நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
#சுசுமு ஓனோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#சுசுமு ஓனோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

சப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு விழாவும் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழாவும்


பேராசிரியர் சுசுமு ஓனோவின் படத்தைத் திறந்துவைத்த முனைவர் பொற்கோ, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து,  சப்பான் நாட்டு மாணவி அயகா, மு.இளங்கோவன், முனைவர் இளமதி சானகிராமன்




தொல்லிசையும் கல்லிசையும் நூலைப் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து வெளியிட, பாவலர் வையவன் முதல்படி பெறுதல். அருகில் முனைவர் பொற்கோ, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், முனைவர் இளமதி சானகிராமன் உள்ளிட்டோர்.


சப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நூற்றாண்டு விழாவும், புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழாவும் புதுச்சேரி, செயராம் உணவகத்தில் நடைபெற்றன (23.08.2019). மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து,  சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தொல்லிசையும் கல்லிசையும் நூலினை வெளியிட்டு, தமிழ் மொழியின் சிறப்பினையும் இன்றைய நிலையில் உள்ள தமிழின் நிலையினையும் எடுத்துரைத்துப் பேசினார். நூலின் முதல்படியினைத் திருவண்ணாமலைப் பாவலர் வையவனும், தியாகி மு. அப்துல் மஜீதும் பெற்றுக்கொண்டனர்.

பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் தொல்லிசையும் கல்லிசையும் என்ற நூலை அறிமுகப்படுத்திப் பேசினார். புதுவைப் பல்கலைக்கழகப் புலமுதன்மையர் முனைவர் இளமதிசானகிராமன், மயிலம் தமிழ்க்கல்லூரியின் முதல்வர் ச. திருநாவுக்கரசு, ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த செ. திருவாசகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதுவைத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி, புதுச்சேரித் தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ. சடகோபன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அரங்க. மு. முருகையன் வரவேற்புரையாற்ற, முனைவர் மு.இளங்கோவன் ஏற்புரை நிகழ்த்தினார்.

 சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் முனைவர் பொற்கோ கலந்துகொண்டு, பேராசிரியர் சுசுமு ஓனோவின் படத்தினைத் திறந்து வைத்து, சுசுமு ஓனோ தமிழ் கற்ற வரலாற்றையும் அவர் செய்த ஆராய்ச்சிகளையும் எடுத்துரைத்தார். சுசுமு ஓனோவுக்கு ஜப்பான் நாட்டு மக்களும் அரசும் செய்த சிறப்புகளை எடுத்துரைத்தார். தமிழ்மொழிக்கும், ஜப்பான் மொழிக்கும் உள்ள உறவுகளை வெளிப்படுத்துவதில் சுசுமு ஓனோவின் ஆராய்ச்சி எந்த அளவு இருந்தது என்பதை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் எடுத்துரைத்தார். முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மொழியையும் ஜப்பான் மொழியையும் இணைத்து ஆராய்ச்சி செய்த சுசுமு ஓனோவின் நினைவினைத் தமிழகத்து மக்கள் போற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜப்பானிய மாணவி அயகா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சுசுமு ஓனோவின் பெருமைகளைப் பேசினார்.

கலைமாமணி கா. இராசமாணிக்கம் இறைவாழ்த்துப் பாடினார். முனைவர் இரா. கோவலன் நன்றியுரை வழங்க, எழுத்தாளர் பூங்குழலி பெருமாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். புதுவையிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் தமிழ் ஆர்வலர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தொல்லிசையும் கல்லிசையும் நூலைப் பெற்றுக்கொண்ட சப்பான் நாட்டு மாணவி அயகா, எழுத்தாளர் பூங்குழலி பெருமாள் உள்ளிட்டோர்.


சனி, 11 ஜூன், 2011

பொற்கோவின் அயலகத் தமிழ்ப்பணிகள்



   தமிழ் இலக்கியம், இலக்கணம் கற்ற அறிஞர்கள் மொழியியல்துறையின் வல்லுநர்களையும் அவர்களின் கருத்துகளையும் ஏற்கத் தயங்குவார்கள். அதுபோல் மொழியியல்துறை வல்லுநர்கள் தமிழறிஞர்களைத் தாழ்த்திப் பார்ப்பது உண்டு. இந்நிலைதான் தமிழகத்தில் பலவாண்டுகளாக நிலவியது. இச்சூழலில் தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் முறையாகத் திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் கற்றும், மொழியியலை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பயின்றும் பேரறிவு பெற்றவர் பொற்கோ அவர்கள் ஆவார். தமிழறிஞராகவும், மொழியியல் அறிஞராகவும் இருதுறை சார்ந்த அறிஞர் பெருமக்களால் இன்று போற்றப்படும் உலக மொழியியல் அறிஞர் பொற்கோ ஆவார். இவரின் தமிழ்ப்பணிகள் பல தரத்தன. திறத்தன.

  தமிழகத்தின் பல பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள் இவரிடம் தமிழ் பயின்றமை போலவே, பிறநாட்டு மாணவர்களும் அறிஞர்களும் இவரிடம் தமிழ் பயின்றுள்ளனர். பன்னாட்டு அறிஞர்கள், ஆய்வாளர்களின் ஆய்வுரைகளை மதிப்பிட்ட பெருமையும் இவருக்கு உண்டு. உலக அளவில் புகழ்பெற்ற அறிஞர்களான எமனோ, சான் இரால்சுடன் மார், கமில்சுவலபில், சுசுமு ஓனோ உள்ளிட்டவர்களின் பெரும் மதிப்பிற்கு உரியவர்.

 பொற்கோ அவர்கள் பல நாடுகளுக்குச் சென்று அங்கு நடைபெற்ற தமிழாய்வுகளை அறிந்த பெருமைக்குரியவர். அதுபோல் பல நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்திய பெருமைக்கு உரியவர். இக்கட்டுரையில் அறிஞர் பொற்கோ அவர்களின் அயலகத் தமிழ்ப் பணிகள் சுருக்கமாக நினைவுகூரப்படுகின்றன.

