நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 18 ஜூன், 2011

தமிழ் இணையமாநாடு முதல்நாள் நிகழ்வு

பென்சில்வேனியா தமிழ் இணைய மாநாட்டில் முனைவர் மு.ஆனந்தகிருட்டினன், முனைவர் மு.இளங்கோவன், முனைவர் பொன்னவைக்கோ, முனைவர் தாவூத் அலி 

   பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தென்னாசிய மையமும் உத்தமம் அமைப்பும் இணைந்து நடத்தும் தமிழ் இணைய மாநாட்டில் முதல்நாள் நிகழ்வுக்கு உரிய நேரத்திற்குச் சென்றோம். உலகின் பல பகுதிகளிலிருந்தும் கணினி, இணைய ஆர்வலர்கள் வந்திருந்தனர். கனடாவிலிருந்து செல்வா, மலேசியாவிலிருந்து இளந்தமிழ், பரமசிவம், இலண்டனிலிருந்து சிவா பிள்ளை, சுவிசிலிருந்து கல்யாண், சிங்கப்பூரிலிருந்து சிவகுமாரன், சீதாலெட்சுமி உள்ளிட்டவர்களைக் கண்டு அளவளாவினேன். பேராசிரியர் ஆனந்தகிருட்டினன், பேராசிரியர் பொன்னவைக்கோ உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர். உரையாடி மகிழ்ந்தோம். பேராசிரியர் கெரால்டு சிப்மன் அவர்களை முதன்முதலாகக் கண்டு அறிமுகம் ஆனேன். அவருக்கு என் நூல்களை அளித்து மகிழ்ந்தேன். தமிழ் இணைய மாநாடு காலை 9.30 மணியளவில் தொடங்கியது. பேராசிரியர் வாசு அரங்கநாதன், முனைவர் கல்யாண், கவி உள்ளிட்ட அன்பர்கள் நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வாசு உத்தமம் அமைப்பைப் பற்றி எடுத்துரைத்து அனைவரையும் வரவேற்றார். முனைவர் கல்யாண் அவர்களும், கவி அவர்களும் அவரவர் சார்ந்த குழுவின் சார்பில் வரவேற்றனர். 

வாசு வரவேற்பு 

கல்யாண் நோக்கவுரை 

  

முனைவர் பொன்னவைக்கோ அவர்களுக்குப் பேராசிரியர் ஆனந்தகிருட்டினன் நினைவுப்பரிசு வழங்கல் அருகில் கவி பேராசிரியர் கெரால்டு சிப்மன், பேராசிரியர் தாவூத் அலி உள்ளிட்ட அறிஞர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர். 

  அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஆனந்தகிருட்டினன் அவர்கள் சிறப்புரையாற்றினார். நிறைவாக ஆண்டோபீட்டர் நன்றியுரையாற்றினார். முதல் உரையைப் பேராசிரியர் கெரால்டு சிப்மன் வழங்கினார். அவரை அடுத்து முனைவர் பொன்னவைக்கோ தலைமையில் பெங்களூர் பேராசிரியர் ஆ.க.இராமகிருட்டினன் அவர்கள் இசுகைப் வழியாக உரையாற்றினார். அவருடைய உரை அனைவராலும் பாராட்டப்பட்டது. பேராசிரியர் கீதா அவர்களின் உரையும் சிறப்பாக இருந்தது. பேராசிரியர் ஆண்டவர், பேராசிரியர் டெனிசு, பேராசிரியர் தாவூத் அலி, டிக்சன் ஆகியோரின் உரைகளும் சிறப்பாக இருந்தன. பேராசிரியர் டிக்சன் அவர்கள் இணையவழிப் பயிற்றுவித்தல் தொடர்பான கட்டுரையைச் சிறப்பாக வழங்கினார். தமிழ் டைசசுடு நிறுவனத்தின் தமிழ் அறிமுகக் குறுவட்டுகள் அதன் உரிமையாளர் சரவணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. மாலையில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர்கள் வழங்கிய இன்னிசை அனைவரின் உள்ளத்தையும் ஈர்த்தது. இரவு விருந்துக்குப் பிறகு நண்பர்கள் பலரும் நகருலா வந்தோம். 

முனைவர் கெரால்டு சிப்மன் அவர்களுடன் முனைவர் மு.இளங்கோவன்

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பகிர்வுக்கு நன்றிகள் சகோ. !

படங்களும் செய்திகளும் அருமை .... :)

மாணவன் சொன்னது…

நிகழ்வுகளை சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்கய்யா :)

மாதேவி சொன்னது…

முதல்நாள் நிகழ்வு கண்டோம்.

புதுகை.அப்துல்லா சொன்னது…

பூரிப்படைகிறேன்.

-/பெயரிலி. சொன்னது…

ஆப்பட எடமெல்லாம் ஆளுங்களோட போட்டோ எடுத்துக்கன்னே பொறந்த ஆளு சார் நீங்க. வாழ்க வளர்க

-/பெயரிலி.