் கணிப்பொறி இல்லாத கல்வி நிறுவனங்களே இல்லை என்னும் அளவிற்கு மிகச்சிறந்த ஒரு திட்டத்தைப் புதுவையில் நடைமுறைபடுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அனைவருக்கும் கல்வித்திட்டம் என்ற திட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் கணிப்பொறி,அகண்டவரிசை இணைய இணைப்புக்கு வழி வகை செய்துள்ளது. இதனால் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதன்வழி செய்திப்பரிமாற்றத்தில் மிகச்சிறந்த முன்னேற்றமும் ஏற்பட உள்ளது.

இதனை உணர்ந்த கல்வித்துறையினர் புதுச்சேரியில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்குப் புத்தொளிப்பயிற்சி வழங்கும் பொழுது என்னை அழைத்து அவர்களுக்குத் தமிழ் இணையம் பற்றிய வகுப்பெடுக்கும் வாய்ப்பினை வழங்கி வருகின்றனர்..இதுவரை நானூறுக்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் புதுவை மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து பயிற்சி பெற்றுள்ளனர்.

07.07.2009 இல் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் சற்றொப்ப அறுபதிற்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் தமிழ் இணையம் பற்றிய செய்திகளை அறிந்தனர்.இவர்களுக்குத் தமிழ்த் தட்டச்சுமின்னஞ்சல்,வலைப்பூ உருவாக்கம்,,பயன்பாட்டுக்குரிய தளங்கள்,தமிழ் விக்கிபீடியா, நூலகம் சார்ந்த தளங்கள்,கல்வி சார்ந்த தளங்களை அறிமுகம் செய்து வைத்தேன்.

ஓய்வுபெறும் அகவையில் இருந்தவர்கள் கூட ஆர்வமுடன் கேட்டனர்.சிலர் வலைப்பூ உருவாக்கி என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினர்.மூத்த,இளைய ஆசிரியப்பெருமக்களுள் பலர் இணையத்தின் வீச்சைத் தெரிந்து வைத்திருந்தனர்.தமிழில் எளிமையாக எடுத்துரைப்பதை அனைவரும் பாராட்டினர்.

தட்டச்சுப் பலகை அமைப்பு(ஒளியச்சு)என்.எச்.எம்.குறுவட்டு அவர்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்தோம்.

முனைவர் இராச.திருமாவளவனுடன் நான்


பயிற்சியில் கலந்துகொண்டவர்களில் ஒருபகுதியினர்

முனைவர் இராச.திருமாவளவன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து தமிழாசிரியர்கள் தமிழ் இணைய அறிவு பெற வழிவகுத்தார்.

வியாழன், 9 ஜூலை, 2009

அர்த்தமுள்ள சிந்தனைகள் நூல்வெளியீட்டு விழா

என் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்களின் ஏற்பாட்டில் சென்னையில் பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா-அன்னபூரணி நினைவு அறக்கட்டளை செயல்படுகிறது.இந்த அறக்கட்டளையின் சார்பில் புலவர் வே.மகாதேவன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள சிந்தனைகள் என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று(09.07.2009)நடைபெறுகிறது.

இடம்: கன்னிமாரா நூலக வளாகம்,எழும்பூர்,சென்னை.
நாள் : 09.07.2009
நேரம் : மாலை 5 மணி
தலைமை : தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அடிகளார்
இளவரசு,காசித்திருமடம்
நூல் வெளியீடு: பி.சிவகாமி இ.ஆ.ப.(ஓய்வு)
முதற்படி பெறுதல் எசு.வி.சேகர்
வேங்கடராமையா நினைவுரை: புலவர் முத்துவாவாசி
பாராட்டுரை: அர்ச்சுன் சம்பத்
சுவாமிநாத சிவாச்சாரியார்
ஏற்புரை:புலவர் வே.மகாதேவன்
நன்றியுரை:வெள்ளையாம்பட்டு சுந்தரம்

நிகழ்ச்சித் தொகுப்புரை : பேராசிரியர் ம.வே.பசுபதி

செவ்வாய், 7 ஜூலை, 2009

முனைவர் இரா.திருமுருகனார் நினைவேந்தல் நிகழ்வு

தெளிதமிழ்,தமிழ்க்காவல் இதழ்களின் ஆசிரியரும்,பன்னூல் எழுதித் தமிழுக்கு ஏற்றமுற வழங்கியவரும் முத்தமிழும் முறையுற அறிந்தவருமான முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் 03.06.2009 இயற்கை எய்தியதை முன்னிட்டு அன்னாரின் தமிழ்ப்பணியைப் போற்றி மதிக்கும் வகையில் தமிழகத்திலும் பிற நாடுகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றவண்ணம் உள்ளன.

அவ்வகையில் புதுச்சேரியில் எதிர்வரும் 11.07.2009 காரிக்கிழமை காலை ஒன்பது மணிமுதல் மாலை ஐந்துமணிவரை தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ் இன உணர்வாளர்கள் கலந்துகொண்டு முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர உள்ளனர்.

