நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 31 ஜூலை, 2014

புதுச்சேரியில் நூல்வெளியீட்டு விழா – அரவணைப்பு அறக்கட்டளையின் நிதியுதவி வழங்கும் விழா


புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வ. சபாபதி அவர்கள் நூலை வெளியிட இரா. பஞ்சவர்ணம் அவர்கள் பெற்றுக்கொள்ளுதல்

ஒரு சாமானியனின் சாதனை நூல்வெளியீட்டு விழாவும் அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவும் இன்று 31. 07. 2014 மாலை 6 மணி முதல் 8 மணி வரை புதுச்சேரி ஜெயராம் ஓட்டலில் நடைபெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வ. சபாபதி அவர்கள் தலைமை தாங்கி ஒரு சாமானியனின் சாதனை என்ற நூலை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார். நூலின் முதற்படிகளைப் பண்ருட்டி நகராட்சியின் முன்னாள் தலைவர் இரா. பஞ்சவர்ணம், அமெரிக்காவைச் சேர்ந்த தில்லை குமரன், பாரிசு பாலகிருட்டினன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ. அறிவுநம்பி நூல் திறனாய்வு செய்தார்.

புதுவை அரசின் நலத்துறை, மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு பெ. இராஜவேலு அவர்கள் கலந்துகொண்டு அரவணைப்பு அறக்கட்டளையின் நிதியுதவியான ஒரு இலட்சத்தை மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்திப் பேசினார்

காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் படிக்கும் மாணவிகளும், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகளும், புதுவைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ மாணவிகளும் நிதியுதவிகளைப் பெற்றுக்கொண்டனர். வாசகர் வட்டத்தைச் சேர்ந்த சுந்தர இலட்சுமிநாராயணன் வாழ்த்துரை வழங்கினார்

அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பொறியாளர் கு. இளங்கோவன் தம் கல்விப்பணியை நினைவூட்டி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் தன்னம்பிக்கை உரையாற்றினார். முனைவர் ஆ. மணி வரவேற்புரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் அறிமுக உரையாற்றினார். புதுவைத் தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வ. சபாபதி அவர்கள் நூலை வெளியிட இரா. பஞ்சவர்ணம் அவர்கள் பெற்றுக்கொள்ளுதல்

சுற்றுலாத் துறை அமைச்சர் மாண்புமிகு பெ. இராஜவேலு அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் கடற்படை சார்ந்த திரு. சோமசுந்தரம் அவர்கள்



மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் மாண்புமிகு அமைச்சர் பெ. இராஜவேலு அவர்கள்.



பார்வையாளர்கள்


அரவணைப்பு முனைவர் கு.இளங்கோவன் அவர்களுக்குச் சிறப்புச் செய்யும் மாண்புமிகு நலத்துறை அமைச்சர் பெ. இராஜவேலு அவர்கள்

திங்கள், 28 ஜூலை, 2014

ஒரு சாமானியனின் சாதனை நூல் அறிமுக விழா, மாணவர்களுக்கு அரவணைப்பு அறக்கட்டளையின் நிதியளிப்பு விழா அழைப்பிதழ்


கொங்கு மண்டலத்தில் பிறந்து குவைத்தில் வாழ்ந்துவரும் திரு. கு.இளங்கோவன் அவர்கள் தம் உழைப்பால் ஈட்டிய நிதியின் ஒருகூறைப் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்விச்செலவுக்கு அரவணைப்பு என்னும் தொண்டு நிறுவனத்தின் வழி, தொடர்ந்து உதவி வருகின்றார். அன்னார் தம் கடும் உழைப்பில் அமைந்த வாழ்க்கையை ஒரு "சாமானியனின் சாதனை" என்னும் தலைப்பில் தன்வரலாறாக எழுதியுள்ளார். இந்த நூலை அறிமுகப்படுத்தும் அறிமுக விழாவும் மாணவர்களுக்கு அரவணைப்பு நிறுவனம் வழங்கும் நிதியளிப்பு விழாவும் கீழ்க்கண்டவாறு நடைபெற உள்ளன. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 31. 07. 2014, நேரம்: மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்: செயராம் உணவகம்(Hotel Jayaram), புதுச்சேரி

அறுமுகனம், தண்ணுமை முழக்கம்:
கலைமாமணி சு.கோபக்குமார் அவர்கள் 

வரவேற்புரை:  முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

       தலைமையும் நூல்வெளியீடும்:
       மாண்புமிகு வ. சபாபதி () கோதண்டராமன் அவர்கள்
பேரவைத் தலைவர், புதுச்சேரி சட்டப்பேரவை

நிதியுதவி வழங்குதல்: மாண்புமிகு பெ.இராஜவேலு அவர்கள்
நலத்துறை, சுற்றுலாத்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு

      நூல் அறிமுகம்: முனைவர் ஆ.மணி அவர்கள்

ஏற்புரை: திரு. கு.இளங்கோவன் அவர்கள், 
அரவணைப்புத் தொண்டு நிறுவனம், கோவை

நன்றியுரை: திரு. பெ. பூபதி அவர்கள்

  • அழைப்பில் மகிழும் - புதுச்சேரி இலக்கிய வட்டம்
  • தொடர்புக்கு: 9442029053

வியாழன், 24 ஜூலை, 2014

பொதிகையில் ஒளிபரப்பான பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் வாழ்க்கையும் பணியும்( காணொளி)

  
குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் வாழ்க்கையையும் பணியையும் அறிமுகப்படுத்தும் வகையில் பொதிகை தொலைக்காட்சி 24. 05. 2014 இல் சற்றொப்ப 54 நிமையங்கள் சிறப்பு ஒளிபரப்பு ஒன்றை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியைத் தமிழகத்திலும் கடல்கடந்த நாடுகளிலும் தமிழ்ப்பெருமக்கள் பலர் ஆர்வமுடன் பார்த்து வாழ்த்துரைத்தனர்.


   தமிழிசை வரலாற்றில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்த குடந்தை ப.சுந்தரேசனாரின் குரலிசையை யூடியூப் இணைப்பில் உள்ள காணொளியில் கேட்டு மகிழலாம்.

 யு டியூப்பில் பார்க்க (பகுதி 1) இங்கு அழுத்துக 

  பண்ணாராய்ச்சி வித்தகரின் மேம்படுத்தப்பட்ட குரலிசையை இன்னும் கூடுதல் பாடல்களுடன் விரைவில் வெளிவர உள்ள அவர் ஆவணப்படத்தில் கேட்டும் பார்த்தும் மகிழலாம். இந்த வரலாற்று மீட்பு முயற்சியில் துணைநின்ற அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

திங்கள், 21 ஜூலை, 2014

எழுத்தாளர் கி. இராவிடம் கற்ற பாடம்…


எழுத்தாளர் கி. இராஜநாராயணன்

  இன்று(21.07.2014) எப்படியும் எழுத்தாளர் கி.இரா அவர்களைப் பார்த்து உரையாட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். பேராசிரியர் நாயகர் அவர்களிடம் ஐயாவைச் சந்திக்க உகந்த நேரம் எது என்று அலுவலகத்தில் இருந்தபடியே பகல்பொழுதில் வினவித் தெரிந்துகொண்டேன். அதனால் அலுவலகம் முடிந்து அரைமணி நேரம் காத்திருந்தேன். ஐந்து மணிக்கு அவர் இல்லத்தின் அழைப்பு மணியை மிக எச்சரிக்கையாக அழுத்தினேன். ஐயா அவர்கள் மெதுவாக எழுந்துவந்து அன்புடன் வரவேற்றார். உள்ளே நுழைந்ததும் “காபி” குடிக்கலாமா? என்றார். அம்மாவும் வந்து வரவேற்றுவிட்டு, அடுத்த ஐந்து நிமிடங்களில் அம்மா அவர்கள் காபியுடன் வந்தார். உரையாடிக்கொண்டிருந்தோம். சென்ற கிழமை பேராசிரியர் முருகையன் அவர்களின் குடும்பநிகழ்வில் சந்தித்தமையை மீண்டும் நினைவூட்டி மகிழ்ந்தார்கள்.

  ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் அவர் இல்லத்தைக் கடந்துதான் நான் அலுவலகம் செல்ல வேண்டும். போகும்பொழுதும் வரும்பொழுதும் சந்திக்க நினைத்தாலும் அடுத்து விரட்டிக்கொண்டிருக்கும் வேலையை நினைத்துச் சந்திப்பை ஒத்திப்போட்டுக்கொண்டிருந்தேன். இன்று மற்ற வேலைகளை ஒத்திவித்துவிட்டு ஐயாவிடம் உரையாடியமை மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைய கல்விமுறையை நினைவூட்டி பெர்னார்டுசா நூல்களைப் பாடத்திட்டத்தில் சேர்த்தவுடன் பெர்னாட்சா சொன்ன செய்திகளை எல்லாம் கி. இரா. அவருக்கே உரிய முறையில் சிறப்பாக விளக்கினார்.

  அக்காலத்தில் இருந்த குருகுலக் கல்வி முறையில் மாணவர்கள் ஐயம் கேட்டால்தான் ஆசிரியர்கள் நடத்துவார்கள் என்றார். இன்றைய பனைமட்டையில் மழைபெய்தமை போல் ஒப்புவிக்கும் ஆசிரியர்களைக் கிண்டல் செய்தார். அரசர்களும் தங்கள் பிள்ளைகளைக் குருவினிடத்து ஒப்படைத்து, குருநாதர் வாழ்க்கையை உற்றுநோக்கி அவர்கள் அறிவுபெற்றதை மிக இயல்பாகச் சொன்னார்.  எங்கள் பேச்சு குவைத்து கொ.இளங்கோவன் பற்றியும், ஆகாசம்பட்டு சேஷாசலம் பற்றியும் இன்றைய எழுத்தாளர்களைப் பற்றியும் நகர்ந்தது.

  அப்பொழுது தனித்தூதுக்காரர் ஒரு புத்தகப் பொதியைக் கொண்டுவந்து நீட்டினார். ஐயாவுக்கு உதவும் வகையில் நான் எழுந்துசென்று நூல்பொதியை வாங்கிக்கொண்டுவந்து அவிழ்த்து ஒவ்வொரு நூலாக எடுத்து அவர்களின் கையில் தந்தேன். ஒவ்வொன்றாக அளித்ததும் மேலோட்டமாகப் புரட்டி மகிழ்ந்தார். கோவை விஜயா பதிப்பகம் உரிமையாளர் திரு. வேலாயுதம் ஐயா அனுப்பியுள்ளார்கள் என்றேன். அண்மையில் தம்மைச் சந்திக்க வந்ததையும் அவர் மகனைப் புதுச்சேரியில் உயர்படிப்பில் சேர்க்க வந்துபொழுது சந்தித்ததையும் இப்பொழுது அவர்தம் பேரனை மருத்துவப் படிப்பில் சேர்க்க வந்ததையும் நினைவூட்டினார்.

  பதிப்பாளர் வேலாயுதம் அவர்கள் அண்மையில் வந்த புத்தகங்களை உடன் அனுப்பி வைப்பதாகக் கூறினார். சொன்னதுபோல் அனுப்பியுள்ளார் என்று அவரைப் பாராட்டினார். செட்டிநாட்டுக்காரர்கள் வினையாண்மை உடையவர்கள் என்றும் ஒரு செயல் முடியும்வரை மிகச் சிறப்பாகக் கண்காணித்து அதனை உறுதியுடன் நிறைவேற்றுவார்கள் என்றும் பெருமை பொங்கக்கூறினார்.


  அப்பொழுது எங்கள் பேச்சு கணினித் தமிழ்த்தட்டச்சுப் பலகை பற்றி நகர்ந்தது. ஒராண்டுக்கு முன்பு நான் சிங்கப்பூர் சென்றபொழுது ஐயா அவர்களின் விருப்பப்படி அவர்களுக்கு ஒரு தமிழ்த்தட்டச்சுப் பலகையும், நண்பர் பேராசிரியர் நாயகர் அவர்களுக்கு ஒரு விசைப்பலகையும் என இரண்டு வாங்கிவந்து பேராசிரியர் நாயகர் இல்லத்தில் வைத்துள்ளேன் என்று சொன்னபொழுது, நான் ஐயாவுக்காக வாங்கி வந்தமையை நினைத்து மகிழ்ந்தாலும் அவர்களிடம் உரியபொழுதில் சேர்க்காத பிழையை மெதுவாக, நயத்தக்க நாகரிக முறையில் உணர்த்தினார்கள். ஓராண்டாக நாங்கள் மறந்த அந்தச் செயலும் செய்த தவறும் நினைவுக்கு வந்தன. ஒரு செயலைச் செய்வது மட்டும் போதாது அது உரியவகையில் முற்றுப்பெற்றதா என்பதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்ற மிகச் சிறந்த பாடத்தைக் கற்றுக்கொண்டு இல்லம் வந்துசேர்ந்தேன்.

சனி, 19 ஜூலை, 2014

அருணா செல்வம் அவர்களின் தயக்கம் ஏனோ அதைச் சொல்ல! நூலுக்கான அணிந்துரை



எழுத்தாளர் அருணா செல்வம் அவர்களின் மரபுப்பாடல் தொகுப்பை அண்மையில் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இணையத்தில் முன்பே இவரின் ஆக்கங்களைப் படித்து மகிழ்ந்துள்ளேன். கடந்த மூன்று ஆண்டுகளாக இணையத்தில் இவர் வரைந்துள்ள படைப்புகள் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றவையாகும்.

பெண் பாவலர்கள் பெரும்பாலும் புதுப்பாக்களைத்தான் இன்று எழுதிவருகின்றனர். இவர்களுள் தனித்து நின்று மரபுப்பாடல் புனைந்துவரும் ஒரு செயலுக்கே தமிழுலகம் இவரைப் போற்றி மகிழும்.

வாழ்க்கைச் சூழலில் கடல்கடந்து வாழ்ந்தாலும் அருணாசெல்வம் அவர்கள் தாய்த்தமிழகத்தையும், தமிழ்மொழியையும், இலக்கியத்தையும் மறக்காமல் நினைவில்கொண்டு வாழ்ந்துவருவதை இவர்தம் கவிதைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

பாவேந்தர் பாரதிதாசன் புதுவையில் பிறந்து, தமிழுக்குக் கவிதைகளால் வளம்சேர்த்தவர். அந்தப் பாவேந்தர் பிறந்த மண்ணில் பிறந்த கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிரான்சுநாட்டில் இப்பொழுது வாழ்ந்தாலும் அங்கிருந்தபடியே தமிழுக்கு அழுத்தமான பணிகளைச் செய்துவருவதை நண்பர்கள் வழியாக அறிந்துள்ளேன். அவரிடம் மரபு இலக்கணங்களைக் கற்ற அருணா செல்வம் அவர்கள் தமிழுக்கு ஆக்கமான, செழுமையான பாக்களைத் தந்துள்ளமை பாராட்டினுக்கு உரியது

அருணா செல்வம் அவர்களின் பாடல்களில் ஆசிரியப்பாவின் அழகிய ஓசை எதிரொலிக்கின்றது. அருமையான சொல்லாட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. தேர்ந்த கற்பனைகள் நம் உள்ளத்தை மகிழ்ச்சிப்படுத்துகின்றன. எதுகை, மோனைகளுக்குக் குறைவில்லை. தமிழ், இயற்கை, பெண்ணுரிமை, காதல், தாய்ப்பாசம், கம்பன் படைப்பு குறித்து இவர் எழுதியுள்ள கவிதைகள் கற்கண்டு நிகர்த்தவை.

நாடு விட்டு நாடுவந்தோம்
நல்ல நிலையில் வாழுகின்றோம்!
வீடு விட்டு வெளிச்சென்றால்
வேற்று மொழியைப் பேசுகின்றோம்!
ஓடு கின்ற காலமதில்
ஒருநாள் ஒன்றாய்ச் சேருகின்றோம்!
கூடும் இந்த இடந்தனிலும்
கொஞ்சும் மொழியை மறக்கலாமா?”

என்று பாடியுள்ளமை புலம்பெயர் மக்கள் அனைவருக்குமான கவிதையாக இது விளங்குகின்றது. தமிழை அனைவரும் பேசி அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற தாய்மையின் தவிப்பு இவரிடம் இருப்பதை உணர்கின்றேன்.

அலைகள் உரசும் கடலருகில்
அமைதி யற்று அமர்ந்திருந்தேன்!
கலைகள் பேசும் கண்ணழகி!
கவிதை பாடும் சொல்லழகி!
சிலைகள் தோற்கும் உடலழகி!
சிந்தை முழுதும் பண்பழகி!
நிலையாய் மனத்தில் நின்றவளோ
நேரம் கடந்தும் வரவில்லை!

என்று பாடியுள்ள பாட்டில் யாப்பின் ஓட்டம் கண்டு வியக்கின்றேன்!.

சட்டென்றே ஒரு முத்தம் என்ற தலைப்பில் வரைந்துள்ள பாட்டில் பாவேந்தரின் வீச்சைக் கண்டு நின்றேன்.

தொட்டணைக்க உரிமையுள்ள
தோதான அத்தைமகன்!
சட்டென்றே ஒருமுத்தம்
தந்துவிட்டு வந்திருந்தால்
கட்டான காளையவன்
கனவினிலே வந்திருப்பான்!
பட்டென்றே ஏன்வந்தோம்?
பண்பின்றி ஏக்கமுற்றாள்!”

என்று எளிய சொற்களைக் கொண்டு புனைந்துள்ள வைரவரிகள் நெஞ்சில் குற்றாலச் சாரலாய் இன்பம் ஊட்டும்.

சிற்றிலக்கிய வகையான அந்தாதி பாடும் இந்தப் பெண்பாற் புலவரிடம் அன்பு வேண்டுகோள் வைக்கின்றேன். சிறுகதை, புதினம் புனையும் நீங்கள் மரபுப்பாட்டில் அமைந்த ஒரு பாவியம்(காவியம்) புனைய முன்வர வேண்டும். அதற்கான ஆற்றல் தங்களிடம் இருப்பதை நான் உணர்கின்றேன். பாவேந்தரின் தமிழ், தங்கள் வழியாக இந்தத் தமிழ்ச்சமூகத்துக்குப் பாட்டு ஆறாக ஓடிப் பயன்தரட்டும்.

வாழ்த்துகளுடன்
மு.இளங்கோவன் 14/02/2014

குறிப்பு: அருணா செல்வம் அவர்கள் புதுச்சேரியில் பிறந்து இப்பொழுது பிரான்சில் வாழ்ந்துவருகின்றார். இயற்பெயர் முத்து கஸ்தூரிபாய். முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். பெற்றோர் முத்துலட்சுமி தேவி, முத்து இராசகோபால். நான்கு நாவல்களையும், கவிதை நூல்களையும், தொடர்கதைகளையும், சிறுகதைகள், கட்டுரைகளையும் எழுதிவருபவர். பிரான்சு கம்பன் கழகத்தின் மகளிர் அணியில் பொறுப்பு ஏற்றுத் திறம்படச் செயல்படுபவர்.

நூல் கிடைக்குமிடம்: 
மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17
விலை : 60-00




வெள்ளி, 18 ஜூலை, 2014

ஒரு சாமானியனின் சாதனை நூல்வெளியீட்டு விழா, அரவணைப்பு நிதி வழங்கும் விழா



   கோயம்புத்தூர் திவ்யோதயா அரங்கில் (கோவை இரயில் நிலையம் எதிரில்) 27. 07. 2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஒரு சாமானியனின் சாதனை நூல்வெளியீட்டு விழாவும் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவும் நடைபெற உள்ளன.


   இந்த நிகழ்ச்சிக்கு வருகைதரும் அன்பர்களை அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் நிறுவுநர் முனைவர் சி. கொ. இளங்கோவன் அவர்கள் வரவேற்று உரை நிகழ்த்துவார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் இந்த விழா நடைபெறுகின்றது. திருமதி வனிதா மோகன், திரு. சக்கரவர்த்தி, திருமதி அனுசா, திரைப்பா ஆசிரியர் அறிவுமதி, முனைவர் மு.இளங்கோவன், திரு. பழமலை கிருட்டினமூர்த்தி, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், கே. செகதீசன், திரு. இயகோகா சுப்பிரமணியன், திரு. அப்புகுட்டி, பேரூர் திருமடத்தின் இளையபட்டம் தவத்திரு மருதாசல அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். திருமதி தேவிகா இளங்கோவன் நன்றியுரையாற்ற உள்ளார். 

  தமிழ் ஆர்வலர்கள் பலரும் இந்த நிகழ்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். ஆர்வலர்கள் வருக!

சனி, 12 ஜூலை, 2014

கணினித்தமிழ் வளர்த்த ஆண்டோபீட்டர் நினைவுநாள்



ஆண்டோபீட்டர்


   தமிழகத்தில் கணினித்துறை பரவலாக அறிமுகம் ஆவதற்குப் பலர் உழைத்துள்ளனர். அவர்களுள் திரு. ஆண்டோபீட்டர் அவர்களின் பணி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பல்வேறு ஊர்களில் கல்விநிறுவனங்களை உருவாக்கியும், குறுவட்டுகள் பல வெளியிட்டும் நூல்கள் பல எழுதியும், கணினித் தமிழ் வளர்த்தவர். உலகத் தமிழ் இணைய மாநாடுகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடைபெறவும் காரணமாக இருந்து உழைத்தவர். இளம் அகவையிலும் தம் அறிவாற்றலின் துணைகொண்டு மூத்த அறிஞர்களை எல்லாம் நட்பாகக்கொண்டு இயங்கியவர். 

