நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 30 டிசம்பர், 2015

தமிழண்ணலுக்குக் கையறுநிலைப்பா!


 தமிழண்ணல்
தமிழைத் தேக்கிய நெஞ்சமுடன்
தரணி எங்கும் சுழன்றபடி
கமழக் கமழ உரையாற்றி,
கன்னித் தமிழைப் போற்றியவன்!
கமழக் கமழ உரையாற்றி,
கன்னித் தமிழைப் போற்றியவன்
இமைகள் மூடிய கொடுஞ்செய்தி
என்றன் நெஞ்சைத் தாக்கியதே!

நிமையப் பொழுதும் தவறாது
நிலைத்த பணிகள் செய்தவனாம்!
தமிழின் அண்ணல் எனும்பெயரோ
தமக்குப் பொருந்த வாழ்ந்தவனாம்!
தமிழின் அண்ணல் எனும்பெயரோ
தமக்குப் பொருந்த வாழ்ந்தமகன்,
குமைந்து மக்கள் அரற்றும்படி,
கூடல் நகரில் மாய்ந்தனனே!

ஆய்வில் நுழைந்து தமிழுக்கு,
அணிஅணி யாக நூல்தந்து,
ஓய்வோ இன்றி உழைத்த மகன்
உலகம் போற்றத் துயில்கொண்டான்!
ஓய்வோ இன்றி உழைத்தமகன்
உடலம் சுருங்கித், தளர்வுற்றுச்,
சாய்ந்த செய்தி தமிழர்களைச்,
சாய்த்த தென்றே நானுரைப்பேன்!

பள்ளிக் கல்வி தமிழாக,
பாடு கிடந்த புலவோர்க்கு,
உள்ளம் இசைந்து தலைமையேற்ற
ஒப்புயர் வில்லா மறவன்இவன்!
உள்ளம் இசைந்து தலைமையேற்ற
ஒப்புயர் வில்லா மறவன்இன்று
வள்ளல் போல உயிர்துறந்து
வையம் நீங்கிச் சென்றனனே!

கோவில் தோறும் குடமுழுக்குக்
குமரித் தமிழில் நடத்திடவே,
ஆவல் கொண்ட பெரும்படைக்கே,
அரசன் போல ஆணையிட்டான்!
ஆவல் கொண்ட பெரும்படையின்
அணியின் செயலை நேர்கண்ட,
காவல் வீரன் நிகர்த்தமகன்
கண்கள் துயின்றான்! கவலுகின்றோம்!

புதுமை, பழைமை எனும்பெயரில்
புரட்சி நடந்த ஆய்வுலகில்,
மதிமை சான்ற தமிழண்ணல்
மலர்ந்த கண்ணாய் இரண்டனையும்
பொதிய மலையின் அகத்தியனாய்ப்
போற்றித் தழுவிப் புகழ்புரிந்தான்.
அதனால் இரண்டு குழுவுக்கும்
அவனே இணைப்புப் பாலம்அம்மா!

கற்றோர் அவையை அணிசெய்த
கழகப் புலவன் ஒத்தமகன்!
வற்றிய உடலம் கொண்டாலும்
வரிப்புலி போன்றே தமிழ்காத்தான்!
வற்றிய உடலின் வரிப்புலியோ
வாழ்ந்து முடிந்து சென்றாலும்
பற்றிய தீயாய் அவன்உணர்வு
படர்ந்து தமிழகம் நிலவும்அம்மா!

சிற்றூர் தன்னில் பிறந்தாலும்
செயலால் உலகோர் உறவானான்!
கற்ற மக்கள் உள்ளமெலாம்
கல்லின் எழுத்தாய் நிலைபெற்றான்!
கற்ற மக்கள் உள்ளமெலாம்
கல்லின் எழுத்தாய் நிலைத்தவனின்
பற்றில் திளைத்தோம்; பதறுகின்றோம்!
போய்வா அண்ணலே, காத்திருப்போம்!


பேராசிரியர் தமிழண்ணல் மறைவு!


 பேராசிரியர் தமிழண்ணல்


மூத்த தமிழறிஞரும், தமிழாய்வுலகில் தனக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவருமான முனைவர் இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) ஐயா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் தமிழண்ணல் ஐயா அவர்கள் உடல் நலம் குன்றி, தம் 88 ஆம் அகவையில் இயற்கை எய்தியுள்ளார். பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் உடல் நல்லடக்கம் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மதுரையில் நடைபெற உள்ளது.

பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கிய தமிழ்ப் பேராசிரியர் ஆவார். தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி உண்ணாநோன்பு இருந்த தமிழறிஞர் குழுவுக்குத் தலைமையேற்றவர். தொல்காப்பியத்திற்கு முரணாக ஒரு தொல்காப்பியப் பதிப்பு வந்தபொழுது துணிச்சலுடன் நின்றெதிர்த்த பெரும்புலவர். இத்தகு காரணங்களால் இவர் தலைமையில் யான் திருமணம் செய்துகொண்டேன். என் சிற்றூருக்கு வருகை தந்து என் நூல்களை வெளியிட்டவர்(1995). சிலவாண்டுகளுக்கு முன் புதுச்சேரிக்கு வந்தபொழுது நம் இல்லம் வந்து எங்களின் எளிய விருந்தினை ஏற்றவர். மதுரை செல்லும்பொழுது யானும் தமிழண்ணல் ஐயா அவர்களைக் காண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். என் மீது அளவற்ற அன்புகாட்டியவர். என் குடும்பத்தின் மீது பரிவுகொண்டவர். இத்தகு அன்பால் எங்களைப் பிணைத்திருந்த பேராசிரியர் தமிழண்ணல் ஐயா அவர்களின் மறைவுச் செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. எங்களின் கண்ணீர் வணக்கத்தை ஐயாவுக்குக் காணிக்கையாக்குகின்றோம்.

பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் தமிழ் வாழ்க்கையை நினைவுப்படுத்துகின்றேன்.

பிறப்பு

தமிழண்ணல் அவர்கள் 12.08.1928 இல் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் பெரியகருப்பன் என்பதாகும். இவர்தம் பெற்றோர் இராமசாமி, கல்யாணி ஆச்சியாவர்.

கல்வி

மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர்(1948). பிறகு தன்முயற்சியால் கற்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(பொருளியல்) (1948), முதுகலைத் தமிழ்(1961) ஆகிய பட்டங்களைப் பெற்றர். மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்(1969). முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனாரும் இவர்தம் ஆய்வு நெறியாளர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆசிரியர் பணி

தமிழண்ணல் அவர்கள் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கியவர். இங்கு, தம் கல்லூரித் தோழர் கவிஞர் முடியரசனாருன் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பதின்மூன்று ஆண்டுகள் இங்குப் பணிபுரிந்த பிறகு மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பத்தாண்டுகள் தமிழ்ப் பேராசிரியர் பணியாற்றியவர். இவர் தம் சங்க இலக்கியப் புலமையை அறிந்த ஆலை அரசர் கரு. முத்து. தியாகராசனார் இவருக்கு உள்ளன்போடு பணி வழங்கியதை அண்ணல் அவர்கள் நெகிழ்ந்து கூறுவார்கள்.

1971 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியும் பின்னர் இணைப்பேராசிரியர், அஞ்சல்வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல்துறைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் பணி என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பல நிலைகளில் பணிபுரிந்துள்ளார். இவர்ம் பணிக்காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்பு நிதியுதவித் துறையாக உயர்வுபெற்றது.

குடும்பம்

தமிழண்ணல் அவர்களுக்கு 1954, ஆகத்து 30 இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சோலையப்பன், கண்ணன், மணிவண்ணன் என்ற ஆண்மக்களும், கண்ணம்மை, அன்புச்செல்வி, முத்துமீனாள் என்ற பெண்மக்களும் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.

தமிழண்ணல் பெற்ற சிறப்புகள்

1971 இல் குடியரசு நாளில் புதுதில்லி அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு இவர் செல்வம் என்ற தலைப்பில் பாடிய கவிதை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப் பெற்ற சிறப்பிற்கு உரியது. மதுரை மீனாட்சியம்மை பற்றி இவர் பாடிய பாடல்கள் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் என்ற இவர் நூலும் பரிசுபெற்ற ஒன்றாகும். தமிழக அரசால் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர்.

பல்கலைக்கழக நல்கைக்குழு தமிழண்ணல் அவர்களை 1981-82 ஆம் கல்வியாண்டில் தேசியப் பேராசிரியராகத் தேர்வு செய்து சிறப்புச்செய்தது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கும் சென்று தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு, இலக்கியக் கொள்கைகளைப் பற்றி சொற்பொழிவாற்றிப் பிற மொழியினருக்குத் தமிழின் சிறப்பை எடுத்துரைத்தர்.

இலங்கை, சப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று கருத்தரங்குகளில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர்.

இவர் மேற்பார்வையில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். முனைவர் மு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்டவர்கள் இவரின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள். தினமணி உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் புகழ்பெற்றவைகளாகும்.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இவருக்கு 1989 ஆம் ஆண்டில் தமிழக அரசின் திரு.வி.க.விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிங்கப்பூர் அரசின் அழைப்பில் தமிழ்க்கல்விக்கு உரிய பாடநூல் எழுதும் பணியிலும் ஈடுபட்டவர்.

தமிழகப்புலவர் குழுவின் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிந்து வந்தவர். 

தமிழண்ணல் நூல்கள்

தமிழண்ணல் தமிழ் இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல், உரை, படைப்பு எனப் பல திறத்தில் அமையும் நூல்களை வழங்கியுள்ளார். அவற்றுள் சில :

வாழ்வரசி புதினம்
நச்சுவளையம் புதினம்
தாலாட்டு
காதல் வாழ்வு
பிறைதொழும் பெண்கள்

சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள் (2003)
சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள்(2005)
தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்(2004)
புதியநோக்கில் தமிழ்இலக்கிய வரலாறு
தமிழியல் ஆய்வு(இ.முத்தையாவுடன்)
ஆய்வியல் அறிமுகம்(இலக்குமணனுடன்)
ஒப்பிலக்கிய அறிமுகம்
குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு விளக்கம்

தொல்காப்பியம் உரை
நன்னூல் உரை
அகப்பொருள் விளக்கம் உரை
புறப்பொருள் வெண்பாமாலை உரை
யாப்பருங்கலக் காரிகை உரை
தண்டியலங்காரம் உரை
சொல் புதிது சுவை புதிது
தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்
தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?
பேசுவது போல் எழுதலாமா? பேச்சுத் தமிழை இகழலாமா?
பிழை திருத்தும் மனப்பழக்கம்
உரை விளக்கு
தமிழ் உயிருள்ள மொழி
தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள்
தமிழ்த்தவம்
உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்
திருக்குறள் உரை
இனிய தமிழ்மொழியின் இயல்புகள் முதலியன


செவ்வாய், 29 டிசம்பர், 2015

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் வழங்கும் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா


 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Fetna) அமெரிக்காவில் தமிழ்க் காப்புப் பணிகள் பலவற்றைச் செய்து வருகின்றது. இந்த அமைப்பு தாயகமாம் தமிழகத்தில் தமிழிசைப் பணியை முன்னெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவை நடத்த முன்வந்துள்ளது. சென்னையில் உள்ள இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11 ஆம் ஆண்டு விழாவில்  3 ஆம் ஆண்டு தமிழிசை விழாவினை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. தமிழிசை ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தாங்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

நாளும் இடமும்

நாள் : 29.12.2015 செவ்வாய்க்கிழமை

இடம்: ஆனந்த் சந்திரசேகர் அரங்கம் A/C      

எண்: 56, தம்பையா சாலை, மேற்கு மாம்பலம், சென்னை -600 033
(மாம்பலம் இரயில் நிலையம் & அயோத்தியா மண்டபம் அருகில்)
              
நிகழ்ச்சி நிரல்

பிற்பகல் 2.00 மணி - தொடக்க விழா

விழாவினைத் தொடங்கி வைத்தல்:
உயர்திரு. கருப்பையா சிவராமன் அவர்கள்
மேனாள் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

தமிழ் வாழ்த்து : இசைத்தென்றால். ஹிரண்யா சிங்கப்பூர்

பிற்பகல் 2.15 முதல் 3.30 மணி வரை
பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும்
கல்லூரி மாணவ-மாணவிகள் வழங்கும் தமிழிசை

மதியம் 3.30 மணி முதல் 4.00 மணி வரை
கலைமாமணி இந்திரா ராஜன்  வழங்கும் தமிழர் அடையாளம் நாட்டியம்

மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை
பாவேந்தர் பாடல்கள் இசை அரங்கு
வழங்குபவர்: 
தமிழிசை வேந்தர் முனைவர் அரிமளம் சு. பத்மநாபன் அவர்கள்    

மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
லக்ஷ்மி மில்ஸ் விவேகானந்தர் சேவா சங்கக் கலைக்குழுவினரின்
கும்மி ஆட்டம்.

மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை
தமிழ் வாழ்த்து :  செல்வன் அரவிந்தன்

வரவேற்புரை :
உயர்திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள்
தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.

தலைமை :
முனைவர் V.G. தேவ் அவர்கள்
மேனாள் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

முன்னிலை :
எழுத்தாளர். உயர்திரு.  மாம்பலம் ஆ. சந்திரசேகர் அவர்கள்

சிறப்பு விருந்தினர்கள் :
உயர்திரு. முனைவர் G. விசுவநாதன் அவர்கள்
வேந்தர், VIT பல்கலைக்கழகம்

உயர்திரு. முனைவர் க. பாஸ்கரன் அவர்கள்
துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்

உயர்திரு செ. இராஜேந்திரன் I.A.S. அவர்கள்
வேளாண்மைத்துறை தலைமைச் செயலகம், சென்னை

உயர்திரு. K. அய்யனார் அவர்கள்
மண்டல இயக்குனர், இந்தியப் பண்பாட்டு உறவு நிறுவனம் (ICCR)

திரைப்பட, குறும்பட விருது வழங்குபவர் :
உயர்திரு. முனைவர் வி.ஜி. சந்தோசம் அவர்கள்
வி.ஜி.பி. நிறுவனங்கள்

வாழ்த்துரை :
முனைவர். மு. இளங்கோவன் அவர்கள்
புதுச்சேரி

சான்றிதழ் வழங்குபவர் :
உயர்திரு. K.P.K.செல்வராஜ் அவர்கள்
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்

நிகழ்ச்சித் தொகுப்பு :
உயர்திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள் 
மக்கள் தொடர்புக்குழு ஒருங்கிணைப்பாளர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

நன்றியுரை :
உயர்திரு. திருபுவனம். G. ஆத்மநாதன் அவர்கள்
நிறுவனர், அறங்காவலர் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை

மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
மாணவர் அரங்கம் வழங்கும்
வெளிச்சத்திற்குப் பின்னால் - நாடகம்
இயக்கம் - பேராசிரியர் R. இராஜூ அவர்கள்
நிகழ் கலைத்துறை, புதுவைப் பல்கலைக் கழகம் - புதுச்சேரி


திங்கள், 14 டிசம்பர், 2015

திருக்குறள் புலவர் நாவை. சிவம் அவர்கள்!


புலவர் நாவை. சிவம் அவர்கள்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அடுத்துள்ள செட்டிக்குளம் அரசுப் பள்ளியின் ஆசிரியர்களும்மாணவர்களும் தமிழ் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மொழிஞாயிறு பாவாணர் அவர்களை நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகப் பள்ளியின் தமிழ் உணர்வு தழைத்த ஆசிரியர்கள் அழைத்திருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக ஒரு மாட்டுவண்டியில் மேசையைப் பொருத்தித் தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் அவர்களின் திருவுருவப் படத்தை அதில் வைத்தனர். ஊர்வலம் ஆயத்தமானது. படத்தின் அருகில் பாவாணர் அவர்களை அமரச் சொன்னார்கள். மறைமலையடிகளுக்கு இணையாக நானா? என்று பாவாணர் அவர்கள் ஒரு வினா எழுப்பிவிட்டு, வண்டியில் அமர மறுத்தார். பின்னர் வண்டியின் முன்பாகப் பாவாணர் அவர்கள் காலார நடந்து வந்தார். அனைவரும் ஊரை வலமாக வந்து, பள்ளியை அடைந்தனர். இந்த ஊரின் தமிழ் விழா நடைபெற்றபொழுது பத்தாம் வகுப்பில் மாணவராகப் படித்துக்கொண்டிருந்தார் நாவை. சிவம் அவர்கள். பாவாணரின் நூல்களில் அன்று முதல் நாட்டம்கொண்டு, தமிழ் உணர்வாளராக வளர்ந்தவர்.