இலண்டன் பணி

  அறிஞர் பொற்கோ அவர்கள் பல்கலைக்கழகக் கல்வியை நிறைவுசெய்த தம் இருபத்தொன்பதாம் அகவையில் (1970) இலண்டன் மாநகரில் உள்ள இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைக் கலையியல் ஆய்வு நிறுவனத்தில் ஆசிரியப் பணியாற்றிய பெருமைக்குரியவர். இரண்டாண்டு காலம் இலண்டனில் தங்கிப் பொற்கோ அவர்கள் தமிழ்ப்பணியாற்றினார். முனைவர் சான் இரால்சுடன் மார் அவர்கள் முனைவர் பொற்கோ அவர்களின் கல்வியார்வம் அறிந்து, இலண்டனில் பணியாற்றுவதற்கு அழைத்துச் சென்றவர்.

  முனைவர் மார் அவர்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் முதன்முதல் சங்க இலக்கியத்தை முனைவர் பட்டத்திற்கு உட்படுத்தி ஆய்வு செய்த பெருமகனார் ஆவார். முனைவர் மார் அவர்களும் அறிஞர் பொற்கோ அவர்களும் இணைந்து இலண்டனில் தமிழ் பயிலுவதற்குரிய உயரிய சூழலை ஏற்படுத்தினர். இவர்களிடம் சற்றொப்ப நாற்பது மாணவர்கள் ஒரே காலத்தில் தமிழ் கற்றனர். இவ்வாறு கற்றவர்கள் யாவரும் பிற துறைசார்ந்தவர்கள். இலண்டன் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வுக்கூடத்தில் பொற்கோ நடத்திய பாடங்கள் பலமணிநேர ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பெற்று இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. பொற்கோ அவர்கள் உருவாக்கிய பாடம்தான் பல்லாண்டுகளாக  அங்கு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது.

  இலண்டனில் தமிழாய்விலும் மொழியியல் ஆய்விலும் ஈடுபட்ட பலருக்கு முனைவர் பொற்கோ அவர்கள் உதவியுள்ளார். ரெடிங் பல்கலைக்கழகத்தில் ஒரு மாதம் பயிற்றுவிக்கப்படும் “இன்டன்சிவ் கோர்சு” எனும் இந்தியாவுக்கு வரும் ஆங்கிலேயர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியையும் பொற்கோ அவர்கள் ஈடுபாட்டுடன் செய்துள்ளார்.

  ஆக்சுபோர்டு, கேம்பிரிட்சில் பல சிறப்புரைகளைப் பொற்கோ அவர்கள் வழங்கியுள்ளதுடன் ஆய்வாளர்களின் ஆய்வுகளுக்கு ஊக்கமாக உதவியுள்ளார். இங்கிலாந்து முழுவதும் நடைபெற்ற தமிழ், வரலாறு, தத்துவம், மொழியியல், இலக்கியம் சார்ந்த ஆய்வேடுகளைப் படித்து, ஆய்வேட்டுச் செய்திகள் வெளியுலகுக்குத் தெரிய அவற்றை இலண்டன் பி.பி.சியின் வழியாக அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளார். இவ்வாறு இவர் இலண்டனில் பி.பி.சியில் ஆற்றிய உரை(1972) நூலாக வெளிவந்துள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட உரைகள் இடம்பெற்றுள்ளன. இலண்டனில் பணிபுரிந்த காலத்தில் பிரிட்டிசு கவுன்சில் நூலகத்திற்கு நாளும் சென்று பயிலும் பழக்கத்தைக் கொண்டிருந்ததால் அங்குப் பணியாற்றிய பலரும் பொற்கோவை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

  இலண்டனில் பொற்கோ இருந்த காலத்தில் இலண்டன் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு மிகுந்து, சங்கம் இரண்டு அணியாக இருந்தது. நீதிமன்றம் செல்லும் நிலையில் இருந்த இரண்டு பிரிவினரையும் பொற்கோ அழைத்து (திரு.செல்வநாயகம் உதவியுடன்) ஒன்று சேர்த்த பெருமைக்குரியவர். இதற்குக் கோவை செழியன் அவர்களும் உதவியாக இருந்துள்ளார். இலண்டன் சேகர், கேப்டன் பதி உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்புடன் சங்கத்தினர் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாயினர். இந்த நிகழ்வுகள் யாவும் இலண்டன் தமிழ்ச்சங்க மலரின் பதிவாகியுள்ளது. தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் இணைந்தபிறகு முறையான தேர்தல் நடைபெற்றுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவரை தலைமைப் பொறுப்பில் இருந்த பொற்கோ முறையான தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தாம் அப்பொறுப்பிலிருந்து விலகினார். அதன் பிறகு இலண்டன் தமிழ்ச்சங்கத்தின் புரவலராகப் பணியாற்றினார். தமிழ்ச்சங்கத்தின் மலர் வெளியீட்டிற்குத் தரமான ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து வழங்கி இலண்டன் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றார்.
இங்கிலாந்தில் பொற்கோ அவர்கள் இருந்தபொழுது ஐரோப்பிய நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளார். பொதுவுடைமை நாடுகளுக்கு மட்டும் செல்லவில்லை.

பொற்கோவின் அமெரிக்கப் பயணம்

  யுனெசுகோ நிறுவனம் அமெரிக்காவில் நடைபெறும் இலக்கியம், இலக்கணம், மொழியியல் ஆய்வுகளைப் பார்வையிட அறிஞர் பொற்கோ அவர்களை அனுப்பி வைத்தது (1973). நோக்குநிலை ஆய்வாளராக (Visiting Fellow) சென்ற முனைவர் பொற்கோ அவர்கள் நாட்டுப்புறவியல், இதழியல் துறை சார்ந்த ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார். நியூயார்க் பல்கலைக்கழகம், சிக்காகோ அருகில் உள்ள வடமேற்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைப் பார்வையிடும் வாய்ப்புப் பெற்றார். அவ்வாறு சென்ற பொழுது வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையினருடன் நெருங்கிப் பழகும் சூழல் அமைந்தது. அவர்களின் விருந்தினராகத் தங்கும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு நடந்த புதுக்கவிதை (New Poetry) வகுப்புகளையும் கவனித்தார். இங்கு செர்மனியிலிருந்து வந்து, புதுக்கவிதையைக் கற்பித்த ஆசிரியர் மரபுவழிப் பட்டங்களைப் பெறாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொற்கோ அவர்கள் வடமேற்குப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பாடங்களையும் மாணவர்களுக்கு நடத்தியுள்ளார்.