நாள் : 11.07.2009
நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: புனித அந்தோணியார் பல்நோக்கு சமுதாயக்கூடம்,(சிங்காரவேலர் சிலை அருகில்,கடலூர்ச்சாலை,புதுச்சேரி)

தலைமை : பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா
100 பாவலர்கள் இரங்கற்பா படித்தல்
நினைவேந்தல் மலர் வெளியீடு : பழ.நெடுமாறன்
படத்திறப்பு : மருத்துவர் ச.இராமதாசு
உரைநிகழ்த்துவோர்
வே.ஆனைமுத்து
அருகோ
பெ.மணியரசன்
தியாகு
புதுக்கோட்டை பாவாணன்

தமிழுக்கு உழைத்த தலைமகனாரின் நினைவுகளைப் பேச,கேட்க,பாட வருக என விழாக்குழுவினர் அழைக்கின்றனர்.

தொடர்புக்கு : + 91 9843224827 + 91 2900889280 + 91 94867448035

திங்கள், 6 ஜூலை, 2009

கோவையில் சிலப்பதிகார விழா

கோவை பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள நானி கலையரங்கில் எதிர்வரும்11,12-07-2009(காரி,ஞாயிறு)இரு நாளும் சிலப்பதிகார வெள்ளிவிழா நடைபெறுகிறது.

காரி(சனி)க்கிழமை மாலை5.45மணிக்கு முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் ஜி.கோபாலன் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். இயகோகோ. சுப்பிரமணியம் அவர்கள் மலர் வெளியிடுகிறார்.கே.வேலு அவர்கள் மலர் பெற்று உரையாற்றுகிறார்.

கிருட்டினா இனிப்பகம் வழங்கும் உ.வே.சாமிநாதய்யர் விருதினை முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்களுக்கு வழங்க உள்ளனர்.செல்வி (உ)ருக்குமணி அவர்கள் பூம்புகாரில் சில புகார்கள் என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

12.07.2009 ஞாயிறு காலை ஐ.கே.சுப்பிரமணியன் அவர்கள் உள்ளினும் உள்ளம் சுடும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்

முனைவர் க.முருகேசன் அவர்கள் எழுதிய பூம்புகார் பொற்றொடி என்ற நூலினை முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்கள் வெளியிட வி.செல்வபதி அவர்களும் சங்கரசீத்தாராமன் அவர்களும் பெற்றுக்கொள்கின்றனர்.

12.07.2009 காலை,மாலையில் நடைபெறும் விழாக்களில் தமிழகத்தின் புகழ்பெற்ற
பேச்சாளர்கள் சோ.சத்தியசீலன்,அ.அறிவொளி,தெ.ஞானசுந்தரம்,சோதி இராமகிருட்டினன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

மாலையில் பேரா.கண.சிற்சபேசன் அவர்கள் நடுவராக வீற்றிருக்கப் பட்டிமண்டபம் நடைபெற உள்ளது.

தமிழ்ப்பண்பாட்டையும் தமிழ் இசை மரபையும் ஆவணப்படுத்திய இளங்கோவடிகளையும் அவர்தம் காப்பியத்தையும் போற்றி எடுக்கப்படும் விழா சிறக்க எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அமையட்டும்.

ஞாயிறு, 5 ஜூலை, 2009

இதழ்களில் நம் முயற்சிக்குப் பாராட்டுகள்...

அன்பு நண்பர்களே!
தமிழ் இணையப் பரவலுக்கு நண்பர்கள் பலரின் ஒத்துழைப்புடன் தமிழகம் முழுவதும் பயிலரங்குகள் ஏற்பாடு செய்து யான் பயிற்சியளித்து வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.இந்த முயற்சியை அண்மைக்காலமாக இதழியல் துறை சார்ந்த நண்பர்கள் தங்கள் இதழ்களில் வெளிப்படுத்தி என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.இதனால் தமிழகம் முழுவதும் மேலும் பல பயிலரங்குகள் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.பாராட்டி ஊக்கப்படுத்தும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

அமுதசுரபி ஏட்டில் அதன் ஆசிரியர் அண்ணன் முனைவர் திருப்பூர் கிருட்டினன் அவர்கள் நல்ல வகையில் படத்துடன் செய்தி வெளியிட்டார்கள்(சூன்,2009).

அதுபோல் இந்த மாதம்(சூலை,2009) அம்ருதா இதழின் சிறப்பாசிரியர் அம்மா திலகவதி அவர்கள் படத்துடன் செய்தி வெளியிட்டுத் தமிழுலகத்துக்கு என் முயற்சியை அறிவித்துள்ளார்கள்.

இந்தக் கிழமை வெளியான தமிழக அரசியல் என்ற கிழமை இதழில் என் முயற்சியை ஊக்கப்படுத்தி திரு.வெங்கடேசு என்ற செய்தியாளர் வழியாக மிகச்சிறப்பாகச் செய்தி வெளியிட்டுள்ளனர்.இந்த இதழைக் கண்ணுற்ற தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொலைபேசியில் நண்பர்கள் அழைத்து வாழ்த்துச்சொன்னார்கள்.பல இடங்களில் தமிழ் இணையப்பயிலரங்குகள் நடத்த ஆர்வமாக உள்ளதைத் தெரிவித்தனர்.

அனைவருக்கும் நன்றி
(ஆயிரக்கணக்கான படங்களையும்,பக்கங்களையும் இணையத்துக்கு ஏற்ற உதவிய என் மின்வருடி(scanner) திடீரெனச் செயலிழந்துவிட்டது.இனி புதியதுதான் வாங்கவேண்டும் என்று பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.அதனால் மின்வருடி மேற்கண்ட செய்திகளை உங்கள் பார்வைக்கு வைக்கமுடியாமல் போனது.புதிய கருவி வாங்கிய பிறகு என் பணிகள் வழக்கம்போல் தொடரும்)