நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 29 ஜூன், 2011

பாஸ்டன் செலவு…

23.06.2011 நாள் முழுவதும் ஓய்வு கிடைத்தது. மருத்துவர் சித்தானந்தம் ஐயா மருத்துவத் துறை சார்ந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. நான் அவர்களின் வீட்டில் இருந்தபடி இணையம் வழியாக என் நண்பர்களுடனும், குடும்பத்தாருடனும் தொடர்புகொண்டு அமெரிக்க வருகையின் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டேன். பிற்பகல் நான்கு மணியளவில் மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் தம் கடமைகளை முடித்துக்கொண்டு இல்லம் திரும்பினார்கள். காத்திருந்த நான் அவர்களுடன் பால்டிமோர் வானூர்தி நிலையம் சென்றேன். இடையில் சில கடைகளைக் காட்டியும் சில பொருள்களைக் காட்டியும் ஐயா அவர்கள் எனக்கு வியப்பூட்டினார். தம் அன்புப் பரிசிலாக ஒரு காணொளிக் கருவி ஒன்றை வாங்கி என் பையில் வைத்தார்கள்.

நான் பாஸ்டன் என்ற நகருக்குச் செல்வதால் உள்ளூர் வானூர்திகளில் மிகைச்சுமை கூடாது என்று என் ஒரு பெரும் பையைத் திரு. முத்து அவர்களின் இல்லத்தில் வைக்கும்படியும் மீண்டும் நான் அவர்கள் வீட்டிற்கு வருவதால் அங்கு அதனை எடுத்துக்கொண்டு அடுத்த ஊருக்குச் செல்ல இயலும் என்றும் மருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்களிடம் வேண்டிக் கொண்டேன். அதன்படி பின்னர் ஐயா அவர்கள் முத்து அவர்களின் இல்லத்தில் என் பையைச் சேர்த்ததை அறிந்தேன்.

மருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்கள் வானூர்தி புறப்படவும், அடுத்த இடம் நோக்கிச் செல்வதற்குள் நடு இரவு ஆகும் என்றும் ஓர் இந்திய உணவகத்தில் உண்ணுவதற்கு அழைத்துச் சென்றார்கள். சிற்றுண்டியை முடித்துக்கொண்டு வானூர்தி நிலையம் வந்து சேர்ந்தோம். எனக்குரிய செலவுத்திட்டத்தை உறுதிப்படுத்திக்கொண்டோம். என் செலவு உறுதிப்படுத்தப்பட்டது. ஐயாவிடம் பிரியாத விடைபெற்றேன். முன்னாளில் என் ஆய்வுப் பணிக்கு உதவியும், இப்பொழுது ஒரு வரவேற்பு நல்கியும் தங்குவதற்கு உதவியும் துணைநின்ற மருத்துவர் சித்தானந்தம்-முனைவர் குணா இணையர் என் வாழ்நாளில் என்றும் நினைக்கத்தகுந்த செம்மல்களே ஆவர். அவர்களுக்கு நன்றி கூறி வானூர்தி நிலையத்தின் பாதுகாப்பு ஆய்வுக்கு என்னை உட்படுத்திக்கொண்டேன்.

நம் ஊர் அன்பர்கள் பாதுகாப்பு ஆய்வு குறித்து எனக்குப் பல முன் நிகழ்வுகளை நினைவூட்டி அச்சமூட்டினர். ஆனால் அவர்கள் குறிப்பிட்டதுபோல் எத்தகு இடையூறும் இல்லாமல் என் பாதுகாப்பு ஆய்வு நிறைவுற்றது. எங்கள் வானூர்தி புறப்படும் வாயில் அருகில் வந்து வானூர்தி வருகையை உறுதிப்படுத்திக்கொண்டேன். வானூர்தி நிலைய அதிகாரி ஒர் அம்மையார் கனிவுடன் மறுமொழி கூறினார். அருகில் இருந்த ஒரு தம்பி அவரும் பாஸ்டனுக்கு வரும் வானூர்தியில் செல்ல உள்ளதை அறிந்து அவரிடம் எனக்கு வானூர்தி வந்ததும் நினைவூட்டும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் உதவினார்.