  பொற்கோ அவர்களின் அமெரிக்கப் பயணத்தில் பழம்பெருமை கொண்ட நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அப்பொழுது நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி அங்கு நடந்துள்ளது. அமெரிக்காவின் கல்விப் பயணத்தை முடித்துக்கொண்டு பொற்கோ அவர்கள் திரும்பி வரும்பொழுது இலண்டனில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது பொங்கல் விழா நடந்தது. மலர் வெளியிட்டனர். தந்தை பெரியார் படத்தைத் திறந்துவைத்து, பெரியார் பற்றி பொற்கோ அவர்கள் இலண்டன் தமிழ்ச்சங்கத்தில் உரையாற்றினார்.

மலேசியப் பயணம்

 மலேசியாவின் மலேயா பல்கலைக்கழகத்தின் புறநிலை அறிவுரைஞராகவும் பாடத்திட்ட மேம்பாட்டுக்கான ஆய்வு அறிஞராகவும் அப் பல்கலைக்கழகத்திற்குப் பொற்கோ சென்றுள்ளார். மேலும் மலேசியாவின் சோகூர் பாரு என்னும் ஊரில்  இலக்கணத்திற்காக நடைபெற்ற ஒரு பணிமனையில் முதன்மையானவராக இருந்து நடத்திக்கொடுத்துள்ளார். மேலும், சிங்கப்பூர் கல்வி அமைச்சின் அழைப்பின்பேரில் இருமுறை சென்று சிறப்பு வகுப்புகள் நடத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்கப் பயணம்

  பொற்கோ அவர்கள் தென்னாப்பிரிக்க நாட்டுக்கும் கல்விப் பயணமாகச் சென்றுள்ளார். டர்பனில் நடைபெற்ற தமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாட்டுக்கு மையக் கருத்துரை வழங்கும் சிறப்பு அறிஞராகப் பொற்கோ அழைக்கப்பட்டார். அப்பொழுது முனைவர் பொற்கோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  தென்னாப்பிரிக்காவில் பொற்கோ அவர்கள் வழங்கிய பேச்சு அங்குக் குழுமி இருந்த மக்களிடம் ஒரு பெரிய எழுச்சியை உண்டாக்கியது. இந்தப் பயணத்தின்பொழுது டர்பன் பல்கலைக்கழகமும் சென்னைப் பல்கலைக்கழகமும் கல்விசார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அதற்குக் காரணமானவர் முனைவர் பொற்கோ அவர்கள் ஆவார். அதுபோல் மலேயா பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெறவும் பொற்கோ அவர்கள் காரணமாக இருந்துள்ளார். இந்த ஒப்பந்தங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டால் இரு நாட்டுக்கும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் சென்றுவர வாய்ப்பு உருவாகும்.

தமிழ் - சப்பானிய மொழியாய்வில் பொற்கோவின் பங்களிப்பு

  திராவிட மொழிகளுக்கும் சப்பானிய மொழிக்கும் இடையில் நெருங்கிய உறவு உள்ளது என்ற கருத்து சப்பானிய அறிஞர்கள் பலரால் 1975 அளவில் முன்வைக்கப்பட்டது. சப்பானிய மொழியறிஞர் சுசுமு ஓனோ அவர்கள் இந்த ஆய்வை மிகச்சிறப்பாக வளர்த்தெடுத்தார். சுசுமு ஓனோ அவர்கள் ஆற்றிய உரை ஆசகி இதழில் ஒரு கட்டுரையாக வெளிவந்தது. அக்கட்டுரையின் சுருக்கம் ஒன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் ஜி.ஆர். தாமோதரன் அவர்களுக்குச் சப்பானில் உள்ள இந்தியத் தூதரகம் அனுப்பி வைத்தது. துணைவேந்தர் அவர்களின் அறிமுகத்துடன் முனைவர் பொற்கோவும், சுசுமு ஓனோவும் இணைந்து 1979 முதல் ஓராண்டுக் காலம் அஞ்சல் வழியாகச் தமிழ்-சப்பானிய ஆய்வு குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். இது பற்றி பொற்கோ அவர்களைக் கண்டு பேச சுசுமு ஓனோ சென்னை வந்தார். இரண்டு நாள் கலந்து பேசிய சுசுமு ஓனோ டோக்கியோவிற்குச் சென்றார். அதன் பிறகு பொற்கோ, ஓனோ ஆய்வுத்தொடர்பு வலுப்பெற்றது. 1982 இல் சப்பானில் டோக்கியோவில் நடந்த அனைத்துலக மொழியியலார் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி சுசுமு ஓனோ அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று, பொற்கோ அவர்களும் கலந்துகொண்டார்.

  சாப்பான் சென்ற பொற்கோ “திராவிட மொழிகளுக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள மொழித்தொடர்பு” என்ற பொருளில் உரையாற்றினார். இவ்வாறு ஆற்றிய உரை சப்பான் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து சப்பானிய மொழிக்கும். சிறப்பு நிலையில் மொழிபெயர்க்கும்படி வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆய்வுரை முடிந்ததும் பன்னாட்டு ஆய்வறிஞர்களும் பல்வேறு வினாக்களை எழுப்பினர். பின்னர் நிகழ்ந்த தனிக் கலந்துரையாடல்கள் வழியாகவும் தமிழ் சப்பானிய மொழித்தொடர்பு பொற்கோவால் முன்வைக்கப்பட்டது. இந்தச் செய்திகள் இதழ்கள் வழியாகப் பலரின் பார்வைக்குச் சென்றன. 1982 இல் தமிழ் சப்பானிய ஒப்பாய்வு மிகச்சிறப்பான வளர்ச்சி நிலை கண்டது.

