நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 13 ஜூன், 2011

நன்றி மறப்பது நன்றன்று…


மருத்துவர் சித்தானந்தம் -மருத்துவர் குணா அவர்கள்

1993 சூன் திங்கள் முதல் 1996 வரை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தேன். பல்கலைக்கழகத்தின் நிதியுதவியில் கல்வி பயின்றேன். இந்த நிலையில் பல்கலைக்கழகம் எனக்கு வழங்கிய நிதியுதவியைத் திடுமென நிறுத்தியது. ஆய்வேடு உருவாகும் சூழலில் பணநெருக்கடி ஏற்பட்டது. நிலைமையை உணர்ந்த புதுவைப் பல்கைலக்கழகத்தில் பணிபுரிந்த எங்கள் பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் ஆய்வுச்சூழலுக்குத் தடைவராதபடி நிதியுதவிக்கு வழிகோலினார். மாணவர்களின் நலனே தம் நலனாகக் கருதும் எங்கள் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் இரண்டு மூன்று தவணையாகத் தொகையை அனுப்பியபடி இருந்தார்.

ஆய்வேடு வழங்கப்பட்ட சூழலில் அந்த ஆய்வேடு மதிப்பீட்டுக்காக அயல்நாடு சென்றது. அதற்குரிய அஞ்சல் கட்டணம் உருவா 2332 ஐ ஆய்வாளனாகிய நான் கட்ட வேண்டும் என்று தேர்வுநெறியாளர் அலுவலகத்திலிருந்து மடல் வந்தது. அந்த மடல்செய்தி வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் கதையாக இருந்தது. இந்த நிலையிலும் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களே முன்வந்து உதவினார். பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் தாம் அனுப்பும் ஒவ்வொரு வரைவோலையின்பொழுதும் “டாக்டர் சித்தானந்தம்-குணா அறக்கட்டளை நிதியிலிருந்து தங்கள் கல்விச்செலவுக்காக இந்தத்தொகை அனுப்பப்பெறுகின்றது” என்று குறிப்பிடுவார்கள். அவ்வகையில் 22.07.1996 இல் ஒரு மடலும் 06.08.1997 இல் ஒரு மடலும் எனக்கு அனுப்பப்பட்டுள்ளன.

“மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு”,

”செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றலரிது”,

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது”

என்று மாணவர்களுக்குப் பலவாண்டுகளாகத் தமிழ் மறை பயிற்றுவிக்கும்பொழுதெல்லாம் “டாக்டர் சித்தானந்தம் -குணா அம்மையார்” பெயர் என் நினைவில் வந்துபோகும். முன்பின் அறிமுகம் இல்லாத சூழலில் உதவிய அக்கொடையுள்ளத்தாரை யாண்டு காண்போம் என்று நினைத்தவண்ணம் இருந்தேன்.

அமெரிக்க நண்பர்களின் தொடர்பு அமைந்தபொழுதெல்லாம் டாக்டர் சித்தானந்தம்- குணா அம்மாவின் பெயர்களைச் சொல்லி வினவியபடி இருப்பேன். அண்மையில் என் அமெரிக்கப் பயணம் உறுதியானபொழுது மருத்துவர் சோம.இளங்கோவன் ஐயாவிடம் டாக்டர் சித்தானந்தம் பற்றி வினவினேன். டாக்டர் சித்தானந்தம் அவர்களின் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பினார்கள். உடன் மருத்துவர் சித்தானந்தம் ஐயாவுடன் தொடர்புகொண்டேன்.

மருத்துவர் அவர்களும் உடன் மின்னஞ்சல் தந்தார்கள். தொலைபேசியில் பேசினார்கள். பலவாண்டுகளுக்கு முன் மருத்துவரின் உதவியால் நான் படிக்க நேர்ந்ததைச் சொன்னபொழுது அமைதியாக அந்த நிகழ்வைக் கேட்டுக்கொண்டார்கள். அவ்வளவே. அதனை அடுத்து அமெரிக்காவிற்கு நான் வருவதற்குரிய வழிமுறைகளைச் சொல்லி ஊக்கப்படுத்தி வருகின்றார்கள்.

என் அமெரிக்கப் பயணத்தில் கட்டுரை படிப்பதற்கும், சிறப்புரைகள் நிகழ்த்துவதற்கும் எவ்வளவு முதன்மை உண்டோ அந்த அளவு முதன்மை மருத்துவர் சித்தானந்தம் ஐயா -குணா அம்மா ஆகியோரை நேரில் கண்டு நன்றி சொல்வதற்கும் உண்டு. யானை குறட்டில் அடக்கி வைத்திருப்பதுபோல் சற்றொப்ப பதினாறு ஆண்டுகளாக மருத்துவர் சித்தானந்தம்-குணா அம்மா செய்த உதவியை நினைவில் கொண்டிருந்தேன். இந்தக் கிழமையில் நேரில் அவர்கள் கைகள் பற்றி நன்றியுரைப்பேன். திருவள்ளுவரின் செய்ந்நன்றி அறிதல் அதிகாரம் அல்ல. பட்டறிவின் தெளிசாறு.

கருத்துகள் இல்லை: