நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 24 மே, 2020

பொற்கோவின் வாழ்க்கைப் பாதை!




 பேராசிரியர் பொற்கோ அவர்களின் வாழ்க்கை வரலாறு,பொற்கோவின் வாழ்க்கைப் பாதை” என்ற தலைப்பில் 2018 ஆம் ஆண்டில் 446 பக்கம் கொண்ட நூலாக வெளிவந்தது. நீண்ட நாட்களாகப் படிப்பதற்கு எடுத்து வைத்திருந்த இந்த நூலினை இப்பொழுதுதான் படிக்க முடிந்தது. தனிப்பட்ட ஒருவரின் வரலாறாக இல்லாமல் இந்த நூல் தமிழகத்து ஆளுமைகள் பலரைக் குறித்த செய்திகளையும் தாங்கி நிற்கின்றது. தமிழகத்தின் கல்வி வரலாறாகவும் மலர்ந்துள்ளது. இலண்டனில் தமிழ் தழைத்த வரலாற்றையும் இந்த நூல் வழியாக அறிந்துகொள்கின்றோம். தமிழகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களின் எழுச்சி, தேக்க நிலைகள் யாவும் இந்நூலில் பதிவாகியுள்ளன.

 முந்திரிக் காடுகள் நிறைந்த செம்மண் நிலமான இரும்புலிக்குறிச்சி (உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம்)  என்ற சிற்றூரில் உழவர் குடியில் பிறந்து, திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று, இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைக் கலையியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் (SOAS) நிறுவனம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய பொற்கோவின் பனிமலை நிகர்த்த வாழ்க்கை வரலாறு இந்த நூலில் அருமையாகப் பதிவாகியுள்ளது.

 இலண்டனில் பணிபுரிந்தபொழுது இலண்டன் தமிழ்ச்சங்கம், இலண்டன் முரசு (இதழ்), பி.பி.சி. தமிழோசை உள்ளிட்ட அமைப்புகளின் வளர்ச்சிக்குத் துணை நின்றுள்ளார். கீழைக் கலையியல் நிறுவனத்தில் இவர் தமிழ் கற்பித்த முறை, ஐரோப்பிய நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. இங்கு இவர் உருவாக்கிய பாடத்திட்டமே இன்றும் பயன்பாட்டில் இருப்பதை அறிந்து நமக்குப் பெருமையே ஏற்படுகின்றது. அதுபோல் ரெடிங் பல்கலைக்கழகத்திலும் இவரின் கல்விப்பணி நீண்டு அமைந்தமையை எண்ணும்பொழுது வியப்பு மேலிடுகின்றது. இலண்டன் பணியைத் துறந்து, தாய்நாட்டுக்குத் தம் அறிவு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் திரும்பிய இவருக்கு அமைந்த வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை அறியும்பொழுது இவர்தம் படிநிலை வளர்ச்சி நேர்மையான நிலையில் அமைந்தமை சிறப்பாக எண்ணத்தக்கது.

 பேராசிரியர்கள் மால்கம் ஆதிசேஷையா, ஜி.ஆர். தாமோதரனார். நெ.து. சுந்தரவடிவேலு, தொ.பொ.மீனாட்சிசுந்தரம், மு.வ. ச.அகத்தியலிங்கம், சுசுமு ஓனோ, ஜான் இரால்ஸ்டன் மார் உள்ளிட்ட அறிஞர்கள் இவரின் வாழ்வில் கொண்டிருந்த தொடர்புகள் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

 பேராசிரியர் பொற்கோ அவர்கள் தமிழகத்தின் மிகச் சிறந்த பேராசிரியர்; மொழியியல் அறிஞர். ஆளுமைத் திறம் கொண்ட துணைவேந்தர். இதழாசிரியர். பேச்சாளர். ஆய்வாளர். கல்வியாளர். பகுத்தறிவுச் சிந்தனையாளர். மாந்தநேயம் கொண்டவர். கல்வி, சமூக மேம்பாட்டுக்கான செயல்திட்டங்களை உருவாக்கி, நடைமுறைப்படுத்தியவர். தமிழக அரசு, தமிழகப் பல்கலைக்கழகங்கள் சார்ந்த பல பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு உழைத்தவர். இவரின் நெறிகாட்டலில் பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அமெரிக்க, ஐரோப்பிய, தென்னாப்பிரிக்க, மலேசிய, சிங்கப்பூர், சப்பான், மொரீசியசு உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகைபுரிந்து இவரிடம்  தமிழ் கற்ற மாணவர்களின் எண்ணிக்கை கணக்கற்று நீளும்.

 சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளிலும் இவரின் கல்விப்பணி நீண்டிருந்தது.

 தமிழகத்தின் கல்வி அமைப்புகள், தமிழமைப்புகளின் அழைப்பில் சென்று உரையாற்றித் தமிழாய்வு தழைக்க உழைத்தவர். தமிழகத்து அரசியல் தலைவர்களுடன் இணைந்து பணிபுரிந்த பேறு பெற்றவர். இக்கால இலக்கணம் கண்டவர்; திருக்குறளுக்கு உரைவரைந்தவர்; தொல்காப்பிய அறிமுகம் நூல் தந்தவர். ஆய்வியல் அறிமுகத்தைப் பயிற்றுவித்தவர். பிறமொழி மாணவர்கள் தமிழ் கற்க உதவும் நூல்களை ஆங்கிலத்தில் வரைந்தவர். இவர்தம் நீண்ட நெடிய வரலாற்றினைத் தாங்கி நிற்கும் பொற்கோவின் வாழ்க்கைப் பாதை நூல் தமிழுணர்வாளர்கள் கற்றுப் பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலம். செய்திகளின் பெட்டகம்.

 இந்த நூலில் பொற்கோவின் கல்விப் பயணம், பயிற்றுவித்த ஆசிரியர்கள், துணை நின்ற நண்பர்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய பட்டறிவுகள், பொதுப்பணியில் ஈடுபட்ட நினைவுகள், நூலாக்கப் பணிகள், இதழ் வெளியீட்டுப் பங்களிப்பு, குடும்ப வாழ்க்கை, தந்தை பெரியார், தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார், அறிஞர் வே.ஆனைமுத்து உள்ளிட்டோருடன் அமைந்த தொடர்புகள் யாவும் நிரல்பட எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

 முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க  மூத்த மொழியியல் அறிஞர் பொற்கோ அவர்களின் வாழ்க்கை வரலாறு விளக்கும் அரிய நூலினைக் கற்ற பிறகு நெஞ்சம் அமைதியில் திளைத்தது. உழைப்பும் நேர்மையும் ஒருவனை உயர்த்தும் என்ற நம்பிக்கை வேர்கொண்டது. உள்ளங் கவர்ந்த இந்த நூலினை முன்மொழிவதில் மகிழ்கின்றேன்.


வெள்ளி, 1 மே, 2020

புலவர் சீனு. இராமச்சந்திரன் மறைவு!


தமிழ் மாமணி புலவர் சீனுஇராமச்சந்திரன்

 புதுச்சேரியின் புகழ்மிக்க புலவர்களுள் முதன்மையானவரான புலவர்  சீனு. இராமச்சந்திரன் அவர்கள் இன்று (01.05.2020) மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றேன். அன்னாரைப் பிரிந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். புதுச்சேரிக்கு நான் படிக்க வந்ததுமுதல்(1992) புலவர் அவர்களுடன் எனக்கு நல்ல தொடர்பு அமைந்தது. பணியின் பொருட்டு யான் புதுவையில் தங்க நேர்ந்த பிறகு(2005) அத்தொடர்பு வேர்விட்டு நிலைபெற்றது. நாங்கள் நடத்தும் அனைத்து விழாக்களிலும் புலவர் அவர்களின் வருகை கட்டாயம் இருக்கும். என் ஆவணப்பட முயற்சி, உலகத் தொல்காப்பிய மன்றம் தொடர்பொழிவுகள், நூல் வெளியீட்டு விழாக்கள், அறிஞர்களுக்கு அமையும் பாராட்டு விழாக்களில் புலவர் சீனு.இராமச்சந்திரனார் கலந்துகொண்டு நெஞ்சார வாழ்த்துவார்கள். சிலபொழுது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நாங்கள் உரிமையுடன் கொடுக்கும் பொறுப்புகளை மிகச் சிறப்பாக ஏற்றுத் திறம்பட நடத்தி, நிகழ்ச்சி சிறக்க உதவுவார்கள். தமிழ்ப்பற்றும், இலக்கிய ஈடுபாடும் கொண்ட புலவர் பெருமகனாரை எப்பிறப்பில் காண்போம் இனி! என்று கலங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

 தொல்காப்பியத் தொண்டர் விருதினை அமெரிக்க அறிவியலாளர் முனைவர் நா.க. நிதி அவர்களுக்கு வழங்கும் விழாவுக்குப் புதுச்சேரி அரசின் மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்கள் வருகை தந்தபொழுது, அமைச்சர் அவர்களை எங்கள் சார்பாக அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார். நம் அமைச்சர் பெருந்தகையார் அவர்களும் புலவர் சீனு. இராமச்சந்திரன் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, உள்ளன்புடன் வாழ்த்தி மகிழ்ந்தார்கள். புலவர் அவர்களுக்கு அமைச்சர் அவர்களின் முழுமையான அன்பு பரிமாறப்படுவதை அறிந்து அவையோர் மகிழ்ந்து போற்றினர். அதுபோல் பல்வேறு நிகழ்வுகளை எம்மால் நினைவூட்ட இயலும்.


பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்கள் 
புலவர் சீனு. இராமச்சந்திரன் அவர்களைச் சிறப்பித்தல்

எங்களின் இல்லம் வந்து வாழ்த்திச் செல்லும் இயல்புகொண்டிருந்த புலவர் சீனு. இராமச்சந்திரனார் அவர்களின் தமிழ் வாழ்க்கையை முன்பே நான் எழுதியுள்ளேன். அவரின் தமிழ்ப்பணியினை உலகோர் அறியும் வகையில் மீண்டும் அதனைப் பதிவு செய்கின்றேன்.


எம் நிகழ்வுக்கு வருகைபுரிந்த புலவர் சீனு.இராமச்சந்திரன் அவர்களைத் தூ.சடகோபன் அவர்கள் வரவேற்கும் காட்சி

புலவர் சீனு. இராமச்சந்திரன் தமிழ் வாழ்க்கை


 புதுவையில் எண்ணற்ற தமிழ்ப்புலவர் பெருமக்கள் தோன்றித் தமிழ்மொழிக்கும், இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். அப்புலவர்கள் வரிசையில் போற்றத்தக்கவர் புலவர் சீனு. இராமச்சந்திரன் ஆவார். தமிழாசிரியராகப் பணியாற்றியும், பல்வேறு நூல்களைப் படைத்தும், பல்வேறு இலக்கிய அமைப்புகளைத் தலைமைதாங்கி நடத்தியும் தமிழ்ப்பற்றுடன் வாழ்ந்த புலவர் பெருமகனாரின் வாழ்க்கைக்குறிப்பு தமிழ் இலக்கிய வரலாற்றில் பதியப்படவேண்டிய ஒன்றாகும்.

புதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சியில் உள்ள வீமக்கவுண்டர்பாளையம் செ.சீனுவாசன் - எல்லம்மாள் இணையர்க்கு இரண்டாம் மகனாகப் பிறந்தவர் சீனு. இராமச்சந்திரன். 1945 இல் புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு வட்டம் செட்டிப்பட்டு என்னும் சிற்றூரில் வாழ்ந்த திரு.குப்புசாமி ஆசிரியரிடம் திண்ணைப்பள்ளியில் பயின்றவர். 1946-47 இல் புதுச்சேரி நகரில் எக்கோல் பிரைமர் (இன்றைய .உசி. பள்ளி) பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றவர்.

