நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 17 ஜூன், 2011

அமெரிக்காவுக்கு நாங்கள் வந்த வரலாறு...

அமெரிக்க நாடு உலகில் உள்ள பலருக்கும் காண நினைக்கும் கனவுநிலமாக உள்ளது. அமெரிக்கா பற்றி இளம் அகவையில் பாடங்களில் படித்ததுடன் சரி. இணையத்தொடர்பு கிடைத்த பிறகு பக்கத்து வீட்டுக்காரரிடம் செய்தி பரிமாறிக்கொள்வது போல் அமெரிக்காவில் உள்ள நண்பர்களுடன் அடிக்கடி தொடர்புகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நான் பலரைத் தேடிப்பிடித்துத் தொடர்புகொண்டதும் உண்டு. என் தமிழ்இணைய முயற்சியைக் கண்டு பல நண்பர்கள் என்னை அடையாளம் கண்டு பழகியதும் உண்டு. இன்னும் பலர் என்னைப் பற்றி அறிந்தும் தொடர்புகொள்ளாமல் இருக்கலாம். அதுபோல் நான் அறிந்த பல நண்பர்கள் தொடர்பு எல்லைக்குள் வராமலும் இருக்கலாம்.

அமெரிக்காவிற்குச் செல்லும் வாய்ப்பு குறித்தெல்லாம் முன்பு நினைத்ததில்லை. ஆனாலும் அமெரிக்கா என்ற பெயரில் ஒரு மயக்கம் இல்லாமல் இல்லை. வாசுவை 2001 இல் சிங்கப்பூரில் முதன்முதல் பார்த்தேன். மயிலாடுதுறையினர் என்று அறிந்ததும் மகிழ்ச்சி ஏற்பட்டது. சென்ற ஆண்டு செம்மொழி மாநாட்டில் அடுத்த உத்தமம் நடத்தும் தமிழ் இணையமாநாடு பென்சில்வேனியாவில் என்றதும் முடிந்தால் சென்று வரலாம் என்று உள்ளத்தில் விதைபோட்டேன்.

அமெரிக்காவுக்குச் சென்றுவரப் பெருந்தொகை செலவாகும் என்று தயங்கினேன். பிறகு எப்படியும் சென்றுவர வேண்டும் உறுதி செய்தேன். இந்த நிலையில் சில அன்பர்கள் என் முயற்சிக்குப் பின்புலமாக இருந்தனர் (அவர்கள் பற்றி உரிய காலங்களில் நினைவுகூர்வேன்). நான் அரசு ஊழியன் என்பதால் முறைப்படி அரசிடமிருந்து இசைவுபெற முயன்றேன். கல்லூரி முதல்வர் தொடங்கி கல்லூரிக் கல்வி இயக்குநர், தலைமைச்செயலகத்தின் அரசு செயலர்கள், பிற அதிகாரிகள் வரை உள்ள அனைத்து அதிகாரிகளும் என் பயணத்திற்கு ஒத்துழைப்பாக இருந்தனர். அவர்களுக்கு மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளேன். அரசிடமிருந்து உரிய இசைவும் உடன் கிடைத்தது.

மாநாட்டுக்குழுவுக்கு இணையவழித் தமிழ்ப்பாடங்கள் என்ற தலைப்பில் கட்டுரைச்சுருக்கம் அனுப்பினேன். முதலில் கட்டுரைச்சுருக்கம் ஏற்கப்பட்டது. விரிவான கட்டுரையை அணியப்படுத்தினேன். அதற்கு ஓராண்டாகத் திட்டமிட்டும் உரிய காலத்தில் கட்டுரையை எழுதிமுடிக்க இயலவில்லை. புதிய தலைப்பு என்பதால் பல இணையதளங்களைப் பார்வையிட்டு ஒவ்வொன்றின் நிறைகுறைகளைக் கவனித்தேன். ஒருவாறு என் கட்டுரையை அணியப்படுத்தி மாநாட்டுக்குழுவினருக்கு அனுப்பினேன்.

அமெரிக்காவிற்கு நுழைவுச்சீட்டு பெறுவதற்குரிய பல்வேறு ஆவணங்களை ஆயத்தப்படுத்தினேன். உரிய காலத்தில் நுழைவுச்சீட்டும் எந்தச் சிக்கலும் இன்றிக் கிடைத்தது. கோடைவிடுமுறை எனக்கு வாய்ப்பாக இருந்ததால் என் பணிகளைத் தொய்வின்றிச் செய்தேன்.

