நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 23 மே, 2012

பெங்களூரு செலவு…


நடுவண் அமைச்சர் திரு.வீரப்ப மொய்லியின் இலக்கியப்பணியைச் சிறப்பிக்கும் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தினர்

பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் கருத்தரங்கம் மே 19, 20 ஆகிய நாள்களில் நடப்பதை என் பதிவில் ஐந்து மாதங்களுக்கு முன்பே பதிந்திருந்தேன். அதனைப் பலர் பார்வையிட்டுள்ளதைக் கருத்தரங்கிற்கு வந்தவர்களின் பேச்சால் அறிந்தேன்.

நான் பெங்களூருவிற்குப் புதுச்சேரியிலிருந்து கே.பி.என். பேருந்தில் புறப்படவும் திரும்பிவரவும் முன்பதிவு செய்திருந்தேன். முதுகுவலி எனக்கு அவ்வப்பொழுது ஏற்படுவதால் படுத்தவாறு செல்வது நன்று என நினைத்தேன். எனவே கூடுதல் கட்டணம் கொடுத்து முன்பதிவு செய்தேன்.

18.05.2012 புதுவையில் இரவு 11 மணிக்குப் பேருந்து புறப்பட்டது. நன்றாக உறங்கியபடி சென்றேன். காலை 6 மணியளவில் பேருந்து பெங்களூர் நகருக்குள் நுழைந்தது. என் வருகையை என் மாணவர் திரு.சு.பழனி அவர்களுக்கு முன்பே தெரிவித்திருந்தேன். அதன்படி நான் வந்துகொண்டிருக்கும் இடத்தைக் குறிப்பிட்டதும் அவர் பேருந்து நிலையத்திற்கு வந்து அழைத்துச் சென்றார்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு சு. பழனியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. பழனி வேலூர் மாவட்டம் வள்ளிமலையை அடுத்த பெருமாள்குப்பம் ஊரினர். கலவைக் கல்லூரியில் படித்த என் உள்ளங்கவர் மாணவர்களுள் ஒருவர். தந்தையார் வேளாண்மைத் தொழில் செய்கின்றார். ஒருவருக்கொருவர் உரையாடியபடி அவரின் உந்துவண்டியில் அவர் இல்லம் சென்றோம். பெங்களூரின் நகர அழகும், இயற்கைச்சூழலும் சில்லென்ற இளங்காற்றும் உள்ளத்தை மகிழ்வித்தன.

அவர் வீட்டில் குளித்து முடித்து, சிற்றுண்டி முடித்து, அல்சூர் ஏரிக்கரையில் இருக்கும் தமிழ்ச்சங்க அரங்கைக் காலை பதினொரு மணிக்கு அடைந்தோம் (19.05.2012). நான் அரங்கில் நுழைவதற்கும் தமிழ்த்தாய் வாழ்த்துத் தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற பாவேந்தரின் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினர். அதனைத் தொடர்ந்து கன்னட மொழி வாழ்த்தும் பாடப்பெற்றது. முறையாகத் தொடக்கவிழா நடந்தது. தொடக்கவிழா பற்றி முன்பே பதிந்துள்ளேன்.

எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் அங்கு இருந்தனர். ஒருவருக்கொருவர் நலம் வினவினோம். பேராசிரியர்கள் கனல்மைந்தன், கடவூர்மணிமாறன், நெய்வேலி தியாகராசன், திருவனந்தபுரம் சீனிவாசன், உள்ளிட்டவர்களைக் கண்டு மகிழ்ந்தேன். அந்த நேரத்தில் சிவகாசிப் பேராசிரியர் நயினார் அவர்கள் புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் நடைபெற்ற முறையற்ற பணியமர்த்தம் பற்றிய தம் சினத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு அமைவு கூறினேன்.

தொடக்க விழாவுக்குப் பிறகு உணவுக்கு அனைவரும் அருகில் இருந்த மண்டபத்திற்குச் சென்றோம். பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் ஐயாவைக் கண்டு அளவளாவினேன். தமிழூர் வரும்படி ஐயா அவர்கள் அன்பு அழைப்பு விடுத்தார். அடிக்கடி மடல் எழுதும்படி அறிவுறுத்தினார். என் பிள்ளைகள் சிலப்பதிகாரப் பெயர் தாங்கியவர்கள் என்பதால் ஒவ்வொரு பெயராகச் சுட்டி நலம் வினவினார். அந்தப் பெருமகனாருக்குச் சிலப்பதிகாரத்தில் இருக்கும் ஈடுபாடே அதற்குக் காரணம்.

அவ்வாறு உரையாடிக்கொண்டிருக்கும்பொழுது திருவாளர் சீனிவாசன் என்னும் அன்பரைக் காணும் வாய்ப்பு அமைந்தது. அவர் எழுதிய WHY TAMIL SHOULD BE DECLARED AS CLASSICAL LANGUAGE? (Published by ACADEMY OF DRAVIDOLOGY, 49/2, Geddhala Halli, Gundu Toppu, Kothanoor post, Bangalore – 560 067, India) என்ற நூலை நம் பேராசிரியர் ச.வே.சு அவர்களிடம் வழங்க, அந்த நூலை என்னிடம் வழங்கும்படி ஐயா அவர்கள் ஓர் அன்புக் கட்டளையிட்டருளினார். திரு.சீனிவாசன் அவர்கள் பெங்களூரில் பிறந்த தமிழர் (1937). இவர்தம் தந்தையார் அவர்கள் தமிழ்ப்புலமை மிக்கவர். சித்திரக்கவி எழுதும் ஆற்றல் பெற்றவர். திரு.சீனிவாசன் அவர்களின் இல்லத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நூல்கள் கொண்ட நூலகம் உள்ளது. திராவிடவியல் கழகம் நிறுவி ஆராய்ச்சி செய்துவருகின்றார். அயலகத்தாரின் தமிழ்ப்பணிகள் குறித்தும் நூல் எழுதியுள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் பெற்றவர். உலகத்தமிழ் மாநாடுகளில் பங்குகொண்ட பெருமைக்குரியவர்.

இந்தியத் தொடர்வண்டித் துறையில் பணிபுரிந்து ( Dy. Chief Accounts Officer Indian Railways) ஓய்வுபெற்ற திரு.சீனிவாசன் அவர்கள் தமிழின் சிறப்பைப் பற்றி பல ஆங்கில நூல்கள் எழுதியுள்ளார். பெங்களூரில் வாழும் சீனிவாசன் அவர்கள் தாம் எழுதிய நூல்களை நம் தமிழக, இந்தியத் தலைவர்களுக்கு அனுப்பியதாகவும் ஒருவரும் கிடைத்தது என்றுகூட ஒருவரி எழுதவில்லை என்றும் வருந்தினார். இதில் எனக்கும் பட்டறிவு உண்டு என்பதால் நம் நாட்டினரின் நிலைக்கு அவருடன் இணைந்து நானும் வருந்தினேன்.

பகலுணவுக்குப் பிறகு கருத்தரங்க அமர்வுகள் தொடங்கின. பேராசிரியர் கனல்மைந்தன் அவர்களின் தலைமையில் இணையத்தில் மொழிபெயர்ப்புகள் என்ற என் கட்டுரையைப் படித்தேன். முனைவர் அண்ணா கண்ணன் உள்ளிட்ட நண்பர்கள் பார்வையாளர்கள் வரிசையில் இருந்து என் கட்டுரைக்கு வலிமை சேர்க்கும் சில கருத்துகளை உரைத்தனர். சுவையானதாக உரையாடல் இருந்தது. அதனை அடுத்து, பல நண்பர்கள் கட்டுரை படித்தனர். மாலை ஐந்துமணி வரை கருத்தரங்கம் தொடர்ந்தது.

கருத்தரங்க அமர்வின் நிறைவுக்குப் பிறகு வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஐயா உள்ளிட்ட நாங்கள் அல்சூர் ஏரிக்கரையில் பல ஆண்டுகள் மூடப்பட்டு இருந்து, அண்மையில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையைக் கண்டோம்.

திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட்ட பிறகு மீண்டும் தமிழ்ச்சங்கத்திற்குத் திரும்பினோம். அல்சூர் ஏரியழகினைச் சுவைத்தபடி நண்பர்களுடன் உரையாடியபடி நடந்து வந்தோம். அப்பொழுது என் தமிழ் இணைய வகுப்பில் கலந்துகொண்டு பயற்சிபெற்ற காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஒருவர் முன்வந்து உரையாடினார். தமிழ் இணையத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதாக உரைத்தார். இப்பொழுது இணையத்த்தில் உரையாடல் செய்து அயல்நாட்டு நண்பர்களுடன் பேசுவதாக உரைத்தார். அவருக்கு வாழ்த்துச்சொல்லி நடந்தேன்.

திருவனந்தபுரத்தின் ஆய்வு மாணவி ஒருவர் முகநூல் வழியாக என் படைப்புகளைப் பார்வையிடுவதாகவும். என் வலைப்பூவை அடிக்கடிப் பார்ப்பதாகவும் கூறி, தாமே முன்வந்து உரையாடினார். நான் அமைதியாகச் செய்யும் பணிகள் பலரின் பார்வைக்கு உட்படுவது அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

இரவு உணவு முடிப்பதற்கும் தம்பி பழனி அவர்கள் என்னை அழைக்க வருவதற்கும் சரியாக இருந்தத. இரவு திரு.பழனி அவர்களின் இல்லத்தில் ஓய்வெடுத்தேன். காலையில் எழுந்து கடமைகளை முடித்து மீண்டும் தமிழ்ச்சங்கம் சென்றோம். காலையில் கருத்தரங்க அமர்வு. நண்பர்களுடன் உரையாடியபடி காலைப்பொழுது மகிழ்ச்சியாகக் கழிந்தது.

வேலூரிலிருந்து நண்பர் முனைவர் தமிழ்ச்செல்வன் அவர்கள் வந்திருந்தார். நாங்கள் இருவரும் கலவைக் கல்லூரியில் ஒன்றாகப் பணிபுரிந்தோம். இப்பொழுது அவர் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்றார். மேலும் தஞ்சாவூர் திருவையாறு கல்லூரிப் பேராசிரியர் சுபாசு சந்திரபோசு, சரபோசி கல்லூரிப் பேராசிரியர் கோவிந்தராசு, உடுமலை அரசுகல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் மதியழகன், முனைவர் கிருட்டினன் உள்ளிட்டவர்களைக் கண்டு உரையாடினேன். மாலைப்பொழுது நெருங்கியதும் பேராசிரியர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றவண்ணம் இருந்தனர்.