  அமெரிக்காவுக்கு நாங்கள் சென்றபொழுது எங்களுக்குப் பெருந்துணையாக இருந்து நெறிப்படுத்தியவர். அமெரிக்காவில் நானும் அண்ணன் வாழப்பாடி திரு. இராம. சுகந்தன் அவர்களும் ஒன்றாகத் தங்கியிருக்க வாய்ப்பை உருவாக்கி எங்களுக்கு இடையில் நட்புமலரக் காரணமாக இருந்தவர். தொடர்ந்து உரையாடி என் முயற்சிகளை ஊக்கப்படுத்திய பெருமகனாரின் நினைவுநாள் (சூலை 12, 2012) இன்று அமைகின்றது. அமெரிக்காவில் திரு. ஆண்டோபீட்டர் அவர்களுடன் எடுத்துக்கொண்ட சில படங்களைப் பதிந்து வைக்கின்றேன்.

   புதுச்சேரியில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் அவர் பணிகளை நினைவுகூர்வோம்.

















வெள்ளி, 11 ஜூலை, 2014

அரவணைப்பு கு. இளங்கோவன் நூலுக்கான அணிந்துரை




("ஒரு சாமானியனின் வாழ்க்கைப் பயணம்" என்ற தலைப்பில் அரவணைப்பு தொண்டு நிறுவனத்தை நடத்தும் அண்ணன் முனைவர் கு.இளங்கோவன் அவர்களின் தன்வரலாற்றை விளக்கும் நூலுக்கான அணிந்துரை.)

வாழ்க்கையில் உயர்நிலையை அடைந்தவர்களின் வரலாற்றைப் படிப்பதில் எனக்கு எப்பொழுதும் ஆர்வம் அதிகம். இலக்கியத்துறையிலும், தொழில்துறையிலும், அறிவியல்துறையிலும், கலைத்துறையிலும், அரசியல் துறையிலும் முன்னேறிய சாதனைப் பெருமக்கள் யாவரும் கடந்து வந்த பாதை காட்டாறுகளும், கரடு முரடுகளுமாகவே இருக்கும். பல்வேறு அவமானங்கள், தோல்விகள், புறக்கணிப்புகள், ஏமாற்றுகள், இரண்டகங்களைச் சந்தித்தே இவர்கள் சாதனையை நிகழ்த்தியிருப்பார்கள். உடனிருந்தவர்களே இவர்களின் வாழ்க்கைக்கு உலை வைத்திருப்பார்கள். பக்கத்திலிருந்தவர்களே பள்ளம் பறித்திருப்பார்கள்.  உரிய காலத்தில் இச்சமூகம் இவர்களை அங்கீகாரம் செய்யாமல் உதாசீனப்படுத்தியிருப்பதையும் வரலாற்றில் பார்க்கமுடிகின்றது. அந்தவகையில் துன்பச் சுழலில் சிக்கித், துயரக்கடலில் நீந்தி வளமார் வாழ்க்கையை இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் அண்ணன் முனைவர் கு. இளங்கோவன் அவர்களின் வாழ்க்கை இன்று வரலாற்று நூலாக உலகிற்குக் கிடைக்கின்றமை நினைத்து மகிழ்கின்றேன்.

நம் நூலாசிரியர் கொங்குநாட்டில் வேளாண்மைத்தொழிலை வாழ்க்கையாகக் கொண்ட நாமநாய்க்கன்பட்டி குழந்தைசாமி ஐயாசுப்புலெட்சுமி அம்மா ஆகியோரின் மகனாகப் பிறந்தவர் பிறந்த ஊரில் தொடக்கக்கல்வி பயின்று, அதன் பிறகு அருட்செல்வரின் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பக் கல்வி பயின்று பொறியியல் பட்டம் பெற்று, காப்பீட்டுத்துறை முகவராக, கல்லூரிப் பேராசிரியராக, பல்வேறு நிறுவனங்களை நடத்திய தொழிலதிபராக, பின்னர் அனைத்தையும் இழந்து, பின்னடைவைச் சந்தித்த சாதாரண மனிதராக இருந்தவர் முனைவர் கு. இளங்கோவன். பல்வேறு இடையூறுகளுக்கு இடையே குவைத்து நாட்டுக்குச் சென்று அங்கு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபடியே பிள்ளைகளுக்குத் தனிப்பயிற்சி நடத்தியும், தாம் கற்ற சோதிடக்கலையால் பொருளீட்டியும் இன்று பல்லாயிரம் மாணவர்களின் கல்விக்கண் திறக்கும் கர்ணனாக வாழ்ந்துவரும் அண்ணன் கு. இளங்கோவனின் வாழ்க்கை வரலாற்று நூல் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் கைவிளக்கு.  தவறி விழும்போது தாங்கிப் பிடிக்கும் தங்கத்தூண். வாழ்க்கையில் வழுக்கிவிழும்பொழுது ஊன்றிக்கொள்ளக் கிடைத்த ஊன்றுகோல்.

ஒரு சாமானியனின் சாதனை என்ற பெயரில் அவர் வாழ்க்கையை எளிய நடையில் எழுதியுள்ளார். பல்வேறு நூல்களையும் மேற்கோள்களையும் காட்டி நமக்கு நம்பிக்கையூட்டுகின்றார். ஒளிவு மறைவு இல்லாமல் தோல்விகளைப் பதிவு செய்துள்ளார். இரண்டகத்தை (துரோகத்தை) தோலுரித்துக் காட்டியுள்ளார். தம் விமானப் பயணத்தைத் தடுத்து நிறுத்தியவரின் முயற்சியை உடைத்தெறிந்து தம் போக்கில் பயணத்தைத் தொடர்ந்துள்ளார். தோல்விகளைத் தனக்குத் தானே தோரணமாக்கிக் கொண்ட எடிசன் வரலாற்றை நினைவுகூர்ந்து நம்மையும் முன்னேறத் தூண்டுகின்றார். உழைப்பும் முயற்சியும் தாம் முன்னேறியதற்கான சூத்திரம் என்கின்றார். விடியற்காலையில் எழுந்து நள்ளிரவு வரை தொடர்ந்து உழைத்ததன் வழியாகவே சாதாரண வாழ்க்கையைச் சாதனை வாழ்க்கையாக மாற்றமுடிந்தது என்கின்றார்.