காக்சூயின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பொற்கோ

  சப்பானில் உள்ள காக்சூயின் பல்கலைக்கழகத்தின் அழைப்பின்பேரில் விருந்துநிலைப் பேராசிரியராக முனைவர் பொற்கோ அவர்கள் டோக்கியாவுக்கு 1990 இல் சென்று பிப்ரவரி, மார்ச்சு ஆகிய இரண்டு மாதங்களில் ஓனோ அவர்களுடன் தங்கித் தமிழ்-சப்பானிய ஆய்வைத் தொடர்ந்தார். இவ்வாறு தங்கியிருந்தபொழுது இதுவரை நடந்துள்ள தமிழ்-சப்பானிய மொழித்தொடர்பு பற்றிய ஆய்வுகள் அனைத்தையும் படித்து முடித்தார். நாள்தோறும் ஓனோ அவர்களுடன் உரையாடி இந்த ஆய்வு சிறக்க பொற்கோ வழிகாட்டியுள்ளார். இந்த இரண்டு மாதங்களில் பொற்கோ வழங்கிய 1. தமிழ் சப்பானிய மொழிகளில் மிதவை ஒட்டுகள், 2. தமிழ் சப்பானிய மொழிகளில் யாப்பு என்னும் ஆய்வுரைகள் சிறப்பிற்குரியனவாகும்.

  தமிழுக்கும் சப்பானுக்கும் மொழி வழி ஒப்புமை உள்ளதோடு இலக்கிய வழியிலும் வியக்கத்தக்க வகையில் ஒப்புமைகள் உள்ளதைப் பொற்கோ கண்டு காட்டினார். சங்க இலக்கியத் தொகுப்புப் போல் சப்பானில் “மங்யோஷூ” என்று ஒரு தொகை இலக்கியம் காணப்படுகின்றது. மேலும் பண்பாட்டு வழியிலும் ஒப்புமை காணப்படுவதை ஓனோ அவர்களுடன் இணைந்து பொற்கோ கண்டுபிடித்துள்ளார்.

  1993 இல் மீண்டும் பொற்கோ சப்பானுக்கு ஆய்தகைப் பேராசிரியராக அழைக்கப்பட்டார். அப்பொழுது தமிழ் சப்பானிய ஆய்வின் வளர்ச்சி நிலையை விளக்கி ஆங்கிலத்தில் 100 பக்க அளவில் பொற்கோ அவர்கள் ஒரு எழுத்துரையை உருவாக்கினார். 1996 இல் மீண்டும் பொற்கோ ஆய்தகைப் பேராசிரியராக அழைக்கப்பெற்றார். 1999 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் தமிழ் சப்பானிய மொழி ஆய்வு குறித்து விரிவான கலந்தாய்வரங்கம் டோக்கியோவில் காக் சூயின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

  தமிழ் சப்பானிய மொழிகளுக்கு இடையே உள்ள உறவைத் தக்க சான்றுகளுடன் நிறுவியதால் ஓனோ அவர்களும் பொற்கோ அவர்களும் தமிழக மக்களாலும் சப்பானிய மக்களாலும் போற்றப்படும் பெருமைக்கு உரியவர்கள் ஆனார்கள். தமிழ் சப்பான் மொழிகளுக்கு இடையே உள்ள உறவைச் சப்பானிலும் தமிழகத்திலும் அறிவுப்பூர்வமாக அறிமுகப்படுத்திய பெருமை முனைவர் பொற்கோ அவர்களுக்கு உண்டு.

  முனைவர் பொற்கோ அவர்களின் அயலகத் தமிழ்ப் பயணங்கள் தமிழின் சிறப்பைப் பிற நாட்டினர் அறியவும், அயல்நாட்டில் தமிழாய்வுகள் தழைக்கவும் உதவியுள்ளன.

----------------                    ---------------------------                --------------------                ----------

  **சென்னைத் தேவநேயப்பாவாணர் நூலகக் கட்டடத்தில் இன்று (11.06.2011) நடைபெற்ற பொற்கோ 70 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வெளியிடப்பெற்ற ஆய்வுலகில் பொற்கோவின் பாதையும் பயணமும் என்ற நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை.

நூல் வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்,சென்னை
பதிப்பாசிரியர்கள்: முனைவர் தங்க.மணியன்,முனைவர் ஒப்பிலா.மதிவாணன்

திங்கள், 19 ஜனவரி, 2009

தமிழ்-சப்பானிய மொழியறிஞர் சுசுமு ஓனோ(23.08.1919 -14.07.2008)


சுசுமு ஓனோ 

 உலகில் முன்னேறிய நாடுகளில் சப்பான் நாடு குறிப்பிடத் தகுந்தது. சப்பானியர்களின் கடும் உழைப்பும் சுறுசுறுப்பும் நேர்மையும் இவர்களுக்கு உலக அளவில் நற்பெயரைப் பெற்றுத் தந்தன. அறிவாற்றலிலும் தொழில்நுட்பத்திலும் முன்னணியில் இருக்கும் இவர்கள் மொழி, பண்பாட்டாலும் உயர்வுடையவர்கள் என்ற உண்மை தெரிந்ததும் மிக மகிழ்ந்தனர்.

  ஆம். சப்பானிய மொழி உலகில் எந்த மொழிக்குடும்பத்துடன் உறவுடையது என்ற ஆய்வில் ஈடுபட்டபொழுது மொழியியல் அறிஞர்கள் தொடக்கத்தில் பல மொழிகளைச் சப்பானிய மொழியுடன் உறவுடையது என ஆராய்ந்து உரைத்தனர். ஆனால் அடுத்தடுத்து நிகழ்ந்த ஆய்வுகளில் அந்தச் செய்திகள் மறுக்கப்பட்டன. சப்பானிய மொழி தமிழ்மொழியுடன் தொடர்புடையது என்ற ஆய்வு முடிவைப் பல்வேறு சான்றுகளுடன் முன்வைத்தபொழுது சப்பானியர்களும் மொழியாராய்ச்சி உலகினரும் மகிழ்ச்சியடைந்தனர்.

 பல வகையிலும் சிறப்புப் பெற்ற தாங்கள் உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியுடன் உறவுடையவர்கள் என்று நினைத்துப் பேருவகை அடைந்தனர். இப்பெருமைக்குரிய ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டவர் அறிஞர் சுசுமு ஓனோ அவர்கள் ஆவார். அவர்தம் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம்.

  டோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்த சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால சப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்தவர். 1943 ஆம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1944 இல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார். 1952 ஆம் ஆண்டு காக்சுயின் பலைகலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியில் உயர்ந்தார். அந்தப் பணியுடன் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1953 இல் விரிவுரை நிகழ்த்தியுள்ளார். 1960 இல் காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியுயர்வு பெற்றுத் தொடர்ந்து அங்குப் பணிபுரிந்தார்.

  பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு பழஞ்சுவடியை ஆராய்ந்து இவர் வெளியிட்டதைச் சப்பானிய அறிஞர்கள் போற்றி இவருக்கு முனைவர் பட்டம் வழங்கினர். இந்த ஆய்வு 1950 இல் ஓர் ஆராய்ச்சி இதழில் வெளிவந்துள்ளதாக அறிஞர் பொற்கோ குறிப்பிடுவார். கியோட்டோ பல்கலைக்கழகம் வழியாக இவர் முனைவர் பட்டம் பெற்றவர் (1952). சுசுமு ஓனோ பழஞ்சுவடிகளை ஆராய்வதில் பேரறிவு பெற்றவர். சொல்லாராய்ச்சி, அகராதிகளில் ஈடுபாடு உடையவர். இவர் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட சப்பானிய அகராதியின் படிகள் சப்பானில் பல்லாயிரக்கணக்கில் விற்கப்பட்டன. 1981 இல் இவர் வேறொரு அறிஞருடன் இணைந்து உருவாக்கிய சப்பானிய ஒருபொருட் பன்மொழி அகராதி ஓர் ஆண்டில் இலட்சம் படிகள் விற்றனவாம்.

  "சப்பானிய மொழியின் தோற்றம்" என்ற ஒரு நூலை உருவாக்கி 1957 இல் வெளியிட்டவர். இந்த நூல் ஐந்து இலட்சம் படிகள் விற்றனவாம். இந்த நூலின் வருகைக்குப் பிறகு சப்பான்மொழி பற்றி அறியும் வேட்கை சப்பானியர்களுக்கு உருவானது.

  ஓனோ அவர்கள் பதினொரு ஆய்வு நூல்களை வெளியிட்டவர். ஏழு நூல்களைப் பிற அறிஞர்களுடன் இணைந்து பதிப்பித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.

  பேராசிரியர் சிங்கிச்சி காசிமொத்தோ அவர்களின் மேல் சுசுமு ஓனோ அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு. அவர் வழியாகவே சப்பானிய மொழியாராய்ச்சியில் ஓனோ அவர்கள் ஈடுபட்டார். ஆய்வு ஈடுபாடும் மொழிப்புலமையும் கொண்ட ஓனோ அவர்கள் மொழி வரலாற்று ஆய்வு, இலக்கண ஆய்வு, தொன்மையான சப்பானிய இலக்கிய ஆய்வுகளில் நல்ல ஈடுபாடு உடையவர்.

  1957 இல் அவர் சப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் தொடங்கினார். அவர் சப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த மொழிகளுடன் அமைந்த எந்த மரபு சார் தொடர்புகளையும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. அப்போது அவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் பொன். கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் சப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.

  இரண்டாம் உலகப் போரின் பொழுது கல்வித்துறைக்கு இவர் மிகப்பெரிய பங்களிப்புச் செய்ததையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். டோக்கியோ காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றிய சுசுமு அவர்கள் மொழிக்கல்வி உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர். தமிழ் மொழிக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999 இல் தம் ஆய்வை நூலாக வெளியிட்டார். சப்பானிய மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம் படிகள் விற்பனை ஆயின (நாம் நூல்களை அச்சிட்டுவிட்டு நூலகத் துறையின் ஆணைக்கு ஆண்டுக் கணக்கில் காத்துக்கிடப்பதை எண்ணி வருந்துக).

  தமிழ் படிக்கத் தமிழகத்திற்கு வந்த சுசுமு ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர். 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகச்சிறந்த ஆய்வு முடிவுகளை வெளியிடும் அளவிற்குச் சுசுமு ஓனோ அவர்களுக்குத் தமிழ் - சப்பானிய மொழி உறவு பற்றிய உண்மைகள் வெளிப்படத் தொடங்கின.

  1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சப்பானிய மாந்தவியல் கழகத்தின் சார்பில் "சப்பானிய மொழிகளின் தோற்றம்" என்ற தலைப்பில் ஓனோ அவர்கள் டோக்கியோவில் உள்ள ஆசகி மண்டபத்தில் உரையாற்றினார். ஆசகி இதழில் இக்கட்டுரை வெளியானது. தமிழ் சப்பானிய மொழிகுறித்து வெளிவந்த முதல் கட்டுரையாக பொற்கோ இதனைக் குறிப்பிடுகிறார். கெங்கோ என்ற இதழிலும் 1980 சனவரி முதல் செப்டம்பர் வரை ஓனோ அவர்கள் தமிழ்-சப்பானிய உறவு பற்றி எழுதினார். இதன் விளைவாகத் தமிழ்-சப்பானிய மொழி உறவு பற்றி சப்பான் நாட்டில் ஒரு பரவலான அறிமுகம் ஏற்பட்டது.

