நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 23 செப்டம்பர், 2017

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்திற்காக அறிஞர் பெ. சு. மணியைச் சந்தித்த நினைவுகள்!

பெ.சு.மணி அவர்களின் நேர்காணலை ஒளிப்பதிவு செய்தல்...

     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்துக்கொண்டு, படத்தொகுப்பில் இருந்தநேரத்தில் படத்தில் ஒரு பற்றாக்குறை நிலவுவதை உணர்ந்தேன். காஞ்சிபுரத்தில் வாழும் தவத்திரு ஆத்மகனானந்த சுவாமிகளையும், அறிஞர் பெ. மணியையும் சந்தித்து, அவர்களின் நேர்காணலை ஆவணப்படத்தில் இணைக்கவில்லை என்றால் படம் முழுமையடையாது என்று அப்பொழுது நினைத்தேன்.

     விபுலாநந்த அடிகளார் வரலாற்றினை அறிந்த பெருமக்களுள் இவர்கள் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். முதற்கட்டப் படப்பிடிப்புக்கு நாங்கள் தயாரானபொழுதே அறிஞர் பெ. சு. மணியைத் தொடர்புகொண்டேன். உடல்நலம் பாதித்து, அவரின் சென்னை இல்லத்தில் ஓய்வில் இருந்தார். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் விவரத்தைச் சொன்னவுடன் எழுந்து அமர்ந்துகொண்டு, உரையாடினார். ‘தாம் இப்பொழுது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஒருமாதம் கழித்த பிறகு பேசிவிட்டு வருமாறும் அறிவுறுத்தினார். ஒருமாதம் கழித்தபிறகு நாளும் அவரைத் தொடர்புகொண்டும் பேச இயலவில்லை. சில மாதம் கழித்தே, அவர் புதுதில்லியில் தம் மகள் இல்லத்தில் இருக்கும் விவரம் அறிந்தேன். புதுதில்லியிலிருந்து திரும்பியதும் சந்திக்கலாம் என்று அறிஞர் மணி அவர்களின் அழைப்புக்குக் காத்திருந்தேன்.

     அந்தோ ! சில மாதங்கள் கழித்து மணி ஐயா அவர்களின் அருமைத் துணைவியார் இயற்கை எய்தினார் என்ற விவரம் அறிந்து வருந்தினேன். அவர் சென்னை திரும்புவதற்கு உரிய அறிகுறி எதுவும் தென்படவில்லை. மாதங்கள் சில  உருண்டோடின. நிறைவாக, காஞ்சிபுரம் தவத்திரு ஆத்மகனானந்த சுவாமிகளையாவது சந்தித்து, நேர்காணல் செய்து, ஆவணப்படத்தை முடித்துவிடலாம் என்ற முடிவோடு, சுவாமிகளிடம் உரையாட நேரம் கேட்டவண்ணம் இருந்தோம். அவர்களுக்கு இருந்த பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் தர வாய்ப்பு அமையவில்லை, ஒரு நாள் திடுமெனச் சுவாமிகள் நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கினார்கள்

     விடுமுறை நாளொன்றில் புதுச்சேரியில் வைகறையில் புறப்பட்டு, காலை உணவு வேளைக்குக் காஞ்சிபுரம் சென்று சேர்ந்தோம். வழியிடையில் ஒரு கடையில் உண்டு முடித்தோம். சுவாமிகள் குறிப்பிட்ட நேரத்துக்குக் காஞ்சிபுரம் இராமகிருஷ்ண மிஷனின் தவப்பள்ளிக்குள் சென்றோம். எங்களின் வருகையை அறிந்த தவத்திரு ஆத்மகனானந்த சுவாமிகள் நேர்காணலுக்குத் தயாரானார்கள். அரைமணி நேரத்திற்கும் மேலாக விபுலாநந்த அடிகளாரின் சிறப்புகளைச் சுவாமிகள் நினைவுகூர்ந்தார்கள். தாம் இலங்கையில் அமைந்துள்ள இராமகிருஷ்ண மிஷனில் பணியாற்றிய பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார். எங்களுக்குத் தேநீர் தந்து அன்பொழுக விருந்தோம்பினார்.

     ஆத்மகனானந்த அடிகளாரிடம் உரையாடியபிறகு விடைபெற நினைத்தோம். அப்பொழுது பெ. சு.மணி ஐயா குறித்து, எங்களின் உரையாடல் திரும்பியது. தில்லியில் இருப்பதால் அவரின் செவ்வியை  இந்த ஆவணப்படத்தில் இணைக்கமுடியாத நிலையில் உள்ளதைக் கவலையுடன் சுவாமிகளிடம் நான் தெரிவித்தேன். அப்பொழுதுதான் பெ.சு.மணி அவர்கள் தம் மகள் இல்லத்தில் பெங்களூரில் தங்கியிருப்பதைத் தவத்திரு சுவாமிகள் குறிப்பிட்டார்கள். பெ.சு. மணி அவர்களின் தொடர்பு எண்ணையும் வழங்கியருளி ஆசி கூறினார்கள்.

     ஓராண்டாக நான் காத்திருக்கும் நிலையை அறிஞர் பெ. சு. மணி ஐயாவிடம் கூறினேன். இப்பொழுது தவத்திரு. சுவாமிகளுடன் உரையாடிய விவரத்தைக் கூறி, தாங்கள் அனுமதித்தால் இந்தநொடியே பெங்களூர் வர அணியமாக உள்ளேன் என்று கூறினேன். என் ஆர்வத்தை நன்கு உணர்ந்த மணி ஐயா, எங்களை அன்புடன் வரவேற்பதற்குப் பெங்களூரில் காத்திருக்கும் விவரத்தைச் சொன்னார். அவர்தம் மகளாரிடம் பெங்களூர் இல்ல முகவரியைப் பெற்றுக்கொண்டோம். காஞ்சிபுரம் சுவாமிகளும் எங்களுக்கு விடைகொடுத்தார்கள்.

     எங்கள் மகிழுந்து பெங்களூர் நோக்கி விரைந்தது. என் மாமனார் இல்லம் போகும் வழியில்தான் இருந்தது. அங்குச் சென்றால் நேரம் வீணாகும் என்று அதனைத் தவிர்த்தேன். ஆர்க்காடு, வேலூர், வாணியம்பாடி வழியாக எங்களின் பயணம் அமைந்தது. நாங்கள் வருவதைத் தெரிந்துகொண்ட வாணியம்பாடிப் பேராசிரியர் சிவராஜ் அவர்கள் எங்களுக்காகச் சிறப்பு உணவுக்கு  உரிய ஏற்பாடுகளைச் செய்தார். எங்கள் ஓட்டுநர் பஷீர் அவர்களும், ஒளி ஓவியர் செழியன் அவர்களும் புலவுச்சோற்றை உண்ணும் ஆர்வத்தில் மகிழ்ச்சியாக உரையாடியவாறு வந்தனர். சென்னை - பெங்களூர்ச் சாலை சீராக இருந்ததால் எங்களின் புதிய மகிழுந்து அமைதியாக முன்னேறிச் சென்றது.  வாணியம்பாடியை நெருங்கினோம். மகிழுந்தை ஓர் ஓரத்தில் நிறுத்திவிட்டு, புலால்  உணவினை நிறைவாக உண்டோம். விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்றவர் பேராசிரியர் சிவராஜ் என்பதைத் தமிழுலகு நன்கறியும். ஓட்டுநர் பஷீர் ஒர் வெள்ளைச்சட்டையைப் புதியதாக வாங்கிக்கொண்டு வந்தார். சீருடை இல்லை என்றால் பெங்களூர்க் காவல்துறையினர் தண்டம் விதிப்பார்கள் என்று கூறினார். வண்டியும் சாலையும் நேர்த்தியாக இருந்ததால் அதிவிரைவாக வண்டி ஓடியது. மாலை 6 மணியளவில் பெங்களூரில் உள்ள அறிஞர் பெ. சு. மணி அவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பை அடைந்தோம்.