மாலையில் நிறைவு விழா ஐந்து மணியளவில் தொடங்கியது நடுவண் அமைச்சர் திரு.வீரப்பமொய்லி அவர்கள் கலந்துகொண்டு தாம் வெளியிட்ட இராமாயண நூலை முதன்மை விருந்தினர்களுக்குப் பரிசளித்தார். அரசியல் அறிஞர் ஒருவருக்கு இலக்கிய ஈடுபாடு ததும்பி இருப்பதை அனைவரும் பாராட்டினோம். நிறைவு விழாவில் பேராசிரியர் ஆறு.அழகப்பனார், பேரா.நாச்சிமுத்து, முனைவர் க. இராமசாமி உள்ளிட்டோர் சிறப்பிக்கப்பட்டனர். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தம்பி பழனி அவர்களுடன் அவர் இல்லம் வந்தேன். வரும்வழியில் நம் மழலைச்செல்வங்களுக்குப் புத்தாடை சில வாங்கினேன். எனக்கு ஒரு டி.சர்ட்டு வாங்கினேன்.

பெங்களூரு நகர நம்பியர் திரிதரு மருங்கில் சில முதன்மை இடங்களைப் பழனி காட்டியபடி வந்தார். ஒரு கடையில் சிற்றுண்டி முடித்தோம். அவர் வீட்டுக்கு வந்து என் பைகளை எடுத்துகொண்டு கே.பி.என். பேருந்தைப் பிடிக்க அவர்களின் கலாசிப்பாளையம் அலுவலகத்தை அடைந்தோம். பத்து மணிக்கு அந்த இடத்தை அடைந்தோம்.

20.05.2012, இரவு 10.30 மணிக்குப் பேருந்து. பேருந்து எண் K A 50 / 9699. பழைய பேருந்து. அனைவரும் ஏறிப் பேருந்தில் அவரவர்களுக்கு உரிய இடத்தில் அமர்ந்தோம்; படுத்தோம். பேருந்தும் புறப்பட்டது. பெங்களூரு எல்லையைக் கடக்கும்வரை பேச்சொலிகள் பேருந்தில் இருந்தன. அனைவரும் கண்ணயர்ந்தோம். காற்றுக்கட்டுப்பாடு செய்யப்பட்ட வண்டி என்பதால் பெங்களூரு- புதுச்சேரிக் கட்டணம் உருவா 640 வாங்கிக் கொண்டனர். ஆனால் காற்றுக்கட்டுப்பாடு இப்பொழுது செயல்படவில்லை என்பதை அவரவரும் நற்காற்று வாங்குவதற்குப் பேருந்தில் நடு இரவில் அலைந்த அலைச்சலில் தெரிந்துகொண்டோம். காற்று இல்லாமல் அனைவரும் தவித்துப்போயினர். பேருந்து ஓட்டுநரிடம் “ஏ.சி. போடுக” என்று இந்தியாவின் அனைத்துமொழிகளிலும் கேட்டுப்பார்த்துப் பயணிகள் சண்டையிட்டனர்.

கண்ணாடிக் கதவுகளைத் திறந்து இயற்கைக் காற்றை வாங்கும்படி ஓட்டுநர் அறிவுறுத்தினார். கோடைக் காலம் என்பதால் அனைவருக்கும் காற்று தேவைப்பட்டது. தூக்கம் இல்லாமலும் காற்று இல்லாமலும் கே.பி.என் பேருந்து எங்களைச் சுமந்து வந்துகொண்டிருந்தது, சாலைகள் சரியில்லாததால் வண்டி மேடு பள்ளங்களில் துள்ளித்துள்ளி எழுந்தது. பெருமுக்கல் மலையில் கருங்கல் சல்லி ஏற்றும் சரக்குந்தில் பயணம் செய்தது போல கே.பி.என் பேருந்துப் பயணம் இருந்தது.

எங்களுக்கு நேர்ந்த குறையைக் கே.பி.என். பேருந்து அலுவலகத்துக்குத் தெரிவிக்க பேருந்து முன்பதிவுச்சீட்டில் உள்ள 0413 2203369 என்ற புதுச்சேரி எண்ணுக்குப் பேசினோம். இந்த எண் இப்பொழுது உபயோகத்தில் இல்லை என்று பதில். அடுத்து 0413 420 5657 என்ற மற்றொரு எண்ணுக்குப் பேசினோம். ஐந்து நிமிடக் கெஞ்சலுக்குப் பிறகு 0427-4222222 என்ற சேலம் தலைமையிட எண்ணுக்குப் பேசச் சொன்னார்கள். அந்தத் தொலைபேசியில் பேச முயன்றும் எடுக்கவில்லை.

தவறுதல் அழைப்பு கொடுத்தால் முறையீடு தீர்க்கப்படும் என்று கே.பி.என். பேருந்து முன்பதிவுச்சீட்டில் 9486107109 என்று ஒரு எண் உள்ளது. அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்த்தேன். அதுவும் எடுக்கப்படவில்லை. சிங்கப்பூர், மலேசியாவில் பேருந்துப் பயணம் மிகச்சிறப்பாக இருக்கும். “குத்துக்கூலியும் கொடுத்து எதிர்மூச்சு போட்டக் கதையாக” ப் பணத்தையும் பெருந்தொகை இழந்து உடல்வலியுடனும் காற்று இல்லாமலும் என் கே.பி.என். பேருந்துப் பயணம் இருந்தது. பகல் முழுவதும் ஓய்வெடுத்தும் உடம்புவலி போகவில்லை.


கருத்தரங்கில் நடுவண் அமைச்சர் வீரப்ப மொய்லி அவர்களுடன் தமிழறிஞர்கள் ஆறு.அழகப்பனார், முனைவர் க.இராமசாமி, முனைவர் நாச்சிமுத்து உள்ளிட்டோர்.


திரு.சீனிவாசன், முனைவர் ச.வே.சுப்பிரமணியன்


பேராசிரியர் கனல்மைந்தன் (கருதரங்கத் தலைமை)



பேரா.ச.வே.சுப்பிரமணியன், மு.இளங்கோவன்

சனி, 19 மே, 2012

பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்


இ.ப.த.மன்றக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள்


கருத்தரங்க ஆய்வுக்கோவையை வெளியிடல்

பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம் இன்று(19.05.2012) காலை11 மணிக்குத் தொடங்கியது.

பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் இரா.சீனிவாசன் அவர்கள் அறிமுகவுரையாற்றினார். இ.ப.த.மன்றத் தலைவர் இரா.மோகன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அரியதோர் வாழ்த்துரை வழங்கினார். முதுபெரும் தமிழறிஞர் தமிழூர் ச.வே.சுப்பிரமணியன் ஐயா அவர்கள் தம் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்து வாழ்த்துரை வழங்கினார். மலேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் வே.சபாபதி அவர்களும், சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர். நந்தினி குழும உரிமையாளர் ஆர்.இரவிச்சந்திரன் அவர்களும் பெங்களூர் வாழ் தமிழ் ஆர்வலர்கள் பலரும் வாழ்த்திப் பேசினர்.

ஆய்வுக்கோவைத் தொகுதிகள், மற்றும் சிறப்பு மலர் விழாவில் வெளியிடப்பட்டது.
நிறைவில் பேராசிரியர் மு.மணிவேல் நன்றிகூறினார்.

பகலுணவுக்குப் பிறகு பேராளர்கள் கலந்துகொண்டு கட்டுரை வழங்கினர். நாளையும் கருத்தரங்கு தொடர்ந்து நடைபெறுகின்றது.

நாளை மாலை நிறைவு விழா நடைபெறும். இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


கருத்தரங்கில் பங்கேற்ற பேராளர்கள்


கருத்தரங்கில் பங்கேற்ற பேராளர்கள்


பெங்களூர் திருவள்ளுவர்சிலை அருகில் மு.இளங்கோவன், பேராசிரியர் கனல்மைந்தன், வெள்ளையாம்பட்டு சுந்தரம், பேராசிரியர் ச.பொ.சீனிவாசன்

வெள்ளி, 18 மே, 2012

எண்ணியல்

எண்ணியல் என்னும் தலைப்பில் அமைந்துள்ள இவ்வாக்கம் "கணியக் களரி என்னும் கணியக் கலைச்சொற்குவை" என்னும் தலைப்பில் சேயாறு, வேளியநல்லூர், மூலை ஆற்றங்கரை கோரக்கர் அறிவர் பள்ளியில் மாணவர்களுக்கான தனிச்சுற்று ஏட்டில் ஆதி.சங்கரன் அவர்கள் வழங்கியுள்ளவை. உதவி: வே.முருகையன் அவர்கள்.

அறிவர் பள்ளியின் மாணவர்களாக இங்கு அமர்ந்திருக்கும் பலரும் ஏற்கனவே பல பாடத்திட்டங்களைக் கொண்ட பல்கலைக்கழகங்களிலும், கல்லூரி மற்றும் பள்ளிகளிலும் ஏற்கனவே மாணவர்களாகவும், பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்களாகவும், முதுகலை மற்றும் முனைவர் நிலை பெற்றவர்களாகவும் இருந்திருக்கக்கூடும். எனினும் வரையறை செய்யப்பட்ட அப்பாடத்திட்டங்கள் நிரல் நிரைப்படியும், தெரிவு செய்யப்பட்ட பாடத்திட்டப்படியும் தமது அறிவுப் பெட்டகத்தினைத் தங்களுக்கு அளித்திருக்கக்கூடும். ஆனால் அப்படிச் சேமித்து வைத்த பொருளை எடுத்துக் கொள்வது போல் அறிவர் பள்ளிகள் தம் மாணவர்கட்கு அறிவுச் செல்வத்தினை அளிக்கும் பாடத்திட்டத்தினைக் கொண்டிராமல், அறிவுச் செல்வத்தினை மாணவர்களே தமக்குள் உருவாக்கிக் கொள்ளத்தக்க ஏரண அறிவினை மாணவர்களுக்கு அளிக்கும் ஆற்றல் தூண்டிகளாக அமைவன.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடங்கள் ஒன்றோடொன்று தொடர்பற்ற செய்திகளை அளிக்கும் பாடநூல்களைக் கொண்டவை. ஆனால் கீழ்வகுப்புக்களின் பாடத்தினைக் காட்டிலும் மேல் வகுப்புகளின் பாடத்தில் முதிர்வு இருக்கும். ஆயினும் இந்த முதிர்வு எந்த ஏரணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என்ற உண்மை மாணவர்களுக்குச் சுட்டப்படமாட்டாது.

அந்த ஏரண முறையினை மாணவர்கட்குணர்த்தியும், ஒவ்வோர் பாடத்திட்டமும் அமையுமாறெங்ஙனமெனக் காட்டியும் நமது பாடமுறை அமைந்துள்ளது.

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்பது முதுமொழி எண்ணியலை முதலில்வைத்து எழுத்தியலைப் பின்னர்க் குறித்தவாறென்னை? யெனின், முதலில் மனத்தில் எண்ணிய பிறகே எழுத்துப் பிறக்கும் என்க. அவ்வாறு எண்ணுதலான் தானே தோன்றிய எண்ணியலைப் பற்றிப் புகுமுன், பிற எண்ணியலுக்கும் ஆசீவக அறிவர் மரபின் எண்ணியலுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டினை அறிய வேண்டியது முதலாம் என்க.

பிற எண்ணியலின் ஏறுமுக இலக்கங்கள் முறையே சூழியத்தில் தொடங்கி (0) உயர் இலக்கங்களைக் குறிக்கும்; அவ்வாறே இறங்கு முக இலக்கங்கள் உயர் இலக்கங்களில் தொடங்கிப் படிப்படியாகக் குறைந்து சுழியத்தில் முடியும். அதாவது இலக்கங்களின் கடையிறுதியாகச் சுழியம் குறிக்கப்படும். ஆனால் அறிவர் எண்ணியலிலோ ஒன்று, இரண்டு எனும் இலக்கங்களைப் போல கால், அரை, முக்கால் எனும் வின்னங்கனைப் போல “0” சுழியம் என்பதும் ஒரு நிலையே.

நவீன கணக்கியலில் ( கணங்கள் எனும் தலைப்பு ) 0 சுழியத்தை உள்ளடக்கிய கணம் வெற்றுக் கணமாகாது. சுழியம் கூட ஒரு கண உறுப்பாம். இவ்வாறே அறிவர் மெய்யியலில் சுழியம் என்பது ஒரு அலகே ஒழிய அது “இன்மை” எனும் நிலையைக் குறிக்காது. அவ்வாறெனின் அறிவர் கணக்கியல் இன்மையைக் குறிக்க எந்த எண்ணுருவைத் தெரிவு செய்துள்ளது எனும் கேள்வி எழக்கூடும். அறிவர் கணக்கியல் இன்மையைப் “புற்புதம்” எனும் குறியீட்டால் குறித்துள்ளது. புற்புதம் என்பது நீர்க்குமிழியைக் குறிக்கும் சொல்லாகவும் பொருள்படும். நீர்க்குமிழி என்பது இன்மையின் பரிமாணத்தினை இயல்பே வரையறுக்கும் காட்டு பொருளாகவும், இன்மை பற்றிய கருதுகோள்களை வரிசைப்படுத்தும் ஒரு எடுகோளாகவும் திகழ்வது வெள்ளிடைமலை, விரிக்குங்கால், நீரினின்றும் வெளியேறும் காற்றானது குமிழியினை உண்டாக்கும் குமிழி எளிதில் அழியும் அங்கு அதன் நிலை முன்னின்மை, பின்னின்மை, ஒன்றிலொன்றின்மை, முற்றின்மை எனும் அனைத்து இன்மைக் கூறுகளையும் உணர்த்தி நின்றது. (விரிவு ஐயங்களைதல் அமர்வில்) இன்மையைப் பேசாத பொருண்மை சிறப்புறாது இன்மைக்கு இலக்கம் கொடுத்து நமது முன்னோர் கணக்கியல் தொடங்குகிறது எனலாம். இத்தகு உயர்ந்த ஏரண நெறியிலமைந்த எண்ணுருக்களைக் கீழ்வாயிலக்கம் (இறங்குமுக எண்கள்) மேல்வாயிலக்கம் (ஏறுமுகஎண்கள்) என வரிசைப்படுத்திக் கணலாம். இவையன்றியும் அளவை முறையினங்கள் முறையே 1.நீட்டலளவை 2.நிறுத்தலளவை 3.பெய்தலளவை 4.முகத்தலளவை 5.எண்ணலளவை 6.உய்த்தலளவை எனப் பலதிறப்பட்டவாறு கையாளப்பட்டன.
அவற்றில் சிலவற்றை ஈண்டுக்காண்போம்.

1. நீட்டலளவை

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 தேர்த்துகள்
8 தேர்த்துகள் - 1 பஞ்சிழை அல்லது துசும்பு
8 பஞ்சிழை - 1 மயிர் அல்லது மயிர் நுனி
8 மயிர் நுனி - 1 நுண் மணல்
8 நுண் மணல் - 1 சிறுகடுகு
8 சிறு கடுகு - 1 எள்
4 எள் - 1 கொள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரற்கிடை அல்லது விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம் அல்லது கோல்
150 பாகம் - 1 கூப்பிடு
600 பாகம் (4 கூப்பிடு) - 1 காதம் (1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை
( வடமொழி நூலார் கூறும் யோசனை இதுவன்று )
2.நிறுத்தலளவை

பொன்நிறுத்தல்

8 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
8 பணவெடை - 1 வராகனெடை
10 பணவெடை - 1 கழஞ்சு
2 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம் அல்லது தொடி

பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
50 பலம் - 1 தூக்கு
6 வீசை - 1 துலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

பெய்தலளவை மற்றும் முகத்தலளவை

300 நெல் - 1 செவிடு அல்லது சிற்றாழாக்கு
5 செவிடு - 1 ஆழாக்கு அல்லது அரைக்கால்படி
2 ஆழாக்கு - 1 உழக்கு அல்லது காற்படி
2 உழக்கு - 1 உரி அல்லது அரைப்படி
2 உரி - 1 படி
4 படி - 1 மரக்கால் அல்லது குறுணி
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
12 மரக்கால் அல்லது
48 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
(பிற்காலத்தில் வணிகர்களின் பொருளாசையினால் படி மற்றும் மரக்கால் அளவுகள் சிறுபடி, பெரும்படி, லிட்டர் படி மற்றும் பட்டணம் படி எனப் பல்வேறாக நிலையில்லாத நம்பகத்தன்மையற்ற அளவுமுறைகளை உருவாக்கிக் குழப்பினார்கள்.)

எண்ணலளவை

ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
பத்தாயிரம்
நூறாயிரம் அல்லது ஒரு இலக்கம்
நூறு நூறாயிரம் - ஒரு கோடி
பத்து கோடி - 1 அற்புதம்
பத்து அற்புதம் - 1 நிகற்புதம்
பத்து நிகற்புதம் - 1 கும்பம்
பத்து கும்பம் - 1 கணம் அல்லது கணிகம்
பத்து கணம் - 1 கற்பம்
பத்து கற்பம் - 1 நிகற்பம்
பத்து நிகற்பம் - 1 பதுமம் அல்லது தாமரை
பத்து பதுமம் - 1 சங்கம்
பத்து சங்கம் - 1 வெள்ளம் அல்லது வாரணம்
பத்து வெள்ளம் - 1 அன்னியம்
பத்து அன்னியம் - 1 அருத்தம்
பத்து அருத்தம் - 1 பராருத்தம்
பத்து பராருத்தம் - 1 பூரியம்
பத்து பூரியம் - 1 மும்முக்கோடி
பத்து மும்முக்கோடி - 1 மாயுகம்
நூறு மாயுகம் - 1 பரதம்



இறங்கு முக இலக்கங்கள் அல்லது கீழ்வாயிலக்கம் :
( ஒன்று எனும் முழு எண்ணுக்குக் கீழ்ப்பட்ட வின்னங்களின் வரிசை )

3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்றுவீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி (வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால் வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால்வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி அல்லது முந்திரை
1/102400 - கீழ் முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/744815554556000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

கீழ்வாய்ச் சிற்றிலக்க வாய்பாடு
( வின்னங்களின் ஏறுவரிசை - (ஒன்று எனும் முழு எண்ணை நோக்கி )

தேர்த்துகள் - 1 நுண்மணல்
நுண்மணல் - 1 வெள்ளம்
வெள்ளம் - 1 குரல்வளைப்படி
குரல்வளைப்படி - 1 கதிர்முனை
கதிர்முனை - 1 சிந்தை
சிந்தை - 1 நாகவிந்தம்
நாகவிந்தம் - 1 விந்தம்
விந்தம் - 1 பாகம்
பாகம் - 1 பந்தம்
பந்தம் - 1 குணம்
குணம் - 1 அணு
அணு - 1 மும்மி
மும்மி - 1 இம்மி
இம்மி - 1 கீழ்முந்திரி
கீழ்முந்திரி - 1 மேல் முந்திரி
மேல்முந்திரி - ஒன்று ( 1 எனும் முழுஎண் )

பண்டைத் தமிழர் தம் கணக்கியலின் மிக நுண்ணிய அளவை முறைமைகளைக் கணக்காயர் பள்ளிகளில் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் தமிழகத்தினின்றும் பல்வேறிடங்களுக்கும் சென்று தமது கணக்கியல் அறிவினைப் பரப்பினர். அறுதியிட்டுக் கண்ட எண்ணிக்கைகளை மேலே கண்ட பாடத்தில் அறிந்தீர்கள். ஆனால் அறுதியிட்டு எண்ணிச்சொல்ல இயலா எண்ணிக்கைகளை உய்த்தலளவு எனும் ஊகமுறை ஓர்தலறிவினாலும், எண்ணிலடங்காத் தொடர் எண்களின் ஏரண அடுக்கத்தினாலும், கம்பசூத்திரம் போன்ற அறிவர் பாடங்களாலும், சில மாறிலிநிலை எண்களைக் கொண்டே அரங்கிற்கு ஒளியூட்டு நிகழ் முறைகளையும் பழந்தமிழர் கடைப்பிடித்தனர். இவற்றைப் பின் நாட்களில் வரும் பாடங்களிற் காணலாம்.