குறித்த நேரத்தில் வானூர்தி வந்தது. சிறிது நேரத்தில் நாங்கள் வானூர்தியில் அமர்வதற்கு இசைவு தந்தனர். ஒருவர் பின் ஒருவராகச் சென்று அமர்ந்தோம். ஒருவர் செல்லும் வரை காத்திருந்து மற்றவர் செல்வதும், சிறு குறைபாடுகள் நேர்ந்தால் மனமுருகி வருத்தம் தெரிவிப்பதும் அமெரிக்கர்களிடம் நாம் கற்க வேண்டிய பாடங்கள். வானூர்தியில் எனக்கு இருபக்கமும் இருவர் அமர்ந்திருந்தனர். நடுவில் நான் அமர்ந்திருந்தேன். இடப்பக்கம் இருந்தவர் தேர்வுக்குப் படிப்பவர்போல் படிப்பதில் கவனம் செலுத்தினார். இன்னொருவர் இளைஞர். அமர்ந்த சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார். அவர்க்குச் சிற்றுண்டி உண்ணக்கூட விருப்பம் இல்லை போலும்!.

நான் வானூர்திப் பணியாளர் தந்த சிற்றுண்டியையும் பழச்சாறையும் அருந்தினேன். மெதுவாகப் பத்து மணித்துளிகள் கண்ணயர்ந்தேன். விழித்த சிறிது நேரத்தில் பாஸ்டன் வானூர்தி நிலையத்தை ஒன்றரை மணி நேரத்தில் அடைந்தமை நினைவுக்கு வந்தது. சிறிது நேரத்தில் எங்கள் வானூர்தி தரையிறங்கியது. அனைவரும் முறையாக இறங்கி வெளியேறினோம். செலவு மேற்கொள்வோர் பொருள்கள் எடுக்கும் இடத்தில் நண்பர் பாஸ்டன் பாலா காத்திருந்தார். மிக எளிதாக என்னை அடையாளம் கண்டுகொண்டார். இருவரும் வெளியேறி மகிழ்வுந்து நிறுத்தும் இடத்திற்குச் சென்றோம். ஒருவருக்கொருவர் நலம் வினவியபடியே வண்டியை அடைந்தோம்.

வண்டியில் ஏறி அமர்ந்த பிறகு மருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்களுக்குப் பாதுகாப்பாக வந்துவிட்டேன் என்று சொல்ல நினைத்தேன். என் கைப்பையை வண்டியின் பின்புறத்தில் வைத்து முன் இருக்கையில் நான் அமர்ந்திருந்தேன். அந்தப் பையில்தான் தொலைபேசி எண்கள் இருந்தன. மீண்டும் இறங்கி அந்தத் தாளினை எடுத்துக்கொண்டு மீண்டும் பையை இருந்த இடத்தில் வைத்து வண்டியை எடுத்துக்கொண்டு வந்தோம்.

வண்டியில் அமர்ந்த இருவர் மீண்டும் வண்டியை விட்டு இறங்கி ஏதோ பொருள்களை எடுப்பதும் பேசுவதும் மீண்டும் வைப்பதுமாக இருப்பதைத் தொலைதூரத்தில் காணொளிக் கருவியால் கண்டுணர்ந்த காவலர்களின் உற்றுநோக்கலுக்கு எங்கள் வண்டி உள்ளாகியதைப் பின்னர்தான் உணர்ந்தோம். அதன் அறிகுறியாக எங்கள் வண்டியை நோக்கிக் காவலர் ஒருவர் முன்னேறி வந்து வண்டியில் உள்ளவர்கள் அதன் உரிமையாளர்களே என்று நினைத்து எங்களை ஒன்றும் கேட்காமல் நின்றுகொண்டிருந்தார். அமெரிக்கக் காவல்துறையின் நுண்ணறிவை வியந்தேன்.

மகிழ்வுந்தில் இரண்டு மணி நேரத்தில் பாலா இல்லம் அடைந்தோம். இருவரும் மனம் திறந்த தமிழ் வலைப்பதிவு, இணையத்துறை வளர்ச்சி பற்றி உரையாடியபடி அவர் வீடு வந்து சேர்ந்தோம். அவர் குடும்பத்தார் உறங்கிக்கொண்டிருந்தனர். காலையில் எழுந்து கடமைகளை முடித்துக்கொண்டு எம்.ஐ.டி., ஆர்வர்டு பல்கலைக்கழகங்களைப் பார்வையிடச் செல்வது என்று உறுதிசெய்துகொண்டு எனக்கு அவர்கள் தந்திருந்த அமைதியான அறையில் கண்ணயர்ந்தேன்.

கருத்துகள் இல்லை: