நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 16 ஜூலை, 2018

இளங்கோவன் என்னும் எம் ஏந்தல்!... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை

சொல்லாய்வறிஞர் ப. அருளி அவர்களால் சிறப்பிக்கப்படும் இனிய பொழுது... 
(படத்தில்: தாமரைக்கோ, தூ. சடகோபன், மு.இளங்கோவன், ப.அருளி ஐயா, ’தழல்’ ஆசிரியர் தேன்மொழி அக்கா, திருவாசகம், தண்ணுமை ஆசான் திருமுடி. சேது. அருண், சாமி கச்சிராயர் 
(கோப்புப் படம்) .

 மிகப் பல்லாயிரந் தமிழாசிரியப் பெருமக்கள் – பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் நல் வாய்ப்பு வாய்ந்திருக்கும் நம் புதுவையுட்பட்ட தமிழ் மாநிலத்தில் – தமிழின் அடிப்படைத் திறங்களுணர்ந்து அதனுள் தோய்ந்து தெளிந்து – அதன் வரலாற்றுச் சிறப்புக்களை ஆழமாக அறிந்து – அது பெற்றிருக்கும் பெருமைகளையும் திருமைகளையும் துலங்கத் தெரிந்து – அதனை நம் தமிழ்ப்பிள்ளைகள் நெஞ்சில் வலிவார்ந்த படிவுகளாக உருவாக்கும் உயரிய போக்கு வாய்ந்தவர்கள் விரல்விட்டு எண்ணிவிடத் தக்க சிற்றளவுக்கும் மிக மிகக் குறைவானவர்களே உளர்!... பல்லாயிரக் கணக்கிலாகப் பணம் திரண்டு பாயும் வாய்ப்பு, ஆசிரியர் தொழிலுக்கு இன்று வாய்த்துள்ளது!

 தமிழ்தான் தம் வாழ்க்கையினையே இப்படி வாழ வைத்திருக்கின்றது – வளங்கொழிக்க வைத்திருக்கின்றது எனும் அடிப்படை நன்றியுணர்வு வாய்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவானதாகவே உள்ளது!

 எவர்க்கு இலாது போயினும் தமிழாசிரியப் பெருமக்களுக்கு இத்தகு நன்றியுணர்வு ஓரளவுக்கேனும் இருந்தாதல் வேண்டும்.

“நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு!
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே”

என்ற பாவேந்தர் வரிகள், நம் தமிழாசிரியர்கட்கே இருந்தாக வேண்டிய மனப் பண்பின் பாங்கினைப் பதிவுசெய்து வைத்துள்ளமையை ஒவ்வொரு தமிழாசிரியரும் நன்கு உள்ளத்துள் பதியமிட்டு வைத்துக்கொள்ள வேண்டும்!

 ஐம்பது – அறுபதுகளில் (1950-59.. 1960-1969), நாங்கள் பயின்ற பள்ளிகளில், உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் என்போர்க்கு இருந்த தனீஇ மதிப்பு, மிகுந்த பெருமை சான்றது! அவர்கள்பால் ஓர் இனம்புரியாத அகப் பாசவுணர்வு எங்கள் நெஞ்சங்களில் படர்ந்திருந்தமையை இன்னும், இன்றும்  எண்ணின் உவப்பால் உகளிக்குதிக்கும் எழுச்சிநிலையே நினைவில் நீடி இன்புறுத்துகின்றது! அக்காலத் தமிழாசிரியர்கள் மிகப் பெரும்பாலரும் அப்படிக்கொத்த பெருமிதவுணர்வோடேயே நன்னடையிட்டார்கள்! இன்றோ, தமிழாசிரியர்களே தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டு இயங்குகின்றார்கள்! உயரிய ஊதியம் கிடைப்பதன் வழி கொஞ்சம் விரைத்தவாறு நிற்கின்றார்களே தவிர, தமிழால் தழைப்பெய்திய உள்ளங்கொண்டோராயிலர்!

 தமிழில்  கையெழுத்துப்போடும் அளவுக்குக்கூட மானமும் சூடும் வாய்ந்தோராகத் தமிழாசிரியருள் மிகப் பலர் இலர்! வாங்கும் ஊதியப் பணத்திலும் பணியிலும் இதன்வழி ஏதேனும் சிக்கல் நேரலாமோ என்றவாறு அஞ்சும் அகநடுங்கிகளாகவே பலர் இன்றும் உளர்! நாம் தமிழாசிரியர் என்று தலைநிமிர்த்தி நடக்கும் நடையராகப் பலர், இலர்!

 தம் பிள்ளைகளைத் தாம் பயிற்றுவித்துக்கொண்டிருக்கும் – அதேவகை அரசுத் தமிழ்ப் பள்ளிகளில் பயிலச்சேர்க்கும் மனபாங்கினராகவும் பலர் இலர்! பிள்ளைகளின் எதிர்காலம், - தமிழ்வழிக் கல்வியால் பாழாய்ப் போய்விடும் என அஞ்சும் அச்சங்கொள்ளிகளாய்ப் புதுவையிலும் – தமிழகத்திலும் பரவலாக மிகப் பலர், உளர்!

 தாம் பயிற்றுவிக்கவேண்டிய அரசுத் தமிழ்ப்பள்ளிப் பிள்ளைகளின் பாடங்களில் மனம் பற்றாது, உரியவாறு செயற்பற்றாது – ஆங்கிலக் கொள்ளைவிலைக் கொலைப்பள்ளிகளில் பயிலும் தத்தம் பிள்ளைகளை – உரிய நேரத்தில் அழைத்துச்சென்று உள்நுழைத்துவிடவும் – உண்ணவேண்டிய இடைநேரத்தில் தூக்குச்சட்டியொடு சென்று அவர்கட்கு ஊட்டி வரவும் – பள்ளி நிறைவுறும் நேரத்திற்கும் முன்னீடாக வண்டியொடு சென்று வாயிலருகில் காத்திருந்து பற்றி அழைத்துவரவும் வினைகள் பல மேற்கொண்டு – ஏமாறியராய் வேறு வழியின்று வந்து மாட்டிக்கொண்டு மனங்குமுறும் தலைகாய்ந்த ஏழைபாழைகளின் – கால்வழியினராய பிள்ளைகளுக்கு இரண்டகம் இழைக்கும் இரும்பாணி நெஞ்சத் தமிழாசிரியர் பலர் ஆங்காங்கும் உள்ளமையை வெளிப்படையாகவே நம் வாழ்க்கைப் போக்கிடையே நன்கு அறியலாகும்!

 தமிழகத்திலும் – புதுவையிலும் பொதுவாழ்வினராகிய நம் மக்களின் தமிழ் மானவுணர்வின்மைக்குக் காரணர்களாகவே தாங்கள் உள்ளோம் என்னும் உண்மையை, அன்னோர் ஆழ்ந்து கருதிப் பார்க்க வேண்டும்!  தமிழாசிரியர் என்போர்க்கு மட்டும் – தமிழ் மானம் எனும் ஒன்று வாய்த்துவிடுமாயின் – தமிழர் வாழ்விலும் அறிவிலும் – மலர்ச்சியும் வளர்ச்சியும் எழுச்சியும் ஏற்றமும் மாற்றமும் உறுதியாய்ச் சிறந்தொளிரும்!

 இத்தகு தமிழ் மானம் வாய்ந்தவராய் – தகைசான்ற தூய நன்மனத்தராய் - இத் தமிழகத்திலும் புதுவையிலுமாக ஆங்கொருவரும் ஈங்கொருவருமாக நெறிவிலக்கர்களாக நின்றுயரும் சிறப்புக்குரியோர் சிலருள் – முனைவர் பேராசிரியர் திருமிகு மு.இளங்கோவன் அவர்களும் ஒருவராகுவர்! முப்பான் ஆண்டுகளுக்கும் முன்னீடிருந்தே – இத் தமிழ்த்தோன்றலின் இளந்தைக் காலத்தினின்று இன்றுகாறுமான படிப்படியான நிலை வளர்ச்சிகளைக் காணும்- கண்டு களிப்பெய்தும் வாய்ப்பு எனக்குத் தொடர்ந்திருந்தது! பள்ளி – உயர்நிலைப் பள்ளி – செந்தமிழ்க் கல்லூரி – பல்கலைக்கழகங்கள் எனும் உயர்ச்சிப் படிக்கட்டுகளில் உயர்ந்துயர்ந்து கற்றுச் செழித்துச் சென்ற காலத்தினிடையே – அவ்வக்காலும் தொடர்ந்து தொடர்புவைத்திருந்தவர், இவர்!

 தன்மானஞ்சான்ற தனித்தமிழ் அறிஞர்களான பாவல்லோரான பாவேந்தர் – பாவலரேறு - சுப.மாணிக்கனார் என்றவாறியங்கிய பெருந்திறச் சான்றோர்களின் எழுச்சியாக்கங்களிற் படியப் படியத் தொண்டுமனம் என்பது இயல்பாகவே இவர்க்குத் தொற்றிக் கொண்டது! அறிவார்வமும் – ஆய்வுணர்வும் - தமிழின நன்னோக்கும் – மண்ணல நோக்கும் இவர் நெஞ்சில் படர்ந்தன! இவரின் தமிழ் உள்ளத்து வயலில் – தமிழியல்சார் விளைச்சல்களும் ஆண்டாண்டுக்கும் செழிப்பெய்தின.

 தமிழ் ஆய்விலே அகம் பற்றிக்கொண்டு – அகப்பட்டுக்கொண்டு தத்தம் வாழ்வையே தொலைத்து நலிவித்துவிட்ட தமிழ் அறிஞர் பலரின் குடும்ப நிலைகள் பற்றியும் இவர் கவலைப்பட்டுக் கசிந்துருகினார்! அக்குடும்பத்தார்க்குத் துணைநிற்க வேண்டியது தன் கடமைகளுள் ஒன்றெனவும் உறுதியெடுத்தவராய் அவற்றிற்குரிய செயல்பாடுகளில் தன் நேரத்தையும்- உழைப்பையும்  - தன் சொந்தப் பொருளையும் போட்டுப் – பல்வேறு பயன்கள் அன்னின்னோர்க்கு உருவாக்கித் தந்த வள்ளல், இவர்! பெருமழைப் புலவர் குடும்பத்தார்க்கு இவ்வகையிலாக இவர் செய்த  செயல்கள் வியப்புக்கும் – மதிப்புக்கும் உரியன!

 பெரியமனம் பொதிந்த அறிவுழைப்பாளியர் – பெரும் பெருஞ்செயல்களையே செய்து நிற்பவராகுவர்! (“செயற்கரிய செய்வர் பெரியர்” – என நம் வள்ளுவப் பேராசான் வாயுரைத்த செய்தியும், இதுவே!). பெருமழைப்புலவரையும் – பண்ணாராய்ச்சிப் பேரறிஞர் குடந்தை சுந்தரேசனாரையும் – இசையிலக்கண மேதை விபுலாநந்தரையும் – உச்சியில் தூக்கிவைத்து உலாச்செலுத்தும் இவரின் செயல்கள் யாவும் இத் தகு பெருமனத்து இயக்கங்களே!

 தமிழியல் சிறப்பு ஒழுங்கினை நுண்ணிதாகச் சிதைத்து உருக்குலைக்க ஒன்றுந் தெரியாத அற்பாவியரைப் போல நாடகமாடிய சூழ்ச்சியார்ந்த மேற்கட்டு அறிவாளியரிற் சிலர் முயன்றபோதெல்லாம் – உரிய தூய துணை நெஞ்சங்களுடன் கைகோர்த்துக்கொண்டு அவற்றைத் தகர்த்துத் தவிடுபொடியாக்கிய வரலாறுகளையெல்லாம் எம் போல்வார் நன்கு அறிவர்!

 இடைக்கட்டில் – எளிய பொதுக்குடும்பத்தில் முளைத்தெழுந்து துன்பத்தையும் ஏழ்மைத் துயரத்தையும் சுவைத்துப் பதம்பார்த்தவாறே வளர்ந்து படிப்படியாகத் தன்னைத் தானே தூக்கி நிறுத்திக்கொண்டு - வளர்த்தெடுத்துக்கொண்டு வானுலாக் கொள்ளும் செந்தமிழ் வானம்பாடியாய் நம் இளங்கோவன் என்னும் செம்மல் திகழ்கின்றார்!

 தமிழுலகத்தொடு நெஞ்சங்கலந்து தோய்ந்துறையும் சிறப்பு மாந்தராக இன்று தழைத்துத் தமிழ்தொண்டாற்றிவரும் பெருமதிப்புக்குரிய நம் இளங்கோவன் என்றும் எம்போல்வார் நெஞ்சகங்களில் உயரிடம் பற்றி மேலோங்கி நிற்பார்! வினைபலவாற்றி – விளைவுகள் நிறைத்து இம் மண்ணையும் - மக்களையும் – மொழியையும் சிறப்பிப்பார்!

 தூய நன்னெஞ்சமும் – துணிந்த வீறும் – தெள்ளிய அறிவும் – தோற்றப் பார்வையும் ஊற்றுக்கோளும் ஏற்று நிலைநிற்கும் நம் இளங்கோவன் ஏந்தல் – அன்பிலும் மலைநிலையர்! இவர் வாழ்க! இவர் குடும்பம் வாழ்க! இவரின் தமிழ்ச்சுற்றம் சிறக்க! இவரின் நற்பணிகள் மேலும் தொடர்க! தமிழ்மண் செழிக்க!

(11.02.2017 இல் வெளியிடப்பெற்ற என் வாழ்க்கைக் குறிப்புரைக்கும் நூலுக்குச் சொல்லாய்வறிஞர் ப. அருளி அவர்கள் வழங்கிய வாழ்த்துரை. செழுந்தமிழ் நடை கருதியும், நாட்டு நிலை கருதியும் இவண் வெளியிடப்படுகின்றது).

புதன், 11 ஜூலை, 2018

பொறியாளர் கோனேரி பா.இராமசாமி மறைவு!


கோனேரி பா. இராமசாமி

 புதுவையின் புகழ்பெற்ற தெருக்கூத்துக் கலைஞரும், புதுவை அரசின் பொறியாளரும், பன்னூலாசிரியருமாகிய கலைமாமணி கோனேரி பா. இராமசாமி அவர்கள் உடல்நலம் குன்றி, இன்று(10.07.2018) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து பெருந்துயருற்றேன்.

  கோனேரியார் அவர்களைக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நன்கு அறிவேன். தெருக்கூத்துக் கலையில் அவருக்கு இருந்த ஆர்வம் கண்டு அவர்தம் பணிகளைக் கல்வியுலகிற்கு நான் முன்பே அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். அவர்தம் குரலையும், கலையார்வத்தையும் பதிவு செய்து காணொளியாக இணையத்தில் ஏற்றியுள்ளேன். திருமுதுகுன்றத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றிற்கு அழைத்துச் சென்று, நாட்டுப்புற ஆய்வாளர்கள் முன்பாகப் பாடச்செய்து அவரை அறிமுகம் செய்தேன். அவரின் கலைப்பணிகளை நம் மாணவர் ஒருவர் முனைவர் பட்டத்திற்கு ஆய்வுசெய்து வருகின்றார். கிழமைக்கு ஒருமுறை என்னுடன் பேசி, புதுச்சேரியின் தெருக்கூத்து வரலாற்றை எழுதுவதற்குப் பெருந்துணை செய்தவரின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.

  புதுச்சேரி மாநிலம் கோனேரிக்குப்பத்தில் 15.11.1966 இல் பிறந்த கோனேரியார் புதுச்சேரியில் உள்ள தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு ஆதரவாக இருந்து, மக்கள் கலைக்கழகம் என்ற அமைப்பு நிறுவி, கலைப்பணி செய்தவர். அவர்தம் வாழ்க்கைக் குறிப்பு அறிய விரும்புவோரும், அவர்தம் கலையீடுபாட்டைக் காண விரும்புவோரும் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கவும்.

வாழ்க்கைக் குறிப்பு அறிய
  கோனேரி பா. இராமசாமியாரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர், நண்பர் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

திங்கள், 4 ஜூன், 2018

மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள்

  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் . மெய்யப்பன் மணிவாசகர் நூலகம், மெய்யப்பன் பதிப்பகம் என்ற பெயர்களில்  பதிப்பகங்களைத் தொடங்கித் தமிழுலகில் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். தமிழாய்வு நூல்களை அதிகமாக வெளியிட்ட பெருமை பேராசிரியர் ச. மெய்யப்பன் அவர்களைச் சாரும். மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் நூல்களைச் செம்பதிப்பாக வெளியிட்ட ச. மெய்யப்பனார் பின்னாளில் துறைவாரியான நூல்களைத் தக்க அறிஞர்களைக் கொண்டு எழுதச் செய்து வெளியிட்டு, பதிப்புலகில் தமக்கெனத் தனித்த இடத்தினைப் பெற்றவர். மு.வை.அரவிந்தன் எழுதிய உரையாசிரியர்கள், பேராசிரியர் சு. சக்திவேல் எழுதிய நாட்டுப்புறவியல் ஆய்வு, பேராசிரியர் ஆறு. இராமநாதன் எழுதிய நாட்டுப்புறவியல் துறை சார்ந்த களஞ்சியங்கள், அறிஞர் ச.வே.சுப்பிரமணியனாரைக் கொண்டு வெளியிட்ட தமிழ் இலக்கிய நூல்கள் யாவும் மெய்யப்பன் பதிப்பகம், மணிவாசகர் நூலகத்தின் புகழ்பேசுவன. மணிவாசகர் நூலகம் இதுவரை சற்றொப்ப 3500 நூல்களையும், மெய்யப்பன் பதிப்பகம் இதுவரை சற்றொப்ப 750 நூல்களையும் வெளியிட்டுத் தமிழ்ப்பணியாற்றியுள்ளன. இந்தப் பதிப்பகங்களை இன்று திறம்பட நடத்திவரும் உரிமையாளர் ச. மீனாட்சி சோமசுந்தரம், மேலாளர் திரு. இராம. குருமூர்த்தி ஆகியோர் நம் நன்றிக்குரியவர்கள்.

  முனைவர் ச. மெய்யப்பனை நான் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் போற்றுவதற்குக் கடமைப்பட்டவன். 1992 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று ச.மெய்யப்பனாரை முதன்முதல் சந்தித்தேன். தம் குருநாதர் வ.சுப. மாணிக்கனார்மேல் இவருக்கு இருந்த பற்றுமை அறிந்து வியந்தேன். வ.சுப.மாணிக்கனார் எழுதிய நூல்களை அன்பளிப்பாகக் கொடுத்து,  நூல்களின் வழியாக வ.சுப. மாணிக்கனாரை எனக்கு அறிமுகப்படுத்திய பெருமகனார் ச.மெய்யப்பன் ஆவார். நான் சென்னைக்குப் பணியின் காரணமாகச் சென்றபொழுது (1997), தம் இல்லத்துக்கு, அலுவலகத்துக்கு அழைத்து அரிய நூல்கள் எழுதுவதற்குரிய களங்களை அறிமுகம் செய்வார். அன்றைய நாளில் அவற்றை என்னால் நிறைவேற்றி வழங்கமுடியவில்லை. வருங்காலங்களில் மெய்யப்பன் பதிப்பகத்திற்காகச் சில நூல்களை எழுதி வழங்கி, பேராசிரியர் ச. மெய்யப்பனாரின் விருப்பத்தினை நிறைவேற்றுவேன். இது  நிற்க.

  தொல்காப்பியத்தை எளிமையான உரைகளுடன் பல்வேறு அறிஞர்கள் பதிப்பித்துள்ளனர். ஆய்வுப் பதிப்புகளும் மிகுதியாக வெளிவந்துள்ளன. மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ள முனைவர் ச.வே. சுப்பிரமணியனாரின் தொல்காப்பிய விளக்கவுரை என்னும் நூலும், Tholkaappiyam in English Content and Cultural Translation (With short commentary) என்னும் ஆங்கில நூலும் தொல்காப்பியத்தைத் தொடக்க நிலையில் பயில்வார்க்குப் பயன்படும் சிறந்த நூல்களாகும். பயன்படுத்துவதற்கும் எடுத்துச்செல்வதற்கும் இவை ஏற்ற நூல்களாகும்.

 முனைவர் ச.வே.சுப்பிரமணியன் பதிப்பித்துள்ள தொல்காப்பியம் விளக்கவுரை, Tholkaappiyam in English Content and Cultural Translation (With short commentary) என்னும் நூல்களைப் பெற விரும்புவோர் மணிவாசகர் பதிப்பகத்தின் சென்னை, சிதம்பரம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி கிளைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சலிலும் அனுப்புவார்கள்.

ச.வே.சுப்பிரமணியனாரின் தொல்காப்பியம் விளக்கவுரை - உருவா 200 - 00

Tholkaappiyam in English Content and Cultural Translation  -  உருவா 250 -00
(With short commentary) 

தொடர்புக்கு:

மணிவாசகர் நூலகம்,
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108
பேசி:  044- 2536 1039


வியாழன், 31 மே, 2018

கிண்டற்பித்தன் கவிதை

( பழைய பதிவு. இன்று மீள்பதிவானது)

நேற்று நான் பேராசிரியர் தங்கப்பா அவர்களை ஒருமொழி பெயர்ப்பு தொடர்பாகச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். எங்கள் பேச்சு பேராசிரியர் அவர்களின் பாட்டுகள் குறித்துத் திரும்பியது. வெளிவராத அவர்களின் பாடல்கள் பற்றி உரையாடல் நகர்ந்தது. எத்தனையோ சமூக நடப்புப் பாடல்களை அவர்கள் வரைந்து சில இதழ்களில் வெளியிட்டிருந்தாலும் முறையாகத் தொகுத்து வெளியிடவில்லை. அப்பொழுது அவர்களின் செல்பேசி குறித்து எழுதிய பாடலை நான் நினைவுகூர்ந்தேன். மேலும் பனிப்பாறை நுனிகளில் சில பாடல்கள் எனக்குப் புரியிவில்லை என்றேன். ஓய்வுநேரத்தில் விளக்குவதாகச் சொன்னார்கள்.

அப்பொழுது கிண்டற்பித்தன் என்பவர் எழுதிய பாடலை நீங்கள் படித்தது உண்டா? என்று பேராசிரியர் தங்கப்பா அவர்கள் வினவினார்கள். இல்லை என்றேன். ஒளியச்சில் இருந்த அந்தப் பாடலைக் காட்டினார்கள். மகிழ்ந்தேன். இன்றும் மரபு மாறாமல் பாடல் எழுதுபவர்கள் இருப்பது அறிந்து மகிழ்ந்தேன்.

 இருபதாம் நூற்றாண்டு அவலங்களை மரபில் எழுதுவோர் குறைந்துவரும்
சூழலில் கிண்டற்பித்தனின் பாடல் எனக்கு மகிழ்ச்சி தந்தது. மரபுப்பாடல் ஆர்வலர்களுக்கு என்பக்கத்தில் அந்தப் பாடலைவைக்கின்றேன். இது போன்ற மரபுப் பாடல்கள் இருப்பின் அனுப்பி வையுங்கள். மரபுக்கவிதைக்கு நீர் ஊற்றி வளர்ப்போம். உண்மையான மரபுப் பாவலர்களுக்கு ஊக்கம் தருவோம். படித்து மகிழுங்கள்.

என்னடா பிழைப்பு?

என்னடா பிழைப்புப் பிழைக்கின்றீர்கள்?
நக்கிப் பிழைக்கும் நாய்ப்பிழைப்பு!
படித்த பட்டமும் பதவியும் எதற்கடா?
அடுத்தவன் காலை நக்கிப் பிழைக்கவா?

ஆண்டான் மார்கள்தம் அந்தப்புரங்களில்
களியாட்டங்கள் ஆடிக் களைத்தபின்
விளையாட் டாக வீசி எறியும்
எச்சிலுக்காக, இப்படி வாசலில்
காத்துக் கிடந்து அவர்கண் எதிர்ப்படுகையில்
குழைந்து பல்இளித்தும்,கூழைக்கும்பிடு
போட்டு நின்று புழுப்போல் நெளிந்தும்
பெருமிதம்விட்டுப் பிழைக்கின்றீர்களே!