பன்னிரண்டு ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபொழுது 13 நிறுவனங்களைத் தொடங்கி நடத்தியுள்ளார். “ஒரு இலட்சத்து அறுபத்து நான்காயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தேன். கடுமையான முயற்சியால் 1981 ம் ஆண்டு ஜூலை 10 முதல் 17 தேதிக்குள் நான் 25 இலட்சம் ரூபாய்க்கான பாலிஸியைச் சேர்த்தேன்” (பக்கம் 27) என்று தம் தழும்பு வாழ்க்கையைத் தடவிக் காட்டுகின்றார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு முனைவர் பட்டம் பெற்றதுடன் நின்றுவிடாமல் மேலும் மேலும் முனைவர் பட்டங்களை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் வாங்கிக்குவிப்பதை வேட்கையாகக் கொண்டு செயல்பட்டுள்ளார்.

அரவணைப்பு என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தி ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கருணை உள்ளத்துடன் சேவை செய்யும் இவரின் தாயுள்ளம் ஒவ்வொரு மனிதருக்கும் அமைய வேண்டும்.

உலகில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தொடர்ந்து உழைத்து, பெரும்பொருளீட்டி, ஈட்டிய பொருளை மற்றவர்களுக்கு வாரி வழங்கும் அண்ணன் கு. இளங்கோவனின் வாழ்க்கையை நினைக்கும்பொழுது திருவள்ளுவப் பேராசானின்,

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு (385)

என்னும் குறள் நினைவுக்கு வருகின்றது. இந்தக் குறட்பா அரசருக்கு மட்டும் அன்று; இளங்கோவுக்கும் பொருந்தும்.

முனைவர் கு. இளங்கோவன் அவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் பல்லாண்டு புகழ்வாழ்க்கை வாழ்ந்து இத்தமிழினத்திற்குத் துணை நிற்பார்களாக!

பாசமிகு தம்பி
மு.இளங்கோவன்

25.05.2014

வியாழன், 10 ஜூலை, 2014

அமெரிக்காவில் அதிர்ந்த தமிழர்களின் பறையிசை…



அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் பெட்னா விழா நம்மூர் பொங்கல் திருவிழாவுக்குச் சமமானதாகும். ஒவ்வொரு ஆண்டும் சூலைத்திங்கள் முதல் வாரத்தில் அமெரிக்கத் தன்னுரிமைத் திருநாளை ஒட்டி இவ்விழா நடைபெறுவது வழக்கம். கூடிக்கலையும் விழாவாக இல்லாமல் அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் ஒன்று கூடித் தங்கள் நண்பர்களையும், ஒத்த உணர்வுடையவர்களையும் கண்டு கலந்துரையாடும் இன்ப விழாவாகவும் இது இருக்கும். தாய்த் தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களை ஆண்டுதோறும் இவ்வமைப்பினர் அழைத்துச் சிறப்பித்தாலும் தமிழகத்து ஊடகங்கள் இந்த விழா குறித்த செய்திகளை மருந்துக்கும் வெளியிடமாட்டார்கள். ஏனெனில் இது தமிழர் விழா!

இந்த ஆண்டு அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவையின்( பெட்னா) இருபத்தேழாம் ஆண்டு விழாவை 2014 சூலை 3 முதல் 6 வரை அமெரிக்காவில் செயிண்டு லூயிசில் மிசௌரித் தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சங்கங்களின் பேரவையும் இணைந்து  மிகச் சிறப்பாக நடத்தியது. இந்த விழாவுக்கு முன்பதிவு செய்துகொண்டு குடும்பம் குடும்பமாகத் தமிழர்கள் ஒன்றுகூடியது தமிழர்களிடம் ஒற்றுமை உணர்ச்சி இன்னும் உண்டு என்பதை நிலைநாட்டுவதாக அமைந்தது. 

குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா, கால்டுவெல் பெருமகனார் இருநூறாம் ஆண்டு விழா, பண்டிதர் அயோத்திதாசர் நூற்றாண்டு விழா எனத் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உழைத்த பெருமக்களை நினைவுகூரும் விழாவாகவும் இந்த விழா வடிவமைக்கப்பட்டிருந்தது.

பொதுவாகப் பேரவை விழாவின் முதல்நாள் நிகழ்வு என்பது பல ஊர்களிலிருந்து வந்துள்ள விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஒன்றுகூடி அறிமுகம் செய்துகொள்வது, படம் எடுத்துக்கொள்வது, சிறப்பு உணவுகளை விருந்தாக உண்டு மகிழ்வது என்று இருக்கும். இவ்வாறு ஒன்றுகூடிப் பேசும்பொழுது பல நிலைப்பட்ட செய்திகளை ஒருவருக்கொருவர் பேசி மகிழ்வர்.