வியாழன், 17 மே, 2012

அறுபது வியாழ வட்ட ஆண்டுகள்

தமிழாண்டு எனப் பிரபவ தொடங்கி, அட்சய ஈறான அறுபது ஆண்டுப்பெயர்களும் தமிழ்ச்சொற்கள் இல்லை. யாவும் வடசொற்கள் ஆகும். வடசொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களைக் கீழ்வரும் பட்டியலால் அறியலாம். முதலில் இருப்பவை தமிழ். அடுத்து இருப்பவை வடசொல். இவை "அறுபது வியாழ வட்ட ஆண்டுகள்" என்னும் தலைப்பில் கணியக் களரி என்னும் கணியக் கலைச்சொற்குவை என்னும் தலைப்பில் சேயாறு, வேளியநல்லூர், மூலை ஆற்றங்கரை கோரக்கர் அறிவர் பள்ளியில் மாணவர்களுக்கான தனிச்சுற்று ஏட்டில் ஆதி.சங்கரன் அவர்கள் வழங்கியுள்ளவை. உதவி: வே.முருகையன் அவர்கள்.
...........................................................................

தமிழ் - வடசொல்

1. முதற்பம்- பிரபவ
2. விறல் - விபவ
3. சுடரி - சுக்ல
4. பிறங்கல் - பிரமோதூத
5. குடிமை -பிரசோற்பத்தி
6. ஆளி - ஆங்கிரச
7. திருமுகம் - சிறீமுக
8. எழுச்சி - பவ
9. இளம்பி - யுவ
10. தாது - தாது
11. இறைமை - ஈசுவர
12. புண்ணியம் - வெகுதானிய
13. மயலி - பிரமாதி
14. வியன்திறல் - விக்கிரம
15. நிரலி - விசு
16. ஏரொளி - சித்திரபானு
17. நேரொளி - சுபானு
18. தராவம் - தாரண
19. அரசம் - பார்த்திப
20. வியல் - விய
21. ஆயசித்து - சர்வசித்து
22. ஆயவேலி - சர்வதாரி
23. வயிரி - விரோதி
24. வேற்றிகம் - விக்ருதி
25. கராளி - கர
26. நந்தனம் - நந்தன
27. கொற்றம் - விசய
28. வெற்றி - செய
29. மன்மதம் - மன்மத
30. தென்முகி - துன்முகி
31. நெடும்பாணி - ஏவிளம்பி
32. பாணி - விளம்பி
33. வியரி - விகாரி
34. ஆயகம் - சார்வரி
35. தாவகம் - பிலவ
36. நலமி - சுபகிருது
37. செழுமி - சோபகிருது
38. செம்மல் - குரோதி
39. விழுவகம் - விசுவாவசு
40. நன்புனலி - பராபவ
41. பாய்வகம் - பிலவங்க
42. கீலகம் - கீலக
43. எழில் - சௌமிய
44. பொதுமன் - சாதாரண
45. இரிபிகம் - விரோதிகிருது
46. தண்ணளி - பரிதாபி
47. மற்கி - பிரமாதீச
48. ஆனந்தம் - ஆனந்த
49. திண்மகம் - இராட்சச
50. நளம் - நள
51. பிங்களம் - பிங்கள
52. காளவுத்தி - காளயுக்தி
53. சித்தகம் - சித்தார்த்தி
54. உருத்திரம் - ரௌத்திரி
55. தென்மதி - துன்மதி
56. துந்துமி - துந்துபி
57. உகாரி - உருத்ரோத்காரி
58. கனலி - இரக்தாட்சி
59. குருத்திகம் - குரோதன
60. நிற்றியம் - அட்சய

செவ்வாய், 15 மே, 2012

பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் 5 நூல்கள் வெளியீட்டு விழா




பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதிய திராவிடத்தால் எழுந்தோம், குறள்வானம்(அறத்துப்பால்), கவிதா(புதினம்), வந்ததும் வாழ்வதும் (தன்வரலாறு), பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம் என்னும் ஐந்து நூல்கள் இன்று(15.05.2012) மாலை ஆறு மணிக்குச் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கில் வெளியீடு காண உள்ளன.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நூல்களை வெளியிட்டுச் சிறப்புப் பேருரையாற்ற உள்ளார். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில் நடைபெறும் விழாவில் நடுவண் அமைச்சர் சா.செகத்ரட்சகன் அவர்கள் நூலின் முதற்படிகளைப் பெறவும், மேனாள் துணைவேந்தர் ஔவை நடராசன், பேராசிரியர் அப்துல்காதர் ஆகியோர் கருத்துரை வழங்கவும் உள்ளனர். நிறைவில் பேராசிரியர் சுப.வீ அவர்கள் ஏற்புரையாற்றுவார்.

திங்கள், 14 மே, 2012

பாவாணர் பற்றாளர் சிங்கப்பூர் கோவலங்கண்ணன் மறைவு


சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன்(10.07.1941- 14.05.2012)





மொழிஞாயிறு பாவாணர்மேல் ஆழ்ந்த பற்றினைக் கொண்டவரும் சிங்கப்பூர் செல்லும் தமிழ் அன்பர்களுக்கு ஒரு சடையப்ப வள்ளலாக இருந்து புரந்தருளியவரும், தணிக்கைத்துறையில் பேரறிவு படைத்தவருமான வெ.கரு.கோவலங்கண்ணன்(கோபாலகிருட்டிணன்) அவர்கள் இன்று(14.05.2012) காலை சிங்கப்பூரில் உடல்நலக்குறைவு கரணியமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து கழிபெருந்துயரடைந்தேன்.

நான் சிங்கப்பூர் செல்லும்பொழுதெல்லாம் தம் வணிக நிறுவனத்திற்கு அன்புடன் அழைத்துத் தம் தமிழார்வம் பற்றி ஐயா அவர்கள் பல மணிநேரம் உரையாடினார்கள். அவர்களின் தமிழ்ப்பணி பற்றி விரிவாகப் பதிந்துவைக்க வேண்டும் என்று நான் செய்திகள் கேட்டபொழுதெல்லாம் தமிழ்பற்றியும், பாவாணர் பற்றியும் எழுதுங்கள் என்றும் தம்மைப் பற்றி எழுதவேண்டாம் என்றும் அன்புடன் மறுத்துவந்தார்கள். அவரின் அலுவலகத்தில் பணிபுரிந்த திரு. கவி ஐயா அவர்கள் ஐயாவின் தமிழ்ப்பணிகளை நிலைநிறுத்தும் முகமாகத் தேவநேயம்.காம் என்னும் இணையதளம் தொடங்கி அதில் பாவாணர் கோவலங்கண்ணன் அவர்களுக்கு எழுதிய மடல்கள், அரிய படங்களையெல்லாம் உள்ளிட்டு ஆவணப்படுத்தியிருந்தார்.

கோவலங்கண்ணன் அவர்கள் பாவாணர் அவர்களை முதன்முதல் காட்டுப்பாடியில் நேரில் கண்டார். பாவாணர் அவர்களின் வறுமைவாழ்வு கண்டு, தாம் அணிந்திருந்த அணிமணிகள் அனைத்தையும் கழற்றிப் பாவாணர் ஐயாவின் தமிழ்ப்பணிக்கு வழங்கிய கொடையுள்ளம் கோவலங்கண்ணன் அவர்களின் கொடையுள்ளமாகும். தம் மகனுக்குப் பொற்கைப்பாண்டியன் எனப் பாவாணரால் பெயர் சூட்டி மகிழ்ந்தவர். பாவாணர் நூல்கள் சிங்கப்பூரில் பரவுவதற்குப் பலவகையில் தமிழன்பர்களுக்குத் துணைநின்றவர். தேவநேயம் என்னும் பெயரில் பாவாணரின் நூல்கள் 5000 பக்கம் வெளிவரவும் உதவியவர். இசைஅறிஞர் வீ.ப.கா.சுந்தரம் பெயரில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை நிறுவித் தமிழிசைக்குப் பல்லாயிரம் உருவா வாரி வழங்கிய கொடைமனத்தர் நம் கோவலங்கண்ணன் அவர்கள். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் பாவாணர் அறக்கட்டளை நிறுவிப் பாவாணரின் பெருமையை ஆண்டுதோறும் தமிழறிஞர்கள் நினைவுகூர வழிவகுத்தவர்.

கோபாலகிருட்டிணன் என்னும் இயற்பெயர் கொண்டவரைக் கோவலங்கண்ணன் என்று பாவாணர் மாற்றினார். இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் இரணசிங்கபுரம் என்னூம் ஊரில் 10.07.1941 இல் பிறந்தவர். தந்தையார் பெயர் வெள்ளைச்சாமி, தாயார் கருப்பாயம்மை.. பத்து அகவையில் 1951 இல் மலேசியா சென்றார். குளுவான் பகுதியில் 7 ஆம் வகுப்பு வரை படித்தார். 1959 இல் சிங்கப்பூர் சென்றவர். ஒரு பள்ளியில் அலுவலக உதவியாளராகப் பணியில் இணைந்தார். தாமே கற்று, வணிகவியல், தட்டச்சுப் பள்ளிகளைத் தொடக்கத்தில் நடத்தி மாணவர்களுக்கு அறிவு புகட்டியவர். சிங்கப்பூரில் புகழேந்தி மன்றம் என்னும் அமைப்பை நிறுவித் தமிழ்ப்பணிபுரிந்தார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாடு ஏற்பட்ட பிறகு அனைத்தும் பாவாணருக்குள் அடங்கும் என நினைத்துப் பாவாணர் புகழ் பேசுவது, கேட்பது, எழுதுவது என்று வாழ்ந்துவந்தவர். உடல்நலக்குறைவால் இன்று(14.05.2012) இயற்கை எய்திய திருவாளர் கோவலங்கண்ணன் அவர்களைப் பிரிந்துவாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், தனித்தமிழ் ஆர்வலர்களுக்கும், பாவாணர் பற்றாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் உரியதாகட்டும்.

