நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

கண்ணனூர் இமயம் கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம்

மு.இளங்கோவன், திரு.அ.ஆண்டி(செயலர்), ப.பெரியண்ணன்(தலைவர்),
என். பானுமதி(முதல்வர்)

பயிலரங்கில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள்


பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவிகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள கண்ணனூர் இமயம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(30.08.2013) காலை 11 மணியளவில் தொடங்கியது.

கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வை.இரமேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் என்.பானுமதி அவர்கள் தொடக்கவுரையாற்றினார். கல்லூரியின் தலைவர் திரு.ப.பெரியண்ணன் அவர்கள் தலைமையுரை யாற்றினார். கல்லூரியின் செயலாளர் திரு. அ. ஆண்டி அவர்கள் முன்னிலையுரையாற்றினார். இமயம் கல்லூரியின் இயக்குநர் திரு. த. பிரபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இமயம் பல்தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் இராசசேகர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் சு.மணிவண்ணன் அவர்கள் தொகுப்புரை வழங்கினார். திருமதி இர.உமா சாரதா நன்றியுரை வழங்கினார்.


கல்லூரி மாணவிகள் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முனைவர் மு.இளங்கோவன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தமிழ் இணையப் பயிற்சி வழங்கினார். நாளையும்(31.08.2013) தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுகின்றது. 
த. பிரபு (கல்லூரி இயக்குநர்)
மு.இளங்கோவன் உரை

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

இமயம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்



திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள கண்ணனூர் இமயம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 30,31-08-2013(இரண்டு நாள்) நடைபெற உள்ளது. தமிழார்வலர்கள் கலந்துகொள்ளலாம்.


தொடர்புக்கு: 9786689665

புதன், 21 ஆகஸ்ட், 2013

முத்துப்பேட்டை இரகமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்த்தாத்தா உ.வே.சா.இலக்கிய மன்றத்தின் பத்தாம் ஆண்டுவிழா


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை இரகமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இலக்கிய மன்றத்தின் பத்தாம் ஆண்டுவிழா 23.08.2013 வெள்ளிக்கிழமை மாலை சரியாக ஆறு மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கலந்துகொண்டு தலைமையுரையாற்று கின்றார். தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு. கே.வைத்தியநாதன் அவர்கள் சிறப்புரையாற்றுகின்றார். பரிசுபெற்ற மாணவிகளின் சிறப்புரையும், கூடங்குளம் அணுமின்நிலையம் தேவையா? தேவை இல்லையா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறுகின்றது. விழாவில் உ.வே.சா.இலக்கிய மன்றச்செயலாளர் திரு இராஜ்மோகன் அவர்கள் நன்றியுரையாற்றுவார். தமிழில் பேசுவோம் என்ற முழக்கத்துடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனி, 10 ஆகஸ்ட், 2013

நல்லாசிரியர் இராச. பெரிய. பூபதி அவர்களின் எழுத்துப்பணி...

நல்லாசிரியர் இரா.பெரிய.பூபதி அவர்கள்

புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித்துறையின் மாநிலப் பயிற்சி மையத்தில் இயற்பியல் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிபவர் இராச. பெரிய. பூபதி அவர்கள். இவரின் தந்தையார் திருவாளர் பெரியசாமி அவர்கள் பாவேந்தருடன் பழகியவர், பாவேந்தரின் அணுக்கத்தொண்டராக விளங்கியவர். புதுச்சேரியின் மேனாள் முதல்வர் குபேர் அவர்களின் நம்பிக்கைக்கும் உரியவர். பெருஞ்செல்வந்தராக விளங்கிய பெரியசாமி ஐயா அவர்களின் குடும்பம் பின்னாளில் நலிவடைந்தது.

இராச. பெரியசாமி ஐயா – பாக்கியம் அம்மாள் அவர்களின் மகனாகப் பிறந்தவர் பூபதி அவர்கள் (19.04.1964). இவர் கண்டமங்கலம் வள்ளலார் பள்ளியில் தொடக்கக்கல்வி, மேல்நிலைக்கல்வியைப் பயின்றவர். விழுப்புரம் அரசு கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் இயற்பியல் முதுகலைப்பட்டமும் பெற்றவர். 1982 இல் சைதாப்பேட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் இளங்கலைக் கல்வியியல் பட்டம் பெற்றவர்.

1987 இல் இடைநிலை ஆசிரியராகப் புதுச்சேரி- கம்பளிக்காரன்குப்பம் என்ற ஊரில் பணியில் இணைந்தார். அதன் பிறகு பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வுபெற்றுக், காலாப்பபட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியில் இணைந்தார். 1997 இல் விரிவுரையாளராகப் பதவி உயர்வுபெற்று, காரைக்கால் கோட்டுச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றியவர்.
2000 ஆம் ஆண்டு முதல் கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராகப் பணிபுரிந்து, இப்பொழுது புதுவை மாநிலப் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரிகின்றார்.

அண்மையில் இவர் எழுதிய  “ஆளுமை வளர்ச்சியும் அறிவார்ந்த சிறுகதைகளும்” என்ற நூலினைக் கண்ணுறும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அந்த நூலுக்கு நான் வரைந்த அணிந்துரையைக் கீழே காணலாம்.

 ஆளுமை வளர்க்கும் அரிய நூல்...
ஆளுமை வளர்ச்சி (Personality Development) குறித்த போதிய நூல்கள் தமிழில் இன்னும் வெளிவரவில்லை. ஆளுமை வளர்சிக்கான பயிற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகின்றனவே தவிர எளிய நிலை மக்களை- மாணவர்களை மனத்துள்கொண்டு போதிய படைப்புகள் வெளிவராமை ஒரு குறை என்றே சுட்டலாம். மேல்நாடுகளில் கதை, பாடல்கள், பயிற்சிகள், பாடத்திட்டங்கள் வழியாக இந்தப் பண்பை நன்கு அறிமுகம் செய்து வருகின்றனர்.

ஒருவரின் ஆளுமை என்பது வெறும் தோற்றம் மட்டும் அன்று. தோற்றம், கல்வி, அறிவு, சிறுமை புறங்காத்தல், பொறுமை, காலம் மேலாண்மை, தன்னம்பிக்கை, வினையாண்மை, தன் மதிப்பீடு, நன்றியுணர்ச்சி, எழுத்து, பேச்சு, கூட்டுப்பணி என்று பல பண்புகளின் கூட்டாகும்.

ஆளுமைப் பண்பை நாம் வளர்த்துக்கொள்ள நல்ல நூல்கள், நல்லவர்களின் பேச்சுகள், தன்வரலாற்று நூல்கள் பெரிதும் உதவும். குறிப்பாக மாணவர்களுக்கு ஆளுமைப் பண்பு வளர எளிய மொழிநடையில் அமைந்த கதைநூல்கள் பெரும் பயனைத் தரும். அந்த நுட்பத்தை உள்வாங்கிக்கொண்ட என் அருமை நண்பர், நல்லாசிரியர் இராச. பெரிய. பூபதி அவர்கள் “ஆளுமை வளர்ச்சியும் அறிவார்ந்த சிறுகதைகளும்” என்ற சிறந்த நூலைத் தந்துள்ளார்.

இந்த நூலில் இடம்பெறும் சிறுகதைகள் சிறுவர்கள், மாணவர்கள் மட்டும் படிப்பதற்கு உரியது என்று வரம்புகட்டாமல் அனைவரும் படித்து மகிழலாம். குறிப்பாக மேடைப்பேச்சுக்குப் போகும் முன் இந்த நூலை ஒருமுறை படித்துவிட்டுச் சென்றால் இந்த நூலிலிருந்து சில கதைகளை மேற்கோள் காட்டிப் பேசலாம். மக்கள் மன்றம் நம் பேச்சைச் சுவைக்க இந்த நூலில் இடம்பெற்றுள்ள கதைகள் நமக்குக் கட்டாயம் கைகொடுக்கும்.

வாரிசு என்ற தலைப்பில் அமைந்த கதையில் நேர்மையுடன் நடந்துகொண்டால் சிறப்பு கிடைக்கும் என்று அழகாக விளக்கியுள்ளார். கூடா நட்பு என்ற தலைப்பில் அமைந்த சிறுகதையில் தவறு செய்பவர்கள் தண்டனைக்கு ஆளாவார்கள் என்ற குறிப்பை அறியமுடிகின்றது. சரியான பாடம் என்ற தலைப்பில் அமைந்த சிறுகதையில் பெற்றோரின் துன்பத்தைக் குழந்தைகள் புரிந்துகொண்டால் சிறப்பாக வளர்வார்கள் என்ற பேருண்மையை இந்தக் கதை எடுத்துக்காட்டுகின்றது.

ஒவ்வொருவரும் தன் செயல்பாடுகள் சரியாக உள்ளதா என்று தன்மதிப்பீடு (சுயபரிசோதனை) செய்துகொள்ள வேண்டும். அது ஆளுமையை வளர்த்துக்கொள்ள சிறந்த வழியாகக் குறிப்பிடப்படுவது உண்டு. இந்த நூலில் இடம்பெறும் சுயசோதனை என்ற தலைப்பில் அமைந்த கதையில் இராமன் என்னும் இளைஞன் வழியாக இந்தப் பண்பை ஆசிரியர் நினைவூட்டியுள்ளார்.

காணாமல் போன கடிகாரம் என்ற தலைப்பில் மன ஒருமைப்பாட்டின் சிறப்பை அழகாக விளக்கியுள்ளார். தாழ்வுமனப்பான்மை என்ற  சிறுகதையில் ஆர்த்தி என்ற குறைந்த உயரம்கொண்ட பெண்ணின் உயர்வு மனப்பான்மையை அழகாக விளக்கியுள்ளார்.


ஆசிரியர் இராச. பெரிய. பூபதி அவர்கள் மாணவர்களின் உள்ளம் புரிந்த நல்லாசான். புதுச்சேரி அரசின் நாட்டுநலப்பணித்திட்டத்தில் சிறப்பாகப் பணிபுரியும் அலுவலர். மாணவ சமூகத்தை நல்வழிபடுத்த வேண்டும் என்ற பெருவிருப்பில் இந்த நூலைச் சிறப்பாகத் தந்துள்ளார். விளைச்சலை வைத்தே வயலை மதிப்பிட்டுவிடமுடியும் நல்லாசிரியர் பூபதி அவர்களின் மாணவர்களுக்கான நூல் விளைச்சல் மிகச்சிறப்பாக உள்ளது. வயலின் தரத்தை நூலைப் படிப்பவர்கள் நன்கு உணர்வார்கள். அடுத்த அடுத்த நூல்களும் நன்றாக அமையட்டும் என்ற விருப்பத்தோடு நூலாசிரியர் அவர்களை வாழ்த்துகின்றேன். எழுத்துத் துறைக்கு நண்பர் பூபதி அவர்களை இரு கை பற்றி வரவேற்கின்றேன்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

மு.இளங்கோவன் இலண்டன் செலவு...



இலண்டனில்14.08.2013 முதல் 18.08.2013 வரை உலகத் தமிழியல் ஆய்வுமாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாடு அறிஞர் தனிநாயகம் அடிகளார் அவர்களின் நூற்றாண்டினை நினைவுகூரும் வகையில் இலண்டன் வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு ஆய்வுரைகள், கட்டுரைகள் வழங்க உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆய்வறிஞர்கள் வருகைதர உள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகத்தில் ஒலி ஒளி ஆவணப்படுத்தும் முயற்சிகள் என்ற தலைப்பில் கட்டுரை வழங்க முனைவர் மு.இளங்கோவன் செல்கின்றார். இலண்டனில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளில் உரையாற்றவும் இலக்கியச் சந்திப்புகள் நிகழ்த்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழக நாட்டுப்புறப் பாடல்கள், தமிழ் இணைய வளர்ச்சி, அயலகத் தமிழறிஞர்கள் குறித்த பொருண்மைகளிலும் பிற இடங்களில் மு.இளங்கோவன் உரையாற்ற உள்ளார். தமிழ் இணைய நண்பர்கள் சந்திப்பு, வலைப்பூ நண்பர்களின் சந்திப்பு, முகநூல் நண்பர்களின் சந்திப்பும் உண்டு.

மு.இளங்கோவனின் இலண்டன் நிகழ்ச்சி நிரல் பற்றி அறிய muelangovan@gmail.com என்ற தனி மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

இலண்டன் தொடர்புக்கு:
திரு. தம்பு அவர்கள் 0044-1689857639
திரு. பாரிஸ் இராஜா அவர்கள் 0044 - 7904509817

குறுந்தொகையில் கிடைத்த யானை


மொழிபெயர்ப்பு வல்லுநர் ஐயா பாலசுப்பிரமணியனார் அவர்கள் அவ்வப்பொழுது இரவு வேளைகளில் செல்பேசியில் அழைப்பார்கள். சில நன்மொழிகளை வழங்கி ஊக்கப்படுத்துவார்கள். எங்கள் உரையாடல் மொழிபெயர்ப்பு, ஆங்கில இலக்கியம், பாரதி, கம்பன், பாவேந்தர், பாரதம். நளவெண்பா என்று நீண்டு சங்க இலக்கியம், சிலம்பு என்று வளர்ந்து பெருகும். சிலபொழுது அரைமணி நேரத்திற்கும் மிகுந்தும்கூட ஐயா அவர்கள் தம் அறிவுத் தொம்பையிலிருந்து அறிவுநன்மணிகளை எனக்கு உவகையுடன் வழங்கி மகிழ்வார். ஐயா பாலசுப்பிரமணியனார் அவர்கள் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியில் செந்தமிழ் ஞாயிறு சேதுரகுநாதன் (முத்தொள்ளாயிரம் உரையாசிரியர்) அவர்களிடம் தமிழ் இலக்கியங்களைப் பாடம் கேட்ட பெருமைக்குரியவர்.

நெருநல் இரவு திருக்குறளிலிருந்து “பைங்கூழ் களைகட்டு அதனொடு நேர் ” என்பதற்கு உலகியல் விளக்கம் தந்து வியப்படையச் செய்தார். மேலும் ஒரு குறுந்தொகைப் பாடலை நினைவூட்டினார். பாடல்கள் யாவும் அவர்களுக்கு மனப்பாடமாக இருந்து வெளிவரும். நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை நூல்களை ஒருமுறை படித்த மனநிறைவுடன் எங்கள் உரையாட்டை நிறைவு செய்வோம். அறிஞர் பாலசுப்பிரமணியனார் நினைவூட்டிய குறுந்தொகைப்பாடலைப் பார்ப்போம்.

தலைவன் தலைவியுடன் இயற்கைப் புணர்ச்சியில் உரையாடி, மகிழ்ந்து மீண்டான். ஆனால் அவன் முகம் வாட்டமுடன் இருந்தது. இதனைக் கண்ட தோழன், உனக்கு இந்த வாட்டம் ஏற்படக் காரணம் என்ன? என்று வினவினான். ஒரு மங்கைப் பருவத்தாளின் நுதல்(நெற்றி) அழகு என் உள்ளத்தைப் பிணித்தது என்று தலைவன் மறுமொழி கூறினான். குறுந்தொகையில் வரும் 129 ஆம் பாடலின் கூற்று விளக்கம் மேற்கண்டவாறு அமையும்.

எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளாய் அத்தை
மாக்கடல் நடுவண் எண்ணாள் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்புஅயல் விளங்கும் சிறுநுதல்
புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே! ( குறுந்தொகை129)

(பொருள்) என் தோழனே! சிறுவர்கள் மகிழ்வதற்கும், அறிவுடையோர் பழகுதற்கும் உரிய பெருமைக்குரியவனே! கரிய கடலின் நடுவே உவாநாளின் எட்டாம் நாள் தோன்றும் சிறிய பிறைநிலவு போன்று, ஒரு மகளின் கூந்தலின் பக்கத்தில் தோன்றும் நெற்றியானது புதியதாகக் காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட யானையைப் பிணிப்பதுபோன்று(கயிற்றால் அல்லது தொடரியால் கட்டுவது) என் நெஞ்சைப் பிணித்துவிட்டது என்றான்.(உரையாசிரியர்கள் இந்த இடத்திற்கு வேறுபொருள் உரைப்பாரும் உண்டு)


இந்தப் பாடலில் கோப்பெருஞ்சோழன் என்ற புலவர்(அரசர்) அழகிய உவமைகள் வழியாக நமக்குக் காட்சிகளை விளக்கியுள்ளார்.

 கடலின் இடையிலிருந்து தோன்றும் எட்டாவது நாள் பிறைநிலவு போன்று தலைவியின் நெற்றி விளங்கியது. அந்த நெற்றியின் பேரழகு என்னைப் பிணித்தது என்று தம் நண்பனிடம் தலைவன் கூறினான். யானை பிடிப்பதையும் அதனைப் பிணித்துக்கொண்டு வருவதையும் கண்ட புலவர் பொருத்தமான இடத்தில் இந்த நிகழ்வை நினைவுப்படுத்தியுள்ளார்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கலைமாமணி கல்லாடன் அவர்கள்



புதுவைக்குப் புகழ்சேர்க்கும் பெருமக்களுள் கலைமாமணி கல்லாடன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் கவிஞர் வாணிதாசன் அவர்களின் உடன்பிறந்தார் ஆவார்.

கலைமாமணி கல்லாடன் அவர்கள் 30.07.1943 இல் திருபுவனையில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் அரங்க. திருக்காமு-சுப்பம்மாள் ஆவர். கலைமாமணி கல்லாடன் அவர்களின் இயற்பெயர் ஜானகிராமன் என்பதாகும்.

கல்லாடன் அவர்கள் தொடக்கக் கல்வியைச் சேலியமேடு, பாகூரில் படித்தவர். புதுவை பிரெஞ்சுக் கல்லூரியிலும், தாகூர் கல்லூரியிலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். தமிழ்,ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு மொழிகளில் வல்லவர்.

கடந்த நாற்பதாண்டுகளாக அரசு பணியில் இருந்து, நிறைவாக அரசு சார்புச்செயலாளர் நிலையில் பணி ஓய்வுபெற்றவர். தமிழ்ப்பற்றுடன் அரசு பணிகளில் ஈடுபட்டவர்.

கதை,கவிதை.கட்டுரை என்று பல வடிவங்களில் இவரின் படைப்புகள் அமைந்துள்ளன. மொழிபெயர்ப்புத் துறையிலும் ஆற்றல் பெற்றவர்.

இவர்தம் முதல்நூல் தேன்மொழி என்பது சிறுகாப்பியங்களின் தொகுதியாகும். இவருடைய புரட்சிநிலா காப்பியம் தமிழக அரசின் பரிசைப் பெற்றது. திருக்குறளுக்கு இனிய எளிய தெளிந்த உரையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வரைந்துள்ளார். உலகத் திருக்குள் மையம், தமிழய்யா கல்விக்கழகம், சிறுவர் இலக்கியச் சிறகம் போன்ற அமைப்புகள் இவரின் முயற்சியைப் பாராட்டியுள்ளன. புதுவை வரலாற்றுச்சங்கத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்றுத் திறம்படச் சங்கத்தை நடத்தி வருகின்றார்.

கலைமாமணி கல்லாடன் அவர்களின் படைப்புகளைப் பல்வேறு இதழ்கள் வெளியிட்டுள்ளன. வானொலி, தொலைக்காட்சிகளிலும் பங்கேற்றுத் தமிழ்ப்பணியாற்றியுள்ளார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், மாநாடுகளை ஏற்பாடு செய்து தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளார்.

கவிதைச் செல்வர், கவிமாமணி, பாரதிதாசன் விருது, கவித்தென்றல், பாவேந்தர் மரபுவழிப் பாவலர், முடியரசன் விருது, சுந்தரனார் விருது, கவிச்சிகரம், சான்றோர் மாமணி, குறள்நெறிச்செம்மல், குறள் உரைக்கோ, திருக்குறள் உரைச்செம்மல், புதுவை அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

கலைமாமணி கல்லாடன் படைப்புகளுள் சில:

தேன்மொழி(1979)
தை மகள் வந்தள்(1984)
புரட்சிநிலா(1985)
பேசும் விழிகள்(1986)
சிந்தனை ஒன்றுடையாள்(1991)
பூவைப் பறித்த பூக்கள்(1993)
மேடைக்கனிகள்(1998)
திருக்குறள் உரைக்கனிகள்(2000)
செந்தமிழ்க் கனிகள்(2001)
புதுச்சேரி மரபும் மாண்பும்(2002)
மேடை மலர்கள்(2003)
திருக்குறள் மணிகள்(2003)
வரலாற்று வாயில்கள்(தொகுப்பு)(2003)
இலக்கிய வண்ணங்கள்(204)
கவிச்சித்தரின் படைப்புகள் ஒரு கணிப்பு(2005)
வாணிதாசனின் பாட்டுவளம்(2006)
திருக்குறள் உரைஒளி THIRUKKURAL-READINGS & REFLECTIONS (2007)
எண்ணங்களின் வண்ணங்கள்(2008)
கல்லாடன் கவிதைகள்(2009)
காலந்தோறும் கல்லாடம்(2012)

முகவரி:

கலைமாமணி கல்லாடன் அவர்கள்
திருக்குடில்
14, முதல் குறுக்குத் தெரு
நடேசன் நகர் கிழக்கு,
புதுச்சேரி-605 005

9443076278

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

வரலாற்றுப் பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன் அவர்கள்


பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன் அவர்கள்

தமிழக வரலாற்றினை முழுமைப்படுத்தி எழுதுவதற்குப் பல்வேறு அறிஞர்கள் பாடுபட்டு வருகின்றனர். இத்தகு அறிஞர்களுள் சிலர் உலகத்தின் பார்வைக்குத் தெரிகின்றனர். சிலரின் வரலாறு பார்வைக்கு உட்படாமல் போய்விடுகின்றது. தமிழகம் அறியப்படவேண்டிய ஒரு வரலாற்று அறிஞர் வா. பாலகிருஷ்ணன் அவர்களாவார். தமிழகத்தில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டவர்களின் வரலாறுகளைத் திரட்டுவதைத் தம் வாழ்நாள் பணியாகச் செய்து வருபவர் பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன் அவர்கள். கல்லூரிப் பணியை நிறைவுசெய்து செங்கற்பட்டில் அமைதிவாழ்க்கை வாழ்ந்துவரும் பேராசிரியரின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன் அவர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் திருமூலஸ்தானம் என்ற ஊரில் திருவாளர் வாசுதேவ படையாட்சி, விருத்தாம்பாள் ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தவர் (02.09.1947). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பயின்று 1972 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறையில் துணைப்பேராசிரியராகத் தம் பணியைத் தொடங்கியவர். தமிழகத்தின் அரசு கல்லூரிகள் பலவற்றில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர். திண்டிவனம் அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறையின் தலைவராகவும், கல்லூரியின் பொறுப்பு முதல்வராகவும் பணியாற்றியவர். 31.07.2004 இல் கல்லூரிப்பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்.

பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன் அவர்கள் “உடையார்பாளையம் ஜமீன்தார்கள்” என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து1988 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம். ஃபில் பட்டம் பெற்றவர்.


பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன் அவர்கள் வரலாற்றில் நினைவுகூரப்படவேண்டிய சாதனையாளர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளைக் கட்டுரைகளாகத் தொடர்ந்து எழுதிவருபவர். சேலம் சு. அர்த்தநாரீச நாயக வர்மாவின் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நூறாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ் இதழ்கள் இவரின் சேகரிப்பில் உள்ளன.

புதுவை நா. வெங்கடாசல நாயகர், திருப்பனந்தாள் கதிர்வேலு, கும்பகோணம் குருசாமிதாசு, புதுவை செல்லான் நாயகர் குறித்து எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன. கொடுக்கூர் ஆறுமுகம் வாழ்க்கை வரலாறு குறித்துத் தரவுகளைத் தொடர்ந்து தேடியவண்ணம் உள்ளார். தம் பணி ஓய்வுக்குப் பிறகும் வரலாறுகளைத் தொகுத்து எழுதும் பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் அவர்களை வாழ்த்துவோம்.

தொடர்புக்கு:

பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன் அவர்கள் 9443289818

இரா.பஞ்சவர்ணம் அவர்களின் தொல்காப்பியத் தாவரங்கள்



இரா.பஞ்சவர்ணம் அவர்கள் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் என்ற நூலின் வழியாகத் தமிழறிஞர்களின் கவனத்தைத் தம்பால் ஈர்த்தவர். இப்பொழுது தொல்காப்பியத் தாவரங்கள் என்ற தலைப்பில் அறிவியல் பார்வையில் தொல்காப்பியத்தை அணுகி அரிய செய்திகளுடன் தொல்காப்பியத் தாவரங்கள் நூலினை உருவாக்கியுள்ளார். தொல்காப்பியர் குறிப்பிடும் 48 தாவரங்களின் பெயர்களும் அவை குறித்த தாவரவியல் செய்திகளும் இந்த நூலில் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.

அரை, ஆண்மரம், ஆர், ஆல், ஆவிரை, இல்லம், உதி, உழிஞை, உன்னம், எகின், ஒடு, கடு, கரந்தை, காஞ்சி, காந்தள், குமிழ், குறிஞ்சி, சார், சேமரம், ஞெமை, தளா, தும்பை, நமை, நெய்தல், நெல், நொச்சி, பனை, பாசி, பாலை, பிடா, பீர், புல், புளி, பூல், போந்தை, மருதம், மா, முல்லை, யா, வஞ்சி, வள்ளி, வள்ளை, வாகை, விசை, வெட்சி, வெதிர், வேம்பு, வேல் என்னும் 48 தாவரங்களையும் படங்களுடன் எடுத்துரைத்து விளக்கும் இரா.பஞ்சவரணம் அவர்களின் ஆய்வு முயற்சி தமிழறிஞர்களின் பாராட்டைக் கட்டாயம் பெறும்.

இத்தாவரங்கள் நிலத்தினைக் குறிக்கவும், போர்முறையைக் குறிக்கவும், வழிபாட்டுக்கும், கூத்துமுறையைக் குறிக்கவும், உடலில் ஓவியம் வரைவதைக் குறிக்கவும், மருத்துவப் பண்பைக்குறிக்கவும், போரின் விளைவுகளைக் குறிக்கவும், தாவரத்தின் பண்பைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளமையை இரா.பஞ்சவர்ணம் அவர்கள் இந்த நூலில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.

அரை என்ற தாவரத்தைப் பற்றி விளக்கப்புகும் இரா.பஞ்சவர்ணம் அவர்கள் அரை என்பதன் தமிழ்ப்பெயர் அரசு, ஆலம் என்று குறிப்பிடுகின்றார். வகைப்பாடு என்ற வகையில் தாவரம் பற்றிய செய்திகளை உலகத் தரத்தில் குறிப்பிட்டு விளக்கியுள்ளார்.