  ஆசகி என்ற நாளிதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றைச் சப்பானில் உள்ள இந்தியத் தூதரகம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அந்நாள் துணைவேந்தர் முனைவர் தாமோதரனுக்கு அனுப்பியது. இதன் பிறகு துணைவேந்தரின் இசைவுடன் பொற்கோவும் ஓனோவும் இணைந்து தமிழ்-சப்பானிய மொழியாய்வில் ஈடுப்பட்டனர். மடல் வழியாக ஆய்வு முயற்சி நீண்டது. இந்த ஆய்வு பற்றி பொற்கோவுடன் கலந்துபேச ஓனோ அவர்கள் தனிப்பயணமாக 03.04.1980 இல் சென்னை வந்தார். இரண்டு நாள் உரையாடலுக்குப் பிறகு சப்பான் திரும்பினார்.

  தமிழ் சப்பானிய மொழித்தொடர்பு பற்றிய பல உண்மைகள் புரியத் தொடங்கியதும் சப்பானிய ஒலிபரப்பு நிறுவனம் (Nippon Hoso Kyokay)) கள ஆய்வுப்பணிக்கு உதவ முன்வந்தது. ஆசகி என்ற செய்தித்தாள் நிறுவனமும் உதவ முன்வந்தது. 11.09.1980 இல் சப்பானிலிருந்து களப்பணிக்குக் குழு புறப்பட்டது.

  ஒருமாத காலம் இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களப்பணியாற்றித் தகவல் திரட்டியது. கள ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பிய ஓனோ அவர்கள் தம் குழுவினருடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடினர். பல்கலைக்கழக இசைவுடன் இந்தக் கலந்துரையாடலைச் சப்பான் என்.எச்.கே நிறுவனம் சப்பானிய தொலைக்காட்சிக்காகப் படம் எடுத்துக்கொண்டது.

  தமிழகத்தில் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள், தரவுகள் யாவும் ஒழுங்குபடுத்தப் பட்டு 01.11.1980 இல் சப்பான் நாட்டில் ஒளிபரப்பானது. ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. தமிழ்மொழியுடனும் தமிழ்நாட்டுடனும் பலவகையில் தொடர்புகள் தங்கள் மொழிக்கு உள்ளது என்று உணர்ந்ததே சப்பானியர்களின் மகிழ்ச்சிக்ககுக் காரணம். இத்தகு பெருமைக்குரிய ஓனோவுக்கு மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்குச் சிறப்பு அழைப்பு அனுப்பத் தமிழக அரசு முடிவுசெய்தது. மாநாட்டின் பொது அரங்கில் இவர் கட்டுரை தமிழ் சப்பானிய மொழிக்கு இடையிலான உறவு பற்றி படிக்கப்பட்டது. இந்து, எக்சுபிரசு உள்ளிட்ட ஏடுகள் புகழ்ந்து எழுதின. இவ்வாய்வு முடிவில் உடன்பாடு இல்லாமல் சில அறிஞர்கள் இருந்துள்ளமையையும் அறியமுடிகிறது.

  12.09.1980 ஆம் ஆண்டு இந்து நாளிதழில் "தமிழ் சப்பானிய மொழியில் திராவிடமொழிகளின் செல்வாக்கு" பற்றிய ஒரு கட்டுரையை எழுதினார். சப்பானிய மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழில் இணைவதை விளக்க ஐந்நூறு சொற்களைச் சான்றாகக் காட்டி வேறொரு கட்டுரையும் வரைந்தார். இவையெல்லாம் தமிழுக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள உறவுகளை விளக்கும் வகையில் அமைந்திருந்தன. இக்காலத்தில் "உயிரிடைப்பட்ட வல்லொலிகள்" என்ற தலைப்பிலும், "மொழிமுதல் சகரம்" என்ற தலைப்பிலும் இவர் உருவாக்கிய ஆய்வுரைகள் சிறப்புடையனவாகும்.

  ஓனோ அவர்கள் தமிழ்-சப்பானிய உறவு பற்றிய தம் ஆய்வுகள் குறித்துத் திராவிட மொழிகளைப் பற்றி நன்கு ஆராய்ந்த எமனோ, பர்ரோ அவர்களின் கருத்தறிய விரும்பினார். அதன்பொருட்டு அமெரிக்கா சென்று எமனோ அவர்களைக் கண்டு உரையாடினார். எமனோ அவர்கள் மிக மகிழ்ந்து இவ்வாய்வைப் பாராட்டினார். 1981 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம் வந்து தம் ஆய்வைத் தொடர்ந்தார். "தமிழ் சப்பானிய ஒலி ஒப்புமை" என்ற ஒரு நூல் எழுதித் தம் ஆய்வை உலகிற்கு வழங்கினார்.

  சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு வந்த பிறகு பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தலில் பல வகையில் தம் ஆய்வுப் பணிகளை வரன்முறைப்படுத்தி ஈடுபட்டார். மொழி ஒப்பியல் வரலாற்றுக் கொள்கைகளை ஊன்றிப் படித்தார். திராவிட மொழியியலில் வெளிவந்த நூல்களைக் கற்றார். ஆழமாகத் தமிழ் மொழியையும் இலக்கண இலக்கியங்களையும் அறிந்தார்.

  தமிழ்மொழிக்கும் சப்பானிய மொழிக்கும் மொழிக்கூறுகளில் ஒப்புமை இருப்பது போலவே இலக்கியப் பாடுபொருளிலும் ஒற்றுமை உள்ளதை உணர்ந்தார். நம் சங்க இலக்கியங்கள் போலச் சப்பானிய மொழியில் மங்யோசு என்ற தொகை இலக்கியம் உள்ளது. இரண்டு தொகைகளிலும் பாடுபொருள் ஒற்றுமை உள்ளது. தமிழ் சப்பானிய உறவுக்கு ஒலி அமைப்பு, சொல் அமைப்பு, சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றையும் தொல் இலக்கியங்களையும் சார்ந்து ஆய்வை வளர்த்துள்ளார். ஒலியாலும் பொருளாலும் ஒப்புமை உடைய நானூறு சொற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

(எ.கா)

நம்பு- நமு
யாறு- யற
நீங்கு-நிகு
உறங்கு-உரகு
கறங்கு-கரகு
அகல்-அகரு
அணை-அண
கல்-கர

எனச் சொல் ஒற்றுமை உள்ளன.

