நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்கிற பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது(07.01.2010 மாலைமலர்). தமிழ் அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள் எல்லாம் விழிப்புற வேண்டிய காலகட்டம் இது.

மேடைகளிலும், அச்சிலும் பரவுவதற்கு முன்பே இணையத்தில் இது தொடர்பான விவாதங்கள் வேகமாக உலவி வருகின்றன. இணையம் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவுவதால் சென்னை,பெசண்டு நகரில் நடப்பதைக் கோடம்பாக்கத்தில் இருப்பவர்கள் அறிவதற்கு முன்பே உலகத் தமிழர்கள் தெரிந்துகொள்கின்றனர்.

'வடவேங்கடம் தென்குமரி' எல்லை கடந்து தமிழும், தமிழர்களும் உலகெங்கும் பரவியிருப்பதால் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும் தமிழ் பற்றி இனி முடிவு செய்யமுடியாது. அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருப்பவர்களையும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

தமிழகத்தில் ஒரு கருத்துப்பொறி வெளிப்படுவதற்கு முன்பே இணையத்தில் தமிழர்கள் கருத்துச் சொல்லத் தொடங்கிவிடுகின்றனர். அவ்வகையில் தமிழக அரசு நடத்த உள்ள தமிழ்ச்செம்மொழி, தமிழ் இணைய மாநாடு பற்றி இணையத்தில் பலரும் பலவகையில் உரையாடி வருகின்றனர். அதில் ஒன்று தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய உரையாடலாகும்.

தமிழ் எழுத்துகள் காலந்தோறும் மாறி வந்துள்ளன என்பது வரலாறு. பானை ஓடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், பனை ஓலைகள், அச்சு, கணிப்பொறி என்று பயன்பாட்டுப் பொருளுக்கு ஏற்பத் தமிழ் எழுத்துகள் வரிவடிவ வேறுபாட்டுடன் எழுதப்பட்டு வருகின்றன. தொல்காப்பியர், வீரமாமுனிவர், பெரியார் காலத்தில் தமிழ் எழுத்துகள் தேவை கருதி வடிவ மாற்றங்களைச் சந்தித்துள்ளன.

பழைமைக்குப் பழைமையாக விளங்கும் தமிழ் புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் மொழியாகவும் விளங்குகிறது. கல்வெட்டில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள் கணிப்பொறி வந்த பிறகு எந்த வகையான இடையூறும் இன்றி அதில் பயன்பாட்டுக்கு வந்தது. கணிப்பொறி அறிமுகமான சூழலில் தமிழார்வம் உடைய பொறியாளர்கள் சிலர் கணிப்பொறிக்கு ஏற்பத் தமிழ் எழுத்து வடிவங்களை மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். ஆனால் அறிஞர் வ.சுப.மாணிக்கம் போன்றவர்கள் இதனை எதிர்த்தனர்.

தமிழ் எழுத்தைத் திருத்த வேண்டும் என்பவர்கள், தந்தை பெரியார் திருத்தி எழுதியதை முன்னுதாரணமா கக் காட்டுகின்றனர். பெரியார் ண,ல,ள,ற,ன என்ற ஐந்து எழுத்துகளும் ஆ,ஐ.ஒ,ஓ, என்னும் நான்கு எழுத்துகளுடன் இணைந்த(ணா,ணை,ணொ,ணோ,லை, ளை,றா, றொ,றோ,னா,னை,னொ,னோ என்று ) 13 எழுத்து வடிவங்களைச் சீர்மைப்படுத்தினார். இது சீர்மைப்படுத்தம் ஆகும். முன்பே பெரியார் எழுத்துத் திருத்தம் தேவை என்று வலியுறுத்தியதுடன் அதனை 1935 முதல் தம் விடுதலை ஏட்டில் நடைமுறைப்படுத்தினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு 1978 இல் தமிழ்நாட்டு அரசு தந்தைபெரியாரின் வடிவ மாற்றத்தினை ஏற்றுக்கொண்டு அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஓர் ஆணையிட்டது.

அதன் பிறகு எந்த மாற்றமும் வேண்டாம் என்பது தமிழறிஞர்களின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. ஆனால் சில அறிஞர்கள் இ,ஈ,உ,ஊ எழுத்துகளில் மாற்றம் வேண்டும் எனவும் அவ்வாறு மாற்றினால் 4 x 18 = 72 எழுத்துகளில் சீர்மை காணப்படும் எனவும் வாதிடுகின்றனர். ஆனால், இதைச் சீர்மை என ஏற்றுக்கொள்ள முடியாது. இது முற்றாக மாற்றம் ஆகும். இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.நாம் எழுதும் சொற்களில் இவ்வகை எழுத்துகள்தான் (அதாவது கி,கீ,மு,மூ) அதிகம் புழங்குகின்றன. இவ்வாறு வரும் 72 எழுத்துகளைப் புதிய குறியீடுகளால் எழுதத் தொடங்கினால் கற்றவர்களால் தமிழைப் படிப்பதே இயலாததாகிவிடும். புதியவர்கள் எப்படித் தமிழ் கற்பார்கள்?ஆகவே, சீர்மைக்கும் மாற்றத்திற்கும் அறிஞர்கள் வேறுபாடு உணர வேண்டும்.

இவ்வாறு முப்பதாண்டுக் காலம் எழுத்துத்திருத்தம் வலியுறுத்திவரும் அறிஞர்கள் எதிர்வரும் செம்மொழி மாநாட்டில் தங்கள் விருப்பத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கின்றனர். இவர்களை உலகெங்கும் பரவி வாழும் தமிழறிஞர்களில் பெரும் பிரிவினர் இணையம் வழியாகக் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொருவரும் தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற போர்வையில் திருத்த முனைந்தால் தமிழ்மொழியின் அமைப்பு கட்டுக்குலையத் தொடங்கும் எனவும் இத்தகு செயலால் இதுவரை அச்சான நூல்களைப் படிப்பதில் மிகப்பெரிய சிக்கல் எழும் என்கிற கருத்து வலியுறுத்தப்படுகிறது. எளிமைப்படுத்த என்று முனைந்து தமிழ் வளர்ச்சிக்கு இடையூறு செய்துவிடக்கூடாது என்கிற நியாயமான அச்சத்தையும் பல அறிஞர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சீன, சப்பான் மொழிகள் சிக்கலான குறியீடுகளையும் அதிக எண்ணிக்கையிலான எழுத்துக்களையும் கொண்டுள்ளன. அவர்கள் இதுபோன்ற திருத்த வேலைகளில் ஈடுபடாமல் உலகில் வெளிவரும் அறிவு நூல்களை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வகையிலும் மொழிபெயர்க்கப்பட்டவற்றை மக்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் வகையிலும் செயல்படுகின்றனர். தாய்மொழிவழிக் கல்விக்கு அங்கெல்லாம் முதன்மையிடம்தான். ஆனால் இங்கு அந்த நிலையில்லை.

பெரும்பாலான தமிழறிஞர்கள் கணிப்பொறி நுட்பம் அறியாதவர்களாக இவ்வளவு காலமும் இருந்ததால் கணிப்பொறிக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்கிற முழக்கம் முன்பு காதுகொடுத்துக் கேட்கப்பட்டது. இம்முழக்கம் இப்பொழுது வலுவிழந்துவிட்டது. ஏனெனில் தமிழறிஞர்கள் இப்பொழுது மடிக்கணினியுடன் வலம்வரத் தொடங்கிவிட்டனர். மதுரையில் அமர்ந்தபடி ஒரு பேராசிரியர் அமெரிக்காவில் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளருக்குச் சிலப்பதிகாரம் நடத்தும் அளவிற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். எனவே தமிழ் எழுத்துத் திருத்தம் என்றவுடன் இது கணிப்பொறி தெரிந்தவர்கள் எடுக்க வேண்டிய முடிவு என்கிற காலம் மலையேறிவிட்டது. தமிழும்,மொழியியலும், கணினியும், இணையமும் அறிந்த தமிழ்ப்பேராசிரியர்களைக் கேட்டு எடுக்க வேண்டிய முடிவாகிவிட்டது.

கனடா நாட்டில் வாழும் அறிஞர் ஈழத்துப்பூராடனார்(அகவை 82) முதன்முதலாகக் கணிப்பொறி கொண்டு அச்சிட்டு நூல் வெளியிட்டவர் (1984).அவர் நூற்றுக்கணக்கான நூல்களைப் பழைய எழுத்து முறையிலேயே இன்றும் வெளியிட்டு வருகிறார்.இனியும் தொடர்ந்து வெளியிட உள்ளதாகவும் எழுத்துச் சீர்திருத்தத்தால் அச்சிடும் இடம்,தாளின் அளவு,செலவு அதிகரிக்குமே தவிர வேறொரு பயனும் இல்லை என்கிறார். பிற நாடுகளில் நூலகங்களில் உள்ள நூல்களைப் படிக்க ஆள் இல்லாமல் போவார்கள் என்று குறிப்பிடும் அவர் இன்று கல்வெட்டுகளை,ஓலைச்சுவடிகளைப் படிக்க ஆள் தேடுவதுபோல் எதிர்காலத்தில் தமிழ் நூல் படிப்புக்கு ஆள்தேடும் நிலையைத் தமிழுக்குப் புதிய எழுத்துச்சீர்திருத்தம் உண்டாக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்.