1954-55 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் புகுமுகத் தேர்வும் 1956-60 வரை மயிலம் தமிழ்க்கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக வித்துவான் பட்டமும், அதே ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பண்டிதர் (புலவர்) பட்டமும் பெற்றவர்.

16.06.1961 இல் புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள இராசா மெட்ரிகுலேசன் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி, செங்கற்பட்டு, சென்னை, திருக்கோவலூர், சித்தலம்பட்டு ஆகிய ஊர்களில் பணியாற்றி, வழுதாவூர் அரசு மேனிலைப்பள்ளியில் முதனிலைத் தமிழாசிரியராகவும், உதவித் தலைமையாசிரியராகவும் கடமையாற்றியவர்.

1959 இல் தமிழரசுக் கழகம் சார்பில் கண்ணகிக்குத் திருவுருவச் சிலை அமைத்து வீமக்கவுண்டர்பாளையம், திலாசுப்பேட்டையில் வீதியுலா வரச்செய்த பெருமைக்குரியவர்.

திருநாவுக்கரசர், பாவலன் தந்த பரிசு, பொற்கொடி, கோவூர்கிழார், குறுகுடி, மெய்ப்பொருள் நாயனார், பள்ளியும் ஒருவீடு, சேக்கிழார், யார் இந்தக் கண்ணகி, செந்தமிழ்ப்பாவை, ஊருக்குப் பெரியவர், ஆசையின் விளைவு ஆகிய 13 நாடகங்களை எழுதியும் நடித்தும் அரங்கேற்றிய பெருமைக்குரியவர்.

 1961 இல் சிலம்புச் செல்வர் .பொ.சி.அவர்களின் செங்கோல் இதழில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியவர். எழில்நிலவன் என்ற புனைபெயரிலும் இவர் படைப்புகள் வெளிவந்துள்ளன.

1963 செப்டம்பர் இரண்டாம் நாள் சரசுவதி என்னும் அம்மையாரை மணந்து, இல்லற வாழ்வின் பயனாய்ச் செங்குட்டுவன், கண்ணகி, இளவரசு, எழிலரசி என்னும் மக்கட் செல்வங்களைப் பெற்று வளர்த்த பெருமைக்குரியவர். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் நடந்த பல்வேறு விழாக்களில் தலைமைப் பொறுப்பேற்றும், கவிதைகள் வழங்கியும் உரையாற்றியும் தமிழ்ப்பணியாற்றியவர்.  பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்கு ஏகிய செம்மலாகவும் விளங்கியவர்.

 புதுவை அரசின் பட்டயம், தமிழ் மாமணி விருது (2004), தமிழக அரசின் நல்லாசிரியர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். புதுவைக் கம்பன் கழகம், புதுவைத் தமிழ்ச்சங்கம், தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு, கவிஞர் புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை உள்ளிட்ட தமிழ் அமைப்புகளில் தகுதி வாய்ந்த பொறுப்புகளை ஏற்றவர்.

 புதுவை அரசு தில்லி பாரதிதாசன் சிலை அமைப்புக்குழு, பாரதியார் 125 விழாக்குழு, கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழாக்குழு ஆகியவற்றில் உறுப்பினராக்கிச் சிறப்பித்தது. புதுவையில் பாரதி, கவிச்சக்கரவர்த்தி கம்பன் உள்ளிட்ட குறும்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

புதுவை மேனாள் முதல்வர் மாண்புமிகு .அரங்கசாமி, மேனாள் நடுவண் அமைச்சர் சா. செகத்ரட்சகன் ஆகியோரின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவராக விளங்கிய புலவர் சீனு.இராமச்சந்திரனார் அவர்கள் புதுவையில் நடைபெறும் தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொண்டு தம் கருத்துகளை வெளிப்படுத்தியவர்.

பெருஞ்செல்வந்தர் குடியில் தோன்றிய புலவர் சீனு. இராமச்சந்திரனார் நினைவாக அவர் இல்லம் அமைந்த தெருவுக்குப் புலவர் தெரு என்று பெயரிட்டு மக்கள் வழங்குகின்றனர்.