சிங்கபுரி வணிகக் கல்விச்சாலை உரிமை முதல்வர்
உயர்திரு. கோபாலகிருட்டிணனார் மீது நூலாசிரியன்(தமிழ் இலக்கிய வரலாறு)
ஞா. தேவநேயன் பாடிய பாடாண் பதிகம்



அறிவொழுகு கண்ணும் அமர்தமிழின் நோக்கும்
செறிவுடைய நாவும் செழிப்பும் - பொறிநிலவும்
கோவீறு நெஞ்சும்பொற் கோல வளர்வுடம்பும்
கோபால கி(ரு)ட்டிணர் கூறு.

வடமொழியை வாழ்த்தி வழங்குதமிழ் தாழ்த்தும்
திடமுடையர் தென்னாட்டுச் செல்வர் - கடல்கடந்து
சிங்க புரித்தீவிற் சேர்ந்த கிருட்டிணனார்
தங்கு தமிழ்ப்பணிசெய் தார்.

கடையெழு வள்ளலர்பின் கானக் குமணன்
நடையுயர் நல்லியக் கோடன் – கொடைமிகு
சீதக்கா திக்குப்பின் சேது ரகுநாதன்
ஈதற்கின் றோகிருட்டி ணர்.

கால்கடுத்துக் கொப்புளிக்கக் காதம் பலநடந்து
நூல்வடித்துச் சொல்லினும் நொய்தரார் -பாலடுத்து
வேறொருவர் கூறினும் வெண்படத்துங் கண்டிரார்க்கு
மாறிலாதீந் தார்கிருட்டி ணர்.

முன்னாட் கொடையாளர் முந்திப் புகழ்பெற்றார்
செந்நாப் புலவர் செயற்பாவால் - இந்நாளில்
முந்திப் பொருளளித்த முன்பிற் கிருட்டிணர்க்குப்
பிந்திப் புகழ்ந்துரைத்தேன் பேர்ந்து.

கோடிக் கணக்கிற் குவித் திருந்துஞ் செந்தமிழை
நாடித் தனியிதழ்க்கும் நல்காதார் - நாடிதிலே
செந்தமிழ்ச் செல்விக்கும் தென்மொழிக்கும் வாழ்நாட்குத்
தந்தவர் கிருட்டிணனார் தாம்.

அன்னை யெனவே அறிவுடம்பை முன்வளர்த்துப்
பின்னும் பலவாய்ப் பெரிதுதவும் - முன்னை
முகனை மொழித்தாயின் முட்டறுத்த செல்வ
மகனார் கிருட்டிணரே மற்று.


குப்பை யுயர்ந்தது கோபுரந் தாழ்ந்ததெனச்
செப்பா வடமொழி சீர்த்ததெனும் - தப்பறவே
இன்னே யெழுந்தார் இணையில் கிருட்டிணனார்
முன்னோர் மறமானம் மூண்டு.

நாடுங் குலவினமும் நம்பும் மதவகைகோட்
பாடுந் தொழிற்றுறையும் பாராது - நீடும்
தமிழே கருதித் தகுந்தாரைத் தள்ளா
நமரே கிருட்டிண னார்.

கோளாண்மை மிக்குக் குறித்த கலைதேர்ந்து
தாளாண்மை யாற்சொம் தகவீட்டி - வேளாண்மை
செய்யும் நிறைதமிழர் சிங்க புரிவாழும்
செய்ய கிருட்டிணரே சீர்த்து.

திருவாளர் கோவலங்கண்ணன் அவர்களைக் குறித்த வலைப்பூ

சனி, 12 மே, 2012

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப்போர் ஓய்ந்தது…


நன்றி: ஆனந்தவிகடன்


ஒவ்வொரு வாரமும் எப்பொழுது வியாழன் இரவு விடியும் என்று உலகம் காத்துக்கிடந்தது உண்மைதான். நாற்பது வாரங்களாக இலக்கிய ஆர்வலர்களைத் தூங்கவிடாமல் செய்தது ஆனந்தவிகடனில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்னும் தொடர் என்றால் அது மிகையில்லை.

ஆனந்தவிகடனில் இடம்பெற்ற மூன்றாம் உலகப்போர் தொடரைப் படித்துவிட்டு மாணவர்கள், நண்பர்களுடன் உரையாடுவதை அண்மைக் காலமாக வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். கவிப்பேரரசு வைரமுத்துவின் வழியாகத் தேனி மாவட்டத்துப் பேச்சுத் தமிழ் உயிர்பெற்று உலக மக்களுக்கு அறிமுகமாகியுள்ளதை நினைத்துப் பூரித்துப் போனேன். பேச்சுத் தமிழை மட்டுமா கவிஞர் பெருமையுறப் பதிவு செய்துள்ளார்?. உழைத்து உழைத்துக் காலங்காலமாகக் களைத்துப்போன சிற்றூர்ப்புற மக்களின் நம்பிக்கைகளை, வாழ்க்கைமுறைகளை, பண்பாடுகளை, பழக்க வழக்கங்களை, உள்மன உணர்வுகளையெல்லாம் கவனமாகப் பதிவு செய்துள்ளார்.

வைரமுத்து அவர்கள் திரைப்பா வடிவில் தெற்கத்தி வாழ்க்கையைப் பல இடங்களில் பதிவு செய்திருந்தாலும் இந்த மூன்றாம் உலகப்போரில் அவர் வாழ்ந்த வாழ்க்கையினை ஈரம் காயாமல் இறக்கிவைத்துள்ளார். கருத்தமாயி, சிட்டம்மா, முத்துமணி, சின்னபாண்டி பாத்திரங்கள் தமிழகத்து உழைக்கும் மக்களின் குடும்ப உறுப்பினர்களின் மாதிரிகள் என்று குறிப்பிடலாம். இவர்கள் வழியாகத் தமிழகத்து மக்களின் மன உணர்வுகளைக் கவிப்பேரரசர் அவர்கள் பக்குவமாகச் சித்திரமாக வரைந்துகாட்டியுள்ளார்.

தேனி மாவட்டத்துத் தேசிய இலக்கியமாக இந்த “மூன்றாம் உலகப்போரை” அறிவிக்கலாம். இன்றைய நாகரிக வாழ்க்கையும் பன்னாட்டு நிறுவனங்களும் சிற்றூர்வரை புகுந்து உறவுகளை வேரறுப்பதைக் கவிப்பேரரசர் நுண்மையாக எடுத்துரைத்துள்ளார். பன்றிக்குக் காயடிப்பதிலிருந்து, பனங்கிழங்கு அவித்து உரித்துத் தின்னுவது வரை நம் இலக்கியப்புலிகளால் பதிவுசெய்யப்படாத பல நிகழ்வுகளைக் கவிப்பேரரசர் தம் தமிழ்வளத்தால் பதிவுசெய்துள்ளார்.

தொடரில் இடம்பெறும் ஊர்ப் பஞ்சாயத்தாரின் உரையாடல்கள் இன்னும் தமிழும் தமிழ்ப்பண்பாடும் வாழ்ந்துகொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றன.

“தாமரை எலையில பச்சைக்கறிய வாங்கி வந்தவன் பாதியிலே பிரிச்சான். கறிக்கு வீங்கிக்கெடந்த பயலுக்கு உள்நாக்கு ஊறுது. ஈரலாப் பொறுக்கி எடுத்தான்; ஒவ்வொரு கொழுப்பா எடுத்து ஒண்ணு சேத்தான். சும்மா ஆவாரங்குழையை ஆடு திங்கற மாதிரி பச்சைக்கறிய நறுச் நறுச்சுனு மென்னு தின்னு முழுங்கிட்டான்” என்று முத்துமணி பின்னாளில் குடும்பச்சொத்தைத் தானே தின்னு உயிர்வளர்க்க உள்ளதைக் குறிப்பாகக் காட்டியுள்ளார் கவிப்பேரரசர்.

இந்தத்தொடரில் வந்துபோகும் எமிலி, இஷிமுரா என்னும் அயலகத்துப் பாத்திரங்கள் வழியாக அட்டணம்பட்டிக்கு வேறாக ஓர் நவீன உலகம் இருப்பதையும் அவர்களின் வாழ்க்கைமுறை வேறாக இருப்பதையும் கவிப்பேரரசர் படைத்துக்காட்டியுள்ளார்.

“இந்த மனிதர்கள் பூமியின் முகத்தில் அறைவதையும், முதுகில் குத்துவதையும், வயிறு கீறுவதையும், கருவறையில் கம்பி நுழைப்பதையும், ஓசோன் கூரை ஓட்டை வழி எட்டி எட்டிப் பார்த்துவிட்டு ஓர் அழுக்கு மேகத்தை இழுத்து முகம் பொத்திக்கொண்டது சூரியன்” என்று கவிப்பேரரசர் இலக்கிய நயம்பட முதல் தொடரில் அறிவியல் அரிச்சுவடி சொல்லியுள்ளார்.

முத்துமணிக்குக் குழந்தை பிறந்தால் முப்பாட்டன் நினைவால் சீனித்துரையின் பெயரை வைக்க நினைத்த கருத்தமாயிக்குத் தன் மகன் முத்துமணி உரைக்கும் “அஜய்தேவ்” என்னும் பெயர் வேம்பாக இருந்ததைக் கவிப்பேரரசர் அவருக்கே உரியமுறையில் கரும்பாகச் சுவைபட எழுதியுள்ளார்.

நிறைவுப்பகுதியில் முத்துமணி, கம்பெனிக்காரர்களுக்கு ஆதரவாக வாங்கிய நிலத்தைச் சமப்படுத்தும் ஜே.சி.பி. மெஷினால் தன் தந்தையை ஏற்றிக் கொன்றுவிடுவான் எனவும், அரிவாளல் வெட்டிச்சாய்க்கப்போகின்றான் எனவும் படிப்பவர்களுக்கு ஆர்வம்கூட்டிப் அச்சம்கொள்ளச்செய்யும் கவிப்பேரரசர் நாம் எதிர்பாராத விதமாகக் கருத்தமாயி, உயிராகப் போற்றிய நிலத்தையும் சாமி மரத்தையும் காக்க, “முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் கவட்டைக்காலனை வெட்டிவிட்டு பூமிக்கடியில் புதைச்சு வைத்திருந்த வீச்சருவாவ எடுத்து, தன்னை வெட்ட வந்த மகனை வெட்டினார் என்று எழுதியுள்ளது கதையின் திருப்புமுனையாக உள்ளது.

