நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவும் ஆத்திரேலியா எழுத்தாளர் ம. செயராம சர்மாவுக்குப் பாராட்டுவிழாவும்!

ம. செயராம சர்மாவுக்கு ஏம்பலம் செல்வம் அவர்கள் விருது அளித்துச் சிறப்பிக்கும் காட்சி. அருகில் புதுவைத் தமிழறிஞர்கள்.

      புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் புதுச்சேரி நீட இராசப்பையர் தெருவில் அமைந்துள்ள, செகா கலைக்கூடத்தில்   14.04.2017, வெள்ளிக் கிழமை, மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை தொல்காப்பியத் தொடர்பொழிவு நடைபெற்றது.

      வில்லிசை வேந்தர் இ. பட்டாபிராமன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். முனைவர் ப. பத்மநாபன்   வரவேற்புரையாற்றினார்.  முனைவர் மு.இளங்கோவன் அறிமுகவுரைற்றினார். முனைவர் சிவ. மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் தெ. முருகசாமி தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.  தொல்காப்பியத்துள் குறிப்பிடப்படும் இலக்கணச் செய்திகள் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்ளிட்ட நூல்களில் பொதிந்து கிடக்கும் தன்மையை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

      ஆத்திரேலியாவிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் ம. செயராம சர்மாவின் எழுத்துப்பணியைப் பாராட்டும் வகையில், மரபுப் பாமணி என்ற விருதளித்து இந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டது. மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்துவரும் ஏம்பலம் செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு திரு. சர்மா அவர்களுக்கு விருதளித்துப் பாராட்டினார். ஆத்திரேலியாவில் தமிழும் தமிழர்களும் தொடர்பான அரியதோர் கருத்துரையைச் செயராம சர்மா வழங்கினார். திரு. தூ. சடகோபன், தனித்தமிழ்ப்பாவலர் தமிழியக்கன், திருவாசகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமிழறிஞர்களைச் சிறப்பித்தனர்.

      முனைவர் இரா. கோவலன் நன்றியுரை வழங்கினார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன் அவர்கள் திருவாட்டி சாந்தி சர்மா அவர்களுக்கு நூல்பரிசு அளித்தல்.

தமிழாகரர் தெ. முருகசாமி அவர்களின் சிறப்புரை

முனைவர் சிவ. மாதவன் அவர்களின் தலைமையுரை

புதன், 12 ஏப்ரல், 2017

உலகத் தொல்காப்பிய மன்றம் தொடர்பொழிவு 10, எழுத்தாளர் ம. செயராம சர்மாவுக்குப் பாராட்டுவிழா!

அன்புடையீர்! வணக்கம்.

தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளன. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் நடைபெறும் தொல்காப்பியம் தொடர்பொழிவு நிகழ்விற்கும், ஆத்திரேலியாவிலிருந்து வருகைபுரியும் எழுத்தாளர் செயராம சர்மா அவர்களுக்கு நடைபெறும் பாராட்டு நிகழ்விற்கும் வருகை தந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 14.04.2017, வெள்ளிக் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை

இடம்: செகா கலைக்கூடம், 119,  நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து: ’வில்லிசைவேந்தர்’ இ. பட்டாபிராமன்
வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன்
அறிமுகவுரை: முனைவர் மு.இளங்கோவன்
தலைமை: முனைவர் சிவ. மாதவன்
சிறப்புரை: தமிழாகரர் தெ. முருகசாமி
     
தலைப்பு: தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்

பாராட்டுப் பெறுவோர்: எழுத்தாளர் ம. செயராம சர்மா, ஆத்திரேலியா

நன்றியுரை: முனைவர் இரா. கோவலன்

அனைவரும் வருக!

அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்,
புதுச்சேரி – 605 003

தொடர்புகொள்ள: 

முனைவர் ப. பத்மநாபன் + 9443658700 / 
முனைவர் மு.இளங்கோவன் + 9442029053

விசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம்


புலவர் வீ. சொக்கலிங்கம்


     இந்த முறை திருப்பூர் சென்றிருந்தபொழுது குடந்தை . சுந்தரேசனாரின் சமய ஈடுபாட்டை, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்குத் தெரிவித்து, உரையாடிக்கொண்டிருந்தேன். ப. சு. ஆவணப்படத்திற்காக ஒரு புல்லாங்குழல் செய்யும் கலைஞரைத் தேடி, கேரளாவில் திருச்சூரை அடுத்த குன்னங்குளம் சென்ற கதையையும் அக்கலைஞரின் ஒத்துழைப்பால் புல்லாங்குழல் செய்தமையைப் படம் பிடித்தமையையும் குறிப்பிட்டேன். அப்பொழுது தமக்கு அறிமுகமான விசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம் பற்றி சுப்ரபாரதிமணியன் எடுத்துரைத்தார்.

     அண்மையில் புலவர் வீ. சொக்கலிங்கம் நிகழ்த்திய பெரியபுராணச் சொற்பொழிவில் ஆனாய நாயனார் புராணத்தை விளக்கும்பொழுது ஒரு புல்லாங்குழல் கலைஞரை அழைத்துவந்து மேடையில் அருகமர்த்தி, புல்லாங்குழல் செய்வது பற்றியும், அதன் வாசிப்பு முறைகள் குறித்தும் அவையினருக்குச் செய்முறை விளக்கம் அளித்தார் என்று குறிப்பிட்டவுடன்  புலவர் அவர்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலிட்டது. ஏனெனில் ஆனாய நாயனார் புராணம் புல்லாங்குழல் குறித்த அரிய உண்மைகளைப் பொதிந்து வைத்திருக்கும் பகுதியாகும்.

     என் ஆசிரியர் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் ஆனாய நாயனார் புராணத்தில் பொதிந்துகிடக்கும் குழல்செய்யும் முறை, குழல் துளைகளின் அளவு, இடைவெளி, குழல் துளைகளின் பெயர், மாறுமுதல் பண்ணல், கோடிப்பாலை உருவாக்கும் முறை, துளைகளில் கைவைத்து ஊதும் முறை, இசைக்கு உயிரினங்கள் மயங்குதல் குறித்து எடுத்துரைத்த கருத்துகள் பலவாண்டுகளுக்குப் பிறகு எனக்கு நினைவிற்கு வந்தன. தமிழிசைக் கலைக்களஞ்சியம் முதல் தொகுதியிலும் (பக்.152, 179), மூன்றாம் தொகுதியிலும் இவை இடம்பெற்றுள்ளன. பெரியபுராணத்தில் இசைக்குறிப்புகள் என்னும் தலைப்பிலும் ( III 290-291), புகல் நான்கு என்னும் தலைப்பிலும்( III பக். 288) வீ.ப.கா.சு. வரைந்துள்ள  விளக்கங்களை ஆர்வலர்கள் அங்கே காண்க.

     பெரியபுராணத்தின் துணைக்கொண்டு புல்லாங்குழல் குறித்து விளக்குவதற்குத் தமிழ்நாட்டில் ஒருவர் உள்ளார் என்பதைக் கேட்டதும் புலவரைக் காணும் வேட்கை மீதூரப்பெற்றேன். ஏனெனில் இன்றைய கல்விப்புலங்கள் தக்க அறிஞர்கள் இல்லாமல் இருண்டுக்கிடக்கும் அவல நிலையை எண்ணி எண்ணி உலைந்து வரும் எனக்குப் புலவரின் ஆற்றல் பளிச்செனத் தெரிந்தது.

     உடல்நலம் இல்லாமல் புலவர் வீட்டில் இருப்பதால் அவரைக் காணும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அடுத்த முறை பார்க்கலாம் என்றும் எனக்குச் சுப்ரபாரதிமணியன் கூறினார். திருப்பூருக்கும் புலவர் வீ. சொக்கலிங்கம் இல்லத்திற்கும் இருபது கல் தொலைவு இருக்கும் என்றும் அவர் இன்று வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் எனக்கு அமைதி கூறினார். அப்படி என்றால் நாம் சென்று புலவரைச் சந்திப்போம் ஐயா!; இது என் விடை.

     எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் சிறுமுயற்சி எடுத்துப் புலவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என் வருகை பற்றியும் மாலையில் நடைபெறும் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையீடு பற்றியும் சொன்னார். என்னையும் புலவருடன் பேசும்படித் தூண்டினார். புலவரிடம்  நான் பேசினேன். என்னை அறிமுகம் செய்துகொண்டேன். குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் பற்றியும் அவர்தம் தமிழிசை வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைத்தேன். புலவர் சொக்கலிங்கம் அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. புலவர் அவர்கள் நம் பண்ணாராய்ச்சி வித்தகரை இரண்டுமுறை பார்த்துள்ளதாகவும், அவருடன் பழகிய நாள்கள் இன்னும் தம் மனக்கண்ணில் இருப்பதாகவும் குறிப்பிட்டு, அப்பர் பெருமானின்

"கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே"

எனத் தொடங்கும் கொல்லிப்பண் பாடலைப் பாடியும், பண் விளக்கம் சொல்லியும் பண்ணாராய்ச்சி வித்தகர் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்ததை நினைவூட்டினார். அவர் பாடியபொழுது வயிற்றுவலி வந்தோன் அடையும் துன்பத்தைக் கண்முன் பாடிக்காட்டி நடித்துப் புலப்படுத்தியதைப் பகிர்ந்துகொண்டார். மேலும் சிதம்பரத்தில்

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை
என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே?

என்னும் பாடலை உழவாரப்பணியின் பொழுது, உழவாரம் கொண்டு புல்லைச் செதுக்கி எடுப்பதுபோல் பாடிக்காட்டியதாகப் புலவர் தொலைபேசியில் உரையாடியபொழுது குறிப்பிட்டமை எனக்குப் பெரும் மகிழ்வாக இருந்தது.

     புலவர் அவர்களின் உடல்நலம் நோக்கி, அவரை இல்லம் சென்று நாங்கள் பார்க்க நினைத்தோம். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் மேல் கொண்ட பற்றின் காரணமாகவும், தமிழிசையின்மேல் கொண்டு ஈடுபாட்டின் காரணமாகவும் தாமே உரிய இடத்திற்கு வருவதாகப் புலவர் அவர்கள் வாக்களித்தார். சொன்னபடியே ஆவணப்படம் திரையிடும் இடத்திற்கு முதலாமவராக வந்து  நம் புலவர் காத்திருந்தார். புலவர்முன் கைகுவித்து வணங்கி, ’மாறிப்புக்கு இதயம் எய்தினோம்’. தம் தமிழ்ப் புலமையையும் சமய ஈடுபாட்டையும் இலக்கியப் பயிற்சியையும் புலவர் அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

விசயமகங்கம் புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்களின் தமிழ் வாழ்க்கை:

     திருக்குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டை என்னும் ஊரில் வாழ்ந்த திருவாளர் வீரபத்திரன், ஆச்சியம்மாள் ஆகியோரின் தலைமகனாக 22.05.1940 இல் வீ. சொக்கலிங்கம் பிறந்தவர். இவருடன் ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாக உடன் பிறந்தவர்கள் உண்டு. பிறந்த ஊரான செங்கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர் (1958).  பெரும்புலவர்களை வாட்டும் வறுமைச்சூழல் காரணமாகச் சிலவாண்டுகள் கடையொன்றில் குற்றேவலராகப் புலவர் சொக்கலிங்கம் இளமையில் பணிபுரிந்தார். சிலவாண்டு இடைவெளியில் செங்கோட்டை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ( 1960-62) பயிற்சி பெற்றவர்.

