ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் முகப்பில் மு.இளங்கோவன்
உலகின் சிறந்த இருநூறு பல்கலைக்கழங்களில் ஆர்வர்டு பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. பல்லாயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். புகழ்பெற்ற ஆசிரியர்கள் பலர் பணிபுரிகின்றனர். இந்தப் பல்கலைக்கழகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் சென்றோம். இரண்டு மணி முதல் மூன்று மணி வரை வளாகச் சுற்றுலா என்று அறிந்து, சரியாக இரண்டு மணிக்கு ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் சுற்றுலா அலுவலகத்தில் நின்றோம். ஐம்பதுபேர் அடங்கிய எங்கள் குழுவைக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் வழிநடத்தினார்.
பழைமையான கட்டடங்கள் வானுயர நின்றன. பரந்த வளாகம். மரங்கள் குடைபிடிப்பன போல் நின்றன. இது 1636 இல் தொடங்கப்பட்டது. சான் ஆர்வர்டு என்னும் மத குரு 1639 இந்த நிறுவனத்தைச் சமயம் போதிக்கும் இடமாக உருவாக்கினார். 1869 முதல் 1909 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத் தலைவராக விளங்கிய சார்லஸ் இலியாட் அவர்கள் இந்த ஆர்வர்டு பல்கலைக்கழகத்தை மிகச்சிறந்த நிறுவனமாக உருவாக்கினார்.
ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் நூலகம் புகழ்பெற்ற நூலகமாகும். இங்கு 16.2 மில்லியன் நூல்கள் உள்ளன. நூலகத்தின் வெளியில் நின்று நம்போல் வெளியாட்கள் பார்வையிடமுடியுமே தவிர உள்ளே செல்ல இசைவு இல்லை. அவ்வாறு உள்ளே செல்லும் மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் யாவரும் இசைவு அட்டையைக் கதவில் அடையாளம் காட்டிதான் செல்லமுடியும். அனைத்து வசதிகளும் அந்த நூலகத்தில் உள்ளதாம். முன்னாள் மாணவர்களின் நிதியுதவி உட்படப் பலரின் நிதியுதவியில் இந்தப் பல்கலைக்கழகம் செழித்துள்ளது. 43 நோபல் பரிசு வென்ற அறிஞர்கள் இங்குப் பணிபுரிந்தவர்கள் ஆவர். மேலும் அமெரிக்காவின் தலைவர்கள் பலர் இங்குப் பயின்றவர்கள் ஆவர். கணினி, தொழில்நுட்பத்தில் வல்லவர்களாக விளங்கும் பலரும் இங்குக் கல்வி கற்றதாகச் சொன்னார்கள். இந்தியத் தலைவர்கள் பலர் இங்குப் படித்துப் பட்டம் பெற்றுள்ளனர் என்பதையும் அறியமுடிந்தது.
இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் இரண்டாயிரத்து நூறு பேராசிரியர்களும் இருப்பதாக அறிந்தோம். 210 ஏக்கர் முதன்மை வளாகம் அமைந்துள்ளது. 23 துணை வளாகங்களும் உள்ளன. ஒவ்வொரு அலுவலகமும் தனித்தனி பழைய கட்டடங்களில் உள்ளன. மாணவர் விடுதியில் ஒரே நேரத்தில் மூவாயிரம்பேர் அமர்ந்து உண்ண முடியுமாம்.
இங்குள்ள தேவாலயம் கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடங்களும் அவ்வாறே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆர்வர்டு வளாகத்தில் ஆர்வர்டு பெருமகனாரின் சிலை சிறப்பாக உள்ளது. அதனை மதிப்பளித்துக் கண்டு மகிழ்ந்தேன். மாணவர்கள், ஆசிரியர்கள் அமைதியாகத் தங்கள் பணிகளைச் செய்துவந்தனர். எங்கும் அடக்கமும், தரமும் இருப்பதற்கான அறிகுறியை உணரமுடிந்தது.
தென்னாசிய-தமிழாய்வுக்குரிய பகுதிகளைப் பார்க்க நினைத்தேன். முன்பே இசைவுபெற்று வந்திருந்தால் பார்த்திருக்கலாம். அதுவும் அங்குத் தொடர்புகொள்வது அவ்வளவு எளிதில்லை என்று நண்பர்கள் வழியாக அறிந்திருந்தேன். தென்னாசிய ஆய்வு-தமிழாய்வு என்பது அங்கு மதம் சார்ந்த பொருண்மைகளில் நடப்பதாகவும் அறியமுடிந்தது. ஆர்வர்டு பல்கலைக்கழக முகப்பில் சதுக்கம் ஒன்று உள்ளது. இங்குக் கலைஞர்கள் அவ்வப்பொழுது கூடி கலைகளை வெளிப்படுத்துவார்களாம். வார இறுதிநாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று நண்பர் பாலா குறிப்பிட்டார்.
ஆர்வர்டு சிலையருகில் மு.இளங்கோவன்
வளாகச் சுற்றுலாக் குழுவில் மு.இ
3 கருத்துகள்:
சகோ /முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள்..\
என்ன ஒருவரையும் காணோம்...
நல்ல தகவல்..
அருமை...
தொடருங்கள்....
காத்திருக்கிறேன்..
உங்கள் நண்பர்களில் நான் புதியவர்
இதுதான் முதல் தடவை உங்க பக்க வந்தேன்...
வாழ்த்துக்கள்
நட்சத்திரம் என்பதால் ஊக்கம் தர நினைத்தேன்........
ஆர்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஆரம்பம், வளர்ச்சி,நூலகம், வளாகம், சதுக்கம் எனப் பலவும் பார்த்துத் தெரிந்துகொண்டோம்.
நன்றி.
ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களின் அமெரிக்கப்பயண அனுபவங்கள், புகைப்படங்கள் மிக அருமை.ஆர்வர்ட் பல்கலை குறித்த நுட்பமான தகவல்கள் ஆச்சர்யம். நன்றி!
கருத்துரையிடுக