நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 20 மே, 2026

கணமழையா? கனமழையா?

 


 கோடை வெப்பம் மக்களைப் பெருந்துன்பத்துக்கு ஆளாக்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாகப் பெய்துவரும் மழையால் மக்கள் ஓரளவு வெப்பம் தணிந்து, குளிர்ச்சிபெற்று வருகின்றனர். மழை குறித்த செய்தியைத் தொலைக்காட்சிகளும் அச்சு ஊடகங்களும் உடனுக்குடன் சிறப்பாகத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கணமழை என்று எழுதுவதற்குப் பதிலாகப் பெரும்பாலான ஊடகங்கள் கனமழை என்று பிழையான வடிவத்தைப் பயன்படுத்துவதைக் காண நேர்ந்தது. பிழை வடிவம் மக்கள் பார்வையில் படும்பொழுது இவ்வாறுதான் எழுதவேண்டும் போலும் என்ற எண்ணம் தோன்றுவது இயற்கையாகும். எனவே தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகத்தார் கணமழை என்ற சரியான வடிவத்தைப் பயன்படுத்துமாறு அன்புடன் வேண்டுகின்றேன்

 கணமழை என்றால் மேகங்கள் திரண்டு, பெய்யும் மழை என்று பொருள். கணம் என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு. திரட்சி, கூட்டம் என அகரமுதலிகள் பொருள் தரும். கனம் என்ற சொல்லுக்குப் பாரம், எடை என்று பொருள்கள் உண்டு. 

 காலத்தால் பழைமையான நம் சங்க இலக்கியங்களுள் கணமழை என்று பல இடங்களில் ஆளப்பட்டுள்ளது. எ.கா. 

“கண மழை பொழிந்த கான் படி இரவில்” (அகம்.392 : 12)

“கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்” (அகம். 397: 5)

“அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ” (பதிற்றுப்பத்து, 17 : 11) 

எனவே, ஊடகத்துறையினர் “கணமழை” என்று பயன்படுத்தித் தமிழ்நலம் காப்பார்களாக!

முனைவர் இரா. கலியபெருமாள்

 

முனைவர் இரா. கலியபெருமாள் 

[முனைவர் இரா. கலியபெருமாள் அவர்கள் தஞ்சையை அடுத்த இராவுசாப்பட்டி என்னும் ஊரினர். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்பொழுது அக் கல்லூரியின் செயலராகத் தொண்டாற்றி வருபவர். தமிழ் இலக்கண- இலக்கியங்களை மனப்பாடமாகச் சொல்லும் பேராற்றல் பெற்றவர். கம்பராமாயணம், சிலப்பதிகாரம், புறநானூறு முதலிய நூல்களைப் பொது அரங்குகளில் வகுப்புகளாக நடத்தி, தமிழ் இலக்கியப் பரவலுக்கு வழிசெய்தவர். தமிழ்நாட்டரசின் இலக்கிய மாமணி விருது பெற்றவர்] 

பேராசிரியர் இரா. கலியபெருமாள் அவர்கள் தஞ்சையை அடுத்துள்ள இராவுசாப்பட்டி என்னும் ஊரில் வாழ்ந்த  க. இராசு - துளசியம்மாள் ஆகியோரின் மகனாக 05.12.1936 இல் பிறந்தவர் (தாது வருடம், கார்த்திகை மாதம், சனிக்கிழமை, பூரம் விண்மீன்). (சான்றிதழில் உள்ள பதிவு 01.07.1938). தொடக்கக் கல்வியைத் தம் பிறந்த ஊரான இராவுசாப்பட்டி தொடக்கப்பள்ளியில் படித்தவர். இவர்தம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் அண்ணாமலை ஆவார்.  ஆறாம் வகுப்பு  முதல் பதினொன்றாம் வகுப்பு வரை தம் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள வல்லம் என்னும் ஊரில் உள்ள பள்ளியில் படித்தவர்.

