நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 பிப்ரவரி, 2015

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடல்


  
  பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் இன்று சென்னையில் திரையிடப்பட உள்ளது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், தமிழிசை ஆர்வலர்கள், பண்ணாராய்ச்சி வித்தகர்மேல் பற்றுடைய அன்பர்கள் வந்து மகிழ்வூட்டலாம்.

நாள்: 28.02.2015 (சனிக்கிழமை) மாலை 6:30மணி

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7

கருத்துரை:

"இன்னிசை ஏந்தல்" திருபுவனம் கு.ஆத்மநாதன்

திரு. கோவி.லெனின்

"நிழல்" திரு. திருநாவுக்கரசு

ஏற்புரை:  முனைவர் மு.இளங்கோவன் 


ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை

புதன், 25 பிப்ரவரி, 2015

பட்டுக்கோட்டை முத்தமிழ் மாமன்றம் நடத்தும் திருவள்ளுவர் - கம்பர் இலக்கிய விழா



பட்டுக்கோட்டையில் முத்தமிழ் மாமன்றம் எனும் அமைப்புத் தொடங்கப்பட்டு அதன் இலக்கிய விழா 26.02.2015 வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் தமிழ்ப்பற்றாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்கலாம்.

இடம்: இராஜா மகால், சீனிவாசபுரம், பட்டுக்கோட்டை

நாள்: 26.02.2015 வியாழக்கிழமை

தலைமை: மருத்துவர் சி. வெ. பத்மானந்தன் அவர்கள்

வரவேற்புரை: திரு. கவிக்கோட்டை அம்பிதாசன் அவர்கள்

முன்னிலை:

சிவத்திரு. சுந்தர்லால் அவர்கள்
திரு.பொன்மழை சுந்தரசபாபதி அவர்கள்
திரு.. பன்னீர்செல்வம் அவர்கள்
திரு.இரா. பிரகாசம் அவர்கள்
திரு. நா. வீரபாண்டியன் அவர்கள்
திரு. .பார்த்திபன் அவர்கள்

இலக்கிய விழாவைத் தொடங்கிவைத்துச் சிறப்புரை:
முனைவர் மு.இளங்கோவன்

திரு. முத்து. இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் வள்ளுவனே மீண்டு வா என்ற தலைப்பில் கவியரங்கமும், திரு. கோ. இராசப்பா அவர்கள் தலைமையில்  வள்ளுவன் வகுத்த அறநெறியில் வாழ்ந்து காட்டிய பாத்திரம் இராமனே! ராவணனே! என்ற தலைப்பில் பட்டிமண்டபமும் நடைபெற உள்ளன.

பட்டுக்கோட்டை சத்யா உள்ளிட்ட தமிழ்த்தொண்டர்களால் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலக்கிய ஆர்வலர்களைப் பட்டுக்கோட்டை முத்தமிழ் மாமன்றம் அழைத்து மகிழ்கின்றது.


செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் குறித்துப் பேராசிரியர் மருதூர் அரங்கராசனாரின் மதிப்புரை



அரங்க. சண்முகன்அரங்க. சரவணன்பெயரன் சரவண. முகிலன், பேராசிரியர் மருதூரார், மு.இளங்கோவன், செ.செல்வம்


  இளம் தமிழறிஞர், நண்பர், பேராசிரியர், முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் எழுதி இயக்கிய  'பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார்' குறித்த ஆவணப்படத்தைக் காண்கின்ற அரிய வாய்ப்பு எனக்கு அமைந்ததை எண்ணி மகிழ்கின்றேன்.

  ஓர் ஆவணப்படம் எவ்வாறு எடுக்கப்படல் வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக / வழிகாட்டியாகக்கூட இதனைக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.

  ஏழிசைத் தலைமகனார், பண்ணிசை வித்தகர், தமிழிசைத் தோன்றல் குடந்தை . சுந்தரேசனார்க்கு இந்த ஆவணப்படத்தைவிடச் சிறந்த நினைவாலயம் / மணிமண்டபம் இருக்கமுடியாது என்கிற உணர்வையே படத்தைப் பார்க்கின்ற அனைவரும் பெறுவர் என்றுஉறுதியாக நம்புகிறேன்.