நான் முதல்முறையாக அமெரிக்கா செல்வதால் தனியாகச் செல்வதை விடக் குழுவாகச் செல்வது நன்று என நினைத்தேன். அதற்காக உத்தமம் அன்பர்களின் முயற்சியால் காக்சு அண்டு கிங்சு நிறுவனத்தினர் தொடர்புகொண்டனர். 120,000 உருவா செலவாகும் என்று மதிப்பீடு தந்தனர், எங்கள் குழுவில் பதினைந்துபேர் முதலில் பெயர்கொடுத்தனர். பயணநாள் நெருங்கிய நிலையில் பாதிப்பேர் வரவில்லை என்றனர். எனவே நாங்கள் மேலும் இருபதாயிரம் கூடுதலாகக் கட்டி எங்கள் பயணைத்தைத் தொடரவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே எங்கள் பயணத்தொகை கூடுதலானது.

காக்சு அண்டு கிங்சு நிறுவனத்தார் பதிவு செய்தபடி 15.06.2011 இல் பயணம் செய்யத் திட்டமிட்டேன். அமெரிக்க நண்பர்களும் எனக்கு மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் பயனுடைய செய்திகளைத் தெரிவித்து அன்புடன் அழைத்தனர். இவ்வளவு தூரம் சென்று உடன் திரும்புவதில் எனக்கு விருப்பமில்லை. அங்குள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் கல்விநிலையங்களை அறிய நினைத்தேன். அதற்குவேண்டிய திட்டங்களையும் நண்பர்கள் வடிவமைத்துத் தந்தனர். இந்த நிலையில் பெட்னா விழாவிலும் கலந்துகொள்ள நினைத்து அதன் பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டபொழுது அனைத்துத் தமிழ்ப்பற்றாளர்களும் அதற்குரிய இசைவை அன்புடன் நல்கின்றனர்.

பெட்னா விழாவில் கலந்துகொள்ள விரும்பியதற்கு உரிய அடிப்படைக் காரணம் தமிழகத்தின் தலைசிறந்த உரையாசிரியரான பெருமழைப்புலவர் பொ.வே.சோமசந்தரனார் அவர்கள் நூற்றாண்டினைப் பெட்னா அமைப்பினர் கொண்டாட உள்ளமையே ஆகும். பெட்னாவின் தமிழ்ப்பணிகளை அன்பர்கள் வழியாக முன்பே அறிந்தவன் என்பதால் அவ்விழாவில் கலந்துகொள்வதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அமெரிக்கா செல்வதற்குரிய ஏற்பாட்டில் முனைப்பாக இருந்தபொழுது பள்ளிகள் தமிழகத்திலும் புதுவையிலும் திறப்பது நினைவுக்கு வந்தது. பிள்ளைகளுக்கு உரிய கடமைகளை முடித்துக்கொண்டு புறப்பட நினைத்தேன். நண்பர் கணேசு அவர்களின் உதவியுடன் அனைத்துக் கடமைகளும் நிறைவுசெய்தேன்.

பயணத்தின்பொழுது என் நூல்கள் சிலவற்றைக் கொண்டு செல்ல நினைத்தேன். பிற துணிமணிகள், மடிக்கணினிப்பை யாவும் கொண்டு செல்வது என்றால் தன்னந்தனியனாக இயலாது என்று என் பழைய மாணவர் திரு.இரமேசு (திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் அல்லியாளமங்கலம் என்ற ஊரினர். மலைபடுகடாம் ஆராய்ச்சிக்கு என்னுடன் நவிரமலைக்குப் பயணம் செய்தவர்) அவர்களின் உதவியை நாடினேன். என் மனக்குறிப்பறிந்து நடக்கும் அவர் புறப்படும் நாள் காலை 7 மணிக்கெல்லாம் புதுவை வந்தார். இருவரும் அனைத்துப் பொருட்களையும் நான்கு சிறு சிறு சுமைகளாகத் திரட்டிக்கொண்டு எங்கள் தானி ஓட்டும் நண்பர் திரு.வைத்தி அவர்களின் உதவியுடன் புதுவைப் பேருந்து நிலையம் வந்தோம். இருவரும் அரசுப்பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்தோம்.

எங்கள் பேருந்து 15.06.2011 பகல் 12 மணியளவில் புறப்பட்டது. சிறிது தொலைவு வண்டி நகர்ந்ததும் ஏதேனும் பொருள்கள் விடுபட்டுள்ளனவா என்று நினைத்தேன். பெட்னா விழாவில் தமிழன்பர்கள் வேட்டி, வெள்ளுடை அமைப்பில் அழகாகக் காட்சி தந்தமையைப் படத்தில் பார்த்தேன். எனவே நானும் வேட்டி அணிவது என்று நினைத்து அதனை எடுத்துவைக்க நினைத்திருந்தேன். அப்பொழுதுதான் அது நினைவுக்கு வந்தது. மனைவிக்குத் தொலைபேசியில் பேசி வேட்டி எடுத்து வைத்தேனா? என்று வினவினேன். இல்லை என்றார். என்ன செய்வது?

சென்னைக்குத் தொலைபேசியில் பேசி நண்பர் கார்த்திகைச்செல்வனை ஒரு வேட்டியுடன் வானூர்தி நிலையம் வரச்சொன்னேன். அவர் முன்பு வானூர்தி நிலையில் பணிபுரிந்தவர். வருவதாக குறிப்பிட்டார். காவல் துறையில் நேர்மையாகக் கடமையாற்றும் எங்கள் உறவினர் திரு.பாண்டியன் அவர்கள் தொலைபேசியில் பேசி வாழ்த்துச் சொன்னார்கள். தாம் கடமையில் இருப்பதால் வழியனுப்ப வர இயாலத நிலைக்கு வருந்தி என் பயணம் சிறக்க வாழ்த்தினார்.

புதுச்சேரிக் கல்வித்துறையில் பணியாற்றும் திரு க.சுகுமார் அவர்களும் தொலைபேசியில் வாழ்த்துச் சொன்னார்கள். திரு. செல்வம் இ.ஆ.ப.அவர்களும் பல்வேறு பணிகளுக்கு இடையே ஒரு குறுந்தகவல் வழி வாழ்த்துரைத்தார். சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் அண்ணன் திரு.க.பாலு அவர்கள் என் பயணம் சிறக்க வாழ்த்துரைத்தனர். அவர் பொறுப்பேற்று நடத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு பற்றியும் பேசி மகிழ்ந்தார்.
எங்கள் பேருந்து சென்னையை அடுத்த பெருங்களத்தூர் வரும்பொழுது பகல் 2.30 மணி. அங்கு இறங்கித் தொடர்வண்டியில் மாறிச் சென்னை வானூர்தி நிலைக்கு வந்தோம். கையில் கொண்டுவந்த உணவினை இருவரும் உண்டோம்.

நண்பர் இல.சுந்தரம் முன்பே வானூர்தி நிலைக்கு வந்த செய்தியைச் சொன்னார். நாங்களும் அவருடன் இணைந்துகொண்டோம்.

சிறிது நேரத்தில் திரு.ஆண்டோபீட்டர் அவர்களும் திரு.மதன்கார்க்கி அவர்களும் வந்தனர். பேராசிரியர் கீதா, ஆய்வாளர் பியூலா, முனைவர் பட்ட ஆய்வாளர் திருவாட்டி இரசனி, பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர் என எங்கள் பயணக்குழுவினர் ஓரிடத்தில் சேர்ந்தோம்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் தமிழன்பர் திரு.ஈறில் இன்பத்தான்(சதானந்தன்) அவர்கள், அவர்களின் நிறுவன நண்பர்களுடன் எங்களை எதிர்கொண்டு அழைத்து தமிழன்பர்களாகிய எங்களை வழியனுப்பினார். இதன் இடையே திரு.கார்த்திகைச்செல்வன் அவர்களும் எனக்குரிய வேட்டியுடன் வந்து சேர்ந்தார். அவர் நண்பர் செட் ஏர்வேசில் பணிபுரியும் திரு.குணா அவர்களும் எங்களுக்குப் பலவகையில் உதவினார்.

சென்னையிலிருந்து நாங்கள் ஏர் இந்தியா வானூர்தியில் தில்லிக்குச்சென்று அங்கிருந்து அதே ஏர் இந்தியா நிறுவனத்தின் வேறு ஒரு வானூர்தியில் - பன்னாட்டு வானூர்தியில் பயணம் செய்வது திட்டம். சென்னையிலிருந்து அனைவரிடமும் விடைபெற்றோம். மாலை 6.00 மணிக்கு எங்கள் வானூர்தி புறப்பட்டது. இரவு ஒன்பது மணியளவில் புதுதில்லி வந்துசேர்ந்தோம். குடிமைத்துறை உள்ளிட்ட பதிவுகளை முடித்து, எங்களை ஆய்வுக்கு உட்படுத்திக்கொண்டு அமெரிக்கா புறப்படும் வானூர்திக்குக் காத்திருந்தோம். 12.10 மணிக்குப் புறப்பட வேண்டிய வானூர்தி ஒரு மணி நேரக் காலத்தாழ்ச்சிக்குப் பிறகு நள்ளிரவு ஒரு மணியளவில் அமெரிக்கா நோக்கிப் பறந்தது. இரவுணவு உண்டோம். இரவு பகலாகப் பயணம் தொடர்ந்தது. பதினைந்து மணி நேரம் தொடர்ப்பயணம் செய்தோம். தில்லியில் நடு இரவில் புறப்பட்ட நாங்கள் வானூர்தியில் சிறிது கண்ணயர்ந்தோம்.