இரண்டாம் நாள் விழாவும் மூன்றாம் நாள் விழாவும் நிமிடந்தோறும் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடைபெறுவது வழக்கம். இரண்டாம் நாள் நிகழ்வில் திருக்குறள் மறை ஓதுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க நாட்டுப்பண் இசைத்தல், குத்து விளக்கேற்றும் சிறப்பு நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

பேரவைத் தலைவர் பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி, குமார் ஆகியோர் வரவேற்புரை வழங்கினர். நாகை பாலகுமார் அவர்களின் நாட்டியம் அடுத்து இடம்பெற்றது. அடுத்து நகைச்சுவை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கவிஞர் குட்டி இரேவதி பங்கேற்ற அயோத்திதாசர் நூற்றாண்டு நினைவுரை இடம்பெற்றது. தமிழ்த் தாள இசை என்ற பொருண்மையில் முனைவர் ஆரோன் பேஜ், முனைவர் ஜோயி செரினியனின் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

திரைப்படத்தில் தமிழிலக்கியம் என்ற தலைப்பில் தியோடர் பாஸ்கரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. மாநாட்டின் முதன்மை நிகழ்வாக மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. அடுத்து குடந்தை ப. சுந்தரேசனார் பற்றி திரு. இராமமூர்த்தி அவர்களும் கால்டுவெல் பெருமகனார் பற்றி ஆல்பர்ட்டு செல்லதுரை அவர்களும் சிறப்புரையாற்றினர். 

பகலுணவுக்குப் பிறகு குட்டி இரேவதி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கிளம்பிற்று காண் அமெரிக்கத் தமிழர் படை என்னும் தலைப்பில் பல்வேறு கவிஞர்கள் சிறப்பாகக் கவிதை பாடினர். சிகரம் தொட்ட தமிழர்  முனைவர் ஆரோக்கியசாமி பால்ராஜ் அவர்களின் சிறப்புரை அனைவரையும் ஈர்த்தது.

பேரவையின் சிறப்பு நிகழ்வுகளுள் ஒன்றாக  இடம்பெறும் இலக்கிய வினாடி வினா என்னும் நிகழ்ச்சி அமெரிக்காவில் வாழும் தமிழர்களால் ஆர்வமாகக் கவனிக்கப்படும் நிகழ்ச்சியாகும். ஒரு மாதத்துக்கு முன்பாகவே இதற்கான பாடத்திட்டங்கள் வழங்கப்பட்டு, தமிழர்களின் இலக்கியம், கலை குறித்து வினாவுக்கு விடை காணும் வகையில் அணியப்படுத்தும் முயற்சி தொடங்கிவிடும். திரு. நாஞ்சில் பீற்றர் அவர்களும் திரு கொழந்தவேல் இராமசாமி அவர்களும் இதன் பொறுப்பாளர்களாக இருந்து திறம்பட ஒவ்வொரு ஆண்டும் செயல்படுவார்கள். இந்த ஆண்டும் மிகச்சிறப்பாக இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

மொழிபெயர்ப்பாளர் வேதேகி ஹெர்பர்ட்டு அவர்களின் உரையும் அனைவரையும் ஈர்த்தது. குழந்தைகளுக்கான எலிப்பதி நாடகம் முனைவர் வேலு சரவணன் அவர்களால் மிகச் சிறப்பாக வழங்கப்பட்டது. குழந்தைகளும் பெரியவர்களும் இந்த நாடகத்தை ஆர்வமுடன் சுவைத்து மகிழ்ந்தனர். தமிழர்களின் தொழில் முன்னேற்றம் குறித்தும் மருத்துவம் குறித்தும் சிறப்புரைகள் இடம்பெற்றிருந்தன. இன்னிசை விருந்துக்கும் குறையில்லை. தோல்பாவைக்கூத்தும், பண்ணிசையும், தெருக்கூத்தும், பறையிசையும் முக்கிய நிகழ்வாக இருந்தது. 

சங்கங்களின் சங்கமும் என்ற தலைப்பில் அமைந்த அமெரிக்கத் தமிழர்கள் வழங்கிய பறையிசை விழா அரங்கத்தை அதிரவைத்தது. தீரன்சின்னமலை நாடகமும் அமெரிக்கத் தமிழர்களால் சிறப்பாக நடத்திக்காட்டப்பட்டது. திரைப்பட நடிகை திரிஷா கலந்துகொண்டு நிகழ்ச்சிக்குச் சிறப்புச்சேர்த்தார். எங்கும் தமிழ் என்ற தலைப்பில் பேரூர் மருதாசல அடிகளார் செயலுரை வழங்கினார்.

மூன்றாம் நாள் நிகழ்வில் தமிழர் அடையாளம் காப்போம், ஒன்றிணைந்து உயர்வோம், இன்றைய நிலையும் உயர்நிலை அடைவதற்கான வழிமுறைகளும் என்ற தலைப்பில் அறிஞர்கள் பங்கேற்ற சிறப்புரைகள் இடம்பெற்றன.


அடுத்த ஆண்டு பேரவையின் இருபத்தெட்டாம் ஆண்டு விழா அமெரிக்காவில் சான்பிரான்சிசுகோ நகரில் நடைபெற உள்ளது.

பெட்னா விழா குறித்து மேலும் அறிய இங்குச் செல்லவும்







9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2015 சனவரி 29 முதல் - பிப்ரவரி 1 வரை, மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர்


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1964-ஆம் ஆண்டு புது தில்லி மாநகரில் நடைபெற்ற 26-வது அனைத்துலகத் தென்கிழக்காசிய நாடுகளின் அறிஞர் குழாம் சந்திப்பின்போது, தமிழ் மொழியின்பாலும் அதன் வளர்ச்சியின்பாலும் மிகுந்த பற்றுமிக் கல்வியாளர்களின் சிந்தனையில் உதித்த விளைபயனாகும்.