  சுசுமு ஓனோ அவர்கள் சப்பானிய அரசின் பரிசும், பாராட்டும் பெற்றவர்.

 இலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் சண்முகதாசு, பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசு ஆகியோரும் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளனர். மொழியியல் ஆய்வில் வல்ல பேராசிரியர் அ.சண்முகதாசு அவர்களும் பண்பாட்டு ஆய்வுகளில் சிறந்த அவர் மனைவி மனோன்மணி அவர்களும் ஓனோ அவர்களின் ஆய்வுக்குப் பல வகையில் உதவியவர்கள். மனோன்மணி அவர்கள் சுசுமு ஓனோவுடன் இணைந்து அரிய பணிகள் பலவற்றைச் செய்தவர் என்பதை இங்கு, கவனத்தில் கொள்ளவேண்டும்.

  தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவைப் போலச் சப்பானில் அறுவடைத் திருவிழா நடைபெறுவதை எடுத்துரைத்தவர் சுசுமு ஓனோ. தமிழர்களின் திருவிழாவான பொங்கலைப் பற்றி ஆராயத் தொடங்கினார். பொங்கலை ஒத்த அதே நாளில் சப்பானில் ஒரு விழா நடைபெறுகிறது. அதனைச் சிறிய புத்தாண்டு (Koshogatsu) என்பர். விழா நாளில் கொங்கரா எனக் குரல் எழுப்புவர். எனவே இதனைக் கொங்கரா என்பர். தமிழ்நாட்டுப் பொங்கலுக்கும் சப்பானிய கொங்கராவிற்கும் மொழிவகையிலும் பண்பாட்டு வகையிலும் தொடர்பு உண்டு என்பதை உணர்ந்தார்.

  1982 இல் தமிழகத்துப் பொங்கல் விழாவைக் கண்டு, இது சப்பானில் கொண்டாடப்படும் பொங்கலுடன் நெருக்கமாக உள்ளதை எண்ணி வியந்தார். நான்கு நாள் நடைபெறும் விழாக்களும் சப்பானில் நடைபெறும் விழாவும் எந்தவகையில் ஒற்றுமையுடையன எனக் கண்டு புலமை இதழில் (1981 திசம்பர்) எழுதினார். பழையனவற்றைக் கழித்தல், சிறுபறை முழக்கல், அரிசியிட்டுப் பொங்கலிடுதல், வாசற் பொங்லன்று காக்கைக்குச் சோறிடல், ’கொங்கரோ கொங்க’ என்று கூவுதல் ஆகிய நிகழ்வுகள் சப்பானில் நடைபெறுகிறதாம். மாடுகளுக்கு நாம் உணவு ஊட்டுவதுபோல் சப்பானில் சில பகுதிகளில் குதிரைக்கு உணவு ஊட்டுவது உண்டாம்.

  தமிழுக்கும் சப்பான் மொழிக்கும் இடையில் இலக்கிய, இலக்கண, கல்வெட்டு, நாட்டுப்புறவியல் செய்திகளுடன் உள்ள உறவையும் வெளிப்படுத்தியவர். சப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள (கி.மு. 1300300) காலப்பகுதி கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1990 - களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரின் ஆய்வு முடிவுகள் இரு பண்பாட்டுக்குமிடையில் இலக்கியம், பண்பாட்டு நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் ஒற்றுமைத் தன்மைகள் வியக்கத் தக்க வகையில் இருந்தமையை வெளிப்படுத்தின.

   இவருடைய பணியைப் பற்றி கமில் சுவலபில் அவர்கள் 1990 இல் சொன்னது : சப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்.

 சென்னையில் தங்கியிருந்தபொழுது அவர் எழுதிய "உயிரிடை நின்ற வல்லினம்" என்ற கட்டுரை திராவிட மொழியியல் கழகத்தின் ஏட்டில் வெளிவந்தது. உலக அளவில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகள் மாநாடுகளில் கலந்துகொண்டு தமிழ் சப்பானிய உறவு பற்றிய கட்டுரை படித்தவர். தமிழகப் புலவர் குழு இவருக்குத் தமிழ்ச்சன்றோர் என்ற பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சப்பானிய மொழியைக் கற்பிக்க தில்லியிலிருந்து முனைவர் பாலாம்பாள் அவர்களை அழைத்துப் பணியமர்த்தம் செய்ததில் இவருக்குப் பங்கு உண்டு.

  1999 இல் தமிழகம், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தமிழியல் மற்றும் மொழியியல் அறிஞர்களைச் சப்பானுக்கு அழைத்துத் தமிழ் சப்பானிய மொழி உறவு பற்றிப் பேசினார் இதில் பொற்கோ ஒருங்கிணைப்பாளர். பேராசிரியர்கள் ச. அகத்தியலிங்கம், செ.வை. சண்முகம், கி.அரங்கன், வ.ஞானசுந்தரம், தங்க.மணியன் ஆகியோர் இந்தியாவிலிருந்தும், சண்முகதாசு, மனோன்மணி சண்முகதாசு இலங்கையிலிருந்தும், மணியன் கிருட்டினன், கந்தசாமி, குமரன் மலேசியாவிலிருந்தும் சென்றனர். இந்த ஆய்வரங்க உரைகள் தொகுக்கப்பட்டுச் சப்பானிய மொழியில் வெளிவந்தன. 29 ஆண்டுகள் தமிழ் - சப்பானிய மொழி ஆய்வில் தொடர்ந்து ஈடுப்பட்ட ஓனோ அவர்களைச் சப்பானிய மக்களும், ஆய்வறிஞர்களும் போற்றி மதிக்கின்றனர்.

