நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 30 ஜூன், 2011

உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைப் பார்வையிடல்…


எம்.ஐ.டி. தொடர்வண்டி நிலையம்

அமெரிக்கா என்றால் கற்றாருக்கு நினைவுக்கு வருவது ஆர்வர்டு பல்கலைக்கழகமாகும். உலகின் இருநூறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதலிடத்தில் இருப்பது ஆர்வர்டு பல்கலைக்கழகமாகும். அனைத்து வசதிகளையும் கொண்ட பழைமையான பல்கலைக்கழகம் இதுவாகும். அதுபோல் எம்.ஐ.டி. பல்கலைக்கழகமும் உலகப் புகழ்பெற்றது. இரண்டையும் இன்று பார்த்து மகிழ்வது என்ற பூரிப்பில் எங்கள் மகிழ்வுந்து புறப்பட்டது.

ஒரு தொடர்வண்டி நிலையத்தில் எங்கள் மகிழ்வுந்தை நிறுத்திவிட்டு அடுத்துத் தொடர்வண்டியில் புறப்பட்டோம். தொடர்வண்டி நிலையத்தில் சீட்டு பெறுதல் தானியங்கியில் நடக்கின்றது. உரிய இடத்தைத் தேர்ந்து கடனட்டையை உள்ளிட்டால் சீட்டு கையினுக்கு வந்துவிடும். அதனை எடுத்துச்சென்று வாயிலில் உள்ள பொறியில் காட்டினால் வழிவிடும். ஒரு சீட்டைக் காட்டி இரண்டு மூன்றுபேர் சென்றுவிடமுடியாது. அத்தகு பேர்வழிகளைக் காவலர்கள் கண்காணிக்கின்றனர். எங்கும் தூய்மையாகக் காணப்படும் தொடர்வண்டி நிலையத்தின் வனப்பைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்றோம். தொடர்வண்டி வந்தது.

நண்பர் பாலா ஒவ்வொரு செய்தியாகச் சொல்லி எனக்கு வியப்பைப் பன்மடங்காக்கினார். முதலில் எம்.ஐ.டி என்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் வாயிலில் உள்ள தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினோம். தொடர்வண்டி நிலையத்தில் எம்.ஐ.டி.யின் புகழ்பெற்ற கண்டுபிடிப்புகள், முதன்மை நிகழ்வுகள் படக்காட்சியாக எங்கும் உள்ளன. அரிய சில கண்டுபடிப்புகளும் நினைவுக்கு வைக்கப்பட்டுள்ளன. கல்விக்கு அங்கிருந்த முதன்மை கண்டதும் எனக்குப் பழைய நினைவுகள் நினைவுக்கு வந்தன. புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் அருகில் தொடர்வண்டி, பேருந்து நிலைகள் இருப்பதும் ஆராய்ச்சிகள் வீதியில் விளம்பரப்படுத்தப்பட்டமையும் கண்டு என் தமிழ்நாட்டில் இத்தகு நிலை என்று வரும் என்று ஏங்கினேன்.

ஏனெனில் தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழ்ப்பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் வாயில்களில் வெளியூர்ப் பேருந்துகள் இன்றும் நின்று போவதில்லை. நாங்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயின்றபொழுது நடு இரவில் நிற்காத வெளியூர்ப் பேருந்தை மாணவர்கள் சிறைப்பிடித்து பல்கலைக்கழகத்தின் உள்ளேகொண்டுபோய் நிறுத்தியதும் மறுநாள் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் வந்து ஒப்பந்தம் பேசி பேருந்தை எடுத்துச்சென்றதும் நினைவுக்கு வந்தன. நம் நாட்டில் கல்விக்கு முதன்மை வழங்கும் நாள் என்று? என்ற நினைவில் எம்.ஐ.டி.வாயிலை அடைந்தோம்.

அமெரிக்கக் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட வரும் உள்ளூர், வெளியூர் ஆர்வலர்கள், சுற்றுலாக்காரர்கள் மாணவர்களுக்கு அந்தக் கல்வி நிறுவனத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வளாகச் சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் எம்.ஐ.டி.யிலும் வளாகச்சுற்றுலா இருப்பதை முன்பே அறிந்திருந்தோம். காலை 11. மணிக்கு எங்களுக்கு வளாகச் சுற்றுலா தொடங்கியது. அங்குப் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் எங்களுக்கு நெறியாளராக இருந்து பல்கலைக் கழகத்தின் ஒவ்வொரு துறை பற்றியும், நூலகம் பற்றியும், உடற்பயிற்சிக் கூடங்கள், புத்தகக்கடைகள், சிற்றுண்டி அங்காடிகள், மாணவர்கள் தங்கும் விடுதி, கட்டணம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

பேராசிரியர்களின் அறைகளை மெதுவாக எட்டிப் பார்த்தேன். இருவர் மூவர் அமரும்படியும் அல்லது தனிமையில் இருக்கும்படியும் கணினி, இணைய இணைப்பு உள்ளிட்ட ஏந்துகளுடன் அறைகள் இருந்தன. பார்வையாளர்கள் அமர்வதற்குத் தனி இருக்கைகள், மெத்தைகள் இருந்தன. சில கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகள், நூலகங்களுக்குள் மாணவர்கள் ஆசிரியர்கள் தவிர வேற்று ஆட்கள் நுழைய இயலாதபடி நெறிமுறைகளை வகுத்துள்ளனர். அனைவருக்கும் இசைவுஅட்டை உண்டு. அவர்கள் இசைவு அட்டையை உள் நுழைத்துக் கமுக்கக் குறியீட்டைத் தட்டச்சிட்டால்தான் கதவு திறக்கும். அதன் பின்னரே உள் நுழையமுடியும். நூலகத்திலும் அன்னவாறே நடைமுறை.

தூய்மைக்கும் ஒழுங்குக்கும் பெயர்பெற்ற அமெரிக்க மண்ணில் எங்கும் தூய்மை நிலவுகின்றது. கல்வி நிறைவனங்கள் பல மடங்கு பளிச்சிடுகின்றன. வகுப்பறைகள் பெரிய அளவில் உள்ளன. அனைத்தும் சிறந்த நாற்காலிகள் கொண்டும், எழுதுபலகைகள் கொண்டும் உள்ளன. திரையரங்கு போல் மேலிருந்து கீழே உற்று நோக்குவதுபோல் வகுப்பறைகள் உள்ளன. எழுது பலகைகள் நம்மூரில் ஆசிரியர்கள் வந்த பிறகுதான் தூய்மை செய்யப்படும். மாணவர்கள் அடித்துத் தூய்மைப்படுத்தும்பொழுது அரிசி ஆலையில் தவிடு பறப்பதுபோல் வெள்ளைச்சுண்ணாம்பு நீறு பறக்கும். இங்குள்ள வகுப்பறைகளில் ஒரு பலகையில் எழுதிய பிறகு அந்தப் பலகையை மேலே இழுத்துவிடலாம். எழுதுவதற்கு அடுத்த பலகை ஆயத்தமாக இருக்கும். நான் பார்த்த வகுப்பறையில் பத்துப் பலகைகள் எழுதுவதற்கு இருந்தன.

உயிரித்தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வுத்துறைகளின் ஆய்வுமாணவர்களும், பேராசிரியர்களும் கண்ணிமைக்காமல் தம் கண்டுபிடிப்பில் கவனம் செலுத்தினர்.
முதலில் நாங்கள் மாணவர்களுக்கு உரிய உண்டிச்சாலையைக் கண்டோம். 24x7 என்ற கணக்கில் ஆண்டு முழுவதும் உண்டிச்சாலை திறந்திருக்குமாம். தேர்வுநாளில் மாணவர்கள் இரவு முழுவதும் படித்துவிட்டு விடியற்காலம் வந்து தேநீர் பருகுவது உண்டாம். நான் பணிபுரிந்த கல்விநிறுவனங்களின் சிற்றுண்டிச் சாலைகளை நினைத்தேன். எந்த அளவு பின்தங்கியுள்ளோம் என்று நினைத்துக்கொண்டேன். மாணவர்களுக்குரிய எழுதுபொருள்கள், ஆடைகள், உணவுகள் யாவும் உணவகத்தில் உண்டு.

உடற்பயிற்சிக்கூடத்தையும் பார்வையிட்டோம் அங்குப் புகைப்படம் எடுக்க இசைவு இல்லை. ஆண், பெண் இருபாலாரும் நீந்துவதும் குளிப்பதுமாக இருந்தனர். சிறுவர்களும் நீச்சல் பயிற்சி பெறுகின்றனர்.