புலவர் நாவை. சிவம் அவர்கள் மணப்பாறையில் இப்பொழுது வாழ்ந்து வருகின்றார். பாவாணர் பற்றாளராகவும், தனித்தமிழ் இயக்க உணர்வாளராகவும் இருந்து தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று தமிழ்ப்பணியும் திருக்குறள் பணியும் செய்துவருகின்றார். இவர்தம் தமிழ்ப்பணிகளை இங்குப் பதிந்துவைப்போம்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அடுத்த நாட்டார்மங்கலம் என்ற ஊரில் திரு. துரை. வைத்தியலிங்கம், திருவாட்டி அகிலாண்டம் அம்மாள் ஆகியோருக்கு மகனாக நாவை. சிவம் அவர்கள் 08.08.1945 இல் பிறந்தவர். இவரின் இயற்பெயர் சிவராமலிங்கம் ஆகும். செட்டிக்குளத்தில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், முசிறியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இணைந்து ஆசிரியர் பயிற்சி பெற்றார். கல்லக்குறிச்சி அருகில் உள்ள நயினார் பாளையத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியில் 1965 ஆம் ஆண்டு இணைந்தார். புலவர், முதுகலை, கல்வி இளவல், ஆகிய பட்டங்களைப் பின்னாளில் பெற்றவர்.

புதுக்கோட்டை, விராலிமலை, மணற்பாறை ஆகிய இடங்களில் தலைமையாசிரியர், தொடக்கக் கல்வி அலுவலர் என 38 ஆண்டுகள் பணிபுரிந்தவர். மாணவர்களின் கல்வி நலனுக்கும் ஆசிரியர்களின் உரிமைக்கும் தொடர்ந்து குரல்கொடுத்தவர். ஆசிரியர் போராட்டங்களில் ஈடுபட்டு, சிறை சென்றவர்.

சிவ ராமலிங்கம் என்ற தம் பெயரைத் தமிழ்ப்படுத்தும் வகையில் நாவை. சிவா என்று அமைத்து, பாவாணரின் ஒப்புதலுக்குக் காட்டச் சென்றார். “ஆகார இறுதிப் பெயர்ச்சொல் ஆகா” என்று பாவாணர் குறிப்பிட, சிவா சிவம் ஆனார்.

தென்மொழி, முல்லைச்சரம், தமிழ்ப்பணி முதலிய ஐம்பதிற்கும் மேற்பட்ட இலக்கிய ஏடுகளில் தொடர்ந்து எழுதி வருபவர்.
                      பொன்னாடையில் பொலிபவர் புலவர் நாவை. சிவம் அவர்கள்

நாவை. சிவம் அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டித் ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ என்ற விருதைத் தமிழக அரசு வழங்கிப் பாராட்டியுள்ளது. வாழ்வியல் சிந்தனைக் கலந்துரையாடல், திருக்குறள் தொடர்வகுப்புகள், தனித்தமிழ்ச் சொற்பயிற்சி வகுப்புகள், வீடுதோறும் குறள் நூலும் திருவள்ளுவர் படமும் வழங்கி வருதல், முச்சந்திகளில் முப்பால் முழக்கம், தெருவெல்லாம் தமிழ்முழக்கம், பள்ளிகளில் உள்ளும் புறமும் திருக்குறள் எழுதுவித்தல், தமிழ்முறைத் திருமண நிகழ்வுகள் என இவரின் பணிகள் நீளும்.

40 ஆண்டுகளாக இவர் தொடர்ந்து நடத்தும் திருவள்ளுவர் விழாவில் பள்ளி மாணவர்களுக்குக் குறள்போட்டி நடத்திப் பரிசுகள் வழங்கி வருகின்றார். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்களை அழைத்துப் பாராட்டு விழாக்களை நடத்தியுள்ளார். வெல்லும் திருவள்ளுவம், வெண்பா விளைச்சல், செந்தமிழ்ப் பூக்கள் என்பன இவரின் படைப்பு நூல்கள் ஆகும். மலேசியா, சிங்கப்பூர், மாலைத்தீவு, இலங்கை போன்ற அயல்நாடுகளுக்குத் தமிழ்ப்பயணம் செய்தவர். திருவரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு இவருக்குத் ‘தமிழ்மாமணி’ என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளது.


புலவர் நாவை. சிவம் அவர்கள் நிறைந்த வாழ்நாள் பெற்று, நற்றமிழுக்குத் தொண்டாற்ற நெஞ்சார வாழ்த்துவோம்!.