எழுத்துத் திருத்தத்தில் கவனம் செலுத்துவதற்கு மாறாக நம் இணையப்படைப்புகள் உலகம் முழுவதும் செல்வதால் அதற்கேற்ற ஒருங்குகுறியில்(யுனிகோடு)கவனம் செலுத்த வேண்டும். தரப்படுத்தப்பட்ட எழுத்துகளில் இணையத்தில் இருக்கும் படைப்புகள் யாவும் ஒருங்குகுறிக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். குறிப்பாகத் தமிழர்களின் பொதுச்சொத்தான தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளம் முதலில் ஒருங்குகுறிக்கு மாறவேண்டும். அதனை அடுத்துத் தமிழக அரசின் தளம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தளம் யாவும் உடனடியாக ஒருங்குகுறிக்கு மாற வேண்டும்.

ஏழாண்டுகளாக(2003) ஒருங்கு குறி பயன்பாட்டுக்கு வந்து உலகெங்கும் இவ்வகை எழுத்துகள் பயன்பாட்டில் இருப்பதைப் புறக்கணிக்கக்கூடாது. தரப்படுத்தப்பட்ட எழுத்துகள் ஒருங்குகுறிக்கு மாற்றுவதற்கு ஆகும் காலம் மிகவும் குறைவாகும். செலவு இல்லை என்றே சொல்லலாம். அரசும் அனைத்துத் துறையினரும் தமிழ் ஒருங்குகுறி எழுத்தில்தான் அச்சிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் தமிழ் வளங்கள் உலகம் முழுவதும் பரவும்.எனவே உலகத் தமிழர்களுக்கு இனிப்பான செய்தி தர அரசு நினைத்தால் ஒருங்குகுறியை ஏற்று அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும்.

தமிழகத்தில் புற்றீசல் போல ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகிவிட்டன. அனைத்துப் பிள்ளைகளும் ஆங்கில நூல்களைப் படிக்கின்றனர். அவ்வாறு இருக்கத் தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.அதனையும் இல்லாமல் செய்யும் நிலைக்கு எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்துவிடும் எனத் தமிழ்ப்புலவர்கள் அஞ்சுகின்றனர்.எனவே எழுத்துத்திருத்தம் பற்றி இனி யோசிக்கத் தேவையில்லை. எழுதப்பட்டுள்ள நூல்களைப் படிக்க தமிழ்வழிப் பள்ளிகளை அரசு நடத்த வேண்டும் என்பதும் தமிழ்வழிக் கல்விக்கு அரசு ஆணையிடவேண்டும் என்பதும் உலகச்செம்மொழி மாநாட்டின் குறிக்கோளாகவும் அறிவிப்பாகவும் இருக்க வேண்டும் என்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்னும் பழைய எழுத்துவடிவில் எழுதுவதையே வழக்கமாகவும்,வசதியாகவும் நினைக்கும் தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்று கூறி இப்பேச்சுக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் எழுத்துச்சீர்திருத்தம் தொடர்பிலான பாடம்

நனி நன்றி: தமிழ்ஓசைநாளிதழ்,சென்னைப் பதிப்பு(31.01.2010)

1.அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் பேச்சு

2.எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப்போக்கு,கனடாவில் வாழும் பேராசிரியர் செல்வா கட்டுரை இங்கே

3.தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத்துச்சீர்திருத்தம் பற்றி இங்கே

2திரு.இரவியின் கட்டுரை இங்கே

4.மலேசியா திரு.சுப.நற்குணன் கட்டுரை இங்கே

5.தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய கட்டுரையறிய
எழுத்து மாற்ற வரலாறு என்ற பகுதியைப் பார்க்கவும்

6.திருவாளர் பெரியண்ணன் சந்திரசேகரன் அவர்களின் அரிய கட்டுரை

7.கணியத்தமிழ் நிறுவனம் வா.செ.கு எழுத்துருக்கான அறிவிப்பு

சனி, 30 ஜனவரி, 2010

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நடந்தது...

தமிழ்வெளி திரட்டியை அறிமுகப்படுத்தும் நான் 

ஓராண்டுக்கும் மேலாகத் திட்டமிட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவதற்கு ஏற்பாடு செய்தோம். தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பனார் அவர்களின் பெரும் முயற்சியிலும் திட்டமிடலிலும் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ.செயதேவன் அவர்கள் கணிப்பொறி, இணையம் பயன்படுத்தி ஆய்வு செய்யும் பேராசிரியர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். எனவே அவர்களை வாழ்த்துரைக்க அழைக்க முன்பே முடிவு செய்திருந்தோம். மேலும் கணினி, இணையத்துறையில் தொழில்நுட்பம் தெரிந்துகொண்டு அடக்கமாகப் பணிபுரிபவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்களும் முன்பே பல பயிலரங்குகளில் கலந்துகொண்டு எனக்கு ஒத்துழைப்பு நல்கியவர்களுமான தமிழ்நிலவன், முரளி, ஒரிசா பாலு, விசயகுமார் (சங்கமம் லைவ்) ஆகியோர்கள் பங்குபெற்றால் நிகழ்ச்சியைச் சிறப்பாக அமைக்கலாம் என்று பேராசிரியரிடம் தெரிவித்து இசைவு பெற்றேன். அனைவருக்கும் எழுதியதும் அனைவரும் வருவதாக ஒத்துக்கொண்டனர். இது நிற்க. 

 இப்பயிலரங்கச் செய்தி பல்வேறு வலைப்பதிவர்களாலும், இணையத் தளங்களாலும் உலகிற்கு அறிவிக்கப்பட்டது. தமிழ்வெளி திரட்டி தம் முகப்புப் பக்கத்தில் வைத்து நிகழ்ச்சி சிறக்க உதவியது. மேலும் தட்சு தமிழ்,பதிவுகள்(கனடா) சென்னை ஆன்லைன் உள்ளிட்ட இதழ்கள் தங்கள் பக்கங்களில் செய்திகளை வெளியிட்டன. இணையத்துறையில் சிறு பயன்பாட்டு முயற்சி நடந்தாலும் ஓடிச்சென்று பாராட்டும் இயல்புகொண்ட கணித்தமிழார்வலர்கள் பலரும் தனிமடலிலும் குழு விவாதங்களிலிலும் வாழ்த்தினர். 

  29.01.2010 இரவு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தில் தங்கிக்கொள்ள எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெங்களூரிலிருந்து தமிழ்நிலவனும், கிருட்டினகிரியிலிருந்து செல்வமுரளியும். சென்னையிலிருந்து பேராசிரியர் செயதேவனும், பாலு அவர்களும் இரவு வந்துவிட்டனர். நான் மட்டும் புதுச்சேரியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு காலை 8 மணிக்குத் தில்லையை அடைந்தேன். பாலு அவர்கள் திருமுதுகுன்றம் சென்று அங்கிருந்து சில வரலாற்று முதன்மையான இடங்களைப் பார்வையிட்டபடி தில்லைப் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தார். நானும் புலவர் வி.திருவேங்கடமும் (அகவை 73). இவர் இப்பொழுது தமிழ்த் தட்டச்சு பழகி இணையத்தில் உலாவருகிறார்). 

 ஒரிசா பாலுவுடன் இணைந்துகொண்டு விருந்தினர் இல்லம் சென்றோம். நிலவன் முரளி, பேராசிரியர் செயதேவன் உள்ளிட்ட அனைவரும் சிற்றுண்டிக்குப் பிறகு விழா நடைபெறும் அரங்கிற்குச் சென்றோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று (30.10.2010) காலை 10.15 மணிக்குத் தொடக்கவிழா எளிமையாக நடந்தது. 

 தமிழ்த்துறையின் சார்பில், பொறியியல் கல்லூரியில் உள்ள கணினித்துறை அரங்கில் நடைபெற்ற பயிலரங்கின் தொடக்க விழாவில் தமிழ்த்துறைத் தலைவரும் மொழிப்புல முதன்மையருமான பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழகப் பல்கலைக்கழங்களில் முன்னோடிப் பல்கலைக்கழகமான இங்குத் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுவதால் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கணினி, இணையத்தில் பெரிய அளவில் பங்களிப்பு செய்யமுடியும் எனவும் ஆய்வுத்துறையில் முன்னோடியாக விளங்கமுடியும் என்றும் முத்துவீரப்பன் கூறினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கணினித்துறைத் தலைவர் பேராசிரியர் இராமலிங்கம் அவர்கள் வாழ்த்துரையில் கணினி, இணையத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். 

  சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைப் பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தமிழ் ஆய்வுலகில் ஈடுபடுபவர்களுக்குக் கணினியும், இணையமும் பெரிய அளவில் பயன்படுகிறது என்று கூறியதுடன் சென்னைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள தமிழ்ப் பேரகராதிக்கு உரிய அரிய நூல்கள் சிலவற்றின் விவரங்களை இணையத்தின் வழியாக அறியமுடிந்தது என்று கூறி அனைத்துத் தமிழ் அறிஞர்களும் இணையத்தைப் பயன்படுத்து வேண்டும் என்று வேண்டுகோளை வைத்தார். குறிப்பாக ஈழத்துப்பூராடனாரின் நீரர நிகண்டு, பே.க.வேலாயுதத்தின் சங்கநூற் சொல்லடியம் என்ற இரு அரிய நூல்களைத் தாம் இணையத்தின் வழியாகப் பெற்றதைச் சிறப்பாகக் குறிப்பிட்டார். 

    நான் தமிழ் இணையப் பயிலரங்கம் பற்றிய அறிமுக உரையாற்றினேன். பின்னர் 11 மணிக்குத் தொடங்கிய பயிலரங்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் ஐம்பதின்மர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இன்று உள்ளூர் விடுமுறை என்பதாலும் (வடலூர் தைப்பூசம்) சிலர் புத்தொளிப் பயிற்சிக்குச் சென்றதாலும் எண்ணிக்கை அளவுக்குள் இருந்தது. இவர்களுக்குத் தமிழ் இணையம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் காட்சி வழியாக விளக்கினேன். இதில் தமிழ் 99 விசைப்பலகையின் அமைப்பு, தட்டச்சிடும் முறை, மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், மின்னஞ்சல் செய்வது, உரையாடுவது, வலைப்பூ உருவாக்குவது பற்றி எடுத்துரைத்தேன். நண்பர்கள் முரளியும், நிலவனும் தொழில்நுட்பப் பகுதியைக் கவனித்துக்கொண்டனர். சிறிதும் குறைபாடு இல்லாமல் பயிலரங்கம் நிகழ்ந்தது. 

  தமிழில் புகழ்பெற்ற இணையதளங்களான மதுரைத்திட்டம், தமிழ்மரபு அறக்கட்டளை, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய நூலகம், புதுச்சேரி பிரஞ்சு நிறுவன நூலகம், விக்கிப்பீடியா தளம் உள்ளிட்ட பல தகவல்களை எடுத்துக்காட்டினோம். காந்தளகம் தளம் உள்ளிட்டவற்றை விளக்கினோம். பன்னிரு திருமுறை மிகச்சிறப்பாக அத்தளத்தில் இடம்பெற்றுள்ளதை அவைக்கு நினைவுப்படுத்தினோம். நூலகம் தளம் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைப் பாதுகாப்பதை எடுத்துரைத்தோம். சுரதா தளத்தின் பன்முகப் பயன்பாட்டை விளக்கினோம். தமிழ் கணினித் துறைக்கு உழைத்த காசி ஆறுமுகம், முகுந்தராசு, கோபி உள்ளிட்டவர்களின் பங்களிப்பை எடுத்துரைத்தோம். தமிழ் விக்கிப்பீடியாவின் அகரமுதலி முயற்சிக்கும் கட்டுரை உருவாக்கத்துக்கும் உழைக்க ஒரு வேண்டுகோள் வைத்தோம். 

  புகழ்பெற்ற எழுத்தாளர்களான மாலன், செயமோகன், இராமகிருட்டினன், பத்ரி இவர்களின் தளங்களை அறிமுகம் செய்தோம். எழுத்துகளை எவ்வாறு ஒருங்குகுறிக்கு மாற்றுவது என்று எடுத்துரைத்தோம். எங்களின் விளக்கவுரைகளைக் கண்டு மகிழ்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியின் கணினித்துறைத் தலைவர் தம் ஆய்வகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான கணிப்பொறிகளைத் தமிழில் தட்டச்சிடும்படியாக மாற்றும்படி ஆணையிட்டார். ஒரு மணிநேரத்திற்குள் அனைத்துக் கணினியும் தமிழ்மயமானது. இன்று தமிழில் வெளிவரும் இணைய இதழ்களை எடுத்துக்காட்டி புகழ்பெற்ற இணைய இதழ்களைக் காட்சிப்படுத்தினோம்.

     தமிழர்கள் உலகத்தை வீட்டில் இருந்தபடியே வலம்வர முடியும் என்று கூறிய நான் கணிப்பொறி,இணையத்தைப் பயன்படுத்த ஆங்கில அறிவு அவசியம் இல்லை என்று கூறியதுடன் தமிழில் அரிச்சுவடி தெரிந்தவர்கள் கூட இணையத்தைப் பயன்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் கூறினேன். வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்கள் ஒரு செல்பேசியில் ஆயிரம் நூல்களை அடக்கிவைத்துள்ள செய்திகளைப் பயிலரங்கில் எடுத்துக்காட்டி விளக்கினேன். பெங்களூர் பேராசிரியர்கள் தமிழில் தட்டச்சிட்டால் தானே படிக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளதையும் எடுத்துரைத்தேன். மாலை அமர்வில் பெங்களூரைச் சேர்ந்த கணினி வல்லுநர் தமிழ் நிலவன், செல்வமுரளி, ஒரிசா பாலு ஆகியோர் இணையதளப் பாதுகாப்பு, இணையத்தில் பணம் சம்பாதிப்பது பற்றி உரையாற்றினர். வலைப்பூ உருவாக்குவது பற்றி விளக்கியதில் நிலவனின் பங்கு மிகுதி. ஒரிசா பாலு தமிழ் ஆய்வுக்குரிய ஆதாரங்கள் உலக அளவில் பரந்து கிடக்கின்றன என்பதைக் காட்சி வழி விளக்கினார். அவரின் விக்கி மேப்பியா விளக்கம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

  ஒரிசா பாலு விளக்கவுரை 

 பல்கலைக்கழகத்தின் மற்ற துறைப் பேராசிரியர்களும் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மாலை ஐந்து மணியளவில் பேராசிரியர் மாலினி அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு பயிலரங்கம் நிறைவுற்றது. கலைந்துசென்ற பேராசிரியர்கள் மெதுவாகப் பேசியது இவ்வாறு எங்கள் காதில் விழுந்தது. "அடுத்த மாதம் சம்பளத்தில் கணினி வாங்குவதுதான் முதல் செலவு". பார்வையாளர்களாகப் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன், பேராசிரியர் இராமலிங்கம்

  பேராசிரியர் பழ.முத்துவீரப்பனும் பேராசிரியர் வ.செயதேவனும்

  முனைவர் பழ.முத்துவீரப்பன் வரவேற்புரை 

  பேராசிரியர் மூவேந்தன், பேராசிரியர் மலர்க்கொடி உள்ளிட்டோர் 

பேராசிரியர்கள்

புதன், 27 ஜனவரி, 2010

எழுத்துச் சீர்திருத்தம் அரசு முயற்சி.மாலைமலரில் செய்தி...


மாலைமலர் செய்தி


தமிழ்ச்செம்மொழி மாநாடு பற்றி உலகத் தமிழர்களிடையே பல்வேறு கருத்துகள் உள்ள நிலையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற ஒரு செயலைத் தமிழக அரசு மேற்கொள்ள ஒரு குழு அமைத்துள்ளதாகவும் இது பற்றிய கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனவும் எழுத்துச்சீர்திருத்தம் கணிப்பொறிக்கு நல்லது எனவும் மாலைமலரில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது(07.01.2010).

உலகெங்கும் உள்ள தமிழர்கள் எழுத்துச்சீர்திருத்தம் கூடாது என்று கூறிவரும் நிலையில் அரசின் அறிவிப்பு பலருக்கும் உவப்பானதாக இல்லை.இது பற்றிய என் கட்டுரையை விரைவில் வெளியிடுவேன்.
மாலைமலரில் வெளிவந்துள்ள செய்தி

சென்னை, ஜன. 7-

தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக தனிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழு அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது.

தமிழ் எழுத்துக்களில் எத்தகைய சீர் திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது பற்றி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்ட பிறகு தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. பிறகு தமிழக அரசு தமிழ் எழுத்து சீர்திருத் தங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

தமிழ் எழுத்துக்கள் ஏற்கனவே பல தடவை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. முதலில் தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் பனை ஓலைச் சுவடிகளில் எழுதுவதற்கு ஏற்ப மாற்றப்பட்டது.

18-ம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டைச்சேர்ந்த ஜோசப் என்ற அறிஞர் தமிழ் அகராதியை உருவாக்கினார். அது தமிழ் அச்சுக்கலைக்கு உதவியாக இருந்தது. எல்லாரும் அவர் செய்த தமிழ் எழுத்து சீர் திருத்தங்களை ஏற்றுக் கொண்டனர்.