இந்த இடத்தில், “தோலக் கிழிச்சு, சதையில எறங்கி, ரத்தநாளம் கடந்து, சவ்வப்பொளந்து, கழுத்தெலும்ப ஒடச்சு, உள்ள புகுந்து, முதுகுத் தண்டு நரம்ப அறுத்து, உசுர வாங்கித் தலையைத் தொங்கவிட்டு சங்குக்குழியில் நின்னுப்போச்சு அருவா. முப்பத்தேழு வருசத் துருவை முத்துமணி ரத்தத்துல கழுவணுமுன்னு கெட்ட வரம் கேட்டு வந்திருக்கு அந்த அருவா” என்று எழுதியுள்ளமை கருத்தமாயியின் கோபத்தை ஒரு தேர்ந்த கலைஞனுக்குரிய முறையில் இந்தத்தொடரில் கவிப்பேரரசர் பதிவுசெய்துள்ளார்.

தேனி மாவட்டத்து மக்கள் வாழ்க்கையை நுட்பமாகப் பதிவுசெய்யும் போக்கில் அமைந்துள்ள இந்தத் தொடர் தமிழகத்தின் ஒரு பகுதி மக்களின் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும், பழக்கவழக்கங்களையும் தாங்கி நிற்கின்றது. கவிப்பேரரசர் வைரமுத்து அவர்களின் இந்தத் தொடரில் மக்களின் வழக்காறுகள், பழமொழிகள், நம்பிக்கைகள், பண்பாட்டு விழுமியங்கள், அறம் என யாவும் பூத்துச் செழித்து நிற்கின்றன.

வியாழன், 10 மே, 2012

முனைவர் இரா.திருமுருகனார் அறக்கட்டளை மூன்றாம் சொற்பொழிவு

இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி
நாள்: 15.05.2012(செவ்வாய்க்கிழமை) நேரம: மாலை 6 மணி

தலைமை: புலவர் வி.திருவேங்கடம்

வரவேற்பு: முனைவர் பக்தவத்சல பாரதி

வாழ்த்துரை: பேராசிரியர் மு.இராமதாசு

சிறப்புரை: முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

தலைப்பு: தீந்தமிழ்க் காவலர் முனைவர் இரா.திருமுருகனாரும் தமிழிசையும்

நன்றியுரை: முனைவர் த.பரசுராமன்

நிகழ்ச்சி அமைப்பு: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்

செவ்வாய், 8 மே, 2012

பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் தனிப்பாடல்கள்

 பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராக விளங்கியவர் என்பதை நாம் அறிவோம். அவர் மிகச்சிறந்த நாடக ஆசிரியரும் ஆவார். அவர் பாட்டியற்றும் திறனும் பெற்றிருந்தார். தஞ்சை மாவட்டத்தில் பெரும்புயற்காற்று வீசிய போது அவரியற்றிய தனிப்பாடல்கள் புகழ்வாய்ந்தனவாகும். சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் கருப்பக்கிளார் சு.இராமசாமி புலவரால் வெளியிட்ட தனிப்பாடல்கள் நூலின் தொகுதி 4(வெளியீடு 1964, பக்கம் 253-257) இல் வெளியாகியுள்ள இந்தப் பாடல்களை அமெரிக்காவில் வாழும் முனைவர் நா.கணேசன் அவர்கள் தம் நூலகத்திலிருந்து எனக்கு மின்வருடி அனுப்பியிருந்தார். என் வலைப்பூவில் பதிகின்றேன். பெருமழைப்புலவர் எழுத்துகளில் ஈடுபாடுகொண்டுள்ள தமிழுலகம் இப்பாடல்களைச் சுவைத்து இன்புறுக)

   [“சோழவள நாடு சோறுடைத்து” என்று ஒளவையார் என்னும் நல்லியற் புலவராற் புகழப்பட்ட சோழ வள நாட்டில் தஞ்சை மாவட்டம். திருத்தருப்பூண்டி வட்டத்தைச் சார்ந்த மேலைப் பெருமழை யென்னும் சிற்றூரில் வாழ்ந்த வேலுத்தேவர் என்பவருக்கு மைந்தனாகப் பிறந்தார் சோமசுந்தரனார். இவர் பிறந்த நாள் கி.பி. 1909ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் ஐந்தாம் நாள். இவர் திண்ணைப்பள்ளியிற் கற்கும் போதே தமிழ் மொழியார்வம் உள்ளத்தெழத் தெள்ளிய தமிழ்நூல் பல கற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்க் கல்லூரியில் முறையே பயின்று புலவர் வகுப்புத் தேர்ந்து நற்சான்றிதழும் பெற்றார். பின்னர்த் தம்மூர் வந்துசேர்ந்து உழவுத் தொழிலையே விழைந்து புரிந்து வாழ்ந்தார். தமிழாசிரியர் வேலை பார்க்குந் தகுதிபெற்றும் அவ்வேலைக்கு முயலாது தம் வாழ்வு நடத்தினார். இவரது செந்தமிழ்ப் புலமையைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் உணர்ந்து பல நூல்களுக்கு உரை யெழுதுமாறு வேண்டினர். அதற்கியைந்து சூளாமணி, குறுந்தொகை, பரிபாடல், ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு முதலிய நூல்களுக்கு உரையெழுதி யுதவினார். இரண்டொரு நாடக நூல்களும் உரைநடை நூல்களும் எழுதியிருக்கின்றார்.]

[தஞ்சை மாவட்டத்தில் புயற்காற்று வீசியபோது பாடியன.]

பித்தேறி னானிறைவன் நல்லருளைக்
கைவிட்டான் பெருங்காற் றானான்
மத்தேறி யுடைதயிர்போல் மன்னுயிர்கள்
உடைந்தொழிய மயக்கஞ் செய்தே
செத்தேயிங் கொழிகவெனச் சினந்திட்டான்
பேய்போலச் சீறா நின்றான்
கொத்தேறு குழலுமையும் முகிலாயங்
கவனோடே கூடி னாளால்!
(அ – ரை.) கொத்து – பூங்கொத்து. முகில் – மேகம். (1)

திடுதிடென உலகதிரத் திசைநடுங்க
வானிருளத் தெய்வ மஞ்சச்
சடசடவென் றொலிபடத்தீந் தருவெல்லாம்
வேரோடே சாய்ந்து வீழக்
கடகடவென் றேநகைத்தான்! கடல்பெருகித்
திடரேறிக் கலகஞ் செய்யப்
படபடவென் றேமாந்தர் பயத்தாலே
குலைநடுங்கிப் பதைத்து வீழ்ந்தார்!
(அ – ரை.) வான் இருள – விண் இருளையடைய. தீந்தரு – நல்லமரங்கள். (2)

எளியோர்கள் சிறுகுடிலும் எழிலோங்கு
மாளிகையும் இரைந்து சீறித்
துளியோங்கு மழையோடே சூறைவளி
சாடுதலால் சுவர்கள் சாயப்
புளியோங்கு மாமரமே தென்னைமரம்
வாழைமரம் புதல்பூண் டோடே
களியோங்கு பைங்கூழும் கரும்புகளும்
பாழாகிக் கழிந்த வாலோ!
(அ – ரை) சூறைவளி – சூறாவளி என்னும் பெருங்காற்று. கழிந்த – அழிந்தொழிந்தன. (3)

காற்றென்றே யிருந்திட்டார் காலையிலே
மாலையிலே கடுங்காற் றாகிக்
கூற்றென்றே உருக்கொண்டு கூ! கூ! வென்
றேயார்த்துக் குமைத்தல் கண்டார்
மாற்றொன்றும் அறியாதே மாந்தரெலாந்
திகைத்திட்டார் மகார்கள் தம்மைப்
போற்றும்வகை அறியாதே தாயரழப்
புதல்வர்களும் பொருமி னாரால்.
(அ – ரை.) கூற்று – நமன். ஆர்த்து – ஆரவாரித்து. மகார் – மக்கள். (4)

பட்டினியால் வாடுகின்ற ஏழைகுடில்
பெரும்பொருளே படைத்து வாழ்வோர்
கட்டியுயர் நீண்மாடம் சிறார்பயிலும்
கூடங்கள் சிதைந்து யாவும்
குட்டிநெடுஞ் சுவராகப் பாழ்படுப்ப
அச்சுவரைக் குறுகி நின்றே
ஒட்டியுயிர் ஓம்பினரால் மானிடவர்
சுவரின்றேல் ஒருவ ருய்யார்!
(அ – ரை.) குட்டி நெடுஞ்சுவர் – நீண்ட குட்டிச்சுவர். ஓம்பினர் – பாதுகாத்தார். (5)

ஆடிழந்தேம்! என்றழுதார்! ஆனிழந்தேம்!
என்றழுதார்! அந்தோ! வாழும்
வீடிழந்தேம்! என்றழுதார்! மேதையிலா
மானிடவர்! விண்ணிற் றோயுங்
கோடிருந்தே வாழ்குரங்குங் குதித்தாடும்
அணிற் குழுவும் பிறவுங் கீதம்
பாடிமமகிழ் பறவைகளும் இழந்தேமென்
றழுவாரைப் பார்த்தி லேமால்.
(அ – ரை.) மேதை – பேரறிவு. கோடு – கொம்பு. (6)

‘நில்லாது பொருளுலகின் நில்லாது
யாக்கையிவை நிலையென் றெண்ணி
ஒல்லாத தீவினைசெய் துழலாதீர்!
அறஞ்செய்ம்மின்! உலகீர்!’ என்றே
சொல்லாலே மெய்ந்நூல்கள் சொல்வனவும்
கேளாராய்ச் சுகித்து வாழும்
கல்லாத புல்லருநேர் கண்டுணர
வகைசெய்தான் காற்றுத் தேவன்.
(அ – ரை.) ஒல்லாத – செய்யக்கூடாத. யாக்கை – உடல். (7)