     1962 இல் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் விசயமங்கலம் என்னும் ஊரை அடுத்துள்ள கினிப்பாளையம் என்னும் ஊரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியில் இணைந்து, பணி நிறைவுக்காலம் வரை அந்தப் பள்ளியில் பணிபுரிந்தார். இவரின் ஆசிரியப் பணியைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டு அரசு நல்லாசிரியர் விருது(1994-95) வழங்கிச் சிறப்பித்துள்ளது. பணியில் இருந்தபடியே தம் புலமையை வளர்த்துக்கொள்ள, புலவர் (சென்னைப் பல்கலைக்கழகம்), இலக்கிய இளையர் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), கல்வியியல் இளையர், முதுகலை(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)ப் பட்டங்களைப் பெற்றவர்.

     வாழ்வியல் தேவைக்கு ஆசிரியப் பணிபுரிந்தாலும் உள்ளம் முழுவதும் ஆன்மீக ஈடுபாட்டிலும், இலக்கிய இன்பத்திலும் மூழ்கிக் கிடந்தது. எனவே ஓய்வு நேரங்களில் சொற்பொழிவாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

     சமய இலக்கியங்கள், காந்தியம், பாரதிப் பாடல்கள், காமராசர் வாழ்வியல் குறித்து உரையாற்றுவதில் நம் புலவருக்குப் பெரிதும் ஈடுபாடு உண்டு. "நீரதன் புதல்வர்" என்னும் பாரதியார் பாடலடிகளைத் தலைப்பாக்கி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் எழுச்சியுரையாற்றுவதில் வல்லவர். படித்தவர்களையும் படிக்காதவர்களையும் கவர்ந்திழுக்கும் சொல்லாற்றல் கொண்டவர். ’ஆன்மீகமும் மக்கள் வாழ்க்கையும்’, ’ஒரு ஊதுகுழலின் உலாக்கோலம்’, ’தெய்வச் சேக்கிழார் சுவாமிகளின் திட்பமும் நுட்பமும்’ என்னும் தலைப்புகளில் இவராற்றிய உரைகள் மக்களின் உள்ளத்தில் நீங்கா இடம்பெற்றவையாகும். சமய இலக்கியங்களில் அமைந்துள்ள கவிதை நயங்களையும் நுட்பங்களையும் எடுத்துக்காட்டும் பேராற்றல் கொண்டவர் என்பதும் அவற்றை வெளிப்படுத்துவதில் வல்லவர் என்பதும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

     பேரூர் திருமடத்தில் அருளாட்சி செலுத்தும் தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் மெய்த்தொண்டினை நினைவூட்டி, இவர் எழுதிய "தவம் செய்த தவம்" என்னும் நூல் அடியவர்களால் விரும்பிப் பயிலப்படும் நூலாகும். திருக்குற்றாலச் சாரலின் இயற்கை எழிலை வருணித்து இவர் வரைந்துள்ள "அருவிச்சரம்" என்னும் நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கு இனிய விருந்தாகும். 32 கவிதைகள் இந்த நூலின் உள்ளடக்கமாக உள்ளன.

     சென்னை, நெல்லை, நாகர்கோயில் உள்ளிட்ட ஊர்களில் இலக்கியப் பேருரையாற்றிய இவர் மலேசியாவுக்குச் சென்று இருபத்தைந்து நாள் தங்கிச் சமய நூல்கள் குறித்தும், இலக்கியச் சுவையுணர்வு குறித்தும் உரையாற்றி மீண்ட பெருமைக்குரியவர்.

     புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்கள் சைவ சமய ஈடுபாடு கொண்டவர் எனினும் வடநாட்டிலிருந்தும், பிற பகுதிகளிலிருந்தும் சுற்றுப்பயணம் வரும் சமணர்கள் தங்கிச் செல்லும் வகையில் இவரின் வீட்டுக் கதவம் எப்பொழுதும் திறந்திருப்பதும் அவர்களை விருந்தோம்பி வழியனுப்புவதும், வருவிருந்துக்குக் காத்திருப்பதும் இவரின் உயர்ந்த மாந்த நேயத்தை வெளிப்படுத்துவன. சமயங்கடந்து, அனைவரிடமும் அன்பு பாராட்டி வாழும் தமிழுள்ளம் வாய்த்த புலவர் பெருமான் நலம்பல பெற்று, நீடு வாழ வாழ்த்துவம்!

குறிப்பு: என் கட்டுரைக் குறிப்புகளை - படங்களை எடுத்தாளுவோர் எடுத்த இடம் சுட்டுங்கள். சிலர் இக்குறிப்புகளைச் சிற்சில மாற்றங்களுடன் நூலாக்கி நூலகத்துறை ஆணை பெற்று நூலடுக்குகளில் வைத்திருப்பதை யானும், நண்பர்களும் கவனித்து வருகின்றோம்!.