தாவரத்தின் பண்புகள் என்ற அடிப்படையில் வளரியல்பு, இலைகள், மலர்கள், சூல்தண்டு, கனிகள், விதைகள், இளந்தளிர் பருவம், இலையுதிர்ப் பருவம், பூக்கும் பருவம், காய்க்கும் பருவம், வாழ்விடம், பரவியிருக்குமிடம், தொல்காப்பியத்தில் தாவரப்பெயர்கள் இடம்பெறும் இடங்கள் உள்ளிட்ட சிறு தலைப்புகளில் அரிய செய்திகள் பலவற்றைத் தந்துளார். இவ்வாறு 48 தாவரங்களுக்கும் இந்த நூலில் விளக்கம் உள்ளன.
தொல்காப்பிய நூற்பாக்கள் முழுமையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளமை போற்றத்தகுந்த முயற்சியாகும்.

தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் இடம்பெறும் தாவரங்கள் குறித்த தகவல்களையும் இரா.பஞ்சவர்ணம் அவர்கள் சிறப்பாகப் பட்டியலிட்டு இந்த நூலில் விளக்கியுள்ளார்.

தொல்காப்பியம், சங்க இலக்கியம் குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நூல் இதுவாகும்.

நூல்: தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்
ஆசிரியர்: இரா.பஞ்சவர்ணம்
பக்கம்:312
விலை:360-00
தொடர்புக்கு:
இரா. பஞ்சவர்ணம் அவர்கள்,
காமராசர் தெரு, பண்ணுருட்டி - 607 106
கடலூர் மாவட்டம், தமிழ்நாடு

செல்பேசி:  98423 34123

தருமபுரி மருத்துவர் கூத்தரசன் அவர்கள் மறைவு



தருமபுரியில் புகழ்பெற்று விளங்கிய மருத்துவரும் தமிழ்ப்பற்றாளரும் தமிழறிஞர் தகடூரான் அவர்களின் மகனுமான மருத்துவர் கூத்தரசன் ஐயா அவர்கள் 04.08.2013 விடியற்காலை4.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றேன். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள், தருமபுரித் தமிழ்ச்சங்கத்துத் தோழர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மருத்துவர் கூத்தரசன் அவர்கள் சித்தமருத்துவத்தில் பட்டம்பெற்று தம் மருத்துவப்பணியைத் தருமபுரியில் ஆற்றிவந்தார். தந்தையார் தகடூரான் அவர்களின் நூல்களைப் பதிப்பித்துத் தமிழுலகிற்குக் கிடைக்கச்செய்தார். தருமபுரித் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக இருந்து தமிழறிஞர்களை அழைத்துத் தமிழ்ப்பொழிவுகள் நடைபெறக் காரணமாக அமைந்தவர். இணையத்துறையில் ஈடுபாட்டுடன் உழைத்துவரும் தகடூர் கோபி, முகுந்து, மு.இளங்கோவன் ஆகியோரை அழைத்துத் தருமபுரியில் 14.09.2008 இல் ஒரு பாராட்டு நிகழ்வை நடத்தியவர். தமிழ் இணையப் பயிலரங்கு நடத்தி அப்பகுதியில் பலருக்குத் தமிழ் இணைய ஈடுபாடு வரக் காரணமாக இருந்தவர். தமிழில் சித்தர் அறிவியல் என்ற இதழையும் தொடர்ச்சியாக நடத்தி வந்தவர். இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பெற்று, மருத்துவம் பயன் அளிக்காமல் இயற்கை எய்தினார்.

மருத்துவர் கூத்தரசன் அவர்கள் 22.10.1957 இல் பிறந்தவர். இவருக்குசெந்தில்வடிவு என்ற மனைவியும்(ஆசிரியர்,ஔவையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தருமபுரி), மலர்விழி, திருவரசன் என்ற மகனும் உள்ளனர்.


மருத்துவர் கூத்தரசன் அவர்களின் இறப்பு தருமபுரிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.