‘சிற்றுயிரும் சிற்றுடலும் சின்னாளும்
உடையீரே! செருக்கேன் மின்னே!
உற்றுயிர்வாழ் உலகெல்லாம் ஒருநொடியின்
நீறாக்கி ஊதித் தீர்ப்பேம்!
பெற்றவுயர் யாக்கையினாற் பெறுபயனும்
பெறீர்தெய்வம் பேணீர்! வீணீர்!
உற்றநும வாழ்க்கையிஃதிங் குறுஞ்சிறுமை
கண்டிமென்’ றுணர்த்தி னானால்!
(அ – ரை) செருக்கு – களிப்பு. பேணீர் – போற்ற மாட்டீர். (8)

காற்றாகி உயிர்க்குயிராய்க் காப்பானும்
நீயொருநாட் கருணை மாறிக்
கூற்றாகிச் சினஞ்சிறந்து கொல்வானும்
நீயென்னில் யாமென் செய்கோம்?
தேற்றாதே பெரும்பாவம் செய்கின்றேஞ்
சிறுமையினாற் செய்கை! தேறிப்
போற்றாதேம்! எனினுமெமைப் பொருளாகச்
சீறுவதோ! புகழான் மிக்கோய்!
(அ – ரை.) செய்கைதேறி – செய்யுஞ் செய்கையில் தெளிவடைந்து. (9)

படைத்திடுவாய் உலகுயிரைப் பரிந்தோம்பிக்
காத்திடுவாய்! பரனே! மீண்டுந்
துடைத்திடுங்கால் காற்றாகிக் கூற்றாகிச்
சூழ்பிணியாய்த் துயரே செய்து
புடைத்திடுவாய் எனினுமிவை அருளென்றே
புகல்கின்றார் புலமை நூலோர்
சடைத்திகழும் பெருமா! நின் றிருவருளே
வெல்கவெனத் தாழ்வே மன்னோ.
(அ – ரை.) பரிந்தோம்பி – அருள்கூர்ந்து. சூழ்பிணி – உண்டாகும் நோய். சடைத்திகழும் – சடைவிளங்கும். (10)

மேலும் அறிய

வியாழன், 3 மே, 2012

ஈகி தென்னவராயன்பட்டு இரா.வேணுகோபால்சாமி(22.11.1911- 25.01.1984) நூற்றாண்டுவிழா



விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ள ஊர் தென்னவராயன்பட்டு என்பதாகும். இங்கு வாழ்ந்த திரு.இராமசாமிக் கண்டர், பரிபூரணம் அம்மையாருக்கு மகனாக வாய்த்தவர் இரா.வேணுகோபால்சாமி ஆவார். ஆசிரியர் பணியாற்றியவர், விக்கிரவாண்டி ஒன்றியத்தின் துணைத்தலைவராகப் பணிபுரிந்தவர். பல்வேறு சமூக நற்பணி இயக்கங்களில் இணைந்து தொண்டுசெய்தவர். அரசியல் ஈடுபாடுகொண்டவர். இவர்தம் மகன் தெ.சஞ்சீவிராயன் ஆவார். இவர் பணிநிறைவுபெற்ற ஆசிரியர்களுக்கான அமைப்பை நிறுவிப் பணியாற்றி வருகின்றார். தம் தந்தையாரின் நினைவைப்போற்றும் வகையில் குடும்பத்தாருடன் இணைந்து தந்தையாருக்கு நூற்றாண்டு விழாவையும், “முன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள்” என்ற நூல்வெளியீட்டு விழாவையும் நடத்துகின்றார். பேராசிரியர் த.பழமலை ஏற்பாட்டில் நடக்கும் நூல்வெளியீடு, நூற்றாண்டுவிழாவில் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.


இடம்: செயசக்தி திருமண மண்டபம்,(ரெட்டியார்மில்), கிழக்குப் புதுச்சேரி சாலை,விழுப்புரம்,

நாள்:12.05.2012(சனிக்கிழமை) நேரம்; காலை 10 மணி

விழாத்தலைமை: வே.ஆனைமுத்து

வரவேற்பு ஆசிரியமாமணி தெ.வே.சஞ்சீவராயன்

முன்னிலை: செஞ்சி ந.இராமச்சந்திரன், முனைவர் க.பொன்முடி, மருத்துவர் இராமதாசு, கு.இராதாமணி, மு.சீத்தாராமன்

ஈகி இரா.வேணுகோபால்சாமி படத்திறப்பு: வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்

“முன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள்” நூல்வெளியீடு:
புதுச்சேரி மாநில முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள்

பாராட்டுரை:

எஸ்.ஜெகத்ரட்சகன்(மத்திய அமைச்சர்)
வ.சபாபதி (புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர்)
தி.ப.இ,ஆ.செல்வம் (புதுச்சேரி சட்டப்பேரவைத் துணைத்தலைவர்)
கல்வியாளர் சாமிக்கண்ணு.
பேராசிரியர் த.பழமலை
பனப்பாக்கம் கு.சீத்தா.
பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா,
கு.இறைவன்,
ந.இறைவன்(ஆசிரியர், அச்சமில்லை)
புலவர் கி.த.பச்சையப்பன்,
புலவர் நாகி.
புலவர் சீனு.இராமச்சந்திரன்,
இயக்குநர் வ.கௌதமன்,
சொல்லாய்வுச்செல்வர் சு.வேல்முருகன்

உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாராட்டுரை வழங்குவர்.

புதன், 2 மே, 2012

கீழ்மாவிலங்கைச் செலவு…


குடைவரைச்சிற்பம்(நரசிங்கப்பெருமாள்)


விழுப்புரம் மாவட்டம் புளியங்காட்டிலிருந்து(திண்டிவனம்) வந்தவாசி செல்லும் சாலையில் 12 கல் தொலைவில் உள்ளது கீழ்மாவிலங்கை என்னும் ஊர். பத்துப்பாட்டு நூலுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் வரும் ஒய்மாநாட்டு நல்லியக்கோடன் என்ற அரசனின் நகரமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக “மாவிலங்கை” விளங்கியது. இந்த “மாவிலங்கை” என்பதுதான் இன்று கீழ்மாவிலங்கை, மேல்மாவிலங்கை என்று அழைக்கப்படுகிறது (சிற்றூர்களில் கீழைத்தெரு, மேலைத்தெரு என்று அழைப்பதுபோல்). மாவிலங்கை பற்றியும் அதனை ஆண்ட நல்லியக்கோடன் பற்றியும் சிறபாணாற்றுப்படை.

“தொன்மா இலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா இலங்கை மன்னருள்ளும்
மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்
உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்” (சிறுபாணாற்றுப்படை 119-122)

என்று குறிப்பிடுகின்றது.

மாவிலங்கை பற்றிய குறிப்பு புறநானூற்றிலும் உண்டு.

”இழுமென வொலிக்கும் புனலம் புதவிற்
பெருமா விலங்கைத் தலைவன்” (புறம் 176: 5-6)

நான் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தபொழுது கிழமைக்கு இருமுறை பேருந்தில் இந்த ஊரைக் கடந்துசெல்வேன். அப்பொழுதெல்லாம் பல்லவர்காலக் குடைவரைக்கோயில் ஒரு கல் தொலைவில் இருப்பதை முதன்மைச்சாலையில் உள்ள கைகாட்டிப் பலகை வழியாக அறிந்து, அந்தக் கோயிலை என்று பார்ப்பது? என்று வேட்கை மீதூரச்செல்வது உண்டு. புதுச்சேரிக்குப் பணிக்கு வந்த பிறகு அந்தச் சாலையைக் கடக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. என்றாலும் பத்துப்பாட்டு நூல் நினைவுக்கு வரும்பொழுதெல்லாம் மாவிலங்கை நினைவு அடிக்கடி வந்துபோகும்.

இன்று(01.05.2012) மேநாள் விடுமுறை நினைவுக்கு வந்தது. காலை எட்டுமணிக்குக் கணினி வல்லுநர் திரு.முருகையன் அவர்களிடம் மாவிலங்கைச் செலவு பற்றி நினைவூட்டினேன். காலை பத்துமணிக்கு வீட்டிற்கு வருவதாக உரைத்தார். ஆயத்தமாக இருந்தேன். அவரின் உந்துவண்டியில் காலை 10 மணிக்குப் புறப்பட்டோம்.

காலை 7 மணிக்கெல்லாம் புதுவையில் வெயிலின் வெப்பம் வாட்டி எடுத்துவிடுகின்றது. பத்துமணிக்கு வெயிற்கொடுமையைக் கேட்கவே வேண்டாம். புளியங்காட்டை(திண்டிவனம்) ஒருமணி நேரத்தில் கடந்தோம். நிழலுக்குக் கூட ஒதுங்க மரம் இல்லை. பெருவழிப்பாதைக்கு அனைத்தையும் வெட்டிவீழ்த்திவிட்டனர். சிற்றூர்மக்கள் பேருந்து ஏறக்கூட நிழற்குடை இல்லாமல் பெரிதும் வாடுகின்றனர். நீண்டதூரம் செல்பவர்களுக்குக் கொண்டாட்டம். உள்ளூர் மக்களின் நிலை வருந்துவதற்கு உரியதாகும். புளியங்காட்டில் குளிர்க்குடிப்புக்கு ஐந்து நிமையம் வண்டியை நிறுத்தினோம்.

மீண்டும் பன்னிருகல் தூரத்திற்கு வண்டி ஓடியது. கீழ்மாவிலங்கை பலகை தெரிந்தது. முதன்மைச்சாலையில் வண்டியை நிறுத்திப் படம் எடுத்துகொண்டோம். கிளைச்சாலை வழியாக ஊரை அடைந்தோம். அன்று ஊரில் ஒரு கூட்டம் நடப்பதாகவும், ஊருக்குத் தில்லியிலிருந்து அதிகாரிகள் வருவதாகவும் அறிந்தோம். ஊர் மாக்கோலம் இட்டு அழகுசெய்யப்பட்டிருந்தது.

ஊர் முகப்பில் பல்லவர்காலக் குடைவரை கண்ணுக்குத் தெரிந்தது. துருப்பிடித்த கைகாட்டிப்பலகை சாலையில் இருந்தது. குடைவரையை ஒட்டி அரசின் எச்சரிக்கைப் பலகை ஒன்று இருக்கின்றது. குடைவரைக் கல் சிறிய அளவில் இருக்கின்றது.இக்கல்லின் ஒரு பகுதியில் நரசிங்ககப்பெருமாள் சிலையாக வடிக்கப்பெற்றுள்ளார். இந்தச்சிலையைப் பாதுகாக்கும் நோக்கில் இரும்புக்கதவு ஒன்று அமைத்துள்ளனர், பூட்டு இல்லாததால் அதனைத் திறந்து நரசிங்கப்பெருமாளைப் படம் எடுத்துக்கொண்டோம். கற்பாறையைச் சுற்றி நோட்டமிட்டோம்.