புலவர் வீ. சொக்கலிங்கம், கே.பி.கே.செல்வராஜ், மு.இளங்கோவன்

புலவருடன் சுப்ரபாரதிமணியன் உள்ளிட்டோர்

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

தெருக்கூத்து ஆய்வின் முன்னோடி அ. அறிவுநம்பி தி இந்து நாளிதழின் கட்டுரை(11.04.2017)

  தமிழ் ஆய்வுலகம்  கால ஆராய்ச்சியிலும், இலக்கிய நயம் பாராட்டுவதிலும், இலக்கணப் பூசல்களிலும், மொழியாராய்ச்சியிலும், சிற்றிலக்கிய ஆய்வுகளிலும் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை நாட்டுப்புறவியல் துறைக்கு உயிரோட்டம்  கொடுத்தார். அவரின் அன்பிற்குரிய மாணவரான . அறிவுநம்பிக்குத் தெருக்கூத்துத் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்குத் தலைப்பை ஒதுக்கினார். இன்னொரு மாணவரான மு. இராமசாமிக்குத் தோல்பாவைக்கூத்து என்னும் தலைப்பை ஒதுக்கினார்.

 சங்க இலக்கிய ஈடுபாடும், சமய ஈடுபாடும் கொண்டிருந்த அ. அறிவுநம்பி தெருக்கூத்துத் தலைப்பினைத் தேர்ந்தெடுத்தவுடன் முழுநேரத் தெருக்கூத்து ஆய்வாளாரக மாறித் தமிழகத்தின் தெருக்கூத்து நடைபெறும் இடங்களுக்குக் களப்பணிமேற்கொண்டு மாதக்கணக்கில் அலைந்து திரிந்து, ஆய்விற்குரிய குறிப்புகளுடன் நெறியாளர் முன் நின்றார். நெறியாளர் சண்முகம் பிள்ளை, தமிழ் ஆய்வுலகம் இதுவரை கண்டிராத பல புதிய செய்திகளைத் தம் மாணவர் கொண்டுவந்துள்ளதை வெகுவாகப் பாராட்டினார். நெறியாளரின் மொழிகளால் ஊக்கம் பெற்ற அறிவுநம்பி தெருக்கூத்து ஆடும் அளவிற்குப் பயிற்சி பெற்றிருந்தார்.

 வலிமையான ஆய்வினை நிகழ்த்திய தம் மாணவருக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் விரிவுரையாளர் பணி கொடுத்து மகிழ்ந்தது. ஐந்தாண்டுகள் மதுரையில் பணிபுரிந்த அறிவுநம்பிக்குப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியர் பணி கிடைத்தது. முப்பத்தொரு ஆண்டுகள் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அ. அறிவுநம்பி இன்னும் சில மாதத்தில் ஓய்வுபெற இருந்தார். இந்த நிலையில் திடுமென உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவம் பயனளிக்காமல் 09.04.2017 இல் இயற்கை எய்தியமை தமிழ் இலக்கிய உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

 பேராசிரியர் பூ.அமிர்தலிங்கம், இராசலட்சுமி அம்மையாருக்கு மகனாக 10.11.1952  பிறந்தவர்தான் .அறிவுநம்பி. காரைக்குடி ஊரினர். தொடக்கக் கல்வியைக் காரைக்குடி சுபாஸ்நகர் நகராட்சிப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். கவியரசு முடியரசனார், புலவர் .பழனி உள்ளிட்டவர்கள் இவருக்கு ஆசிரியப் பெருமக்களாக விளங்கினர். அழகப்பர் கல்லூரியில் புகுமுக வகுப்பு, இளம் அறிவியல்(கணக்கு) பட்ட வகுப்பை நிறைவு செய்த பின்னர் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர்.

 அ. அறிவுநம்பி நாட்டுப்புறவியல், சங்க இலக்கியம், காப்பியங்கள் உள்ளிட்ட துறைகளில் பன்முகப் புலமையுடைவர். அறிவுநம்பியின் முன்னோர்கள் இராமநாதபுரம் அரண்மையின் அரசவைப் புலவர்களாக விளங்கியவர்கள். சேதுபதி மன்னர்களின்மேல் சிற்றிலங்கியங்கள் எழுதிய பெருமைக்குரியவர்கள். மரபுவழியாகக் கிடைத்த தமிழறிவும், பல்கலைக்கழகங்களில் பெற்ற பேரறிவும் அ. அறிவுநம்பியைப் புகழ்பெற்ற கல்வியாளராக மாற்றியது. உலக அளவில் அறிமுகமான தமிழறிஞராக இவர் விளங்கமுடிந்தது.

   அ. அறிவுநம்பி மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது மட்டும் தம் பணி என்று நிறுத்திக்கொள்ளாமல் அனைவரையும் உடன்பிறந்தாராக நினைத்துப் பழகும் இயல்புடையவர். எளிமையும் அன்பும் இவரிடம் இருந்த உயர் பண்புகளாகும். ஆய்வு எல்லையைச் சுருக்கிக்கொள்ளாமல் பல்துறையிலும் நூல்களை எழுதித் தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர். புதுதில்லி முதல் குமரிமுனைவரை உள்ள தமிழ்த்துறை சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற கருத்தரங்குகள், கல்விக்குழுக்கள், ஆய்வறிஞர் குழுக்களில் இடம்பெற்றிருந்தவர். ஆண்டுக்கு ஒரு நூல் எழுதி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். இவர்தம் நூல்கள் அரசுப் பரிசில்களையும், இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பெற்ற பெருமைக்கு உரியன.

  பாரதியாருக்குப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்தி உலக அளவில் இருக்கும் பாரதி ஆய்வாளர்களை ஒன்றிணைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். புதுவைப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணைவேந்தராகவும், இயக்குநராகவும், புலமுதன்மையராகவும், தமிழியல் துறைத் தலைவராகவும் பணிபுரிந்தவர். புதுச்சேரியில் இயங்கிவரும் புதிமம் என்ற திருக்குறள் பரப்பும் அமைப்பின் செயலராகவும் இருந்து தமிழ்ப்பணி புரிந்தவர்.