இரா. கலியபெருமாள் அவர்கள் கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்று வித்துவான் பட்டம் பெற்றவர். இவர் பயிலுங்காலத்தில் இவர்தம் ஆசிரியர் பெருமக்களாக விளங்கியவர்கள் ந. இராமநாதன், ச. பாலசுந்தரம், சி. கோவிந்தராசனார்,  தி. அடிகளாசிரியர், கு. சிவமணி, மு. சடகோப ராமானுசம் பிள்ளை முதலானவர்கள் குறிப்பிடத்தக்க சான்றோர் பெருமக்கள் ஆவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, தமிழாசிரியர் பயிற்சி பெற்றவர். தொலைதூரக் கல்வி வாயிலாக இளங்கலை (பி. லிட், கல்வியியல் இளையர் (பி. எட்), முதுகலை (எம். ஏ.), கல்வியியல் முதுவர் (எம்.எட்.) பட்டங்களைப் பெற்றவர். 

'தொல்காப்பிய உவமையியல் - ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து இளம் முனைவர் (எம். பில்.)  பட்டம் பெற்றவர். 'தொல்காப்பியப் பொருளதிகார உரைவேறுபாடு - அகத்திணையியல், புறத்திணையியல்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வாயிலாக முனைவர் பட்டம் பெற்றவர். 

இரா. கலியபெருமாள் அவர்கள் வடுவூர் தனியார் பள்ளியில் 14.11.1959 ல் ஆசிரியராகப் பணியில் இணைந்தவர். அதன் பிறகு மேல உழூர், வல்லம், ஈச்சங்கோட்டை, நாச்சியார்கோவில், வாண்டையார்இருப்பு முதலான ஊர்களில் அமைந்துள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 22.03.1963 முதல் 30.05.1997 வரை தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  பணி ஓய்விற்குப் பின் தஞ்சை ந. மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றி, இப்பொழுது அக்கல்லூரியின் செயலராகத் தொண்டாற்றி வருபவர். 

இரா. கலியபெருமாள் அவர்கள் க. இராசேசுவரி அம்மையார் அவர்களை 16.04.1964 இல் திருமணம் செய்துகொண்டவர்.

இரா. கலியபெருமாள் அவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் வெளிவரும் தமிழ்ப் பொழில் இதழில் பல கட்டுரைகளை எழுதியவர். தஞ்சாவூர் கம்பன் கழகத்தில் நிகழ்ந்த பல பட்டிமன்றங்களில், சொற்பொழிவுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய பெருமைக்குரியவர். தஞ்சாவூர் கம்பன் கழகம் சார்பில் கம்பராமாயண வகுப்புகளைப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தியவர். பெரியபுராணம், கலித்தொகை வகுப்புகளையும் தஞ்சையில் நடத்தி, இலக்கியப் பணியாற்றியவர். தஞ்சை உலகத் திருக்குறள் பேரவை சார்பில், புறநானூற்று வகுப்புகளை நடத்திச் சங்க இலக்கியப் பரவலுக்கு வழி சமைத்தவர். 

பல்வேறு கல்லூரிகளிலும், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் முதலான நிறுவனங்கள் நடத்திய இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியவர். தமிழகப் புலவர் கழகத்தின் உறுப்பினராகவும் தமிழ்த்தொண்டாற்றி வருபவர். 

தமது தொல்காப்பியம் பற்றிய ஆய்வு நூலைத் 'தொட்டனைத்தூறும் தொல்காப்பியம்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டவர். கோவையில் நடைபெற்ற செம்மொழித் தமிழ் மாநாட்டில் 'தொல்காப்பியர் உவமைகள்' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கியவர். 

தஞ்சாவூர் கம்பன் கழகத்தின் வழியாகச் செய்த தமிழ்ப்பணிகள்: 

1991 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை கம்பராமாயணம் முழுமயையும் பாடமாக நடத்தியுள்ளார் (369 வகுப்புகள்)

கலித்தொகை முழுவதும் பாடம் சொன்னது.

பெரியபுராணம் முழுவதும் பாடம் சொன்னது. 

உலகத் திருக்குறள் கழகத்தின் வழியாகச் செய்த தமிழ்ப்பணிகள்:

புறநானூறு முழுமையும் 222 வகுப்புகளில் பாடமாகச் சொன்னது.

சிலப்பதிகாரம் முழுமையும் பாடம் சொல்லத் தொடங்கி, அரங்கேற்று காதை வரை நடத்தி வருவது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியாகத் திங்கள்தோறும் திருக்குறள் வகுப்பு நடத்துவது.