நண்பர் முருகையன் ஆசீவகச் சமயம் சார்ந்தும் அதன் இறைநிலை வளர்ச்சி குறித்தும் நல்ல அறிவுடையவர். அதுபோல் இயக்கி, இயக்கர் பற்றியும் நன்கு அறிந்தவர். கற்படுக்கைகள் குறித்த நல்லறிவும் அவர்க்கு உண்டு. அவர் கற்பாறையைச் சுற்றிப்பார்த்து இங்குக் கற்படுக்கைகள் இருந்திருக்க வேண்டும் எனவும், பிற்காலத்தில் இவை அழிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார். கற்படுக்கைகள் இருக்கும் இடத்தில் பாறைகளில் பெய்யும் மழைநீர் படுக்கைக்கு வராதபடி வெட்டி நீர் வெளியேறும் வழி அமைப்பது உண்டு என்றார். அதற்கான தடயங்கள் உள்ளன என்று காட்டினார். பாறையின் பின்பகுதி உடைக்கப்பட்டுள்ளமைக்கான தடயங்கள் தெரிந்தன. பல கோணங்களில் படம் எடுத்துக்கொண்டோம். அந்தக் குடைவரைச் சிற்பத்தில் உள்ளூர் மக்கள் சங்கு சக்கரம் உள்ளிட்டவற்றை இப்பொழுது வரைந்துள்ளனர். பலவாண்டுகளாகப் பராமரிக்கப்படாததால் உருவம் தேய்ந்து காணப்படுகின்றது.

குடைவரைச் சிற்பத்தைப் பார்த்தபிறகு ஊர் மக்கள் சிலரைப் பார்த்து உரையாடினோம். இந்தச் சாமி சிலையை மூக்கறுத்தான் சாமி என்று அழைப்பதாகக் கூறினர். அதிக அளவில் பாறைகள் இருந்ததாகவும் இதனை மக்கள் வெடிவைத்து வெட்டி எடுத்துவிட்டனர் என்றும் கூறினர். அருகில் சில பாறைகள் உள்ளன. அங்கும் இதுபோல் சிற்பங்கள் உள்ளனவா என்று கேட்டோம். அங்கு உழவுத்தொழிலில் ஈடுபட்டுவரும் திரு.சுப்பிரமணியன் என்பவர் எங்களுக்குச் சில விளக்கங்களைச் சொன்னதுடன் அவர் மனைவியைத் துணைக்கு அனுப்பி அங்குள்ள சில பாறைகளைக் காட்டும்படி கூறினார்.

நாங்கள் வயல்வரப்புகள் வழியாகச்சென்று ஒரு பெரும் பாறையைப் பார்த்தோம். அங்குக் கன்னிமார் சுவாமிகள் வழிபாடு நடந்துள்ளதை அந்த அம்மா குறிப்பிட்டார்(கன்னிமார் சுவாமிகள் வழிபாட்டில் ஈடுபடும் இருளர் இன மக்கள் அருகில் உள்ள ஊரில் உள்ளதையும் நினைவூட்டினார்). கன்னிமார் சுவாமிகளுக்கு மஞ்சள் அறைக்கும் இடம் இது என்று சில இடங்களைக் காட்டினார். அங்குப் பாறையில் சுனைநீர் என்றும் வற்றாமல் இருக்கும் என்றும் அந்த அம்மா குறிப்பிட்டார்கள். மழைக்காலங்களில் பாறையின் பள்ளமான பகுதியில் தேங்கும் மழைநீரைத்தான் சுனைநீராகக் குறிப்பிடுகின்றனர் என்று அறிந்தோம்.

அருகில் இருந்த ஆழ்துளைக் கிணற்றின் நீரில் முகம் கழுவி வெயில் களைப்பைப் போக்க நினைத்தோம். பகல் ஒரு மணிக்கு வெயில் கண்ணை மறைத்தது. ஊர் பற்றிய மேலும் சில விவரங்களைத் திருவாளர் சுப்பிரமணி குறிப்பிட்டார். நாங்கள் பேசிக்கொண்டிருந்த இடம் ஊரின் எல்லைப்பகுதியாக இருந்தது.

இங்கு ஒரு நடுகல் இருப்பதை நண்பர் முருகையன் கவனித்து அங்குச்சென்று பார்த்தோம். ஆனால் அந்த நடுகல்லை அடையாளம் காணமுடியாதபடி ஊரார் மஞ்சள் பூசி, பொட்டு இட்டு ஆடை அணிவித்து வைத்திருந்தனர். சற்று உற்றுநோக்கிய நாங்கள் இது நடுகல்லாக இருப்பதற்கு வாய்ப்பு மிகுதி என்று முடிவுக்கு வந்தோம். அந்தக் கல்லைத் தூய்மையாகக் கழுவி அந்தக் கல்லில் உள்ள வெட்டு உருவங்களை அடையாளம் கண்டால்தான் இது நடுகல்லா, அல்லது புதிய உருவமா என்று முடிவுக்கு வர இயலும். ஆர்வமுடைய தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டால் சில உண்மைகள் கிடைக்கும். இந்தச் சிலையை ஊர்மக்கள் அம்மனாகப் பார்க்கின்றனர்.வழிபடுகின்றனர். திருமணம் ஆகாத பெண்கள் இந்தச் சிலையை வழிபட்டால் திருமணம் நடக்கும் என்று நம்புகின்றனர்.

எட்டியம்மன் என்ற ஒரு கோயிலும் இந்த ஊரில் உள்ளது. இது இடக்கி என்று முன்பு அழைக்கப்பட்டது. எட்டியம்மன் என்று தெய்வத்தை அழைக்கின்றனர். இங்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு எட்டியம்மா, எட்டியப்பன் என்று பெயர் சூட்டுவது வழக்கம் ஆணாக இருந்தால் எட்டியப்பன், பெண்ணாக இருந்தால் எட்டியம்மா என்று பெயர் வைப்பது உண்டு. அதன் பிறகுதான் வேறுபெயர்கள் வைக்கப்படும். இங்கு வன்னியக்கவுண்டர்கள் வாழ்கின்றனர். 470 குடும்ப அட்டைகள் உள்ளன. 350 குடும்ப அட்டைகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளதாக அறிந்தோம். படித்தவர்கள் வெளியூரில் வாழ்வதாக அறிந்தோம்.

ஊரல், பட்டணம் என்ற பெயரில் இன்றும் அங்கு ஊர்கள் உள்ளன. மாவிலங்கையும் வரலாற்றைச் சுமந்து நிற்கின்றது இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இந்த மாவிலங்கை ஊர் பற்றியும், இங்கு வாழும் மக்கள் பற்றியும் ஆய்வு செய்ய மானுடவியல், தொல்லியல், வரலாற்றியல்துறை சார்ந்த மாணவர்கள் ஆய்வாளர்கள் ஆண்டுக்கணக்கில் தங்கி ஆய்வுசெய்ய முன்வந்தால் பழமையை வெளிக்கொண்டுவரமுடியும்.

பகல் ஒன்றரை மணிக்கு அந்த மாவிலங்கை மாநகரை விட்டுப் புறப்பட்டோம். வெயிலுக்கு வாய்ப்பாக வழியில் பனை நுங்கு விற்பனையைக் கண்டோம். ஒரு சிறுமி பனங்காயைக் கூடையில் வைத்து வெட்டி விற்பனை செய்தாள். பனங்காயை வெட்டித்தரும்படி கேட்டோம். ஆர்வமுடன் வெட்டித்தந்தாள். படிக்கின்றாயா? என்றேன். ஒன்பதாம் வகுப்பு இந்த ஆண்டுமுடித்துள்ளதாகக் கூறினாள். பெயர் என்ன என்றேன். இளவெயினி என்றாள். அந்த நேரத்தில் சிறுவன் ஒருவன் மிதிவண்டியில் பனங்காயை வைத்துகொண்டுவந்தான். அவன் அந்தப்பெண்ணின் உடன்பிறப்பு என்று அறிந்தேன். அவன்பெயர் கேட்டேன். வளையாபதி என்றான். இன்னும் வீட்டில் உடன்பிறந்தார் உண்டா? என்றேன். அக்காள் பெயர் இளமதி என்றும் பொறியியல் படிப்பதாகவும் குறிப்பிட்டனர். இவ்வளவு அழகான தமிழ்ப்பெயர் சூட்டியுள்ள அவர் தந்தையாரைப் பற்றியும் வினவினோம். குறைந்த அளவு படித்த அவர்களின் தந்தையார் உழவுத்தொழில் செய்வதாகக் குறிப்பிட்டனர். ஊரல் என்ற ஊரைச்சேர்ந்த அந்தத் தந்தையாரின் தமிழ்ப்பற்றைப் போற்றினேன். அவர்களின் தமிழ்ப்பற்றைப் போற்றும் முகமாக அதிக அளவு பனங்காயை வாங்கி உறிஞ்சினோம். அந்தச் சிறுவர்களுக்குப் பயன்படும்வகையில் உரிய காசைக் கொடுத்து மகிழ்ச்சியுடன் விடைபெற்றோம். வெயில் வெப்பத்தையும் மீறி அந்தத்தமிழ்ப்பெயர்கள் வீசுதென்றலாக மனதை இதப்படுத்தின.


வழிகாட்டிப் பலகை


திசைகாட்டி


கீழ்மாவிலங்கை நுழைவுவாயில்


குடைவரை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு


அரசின் பாதுகாப்பு அறிவிப்பு


பல்லவர் காலக்குடைவரையின் தூரக்காட்சி


குடைவரைச்சிற்த்தின் அருகில் முருகையன்


குடைவரைச்சிற்பம் அருகில் மு.இளங்கோவன்


நடுகல்(ஒப்பனையில்)



நடுகல்


தண்டுமாரியம்மன் பின்புறம்


இடக்கியம்மன்


கீழ்மாவிலங்கைப் பள்ளி