 
  பதினைந்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டுப் பயணங்களை மேற்கொண்டு ஆய்வரங்கில் கட்டுரை படித்தவர். அமெரிக்காவில் நடைபெற்ற புறநானூற்று மாநாட்டில் இவர்தம் கட்டுரை முதல் பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்கத் தமிழர்களால் பாராட்டப்பட்டது. இங்கிலாந்து, பிரான்சு, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று ஆய்வரங்குகளில் ஆய்வுரை வழங்கித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்.


 அ. அறிவுநம்பியிடம் கொடுத்த பணிகளைச் சிறப்பாக முடித்துக் கொடுப்பார் என்பதால் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிப்பணிகளுக்கு இவர்தம் ஆலோசனைகளைப் பெற்றுள்ளது. இவர் கலந்துகொள்ளும் எந்தக் கூட்டத்திலும் தனிமுத்திரை பதிப்பதை வழக்கமாக கொண்டவர். நேர்முகத் தேர்வுகளில் தம் முடிவுகளைத் துணிவாக எடுத்துவைக்கும் இயல்புடையவர். முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகளில் இவர் புறத் தேர்வாளராகக் கலந்துகொள்ளும்பொழுது, பார்வையாளர்கள் வரிசையிலிருந்து கேட்கப்படும் வினாக்கள் அனைத்தையும் குறித்துக்கொண்டு, ஆய்வாளரிடமிருந்து விளக்கம் பெறுவதை இலாவகமாகச் செய்வார். தமக்கு ஓய்வும் வாய்ப்பும் இருக்கும் பொழுது யார் அழைத்தாலும் கலை, இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

   அறிவுநம்பி சமூகம் சார்ந்த சிந்தனைகளை முன்வைத்துப் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தவர். எளிமையும் தெளிவும் கொண்டவை இவரின் கட்டுரைகள்.  சொல்ல வந்தவற்றை விளக்க இவர் எடுத்து முன்வைக்கும் உதாரணங்களும்,  இவரின் சொல்லாற்றலும் கற்பவரை வசியப்படுத்துவன. நடைமுறையிலிருந்து இவர் எடுத்துக்காட்டும் உதாரணங்கள் படிப்பவரைப் பரவசப்படுத்துவன. எழுத்துத்துறையில் மட்டுமல்லாம் மேடைப்பேச்சிலும் அறிவுநம்பி தேர்ந்த கலைஞராக விளங்கியவர். நகைச்சுவை கலந்து பேசும் இவரின் பேச்சினைக் கேட்பதற்கு மாணவர் கூட்டம் ஒவ்வொரு கல்லூரியிலும் உண்டு.  வகுப்புகளை நகைச்சுவையுடன் கொண்டுசெல்லும் பேராற்றல் பெற்றவர் இவர். இவரிடம் பயிலும் மாணவர்கள்  தாங்கள் எழுதும் நூல்களுக்கு இவரிடம் அறிமுகச் செய்தி பெறுவதில் ஆர்வம் காட்டுவார்கள். புதுவையைச் சேர்ந்த ஒரு மாணவர், ’தமிழர் தம் குடிப்பழக்கம்’ என்ற தம் நூலுக்கு அறிமுகச் செய்தி வாங்கிய பொழுது, ’போடாமலே இவர் ஆடுபவர்" என்ற தலைப்பில் இவர் வழங்கிய அறிமுகவுரை அனைத்து மாணவர்களாலும் இரசிக்கப்பட்டது. ஏனெனில் அந்த மாணவர் கரகாட்டம் ஆடுபவர் என்பதும், மாணவரின் நூல் தலைப்பு மது தொடர்பில் இருப்பதும் உணர்ந்து இருபொருளில் பேராசிரியர் எழுதியதே மகிழ்ச்சிக்குக் காரணங்களாகும். அதுபோல் இவரின் இன்னொரு மாணவரை அறிமுகப்படுத்தும் பொழுது, " இவர் போட்டி ஒன்றில் பங்கு கொண்டால் மற்றவர்களிடம் கேட்கப்பட வேண்டிய வினா, இரண்டாவது பரிசு யாருக்கு? என்று எழுதியதும் இவரின் படைப்புத் திறனுக்குச் சான்றாகும்.

  மாணவர்கள் இவர்களிடம் அணிந்துரை பெறுவதை வாடிக்கையாகக் கொள்வதுபோல் தம் நூல்களுக்கு மாணவர்களிடம் அணிந்துரை பெறுவதை அறிவுநம்பி வழக்கமாக கொண்டிருந்தவர். அறிவுநம்பியின் கையெழுத்துத் தமிழக அளவில் புகழ்பெற்ற ஒன்றாகும். கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அளவிற்கு ஓவியம்போல் இவரின் கையெழுத்து இருக்கும். எதனையும் திட்டமிட்டு முடிக்கும் ஆற்றலும், முடிவெடுக்கும் திறனும் அனைவராலும் பாராட்டப்படுவன.

 அறிவுநம்பி கவிதை எழுதுவதிலும் ஆற்றல்பெற்றவர். பல்வேறு புகழ்பெற்ற கவிஞர்களின் தலைமையில் கவிதை பாடியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளுக்காக நேர்முக வருணனை செய்வதிலும் கைதேர்ந்தவர்.

    தம் ஆசிரியர்களின் மேல் மிகுந்த நன்றியுணர்ச்சியும், மரியாதையும் கொண்டவராகப் பேராசிரியர் அ. அறிவுநம்பி விளங்கினார். தம் ஆசிரியர்களை மேடைதோறும் நினைவுகூர்ந்து அவர்களின் சிறந்த கருத்துகளை அவையினருக்கு நினைவூட்டுவது அவர்தம் பழக்கம்.  தம் பேராசிரியரான வ.சுப. மாணிக்கம் அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்துவதில் ஆர்வம்கொண்டு சில பணிகளைத் திட்டமிட்டுச் செய்துகொண்டிருந்தார். வ.சுப.மாணிக்கம் குறித்த நூலொன்றினை மூன்று நாளுக்கு முன்பாக எழுதி முடித்து, அச்சுக்கு அனுப்பியிருந்தார். அந்த நூலே அறிவுநம்பியின் வாழ்க்கைத் தடயத்தைக் காட்டும் கடைசி ஆவணமாக அமைந்துவிட்டது. புதுவைப் பல்கலைக்கழகம் ஒரு அறிவுக்கலங்கரை விளக்கினை இழந்து நிற்கிறது.

நன்றி:  தி இந்து (தமிழ்) நாளிதழ் 11.04.2017

குறிப்பு: இந்து நாளிதழ் வெளியிட்ட கட்டுரையின் முழு வடிவம்

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!


 முனைவர் அ. அறிவுநம்பி

புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், எங்களின் உள்ளங் கவர்ந்த ஆசிரியருமான பேராசிரியர் . அறிவுநம்பி அவர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் இன்று (09.04.2017) பகல்பொழுதில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், மாணவர்கள், நண்பர்கள் என அனைவரின் துயரிலும் பங்கேற்கின்றேன்.

முனைவர் .அறிவுநம்பி அவர்களின் குடும்பம் மிகச்சிறந்த தமிழ்க் குடும்பம்.தமிழ் அவர்களின் பரம்பரைச் சொத்து என அழுத்தமாகக் குறிப்பிடலாம்.அறிவுநம்பி அவர்களின் முன்னோர் இராமநாதபுரம் அரண்மனையில் அரசவைப் புலவராக இருந்த பெருஞ்சிறப்பிற்கு உரியவர்கள்.சேதுபதி மன்னரின் மேல் பல சிற்றிலக்கியங்களை எழுதிய பெருமை மிக்க புலவர்களுள் இவரின் முன்னோர் குறிப்பிடத்தக்கவர்.

அவர்தம் திருப்பெயர் சரவணப்பெருமாள் என்பதாகும்(இச் சரவணப் பெருமாள் என்ற பெயரின் அடிப்படையில் தம் மகனுக்குச் சரவணன் எனப் பேராசிரியர் அறிவுநம்பி பெயரிட்டுள்ளமை அவர்தம் மரபு பேணும் பழக்கத்தைக் காட்டும்).தனிப்பாடல் திரட்டில் இவர்தம் பல பாடல்கள் உள்ளன.சேதுபதி மன்னர் மேல் விறலிவிடு தூது பாடியமையும் கந்த வருக்கச் சந்த வெண்பா உள்ளிட்டவை பாடியமையும் புலமை நலம் மெய்ப்பிக்கும் சான்றுகளாகும்.

புலவர் சரவணப்பெருமாள் அவர்களின் மகனார் பூவார்சாமி என்பதாகும். அவர் மகன் பேராசிரியர் பூ. அமிர்தலிங்கனார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பணிபுரிந்து ஒய்வுபெற்றவர். இவர்களும் வள்ளுவர் கண்ட உயிரினங்கள்,கம்பன் கவியரங்கில் மலரமுதன், கருத்தும் கற்பனையும் என்னும் தமிழ் நூல்களை வழங்கியவர். பேராசிரியர் பூ.அமிர்தலிங்கனார் அவர்களுக்கும், இராசலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர்தான் (10.11.1952) நம் மதிப்பிற்குரிய முனைவர் .அறிவுநம்பி அவர்கள்.பிறந்த ஊர் காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்.

தொடக்கக் கல்வியைக் காரைக்குடி சுபாசுநகர் நகராட்சிப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை காரைக் குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர்.கவியரசு முடியரசனார், புலவர் .பழனி ஐயா உள்ளிட்டவர்கள் இங்கு இவருக்கு ஆசிரியப் பெருமக்களாக விளங்கியவர்கள் ஆவர்.புகுமுக வகுப்பை அழகப்பர் கல்லூரியிலும்,இளம் அறிவியல்(கணக்கு) பட்ட வகுப்பையும் நிறைவு செய்த பின்னர் முதுகைலத் தமிழ் இலக்கியம் பயின்றவர்(1976).

பின்னர் முனைவர் பட்டத்திற்குத் தமிழகத்தில் நடைபெறும் தெருக்கூத்துகள் பற்றிய தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்(1980). மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் பணியைத் தொடங்கி(1981-86),புதுவைப் பல்கலைக் கழகத்தில் இணைப்பேராசிரியர் பணியேற்று(1986-97),பேராசிரியராக மிளிர்ந்து(1997-98),துறைத்தலைவராக, இயக்குநராக,முதன்மையராக(Dean) பணியாற்றும் பெருமை பெற்றவர்.

இதுவரை இவர் நெறிப்படுத்த 18 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இளம் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 ஆகும். முதுகலையில் பாடம் பயிற்றுவித்த பட்டறிவு இவருக்கு 26 ஆண்டுகளாக உண்டு. தமிழக, புதுவை அரசுகளின் பல்வேறு அமைப்புகளிலும், பல்கலைக் கழகங்களிலும் உறுப்பினராக இருந்து பல பணிகளைச்செய்து வருபவர்.

கல்விக்குழு.பாடத்திட்டக்குழு,ஆட்சிக்குழு என இப்பொறுப்புகள் அமையும். பல்வேறு கருத்தரங்குகளின் அமைப்பாளராக இருந்து நடத்திக் காட்டியவர். பயிற்சியரங்குகள் பலவற்றிற்குப் பொறுப்பேற்று நடத்திக் காட்டியவர்.