     பெ.சு. மணி அவர்கள் என் முயற்சியை அறிந்து வியந்தார்கள். நெஞ்சாரப் பாராட்டினார்கள். என் நூல்களைப் பரிசளித்தேன். அயலகத் தமிழறிஞர்கள் நூலைப் பார்த்து. நெஞ்சம் நிறைந்து வாழ்த்தினார். இந்த நூலின் தேவையையும் சிறப்பையும் அப்பொழுதே மதிப்பிட்டு வியந்து - விதந்து ஓதினார் இந்த நூல் அச்சிட்ட வரலாறும், தமிழக அரசின் நூலகத்துறையின் ஆதரவு இல்லாததால் நூல் தேங்கிக்கிடக்கும் அவல நினைவும், என் வாழ்நாளில்  இனி நூல் அச்சிடுவது இல்லை; நிறுத்திக்கொள்வோம் என்று முடிவெடுத்ததையும் ஐயாவிடம் பகிர்ந்துகொண்டேன். எங்கள் உரையாடலையும், ஆவணப்படத்திற்கு உரிய செய்திகளையும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பதிவுசெய்துகொண்டோம். அறிஞர் பெ.சு. மணி ஐயாவின் குடும்பத்தினர் இரவு உணவு முடித்துச் செல்லுமாறு அன்பொழுக வேண்டினர். பின்பொருமுறை வருவதாக உறுதியளித்துவிட்டு இரவு எட்டுமணியளவில் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டோம்.

மு.இளங்கோவன், பெ.சு.மணி


     பெங்களூர் நகரம் இரவுப்பொழுதில் மின்விளக்குகளால் புதுக்கோலம் கொண்டிருந்தது. வெளிச்ச அழகைச் சுவைத்தவாறு பெங்களூரின் நடுநகர் கடந்து, புறநகர் வந்துசேர்ந்தோம்.  தமிழக எல்லையை அடைந்து, நள்ளிரவு திருப்பத்தூர் வந்து இரவு உணவு முடித்தோம். ஊர் அரவம் அடங்கிக் கிடந்தது. திருவண்ணாமலை வழியாக எங்கள் மகிழுந்து விடியல்பொழுதில் புதுச்சேரிக்கு வந்துசேர்ந்தது. அறிஞர் பெ. சு.மணி அவர்கள் பாரதியார் படைப்புகளிலும், விபுலாநந்த ஆய்வுகளிலும் தோய்ந்திருந்த பெரும்புலமையை அவரின் உரையாடல் எனக்கு உணர்த்தியது. தமிழாய்வுலகில் பின்பற்றத்தகுந்த ஆராய்ச்சி ஆளுமை பெ.சு.மணி என்று நவிரமலையில் ஏறி நின்று பெருங்குரலெழுப்பி உரக்கக் கூறுவேன்!

திங்கள், 18 செப்டம்பர், 2017

புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா!

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை(டிவிடி), மக்கள் தொலைக்காட்சியின் சிறப்பு ஆலோசகர் சௌமியா அன்புமணி வெளியிட, புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.இராதாகிருஷ்ணன் பெற்றுக்கொள்கின்றார். அருகில் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து, ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன்,முனைவர் ஒப்பிலா. மதிவாணன், தூ. சடகோபன்.

       முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா, புதுச்சேரி செயராம் உணவகத்தில் 16.09.2017 மாலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைமாமணி கா. இராஜமாணிக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். மக்கள் தொலைக்காட்சியின் சிறப்பு அறிவுரைஞர் திருமதி சௌமியா அன்புமணி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆவணப்படத்தின் ஒளிவட்டினை (டிவிடி) வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். ஆவணப்படத்தின் முதல்படியினைப் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. இராதாகிருஷ்ணன் அவர்களும், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் அவர்களும் பெற்றுக்கொண்டனர். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து, முனைவர் க. இளமதி சானகிராமன், முனைவர் ஒப்பிலா. மதிவாணன், நீதியரசர் இராமபத்திரன், முனைவர் இரா. வசந்தகுமாரி, முனைவர் ஔவை நிர்மலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

      எழுத்தாளரும் கவிஞருமான ஜெயபாஸ்கரன் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையை வழங்கினார். விபுலாநந்த அடிகாளர் ஆவணப்படத்தில் பங்கேற்றுத் தொழில்நுட்ப உதவிபுரிந்தவர்களுக்கும், நடித்தவர்களுக்கும் புதுச்சேரி க. குணத்தொகையன் சிறப்புச் செய்தார். நிகழ்ச்சியைக் கவிஞர் உமா மோகன் தொகுத்து வழங்கினார். தூ.சடகோபன் நன்றியுரை வழங்கினார். பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, புலவர் கி.த.பச்சையப்பன், புலவர் சீனு.இராமச்சந்திரன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் இலங்கையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆய்வாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இசையமைப்பாளர் இராஜ்குமார் இராஜமாணிக்கம் சிறப்பிக்கப்படுதல்