பின்னர் விழிப்பு வந்து வெளியே எட்டிப்பார்த்தபொழுது வெயில் சுட்டெரித்தது. அதன்பிறகு வான்வெளியில் வெளிச்சம் மட்டும்தான் தெரிந்தது. எங்கள் வானூர்தி டென்மார்க் உள்ளிட்ட நாடுகளின் மேல் பறந்ததாகச் சொன்னார்கள். பனிமூடிய மலைகளும் கடல்களுமாகக் காட்சியளித்தன. சங்க இலக்கியப்புலவர்கள் நிலத்தை நானிலமாகப் பிரித்தமையும் ஐவகையாகப் பிரித்தமையும் கற்ற எனக்கு இது என்ன பனியும் மலையும் கடலும் கலந்த புதுநிலமாக உள்ளதே என்ற நினைவு வந்தது. அவர்கள் பிரித்தமை தமிழகத்து நிலச்சூழல் எனினும் சங்கச் சன்றோர் எவரேனும் இக்காட்சி கண்டிருந்தால் இந்த நிலமும் பகுப்பு உள்ளாகியிருக்குமே என்ற நினைவுகளுடன் பயணம் செய்தேன். இடையில் சிறியஅளவில் கொறிப்புப் பண்டங்களைக் கொறித்தும், பழச்சாறுகளை அருந்தியும், பணிப்பெண்டிர் நல்கிய சிற்றுணவுகளை உண்டும் வந்தோம். பல்லைத் தூய்மைசெய்யாமல் உண்டபொழுதெல்லாம் என் அன்னையார் இளம் அகவையில் ஆடுமாடுகள் பல்விளக்கியா உண்கின்றது? என்று எங்களை இழித்துப் பேசியமை நினைவுக்கு வந்தது.

காலத்தாழ்ச்சியுடன் வானூர்தி புறப்பட்டாலும் வானூர்தி வலவனால் சரியான நேரத்திற்கு பாதுகாப்பாக வந்துசேர்ந்தது. எங்கள் வானூர்தி அமெரிக்காவின் புகழ்பெற்ற பன்னாட்டு வானூர்தி நிலையமான சான்கென்னடி வானூர்தி நிலயைத்துக்கு அமெரிக்க நேரப்படி 16.06.2011 காலை 6 மணிக்கு வந்தது(இந்திய நேரம் 16.06.2011 மாலை 3.30 மணி).
குடிவரவு அதிகாரிகளிடம் எங்கள் வருகையைப் பதிவுசெய்துகொண்டு உடைமைகளை எடுத்துக்கொண்டு ஒருமணி நேர இடைவெளியில் வெளியே வந்தோம். எங்களுக்குரிய சிற்றுந்து ஓட்டுநர் காத்திருந்தார். அவரை அடையாளம் கண்டு உடைமைகளை வண்டியில் ஏற்றி மூன்று மணி நேரம் பயணம் செய்து பென்சில்வேனியா வந்தோம்.

காலை நேரம் என்பதால் அனைவரும் அலுவலகம் செல்லும் சூழல். போக்குவரத்து நெருக்கடி சிறிதுதூரம் இருந்தது. மகிழ்வுந்துகள் காற்றைக் கிழித்துப் பற்றக்கின்றன. பேருந்துகள், சரக்குந்துகளைப் பாரக்கமுடியவில்லை. புதுவையிலும் சென்னையிலும் போக்குவரவு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் பறக்கும் இரண்டுசக்கரப் போராளிகளைப் பார்க்க முடியவில்லை. அமெரிக்க மக்கள் சட்டம் ஒழங்கை மதிப்பதையும் அவர்களின் உழைப்பையும் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். வானுயர்ந்த அடுக்கு மாடிக்கட்டடங்கள், குடியிருப்புகள் யாவும் திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளன.