இவர்களது முயற்சியின் விளைவாக முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகரிலும், இரண்டாவது மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னை மாநகரிலும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளிலும் இம்மாநாடு நடந்தேறியுள்ளது. பாரிஸ் (பிரான்சு)–1970, யாழ்ப்பாணம் (இலங்கை)–1974; மதுரை (தமிழ் நாடு, இந்தியா)–1981; கோலாலம்பூர் (மலேசியா)–1987; மொரிசியசு–1989, தஞ்சாவூர் (தமிழ் நாடு, இந்தியா)-1995.

அடுத்த ஆண்டு 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2015,னவரி 29 முதல் பிப்ரவரி 1  வரையிலும் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.  உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்வு நடைப்பெறவுள்ளது.

இம்மாநாடு ஆசிய நாடுகளிலும் அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களிலும், ஏனைய பகுதிகளிலும் தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சியாளர்களையும் கல்விமான்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, சமயம், மானுடவியல், வரலாறு, உளவியல், சமூகவியல்  எனப் பன்முகத் துறைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளகள், எழுத்தாளர்கள் என அனைவரும் இம்மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் படைக்க வரவேற்கப்படுகின்றனர்.

மேலும் விவரங்களை அறிய உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு இணையதளத்தைப் பார்வையிடலாம்.

புதன், 9 ஜூலை, 2014

குவாதலூப்பு சாகுசு சிதம்பரம் ( Mr, Jacques Sidambarom) புதுச்சேரி வருகை


குவாதலூப்பு,சாகுசு சிதம்பரம்(Mr, Jacques Sidambarom) 

கரிபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு குவாதலூப்பு . இந்த நாட்டுக்குப் பிரெஞ்சியர் ஆட்சிக்காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டில்) புதுச்சேரி, காரைக்கால், கும்பகோணம் சார்ந்த பகுதிகளிலிருந்து ஒப்பந்தக்கூலிகளாக மக்களை அழைத்துச் சென்றனர். அவ்வாறு சென்ற தமிழர்கள் கப்பல் பயணத்தின்பொழுதும், நோய்வாய்ப்பட்டும், எரிமலையில் சிக்கியும் பல்லாயிரம் மக்கள் அழிந்தனர். எஞ்சிய மக்கள் குவாதலூப்பு    தீவிலும், மர்த்தினிக் தீவிலும் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்துவருகின்றனர். இவர்களிடம் தமிழ்நாட்டைச் சார்ந்த பண்பாட்டுக்கூறுகள் இன்றும் உள்ளன. மாரியம்மன் வழிபாடு, பொங்கல் விழா, தெருக்கூத்து, பறையிசை உள்ளிட்ட தமிழக அடையாளங்கள் உள்ள இந்த மக்களிடம் தமிழ்தான் இல்லை.

இவர்கள் இப்பொழுது தமிழகத்தின் தொடர்புக்கு ஏங்குகின்றனர். இதன் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த ஊரைப் பார்க்கவும். அவர்களின் மொழியைக் கேட்கவும்  குவாதலூப்பு   தமிழர்கள் ஆர்வம்கொண்டு தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு கூறாக குவாதலூப்பு   சாகுசு சிதம்பரம் அவர்கள் தம் குடும்பத்துடன் புதுச்சேரிக்கு வந்துள்ளார். பிரெஞ்சுமொழி மட்டும் அறிந்து, தமிழ் தெரியாமல் இருக்கும் அவர் தம் முன்னோர் வாழ்ந்த ஊரான கும்பகோணத்திற்குச் சென்று அங்குள்ள தெருக்களில் காலார நடந்து ஆனந்தக்கண்ணீர் விட்டு வந்த கதையைச் சொன்னபொழுது அரங்கில் இருந்தவர்களின் கண்களில் கண்ணீர் ஓடை பெருக்கெடுத்தது.

தமக்கும் தமிழகத்திற்கும் உள்ள உறவைச் சொல்லிய வண்ணம் அரங்கில் பேசமுடியாமல் கண்ணீர் விட்டு ஒரு நிமையம் அமைதியாக இருந்ததை நினைத்து அவர்தம் உணர்வின் வலியைப் புரிந்துகொள்ள முடிந்தது. வரலாறு நம்மைப் பிரித்தாலும் உணர்வால் இணைந்திருக்கின்றோம் என்று கூறித் தமிழகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க விரும்புவதைச் சொன்னார்.

குவாதலூப்பு   சாகுசு சிதம்பரம் அவர்களின் தாத்தா கென்றி சிதம்பரம் அவர்கள் அந்த நாட்டில் வாழ்ந்த தமிழர்களின் உரிமைக்காகப் போராடியவர். அவருக்குப் பிரெஞ்சு அரசு அஞ்சல் தலை வெளியிட்டுப் போற்றியுள்ளது. புதுச்சேரியில்  கென்றி சிதம்பரம் அவர்களுக்குச் சிலை வைத்து அவர் நினைவைப் போற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர். புதுச்சேரி வருகை தந்துள்ள குவாதலூப்பு   சாகுசு சிதம்பரம் அவர்களைத் தூரம் பிரித்துப் பார்க்கலாம். உணர்வால் அவர் நம் தமிழ் உறவினரே!

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த திரு சாம் விசய், திரு. நா. நந்திவர்மன் ஆகியோர் அனைவரின் நன்றிக்கும் உரியவர்கள்.

பேராசிரியர் சிங்காரவேலு

திரு.க. இலட்சுமி நாராயணன் ச.ம.உ. வாழ்த்துரை

குவாதலூப்பு விருந்தினர்கள்