வில்லியனூர் கி. முனுசாமி சிறப்பிக்கப்படுதல்

நாட்டியக் கலைஞர் கிருஷ்ணன் சிறப்பிக்கப்படுதல்


நாட்டியக் கலைஞர்கள் சிறப்பிக்கப்படுதல்

விழாவுக்கு வருகைபுரிந்த இலங்கை மாணவர்கள்

பார்வையாளர்களின் ஒருபகுதியினர்

பார்வையாளர்களின் ஒரு பகுதியினர்

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா




அன்புடையீர், வணக்கம்.

தமிழ் மாமுனிவராக விளங்கிய தவத்திரு விபுலாநந்த அடிகளார் துறவியாகவும், கல்வியாளராகவும், பேராசிரியராகவும், இதழாசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், மாந்தநேயம்கொண்ட மாமனிதராகவும் விளங்கியவர். யாழ்நூல் இயற்றித் தமிழர்களின் நெஞ்சங்களுள் நிலைத்த இடம்பிடித்தவர். இலங்கை முதல் இமயமலை வரையிலும் பரவிக் கிடந்த இவர்தம் பணிகளைத் திரட்டி, விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் என்னும் பெயரில் அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றினை முனைவர் மு.இளங்கோவன் ஆவணப்படமாக்கியுள்ளார். அடிகளாருடன் தொடர்புடைய அறிஞர்கள், உறவினர்கள், அடிகளாரின் பணிகளை அறிந்த சான்றோர்களை நேர்காணல் செய்தும், தக்க ஆவணங்களின் துணையுடனும் கலைநேர்த்தியுடன்  உருவாக்கப்பட்டுள்ள விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அறிஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்களின் முன்னிலையில் வெளியீடு காண உள்ளது. மக்கள் தொலைக்காட்சியின் சிறப்பு அறிவுரைஞர் சீர்மிகு சௌமியா அன்புமணி அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்கள். இந்த ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் தாங்களும் தங்கள் நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

தங்கள் வருகையை எதிர்நோக்கும்

வயல்வெளித் திரைக்களத்தினர்

நாள்: 16.09.2017(சனிக்கிழமை)
நேரம்: மாலை 6. 00 மணி முதல் 8.30 மணி வரை
இடம்: செயராம் உணவகம், புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி கா. இராஜமாணிக்கம்
வரவேற்புரை: தியாகி பாவலர் அப்துல் மஜீத்
தலைமையுரை: தவத்திரு சிவஞானபாலய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம்

ஆவணப்படம் வெளியீடு: சீர்மிகு சௌமியா அன்புமணி,
சிறப்பு அறிவுரைஞர், மக்கள் தொலைக்காட்சி

ஆவணப்படத்தின் முதலிரு படிகளைப் பெறுதல்:
திரு. இரா. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர், புதுச்சேரி
திரு. கே.பி.கே. செல்வராஜ், தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம்

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல்:

வாழ்த்துரை:
முனைவர் வி.முத்து, தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்
கவிஞர் இரவி சுப்பிரமணியம், ஆவணப்பட இயக்குநர்
முனைவர் இளமதி சானகிராமன், புதுவைப் பல்கலைக்கழகம்
முனைவர் ஒப்பிலா. மதிவாணன், சென்னைப் பல்கலைக்கழகம்
முனைவர் அரங்க. பாரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முனைவர் வசந்தகுமாரி, இயக்குநர்,பட்டமேற்படிப்புமையம், புதுச்சேரி அரசு
முனைவர் இரா. நிர்மலா, தமிழ்த்துறைத் தலைவர், பட்டமேற்படிப்புமையம்
திரு. அருள்வேந்தன் பாவைச்செல்வி, தலைவர், திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கம்

ஆவணப்படம் மதிப்பீட்டுரை: எழுத்தாளர் ஜெயபாஸ்கரன், சென்னை

 கலைஞர்களைச் சிறப்பித்தல்: திரு. க. குணத்தொகையன், புதுச்சேரி

நிகழ்ச்சித்தொகுப்புரை: கவிஞர் உமாமோகன்

நன்றியுரை: திரு. தூ. சடகோபன்

அனைவரும் வருக!

தொடர்புக்கு: 9442029053 / 9442172364 /