விடுதிக்கு வந்து அனைவருக்கும் உரிய அறையில் பொருள்களை வைத்தோம். காலத்தாழ்ச்சியுடன் வந்ததால் எங்களுக்கு விடுதியில் காலையுணவு இல்லை. அருகில் இருந்த உணவு அங்காடிக்குச் சென்று இந்திய உணவுகளைத் தேடினோம். பன்றி, மாடு, மீன் என்று கறிவகைகளைப் பார்வைக்கு வைத்துள்ளனர். விரும்பிய உணவை வாங்கி உண்ணலாம். நாங்கள் ஒரு இந்திய-பாகீத்தான் உணவகம் சென்று அரிசி, மூக்குக்கடலை (கொண்டைக்கடலை), வெண்டைக்காய் கொண்ட உணவை 7.25 டாலருக்கு வாங்கி உண்டேன். அவரவர்களும் விருப்பமான உணவை உண்டு மீண்டும் விடுதிக்கு வந்தோம். நாங்கள் வந்த செய்தி அனைவருக்கும் மின்னஞ்சலில் தெரிவித்தேன்.அமெரிக்க நண்பர்கள் வரவேற்று மின்னஞ்சல் தந்தனர்.

பிறகு பென்சில்வேனியா பகுதியில் உள்ள கடைத்தெருக்கள், காட்சியகம், நீர் ஊற்று, சிலைகள் பலவற்றைக் கண்டு மகிழ்ந்தோம். திரு.மதன்கார்க்கி பல புகைப்படங்களை எடுத்தார். நானும் சிலவற்றைப் பதிந்துகொண்டேன். மீண்டும் விடுதிக்குத் திரும்பி இரவு உணவுக்குப் புறப்பட்டோம்.

இப்பொழுது வாழப்பாடி திரு. கூ. இராமமூர்த்தி ஐயா அவர்களின் மகனும், சென்னையில் கல்விசார்ந்த குறுவட்டுகளை வெளியிட்டு வருபவருமான் திரு.இரா.சுகந்தன் அவர்கள் எங்கள் குழுவில் இணைந்தார். இரவு உணவு உண்ணும்பொழுது மாலை ஆறு மணி என்றார்கள். நம் ஊர் நேரத்தைப் பார்த்தால் விடியற்காலம் நான்கு – ஐந்து என்றாக இருந்தது. உணவு உண்ண உடல் ஒத்துழைக்கவில்லை. இயன்றவரை உண்டு திரும்பினோம். இரவு தூங்கி ஆறுமணி நேரம் ஓய்வெடுத்து எழுந்த பொழுதுதான் உடல் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இரவு என் அறையில் திரு.இரா.சுகந்தன் அவர்கள் ஒன்றாகத் தங்கியதால் அவரின் கல்விசார்ந்த குறுவட்டு முயற்சிகளை அறிந்தேன்.

இன்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடக்கும் தமிழ் இணையமாநாட்டுக்குப் புறப்படும் முன்பாக நேற்றைய நிகழ்வுகளைப் பதிந்தேன். மாநாடு முடித்து மீண்டும் எழுதுவேன்.

அடுத்த பதிவில் நேற்று கண்ட காட்சிகளின் பதிவுப் படங்களைத் தருவேன்.

8 கருத்துகள்:

பா.சதீஸ் முத்து கோபால் சொன்னது…

வாழ்த்துக்கள்

போளூர் தயாநிதி சொன்னது…

உங்களின் விரிவான அமெரிக்கா பயணம் பற்றிய கட்டுரைகண்டேன் கனவுலகங்களுக்கு போவது ஒரு சிறப்பு என்றால் அதை சுவைபட எழுதுவது தனி சுவை அதையும் பித்து இன்புறுவது இருக்கிறதே அது அந்த நாடுகளுக்கு நேரில் சென்று பார்ப்பது போன்ற ஒரு நினைவை ஏற்படுத்தும் உங்கள் போன்றோரின் எழுத்து பாராட்ட கூடியதாகும் .

வேந்தன் அரசு சொன்னது…

வானூர்தி பணிப்பெண்களை நான் வளிச்செல்வி என்பேன். ஃப்ளைட் என்பதன் நேர் சொல் பறவை.

ராஜ்மோகன் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்கள் பணியை இனிதே நிறைவேற்றிவிட்டு நாடு திரும்ப வாழ்த்துக்கள்.

ராஜ்மோகன் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்கள் பணியை இனிதே நிறைவேற்றி நாடு திரும்ப வாழ்த்துக்கள்.

Umaraj சொன்னது…

மிக்க நன்றி

மாதேவி சொன்னது…

அமெரிக்கப் பயணம் இனிதாய்....

வாழ்த்துக்கள்.

ko.punniavan சொன்னது…

வாழ்த்துகள்.நல்ல பணி செய்து முடித்தீர்கள். தொடர்ந்து பணியாற்றவும்.
கோ.புண்ணியவான்