உலக அளவில் நடைபெற்ற 13கருத்தரங்குகளில் கட்டுரை படித்த பெருமைக்கு உரியவர்.தேசிய அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் 40 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார்.உலக நாடுகள் பலவற்றிற்குக் கல்விப் பயணம் மேற்கொண்டவர். இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா, உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

நாட்டுப்புறவியல்,சங்க இலக்கியம்,அரங்கக்கலை,சொற்பொழிவுக்கலை பற்றிய பல பயிலரங்குகளில் பயிற்றுநராக விளங்கியவர்.பல்வேறு கல்வி நிறுவனங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்திய பெருமைக்கு உரியவர்.

முனைவர் .அறிவுநம்பி அவர்களின் பல்வேறு தமிழ்ப் பணிகளை, திறன்களை அறிந்த நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன.அவற்றுள் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றபொழுது முதல் வகுப்புப் பெற்றமைக்குத் தங்கப்பதக்கம் பெற்றதும். கம்பவாணர் பரிசில்,சிறந்த உலக மாந்தன் விருது(1999), தொல்காப்பியர் விருது(புதுச்சேரி அரசு) பெற்றமையும் குறிப்படத் தக்கனவாகும்.

பேராசிரியர் .அறிவுநம்பி அவர்கள் வழங்கிய தமிழ்க்கொடை01.கூத்தும் சிலம்பும், 1977
02.தமிழகத்தில் தெருக்கூத்து, 1986
03.நாட்டுப்புறக் களங்கள்,1989
04.தமிழரின் வழிபாட்டுச் சிந்தனைகள்,1990
05.தமிழர் மறந்த தமிழர் மரபுகள்,1991
06.பாவேந்தரின் பன்முகங்கள்.1992
07.தமிழரின் தெய்வநெறிச் சிந்தனைகள்,1993
08.இலக்கிய வித்தகங்கள்,1994
09.தமிழ் வளர்ச்சி சிக்கல்களும் தீர்வுகளும்,1995
10.வளர்தமிழ்க் களங்கள்,1996
11.கம்பரின் அறவியல்.1997
12.பல்துறைத் தமிழ்,1998
13.கம்பர்காட்டும் மள்ளர் மாண்பு,1999
14.புள்ளிகள்(கவிதை நூல்),2000
15.இலக்கியங்களும் உத்திகளும்,2001
16.தமிழியல் சிந்தனைகள்,2002
17.செந்தமிழ்ச் செம்மல்கள்,2003
18.இலக்கிய நோக்குகள்,2004
19.சிலம்பின் எதிர்க்குரல்,2005
20.பொருள் புதிது,2006
21.இலக்கியத் தளங்களில்,2007

பேராசிரியர் .அறிவுநம்பி அவர்களின் முகவரி:


முனைவர் .அறிவுநம்பி
15,கலைவாணி நகர்இலாசுப்பேட்டை,
புதுச்சேரி- 605 008

பேசி :

இல்லம் 0413- 2256699

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

எழுத்தறிவிக்கும் பணியில்...


கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லூரியில் மு.இ. உரை

தமிழகத்தில் கணினி நுட்பத்தை, இணையத்தை அறிமுகம்செய்யும் பணியைக் கடந்த பத்தாண்டுகளாக நான் ஆர்வமுடன் செய்துவருவதைத் தமிழார்வலர்கள் நன்கு அறிவார்கள். நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்களில் இப்பணி நடைபெற்றமையையும், பல்லாயிரம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களை இதன்பொருட்டுச் சந்தித்தமையையும் இங்கு நினைவுகூர்தல் வேண்டும். இப்பயிலரங்குகளின் ஊடாக எத்தனையோ பட்டறிவுகளைப் பெற முடிந்தது. தக்கவர்களும் தகவிலாதவர்களும் இப்பயணத்தில் எதிர்ப்பட்டதையும் இங்கு எண்ணிப்பார்க்கின்றேன்.

தொடக்க காலங்களில் எழுத்தாளர் திரு. மாலன் உள்ளிட்டோர் என் முயற்சியை ஊக்கப்படுத்தித் தம் ஏட்டில் அறிமுகம் செய்ததை என்றும் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பேன். ’அக்காலங்களில் கிறித்தவப் பாதிரிமார்கள் ஊர் ஊராகச் சென்று கல்வியை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தமை போன்று மு.இளங்கோவனின் கணினி, இணையப்பணி அமைகின்றது’ என்று ஒரு கூட்டத்தில் திரு. மாலன் சொன்னமை எனக்குப் பெரும் ஊக்கமாக இருந்தது. தி இந்தியன் எக்சுபிரசு நாளிதழின் மதுரைப் பதிப்பில் அதன் செய்தியாளர் வந்தனா அவர்கள் என் பணியை அறிமுகம் செய்து விரிவாக எழுதி வெளிவந்தமையும் இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

கணினி, இணையப் பயிலரங்கிற்காக அரங்கம் அமைத்துத் தந்தோர், தமக்கு அமைந்த வாய்ப்பை எனக்கு வழங்கி மகிழ்ந்தோர், நள்ளிரவில் காத்திருந்து வரவேற்றோர், வழியனுப்பி வைத்தோர், கைப்பொருள் தந்து காத்த பெருமக்கள், வைகறைப் பொழுதில் வரவேற்றோர், உண்டி தந்து உயிர் காத்தோர், ஆடைபோர்த்தி அன்பு செலுத்தியோர், நுட்பத்துணையில் இணைந்து நின்றோர், படம் எடுத்துப் பரிவுடன் அனுப்பியோர், எதிர்மறை வழியில் புறம்பேசிப் புடம்போட்டோர் என யாவரும் என் நினைவில் உள்ளனர். இது நிற்க.

இணையப் பயிலரங்க நிகழ்ச்சிகளை அவ்வப்பொழுது உடனுக்குடன் என் வலைப்பதிவில் பதிவு செய்வது உண்டு. ஓரிரு நாள் கழிந்தேனும் நினைவாகச் சில பதிவுகளைச் செய்துவிடுவேன். பெரும்பாலான பயிலரங்க நிகழ்வுகள் அந்த வகையில் என் வலைப்பதிவில் பதிவாகி உள்ளன. எனக்குச் சிலநேரங்களில் அமையும் தொடர்ந்த வேலைகளால் சில இணையப் பயிலரங்க நிகழ்வுகளைப் பதிவுசெய்ய முடியாமல் போனமையும் உண்டு. நேரம் ஒரு காரணமாக இருந்தாலும் சிலபொழுது ஒளிப்படங்கள் சரியாகக் கிடைக்காமல் போவதும் பதிவுறாமைக்குக் காரணங்களாகும். அந்த வகையில் பதிவுறாமல் உள்ள இரண்டு பயிலரங்க நிகழ்வுகளை இணைத்து இந்தப் பதிவில் எழுதுகின்றேன்.


மாணவியர்களுக்குத் தமிழ் இணையத்தின் வளங்களை அறிமுகம் செய்தல்

கோபிச்செட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள பி.கே.ஆர். மகளிர் கல்லூரியில் 03.01.2017 இல் நடைபெற்ற பயிலரங்கம் குறிப்பிடத்தக்க ஒரு பயிலரங்கமாகும். பேராசிரியர் சந்திரா அவர்களின் தகு தலைமையில் இயங்கும் தமிழ்த்துறை மாணவிகளுக்குக் கணினி, இணைய நுட்பத்தைப் பயிற்றுவிக்க அழைக்கப்பட்டிருந்தேன். கல்லூரி முதல்வர், பிற துறைப் பேராசிரியர்கள், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், மாணவிகள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு என் முயற்சியை ஊக்கப்படுத்தினர். மீண்டும் மீண்டும் எங்கள் கல்லூரிக்கு வந்து செல்லவேண்டும் என்று கல்லூரி முதல்வர் அன்று ஒரு வாய்மொழி ஆணையை வழங்கினார். இக்கல்லூரியில் பயிலும் மாணவியர்களுள் நகரப் பகுதியைச் சார்ந்தவர்கள் குறைவாகவும் அண்டை, அயலில் உள்ள சிற்றூர்களிலிருந்து வந்து பயில்வோர் மிகுதியாகவும் இருந்ததைப் பேராசிரியர்கள் குறிப்பிட்டனர். அத்தகு எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர்களுக்குப் பொழிவாகவும், செய்முறையாகவும் கணினி, இணையப் பயன்பாட்டை விளக்கினேன். அனைவரும் "பருகுவன் அன்ன ஆர்வத்தனாகி"  என்று நன்னூல் குறிப்பிடுவது போல் கற்று மகிழ்ந்தனர். இதுவும் நிற்க.

திருப்பூரில் அமைந்துள்ள திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் உள்ள தமிழ்த்துறை ஏற்பாடு செய்திருந்த தமிழ்க் கணினி, இணையப் பயிலரங்கம் குறிப்பிடத்தகுந்த மற்றுமொரு பயிலரங்கமாகும். இக்கல்லூரி கூட்டுறவு வீட்டுவசதித்துறையின் உறுப்புக் கல்லூரியாகும். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் கல்வி பயிலும் இடமாக இக்கல்லூரி உள்ளது. மிகச் சிறந்த வனப்பார்ந்த கட்டடங்களும், ஆடரங்குகளும், கலையரங்கும், வகுப்பறைகளும், பேருந்து வசதிகளும் கொண்டு இக்கல்லூரி உள்ளது. தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கண்ணகி அவர்கள் இந்தப் பயிலரங்கிற்கான ஏற்பாட்டினைச் செய்திருந்தார். பேராசிரியர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் போதிய ஒத்துழைப்பு நல்கியதால் பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கண்ணகி உரை, அருகில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், மு.இளங்கோவன்


திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடைபெறும் கணினி, இணையப் பயிலரங்கம் குறித்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு முதல்நாளே சொல்லியிருந்தேன். எனவே தமக்கிருந்த பல்வேறு வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, அவரும் ஒரு மாணவரைப் போல் வந்து அமர்ந்து கற்றமை எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது.

தொடக்க விழாவில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களின் எழுத்துப்பணிகளை அரங்கிற்கு நினைவூட்டினேன். பன்மொழி அறிஞரான சுப்ரபாரதிமணியன் புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எனப் பன்முக ஆளுமைகொண்டவர் எனவும் கனவு என்னும் இதழினை நடத்துபவர் எனவும் குறிப்பிட்டேன். இத்தகு பெருமைக்குரிய இவர் இங்கு வந்துள்ளமை நமக்குப் பெருமைதரத்தக்க ஒரு நிகழ்வு என்று கூறி, என் கடமையை நான்கு மணி நேரம் உரையாற்றி நிறைவுசெய்தேன். நிகழ்ச்சியின் நிறைவில் திரு. சுப்ரபாரதிமணியன் அவர்கள் வாழ்த்துரையாகவும், பின்னூட்ட உரையாகவும் இன்றைய பயிலரங்கம் குறித்து உரையாற்றினார். மாணவிகளும், பேராசிரியர்களும் பயிலரங்கம் குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். நிறைவுப் பணிநாளிலும் கணினி, இணையப் பயிலரங்கில் ஊக்கமாகப் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி கூறித் திரும்பினேன்.

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் மு.இளங்கோவன் உரை

பயிலரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள், மாணவிகள்