வயிறு வளர்க்க வழியா இல்லை?

வண்டியில் காய்கறி வைத்துத் தள்ளலாம்.
நண்டுபிடித்துக் கொண்டுபோய் விற்கலாம்.
காட்டுச் சுள்ளி பொறுக்கி வந்து
வீட்டுக்கு வீடு விற்றுப் பிழைக்கலாம்.
கோயில்முன்னே குந்தியிருந்து
பூ,பழம் தேங்காய் போட்டு விற்கலாம்.

கிழமைக்கு ஒருநாள் கீழூர்ச் சந்தையில்
கருவாட்டுக்கடை வைத்தால்கூட
அன்றாட வாழ்க்கை அழகாய் நடக்குமே!

எவன்பின் போயும் இளித்திட வேண்டா.

தெருவோரத்தில் செருப்புத் தைக்கலாம்.
சாய்க்கடை கூட அள்ளலாம். தப்பில்லை.
சட்டையில்தானே கொஞ்சம் கறைபடும்.
உள்ளம் அழுக்குப்படாமல் இருக்குமே!

இதையெல்லாம் விட்டுநீர்
அதிகாரச்சேற்றில் அழுந்தி அழுந்தித்
தினவெடுத்துத் திரிபவனுக்கு
முதுகுசொறியப் போகின்றீர்களே!
வெட்கம் இல்லையா?

படம்பல காட்டிப் பதவிக்கு வந்தவன்
குடும்பமாய் அடிக்கும் கொள்ளை விருந்தில்
சதையை நன்றாய்ச் சப்பித் தின்றபின்
எறியும் எலும்புத் துண்டுக்கட்காக்
காலடி நாய்களாய்க் காத்துக் கிடக்கன்றீர்கள்!
இந்தப் பிழைப்பும் ஓர் பிழைப்பா?
எந்த நாட்டிலும் இதுபோல் இல்லையே!

பாடலாசிரியர்: கிண்டற்பித்தன்
நன்றி: புகழ்ச்செல்வி இதழ்

பேரறிஞர். ம. இலெ. தங்கப்பா மறைவு!


பேரறிஞர். ம. இலெ.தங்கப்பா

 புதுச்சேரியில் வாழ்ந்துவந்த பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா அவர்கள் 31.05.2018 அதிகாலை 1. 30 மணியளவில் தம் 84 ஆம் அகவையில் தமிழ்ப்பணியை நிறைவு செய்து, தம் இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். உடல்நலம் குன்றி, மருத்துவம் பார்த்து வந்த பேராசிரியர் தங்கப்பா அவர்கள் மருத்துவம் பயனளிக்காத நிலையில் இயற்கை எய்தியமை தமிழறிஞர் உலகத்தைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களின் ஆசிரியராகவும், இரண்டுமுறை சாகித்ய அகாதெமி விருது பெற்ற படைப்பாளியாகவும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும், தெளிதமிழ் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும், பல்வேறு தமிழ்நலம் சார்ந்த போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய செயல்மறவராகவும், வாழ்வியல் பேரறிஞராகவும் விளங்கிய தங்கப்பாவின் பணிகள் தமிழுலகில் என்றும் போற்றத்தக்க பணிகளாகும்.

 தங்கப்பாவுக்கும் எனக்கும் சற்றொப்ப முப்பதாண்டுகள் நட்பு உண்டு. நான் மாணவப்பருவத்திலிருந்தே அவர்களின் வீட்டில் ஒரு மகனாக வளர்ந்தேன். எங்கள் இல்லத்தில் பல நாள் வந்து தங்கி, எங்களின் விருந்தோம்பலை ஏற்றவர். என் திருமணத்திற்குத் தம் துணைவியாருடன் கலந்துகொண்டு வாழ்த்தியவர். ஆர்க்காட்டில் நான் பணியிலிருந்த காலத்து அம்மாவுடன் வந்து ஒரு கிழமை தங்கி, எங்களை இல்லற நெறிக்கு ஆற்றுப்படுத்தியவர்கள். புதுவைக்குப் பணிக்கு வந்த பிறகு கிழமைக்கு ஒருமுறையேனும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக் கொண்டிருந்தேன். ஐயாவின் மறைவு எனக்கும், என்னைப் போல் அவரை நேசித்த அன்பர்களுக்கும் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. பேராசிரியர் ம. இலெனின் தங்கப்பாவின் பிரிவால் வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழியச் செயற்பாட்டாளர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 பேராசிரியர் தங்கப்பாவின் வாழ்க்கைக் குறிப்பினைப் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தேன். மீள்பதிவாக அதனைத் தங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

 நெல்லை மாவட்டம்,தென்காசி வட்டம், குறும்பலாப்பேரியில் 08.03.1934 இல் பிறந்தவர் .இலெனின் தங்கப்பா. இவர்தம் பெற்றோர் புலவர் . மதன பாண்டியன், இரத்தினமணி அம்மையார். தந்தையாரின் இளமைக்கால கல்விப் பயிற்றலில் இயற்கையாகவே தமிழ்ப்புலமை கைவரப் பெற்றவர் தங்கப்பா. பல்வேறு தமிழ் நூல்கள் இளமையிலேயே அறிமுகமாயின. அப்பாடல்களின் ஓசை உள்ளத்தில் பதிந்ததால் தங்கப்பா இயற்றும் பாடல்கள் மிகச்சிறந்த ஓசையின்பம் கொண்டனவாக விளங்குகின்றன. இளங்கலைப் பொருளியல் பயின்ற தங்கப்பா, பின்னர் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றவர்.

 மாணவப் பருவத்திலேயே மொழிபெயர்ப்புப் பணிகளில் விளையாட்டாக ஈடுப்பட்டு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்படுபவர். கல்வி கற்றவுடன் தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் வரலாறு, ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார் (1954 -1959). பின்னர்ப் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் (1959-68) பணிபுரிந்தார். 1968 முதல் 1994 வரை புதுச்சேரி அரசுக்கு உரிமையான கல்லூரிகளில் புதுச்சேரி, காரைக்காலில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

 ஆரவாரம் இல்லாமல் அடக்கமே வடிவாக விளங்குபவர். அன்பின் மேன்மையை உலகிற்குப் பல நூல்களின் வழியாகவும் நடைமுறை வாழ்வியல் வழியாகவும் விளக்கி வருபவர். இயற்கையீடுபாடு கொண்டவர். தம் பிள்ளைகளுக்குச் செங்கதிர், விண்மீன், இளம்பிறை, மின்னல் எனப் பெயரிட்டுள்ள பாங்கு ஒன்றே இவர்தம் இயற்கை ஈடுபாடு காட்டும் சான்றுகளாகும்.

  மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு பல பணிகள் செய்தவர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுடன் இணைந்து தொடக்க காலத் தென்மொழி வளர்ச்சிக்கு உழைத்தவர். தமிழ் இன முன்னேற்றத்திற்கானஅமைப்புகளுடன் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

 பாவேந்தர், பெருஞ்சித்திரனார், கண்ணதாசன், கோவேந்தன் உள்ளிட்ட தமிழ்ப்பற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தவர். பாவேந்தரின் குயில் இதழில் .இலெனின் என்னும் பெயரில் எழுதத் தொடங்கியவர்.

 தங்கப்பாவின் படைப்புகள் தொடக்கத்தில் பல இதழ்களின் வழியாக வெளிவந்தன.அவற்றுள் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தென்றல், வானம்பாடி, பூஞ்சோலை, இனமுழக்கம், தமிழகம், உரிமை வேட்கை, கைகாட்டி, கவிஞன், மீட்போலை, அரும்பு, விருந்து, கவியுகம், பொதுமை, தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ், கண்ணியம் முதலான இதழ்கள் குறிப்பிடத்தகுந்தன.

 தங்கப்பா இதழ்களுக்குத் தகக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் இயல்புடையவர் இல்லை. தமிழ்மொழி, இனம் சார்ந்த கொள்கைகளையும் இயற்கை,அன்பு இவற்றை வலியுறுத்தியும் மிகுதியாக எழுதியுள்ளவர். தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிக்கு அறிமுகம் செய்த வகையிலும், பிறமொழி இலக்கியங்களைத் தமிழிற்கு மொழிபெயர்த்து வழங்கிய வகையிலும் என்றும் நினைவுகூரத் தக்கவர். தமிழ் இதழ்களில் எழுதுவதுடன் ஆங்கில இதழ்களிலும் எழுதி வருபவர். இவற்றுள் Caravan,Poet, Cycloflame (u.s.a), Modern Rationalist,Youth Age, New Times, Observer முதலியன குறிப்பிடத்தகுந்தன.

 தங்கப்பா தம் பதினேழாம் அகவையில் பாடல் புனையத் தொடங்கி இன்றுவரை கற்பனை வளம் குறையாமல் படைப்புகளை வழங்கி வருபவர். தமிழின் செவ்வியல் படைப்புகளை அதன் தரம் குறையாமல் ஆங்கிலத்தில் பெயர்த்தவர்.Hues and Hormonies என்னும் பெயரில் சங்கப் பாடல்களையும் Songs of Grace in St.Ramalingam என்னும் பெயரில் இராமலிங்க அடிகளாரின் பாடல்களையும் மொழிபெயர்த்த பெருமைக்கு உரியவர். பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை மொழி பெயர்த்து Selected Poems of Bharathidasan எனவும் வெளியிட்டவர்.

 பாரதியார் பாடல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பெயர்த்தமைக்குக் கல்கத்தா தமிழ்ச்சங்கப் பரிசில் பெற்றவர். அரவிந்தர் பாடல்களைத் தமிழிற்குப் பெயர்த்தமைக்கு 1972 ஆம் ஆண்டு அரவிந்தர் ஆசிரமத்தின் பரிசினையும் பெற்றவர்.

 தங்கப்பாவின் படைப்புகள் இவருக்குப் பல பரிசில்களைப் பெற்றுத் தந்துள்ளன. இவற்றுள் தமிழ் நாட்டரசின் பாவேந்தர் விருது(1991), பகுத்தறிவாளர் கழகத்தின் பெரியார் விருது(1998), தமிழர் தேசிய இயக்கத்தின் தமிழ்த்தேசியச் செம்மல்(2002) விருது உள்ளிட்டன குறிப்பிடத்தகுந்தன. இரண்டுமுறை சாகித்ய அகாதெமி விருதுபெற்றவர். பல்வேறு தமிழமைப்புகளின் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றவர். தெளிதமிழ் இதழின் ஆசிரியராகத் தமிழ்த்தொண்டு செய்தவர்.

 புதுச்சேரி அரசு வழங்கிய விருதை அவ்வரசு தமிழுக்கு ஆக்கமான பணிகளில் ஈடுபடாததைச் சுட்டிக்காட்டித் திருப்பி வழங்கியவர். புதுச்சேரி தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக்குழுவின் தலைவராகவும், புதுச்சேரி இயற்கைக் கழகத்தின் தலைவராகவும், புதுவை அரசின் மொழிபெயர்ப்புக் குழுவின் உறுப்பினராகவும், தில்லி சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பாளருள் ஒருவராகவும் விளங்குபவர். தென்மொழி இதழின் உறுப்பாசிரியராகவும் விளங்கியவர்.

 ம.இலெனின் தங்கப்பா இன்று 31.05.2018 அதிகாலை 1.30 மணியளவில் இயற்கை எய்தினார்.


.இலெ.தங்கப்பாவின் நூல்கள்

கட்டுரை நூல்கள்

01.பாரதிதாசன்-ஓர் உலகப்பாவலர்,1987

02.நுண்மையை நோக்கி,1989

03.எது வாழ்க்கை,1994

04.திருக்குறளும் வாழ்வியலும்,1995

05.வாழ்க்கை அறிவியல்,1998

06.பாட்டு வாழ்க்கை,1994,1999.

07.மொழிமானம்,2000

08.கொடுத்தலே வாழ்க்கை,2001

தமிழாக்கம்

09.புகழ்பெற்ற ஆங்கிலப் பாடல்கள் சிலவற்றின் தமிழாக்கம்,1959

10.மலைநாட்டு மலர்கள்,1975(இரசுல் கம்சுதாவ் பாடல்கள்)

11.மண்ணின் கனிகள்,1996

12.கனவுகள்,2002(ஆங்கிலப்பாடல்களின் தமிழாக்கம்)

ஆங்கில ஆக்கம் 

13.Hues and Hormonies From Anciend Land,1970

14.Songs of Grace in St.Ramalingam,1985

15.Selected Poems of Bharathidasan,1992

16.House of Darkness,1996(இருண்ட வீடு)

17.Hues and Hormonies From Anciend Land,Part II

17.a. LOVE STANDS ALONE,

17.b.RED LILIES AND FRIGHTENED BIRDS[Muttollayiram]

ஆங்கில மொழியில் எழுதியவை

18.This Question of Medium(Essay)-1996

19.Meadow Flowers(Poems)-1984

பிற நூல்கள்

20.பாடுகிறேன்,1973

21.தேடுகிறேன்,1980

22.ஆந்தைப்பாட்டு,1983

23.அடிச்சுவடுகள்,1983

24.வேப்பங்கனிகள்,1985

25.கள்ளும் மொந்தையும்,1987

26.இயற்கையாற்றுப்படை,1989

27.மயக்குறுமக்கள்,1990

28.அகமும் புறமும்,1991

29.பின்னிருந்து ஒரு குரல்,1992

30.பனிப்பாறை நுனிகள்,1998

31.புயற்பாட்டு,2000

32.பாட்டெனும் வாள் எடுப்பாய்,2004

குழந்தைகட்கான நூல்கள்

33.எங்கள் வீட்டுச்சேய்கள்,1973,2003

34.மழலைப்பூக்கள்,1983

35.இயற்கை விருந்து,1991

36.வாழ்க்கை மேற் காதல்

37.மரபுப்பாடல் செத்துவிட்டதா?

38.இடித்துரைப் பாடல்கள்(வசையமுது)

39.நையாண்டிமாலை(பாட்டும் உரையும்)

40.சோளக்கொல்லைப் பொம்மை

41.வாழ்வியல் அறிவீர்.

குறிப்பு: பழைய பதிவைக் காண இங்கே சொடுக்குக.