  தமிழிசைப் போராளி - பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தையாரை நேரில் பார்த்தவர்கள், அவரோடு நெருங்கிப் பழகியவர்கள், அவருடைய தமிழிசைப் பொழிவைக் கேட்டுச் சுவைத்தவர்கள், அவரை முழுமையாகப் பயன் கொண்டவர்கள் - எனப் பல்லோரையும் அடையாளம் கண்டு, அவர்களைத் தேடி, அவரவர்கள் இருக்கும் ஊர்களுக்கே சென்று, குடந்தையாரைப் பற்றிய அச்சான்றோர்களின் கருத்துகளை - அனுபவங்களை அவர்களின் குரல்களிலேயே பதிவு செய்து, அவற்றை ஆவணப்படத்தில் - உரிய இடத்தில் இடம்பெறச்செய்து, ஆவணப்படத்தைத் தொய்வில்லாமல் நடத்திச் சென்றுள்ள முனைவர் மு. இளங்கோவன் தமிழ்கூறு நல்லுலகத்தின் உளமார்ந்த பாராட்டுக்கும், மனமார்ந்த நன்றிக்கும்உரியராகிறார்.

  பேராசிரியர் மா. வயித்திலிங்கன், ஆடுதுறை வி.வைத்தியலிங்கம், பேராசிரியர் மு. இளமுருகன், பூம்புகார் இரா. இராசசேகரன், பூம்புகார் புலவர் நா. தியாகராசன், சிந்தனைச்செம்மல் ஔவை நடராசன், சிலம்பொலி சு. செல்லப்பனார், பேராசிரியர் முனைவர் அங்கயற்கண்ணி இளமுருகன், புதுவை சுந்தர இலட்சுமி நாராயணன், அரிமளம் சு. பத்மநாபன், திருமழபாடி மா. திருநாவுக்கரசு, தவத்திரு ஊரன் அடிகளார், மருதூர் அரங்கராசன்  - போன்ற பல்வேறு தமிழறிஞர்களும் தமிழ்ச்சான்றோர்களும் இசையன்பர்ளும் தமிழுணர்வாளர்களும் பண்ணாராய்ச்சி வித்தகரோடு தத்தமக்கு ஏற்பட்ட   அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

  அறிஞர்களின் கருத்துகள், அக்கருத்துகளை ஒட்டிய பண்ணாராய்ச்சி வித்தகரின் தமிழிசைத் தேன் பாடல்கள், அப்பாடல்களுக்கேற்ற இயற்கைக் காட்சிகள், அக்காட்சிகளோடு இயையும்படியான நாட்டியங்கள், தேவையான இடங்களில் பொருத்தமான ஓவியங்கள் - என்று கண்ணுக்கும் கருத்துக்கும் செவிக்கும் தெவிட்டாத விருந்தாக ஆவணப்படத்தை உருவாக்கி நீங்காப் புகழ் கொண்டார் புதுவை மு. இளங்கோவன்.

  சங்க இலக்கியம், சமய இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம் - ஆகியவற்றில் காணப்படும் தூய தமிழிசையை மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் குடந்தை . சுந்தரேசனார் என்பதை நமக்கு உரிய முறையில் காட்டியுள்ளார் இயக்குநர் மு. இளங்கோவன்.

  திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், யாழ் நூல் விபுலானந்த அடிகளார், அருட்செல்வர் வள்ளல் . மகாலிங்கனார், நீதியரசர் செங்கோட்டு வேலனார், கோவை . வரதராஜுலு நாயுடு, .சுப. மாணிக்கனார் - போன்ற எண்ணற்ற தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் குடந்தையாரின் இசையில் திளைத்து, அவரைப் பாராட்டியமையையும் ஆவணப்படம் பதிவு செய்யத் தவறவில்லை.

  தம்முடைய மாணவர் ஒருவர், அவருடைய தந்தையாரின் மரணச்செய்தி கேட்டு, சொல்லொணாத் துயருடன், இறுதிச் சடங்கிற்கான செலவுக்குக்கூடப் பணமின்றி அல்லலுறுவதைக் கண்டு, இரக்கமுற்று, அவரை அழைத்து, சற்றுமுன் தம்முடைய இசைப் பேருரைக்குச் சன்மானமாகக் கிடைத்த தொகை ரூ. 35/- ( இன்றைய மதிப்பில் தோராயமாக ரூ. 10,000/-) முழுவதுமாக அவரிடத்திலே கொடுத்துவிட்டு, பேருந்துக் கட்டணத்துக்குக்கூடக் கையில் காசில்லாமல், குடந்தை . சுந்தரேசனார்  தஞ்சையிலிருந்து குடந்தைக்கு நாற்பது கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றார் என்கிற செய்தியை அறிகிறபோது, அவருடைய மனித நேயத்தை எண்ணி நெஞ்சம் நெகிழாமல் இருக்க முடியவில்லை; கண்கள் குளமாவதைத் தடுக்க முடியவில்லை.

  பண்ணாராய்ச்சி வித்தகரைப் பணிகொண்ட நிறுவனங்கள், அவர் தொடரிசைப்பொழிவு நிகழ்த்திய மன்றங்கள், இயற்றியளித்த நூல்கள், வழங்கியருளிய ஆய்வுக்கட்டுரைகள் - எனப் பலவற்றையும் முழுமையாகக் குறிப்பிட்டு, சுந்தரேசனாரின் வாழ்க்கையை நிறைவாகத் தருகிறார் இயக்குநர் புதுவை மு. இளங்கோவன்.

  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலாகிய நால்வகை நிலங்களையும் தத்ரூபமாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்திய ஒளிப்பதிவாளரையும், பிசிரில்லாமல் பண்ணாராய்ச்சி வித்தகரின் குரலை - அவர் காலத்தில் நேரில் கேட்ட உணர்வு தோன்றுமாறு - பதிவு செய்திட்ட ஒலிப்பதிவாளரையும், இசைக்கும் காட்சிக்கும் இயைய அருமையான நாட்டியத்தைத் தந்திட்ட நாட்டியக்கலைஞரையும், பொருத்தமான இடங்களில் நேர்த்தியான ஓவியங்கள் மூலம் வரலாற்றை நகர்த்திச் செல்ல உதவியுள்ள ஓவியரையும், ஆவணப்படம் பார்க்கின்றோம் என்கிற உணர்வே இல்லாமல், அழகிய குறும்படம் பார்க்கும் உணர்வைத் தோற்றும் வண்ணம் படத்தைத் தொய்வில்லாமலும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்லத் துணை நிற்கும் படத்தொகுப்பாளரையும், இவற்றுக்கெல்லாம் வியூகம் அமைத்துக் கொடுத்த படத்தின் இயக்குநரையும் எத்துணைப் பாராட்டினாலும் தகும்.

  குடந்தையாரின் சிலை செய்வதில் படம் தொடங்குகிறது; அச்சிலைக்குக் கண் திறப்பதில் படம் நிறைகிறது. இப்படத்தால் தமிழர்களின் கண் திறக்கும் என்பது உறுதி.

  தமிழிசையே உலகின் முதலிசை' என்பதைச் சான்றுகளோடு ஊர் ஊராய்ச் சென்று உரக்கக் கூறி நிறுவிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனாரின் குரலைத் தாங்கி நின்ற ஒலி நாடாக்களைத் தேடித்தேடி அலைந்து தொகுத்த கடும் உழைப்பு, அவருடைய வாழ்வோடு தொடர்புடைய சான்றோர்களைத் தேடிக் கண்டு, அவர்களின் கருத்துகளைப் பதிவு செய்ய மேற்கொண்ட அயரா முயற்சி, குடந்தை .சுந்தரேசனார் 'ஒரு தக்கார்' என்பதை இந்த ஆவணப்படம் என்கிற 'எச்சத்தால்' காட்டிய உள்ளார்ந்த தமிழுணர்வு, படம் நிறைவு பெறத் துணை நின்ற அத்துணை அன்பர்களையும் மறவாமல் நினைவு கூர்ந்துள்ள நன்றிப் பெருக்குஎனப் பல்லாற்றானும் உயர்ந்து நிற்கிறார் படத்தின் இயக்குநர், இளம் தமிழறிஞர், பேராசிரியர், புதுவை முனைவர் மு. இளங்கோவன். அவருடைய சாதனையை நினைத்தொறும் நினைத்தொறும் 'வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே' என்னும் புறநானூற்று அடிகளே நினைவுக்கு வருகின்றன.

  இயன்றால், ஆங்கிலக் குறிப்புகளோடும் இந்த ஆவணப் படத்தை வெளியிட வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக அன்பரிடம் வைக்க ஆசைப்படுகிறேன்.

  மேலும் பல தமிழ்ச்சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டுமாய் இயக்குநர் புதுவை மு. இளங்கோவன் அவர்களையும், அம்முயற்சிக்கு உறுதுணையாய் இருக்க வேண்டுமாய் தமிழுணர்வு கொண்ட வள்ளல் பெருமக்களையும் வேண்டுவது என் கடமையாகிறது.

  ---மருதூர் அரங்கராசன் 24.02.2015