1950-களில் திராவிடர் கழக நிறுவனர் ஈ.வெ.ரா. பெரியார் தமிழ் எழுத்துக்களில் ஏராளமான சீர்திருத்தம் செய்தார். இதன் பயனாக தட்டச்சு எந்திரங்களில் தமிழ் எழுத் துக்களை மிக எளிதாக பயன்படுத்த முடிந்தது.

எம்.ஜி.ஆர். தன் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். "லை, னை'' எழுத்துக்கள் பழக்கத்துக்கு வந்தன. முதலில் சிறிது எதிர்ப்பு தோன்றினாலும் நாளடைவில் இந்த எழுத்துக்கள் பழகிவிட்டன.

அது போல தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துவதில் சிரமத்தை குறைக்க தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. கம்ப்ïட்டர்களில் தமிழ் எழுத்துக்களை மிக, மிக சுலபமாக பயன்படுத்த இனி வரும் எழுத்து சீர் திருத்தம் உதவும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

இந்த சீர்திருத்தம் இணைய தளங்களில் தமிழ் பயன் பாட்டை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

நன்றி:மாலைமலர் 07.01.2010

நேரடியாகப் படிக்க இங்கே

செவ்வாய், 26 ஜனவரி, 2010

புதுச்சேரியில் ஈழத்து எழுத்தாளருடன் சந்திப்பு...

புதுச்சேரி இலக்கியம் கலை இலக்கிய நூல் விற்பனையகத்தில் மலையகத் தமிழர், எழுத்தாளர், "கொழுந்து" திங்களிதழ் ஆசிரியர் அந்தனி சீவா அவர்கள் "ஈழ இலக்கியம் ஒரு பார்வை" என்ற தலைப்பில் சிறப்புரையும் கலந்துரையாடலும் நிகழ்த்த உள்ளார்.எழுத்தாளர் சூரியதீபன் (பா.செயப்பிரகாசம்)அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் பாவலர் சீனு.தமிழ்மணி அவர்கள் வரவேற்புரையும் கலை இலக்கியப் பெருமன்றப் பொறுப்பாளர் மு.சி.இரா அவர்கள் நன்றியுரையும் ஆற்றுகின்றனர். அனைவரையும் இலக்கியம் அமைப்பு வரவேற்கிறது.

நாள்: 26.01.2010
நேரம்: சரியாக மாலை 06.00 மணி
இடம்: இலக்கியம்,141,மேல்மாடி,இலெனின் வீதி,குயவர்பாளையம்,புதுச்சேரி.

தொடர்புக்கு : பாவலர் சீனு.தமிழ்மணி +91 9443622366

சனி, 23 ஜனவரி, 2010

புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் மக்கள்இசை தெ.செயமூர்த்தியின் தமிழிசைப்பாடல்கள்


புதுவைத் தமிழ்ச்சங்க வரவேற்புப் பதாகை

புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ்ச்சங்கத்தின் 112 ஆம் மாத நிகழ்வு இன்று 23.01.2010 மாலை 7 மணிக்குத் தமிழர் திருநாள் விழாவாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைப் புலவர் சீனு.இராமச்சந்திரன் அவர்கள் வரவேற்றார். மா.தன. அருணாசலம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழர் திருநாள் குறித்த உரையைக் கல்விச்செம்மல் முனைவர் வி.முத்து அவர்கள் வழங்கினார்.

இரவு 8 மணிக்குப் புதுச்சேரியின் புகழ்பெற்ற மண்ணிசைப் பாடகர் தெ.செயமூர்த்தி அவர்களின் தமிழிசைப்பாடல் நிகழ்ச்சி தொடங்கியது.9 மணிவரை தன் இன்னிய அணியுடன் அரங்கு அதிர மிகச்சிறந்த தமிழிசைப் பாடல்களை வழங்கினார்.நாட்டுப்புற மெட்டில் அமைந்த பல பாடல்கள் நெஞ்சில் தங்கின.பாவேந்தர்,காசி ஆனந்தன்,பெருஞ்சித்தினார்(எந்தக் கட்சியில் நீ இருந்தாலும் என்ற பாடல்.இதனை நான் ஆயிரம் முறையேனும் கேட்டிருப்பேன்.உயிர் கௌவும் பாடல் இது.)செயபாசுகரன்,பரிணாமன் உள்ளிட்ட பாவலர்களின் பாடல்களைப் பாடினார்.

மேலும் தெருக்கூத்து மெட்டில் அமைந்த பாடல்களையும் நாடுப்புறப் பாடல்கள் மெட்டில் அமைந்த பாடல்களையும் பாடி அரங்கில் இருந்தவர்களின் பாராட்டைப் பெற்றார்.இன்னிசை நிகழ்ச்சிக்கு உரிய கொடை வழங்கியவர் கல்வி வள்ளல் வி.முத்து அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.புதுவைத் தமிழறிஞர்கள் தமிழ் உணர்வாளர்கள்,கல்லூரி,ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


"கல்வி வள்ளல்" முனைவர் வி.முத்து


குழுவினருடன் செயமூர்த்தி


செயமூர்த்தி குழுவினருடன்


பாடகர் தெ.செயமூர்த்தி

முகவரி:
புதுச்சேரி தெ.செயமூர்த்தி அவர்கள்
மக்கள் இசைக்குழு,
130,அந்தோனியார் வீதி,4 ஆம் தெரு,
உழவர்கரை,புதுச்சேரி-605 010
செல்பேசி +91 9443492698

வெள்ளி, 22 ஜனவரி, 2010

பாவலர் மாநியின் குறளாயிரம்(அணிந்துரை)

மரபுமீறி எழுதினால் ஒரு சாகித்திய அகாதெமிப் பரிசிலோ, அரசின் உயர் பரிசில்களோ அல்லது தனியார் அமைப்புகள் வழங்கும் பரிசிலோ இப்பொழுதெல்லாம் கிடைத்துவிடுகிறது என்று இளைஞர்கள் பலரும் புதுப்பாவில் புகுந்து விளையாடும்(!)போக்கு தமிழ்ப்பா உலகில் நிலவுகிறது.பழந்தமிழ் இலக்கியங் களிலோ,பாரதி,பாவேந்தர்,பெருஞ்சித்திரனார்,தங்கப்பா,சுரதா,முடியரசன்,புலமைப்பித்தன்,காசி ஆனந்தன் போன்ற மரபறி புலவர்களின் நூல்களிலோ சிறிதும் பயிற்சியில்லாமல் நாளும் புற்றீசல் போல் புதுப்புது நூலட்டைகளில் வாழும் இப்போலிப் பாவலர்களின் எழுத்துகளைக் கண்டு மனம் சாம்பிக் கிடந்த எனக்கு அம்மா மாநி அவர்களின் குறளாயிரம் என்னும் நூல் படிக்கும் வாய்ப்பால் மகிழ்ச்சி ஏற்பட்டது.பாவேந்தர் பிறந்த மண்ணில் உயிரோட்டமாகக் குறட்பாவில் எழுதும் வல்லமையுடைய பெண்பாவலர் கண்டு உள்ளபடியே மகிழ்கிறேன்.

அகவை முதிர்ந்த அண்மைக் காலத்தில்தான் இவர்கள் அறிஞர் இரா.திருமுருகனார்,பாட்டறிஞர் இலக்கியன் போன்ற அறிஞர் பெருமக்களிடம் முறையாக யாப்பறிந்து பாடல்புனைய வந்துள்ளார்.எடுத்த எடுப்பில் கட்டளைக்கலித்துறை,கலி விருத்தம் என்று இவர் பேச்சில் யாப்புலகச்சொற்கள் புறப்பட்டு வருவதை உரையாடலில் கண்டு உவகையுற்றேன்.தொடர்ந்து பல மரபு நூல் படைக்கும் திட்டம் உள்ளதை அறிந்து நெஞ்சார வாழ்த்துகிறேன்.

குறட்பாவில் திருவளுவர் பெருமானுக்குப் பிறகு பலர் பாவினைப் புனைந்திருந்தாலும் எந்த நூலும் திருக்குறள் அளவிற்கு மக்களிடம் அறிமுகம் ஆகாமல் போய்விட்டன.என் பேராசிரியர் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் அருட்குறள் என்று ஒரு நூல் எழுதியுள்ளதையும் அறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் மாணிக்கக்குறளையும் பேராசிரியர் தங்கப்பா அவர்கள் குறள்வடிவில் ஒரு நூல் எழுதி வருவதையும் யான் அறிவேன்.நண்பர் ய.மணிகண்டன் அவர்கள் இத்தகு முயற்சியில் இறங்கியவர் என்பதும் இங்குக் குறிப்பிடத்தகுந்தது.

திருவள்ளுவர் இருந்திருந்தால் இந்த உள்ளடக்கத்தில்தான் குறட்பாக்களை எழுதியிருப்பார் என்று எண்ணும் அளவுக்கு மாநி அவர்கள் இருபது,இருபத்தொன்றாம் நூற்றாண்டு மக்கள் வாழ்க்கைக்கு முதன்மை வழங்கி இந்த நூலை எழுதியுள்ளார்.

மக்கள் வாழ்க்கையில் உள்ள பல்வேறு சிக்கல்களை நினைவூட்டும் முகமாகவும்,மாந்த வாழ்வைச் சிக்கலின்றி எவ்வாறு அமைத்துக்கொள்வது என்று வழிகாட்டும் வகையிலும் பல குறட்பாக்கள் உள்ளன.திருக்குறளின் கருத்துகளைத் தழுவியும் பல குறட்பாக்கள் உள்ளன.மற்ற அறிஞர் பெருமக்களின் நூல் செய்திகளை நினைவூட்டும் வகையிலும் பல குறட்பாக்கள் உள்ளன.

மக்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ள உடல்தேய்வு(எயிட்சு)நோய் முதல் ஞெகிழிகள் பயன்பாட்டால் இயற்கைச்சீரழிவு ஏற்படுகிறது என்பது வரையில் வாழ்க்கையை முதன்மைப்படுத்தும் பல குறட்பாக்களைத் தெளிந்த நடையில் இயற்றியுள்ளதைக் காணலாம்.மிகவும் பயிற்சி பெற்ற பாவல்லாருக்குதான் சுருங்கிய வடிவான குறட்பா யாப்பில் பாவடிக்க முடியும்.ஆனால் வளர்ந்து வரும் பாவலரான மாநி அவர்கள் சில தெறிப்பான குறட்பாக்களையும் உள்ளத்தில் பதியும் குறட்பாக்களையும் தந்துள்ளார்.

கடவுள்,வழிபாடு எனும் தலைப்பில் தொடங்கும் நூலில் வானம் நிலவு என்ற தலைப்புகளில் இயற்கை போற்றும் குறட்பாக்கள் உள்ளத்தில் தங்குகின்றன.

"அந்தியில் வந்திடும் அந்த நிலாவும்
பந்தியில் அப்பளமாய்ப் பார்"(23) எனவும்

"மின்மினிக் கூட்டமாய் மேல்வானில் விண்மீன்கள்
என்னே கலையின் எழில்"(24) எனவும்

"வானமே கூரையாய் வாழும் ஏழைக்குத்
தானமாய் நின்றது வான்"(30) எனவும்

"வெட்டி எடுத்த விரல் நகம் வானில்காண்
குட்டிப்பிறை நிலவின் கூன்"(33) எனவும்

இடம்பெறும் குறட்பாக்கள் மீண்டும் ஓர் அழகின்சிரிப்பை-சிலிர்ப்பை நமக்கு நினைவூட்டுகின்றன.

"ஓட்டைச் சுமந்துமே ஊர்ந்திடும் நத்தையென
ஏட்டைச் சுமக்கும் இளசு"(55)

எனும் குறட்பா இன்றைய பிஞ்சு மழலைகள் சுமக்கும் பொத்தகப் பொதிகளை நினைவூட்டி வருத்துகிறது.இக்குறட்பாவில் உவமை காட்டி விளக்கும் பாவலர் ஆசிரியராக இருந்து மாணவர்களை வளர்த்தெடுத்த தாயுள்ளத்தினர் என்பதால் இவரால் மிகச்சிறப்பாகப் படம்பிடிக்கமுடிகின்றது.

தமிழும் தமிழரும் பல வகையில் கலப்புண்டு கிடக்கும் சூழலில் தமிழில் பிறமொழிச்சொற்கள் கலப்பதைக் குறட்பாக்கள் சில கண்டிக்கின்றன.அதுபோல் தமிழர்கள் தங்கள் தலைப்பு எழுத்தைக்கூடத் தமிழில் பொறிக்காமல் பிறமொழியில் ஒப்பமிடுவதை வருத்தத்துடன் நூலாசிரியர் கண்டிக்கிறார்.

"செம்மைத் தமிழ்மொழியில் சேர்க்காதீர் வேற்றுமொழி"(65)
என்று ஆணையிடுவதிலிருந்தும்

"தமிழ்க்கை யெழுத்தா? தகுமா எனவே
தமிழரே கேட்டிடல் தாழ்வு"(66)

என்று பாடுவதிலிருந்தும் பாவலரின் தமிழுள்ளம் நமக்கு நன்கு விளங்குகிறது.

அரசுகள் தமிழகத்திலும்,புதுச்சேரியிலும் தமிழில் தம் ஊழியர்கள் கையொப்பமிடவேண்டும் என ஆணைகள் பிறப்பித்தும் எருமைத்தமிழர்கள் அசைந்துகொடுத்த பாடில்லை.சில தமிழாசிரியன்மாரே தமிழில் கைச்சாத்திடாத இழிநிலைமையை என்னென்பது?ஓர் மரபுவழி தமிழ்கற்ற குடும்பம் சார்ந்த ஓர் தமிழ்ஆசானே கையொப்பத்தை ஆங்கிலத்தில் இடுவதைக் காணும்பொழுது நெஞ்சு பதைக்கிறது.இவர்களிடம் உருவாகும் மாணவர்களுக்கு எங்கிருந்து தமிழ்ப்பற்று வரும்?

"கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க"என்ற பாவேந்தர் நடமாடிய மண்ணில் இத்தகு பேரவலம் நடப்பதுதான் நெஞ்சை அதிரச்செய்கிறது.பிறநாட்டார் யாரும் இதுபோன்ற செயலுக்கு நாணாமால் இருக்கம்மாட்டார்கள்.இவற்றையெல்லாம் கடிந்துரைப்பதில் இக்குறட்பாக்கள் வலிவுடன் இயங்குகின்றன.

தமிழினிமை பற்றி பாடும் பாவலர் மாநி அவர்கள்

"காவடியும் சிந்தும்,கவின்கண்ணிச் சந்தமும்
யாவரும் இன்புறும் யாப்பு"

என்று பாடுவதில் ஒரு நுட்பம் தங்கியிருப்பதை நாம் உணரவேண்டும். முனைவர் இரா.திருமுருகனார்தான் இத்தகு காவடிச்சிந்து,கண்ணி,சந்தம் பாடுவதில் தமிழகத்திலேயே பேரறிவு பெற்றவர்கள்.அவர்களிடம் பயின்றதனால் ஆசிரியரைச் சிறப்பிக்கும் வகையில் இதனைப் பதிவு செய்துள்ளார்.சிந்து,வண்ணம் என்றால் நமக்கு முனைவர் இரா.திருமுருகனார் நினைவுக்கு வருவதுபோல் நம் பாவலர் மாநி அவர்களுக்கு அவர் ஆசிரியர் சிறப்புற்ற துறைகள் நினைவுக்கு வந்தன போலும்(!).

தமிழ்ச்சூழல் நலம்பெற பாடிய பாவலர் சுற்றுச்சூழல் சிறப்புறவும் பாடியுள்ளார்.

"சாய்க்கடைநீர் வீதியில் தங்கக் கொசுக்களும்
பாய்விரிக்க நோய்வரப் பாழ்(103)

என்று இயல்பான நடையில் நமக்கு அறிவுரை பகர்கின்றார்.

குறிஞ்சி,மருதம் ,நெய்தல்,பாலை நிலங்கள் பற்றி பாடும் பகுதிகள் நமக்குச் சங்க நூல்களையும் சிற்றிலக்கியங்களையும் நினைவூட்டுகின்றன.

"இரியல் குரங்கும் எழுமரம் தாவிப்
பெருங்குரல் கூட்டும் பெரிது(119)

என்று பாடும்பொழுது குறிஞ்சிநிலக் குரங்கின் செய்கை நமக்குப் புலனாகிறது.

"செம்பவழம் வெண்முத்தும் சேர்க்கக் குளித்திடுவார்
அம்மணிகள் அள்ளவே ஆழ்ந்து"(133)
எனவும்

பல்வகை மீன்களும் பல்வகைச் சோழிகளும்
நல்கிடும் தண்கடல் நமக்கு(137)

என்று கடல்படு பொருள்களை நமக்கு நினைவூட்டுகின்றமை சிறப்பான பகுதிகளாகும்.

பெண்களுக்குக் குமூகத்தில் இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்துரைக்கும் குறட்பாக்களும்,இயற்கை வளங்களைத் தடுக்கும் பிற மாநிலத்தார் சூழ்ச்சிகளும்,விழிக்கொடை சிறப்பும்,இந்தி எதிர்ப்பும், ஈழத் தமிழர் விடுதலையும் பாடும் வகையில் இந்த நூல் குமூக அக்கறையுடன் பாடப்பட்டுள்ளது எனலாம்.ஈவு இரக்கமற்று,உயிர்களை அழித்தொழித்த அரக்கன் இராசபட்சேயின் கொடுஞ்செயல்களையும் இந்த நூலில் மாநி அவர்கள் பதிவு செய்துள்ளார்.சமகால நிகழ்வுகளை நினைவுப்படுத்தும் வரலாற்று ஆவணமாகவும் இந்த நூல் எதிர்காலத்தில் விளங்கும். தமிழ்க்குடமுழுக்கு, போலித்துறவிகள்,இல்லறம்,காதல் எனும் பல பொருண்மைகளில் பாடல்கள் இந்த நூலில் செழித்துக்கிடக்கின்றன.