  தமிழ்க் கல்வி நிறுவனங்கள், தமிழ் அறிஞர்களுடன் பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்டகாலத் தொடர்புகளைப் பேணிவந்தார். சப்பானிய மாணவர்கள் பலரைத் தமிழ் மொழியைக் கற்குமாறு அவர் ஊக்குவித்தார். தமிழுக்கும் சப்பானுக்கும் உறவுப்பாலம் அமைத்தார். தமிழ் மொழிக்கும் சப்பான் மொழிக்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு உள்ளதைப் பல்வேறு சான்றுகள் வழியாக உலகிற்கு வெளிப்படுத்திய பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள் தம் 89 ஆம் அகவையில் 14.07.2008 திங்கள் கிழமை டோக்கியோவில் இயற்கை எய்தினார். அறிஞரை இழந்து தமிழுலகம் வருந்துகிறது.

நனி நன்றி:

தமிழ் ஓசை களஞ்சியம், 18.01.2009
முனைவர் பொற்கோ,தமிழ் ஜப்பானிய ஆராய்ச்சி:பாதையும் பயணமும்(2005)
முனைவர் ஒப்பிலா.மதிவாணன்
முனைவர் மனோன்மணி சண்முகதாசு
முனைவர் அ.சண்முகதாசு
தமிழ்நெட்.காம்
விக்கிபீடியா
தட்சு தமிழ்,இணைய இதழ்
AOL இணைய இதழ்

சனி, 19 ஜூலை, 2008

தமிழ்-சப்பானிய மொழிஅறிஞர் சுசுமு ஓனோ மறைவு...


தமிழ்-சப்பானிய மொழியறிஞர் சுசுமு ஓனோ (23.08.1919 -14.07.2008)

  தமிழ் மொழிக்கும் சப்பான் மொழிக்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு உள்ளதைப் பல்வேறு சான்றுகள் வழியாக உலகிற்கு வெளிப்படுத்திய பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள் தம் 89 ஆம் அகவையில் 14.07.2008 திங்கள் கிழமை டோக்கியோவில் இயற்கை எய்தினார்.

  டோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்த சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால சப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக் கொணர்ந்தவர். 1943 ஆம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

 1930 ஆம் ஆண்டளவில் மொழியியல் துறையில் கவனம் செலுத்தினார். இரண்டாம் உலகப் போரின் பொழுது கல்வித்துறைக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்தவர். டோக்கியோ கக்கு சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றிய சுசுமு அவர்கள் மொழிக்கல்வி உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர். தமிழ் மொழிக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999 இல் தம் ஆய்வை நூலாக வெளியிட்டார். சப்பானிய மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம் படிகள் விற்பனை ஆயின.

  தமிழ் படிக்கத் தமிழகத்திற்கு வந்த சுசுமு ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர். 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகச்சிறந்த ஆய்வு முடிவுகளை வெளியிடும் அளவிற்குச் சுசுமு ஓனோ அவர்களுக்குத் தமிழ் - சப்பானிய மொழி உறவு பற்றிய உண்மைகள் வெளிப்படத் தொடங்கின.

 இலங்கைப்  பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசுவும் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.

  தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவினைப் போலச் சப்பானில் அறுவடைத் திருவிழா நடைபெறுவதை எடுத்துரைத்தவர் சுசுமு ஓனோ அவர்கள். தமிழுக்கும் சப்பான் மொழிக்கும் இடையில் இலக்கிய, இலக்கண, கல்வெட்டு, நாட்டுப்புவியல் செய்திகளுடன் உள்ள உறவையும் வெளிப்படுத்தியவர்.

 சப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள (கி.மு. 1300300) காலப்பகுதி கல்லறைகளை ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.

  1990 களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரின் ஆய்வுமுடிவுகள் இரு பண்பாட்டுக்குமிடையில் இலக்கியம், பண்பாட்டு நடை முறைகள் உள்ளிட்டவற்றில் ஒற்றுமைத் தன்மைகளை அதிசயிக்கத்தக்க வகையில் இருந்ததை வெளிப்படுத்தியிருந்தன.

 தமிழ்க் கல்வி நிறுவனங்கள், தமிழ்அறிஞர்களுடன் பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்டகாலத் தொடர்புகளைப் பேணிவந்தார். சப்பானிய மாணவர்கள் பலரைத் தமிழ் மொழியைக் கற்குமாறு அவர் ஊக்குவித்தார். தமிழுக்கும் சப்பானுக்கும் உறவுப்பாலம் அமைத்த அறிஞரை இழந்து தமிழுலகம் வருந்துகிறது.

 Encyclopedia of Languages & Linguistics என்ற நூலில் சுசுமு ஓனோ பற்றிய குறிப்பு:

  1957ல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் துவங்கினார். அவர் ஜப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் சப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.

  இவருடைய பணியைப் பற்றி கமில் சுவலபில் அவர்கள் 1990 இல் சொன்னது : சப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்.

தொடர்புடைய தொடுப்புகள் :

http://books.google.com/books?id=9PhwAAAAIAAJ&q=%22Susumu+Ohno%22+%2Btamil&dq=%22Susumu+Ohno%22+%2Btamil&ei=yWeBSOXbF42AsgOEwfDhDw&pgis=1

http://books.google.com/books?id=OkkgAAAAIAAJ&q=%22Susumu+Ohno%22+%2Btamil&dq=%22Susumu+Ohno%22+%2Btamil&source=gbs_book_other_versions_r&cad=2_0&pgis=1

http://books.google.com/books?id=T7Wv4ncys88C&pg=PA45&dq=%22Susumu+Ohno%22+%2
Btamil&ei=yWeBSOXbF42AsgOEwfDhDw&sig=ACfU3U2Fbk6OX66FEtWiz6Tk7eQiwoTTFg

http://en.wikipedia.org/wiki/Susumu_%C5%8Cno

http://www.xlweb.com/heritage/lj2.gif

நனி நன்றி :

தமிழ்நெட்.காம்
முனைவர் பொற்கோ
தூரிகா வெங்கடேசு
தமிழ் ஓசை நாளிதழ், சென்னை, தமிழ்நாடு