திருச்சிராப்பள்ளி வானொலியில் எண்ணற்ற வானொலி உரைகள் வழங்கியுள்ளார்.

    சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், இராமாயணம், திருக்குறள், தனிப்பாடல்கள், இலக்கண நூல்கள் அவற்றின் உரைகளை முழுவதும் மனப்பாடமாக ஒப்புவிக்கும் ஆற்றல் பெற்றவர். தனிப்பாடல்களை நயம்படப் பொருள் உரைக்கும் புலமையர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பராசக்தி, மனோகரா, ராஜா ராணி முதலான பத்துத் திரைப்படங்களின் வசனங்களை முதல் காட்சித் தொடங்கி, முடிவுக் காட்சி வரை ஒப்புவிக்கும் ஆற்றல் பெற்றவர். 

    பாவேந்தர் பாரதிதாசன், கவியரசு கண்ணதாசன் கவிதைகளை மனப்பாடமாகச் சொல்லும் பேராற்றல் பெற்றவர். 

    பழநி சாது சுவாமிகள் திருமடத்தில் நடைபெறும் சிலப்பதிகாரக் கருத்தரங்கில் கடந்த பத்து ஆண்டுகளாகச் சொற்பொழிவு ஆற்றி, சிலப்பதிகாரத்துச் சீர்த்தியைப் பேசி வருபவர். 

இரா. கலியபெருமாள் அவர்கள் பெற்றுள்ள சிறப்புகளுள் சில: ·         தமிழ்நாட்டு அரசு வழங்கிய இலக்கிய மாமணி விருது (2021)

·         தஞ்சைச் சுழற்சங்கம் வழங்கிய தமிழ்ப் பேராசான் விருது

·         திருவையாறு ஔவைக் கோட்டம் வழங்கிய ஔவை விருது

·         வாண்டையார் விருது

·         தஞ்சை சதய விழாக் குழுவினர் வழங்கிய மாமன்னன் இராசராசன் விருது

·         தஞ்சை உலகத் திருக்குறள் பேரவை வழங்கிய குறள் நெறிச் செம்மல் விருது

·         தஞ்சாவூர் திருவருள் பேரவை அளித்த 'கம்பர் சீர் பரவுவார்' பட்டம்

·         வெற்றித் தமிழர் பேரவை வழங்கிய கவிஞர் திருநாள் விருது, 2008

·         தி.மு.க. இலக்கிய அணி அளித்த 'தமிழவேள் கலைஞர் இலக்கியப் பொற்கிழி விருது' 2011

·         தமிழகப் புலவர் குழுவின் தொல்காப்பியர் விருது

·         இரகுநாத இராசாளியார் விருது

·         தஞ்சை சுழற்சங்கத்தின் மண்ணின் சிறந்த தமிழறிஞர் விருது

·         வாழ்நாள் சாதனையாளர் விருது

·         ஐந்தாம் ஜார்ஜ் நினைவுப் பரிசு – வித்துவான் தேர்வு முதல் மதிப்பெண், 1958

·         சித்பவானந்தா கழகப் பரிசு, 1958

·         திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பரிசு, 1957

·         ந.மு.வேங்கடசாமி நாட்டார் நினைவுத் தங்கப் பதக்கம், 1958

·         தொல்காப்பியச் செம்மல், உலகத் தொல்காப்பிய மன்றம், 2025

(குறிப்பு: முனைவர் இரா. கலியபெருமாள் அவர்களின் தொண்ணூறாம் அகவை விழாவினை அவர்தம் மாணவர்களும், நண்பர்களும் தஞ்சையில் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துவருகின்றனர்).



முனைவர் இரா. கலியபெருமாள் அவர்களின் செவ்வி - காணொளி

ஞாயிறு, 3 மே, 2026

மலேசியாவில் வாழ்ந்த சொ. மாணிக்கம் ஐயா மறைவு!

 

மலேசியாவில், தெலுக் பங்ளிமா கராங்கு என்னும் ஊரில் வாழ்ந்து வந்த என் அருமை நண்பர் சொ. மாணிக்கம் அவர்கள் 02.05.2026 அன்று இயற்கை எய்திய செய்தியறிந்து பெருந்துயர் உற்றேன். நான் மலேசியாவுக்குச் செல்லும்பொழுது என் நெருங்கிய நண்பர்களுடன் உடன் வந்து, வானூர்தி நிலையத்தில் வரவேற்று, உரிய இடத்துக்கு அழைத்துச் செல்வதில் ஆர்வமுடன் துணைநிற்பவர். அதுபோல் வழியனுப்புவதிலும், அங்கு நடைபெறும் எமக்கான விழாக்களில் கலந்துகொள்வதிலும் பேரீடுபாடு காட்டுபவர். உற்றுழி உதவிய உயர்பெருந்தகையை இழந்து, கையற்றுக் கலங்குகின்றேன். அன்னாரை இழந்துவருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். 

திருவாளர் சொ. மாணிக்கம் ஐயா அவர்கள் 07.04.1950 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் சொக்கலிங்கம், மாரியம்மாள் ஆவர். தொடக்கத்தில் தோட்டத்தொழிலில் ஈடுபட்டு, படிப்படியாக உழைத்து முன்னேறித் தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிறைவுக்காலத்தில் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைந்து, பல்வேறு சமூகப்பணிகளைச் செய்துவந்தவர். பிறருக்கு உதவுவதையும், துணை நிற்பதையும் தமது இயல்பாக அமைத்துக்கொண்ட பேருள்ளம் பெற்றவர். 

நற்குடும்பம் பேணி, நிறைவாழ்வு வாழ்ந்து, சுற்றம் சூழ வாழ்ந்த சொ. மாணிக்கம் ஐயாவின் பெருமைமிகு வாழ்வை என்றும் நன்றியுடன் நினைவுகூர்வோம்!


வலப்புறக் கடைசியில் அமர்ந்திருப்பவர் திரு. சொ. மாணிக்கம் (கோப்புப் படம்)

புதன், 22 ஏப்ரல், 2026

சிங்கப்பூர், கவிமாலையின் காப்பாளர் மா. அன்பழகன் மறைவு

 


    சிங்கப்பூரில் தமிழ்ப் பற்றுடனும், படைப்பாற்றலுடனும் வாழ்ந்து, கவிமாலை என்னும் இலக்கிய அமைப்பின் வழியாகச் சிங்கப்பூர் எழுத்தாளர்களை ஒன்று திரட்டித் தமிழ்ப்பணியாற்றி வந்த அண்ணன் கவிமாலை மா. அன்பழகனார் அவர்கள் இன்று (22.04.2026) இயற்கை எய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். கடந்த பல நாட்களாக அண்ணன் மா. அன்ழகனார் அவர்கள் உடல்நலம் குன்றி, மருத்துவம் பார்த்து வந்த செய்தியை அன்பர்கள் வழியாக அறிந்து வருந்திக்கொண்டிருந்தேன். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகம் கையற்றுக் கலங்குமாறு அண்ணனின் மறைவு அமைந்துவிட்டது. அண்ணாரைப் பிரிந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

    மா. அன்பழகனார் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர்; அரங்கு வழிநடத்துநர்; கவிஞர்: புதின ஆசிரியர்: தன்முனைப்பு நூல்களின் ஆசிரியர்; சிறுகதை ஆசிரியர்; சிறுவர் நூல்கள் படைத்தவர்; திரைத்துறை ஈடுபாட்டினர்; உயர்ந்த பண்புகள் பலவற்றைக் கொண்ட பெருந்தகையாளர் ஆவார். 

    அன்பழகன் என்னும் இவரின் பெயர் காரணப் பெயர் என்பேன். அன்பும் இவரிடம் உண்டு; அழகும் இவரிடம் அடைக்கலம். இவர் ஓர் இலக்கிய ஆலமரம். இத் தமிழாலமரத்தின் அடியில் தங்கி, இலக்கியம் கற்றவர்களும் உரையாடியவர்களும் கணக்கிலர். கவிதைச் சிறகுகளை வளர்த்துக்கொண்டு இலக்கியவான் பரப்பில் இட வலமாகச் சுற்றிப் பறப்பவர்கள் பலரை அறிவேன். இளம் பாவலர்களை ஊக்குவிக்க எண்ணற்ற வழிகளைக் கண்டவர். இவர் நடத்தும் இலக்கிய அரங்குகள் நேரம் தவறாமல் தொடங்கப்பட்டு, எதிர்பார்த்தவாறு நிறைவுறும். ஓர் இராணுவத் தளபதிக்கு உரிய திட்டமிடலும், ஒரு தாயைப் போலும் அரவணைத்துச் செல்லும் கருணை உள்ளமும் கொண்டவர். எம் போலும் புதியவர்களுக்கும் நிழல் தந்து, இளைப்பாறிச் செல்ல இடம் தந்தவர். 

    பத்தாண்டுகளுக்கு முன்னர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்தைச் சிங்கப்பூரில் திரையிடுவதற்கு அண்ணன் செய்த உதவியையும், ஈழத்து அறிஞர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தைத் திரையிடுவதற்கு அண்ணன் செய்த உதவியையும் யானும் என் குடிவழினரும் என்றும் நினைவுகூர்வோம். அதுபோல் என் நூல்களை வெளியிட்டு, சிங்கப்பூர் இலக்கியவாணர்களுக்கு என்னை மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்த அந்தப் பெரும்பண்பை நினைக்கும்பொழுது கண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. அருகில் அமர்த்தி, உணவருந்தச் செய்து, வானூர்தி நிலையத்துக்கு என்னை வண்டியில் ஏற்றிக்கொண்டு, வலவனாக வந்து வழியனுப்பிய அந்த “அன்புக்கு” யாது கைம்மாறு ஆற்றுவேன். 

    சிங்கப்பூருக்கு நான் செல்லும் பொழுது ஒவ்வொரு முறையும் எங்களின் இளைஞர் பட்டாளத்துக்கு ஈடுகொடுத்து, நடுவண் அமர்ந்து இனிய உரையாடலை வழிநடத்தும் அந்தப் பொழுதுகள் ஒவ்வொன்றாக நினைவில் வந்து மோதுகின்றன. 

    சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்புலகம் இன்று தன் தலைமகனை இழந்து நிற்கின்றது. சிங்கப்பூர்ப் படைப்பாளிகள் தங்களின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரை இழந்து பெருந்துயர் சுமந்து நிற்கின்றனர். இலக்கிய வானில் ஒரு விடிவெள்ளியாய் மா. அன்பழகனாரின் புகழ் நிலைபெற்றிருக்கும். 

    புதுமைத்தேனீ மா. அன்பழகனாரின் வாழ்வியலை இந்நேரத்தில் நினைவுகூர்கின்றேன். 

    மா. அன்பழகன் அவர்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் என்னும் ஊரில் வாழ்ந்த திருவாளர்கள் மாசிலாமணி, செல்லம்மாள் ஆகியோரின் பதின்பிள்ளைகளுள் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர். பிறந்த ஊரில் பள்ளிப்படிப்பும், அதிராம்பட்டினம், கும்பகோணம், சென்னையில் மருத்துவக்கல்லூரியில் படித்திருந்தாலும் இவர்தம் பட்டப்படிப்பு முற்றுப்பெறாமல் போனது

    1971 ஆம் ஆண்டு மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டவர். இவரின் இல்லறத் துணைவியார் திருவாட்டி திலகவதியார் ஆவார். இவர்களின் இல்லறப் பயனாகச் செல்வம், இராமையா என்னும் ஆண்மக்களைப் பெற்றனர். இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களிடம் பதினைந்து படங்களுக்கு மேல் துணை இயக்குநராகப் பணிபுரிந்த பெருமைக்குரியவர். பாத பூஜை, புது செருப்பு கடிக்கும் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்

    மாண்புமிகு தமிழக முதல்வராக விளங்கிய ஜெ. ஜெயலலிதா அவர்கள் திரைத்துறையில் புகழுடன் விளங்கிய சூழலில் அவரை நாயகியாக வைத்துக் குறும்புக்காரி எனும் படத்தைத் தயாரித்து, பாதியிலேயே படத்தை நிறுத்தவேண்டிய சூழ்நிலை அக்காலத்தில் ஏற்பட்டுவிட்டது. எனினும் புரட்சித் தலைவி அவர்கள் தம் நூறாவது பட விழாவின்போது, படமெடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்கிற முறையில் நினைவுப் பரிசு வழங்கி இவரைப் பாராட்டியுள்ளார்

    1994 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தங்கி வணிகம் செய்யத் தொடங்கினார். பின்னாளில் முழுநேர இலக்கியப்பணியாற்றியவர். 