பாவாணர்,இரா,.திருமுருகனார் என்னும் இரண்டு அறிஞர்களின் தமிழ்ப்பணியைக் குறட்பாவில் அம்மையார் வழங்கியுள்ளார்.

"சாதிப்போர் தேவையில்லை; சாதிப்போரே தேவையென
வாதிப்போரை வாழ்த்துவம் வா"(395)

என்று நம்பிக்கையூட்டும் வரிகளை இளைஞர்களுக்குத் தருகிறார்.நம்பிக்கை வரிகளை வழங்குவதில் பாவலர் மாநி சிறப்பிடம் பெறுகின்றார்.

உலக நாடுளின் சூழ்ச்சியால் தமிழீழக் கனவு பின்னுக்குத் தள்ளப்பட்டதை நினைவூட்டும் பல குறட்பாக்களைக் காணமுடிகிறது.ஆனால் நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும் என்றும்,

"பூத்திடும் ஈழத்தில் பூவாய்த் தனிநாடு
காத்திரு கண்முன் எழும்(348)

என்றும் உலகத்தமிழர்களை ஈரடிகளில் நம்பிக்கை மருந்து தந்து தேற்றுகின்றார்.

வகையுளிக்காகச் சொற்களை உடைத்தெழுதுவதைத் தவிர்த்திருக்கலாம்.சொற்கள் உடைபடாமல் பாட்டியற்ற மிகப்பெரும் சான்றோர்களுக்கே வாய்க்கும் போலும்!

குறட்பா என்ற பழந்தமிழ் யாப்பை மிகச்சிறப்பாக ஆண்டு நடப்பியல் செய்திகளை வரலாற்றுக் குறிப்புகளாக வழங்கியுள்ள பாவலர் மாநியின் குறளாயிரம் காலம் கடந்து நிற்கும் வலிமை பெற்றுள்ளது.

செவ்வாய், 19 ஜனவரி, 2010

புதுவையில் பிரஞ்சு இந்திய கலை பண்பாட்டு விழா

பிரஞ்சு இந்திய கலை பண்பாட்டு விழா இன்று(19.01.2010) புதுச்சேரியில் நடைபெற்றது.புதுச்சேரி கடற்கரையில் மக்கள் குழுமியிருந்த மாலை நேரத்தில் பிரஞ்சுநாட்டுக் கலைக்குழுவினரும் இந்திய நாட்டுக்கலைக்குழுவினரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்கினர்.

27 அடி உயரமுள்ள 9 ஒட்டகச்சிவிங்கி வேடம் அணிந்து பார்ப்பவரை மகிழ்ச்சிபடுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

தேவதை போல் வேடம் அணிந்த பெண் கலைஞர் இனிமையான பாடலைப் பாடினார்.எங்களுக்கு மொழி தெரியவில்லை.என்றாலும் கடற்காற்றில் நடுங்கி ஊ ஊ ஊ ஊ ஊ ஊ என்று ஓசை எழுப்பியதுபோல் பாடல் இருந்தது.பின்புலமாக ஒரு சூறைக்காற்று வீசுவதுபோல் பின்புலம் உருவாக்கப்பட்டது.ஆண் கலைஞர் ஒருவர் டிரம்சு என்ற பெரிய இசைக்கருவியை இசைத்து முழக்கினார்.இவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம்பெயர சக்கர உருளைகள் பொருத்தப்பட்ட இயங்கு கருவிகளில் இயங்கினர். ஒளியமைப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது.இடையிடையே வானவேடிக்கைள் நடந்தன.பன்னாட்டு மக்களின் சங்கமமாக மக்கள் நிறைந்து பார்த்துச் சுவைத்தனர்.

மக்கள் கூட்டம் நிறைந்திருந்த கடற்கரையில் நடந்ததால் உள்ளூர் மக்களும் வெளிநாட்டினரும் வெளியூர் சுற்றுலாக்காரர்களும் கண்டு களித்தனர்.நானும் என் மக்களுடன் சென்று அவர்களுக்கு இந்த வேடிக்கைக்காட்சிகளைக் காட்டி அழைத்து வந்தேன்.


கலைநிகழ்ச்சி-படங்கள்


கலைநிகழ்ச்சி-படங்கள்


கலைநிகழ்ச்சி-படங்கள்


கலைநிகழ்ச்சி-படங்கள்


கலைநிகழ்ச்சி-படங்கள்


கலைநிகழ்ச்சி-படங்கள்


கலைநிகழ்ச்சி-படங்கள்


கலைநிகழ்ச்சி-படங்கள்



கலைநிகழ்ச்சி-படங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்,சனவரி 30,2010


அழைப்பிதழ்

சிதம்பரம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்த்த அறிவுத் திருக்கோயிலாகும்.அரசர் அண்ணாமலையார் இதனைத் தொடங்கிவைக்க வாழையடி வாழையென இதனை அரசர் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.தமிழ் உணர்வு மிக்க மாணவர்களை உருவாக்கிய இந்த நிறுவனத்தின் தமிழியல் துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவதற்குரிய வாய்ப்புகளைத் தமிழியல் துறைத்தலைவரும்,புகழ்பெற்ற பேராசிரியருமாகிய முனைவர் பழ.முத்து வீரப்பன் அவர்கள் உருவாக்கினார்.அவர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப எதிர்வரும் சனவரி 30,காரி(சனிக்)கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிலரங்கம் நடைபெறுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் டாக்டர் ம.இராமநாதன் அவர்கள் பயிலரங்கத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரைக்க உள்ளார்.

பேராசிரியர் பா.பழனியப்பன்(முதன்மையர்,பொறியியல்புலம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்),பேராசிரியர் வ.செயதேவன்,(சிறப்புநிலைப் பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் வாழ்த்துரைக்க உள்ளனர்.

முனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி), தமிழ்நிலவன் (கணிப்பொறி வல்லுநர்,பெங்களூரு)விசயகுமார்(ஆசிரியர்,சங்கமம் லைவ்,நாமக்கல்), செல்வமுரளி(ஆசிரியர்,தமிழ் வணிகம்,சேலம்)கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு ஆகியோர் மாணவர்கள், ஆய்வாளர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி அளிக்க உள்ளனர்.

பல்கலைக் கழகம் ஒன்று தாமே முன்வந்து தமிழ் இணையத்தில் பயிற்சி வழங்குவது தமிழ் இணைய வரலாற்றில் இதுவே முதல் முயற்சியாகும்.

நிகழ்ச்சி நிரல்

சனி, 9 ஜனவரி, 2010

புதுச்சேரியில் இலக்கிய,கலை விழாக்கள்!

புதுச்சேரியில் நாளும் ஏதேனும் இலக்கிய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும்.இன்று(09.01.2010) காரிக்கிழமை மாலை 6 மணியளவில் புதுச்சேரித் தமிழச்சங்க அரங்கில் கவிஞர் ஏசுதாசன் அவர்களின் சிந்தனைப்பூக்கள் என்னும் நூலின் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது.

கவிஞர் ஏசுதாசன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் வரதராசன்பேட்டை மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் பூவை.சு.செயராமன் அவர்கள் ஆவார்.அந்த நூல் வெளியீட்டில் பிழை திருத்தம் உள்ளிட்ட பல வகையில் கவிஞருக்கு நான் உதவினேன்.ஏசுதாசன் புதுச்சேரியில் அரசுத்துறையில் ஓட்டுநராகப் பணிபுரிகின்றார்.எட்டாம் வகுப்பு வரைதான் படித்தவர்.ஓய்வு நேரங்களில் தாம் எழுதிய கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

பூவை.சு.செயராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் சாசுமின் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.கல்வி வள்ளல் முத்து ஐயா அவர்கள் முன்னிலையுரையாற்றினார்.கலக்கல் காங்கேயன்,மற்றும் தமிழ்நாட்டுப் போக்குவரத்துத்துறை சார்ந்த பொறுப்பாளர்கள்,புதுவைப் போக்குவரத்துத்துறை ஓட்டுநர்கள் பலர் வாழ்த்துரைத்தனர்.

நான் நூலை மதிப்பிட்டுத் திறனாய்வு செய்தேன்.அரை மணிநேரம் என் பேச்சு அமைந்தது.நான் பேசத்தொடங்கும்பொழுது மத்திய அமைச்சர் மாண்புமிகு வே.நாராயணசாமி அவர்களும் புதுவை முதலமைச்சர் வெ.வைத்திலிங்கம் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர்கள் பரும் மேடையில் இருந்து என் பேச்சைக் கேட்டனர்.பிறகு சிந்தனைப்பூக்கள் நூலினை மத்திய அமைச்சர் வே.நாராயணசாமி அவர்கள் வெளியிட புதுவை முதலமைச்சர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.

கவிஞர் ஏசுதாசன் அவர்கள் தாம் திரட்டிய ஒரு இலட்சம் உருவா தொகையைத் தந்தையார் பெயரில் அந்தோணிசாமி சமூக,கலை அறக்கட்டளை என்னும் பெயரில் அறக்கட்டளை நிறுவி ஓட்டுநரின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனுக்கு வழங்க முன்வந்துள்ளது பாராட்டினுக்கு உரியது.

அந்த நிகழ்ச்சி முடிந்த நிலையில் உரோமந்து உரோலன் சாலையில் உள்ள அரங்கில் நண்பர் இரகுநாத் மனே அவர்களின் நாட்டியப் பள்ளி சேர்ந்த மாணவர்கள் ஆண்டு விழா கொண்டாடினர்.நண்பர் இரகுநாத் மனே பிரான்சில் வாழ்ந்தாலும் புதுவையை மறக்காதவர்.புதுவையில் பல பிள்ளைகளுக்கு இலவசமாக நாட்டியப்பள்ளி நடத்தி வருகிறார்.என் ஆய்வுப்படிப்புக்காலம் முதல் எனக்கு நெருங்கிய நண்பர்.என் வளர்ச்சி அறிந்தவர்.எனக்கும் வேறு சில அறிஞர்களுக்கும் பாராட்டிப் பட்டம் வழங்கினார்.பிரஞ்சுத்தூதர் வந்திருந்து பட்டங்களை வழங்கினார்.பிரான்சு நாட்டைச்சேர்ந்த இதழாளர்கள் சிலர் என்னைப் படம் பிடித்தனர்.மாணவர்களின் கலை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக இருந்தது.

திரு.இரகுநாத் மனே செவாலியே விருது பெற்றவர்.அவரும் மிகச்சிறந்த முறையில் நாட்டியமாடினார்.

வியாழன், 7 ஜனவரி, 2010

அறிஞர் மு.அருணாசலம் பிள்ளை நூற்றாண்டு விழா


அழைப்பிதழ்

 அறிஞர் மு.அருணாசலம் பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக வெளியிட்டுப் புகழ்பெற்றவர். அன்னாரின் நூல்கள் சான்றாதாரங்களாக விளங்கும் தரத்தன. அவர் தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு என்னும் இருநூல்களை எழுதி வெளியிடாமல் கையெழுத்துப் படியாக வைத்தவண்ணம் இயற்கை எய்தினார். மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் உல. பாலசுப்பிரமணியன் அவர்கள் இந்தக் கையெழுத்துப் படிகளை அரிதின் முயன்று வெளிக்கொண்டு வந்துள்ளார். நூலுருவம் தாங்கியதால் உலகத் தமிழர்கள் அனைவரும் பயன்பெற முடியும். இத்தகு அரிய பணியில் ஈடுபட்ட முனைவர் உல.பாலசுப்பிரமணியன் அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். அறிஞர் மு.அருணாசலனார் நூற்றாண்டு விழாவும், கருத்தரங்கும், நூல்கள் வெளியீட்டு விழாவும் நாளையும், மறுநாளும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளன.

அறிஞர் மு.அருணாசலனார் நூற்றாண்டு விழா

நாள்: 8.9-01.2010 நேரம் காலை 10.00 மணி
இடம்: சென்னைப் பல்கலைக்கழகம்


முனைவர் தமிழண்ணல், பேராசிரியர் சோ.ந.கந்தசாமி, பேராசிரியர் வீ.அரசு, முனைவர் க.திருவாசகம் (துணைவேந்தர்), மாண்புமிகு தங்கம். தென்னரசு (பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்), மாண்புமிகு உபயதுல்லா (வருவாய்த்துறை அமைச்சர்) உள்ளிட்டவர்கள் உரையாற்ற உள்ளனர்.

அழைப்பிதழ்

புதன், 6 ஜனவரி, 2010

சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்ற அரங்கில் பேராசிரியர் செல்வா உரை...


இராம.கி,மு.இ,மறைமலை,செல்வா


பேராசிரியர் செல்வா எனப்படும் செ.இரா.செல்வக்குமார் அவர்கள் கனடாவில் மின்னியல்,மின்னணுவியல் துறை,வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.மின்னஞ்சல் வழியாக நல்ல தொடர்பில் இருப்பவர்.தனித்தமிழில் அறிவியல் கட்டுரைகள் வரைபவர்.விக்கிப்பீடியா பற்றிய பல செய்திகளை இவர் வழியாக அறிந்தேன்.உரிமையுடன் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் முன்னிற்பவர்.புது தில்லியில் நடைபெறும் ஒரு கருத்தரங்கிற்கு வந்தவர்.தம் வருகையை முன்பே எனக்குத் தெரிவித்து 05.01.2010 இல் தாம் சென்னையில் உரையாற்ற உள்ளதையும் குறிப்பிட்டிருருந்தார்.பேராசிரியர் இ.மறைமலை அவர்களின் ஏற்பாட்டில் இந்தப் பொழிவுக்கு ஏற்பாடாகியிருந்தது.பேராசிரியர் மறைமலை அவர்களும் என்னை அழைத்திருந்தார்.

பார்வையாளனாக ஒய்.எம்.சி.ஏ.அரங்கில் இன்று நுழையும்பொழுது மாலை 6.45 மணி.பேராசிரியர் இ.மறைமலை அவர்கள் நான் செல்வதற்கு முன்பே வரவேற்புரையாற்றியிருந்தார்.தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் திரு.நக்கீரன் ஐயா அவர்கள் தலைமையுரையாற்றினார்.அவர்களைத் தொடர்ந்து பேராசிரியர் செல்வா அவர்கள் தமிழ் வளர்ச்சிக்கு இணையம் வழியாகத் தமிழர்கள் கூட்டுழைப்பில் ஈடுபட்டுப் பணிகளாற்றவேண்டும் என்றார்.

ஆங்கிலமொழி அண்மைக்காலத்தில்தான் மிகுந்த வளர்ச்சி பெற்றது.இன்றும் பிற மொழியின் சிறந்த நூல்கள்,இதழ்கள் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன.அதுபோல் தமிழில் பிறமொழி நூல்கள், இதழ்கள், படைப்புகள் மொழிபெயர்க்கப்பபடவேண்டும் என்றார்.விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் பற்றி எடுத்துரைத்தார்.ஆங்கில மொழி வளர்சிக்குப் பலர் பாடுபட்டுள்ளனர். இலத்தீன் மொழியில் இருந்த பைபிளை ஆங்கிலத்திற்குப் பெயர்த்தவர்கள் பலர் படுகொலைக்கு உள்ளாகியுள்ளனர்.ஆங்கிலமும் தொடக்கத்தில் வளர்ச்சிநிலைகளில் பல இடையூறுகளைச் சந்தித்து வந்துள்ளது என்றார்.இன்று அனைவரின் கூட்டுழைப்பால் ஆங்கிலம் மிகச்சிறந்த வளர்ச்சிநிலை கண்டுள்ளது.எனவே தமிழர்களும் கூட்டுழைப்பால் தமிழுக்குப் பணிசெய்ய முன்வரவேண்டும் என்று உரையாற்றினார்.

தமிழ் இணையப்பல்கலைக்கழகப் பணிகளை ஐயா நக்கீரனார் எடுத்துரைக்கும்பொழுது அதில் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருப்பது தவறு என்று இ.திருவள்ளுவனார் குறிப்பிட்டுத் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.இயக்குநர் அவர்கள் அது ஒரு கருத்து என்ற அடிப்படையில் இடம்பெற்றுள்ளது என்றும் மாற்றுக்கருத்து இருப்பின் மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.நானும் எழுத்துச்சீர்திருத்தம் தேவையற்றது என்று குறிப்பிட்டுத்,தமிழறிஞர்கள் பலரும் எழுத்துச்சீர்திருத்த முயற்சியைக் கண்டித்து வருகையில் கருத்துவேறுபாடுகளுக்கு இடம் அளிக்கும் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய செய்திகள் தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளத்தில் இடம்பெறுவது தவறு என்றும்,தமிழ் இணையப் பல்கலைக்கழகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாகச் செய்ய வேண்டியது ஒருங்குகுறிக்குப் பாடங்களைப் - படைப்புகளை மாற்ற வேண்டும் என்றும் இயக்குநரிடம் உரிமையுடன் என் கோரிக்கையை வைத்தேன்.