மாணவர் விடுதிகளில் ஆண், பெண் இருவரும் இணைந்து தங்கியிருப்பது நடைமுறையாம். இருபதுக்கும் மேற்பட்ட மாணவர் விடுதிகளில் இதுதான் நடைமுறையாம். ஒரே ஒரு விடுதியைக் காட்டி அங்கு மட்டும் மாணவிகள் தனித்துத் தங்குகின்றார்கள் என்று எங்கள் நெறியாளர் குறிப்பிட்டார். முதலாண்டு மாணவர்கள் கட்டாயம் விடுதியில் தங்க வேண்டுமாம். இரண்டாம் ஆண்டில் வீட்டிலிருந்தோ, தனியாக அறை எடுத்தோ தங்கிப் படிக்கலாம். நம்மூர்க் கணக்கில் இளங்கலைப் பட்டம் பெற பதினைந்து இலட்சம் உருவா செலவாகும் என்று அறிந்தோம்.

கட்டணம் தவிர பிற செலவுகள் இந்தக் கணக்கில் வராது. மாணவர்களுக்கு உரிய வழிகாட்டு நடுவங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. தமிழகத்தின் ஒரு பல்கலைக் கழகத்தில் ஒரு துணைவேந்தர் கொண்டு வந்து சிறப்பாக நடத்திய நடுவத்தை அடுத்த துணைவேந்தர் மூடுவிழா நடத்தும் நிலைகள் மாற வேண்டும். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பழைய மாணவர் சங்கங்களும் சிறப்பாகச் செயல்படுகின்றன.

ஒன்றரை மணி நேரத்தில் நாங்கள் எம்.ஐ.டி.கல்விச்சாலை முழுவதையும் சுற்றிப்பார்த்து ஓரளவு அங்குள்ள கல்வி நிலைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது.

எம்.ஐ.டி.கல்வி நிறுவனத்தின் உண்டிச்சாலையில் பகலுணவை முடித்துக்கொண்டோம். பெரும்பாலும் இந்திய உணவை நான் தேர்ந்தெடுப்பதுதான் வழக்கம். உணவில் கோழிக்கறி இல்லாமல் உணவு இருக்காது. துணைக்குக் கோழிக்கறியை வரவழைக்க வேண்டியிருந்தது. அமெரிக்க உணவகங்களில் உண்டதுபோக எஞ்சியவற்றை வீட்டுக்கு எடுத்து வந்துவிடலாம். சிலர் பாதியை உண்டுவிட்டு கையில் எடுத்துவந்து வழியில் உண்பதும் உண்டு.

குளிர்க்குடிப்புகளைப் பாதி குடித்துவிட்டு, எஞ்சியதைக் கையில் கொண்டு வந்து உண்டோம். நண்பர் பாஸ்டன் பாலா அவர்கள் கல்வி நிறுவனத்தின் சிறப்புகளை மேலும் தாம் அறிந்தவற்றையெல்லாம் எடுத்துரைத்து வந்தார்.

மாணவர்களின் கல்வியறிவுக்கு உரிய அனைத்து வசதிகளையும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தித் தருகின்றன. மாணவர்களும் அவற்றைத் தக்கபடி பயன்படுத்திக்கொள்கின்றனர்.

பகடிவதை(ரேகிங்) மாணவர்களிடம் உண்டா? என்று பாலாவிடம் வினவினேன். அப்படியென்றால் என்ன என்றே மாணவர்களுக்குத் தெரியாதாம். படிப்புடன் பண்பாட்டையும் கற்றுத்தரும் அமெரிக்கக் கல்விபோல் தமிழகத்திலும் கல்வித்துறையில் பண்பாட்டுக்கல்வி இணைக்கப்பட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்…


எம்.ஐ.டி.நூலகம் அருகில்எம்.ஐ.டி.யில் ஒரு கட்டடம்இறைவழிபாட்டுக்கூடம் ஒளிநுட்பம்கொண்ட புதிய கட்டடம்உணவகம் அருகில்


வகுப்பறை


எம்.ஐ.டி முகப்பில் மு.இளங்கோவன்

2 கருத்துகள்:

thara சொன்னது…

எம்.ஐ.டி. பல்கலைக் கழகத்தைப் பற்றிய அரிய தகவல் மிகவும் நம் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களும் எம்.ஐ.டி பல்கலைக் கழகத்திலுள்ள உயர்த் தொழில்நுட்பங்கள் மிக விரைவாகக் கொண்டுவர நம் கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் முனைப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். & எஸ். காமராஜ், கோவை.

thara சொன்னது…

எம்.ஐ.டி. பல்கலைக் கழகத்தைப் பற்றிய அரிய தகவல் மிகவும் நம் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களும் எம்.ஐ.டி பல்கலைக் கழகத்திலுள்ள உயர்த் தொழில்நுட்பங்கள் மிக விரைவாகக் கொண்டுவர நம் கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் முனைப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். & எஸ். காமராஜ், கோவை.