நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 26 ஏப்ரல், 2012

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை(பெட்னா) பொறுப்பாளர்கள் தேர்வு

வட அமெரிக்காவில் உள்ள, ஐக்கிய அமெரிக்கா மாகாணங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கனடா நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் ஆகியவற்றை ஒரு குடையின் கீழ்க் கொண்ட கூட்டமைப்பாக, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பேரவையின் ஆண்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு இப்பேரவை 2012 சூலைத் திங்கள் 6, 7, 8 ஆகிய நாள்களில் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் தனது வெள்ளி விழாவைக் கொண்டாட உள்ளது. இதற்காகத் தாய்த்தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களை அழைத்து வெள்ளிவிழாவை மிகச்சிறப்பாக நடத்த அமெரிக்காவில் வாழும் தமிழ்ப்பற்றாளர்கள் மிகவிரிவாகத் திட்டமிட்டு வருகின்றனர்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின், 2012-2014 ஆகிய ஆண்டுகளுக்கான தேர்தல் பணிகள் கடந்த ஒரு மாதமாகத், தேர்தல் அலுவலர் திரு.சிவானந்தம் மாரியப்பன்(மின்னசோட்டா தமிழ்ச்சங்கம்) அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றன.

இத்தேர்தலில், சற்றொப்ப 26 தமிழ்ச்சங்கங்கள், பேரவைப் பேராளர்கள், வாழ்நாள் உறுப்பினர்கள் எனப் பலரும் நேரடியாகப் பங்கு பெற்றார்கள். முடிவில், கீழ்க்கண்டவர்கள் பேரவைப் பொறுப்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி நியூயார்க் நகரில் அறிவித்துள்ளார்.

தலைவர் : முனைவர் தண்டபாணி குப்புசாமி
(பனை நிலம் தமிழ்ச் சங்கம் - சார்ள்சுடன் - தென் கரோலினா)
துணைத் தலைவர்: திரு.பீற்றர் யெரோணிமூஸ்
(வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் - வாசிங்டன் டி.சி.)
செயலாளர்: பதிவர் பழமைபேசி என்கிற திரு. மெளன.மணிவாசகம்
(தென்-மத்தியத் தமிழ்ச் சங்கம் - மெம்ஃபிசு - டென்னசி)
துணைச்செயலாளர்: திருமதி. செந்தாமரை பிரபாகர்
(சார்லட் நகர தமிழ்ச் சங்கம் - வட கரோலினா)
பொருளாளர்: திரு. தங்கமணி பாலுச்சாமி
(அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் - அட்லாண்டா - ஜார்ஜியா)
இயக்குநர் 1: திரு. கரு மலர்ச்செல்வன்
(பேரவை ஆயுட்கால உறுப்பினர் - ஃக்யூசுடன் - டெக்சாசு)
இயக்குநர் 2: திரு. யோபு தானியேல்
(மிசெளரித் தமிழ்ச் சங்கம் - செயிண்ட் லூயிசு - மிசெளரி)
இயக்குநர் 3: திரு. பிரகல் திரு
(கனடியத் தமிழர் பேரவை - கனடா)
இயக்குநர் 4: திரு. சாரங்கபாணி குகபாலன்
(இலங்கைத் தமிழ்ச் சங்கம் - அமெரிக்கா)

தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்களுக்கு உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். புதிய பொறுப்பாளர்கள் அனைவரும், சூலை மாதம் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் சிறப்பாக நடைபெறவிருக்கும் பேரவை வெள்ளிவிழாவில் தத்தம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.

3 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

நன்றி

Arasu சொன்னது…

முனைவர் இளங்கோவன்:

அமெரிக்க தமிழ் வளர்க்கப் பாடுபடும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை அமைப்பின் பொறுப்பாளர்கள் தேர்தல் பற்றிய செய்தி வெளியிட்டு, தமிழ் இணைய உலகில் பேரவையின் புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் சீரிய வலைப்பூவில் தொடர்ந்து பேரவை செய்திகளை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

- அரசு

balakavithaigal சொன்னது…

புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.உலகத் தமிழ்ச் சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வரவேண்டும்,அதற்கு உங்கள் முயற்சி தொடரக் கேட்டுக்கொள்கிறேன்