அவர்கள் 16 பிட் இடம் கிடைத்த பிறகு ஒருங்குகுறியில் ஏறும் என்று குறிப்பிட்டார்கள்.8 பிட் அளவுள்ள இடத்திலேயே மிகச்சிறப்பாக ஒருங்குகுறியைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருப்பதால் இனியும் 16 பிட் என்ற காரணம் காட்டி ஒத்திப்போடவேண்டாம் என்று வேண்டிக்கொண்டேன்(2003 இல் தமிழ் ஒருங்குகுறி நடைமுறைக்கு வந்துவிட்டது.உலகம் முழுவதும் ஏழாண்டுகளாகத் தமிழ் ஒருங்குகுறியில் தமிழர்கள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும்பொழுது, தினமலர்,தினமணி உள்ளிட்ட நாளேடுகள் எல்லாம் ஒருங்குகுறிக்கு வந்துவிட்ட பிறகு ஏன் இணையப் பல்கலைக்கழகம் தமிழ் ஒருங்குகுறிக்கு வர மறுக்கிறது என்பது புதிராக உள்ளது.சில அன்பர்கள் தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் ஒருங்குகுறிக்கு மாறிவிட்டது என்ற வகையில் எழுதி வருகின்றனர்.அவ்வாறு மாறியதன் பகுதியைத் தொடுப்பாக எனக்கு வழங்கியுதவ வேண்டுகிறேன்).

எப்படியோ பேராசிரியர் செல்வா அவர்களின் பேச்சைக் கேட்கச்சென்ற எனக்கு தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்,ஒருங்குகுறி பற்றிய பதிவை உரியவர் முன்பாகப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்கிறேன்.

ஐயா இராம.கி.அவர்களும் வந்திருந்தார்கள்.அனைவரிடமும் விடைபெற்றுப் புதுச்சேரி வந்து சேர்ந்தபொழுது நள்ளிரவு இரண்டுமணி என்க.


நக்கீரன்,இராம.கி,மறைமலை உட்பட நண்பர்கள்



நான் பேராசிரியர் செல்வாவுடன்

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

பர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன்,சட்டதிட்டங்கள்,1952


மேலட்டை

பர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன், சட்டதிட்டங்கள்(1952) என்ற சிறு நூல் எனக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது.திராவிட இயக்கம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்ட மாணவன் என்ற அடிப்படையில் திராவிட இயக்கம் பற்றிய பல ஆவணங்களை வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் பாதுகாத்து வந்தேன்.அந்த நூலின் படி ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் என் பக்கத்தில் வெளியிடுகிறேன்(இந்நூல் குறிப்புகளைப் பயன்படுத்துவோர் என் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது என்ற குறிப்புடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஏனெனில் பல அன்பர்கள் என் கட்டுரைகளை-படங்களைத் தங்கள் பெயரில் வெளியிட்டுக்கொள்வதுடன், என் பணி பற்றிய பொய்யுரைகளைப் பரப்பியும் வருகின்றனர். ஆதலால் இக்குறிப்பு இணைத்தேன்).

தென்னிந்திய நல உரிமைச்சங்கமும்,திராவிடர் கழகமும்,திராவிட முன்னேற்றக்கழகமும் தமிழகத்தின் அரசியல் வரலாற்றிலும்,இலக்கிய வரலாற்றிலும்,மொழி வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க பல பணிகளைச் செய்துள்ளதை நடுநிலை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வர். எடுத்துரைக்கின்றனர்.இவ்வியக்கம் கடல் கடந்த நாடுகளிலும் அந்நாளில் பரவி தழைத்திருந்தது.மலேசியா,இலங்கை,பர்மா,சிங்கப்பூர் நாடுகளில் இன்றும் மூத்த திராவிட இயக்க உணர்வாளர்கள் இருந்து அந்த நாட்டில் இயக்கம் வளர்ந்த வரலாற்றை நினைவுகூர்ந்த வண்ணம் உள்ளனர்.

மலேசியாவில் அறிஞர் அண்ணா அவர்கள் சுறுப்பயணம் செய்த பொழுது இன்றைய மலேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மன்னர் மன்னின் தந்தை அண்ணா அவர்களைக் காண நெருங்கியுள்ளார்.அண்ணாவின் பாதுகாப்புக்குச் சென்றவர் அண்ணாவை நெருங்கவிடவில்லையாம். தாம் மெய்க்காவலர் என்று கூறியவுடன், மன்னர்மன்னனின் தந்தையார், "நான் அண்ணாவின் உயிர்க்காவலன்"என்று கூறியதுடன் தம் பிள்ளைக்கு அண்ணாத்துரை என்று பெயர் வைத்ததை நினைக்கும்பொழுது நமக்கு இயக்கத்தின் மேலும் அறிஞர் அண்ணா அவர்கள் மீதும் மதிப்பும் சிறப்பும் ஏற்படுகிறது.(பாவேந்தர் கவிதைகளில் அதே அன்பர் ஈடுபாடு கொண்டு, பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன் என்ற பொயரைத் தம் மகனுக்கு வைத்துள்ளார்.அவர்தான் இன்று மலேசியப் பல்கலைக்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் மன்னர்மன்னன்).

பர்மாவில் திராவிட இயக்கம் நல்ல நிலையில் வளர்ந்துள்ளது.இயக்க அன்பர்கள் பலர் இருந்துள்ளனர்.

1954 இல் தந்தை பெரியார் அவர்கள் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.
அறிஞர் அண்ணாவின் கொள்கை தாங்கிய பல அன்பர்கள் பர்மாவில் இருந்துள்ளனர்.

1952 இல் "பர்மா திராவிட முன்னேற்றக்கழகம்" என்ற அமைப்பு சட்டதிட்டங்கள் வரையறுத்துச் செயல்படத் தொடங்கியுள்ளது.திராவிட இயகப்பாவலர் நாரா.நாச்சியப்பன் அவர்கள்(பர்மா தி.மு.க.உறுப்பினர் எண்236) இது பற்றி சொல்ல நான் கேட்டுள்ளேன்(1993-95).
பர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன்,சட்டதிட்டங்கள் என்ற சிறு நூல் 1952 இல் அச்சிடப்பட்டுள்ளது.நேரு பிரஸ்,205மவுந்தாலே வீதி,இரங்கூன் என்ற முவரியில் அச்சிடப்பட்டுள்ளது.விலை பியா 50 எனும் குறிப்பு உள்ளது.16 பக்கங்களில் 62 இயக்க நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நூலின் சில முதன்மையான பகுதிகள்:

பெயர்

1.இந்த அமைப்பின் பெயர் "பர்மா திராவிட முன்னேற்றக்கழகம்"என்பது."கழகம்" என்ற சொல் இந்த சட்ட திட்ட அமைப்பில் இனிமேல் வரும் இடங்களிலெல்லாம் வேறுபொருளில் குறிப்பிட்டாலன்றி பர்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதையே குறிக்கும்
2.திராவிடர் எனும் சொல் தமிழ்,தெலுங்கு,மலையாள,கன்னட மக்களைக் குறிக்கும்.

கொள்கைகளும் நோக்கங்களும்

3.சாதி,மத சமுதாயத் துறைகளில் மக்களிடையே நிலவும் அறியாமையையும் குறைபாடுகளையும் நீக்கி அவர்களிடையே முன்னேறக் கருத்துக்கள் தோன்றப் பாடுபடுதல்
4.சமூக,கலாச்சாரத் துறைகளில் சமசந்தர்ப்பம்,முழுப்பாதுகாப்பு உரிமை இவை அனைவருக்கும் கிடைக்கப் பாடுபடுவது.
5.பர்மியருக்கும் திராவிடருக்குமிடையே நெருங்கிய ஒத்துழைப்பும்,கலாச்சார உறவும் ஏற்பட பாடுபடுவது.
6.திராவிடர்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் எந்த இயக்கத்தோடும் ஒத்துழைத்தல்
7.கழகம் அரசியல் தொடர்புள்ள இயக்கமல்ல.

உறுப்பினர்

8.கழகக்கொள்கைகளையும் நோக்கங்களையும் ஏற்று,கழகத்தின் குறிக்கோள்களுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதிதரும் 18-வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்,பெண் அனைவரும் உறுப்பினராகலாம்.
9.கழகத்தின் நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் மாறுபாடான வேறு இயக்கங்களில் உறுபினராக உள்ளவர்கள் கழகத்தின் உறுப்பினராக இயலாது. .....

உறுப்பினர் படிவம்


மற்ற விதிமுறைகளை அறிய நூல் பகுதிகளை இணைத்துள்ளேன்.


பின்னட்டை


முதல் பக்கம்


(பக்கம்,1)


(பக்கம்,2)


(பக்கம்,3)


(பக்கம்,4)


(பக்கம்,5)


(பக்கம்,6)


(பக்கம்,7)


(பக்கம்,8)


(பக்கம்,9)


ப(க்கம்,10)


(பக்கம்,11)


(பக்கம்,12)


(பக்கம்,13)


(பக்கம்,14)


(பக்கம்,15)


(பக்கம்,16)