    கவிமாலை என்னும் இலக்கிய அமைப்பின் வழியாகச் சிங்கப்பூரில் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ்க்கலைக்கும் தொண்டாற்றியவர்

    மா.அன்பழகன் அவ்வர்களின் கவிதை ஈடுபாட்டை அறிந்த உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் இவருக்கு 1990 இல் கிருட்டினகிரியில் நடைபெற்ற  உலகக் கவிஞர் மன்றத்தின் சார்பில் இவருக்குக்  "கவிமாமணி" பட்டம் வழங்கிச்  சிறப்பித்தார்

    மா.அன்பழகன் அவர்களின் நூல்கள் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவர்தம் படைப்புகளை ஆய்ந்து பலர் பட்டம்பெற்றுள்ளனர்

    இவர் எதனையும் புதுமையாகவும் மக்கள் ஏற்கும் வண்ணமும் செய்வதால் இவருடைய 60 ஆம் ஆண்டின் நிறைவு   விழாவின்போது "புதுமைத்தேனீ" என அன்போடு அழைக்கப்பட்டார். அதுவே அவருடைய செயற்பாட்டால் இன்றும் நிலைத்து நிற்கிறது. வாழ்வில் நேர்மையையும் சிந்தனையில் புதுமையையும், செயலில் உண்மையான உழைப்பையும், கொண்டவர். மக்களுக்குப் பயன்படும் பொதுநலச் சேவையும், அன்பான மனித நேயப் பண்புகளும் இவருடைய இனிய குணங்கள்

 மா. அன்பழகன் அவர்களின் தமிழ்க்கொடை

1.       சமுதாயச் சந்தையிலே.... .....கட்டுரை - 1985

2.       அலைதரும் காற்று..............கவிதை

3.       ஜூனியர் பொன்னி.............புதினம்

4.       மடிமீது விளையாடி..............புதினம்

5.       இதில் என்ன தப்பு...............திரைக்கதை வடிவம்

6.       அந்தப் பார்வையில்...............புதினம் - 1987

7.       பழமும் பிஞ்சும்.....................சிறுவர் இலக்கியம்                                                     

8.       ஒன்றில் ஒன்று.....................கவிதை(ஆங்கில மொழிமாற்றத்துடன் ) 2003

9.       இப்படிக்கு நான் ...................படச்சுவடி

10.   விடியல் விளக்குகள்............. சிறுகதைகள் 2005

11.   உடன்படுசொல் ....................மேடைப் பேச்சு 2006

12.   இன்னும் கேட்கிற சத்தம்       பதிவு(உரை வீச்சு) 2007

13.   ஆயபுலம் ............................புதினம் 2009

14.   என்பா நூறு .......................வெண்பா

15. BUBBLES OF FEELINGs...சிறுகதைகள்

16.   திரையலையில் ஓர் இலை .......கட்டுரை

17.   என் வானம் நான் மேகம் ........சிறுகதைகள் 2010

18.   BEYOND THE REALM..........சிறுகதைகள் 2011

19.   கவித்தொகை ........................கவிதை – 2012

20. எர்கு திரைப்படத்திற்கான கதை

21. ERHU – Story Translation

22. பாதிப்பில் பிறந்த பாடல்கள்

23. புதுமைத்தேனீ சிறுகதைகள்

24. வாய்க்கால் வழியோடி – மேடைப்பேச்சுகள்

25. ஆயிழையில் தாலாட்டு அளித்த அணிந்துரைகள்

26. கூவி அழைக்குது காகம்....மாணவர் கடித இலக்கியம்தொகுதி 1

27.   கூவி அழைக்குது காகம்....மாணவர் கடித இலக்கியம் - தொகுதி 2

28. கூவி அழைக்குது காகம்....மாணவர் கடித இலக்கியம்  - தொகுதி 3

29. காதல் இசைபட வாழ்தல் – புதினம்

30. அடுத்த வீட்டு ஆலங்காற்று - கவிதை

31. அன்புக்கு அழகு 75 பவளவிழா மலர்

32. சிங்கப்பூர் சொல்வெட்டு 555 வரலாற்று விருத்தப்பா

33. டுரியானுள் பலாச்சுளை - சிறுகதைகள்

34. கூவி அழைக்குது காகம்....மாணவர் கடித இலக்கியம்தொகுதி 4

35. மேகம் மேயும் வீதிகள் – கவிதைகள்

36. ஐம்பதிலும் வாழ்க்கை வரும் – தன்முனைப்புக் கட்டுரைகள்

37. செம்பியன் திருமேனி - சரித்திரப் புனைவுப் புதினம் 

 

மா. அன்பழகனாருடன் மு.இளங்கோவன், பேராசிரியர் சுப. திண்ணப்பன், அண்ணன் ஹனிபா, சிங்கப்பூர் முன்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தினகரன் (விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு - (கோப்புப் படம்)


 

செவ்வாய், 24 மார்ச், 2026

பாடிப் பழகுவோம் – தமிழிசைப் பயிலரங்கம்

 

நிறுவன இயக்குநர் முனைவர் சசிகாந்த தாஸ் அவர்கள், முனைவர் தி. பாலச்சந்தர் ஓதுவார் அவர்களைச் சிறப்பித்தல். அருகில் முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், முனைவர் கா. இராசமாணிக்கம், முனைவர் மு.இளங்கோவன்
 

புதுச்சேரி, இலாசுப்பேட்டையில் அமைந்துள்ள காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள தமிழ்த்துறையின் சார்பில் 18.03.2026 – 19.03.2026 ஆகிய இரண்டு நாள்களும் பாடிப் பழகுவோம்தமிழிசைப் பயிலரங்கம் நடைபெற்றது. 

நிறுவன இயக்குநர் பேராசிரியர் சசிகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. இளங்கோவன் அனைவரையும் வரவேற்று, தமிழிசைப் பயிலரங்கத்தின் நோக்கத்தினை எடுத்துரைத்தார். சிலப்பதிகாரப் பதிகப் பகுதிக்கு அடியார்க்குநல்லார் வரைந்துள்ள உரைப்பகுதியில் பண்டைத் தமிழிசையின் இலக்கணப் பகுதிகள் விளக்கப்பட்டுள்ளதைத் தம் நோக்கவுரையில் நினைவுகூர்ந்தார். இப்பதிகவுரையைக் கற்றுத் தேர்ந்து, அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் தம் இசையாய்வை மேற்கொண்டதை அரகில் நினைவுகூர்ந்தார். 


முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் உரை

 இசையறிஞர் அரிமளம் சு. பத்மநாபன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமிழிசை வரலாற்றினையும், சிறப்பினையும் எடுத்துரைத்து அரியதொரு இசைப் பேருரை வழங்கினார். இவர் உரையில் தொல்காப்பியம் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சித்தர் பாடல்கள், சிற்றிலக்கியங்கள், பல்சமயப் பாடல்களில் மிகுதியாகக் காணப்படும் இசைப்பகுதிகளைச் சான்றுகளுடன் விளக்கினார். தமிழிசை மூவர் அளித்துள்ள தமிழிசைப் பங்களிப்புகளையும் எடுத்துரைத்துப் பேசினார். தொடக்க விழாவின் நிறைவில் முனைவர் மா. சுஜாதா நன்றியுரை வழங்கினார்.



பாடிப் பழகுவோம் – தமிழிசைப் பயிலரங்கின் முதல் சிறப்பு அமர்வில் கலைமாமணி கா. இராசமாணிக்கம் குழுவினர்  பாரதியார், பாரதிதாசன், புதுவைச் சிவம், வாணிதாசன், பெருஞ்சித்திரனார், தமிழ் ஒளி, தங்கப்பா பாடல்களையும் பல்சமயப் பாடல்களையும் பாடி மாணவர்களுக்கு இசைத்தமிழின் சிறப்பினைப் புரியவைத்தனர். வயலின் கலைஞர் சீனிவாசன் அவர்களும், நாமுழவுக் கலைஞர் அழகு. இராமசாமி அவர்களும், தண்ணுமைக் கலைஞர் பரத் அவர்களும் மிகச் சிறந்த இணையிசையை வழங்கினர்.

 

முனைவர் தி.பாலச்சந்தர் ஓதுவார்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தேவாரப் பேராசிரியர் குமாரவயலூர் தி. பாலச்சந்தர் ஓதுவார் திருமுறைகளில் காணப்படும் இசைச்சிறப்புகளைப் பண்முறையில் பாடி விளக்கினார். திருமுறைகளின் சிறப்புகளையும், அடியார்களின் இசைப்பணிகளையும் சமயப் பணிகளையும் மாணவர்களுக்கு எளிமையாக அறிமுகம் செய்துவைத்தார். பிற்பகல் அமர்வில் அரிமளம் சு. பத்மநாபன் அவர்கள் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இசைப்பகுதிகளைப் பாடி, விளக்கி உரையாற்றினார். மங்கல வாழ்த்து, கானல்வரி, கந்துக வரிப் பாடல்களைப் பாடி விளக்கியமை அரங்கினருக்கு இசைத்தமிழில் ஈடுபாட்டினை வரச் செய்ததது.

 

முனைவர் சிவகௌரி அவர்களின் உரை

இரண்டாம் நாள் நடைபெற்ற நிகழ்வில் முனைவர் சிவகௌரி கிரிஷ்குமார் அவர்கள் முதல் அமர்வில் சங்கப் பாடல்கள், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியும் விளக்கியும் தம் இசைப் பேருரையைச் சிறப்பாக அமைத்தார்கள்.

 

ப.தி. சேஷாத்ரி உரை

சென்னையச் சேர்ந்த திரு. ப. தி. சேஷாத்ரி அவர்கள் ஆழ்வார் பாசுரங்களின் சிறப்புகளை எடுத்துரைத்தும் அதில் பொதிந்திருக்கும் இசைப் பெருமைகளைப் பண்மரபில் பாடிக் காட்டியும் மாணவர்கள் உள்ளத்தில் பாசுரத் தமிழைப் பதியவைத்தார்.


பறையிசைக் கலைஞர் பிரசாந்த் குழுவினர்

பறையிசைக் கலைஞர் பிரசாந்த் அவர்கள் தம் குழுவினருடன் பறையிசையை முழக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

முனைவர் சித்தன் செயமூர்த்தி உரை

முனைவர் சித்தன் செயமூர்த்தி அவர்கள் மண்ணிசை மாண்பினை எடுத்துரைத்து மக்கள் வாழ்வில் உணர்வு ததும்பும் பாடல்கள் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பாடிக்காட்டி விளக்கினார். செயமூர்த்தி அவர்கள் பனை மரம் குறித்த செயபாஸ்கரன் எழுதிய பாடலையும் பெருஞ்சித்திரனார் பாடல்களையும், அப்பா, அம்மா குறித்துத் தற்காலக் கவிஞர்கள் எழுதியுள்ள பாடல்களையும் அரங்கில் பாட, அனைவரும் ஆர்வமுடன் கேட்டனர். சில திரைப்படப் பாடல்களையும் பாடி, மாணவர்கள் உள்ளத்தில் செயமூர்த்தி இடம்பிடித்தார்.

 

முனைவர் இரகுநாத் மனே உரை

முனைவர் சசிகாந்த தாஸ் அவர்கள் சான்றிதழ் வழங்குதல். அருகில் முனைவர் சோ. சீனிவாசன், முனைவர் இரகுநாத் மனே.

பிரான்சிலிருந்து வருகைபுரிந்த செவாலியே, முனைவர் இரகுநாத் மனே இசை, பரதக் கலை மாண்புகள் குறித்த சிறப்புரையை வழங்கினார். நிறைவு விழாவில் நிறுவன இயக்குநர் முனைவர் சசிகாந்த தாஸ், அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் முன்னை முதல்வர் முனைவர் சோ. சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு, பயிலரங்கில் கலந்துகொண்டவர்களுக்குச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டிப் பேசினர். இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள், பிற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள், புதுவைத் தமிழறிஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.